‹ முகப்புமுழுத் திட்டம்

செப்டம்பர் 3 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்செப்டம்பர் 3அடுத்த நாள் ›
குடும்பம்

I சாமுவேல் 27

முழு அதிகாரம் ›

1பின்பு தாவீது: நான் எந்த நாளிலாகிலும் ஒரு நாள் சவுலின் கையினால் மடிந்துபோவேன்; இனிச் சவுல் இஸ்ரவேலின் எல்லைகளில் எங்கேயாவது என்னைக் கண்டுபிடிக்கலாம் என்கிற நம்பிக்கை அற்றுப்போகும்படிக்கும், நான் அவன் கைக்கு நீங்கலாயிருக்கும்படிக்கும், நான் பெலிஸ்தரின் தேசத்திற்குப் போய், தப்பித்துக்கொள்வதைப்பார்க்கிலும் நலமான காரியம் வேறில்லை என்று தன் இருதயத்தில் யோசித்தான்.

2ஆகையால் தாவீது தன்னோடிருந்த அறுநூறுபேரோடுங்கூட எழுந்திருந்து, மாயோகின் குமாரனாகிய ஆகீஸ் என்னும் காத்தின் ராஜாவினிடத்தில் போய்ச் சேர்ந்தான்.

3அங்கே தாவீதும், அவன் மனுஷரும், அவரவர் வீட்டாரும், தாவீதோடேகூட அவன் இரண்டு மனைவிகளாகிய யெஸ்ரயேல் ஊராளாகிய அகினோகாமும், நாபாலின் மனைவியாயிருந்த கர்மேல் ஊராளாகிய அபிகாயிலும், காத் பட்டணத்தில் ஆகீசிடத்தில் தங்கியிருந்தார்கள்.

4தாவீது காத் பட்டணத்திற்கு ஓடிப்போனான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் அப்புறம் அவனைத் தேடவில்லை.

5தாவீது ஆகீசை நோக்கி: உம்முடைய கண்களில் எனக்குத் தயை கிடைக்குமானால், நான் வாசம்பண்ணும்படி நாட்டிலுள்ள ஊர்களிலே ஒன்றில் எனக்கு இடந்தாரும்; உம்முடைய அடியான் உம்மோடேகூட ராஜதானி பட்டணத்திலே வாசமாயிருப்பானேன் என்றான்.

6அப்பொழுது ஆகீஸ்: அன்றையதினம் சிக்லாகை அவனுக்குக் கொடுத்தான்; அதினிமித்தம் சிக்லாக் இந்நாள் வரைக்கும் யூதாவின் ராஜாக்களைச் சேர்ந்திருக்கிறது.

7தாவீது பெலிஸ்தரின் நாட்டிலே ஒரு வருஷமும் நாலு மாதமும் குடியிருந்தான்.

8அங்கேயிருந்து தாவீதும் அவன் மனுஷரும் கெசூரியர் மேலும் கெஸ்ரியர்மேலும் அமலேக்கியர்மேலும் படையெடுத்துப் போனார்கள்; சூருக்குப் போகிற எல்லை துவக்கி எகிப்து தேசமட்டும் இருக்கிற நாட்டிலே பூர்வகாலம் துவக்கிக் குடியிருந்தவர்கள் இவர்களே.

9தாவீது அந்த நாட்டைக் கொள்ளையடிக்கிறபோது, புருஷர்களையும் ஸ்திரீகளையும் உயிரோடே வைக்காமல், ஆடுமாடுகளையும் கழுதைகளையும் ஒட்டகங்களையும் வஸ்திரங்களையும் எடுத்துக்கொண்டு, ஆகீசிடத்துக்குத் திரும்பி வருவான்.

10இன்று எத்திசையில் போய்க் கொள்ளையடித்தீர்கள் என்று ஆகீஸ் கேட்கும்போது, தாவீது: யூதாவுடைய தென்திசையிலும், யெராமியேலருடைய தென்திசையிலும் கேனியருடைய தென்திசையிலும் என்பான்.

11இன்ன இன்னபடி தாவீது செய்தான் என்று தங்களுக்கு விரோதமான செய்தியை அறிவிக்கத்தக்க ஒருவரையும் தாவீது காத் பட்டணத்திற்குக் கொண்டுவராதபடிக்கு, ஒரு புருஷனையாகிலும் ஸ்திரீயையாகிலும் உயிரோடே வைக்காதிருப்பான்; அவன் பெலிஸ்தரின் நாட்டுப்புறத்திலே குடியிருக்கிற நாளெல்லாம் இவ்வண்ணம் செய்துகொண்டுவந்தான்.

12ஆகீஸ் தாவீதை நம்பி: அவன் இஸ்ரவேலராகிய தன்னுடைய ஜனங்கள் தன்னை வெறுக்கும்படி செய்கிறான்; என்றைக்கும் அவன் என் ஊழியக்காரனாயிருப்பான் என்பான்.

I கொரிந்தியர் 8

முழு அதிகாரம் ›

1விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைக்குறித்த விஷயத்தில், நம்மெல்லாருக்கும் அறிவு உண்டென்று நமக்குத் தெரியுமே. அறிவு இறுமாப்பை உண்டாக்கும், அன்போ பக்திவிருத்தியை உண்டாக்கும்.

2ஒருவன் தான் ஏதேனும் ஒன்றை அறிந்தவனென்று எண்ணிக்கொள்வானானால், ஒன்றையும் அறியவேண்டியபிரகாரமாக அவன் இன்னும் அறியவில்லை.

3தேவனில் அன்புகூருகிறவனெவனோ, அவன் தேவனால் அறியப்பட்டிருக்கிறான்.

4விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிக்கிற விஷயத்தைப்பற்றி, உலகத்திலே விக்கிரகமானது ஒன்றுமில்லையென்றும் ஒருவரேயன்றி வேறொரு தேவன் இல்லையென்றும் அறிந்திருக்கிறோம்.

5வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேக கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும்,

6பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர் மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.

7ஆகிலும், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை. சிலர் இன்றையவரைக்கும் விக்கிரகத்தை ஒரு பொருளென்று எண்ணி, விக்கிரகத்துக்குப் படைக்கப்பட்டதைப் புசிக்கிறார்கள்; அவர்களுடைய மனச்சாட்சி பலவீனமாயிருப்பதால் அசுசிப்படுகிறது.

8போஜனமானது நம்மை தேவனுக்கு உகந்தவர்களாக்கமாட்டாது; என்னத்தினாலெனில், புசிப்பதினால் நமக்கு ஒரு மேன்மையுமில்லை, புசியாதிருப்பதினால் நமக்கு ஒரு குறைவுமில்லை.

9ஆகிலும் இதைக்குறித்து உங்களுக்கு உண்டாயிருக்கிற அதிகாரம் எவ்விதத்திலும் பலவீனருக்குத் தடுக்கலாகாதபடிக்குப் பாருங்கள்.

10எப்படியெனில், அறிவுள்ளவனாகிய உன்னை விக்கிரகக்கோவிலிலே பந்தியிருக்க ஒருவன் கண்டால், பலவீனனாயிருக்கிற அவனுடைய மனச்சாட்சி விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிப்பதற்குத் துணிவுகொள்ளுமல்லவா?

11பலவீனமுள்ள சகோதரன் உன் அறிவினிமித்தம் கெட்டுப்போகலாமா? அவனுக்காகக் கிறிஸ்து மரித்தாரே.

12இப்படிச் சகோதரருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, பலவீனமுள்ள அவர்களுடைய மனச்சாட்சியைப் புண்படுத்துகிறதினாலே, நீங்கள் கிறிஸ்துவுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறீர்கள்.

13ஆதலால் போஜனம் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்கினால், நான் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்காதபடிக்கு, என்றைக்கும் மாம்சம் புசியாதிருப்பேன்.

தனிவாசிப்பு

எசேக்கியேல் 6

முழு அதிகாரம் ›

1கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

2மனுபுத்திரனே, நீ இஸ்ரவேலின் பர்வதங்களுக்கு நேராக உன் முகத்தைத் திருப்பி, அவைகளுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்,

3இஸ்ரவேலின் பர்வதங்களே, கர்த்தராகிய ஆண்டவரின் வார்த்தையைக் கேளுங்கள்; கர்த்தராகிய ஆண்டவர் பர்வதங்களையும், குன்றுகளையும், ஓடைகளையும், பள்ளத்தாக்குகளையும், நோக்கி: இதோ, உங்கள்மேல் நான், நானே பட்டயத்தை வரப்பண்ணி, உங்கள் மேடைகளை அழித்துப்போடுவேன்.

4உங்கள் பலிபீடங்கள் பாழாக்கப்பட்டு, உங்கள் சிலைகள் தகர்க்கப்படும்; உங்களில் கொலையுண்கிறவர்களை உங்கள் நரகலான விக்கிரகங்களுக்கு முன்பாக விழப்பண்ணுவேன்.

5நான் இஸ்ரவேல் புத்திரருடைய பிரேதங்களை அவர்களுடைய நரகலான விக்கிரகங்களின் முன்னே கிடக்கப்பண்ணி, உங்கள் பலிபீடங்களைச் சுற்றிலும் உங்கள் எலும்புகளைச் சிதறப்பண்ணுவேன்.

6உங்கள் பலிபீடங்கள் நிர்மூலமும் பாழுமாகும்படிக்கும், உங்கள் நரகலான விக்கிரகங்கள் தகர்க்கப்பட்டு, ஓய்ந்து, உங்கள் சிலைகள் வெட்டுண்டு, உங்கள் கிரியைகள் குலைந்துபோகும்படிக்கும், உங்களுடைய சகல வாசஸ்தலங்களிலுமுள்ள பட்டணங்கள் நிர்மூலமும் உங்கள் மேடைகள் பாழுமாகும்.

7கொலைசெய்யப்பட்டவர்கள் உங்கள் நடுவில் விழுவார்கள்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.

8நீங்கள் தேசங்களில் சிதறடிக்கப்படும்போது, புறஜாதிகளுக்குள்ளே பட்டயத்துக்குத் தப்புவாரை உங்களுக்கு மீதியாக வைப்பேன்.

9என்னை விட்டுச் சோரம்போகிற இருதயத்தைக்குறித்தும், தங்கள் நரகலான விக்கிரகங்களின் பின்னே சோரம்போகிற தங்கள் கண்களைக்குறித்தும் மனமடிவானேன் என்று உங்களில் தப்பிப்போன அவர்கள் தாங்கள் சிறைப்பட்டிருக்கும் புறஜாதிகளுக்குள்ளே என்னை நினைத்து, தங்களுடைய சகல அருவருப்புகளினாலும் தாங்கள் செய்த பொல்லாப்புகளினிமித்தம் தங்களையே வெறுத்து,

10இந்தத் தீங்குகளையெல்லாம் தங்களுக்கு நேரிடப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய நான் விருதாவாய்ச் சொன்னதில்லையென்று அறிந்துகொள்வார்கள் என்றார்.

11கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ உன் கையில் அடித்து, உன் காலால் தட்டி, இஸ்ரவேல் வம்சத்தாருடைய சகல பொல்லாத அருவருப்புகளினிமித்தமும் ஐயோ! என்று சொல்; அவர்கள் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் கொள்ளைநோயாலும் விழுவார்கள்.

12தூரத்திலிருக்கிறவன் கொள்ளைநோயால் சாவான்; சமீபத்திலிருக்கிறவன் பட்டயத்தால் விழுவான்; மீதியாயிருந்து, முற்றிக்கைபோடப்பட்டவன் பஞ்சத்தால் சாவான்; இப்படி அவர்களில் என் உக்கிரத்தைத் தீர்த்துக்கொள்ளுவேன்.

13அவர்கள் தங்கள் நரகலான சகல விக்கிரகங்களுக்கும் மதுரவாசனையான தூபத்தைக் காட்டின ஸ்தலங்களாகிய உயர்ந்த சகல மேடுகளிலும், பர்வதங்களுடைய சகல சிகரங்களிலும், பச்சையான சகல விருட்சங்களின்கீழும், தழைத்திருக்கிற சகல கர்வாலி மரங்களின்கீழும், அவர்களுடைய நரகலான விக்கிரகங்களின் நடுவிலும் அவர்களுடைய பலிபீடங்களைச் சுற்றிலும், அவர்களில் கொலையுண்டவர்கள் கிடக்கும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.

14நான் என் கையை அவர்களுக்கு விரோதமாக நீட்டி, அவர்களுடைய எல்லா வாசஸ்தலங்களுமுள்ள தேசத்தை அழித்து, அதைத் திப்லாத்தின் வனாந்தரத்தைப்பார்க்கிலும் அதிகமாய்ப் பாழாக்குவேன், அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் என்றார்.

1தேவனே, எங்கள் பிதாக்களுடைய நாட்களாகிய பூர்வநாட்களில் நீர் நடப்பித்த கிரியைகளை அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள்; அவைகளை எங்கள் காதுகளால் கேட்டோம்.

2தேவரீர் உம்முடைய கையினாலே ஜாதிகளைத் துரத்தி, இவர்களை நாட்டி; ஜனங்களைத் துன்பப்படுத்தி, இவர்களைப் பரவப்பண்ணினீர்.

3அவர்கள் தங்கள் பட்டயத்தால் தேசத்தைக் கட்டிக்கொள்ளவில்லை; அவர்கள் புயமும் அவர்களை இரட்சிக்கவில்லை; நீர் அவர்கள்மேல் பிரியமாயிருந்தபடியால், உம்முடைய வலதுகரமும், உம்முடைய புயமும், உம்முடைய முகத்தின் பிரகாசமும் அவர்களை இரட்சித்தது.

4தேவனே, நீர் என் ராஜா; யாக்கோபுக்கு இரட்சிப்பைக் கட்டளையிடும்.

5உம்மாலே எங்கள் சத்துருக்களைக் கீழே விழத்தாக்கி, எங்களுக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை உம்முடைய நாமத்தினால் மிதிப்போம்.

6என் வில்லை நான் நம்பேன், என் பட்டயம் என்னை இரட்சிப்பதில்லை.

7நீரே எங்கள் சத்துருக்களினின்று எங்களை இரட்சித்து, எங்களைப் பகைக்கிறவர்களை வெட்கப்படுத்துகிறீர்.

8தேவனுக்குள் நித்தம் மேன்மைபாராட்டுவோம்; உமது நாமத்தை என்றென்றைக்கும் துதிப்போம். (சேலா)

9நீர் எங்களைத் தள்ளிவிட்டு, நாணப்பண்ணுகிறீர்; எங்கள் சேனைகளுடனே செல்லாதிருக்கிறீர்.

10சத்துருவுக்கு நாங்கள் இடைந்து பின்னிட்டுத் திரும்பிப்போகப்பண்ணுகிறீர்; எங்கள் பகைஞர் தங்களுக்கென்று எங்களைக் கொள்ளையிடுகிறார்கள்.

11நீர் எங்களை ஆடுகளைப்போல இரையாக ஒப்புக்கொடுத்து, ஜாதிகளுக்குள்ளே எங்களைச் சிதறடிக்கிறீர்.

12நீர் உம்முடைய ஜனங்களை இலவசமாக விற்கிறீர்; அவர்கள் கிரயத்தினால் உமக்கு லாபமில்லையே.

13எங்கள் அயலாருக்கு எங்களை நிந்தையாகவும், எங்கள் சுற்றுப்புறத்தாருக்குப் பரியாசமும் சக்கந்தமுமாகவும் வைக்கிறீர்.

14நாங்கள் ஜாதிகளுக்குள்ளே பழமொழியாயிருக்கவும், ஜனங்கள் எங்களைக்குறித்துத் தலைதூக்கவும் செய்கிறீர்.

15நிந்தித்துத் தூஷிக்கிறவனுடைய சத்தத்தினிமித்தமும், சத்துருவினிமித்தமும், பழிவாங்குகிறவனிமித்தமும்,

16என் இலச்சை நித்தம் எனக்கு முன்பாக இருக்கிறது; என் முகத்தின் வெட்கம் என்னை மூடுகிறது.

17இவையெல்லாம் எங்கள்மேல் வந்திருந்தும், உம்மை நாங்கள் மறக்கவும் இல்லை, உம்முடைய உடன்படிக்கைக்குத் துரோகம்பண்ணவும் இல்லை.

18நீர் எங்களை வலுசர்ப்பங்களுள்ள இடத்திலே நொறுக்கி, மரண இருளினாலே எங்களை மூடியிருந்தும்,

19எங்கள் இருதயம் பின்வாங்கவும் இல்லை, எங்கள் காலடி உம்முடைய பாதையை விட்டு விலகவும் இல்லை.

20நாங்கள் எங்கள் தேவனுடைய நாமத்தை மறந்து, அந்நியதேவனை நோக்கிக் கையெடுத்திருந்தோமானால்,

21தேவன் அதை ஆராய்ந்து, விசாரியாதிருப்பாரோ? இருதயத்தின் அந்தரங்கங்களை அவர் அறிந்திருக்கிறாரே.

22உமது நிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம்; அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம்.

23ஆண்டவரே, விழித்துக்கொள்ளும்; ஏன் நித்திரைபண்ணுகிறீர்? எழுந்தருளும், எங்களை என்றைக்கும் தள்ளிவிடாதிரும்.

24ஏன் உம்முடைய முகத்தை மறைத்து, எங்கள் சிறுமையையும் எங்கள் நெருக்கத்தையும் மறந்துவிடுகிறீர்?

25எங்கள் ஆத்துமா புழுதிமட்டும் தாழ்ந்திருக்கிறது; எங்கள் வயிறு தரையோடு ஒட்டியிருக்கிறது.

26எங்களுக்கு ஒத்தாசையாக எழுந்தருளும்; உம்முடைய கிருபையினிமித்தம் எங்களை மீட்டுவிடும்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com