‹ முகப்புமுழுத் திட்டம்

செப்டம்பர் 20 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்செப்டம்பர் 20அடுத்த நாள் ›
குடும்பம்

II சாமுவேல் 16

முழு அதிகாரம் ›

1தாவீது மலையுச்சியிலிருந்து சற்றப்புறம் நடந்துபோனபோது, இதோ, மேவிபோசேத்தின் காரியக்காரனாகிய சீபா, பொதிகளைச் சுமக்கிற இரண்டு கழுதைகளை ஓட்டிக்கொண்டுவந்து, அவனைச் சந்தித்தான்; அவைகளில் இருநூறு அப்பங்களும், வற்றலான நூறு திராட்சப்பழக்குலைகளும், வசந்தகாலத்துப் பலனான நூறு குலைகளும், ஒரு துருத்தி திராட்சரசமும் இருந்தது.

2ராஜா சீபாவைப்பார்த்து: இவைகள் என்னத்திற்கு என்று கேட்டதற்கு, சீபா: கழுதைகள் ராஜாவின் வீட்டார் ஏறுகிறதற்கும், அப்பங்களும் பழங்களும், வாலிபர் புசிக்கிறதற்கும், திராட்சரசம் வனாந்தரத்தில் விடாய்த்துப்போனவர்கள் குடிக்கிறதற்குமே என்றான்.

3அப்பொழுது ராஜா: உன் ஆண்டவனுடைய குமாரன் எங்கே என்று கேட்டதற்கு, சீபா ராஜாவை நோக்கி: எருசலேமில் இருக்கிறான்; இன்று இஸ்ரவேல் வீட்டார் என் தகப்பனுடைய ராஜ்யத்தை என் வசமாய்த் திரும்பப்பண்ணுவார்கள் என்றான் என்று சொன்னான்.

4அப்பொழுது ராஜா சீபாவை நோக்கி: மேவிபோசேத்திற்கு உண்டானதெல்லாம் உன்னுடையதாயிற்று என்றான். அதற்குச் சீபா: ராஜாவாகிய என் ஆண்டவனே, உம்முடைய கண்களில் எனக்குத் தயை கிடைக்கவேண்டும் என்று நான் பணிந்து கேட்டுக்கொள்ளுகிறேன் என்றான்.

5தாவீது ராஜா பகூரிம்மட்டும் வந்தபோது, இதோ, சவுல் வீட்டு வம்சத்தானாயிருக்கிற கேராவின் குமாரனாகிய சீமேயி என்னும் பேருள்ள ஒரு மனுஷன் அங்கேயிருந்து புறப்பட்டு, தூஷித்துக்கொண்டே நடந்துவந்து,

6சகல ஜனங்களும், சகல பலசாலிகளும், தாவீதின் வலதுபுறமாகவும் இடதுபுறமாகவும் நடக்கையில், தாவீதின்மேலும், தாவீது ராஜாவுடைய சகல ஊழியக்காரர்மேலும் கற்களை எறிந்தான்.

7சீமேயி அவனைத் தூஷித்து: இரத்தப்பிரியனே, பேலியாளின் மனுஷனே, தொலைந்துபோ, தொலைந்துபோ.

8சவுலின் ஸ்தலத்தில் ராஜாவான உன்மேல் கர்த்தர் சவுல் வீட்டாரின் இரத்தப்பழியைத் திரும்பப்பண்ணினார்; கர்த்தர் ராஜ்யபாரத்தை உன் குமாரனாகிய அப்சலோமின் கையில் ஒப்புக்கொடுத்தார்; இப்போதும் இதோ, உன் அக்கிரமத்தில் அகப்பட்டாய்; நீ இரத்தப்பிரியனான மனுஷன் என்றான்.

9அப்பொழுது செருயாவின் குமாரன் அபிசாய் ராஜாவை நோக்கி: அந்தச் செத்த நாய் ராஜாவாகிய என் ஆண்டவனை தூஷிப்பானேன்? நான் போய் அவன் தலையை வாங்கிப்போடட்டுமே என்றான்.

10அதற்கு ராஜா: செருயாவின் குமாரரே, எனக்கும் உங்களுக்கும் என்ன? அவன் என்னைத் தூஷிக்கட்டும்; தாவீதைத் தூஷிக்கவேண்டும் என்று கர்த்தர் அவனுக்குச் சொன்னார்; ஆகையால் ஏன் இப்படிச் செய்கிறாய் என்று கேட்கத்தக்கவன் யார் என்றான்.

11பின்னும் தாவீது அபிசாயையும் தன் ஊழியக்காரர் எல்லாரையும் பார்த்து: இதோ, என் கர்ப்பப்பிறப்பான என் குமாரனே என் பிராணனை வாங்கத் தேடும்போது, இந்தப் பென்யமீனன் எத்தனை அதிகமாய்ச் செய்வான், அவன் தூஷிக்கட்டும்; அப்படிச் செய்ய கர்த்தர் அவனுக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.

12ஒருவேளை கர்த்தர் என் சிறுமையைப் பார்த்து, இந்த நாளில் அவன் நிந்தித்த நிந்தனைக்குப் பதிலாக எனக்கு நன்மையைச் சரிக்கட்டுவார் என்றான்.

13அப்படியே தாவீதும் அவன் மனுஷரும் வழியே நடந்துபோனார்கள்; சீமேயியும் மலையின் பக்கத்திலே அவனுக்கு எதிராக நடந்து தூஷித்து, அவனுக்கு எதிராகக் கற்களை எறிந்து, மண்ணைத் தூற்றிக்கொண்டே வந்தான்.

14ராஜாவும் அவனோடிருந்த சகல ஜனங்களும் விடாய்த்தவர்களாய், தங்குமிடத்திலே சேர்ந்து, இளைப்பாறினார்கள்.

15அப்சலோமும் இஸ்ரவேல் மனுஷராகிய சகல ஜனங்களும் அவனோடேகூட அகித்தோப்பேலும் எருசலேமுக்கு வந்தார்கள்.

16அற்கியனாகிய ஊசாய் என்னும் தாவீதின் சிநேகிதன் அப்சலோமிடத்தில் வந்தபோது, ஊசாய் அப்சலோமை நோக்கி: ராஜாவே வாழ்க, ராஜாவே வாழ்க என்றான்.

17அப்பொழுது அப்சலோம் ஊசாயைப் பார்த்து: உன் சிநேகிதன்மேல் உனக்கு இருக்கிற தயை இதுதானோ? உன் சிநேகிதனோடே நீ போகாதே போனது என்ன என்று கேட்டான்.

18அதற்கு ஊசாய் அப்சலோமை நோக்கி: அப்படி அல்ல, கர்த்தரும் இந்த ஜனங்களும் இஸ்ரவேல் மனுஷர் அனைவரும் தெரிந்துகொள்ளுகிறவரையே நான் சேர்ந்து அவரோடே இருப்பேன்.

19இதுவும் அல்லாமல், நான் யாரிடத்தில் சேவிப்பேன்? அவருடைய குமாரனிடத்தில் அல்லவா? உம்முடைய தகப்பனிடத்தில் எப்படி சேவித்தேனோ, அப்படியே உம்மிடத்திலும் சேவிப்பேன் என்றான்.

20அப்சலோம் அகித்தோப்பேலைப் பார்த்து, நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று ஆலோசனை சொல்லும் என்றான்.

21அப்பொழுது அகித்தோப்பேல் அப்சலோமை நோக்கி: வீட்டைக்காக்க உம்முடைய தகப்பன் பின்வைத்த அவருடைய மறுமனையாட்டிகளிடத்தில் பிரவேசியும், அப்பொழுது உம்முடைய தகப்பனுக்கு நாற்றமாய்போனீர் என்பதை இஸ்ரவேலர் எல்லாரும் கேள்விப்பட்டு, உம்மோடிருக்கிற எல்லாருடைய கைகளும் பலக்கும் என்றான்.

22அப்படியே அப்சலோமுக்கு உப்பரிகையின்மேல் ஒரு கூடாரத்தைப் போட்டார்கள்; அங்கே அப்சலோம் சகல இஸ்ரவேலரின் கண்களுக்கு முன்பாக, தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளிடத்தில் பிரவேசித்தான்.

23அந்நாட்களில் அகித்தோப்பேல் சொல்லும் ஆலோசனை தேவனுடைய வாக்கைப்போல இருந்தது; அப்படி அகித்தோப்பேலின் ஆலோசனையெல்லாம் தாவீதுக்கும் இருந்தது, அப்சலோமுக்கும் அப்படியே இருந்தது.

II கொரிந்தியர் 9

முழு அதிகாரம் ›

1பரிசுத்தவான்களுக்குச் செய்யவேண்டிய தர்மசகாயத்தைக்குறித்து, நான் அதிகமாக உங்களுக்கு எழுதவேண்டுவதில்லை.

2உங்கள் மனவிருப்பத்தை அறிந்திருக்கிறேன்; அகாயாவிலுள்ளவர்கள் ஒருவருஷமாக ஆயத்தமாயிருக்கிறார்களென்று, நான் மக்கெதோனியருடனே சொல்லி, உங்களைப் புகழ்ந்தேனே; உங்கள் ஜாக்கிரதை அநேகரை எழுப்பிவிட்டதுமுண்டு.

3அப்படியிருந்தும், உங்களைக்குறித்து நாங்கள் சொன்ன புகழ்ச்சி இந்தக் காரியத்தில் வீணாய்ப்போகாமல், நான் சொன்னபடி நீங்கள் ஆயத்தப்பட்டவர்களாயிருப்பதற்கு, இந்தச் சகோதரரை அனுப்பினேன்.

4மக்கெதோனியர் என்னுடனேகூட வந்து, உங்களை ஆயத்தப்படாதவர்களாகக் கண்டால், இவ்வளவு நிச்சயமாய் உங்களைப் புகழ்ந்ததற்காக, நீங்கள் வெட்கப்படுவீர்களென்று நாங்கள் சொல்லாமல், நாங்களே வெட்கப்படவேண்டியதாயிருக்கும்.

5ஆகையால், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டிருக்கிற உங்கள் தானதர்மமானது லோபத்தனமாய்க் கொடுக்கப்பட்டதாயிராமல், உதாரத்துவமாய்க் கொடுக்கப்பட்டதாயிருக்கும்படியாக அதை ஆயத்தப்படுத்துகிறதற்குச் சகோதரரை ஏவி, உங்களிடத்தில் முன்னதாக அனுப்புவது எனக்கு அவசியம் என்று காணப்பட்டது.

6பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில், சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்.

7அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.

8மேலும், நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்.

9வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும் என்று எழுதியிருக்கிறபடியாகும்.

10விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் உங்களுக்கு விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச்செய்வார்.

11தேவனுக்கு எங்களால் ஸ்தோத்திரமுண்டாவதற்கு ஏதுவாயிருக்கும் மிகுந்த உதாரகுணத்திலே நீங்கள் எவ்விதத்திலும் சம்பூரணமுள்ளவர்களாவீர்கள்.

12இந்தத் தர்மசகாயமாகிய பணிவிடை பரிசுத்தவான்களுடைய குறைவுகளை நீக்குகிறதுமல்லாமல், அநேகர் தேவனை ஸ்தோத்திரிப்பதினாலே சம்பூரணபலனுள்ளதாயும் இருக்கும்.

13அவர்கள் இந்தத் தர்மசகாயத்தினாலாகிய நன்மையை அனுபவித்து, நீங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் கீழ்ப்படிதலோடே அறிக்கையிட்டிருக்கிறதினிமித்தமும், தங்களுக்கும் மற்ற அனைவருக்கும் நீங்கள் உதாரத்துவமாய்த் தர்மஞ்செய்கிறதினிமித்தமும், அவர்கள் தேவனை மகிமைப்படுத்தி;

14உங்களுக்காக வேண்டுதல்செய்து, தேவன் உங்களுக்கு அளித்த மிகவும் விசேஷித்த கிருபையினிமித்தம் உங்கள்மேல் வாஞ்சையாயிருக்கிறார்கள்.

15தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம்.

தனிவாசிப்பு

எசேக்கியேல் 23

முழு அதிகாரம் ›

1கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

2மனுபுத்திரனே, ஒரே தாயின் குமாரத்திகளாகிய இரண்டு ஸ்திரீகள் இருந்தார்கள்.

3அவர்கள் எகிப்திலே வேசித்தனம்பண்ணினார்கள்; தங்கள் இளம்பிராயத்திலே வேசித்தனம் பண்ணினார்கள்; அங்கே அவர்களுடைய ஸ்தனங்கள் அமுக்கப்பட்டு, அவர்களுடைய கன்னிமையின் கொங்கைகள் தொடப்பட்டது.

4அவர்களில் மூத்தவளின் பெயர் அகோலாள், அவளுடைய தங்கையின் பெயர் அகோலிபாள்; அவர்கள் என்னுடையவர்களாகி, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றார்கள்; இவைகளே அவர்களுடைய பெயர்கள்; அகோலாள் என்பதற்குச் சமாரியா என்றும், அகோலிபாள் என்பதற்கு எருசலேம் என்றும் பொருளாம்.

5அகோலாள் என்னுடையவளாயிருக்கும்போது சோரம்போனாள்.

6நீலாம்பரந்தரித்த தலைவரும், அதிபதிகளும், சௌந்தரிய வாலிபரும், குதிரைகளின்மேல் ஏறுகிற வீரருமாயிருந்த சமீபதேசத்தாராகிய அசீரியரென்கிற தன் சிநேகிதர்மேல் அவள் மோகித்து,

7அசீரியரின் புத்திரரில் சிரேஷ்டமான அனைவரோடும், தான் மோகித்த அனைவரோடும் தன் வேசித்தனங்களை நடப்பித்து, அவர்களுடைய நரகலான சகல விக்கிரகங்களாலும் தீட்டுப்பட்டுப்போனாள்.

8தான் எகிப்திலேபண்ணின வேசித்தனங்களை அவள் விடவில்லை; அவர்கள் அவளுடைய வாலிபத்திலே அவளோடே சயனித்து, அவளுடைய கன்னிமையின் கொங்கைகளைத் தொட்டு, அவளிடத்தில் தங்கள் வேசித்தனத்தை நடப்பித்தார்கள்.

9ஆகையால் அவளுடைய சிநேகிதரின் கையிலே, அவள் மோகித்திருந்த அசீரிய புத்திரரின் கையிலே, நான் அவளை ஒப்புக்கொடுத்தேன்.

10அவர்கள் அவளை நிர்வாணமாக்கினார்கள்; அவளுடைய குமாரரையும் அவளுடைய குமாரத்திகளையும் சிறைபிடித்து, அவளையோ பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள்; அப்படியே அவளிடத்தில் ஆக்கினைகள் செய்யப்பட்டபடியினால் ஸ்திரீகளுக்குள் அவகீர்த்தியுள்ளவளானாள்.

11அவளுடைய தங்கையாகிய அகோலிபாள் இதைக் கண்டும், தன் மோகவிகாரத்தில் அவளைப் பார்க்கிலும் கெட்டவளானாள்; தன் சகோதரியின் வேசித்தனங்களிலும் தன் வேசித்தனங்கள் அதிகமாயிற்று.

12மகா அலங்கார உடுப்புள்ள தலைவரும், அதிபதிகளும், குதிரைகள்மேல் ஏறுகிற வீரரும், சௌந்தரியமுள்ள வாலிபருமான சமீபதேசத்தாராகிய அசீரிய புத்திரர்மேல் மோகங்கொண்டாள்.

13அவளும் அசுத்தமானாளென்றும், அவர்கள் இருவரும் ஒரே வழியில் போனார்களென்றும் கண்டேன்.

14அவள் தன் வேசித்தனங்களில் அதிகரித்தாள்; சுவரில் ஜாதிலிங்கத்தால் சித்திரந்தீர்ந்த கல்தேயரின் புருஷசுரூபங்களைக் கண்டாள்.

15அவர்கள் எல்லாரும் தங்கள் ஜென்மதேசமாகிய கல்தேயாவில் உள்ள பாபிலோன் புத்திரரின் சாயலாகத் தங்கள் அரைகளில் கச்சை கட்டினவர்களும், தங்கள் தலைகளில் சாயந்தீர்ந்த பெரிய பாகைகளைத் தரித்தவர்களும், பார்வைக்கு ராஜகுமாரர்களுமாக இருந்தார்கள்.

16அவளுடைய கண்கள் அவர்களைப் பார்த்தவுடனே, அவள் அவர்கள்மேல் மோகித்து, கல்தேயாவுக்கு அவர்களண்டையிலே ஸ்தானாதிபதிகளை அனுப்பினாள்.

17அப்பொழுது பாபிலோன் புத்திரர் அவளண்டையிலே சிநேக சம்போகத்துக்கு வந்து, தங்கள் வேசித்தனங்களால் அவளைத் தீட்டுப்படுத்தினார்கள்; அவள் இவர்களால் தீட்டுப்பட்டுப்போனபின்பு, அவள் மனது அவர்களை விட்டுப் பிரிந்தது.

18இவ்விதமாய் அவள் தன் வேசித்தனங்களை வெளிப்படுத்தி, தன்னை நிர்வாணமாக்கினபோது, என் மனம் அவளுடைய சகோதரியை விட்டுப் பிரிந்ததுபோல அவளையும் விட்டுப் பிரிந்தது.

19அவள் எகிப்துதேசத்திலே வேசித்தனம்பண்ணின தன் வாலிபத்தின் நாட்களை நினைத்து, தன் வேசித்தனங்களில் அதிகரித்துப்போனாள்.

20கழுதைமாம்சமான மாம்சமும், குதிரை இந்திரியமான இந்திரியமுமுள்ள அவர்களுக்கு அவள் வைப்பாட்டியாயிருக்கும்படி அவர்கள்மேல் மோகித்தாள்.

21எகிப்தியரால் உன் கன்னிமையின் ஸ்தனங்களாகிய கொங்கைகள் தொடப்பட்ட காலத்தில், நீ உன் இளம்பிராயத்தில் செய்த முறைகேடுகளை நினைத்துவருகிறாய்.

22ஆகையால், அகோலிபாளே, கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, உன் மனது விட்டுப்பிரிந்த உன் சிநேகிதரை நான் உனக்கு விரோதமாக எழுப்பி, உனக்கு விரோதமாக அவர்களைச் சுற்றிலும் வரப்பண்ணுவேன்.

23சௌந்தரியமுள்ள வாலிபரும், தலைவரும், அதிபதிகளும், குதிரைகள்மேல் ஏறுகிற வீரருமாகிய பேர்பெற்ற பிரபுக்களான பாபிலோன் புத்திரரையும், கல்தேயர் எல்லாரையும், பேகோடு, சோவா, கோவா என்கிற தேசங்களின் மனுஷரையும் அவர்களோடேகூட அசீரிய புத்திரர் எல்லாரையும் வரப்பண்ணுவேன்.

24அவர்கள் வண்டிகளோடும், இரதங்களோடும், இயந்திரங்களோடும், ஜனக்கூட்டத்தோடும், கேடகங்களும், பரிசைகளும், தலைச்சீராக்களும் தரித்தவர்களாய், உனக்கு விரோதமாக வந்து, உன்னை சுற்றிலும் பாளயமிறங்குவார்கள்; அவர்களுக்கு முன்னே நான் நியாயத்தை விளங்கப்பண்ணுவேன்; அவர்கள் தங்கள் நியாயங்களின்படி உன்னை நியாயந்தீர்ப்பார்கள்.

25உனக்கு விரோதமாக என் எரிச்சலை விளங்கப்பண்ணுவேன்; அவர்கள் உன்னை உக்கிரமாய் நடப்பித்து, உன் மூக்கையும் உன் காதுகளையும் அறுத்துப்போடுவார்கள்; உன்னில் மீதியாயிருப்பவர்கள் பட்டயத்தால் வெட்டுண்டுபோவார்கள்; அவர்கள் உன் குமாரரையும் உன் குமாரத்திகளையும் பிடித்துக்கொள்ளுவார்கள்; உன்னில் மீதியாயிருப்பவர்கள் அக்கினிக்கு இரையாவார்கள்.

26அவர்கள் உன் வஸ்திரங்களை உரிந்து, உன் சிங்காரமான ஆபரணங்களைப் பறித்துக்கொள்ளுவார்கள்.

27இவ்விதமாய் உன் முறைகேட்டையும், நீ எகிப்துதேசத்தில் துவக்கின உன் வேசித்தனத்தையும் ஒழியப்பண்ணுவேன்; நீ இனி அவர்களை நோக்க உன் கண்களை ஏறெடுக்காமலும், எகிப்தை நினையாமலும் இருப்பாய்.

28கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நீ பகைக்கிறவர்களின் கையிலும், உன் மனம்விட்டுப் பிரிந்தவர்களின் கையிலும் நான் உன்னை ஒப்புக்கொடுப்பேன்.

29அவர்கள் உன்னை வெறுப்பாய் நடத்தி, உன் பிரயாசத்தின் பலனையெல்லாம் எடுத்துக்கொண்டு, உன்னை அம்மணமும், நிர்வாணமுமாக்கிவிடுவார்கள்; அப்படியே உன் வெட்கக்கேடும் உன் முறைகேடுமான உன் வேசித்தனத்தின் நிர்வாணம் வெளிப்படுத்தப்படும்.

30நீ புறஜாதிகளைப் பின்தொடர்ந்து, அவர்களுடைய நரகலான விக்கிரகங்களால் உன்னைத் தீட்டுப்படுத்திக்கொண்ட உன் வேசித்தனத்தினிமித்தம் இவைகள் உனக்குச் செய்யப்படும்.

31உன் சகோதரியின் வழியிலே நீ நடந்தாய்; ஆகையால் அவளுடைய பாத்திரத்தை உன் கையிலே கொடுப்பேன்.

32கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ உன் சகோதரியினுடைய ஆழமும் அகலமுமானதும் நிறைய வார்க்கப்பட்டதுமான பாத்திரத்தைக் குடித்து, நகைப்பும் பரியாசமுமாவாய்.

33சமாரியா என்னும் உன் சகோதரியினுடைய பாத்திரமாயிருக்கிற பிரமிப்பும் பாழ்க்கடிப்பும் என்கிற பாத்திரத்தால் வெறியினாலும் சஞ்சலத்தினாலும் நிறையப்படுவாய்.

34நீ அதில் இருக்கிறதைக் குடித்து, உறிஞ்சி, அதின் ஓடுகளை உடைத்துப்போட்டு, உன் ஸ்தனங்களைக் கீறிக்கொள்வாய்; நான் இதைச் சொன்னேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.

35ஆகையால், நீ என்னை மறந்து, என்னை உனக்குப் புறம்பே தள்ளிவிட்டதினிமித்தம், நீ உன் முறைகேட்டையும் உன் வேசித்தனங்களையும் சுமப்பாய் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

36பின்னும் கர்த்தர் என்னை நோக்கி: மனுபுத்திரனே. நீ அகோலாளையும் அகோலிபாளையும் குறித்து வழக்காட மனதானால், அவர்களுடைய அருவருப்புகளை அவர்களுக்குத் தெரியக்காட்டு.

37அவர்கள் விபசாரம்பண்ணினார்கள்; அவர்கள் கைகளில் இரத்தமும் இருக்கிறது; அவர்கள் தங்கள் நரகலான விக்கிரகங்களோடே விபசாரம்பண்ணி, தாங்கள் எனக்குப்பெற்ற தங்கள் பிள்ளைகளையும் அவைகளுக்கு இரையாகத் தீக்கடக்கப்பண்ணினார்கள்.

38அன்றியும் அவர்கள் என் பரிசுத்த ஸ்தலத்தை அந்நாளிலேதானே தீட்டுப்படுத்தி, என் ஓய்வு நாட்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினார்கள்.

39அவர்கள் தங்கள் பிள்ளைகளைத் தங்கள் நரகலான விக்கிரகங்களுக்கென்று பலியிட்டபின்பு, அவர்கள் என் பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்க அந்நாளில்தானே அதற்குள் பிரவேசித்தார்கள்; இதோ, என் ஆலயத்தின் நடுவிலே இப்படிச் செய்தார்கள்.

40இதுவுமல்லாமல், தூரத்திலுள்ள புருஷரிடத்திற்குத் தூது அனுப்பி, அவர்களை வரவழைத்தார்கள், அவர்கள் வந்தார்கள்; அவர்களுக்கென்று நீ குளித்து, உன் கண்களில் மையிட்டுக்கொண்டு ஆபரணங்களால் உன்னை அலங்கரித்து,

41சிறந்த மஞ்சத்தின்மேல் உட்கார்ந்துகொண்டாய்; அதின் முன்னே ஒரு பீடம் ஆயத்தம் பண்ணப்பட்டிருந்தது; என் தூபவர்க்கத்தையும் என் எண்ணெயையும் அதின்மேல் வைத்தாய்.

42அவளிடத்திலே அந்தச் சந்தடியின் இரைச்சல் அடங்கின பின்பு, ஜனத்திரளான புருஷரையும் அழைத்தனுப்பினார்கள்; சபேயர் வனாந்தரத்திலிருந்து கொண்டுவரப்பட்டார்கள்; இவர்கள் அவர்களுடைய கைகளில் கடகங்களையும் அவர்களுடைய தலைகளில் அலங்காரமான கிரீடங்களையும் போட்டார்கள்.

43விபசாரங்களில் கிழவியானவளைக் குறித்து அவள் இன்னும் தன் வேசித்தனங்களைச் செய்வாளோ என்றேன்.

44பரஸ்திரீயினிடத்திலே பிரவேசிக்குமாப்போல அவளிடத்தில் பிரவேசித்தார்கள்; இந்தப் பிரகாரமாக முறைகேடானவர்களாகிய அகோலாளிடத்திலும் அகோலிபாளிடத்திலும் பிரவேசித்தார்கள்.

45ஆகையால், விபசாரிகளை நியாயந்தீர்க்கிறபிரகாரமாகவும், இரத்தஞ்சிந்தும் ஸ்திரீகளை நியாயந்தீர்க்கிறபிரகாரமாகவும், நீதிமான்கள் அவர்களை நியாயந்தீர்ப்பார்கள்; அவர்கள் விபசாரிகள், அவர்களுடைய கைகளில் இரத்தம் இருக்கிறது.

46கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் அவர்களுக்கு விரோதமாய் ஒரு கூட்டத்தை வரப்பண்ணி, அவர்களை அலைச்சலுக்கும் கொள்ளைக்கும் ஒப்புக்கொடுப்பேன்.

47அந்தக் கூட்டத்தார் அவர்களைக் கல்லெறிந்து, தங்கள் பட்டயங்களால் வெட்டிப்போடுவார்கள்; அவர்களுடைய குமாரரையும் அவர்களுடைய குமாரத்திகளையும் கொன்று, அவர்களுடைய வீடுகளை அக்கினியால் சுட்டெரிப்பார்கள்.

48இவ்விதமாய் எல்லா ஸ்திரீகளும் புத்தியடைந்து, உங்கள் முறைகேடுகளைச் செய்யாதிருக்கும்படி, முறைகேட்டைத் தேசத்தைவிட்டு ஒழியப்பண்ணுவேன்.

49உங்கள் முறைகேட்டை உங்கள்மேல் சுமத்துவார்கள்; அப்பொழுது நீங்கள் உங்கள் நரகலான விக்கிரகங்களைச் சேவித்த பாவங்களைச் சுமந்து, நான் கர்த்தராகிய ஆண்டவர் என்று அறிந்துகொள்வீர்கள்.

சங்கீதம் 70-71

முழு அதிகாரம் ›
சங்கீதம் 70

1தேவனே, என்னை விடுவியும், கர்த்தாவே, எனக்குச் சகாயஞ்செய்யத்தீவிரியும்.

2என் பிராணனை வாங்கத்தேடுகிறவர்கள் வெட்கி நாணுவார்களாக; எனக்குத் தீங்குவரும்படி விரும்புகிறவர்கள் பின்னிட்டுத் திரும்பி இலச்சையடைவார்களாக.

3ஆ ஆ, ஆ ஆ, என்பவர்கள் தாங்கள் அடையும் வெட்கத்தினால் பின்னிட்டுப்போவார்களாக.

4உம்மைத் தேடுகிற யாவரும் உம்மில் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக; உமது இரட்சிப்பில் பிரியப்படுகிறவர்கள் தேவனுக்கு மகிமையுண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்வார்களாக.

5நானோ சிறுமையும் எளிமையுமானவன்; தேவனே, என்னிடத்தில் தீவிரமாய் வாரும்: நீரே என் துணையும் என்னை விடுவிக்கிறவருமானவர், கர்த்தாவே, தாமதியாதேயும்.

சங்கீதம் 71

1கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நான் ஒருபோதும் வெட்கம் அடையாதபடி செய்யும்.

2உமது நீதியினிமித்தம் என்னை விடுவித்து, என்னைக் காத்தருளும்; உமது செவியை எனக்குச் சாய்த்து, என்னை இரட்சியும்.

3நான் எப்பொழுதும் வந்தடையத்தக்க கன்மலையாயிரும்; என்னை இரட்சிப்பதற்குக் கட்டளையிட்டீரே; நீரே என் கன்மலையும் என் கோட்டையுமாய் இருக்கிறீர்.

4என் தேவனே, துன்மார்க்கனுடைய கைக்கும், நியாயக்கேடும் கொடுமையுமுள்ளவனுடைய கைக்கும் என்னைத் தப்புவியும்.

5கர்த்தராகிய ஆண்டவரே, நீரே என் நோக்கமும், என் சிறுவயது தொடங்கி என் நம்பிக்கையுமாயிருக்கிறீர்.

6நான் கர்ப்பத்தில் உற்பவித்தது முதல் உம்மால் ஆதரிக்கப்பட்டேன்; என் தாயின் வயிற்றிலிருந்து என்னை எடுத்தவர் நீரே; உம்மையே நான் எப்பொழுதும் துதிப்பேன்.

7அநேகருக்கு நான் ஒரு புதுமைபோலானேன்; நீரோ எனக்குப் பலத்த அடைக்கலமாயிருக்கிறீர்.

8என் வாய் உமது துதியினாலும், நாள்தோறும் உமது மகத்துவத்தினாலும் நிறைந்திருப்பதாக.

9முதிர்ந்த வயதில் என்னைத் தள்ளிவிடாமலும், என் பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாமலும் இரும்.

10என் சத்துருக்கள் எனக்கு விரோதமாய்ப் பேசி, என் ஆத்துமாவுக்குக் காத்திருக்கிறவர்கள் ஏகமாய் ஆலோசனைபண்ணி:

11தேவன் அவனைக் கைவிட்டார், அவனைத் தொடர்ந்து பிடியுங்கள்; அவனை விடுவிப்பார் இல்லை என்கிறார்கள்.

12தேவனே, எனக்குத் தூரமாயிராதேயும்; என் தேவனே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரியும்.

13என் ஆத்துமாவை விரோதிக்கிறவர்கள் வெட்கி அழியவும், எனக்குப் பொல்லாப்புத் தேடுகிறவர்கள் நிந்தையாலும் இலச்சையாலும் மூடப்படவுங்கடவர்கள்.

14நானோ எப்பொழுதும் நம்பிக்கைகொண்டிருந்து, மேன்மேலும் உம்மைத் துதிப்பேன்.

15என் வாய் நாள்தோறும் உமது நீதியையும் உமது இரட்சிப்பையும் சொல்லும்; அவைகளின் தொகையை நான் அறியேன்.

16கர்த்தராகிய ஆண்டவருடைய வல்லமையை முன்னிட்டு நடப்பேன்; உம்முடைய நீதியைப்பற்றியே மேன்மைபாராட்டுவேன்.

17தேவனே, என் சிறுவயதுமுதல் எனக்குப் போதித்து வந்தீர்; இதுவரைக்கும் உம்முடைய அதிசயங்களை அறிவித்துவந்தேன்.

18இப்பொழுதும் தேவனே, இந்தச் சந்ததிக்கு உமது வல்லமையையும், வரப்போகிற யாவருக்கும் உமது பராக்கிரமத்தையும் நான் அறிவிக்குமளவும், முதிர்வயதும் நரைமயிருமுள்ளவனாகும்வரைக்கும் என்னைக் கைவிடீராக.

19தேவனே, உம்முடைய நீதி உன்னதமானது, பெரிதானவைகளை நீர் செய்தீர்; தேவனே, உமக்கு நிகரானவர் யார்?

20அநேக இக்கட்டுகளையும் ஆபத்துகளையும் காணும்படி செய்த என்னை நீர் திரும்பவும் உயிர்ப்பித்து, திரும்பவும் என்னைப் பூமியின் பாதாளங்களிலிருந்து ஏறப்பண்ணுவீர்.

21என் மேன்மையைப் பெருகப்பண்ணி, என்னை மறுபடியும் தேற்றுவீர்.

22என் தேவனே, நான் வீணையைக் கொண்டு உம்மையும் உம்முடைய சத்தியத்தையும் துதிப்பேன்; இஸ்ரவேலின் பரிசுத்தரே, சுரமண்டலத்தைக் கொண்டு உம்மைப் பாடுவேன்.

23நான் பாடும்போது என் உதடுகளும், நீர் மீட்டுக்கொண்ட என் ஆத்துமாவும் கெம்பீரித்து மகிழும்.

24எனக்குப் பொல்லாப்பைத் தேடுகிறவர்கள் வெட்கி இலச்சையடைந்தபடியால், நாள்தோறும் என் நாவு உமது நீதியைக் கொண்டாடும்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com