‹ முகப்புமுழுத் திட்டம்

செப்டம்பர் 2 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்செப்டம்பர் 2அடுத்த நாள் ›
குடும்பம்

I சாமுவேல் 26

முழு அதிகாரம் ›

1பின்பு சீப் ஊரார் கிபியாவிலிருக்கிற சவுலிடத்தில் வந்து: தாவீது எஷிமோனுக்கு எதிரான ஆகிலாமேட்டில் ஒளித்துக்கொண்டிருக்கிறான் என்றார்கள்.

2அப்பொழுது சவுல்: சீப் வனாந்தரத்திலே தாவீதைத் தேடும்படி எழுந்து, இஸ்ரவேலிலே தெரிந்துகொள்ளப்பட்ட மூவாயிரம்பேரோடுங்கூட, சீப் வனாந்தரத்திற்குப் புறப்பட்டுப்போனான்.

3சவுல் எஷிமோனுக்கு எதிரே வழியண்டையிலிருக்கிற ஆகிலாமேட்டிலே பாளயமிறங்கினான்; தாவீது வனாந்தரத்தில் தங்கி, சவுல் தன்னைத் தொடர்ந்து வனாந்தரத்திற்கு வருகிறதைக் கண்டு,

4தாவீது வேவுகாரரை அனுப்பி, சவுல் வந்தது நிச்சயம் என்று அறிந்துகொண்டான்.

5பின்பு தாவீது எழுந்து, சவுல் பாளயமிறங்கின இடத்திற்குப் போய், சவுலும் நேரின் குமாரனாகிய அப்னேர் என்னும் அவன் படைத்தலைவனும் படுத்துக்கொண்டிருக்கிற இடத்தைப் பார்த்தான்; சவுல் இரதங்களிருக்கிற இடத்திலே படுத்துக்கொண்டிருந்தான்; ஜனங்கள் அவனைச் சுற்றிலும் பாளயமிறங்கியிருந்தார்கள்.

6தாவீது ஏத்தியனாகிய அகிமெலேக்கையும், செருயாவின் குமாரனும் யோவாபின் சகோதரனுமாகிய அபிசாயையும் பார்த்து: என்னோடேகூடச் சவுலிடத்திற்குப் பாளயத்தில் இறங்கிவருகிறவன் யார் என்றதற்கு, அபிசாய்: நான் உம்மோடேகூட வருகிறேன் என்றான்.

7அப்படியே தாவீதும் அபிசாயும் இராத்திரியிலே அந்த ஜனங்களுக்குள்ளே வந்தார்கள்; இதோ, சவுல் இரதங்களிருக்கிற இடத்திலே படுத்து நித்திரைபண்ணினான்; அவன் தலைமாட்டில் அவனுடைய ஈட்டி நிலத்திலே குத்தியிருந்தது; அவனைச் சுற்றிலும் அப்னேரும் ஜனங்களும் படுத்துக்கொண்டிருந்தார்கள்.

8அப்பொழுது அபிசாய் தாவீதைப் பார்த்து: இன்று தேவன் உம்முடைய சத்துருவை உம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; இப்போதும் நான் அவனை ஈட்டியினால் இரண்டு குத்தாகக் குத்தாமல், ஒரே குத்தாக நிலத்தில் உருவக் குத்தட்டுமா என்றான்.

9தாவீது அபிசாயைப் பார்த்து: அவரைக் கொல்லாதே; கர்த்தர் அபிஷேகம்பண்ணுவித்தவர்மேல் தன் கையைப் போட்டு, குற்றமில்லாமற்போகிறவன் யார்? என்று சொன்னான்.

10பின்னும் தாவீது: கர்த்தர் அவரை அடித்து, அல்லது அவருடைய காலம் வந்து, அவர் மரித்து, அல்லது அவர் யுத்தத்திற்குப் போய் மாண்டாலொழிய,

11நான் என் கையைக் கர்த்தர் அபிஷேகம்பண்ணுவித்தவர்மேல் போடாதபடிக்கு, கர்த்தர் என்னைக் காக்கக்கடவர் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; இப்போதும் அவர் தலைமாட்டில் இருக்கிற ஈட்டியையும், தண்ணீர்ச்செம்பையும் எடுத்துக்கொண்டு போவோம் என்றான்.

12தாவீது சவுலின் தலைமாட்டில் இருந்த ஈட்டியையும், தண்ணீர்ச்செம்பையும் எடுத்துக்கொண்டபின்பு, புறப்பட்டுப்போனார்கள்; அதை ஒருவரும் காணவில்லை, அறியவுமில்லை, ஒருவரும் விழித்துக்கொள்ளவுமில்லை; கர்த்தர் அவர்களுக்கு அயர்ந்த நித்திரை வருவித்ததினால், அவர்களெல்லாரும் தூங்கினார்கள்.

13தாவீது கடந்து, அந்தப் பக்கத்திற்குப் போய், தங்களுக்கும் அவர்களுக்கும் நடுவே போந்த இடமுண்டாக, தூரத்திலிருக்கிற மலையின் கொடுமுடியிலே,

14ஜனங்களுக்கும் நேரின் குமாரனாகிய அப்னேருக்கும் நேராக நின்று கூப்பிட்டு: அப்னேரே, உத்தரவு சொல்லமாட்டீரா என்றான்; அதற்கு அப்னேர்: ராஜாவுக்கு நேராகக் கூக்குரலிடுகிற நீ யார் என்றான்.

15அப்பொழுது தாவீது அப்னேரை நோக்கி: நீர் வீரன் அல்லவா? இஸ்ரவேலில் உமக்குச் சரியானவன் யார்? பின்னை நீர் உம்முடைய ஆண்டவனாகிய ராஜாவைக் காக்காமற்போனதென்ன? ஜனத்தில் ஒருவன் உம்முடைய ஆண்டவனாகிய ராஜாவைக் கொல்லும்படி வந்திருந்தானே.

16நீர் செய்த இந்தக் காரியம் நல்லதல்ல; கர்த்தர் அபிஷேகம்பண்ணின உங்கள் ஆண்டவனை நீங்கள் காக்காமற்போனபடியினால், நீங்கள் மரணத்திற்குப் பாத்திரவான்கள்; இப்போதும் ராஜாவின் தலைமாட்டில் இருந்த அவருடைய ஈட்டியும் தண்ணீர்ச்செம்பும் எங்கே என்று பாரும் என்றான்.

17அப்பொழுது சவுல்: தாவீதின் சத்தத்தை அறிந்து, என் குமாரனாகிய தாவீதே, இது உன் சத்தமல்லவா என்றான். அதற்குத் தாவீது: ராஜாவாகிய என் ஆண்டவனே, இது என் சத்தந்தான் என்று சொல்லி,

18பின்னும்: என் ஆண்டவனாகிய நீர் உம்முடைய அடியானை இப்படிப் பின் தொடருகிறது என்ன? நான் என்ன செய்தேன்? என்னிடத்தில் என்ன பொல்லாப்பு இருக்கிறது?

19இப்பொழுது ராஜாவாகிய என் ஆண்டவன் தம்முடைய அடியானுடைய வார்த்தைகளைக் கேட்பாராக; கர்த்தர் உம்மை எனக்கு விரோதமாக எடுத்துவிட்டதுண்டானால், அதற்கு அவர் காணிக்கையை ஏற்றுக்கொள்வாராக; மனுப்புத்திரர் அதைச் செய்தார்களேயாகில், அவர்கள் கர்த்தருக்கு முன்பாகச் சபிக்கப்பட்டவர்கள்; அவர்கள்: நீ போய்; அந்நிய தேவர்களைச் சேவி என்று சொல்லி, அவர்கள் இன்று என்னைக் கர்த்தருடைய சுதந்தரத்திற்கு அடுத்தவனாயிராதபடிக்கு துரத்திவிட்டார்களே.

20இப்போதும் கர்த்தருடைய சமுகத்தில் என் இரத்தம் தரையில் விழாதிருப்பதாக; மலைகளில் ஒரு கவுதாரியை வேட்டையாடுகிறதுபோல, இஸ்ரவேலின் ராஜா ஒரு தெள்ளுப்பூச்சியைத் தேடவந்தாரோ என்றான்.

21அப்பொழுது சவுல்: நான் பாவஞ்செய்தேன்; என் குமாரனாகிய தாவீதே, திரும்பி வா; என் ஜீவன் இன்றையதினம் உன் பார்வைக்கு அருமையாயிருந்தபடியால், இனி உனக்கு ஒரு பொல்லாப்புஞ் செய்யேன்; இதோ, நான் மதியற்றவனாய் மகா பெரிய தப்பிதஞ்செய்தேன் என்றான்.

22அதற்குத் தாவீது: இதோ, ராஜாவின் ஈட்டி இங்கே இருக்கிறது; வாலிபரில் ஒருவன் இப்புறம் வந்து, அதை வாங்கிக்கொண்டு போகட்டும்.

23கர்த்தர் அவனவனுக்கு அவனவன் நீதிக்கும் உண்மைக்கும் தக்கதாகப் பலன் அளிப்பாராக; இன்று கர்த்தர் உம்மை என் கையில் ஒப்புக்கொடுத்திருந்தும், கர்த்தர் அபிஷேகம்பண்ணினவர்மேல், என் கையை நீட்ட மனதில்லாதிருந்தேன்.

24இதோ, உம்முடைய ஜீவன் இன்றையதினம் என் பார்வைக்கு எப்படி அருமையாயிருந்ததோ, அப்படியே என் ஜீவனும் கர்த்தரின் பார்வைக்கு அருமையாயிருப்பதினால், அவர் என்னை எல்லா உபத்திரவத்திற்கும் நீங்கலாக்கி விடுவாராக என்றான்.

25அப்பொழுது சவுல் தாவீதை நோக்கி: என் குமாரனாகிய தாவீதே, நீ ஆசீர்வதிக்கப்பட்டவன்; நீ பெரிய காரியங்களைச் செய்வாய், மேன்மேலும் பலப்படுவாய் என்றான்; அப்படியே தாவீது தன் வழியே போனான்; சவுலும் தன் ஸ்தானத்திற்குத் திரும்பினான்.

I கொரிந்தியர் 7

முழு அதிகாரம் ›

1நீங்கள் எனக்கு எழுதின காரியங்களைக்குறித்து நான் எழுதுகிறதென்னவென்றால், ஸ்திரீயைத் தொடாமலிருக்கிறது மனுஷனுக்கு நல்லது.

2ஆகிலும் வேசித்தனம் இராதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும், அவளவள் தன் சொந்தப் புருஷனையும் உடையவர்களாயிருக்கவேண்டும்.

3புருஷன் தன் மனைவிக்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்யக்கடவன்; அப்படியே மனைவியும் தன் புருஷனுக்குச் செய்யக்கடவள்.

4மனைவியானவள் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, புருஷனே அதற்கு அதிகாரி; அப்படியே புருஷனும் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, மனைவியே அதற்கு அதிகாரி.

5உபவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தடையிராதபடிக்கு இருவரும் சிலகாலம் பிரிந்திருக்கவேண்டுமென்று சம்மதித்தாலன்றி, ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாதிருங்கள்; உங்களுக்கு விரதத்துவம் இல்லாமையால் சாத்தான் உங்களைத் தூண்டிவிடாதபடிக்கு, மறுபடியும் கூடிவாழுங்கள்.

6இதை நான் கட்டளையாகச் சொல்லாமல், யோசனையாகச் சொல்லுகிறேன்.

7எல்லா மனுஷரும் என்னைப்போலவே இருக்க விரும்புகிறேன். ஆகிலும் அவனவனுக்கு தேவனால் அருளப்பட்ட அவனவனுக்குரிய வரமுண்டு; அது ஒருவனுக்கு ஒருவிதமாயும், மற்றொருவனுக்கு வேறுவிதமாயும் இருக்கிறது.

8விவாகமில்லாதவர்களையும், கைம்பெண்களையும்குறித்து நான் சொல்லுகிறது என்னவென்றால், அவர்கள் என்னைப்போல இருந்துவிட்டால் அவர்களுக்கு நலமாயிருக்கும்.

9ஆகிலும் அவர்கள் விரத்தராயிருக்கக்கூடாதிருந்தால் விவாகம்பண்ணக்கடவர்கள்; வேகிறதைப்பார்க்கிலும் விவாகம்பண்ணுகிறது நலம்.

10விவாகம்பண்ணிக்கொண்டவர்களுக்கு நானல்ல, கர்த்தரே கட்டளையிடுகிறதாவது: மனைவியானவள் தன் புருஷனை விட்டுப்பிரிந்து போகக்கூடாது.

11பிரிந்துபோனால் அவள் விவாகமில்லாதிருக்கக்கடவள், அல்லது புருஷனோடே ஒப்புரவாகக்கடவள்; புருஷனும் தன் மனைவியைத் தள்ளிவிடக்கூடாது.

12மற்றவர்களைக்குறித்துக் கர்த்தர் அல்ல, நானே சொல்லுகிறதாவது: சகோதரனொருவனுடைய மனைவி அவிசுவாசியாயிருந்தும், அவனுடனே வாசமாயிருக்க அவளுக்குச் சம்மதமிருந்தால், அவன் அவளைத் தள்ளிவிடாதிருக்கக்கடவன்.

13அப்படியே ஒரு ஸ்திரீயினுடைய புருஷன் அவிசுவாசியாயிருந்தும், அவளுடனே வாசமாயிருக்க அவனுக்குச் சம்மதமிருந்தால், அவள் அவனைத் தள்ளிவிடாதிருக்கக்கடவள்.

14என்னத்தினாலெனில், அவிசுவாசியான புருஷன் தன் மனைவியால் பரிசுத்தமாக்கப்படுகிறான்; அவிசுவாசியான மனைவியும் தன் புருஷனால் பரிசுத்தமாக்கப்படுகிறாள். இல்லாவிட்டால் உங்கள் பிள்ளைகள் அசுத்தமாயிருக்குமே; இப்பொழுதோ அவைகள் பரிசுத்தமாயிருக்கின்றன.

15ஆகிலும், அவிசுவாசி பிரிந்துபோனால் பிரிந்துபோகட்டும், இப்படிப்பட்ட விஷயத்தில் சகோதரனாவது சகோதரியாவது அடிமைப்பட்டவர்களல்ல. சமாதானமாயிருக்கும்படிக்கே தேவன் நம்மை அழைத்திருக்கிறார்.

16மனைவியானவளே, நீ உன் புருஷனை இரட்சிப்பாயோ அல்லவோ உனக்கு எப்படித் தெரியும்? புருஷனே, நீ உன் மனைவியை இரட்சிப்பாயோ அல்லவோ உனக்கு எப்படித் தெரியும்?

17தேவன் அவனவனுக்குப் பகிர்ந்ததெப்படியோ, கர்த்தர் அவனவனை அழைத்ததெப்படியோ, அப்படியே அவனவன் நடக்கக்கடவன். எல்லாச் சபைகளிலேயும் இப்படியே திட்டம்பண்ணுகிறேன்.

18ஒருவன் விருத்தசேதனம் பெற்றவனாய் அழைக்கப்பட்டிருந்தால், விருத்தசேதனமில்லாதவனாயிருக்க வகைதேடானாக; ஒருவன் விருத்தசேதனமில்லாதவனாய் அழைக்கப்பட்டிருந்தால், விருத்தசேதனம் பெறாதிருப்பானாக.

19விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை; தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறதே காரியம்.

20அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே நிலைத்திருக்கக்கடவன்.

21அடிமையாய் நீ அழைக்கப்பட்டிருந்தால், கவலைப்படாதே; நீ சுயாதீனனாகக்கூடுமானால் அதை நலமென்று அநுசரித்துக்கொள்.

22கர்த்தருக்குள் அழைக்கப்பட்ட அடிமையானவன் கர்த்தருடைய சுயாதீனனாயிருக்கிறான்; அப்படியே அழைக்கப்பட்ட சுயாதீனன் கிறிஸ்துவினுடைய அடிமையாயிருக்கிறான்.

23நீங்கள் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்கள்; மனுஷருக்கு அடிமைகளாகாதிருங்கள்.

24சகோதரரே, அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே தேவனுக்கு முன்பாக நிலைத்திருக்கக்கடவன்.

25அன்றியும் கன்னிகைகளைக்குறித்து, கர்த்தரால் எனக்குக் கட்டளை இல்லை. ஆகிலும் நான் உண்மையுள்ளவனாயிருக்கிறதற்குக் கர்த்தரால் இரக்கம்பெற்று, என் அபிப்பிராயத்தைத் தெரியப்படுத்துகிறேன்.

26அதென்னவெனில், இப்பொழுது உண்டாயிருக்கிற துன்பத்தினிமித்தம் விவாகமில்லாமலிருக்கிறது மனுஷனுக்கு நலமாயிருக்குமென்று எண்ணுகிறேன்.

27நீ மனைவியோடே கட்டப்பட்டிருந்தால், அவிழ்க்கப்பட வகைதேடாதே; நீ மனைவி இல்லாதவனாயிருந்தால். மனைவியைத் தேடாதே.

28நீ விவாகம்பண்ணினாலும் பாவமல்ல; கன்னிகை விவாகம்பண்ணினாலும் பாவமல்ல. ஆகிலும் அப்படிப்பட்டவர்கள் சரீரத்திலே உபத்திரவப்படுவார்கள்; அதற்கு நீங்கள் தப்பவேண்டுமென்றிருக்கிறேன்.

29மேலும், சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், இனிவரும் காலம் குறுகினதானபடியால், மனைவிகளுள்ளவர்கள் மனைவிகளில்லாதவர்கள்போலவும்,

30அழுகிறவர்கள் அழாதவர்கள்போலவும், சந்தோஷப்படுகிறவர்கள் சந்தோஷப்படாதவர்கள்போலவும், கொள்ளுகிறவர்கள் கொள்ளாதவர்கள்போலவும்,

31இவ்வுலகத்தை அனுபவிக்கிறவர்கள் அதைத் தகாதவிதமாய் அனுபவியாதவர்கள்போலவும் இருக்கவேண்டும்; இவ்வுலகத்தின் வேஷம் கடந்துபோகிறதே.

32நீங்கள் கவலையற்றவர்களாயிருக்க விரும்புகிறேன். விவாகமில்லாதவன் கர்த்தருக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான்.

33விவாகம்பண்ணினவன் தன் மனைவிக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, உலகத்திற்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான்.

34அதுபோல, மனைவியானவளுக்கும், கன்னிகைக்கும் வித்தியாசமுண்டு. விவாகமில்லாதவள் சரீரத்திலும் ஆத்துமாவிலும் பரிசுத்தமாயிருக்கும்படி, கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறாள்; விவாகம்பண்ணினவள் தன் புருஷனுக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, உலகத்திற்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறாள்.

35இதை நான் உங்களைக் கண்ணியில் அகப்படுத்தவேண்டுமென்று சொல்லாமல், உங்களுக்குத் தகுதியாயிருக்குமென்றும், நீங்கள் கவலையில்லாமல் கர்த்தரைப் பற்றிக்கொண்டிருக்கவேண்டுமென்றும், உங்கள் சுயபிரயோஜனத்துக்காகவே சொல்லுகிறேன்.

36ஆகிலும் ஒருவன் தன் புத்திரியின் கன்னிகைப்பருவம் கடந்துபோனதினாலே, அவள் விவாகம் பண்ணாமலிருப்பது அவளுக்குத் தகுதியல்லவென்றும், அவள் விவாகம்பண்ணுவது அவசியமென்றும் நினைத்தால், அவன் தன் மனதின்படி செய்யக்கடவன்; அது பாவமல்ல, விவாகம்பண்ணட்டும்.

37ஆயினும் அதற்கு அவசியத்தைக் காணாமல், தன் இருதயத்திலே உறுதியுள்ளவனாயும், சுயசித்தத்தின்படி செய்ய அதிகாரமுள்ளவனாயுமிருந்து, தன் புத்திரியின் கன்னிகைப் பருவத்தைக் காக்கவேண்டுமென்று தன் இருதயத்தில் தீர்மானிக்கிறவன் நன்மைசெய்கிறான்.

38இப்படியிருக்க, அவளை விவாகம்பண்ணிக் கொடுக்கிறவனும் நன்மைசெய்கிறான்; கொடாமலிருக்கிறவனும் அதிக நன்மைசெய்கிறான்.

39மனைவியானவள் தன் புருஷன் உயிரோடிருக்குங்காலமளவும் பிரமாணத்தினால் கட்டப்பட்டிருக்கிறாள்; தன் புருஷன் மரித்தபின்பு தனக்கு இஷ்டமானவனாயும் கர்த்தருக்குட்பட்டவனாயுமிருக்கிற எவனையாகிலும் விவாகம்பண்ணிக்கொள்ள விடுதலையாயிருக்கிறாள்.

40ஆகிலும் என்னுடைய அபிப்பிராயத்தின்படி அவள் அப்படியே இருந்துவிட்டால் பாக்கியவதியாயிருப்பாள். என்னிடத்திலும் தேவனுடைய ஆவி உண்டென்று எண்ணுகிறேன்.

தனிவாசிப்பு

எசேக்கியேல் 5

முழு அதிகாரம் ›

1பின்னும் அவர்: மனுபுத்திரனே, சவரகன் கத்தியாகிய கருக்கான கத்தியை வாங்கி, அதினால் உன் தலையையும் உன் தாடியையும் சிரைத்துக்கொண்டு, பின்பு நிறுக்கும் தராசை எடுத்து, அந்த மயிரைப் பங்கிடக்கடவாய்.

2மூன்றில் ஒரு பங்கை எடுத்து முற்றிக்கைபோடும் நாட்கள் முடிகிறபோது நகரத்தின் நடுவிலே அக்கினியால் சுட்டெரித்து, மூன்றில் ஒரு பங்கை எடுத்து, அதைச் சுற்றிலும் கத்தியாலே வெட்டி, மூன்றில் ஒரு பங்கை எடுத்துக் காற்றிலே தூற்றக்கடவாய்; அவைகளின் பின்னாக நான் பட்டயத்தை உருவுவேன்.

3அதில் கொஞ்சம்மாத்திரம் எடுத்து, அதை உன் வஸ்திரத்தோரங்களில் முடிந்துவைப்பாயாக.

4பின்னும் அதில் கொஞ்சம் எடுத்து, அதைத் தீயின் நடுவில் எறிந்து, அதை அக்கினியால் சுட்டெரிப்பாயாக; அதிலிருந்து இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருக்கும் விரோதமாக அக்கினி புறப்படும்.

5கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், இதுவே எருசலேம், புறஜாதிகளின் நடுவிலே நான் அதை வைத்தேன், அதைச் சுற்றிலும் தேசங்கள் இருக்கிறது.

6அது புறஜாதிகளைப்பார்க்கிலும் என் நியாயங்களையும், தன்னைச் சுற்றிலும் இருக்கிற தேசங்களைப்பார்க்கிலும் என் கட்டளைகளையும் அக்கிரமமாக மாற்றிப்போட்டது; அவர்கள் என் நியாயங்களை வெறுத்து, என் கட்டளைகளில் நடவாமற்போனார்கள்.

7ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், உங்களைச் சுற்றிலும் இருக்கிற புறஜாதிகளைப்பார்க்கிலும் அதிகரிக்கிறவர்களாகிய நீங்கள் என் கட்டளைகளிலே நடவாமலும், என் நியாயங்களின்படி செய்யாமலும், உங்களைச் சுற்றிலும் இருக்கிற புறஜாதிகளுடைய நீதிநியாயங்களின்படியாவது நடவாமலும் போனபடியினாலே,

8இதோ, நான், நானே உனக்கு விரோதமாக வந்து, புறஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக உன் நடுவிலே நீதி செலுத்தி,

9நான் முன்பு செய்யாததும் இனிச்செய்யாதிருப்பதுமானவிதமாய் உனக்கு உன் எல்லா அருவருப்புகளினிமித்தமும் செய்வேன்.

10ஆதலால் உன் நடுவிலே பிதாக்கள் பிள்ளைகளைத் தின்பார்கள்; பிள்ளைகள் பிதாக்களைத் தின்பார்கள்; நான் உன்னில் நீதிசெலுத்தி உன்னில் மீதியாயிருப்பவர்களையெல்லாம் சகல திசைகளிலும் சிதறிப்போகப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

11ஆதலால், சீயென்றிகழப்படத்தக்கதும் அருவருக்கப்படத்தக்கதுமான உன் கிரியைகளால் நீ என் பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தினபடியால் என் கண் உன்னைத் தப்பவிடாது, நான் உன்னைக் குறுகிப்போகப்பண்ணுவேன், நான் இரங்கமாட்டேன், இதை என் ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.

12உன்னிலே மூன்றில் ஒரு பங்கு கொள்ளை நோயால் சாவார்கள், பஞ்சத்தாலும் உன் நடுவிலே மடிந்துபோவார்கள்; மூன்றில் ஒரு பங்கு உன்னைச் சுற்றிலும் இருக்கிற பட்டயத்தால் வெட்டுண்டு விழுவார்கள்; மூன்றில் ஒரு பங்கை நான் சகல திசைகளிலும் சிதறிப்போகப்பண்ணி, அவர்கள் பின்னே பட்டயத்தை உருவுவேன்.

13இப்படி என் கோபம் நிறைவேறும்; இப்படி நான் என் உக்கிரத்தை அவர்கள்மேல் தங்கப்பண்ணுகிறதினால் என்னை ஆற்றிக்கொள்வேன்; நான் என் உக்கிரத்தை அவர்களிலே நிறைவேற்றும்போது, கர்த்தராகிய நான் என் வைராக்கியத்திலே இதைப் பேசினேன் என்று அறிவார்கள்.

14கடந்துபோகிற யாவருடைய கண்களுக்கு முன்பாகவும் உன் சுற்றுப்புறத்தாராகிய ஜாதிகளுக்குள்ளே நான் உன்னைப் பாழும் நிந்தையுமாக்குவேன்.

15நான் கோபத்தாலும் உக்கிரத்தாலும் கொடிய தண்டனைகளாலும், உன்னில் நீதிசெலுத்தும்போது, உன் சுற்றுப்புறத்தாராகிய ஜாதிகளுக்கு அது நிந்தையும் துர்க்கீர்த்தியும் எச்சரிப்பும் பிரமிப்புமாய் இருக்கும்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன்.

16உங்களை அழிப்பதற்கு நான் அனுப்பும் அழிவுக்கேதுவான பஞ்சத்தின் கொடிய அம்புகளை நான்அவர்களுக்குள்ளே எய்யும்போது, நான் பஞ்சத்தை உங்கள்மேல் அதிகரிக்கப்பண்ணி, உங்கள் அப்பம் என்னும் ஆதரவுகோலை முறித்துப்போடுவேன்.

17பஞ்சத்தையும், உன்னைப் பிள்ளையில்லாமற்போகப்பண்ணும் துஷ்டமிருகங்களையும் உங்களுக்கு விரோதமாக அனுப்புவேன்; கொள்ளைநோயும் இரத்தஞ்சிந்துதலும் உன்னில் சுற்றித்திரியும்; பட்டயத்தை நான் உன்மேல் வரப்பண்ணுவேன்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன் என்றார்.

சங்கீதம் 42-43

முழு அதிகாரம் ›
சங்கீதம் 42

1மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது.

2என் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருக்கிறது; நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்?

3உன் தேவன் எங்கே என்று அவர்கள் நாள்தோறும் என்னிடத்தில் சொல்லுகிறபடியால், இரவும் பகலும் என் கண்ணீரே எனக்கு உணவாயிற்று.

4முன்னே நான் பண்டிகையை ஆசரிக்கிற ஜனங்களோடே கூட நடந்து, கூட்டத்தின் களிப்பும் துதியுமான சத்தத்தோடே தேவாலயத்திற்குப் போய்வருவேனே; இவைகளை நான் நினைக்கும்போது என் உள்ளம் எனக்குள்ளே உருகுகிறது.

5என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; அவர் சமுகத்து இரட்சிப்பினிமித்தம் நான் இன்னும் அவரைத் துதிப்பேன்.

6என் தேவனே, என் ஆத்துமா எனக்குள் கலங்குகிறது; ஆகையால் யோர்தான் தேசத்திலும் எர்மோன் மலைகளிலும் சிறுமலையிலுமிருந்து உம்மை நினைக்கிறேன்.

7உமது மதகுகளின் இரைச்சலால் ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது; உமது அலைகளும் திரைகளும் எல்லாம் என்மேல் புரண்டுபோகிறது.

8ஆகிலும் கர்த்தர் பகற்காலத்திலே தமது கிருபையைக் கட்டளையிடுகிறார்; இராக்காலத்திலே அவரைப் பாடும் பாட்டு என் வாயிலிருக்கிறது; என் ஜீவனுடைய தேவனை நோக்கி விண்ணப்பஞ்செய்கிறேன்.

9நான் என் கன்மலையாகிய தேவனை நோக்கி: ஏன் என்னை மறந்தீர்? சத்துருவினால் ஒடுக்கப்பட்டு, நான் ஏன் துக்கத்துடனே திரியவேண்டும் என்று சொல்லுகிறேன்.

10உன் தேவன் எங்கே என்று என் சத்துருக்கள் நாள்தோறும் என்னோடே சொல்லி, என்னை நிந்திப்பது என் எலும்புகளை உருவக்குத்துகிறதுபோல் இருக்கிறது.

11என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்.

சங்கீதம் 43

1தேவனே, நீர் என் நியாயத்தை விசாரித்து, பக்தியில்லாத ஜாதியாரோடு எனக்காக வழக்காடி, சூதும் அநியாயமுமான மனுஷனுக்கு என்னைத் தப்புவியும்.

2என் அரணாகிய தேவன் நீர்; ஏன் என்னைத் தள்ளிவிடுகிறீர்? சத்துருவினால் ஒடுக்கப்பட்டு நான் ஏன் துக்கத்துடனே திரியவேண்டும்?

3உமது வெளிச்சத்தையும் உமது சத்தியத்தையும் அனுப்பியருளும்; அவைகள் என்னை நடத்தி, உமது பரிசுத்த பர்வதத்திற்கும் உமது வாசஸ்தலங்களுக்கும் என்னைக் கொண்டுபோவதாக.

4அப்பொழுது நான் தேவனுடைய பீடத்தண்டைக்கும், எனக்கு ஆனந்த மகிழ்ச்சியாயிருக்கிற தேவனிடத்திற்கும் பிரவேசிப்பேன். தேவனே, என் தேவனே, உம்மைச் சுரமண்டலத்தால் துதிப்பேன்.

5என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்;

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com