1பின்பு அகித்தோப்பேல் அப்சலோமை நோக்கி: நான் பன்னீராயிரம்பேரைத் தெரிந்துகொண்டு எழுந்து, இன்று இராத்திரி தாவீதைப் பின்தொடர்ந்து போகட்டும்.
2அவன் விடாய்த்தவனும் கைதளர்ந்தவனுமாயிருக்கையில், நான் அவனிடத்தில் போய், அவனைத் திடுக்கிடப்பண்ணுவேன்; அப்பொழுது அவனோடிருக்கும் ஜனங்களெல்லாரும் ஓடிப்போவதினால், நான் ராஜா ஒருவனைமாத்திரம் வெட்டி,
3ஜனங்களையெல்லாம் உம்முடைய வசமாய்த் திரும்பப்பண்ணுவேன், இப்படிச் செய்ய நீர் வகைதேடினால், எல்லாரும் திரும்பினபின் ஜனங்கள் சமாதானத்தோடு இருப்பார்கள் என்றான்.
4இந்த வார்த்தை அப்சலோமின் பார்வைக்கும், இஸ்ரவேலுடைய சகல மூப்பரின் பார்வைக்கும் நலமாய்த் தோன்றினது.
5ஆகிலும் அப்சலோம்: அற்கியனாகிய ஊசாயைக் கூப்பிட்டு, அவன் வாய்மொழியையும் கேட்போம் என்றான்.
6ஊசாய் அப்சலோமிடத்தில் வந்தபோது, அப்சலோம் அவனைப் பார்த்து: இந்தப்பிரகாரமாக அகிப்தோப்பேல் சொன்னான்; அவன் வார்த்தையின்படி செய்வோமா? அல்லவென்றால், நீ சொல் என்றான்.
7அப்பொழுது ஊசாய் அப்சலோமை நோக்கி: அகித்தோப்பேல் இந்தவிசை சொன்ன ஆலோசனை நல்லதல்ல என்றான்.
8மேலும் ஊசாய்: உம்முடைய தகப்பனும் அவன் மனுஷரும் பலசாலிகள் என்றும், வெளியிலே குட்டிகளைப் பறிகொடுத்த கரடியைப்போல மனமெரிகிறவர்கள் என்றும் நீர் அறிவீர்; உம்முடைய தகப்பன் யுத்தவீரனுமாயிருக்கிறார்; அவர் இராக்காலத்தில் ஜனங்களோடே தங்கமாட்டார்.
9இதோ, அவர் இப்பொழுது ஒரு கெபியிலாவது, வேறே யாதோரிடத்திலாவது ஒளித்திருப்பார்; துவக்கத்திலேதானே நம்முடையவர்களில் சிலர் பட்டார்களேயானால், அதைக் கேட்கிற யாவரும் அப்சலோமைப் பின்செல்லுகிற ஜனங்களில் சங்காரம் உண்டாயிற்று என்பார்கள்.
10அப்பொழுது சிங்கத்தின் இருதயத்திற்கொத்த இருதயமுள்ள பலவானாயிருக்கிறவனுங்கூட கலங்கிப்போவான்; உம்முடைய தகப்பன் சவுரியவான் என்றும், அவரோடிருக்கிறவர்கள் பலசாலிகள் என்றும், இஸ்ரவேலர் எல்லாரும் அறிவார்கள்.
11ஆதலால் நான் சொல்லுகிற யோசனையாவது, தாண்முதல் பெயெர்செபாமட்டும் இருக்கிற கடற்கரை மணலத்தனை திரட்சியான இஸ்ரவேலர் எல்லாரும் உம்மண்டையில் கூட்டப்பட்டு, நீர்தானேகூட யுத்தத்திற்குப் போகவேண்டும்.
12அப்பொழுது அவரைக் கண்டுபிடிக்கிற எவ்விடத்திலாகிலும் நாம் அவரிடத்தில் போய், பனி பூமியின்மேல் இறங்குவதுபோல அவர்மேல் இறங்குவோம்; அப்படியே அவரோடிருக்கிற எல்லா மனுஷரிலும் ஒருவனும் அவருக்கு மீந்திருப்பதில்லை.
13ஒரு பட்டணத்திற்குள் புகுந்தாரேயானால், இஸ்ரவேலர் எல்லாரும் அந்தப் பட்டணத்தின்மேல் கயிறுகளைப் போட்டு, அங்கே ஒரு பொடிக்கல்லும் காணப்படாதே போகுமட்டும், அதை இழுத்து ஆற்றிலே போடுவார்கள் என்றான்.
14அப்பொழுது அப்சலோமும் இஸ்ரவேல் மனுஷர் அனைவரும்: அகித்தோப்பேலின் ஆலோசனையைப்பார்க்கிலும் அற்கியனாகிய ஊசாயின் ஆலோசனை நல்லது என்றார்கள்; இப்படி கர்த்தர் அப்சலோமின்மேல் பொல்லாப்பை வரப்பண்ணும்பொருட்டு, அகித்தோப்பேலின் நல்ல ஆலோசனையை அபத்தமாக்குகிறதற்குக் கர்த்தர் கட்டளையிட்டார்.
15பின்பு ஊசாய், சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்களைப் பார்த்து: இன்ன இன்னபடி அகித்தோப்பேல் அப்சலோமுக்கும் இஸ்ரவேலின் மூப்பருக்கும் ஆலோசனை சொன்னான்; நானோ இன்ன இன்னபடி ஆலோசனை சொன்னேன்.
16இப்பொழுதும் நீங்கள் சீக்கிரமாய்த் தாவீதுக்கு அறிவிக்கும்படிக்குச் செய்தி அனுப்பி; நீர் இன்று இராத்திரி வனாந்தரத்தின் வெளிகளிலே தங்கவேண்டாம்; ராஜாவும் அவரோடிருக்கிற சகல ஜனங்களும் விழுங்கப்படாதபடிக்குத் தாமதம் இல்லாமல் அக்கரைப்படவேண்டும் என்று சொல்லச்சொல்லுங்கள் என்றான்.
17யோனத்தானும் அகிமாசும், தாங்கள் நகரத்தில் பிரவேசிக்கிறதினால் காணப்படாதபடிக்கு, இன்றொகேல் அண்டை நின்றுகொண்டிருந்தார்கள்; ஒரு வேலைக்காரி போய், அதை அவர்களுக்குச் சொன்னாள்; அவர்கள் தாவீது ராஜாவுக்கு அதை அறிவிக்கப்போனார்கள்.
18ஒரு பிள்ளையாண்டான் அவர்களைக் கண்டு, அப்சலோமுக்கு அறிவித்தான்; ஆகையால் அவர்கள் இருவரும் சீக்கிரமாய்ப் போய், பகூரிமிலிருக்கிற ஒரு மனுஷன் வீட்டிற்குள் பிரவேசித்தார்கள்; அவன் முற்றத்தில் ஒரு கிணறு இருந்தது; அதில் இறங்கினார்கள்.
19வீட்டுக்காரி ஒரு பாயை எடுத்து, கிணற்றுவாயின்மேல் விரித்து, காரியம் வெளிப்படாதபடிக்கு, அதின்மேல் நொய்யைப் பரப்பிவைத்தாள்.
20அப்சலோமின் சேவகர் அந்த ஸ்திரீயினிடத்தில் வீட்டிற்குள் வந்து: அகிமாசும் யோனத்தானும் எங்கே என்று கேட்டார்கள்; அவர்களுக்கு அந்த ஸ்திரீ: வாய்க்காலுக்கு அப்பாலே போய்விட்டார்கள் என்றாள்; இவர்கள் தேடிக்காணாதேபோய், எருசலேமுக்குத் திரும்பினார்கள்.
21இவர்கள் போனபிற்பாடு, அவர்கள் கிணற்றிலிருந்து ஏறிவந்து, தாவீது ராஜாவுக்கு அறிவித்து, தாவீதை நோக்கி: சீக்கிரமாய் எழுந்து ஆற்றைக் கடந்துபோங்கள்; இன்னபடி அகித்தோப்பேல் உங்களுக்கு விரோதமாய் ஆலோசனை சொன்னான் என்றார்கள்.
22அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த சகல ஜனங்களும் எழுந்து யோர்தானைக் கடந்துபோனார்கள்; பொழுது விடிகிறதற்குள்ளாக யோர்தானைக் கடவாதவன் ஒருவனும் இல்லை.
23அகித்தோப்பேல் தன் யோசனையின்படி நடக்கவில்லை என்று கண்டபோது, தன் கழுதையின்மேல் சேணம்வைத்து ஏறி, தன் ஊரிலிருக்கிற தன் வீட்டுக்குப் போய், தன் வீட்டுக்காரியங்களை ஒழுங்குபடுத்தி, நான்றுகொண்டு செத்தான்; அவன் தகப்பன் கல்லறையில் அவனை அடக்கம்பண்ணினார்கள்.
24தாவீது மக்னாயீமுக்கு வந்தான்; அப்சலோமும் சகல இஸ்ரவேலரோடுங்கூட யோர்தானைக் கடந்தான்.
25அப்சலோம், யோவாபுக்குப் பதிலாக அமாசாவை இராணுவத்தலைவனாக்கினான்; இந்த அமாசா, நாகாசின் குமாரத்தியும், செருயாவின் சகோதரியும் யோவாபின் அத்தையுமாகிய அபிகாயிலைப் படைத்த இஸ்ரவேலனாகிய எத்திரா என்னும் பேருள்ள ஒரு மனுஷனுடைய குமாரனாயிருந்தான்.
26இஸ்ரவேல் ஜனங்களும் அப்சலோமும் கீலேயாத் தேசத்திலே பாளயமிறங்கினார்கள்.
27தாவீது மக்னாயீமில் சேர்ந்தபோது, அம்மோன் புத்திரரின் தேசத்து ரப்பா பட்டணத்தானாகிய சோபி என்னும் நாகாசின் குமாரனும், லோதேபார் ஊரானான அம்மியேலின் குமாரன் மாகீரும், ரோகிலிம் ஊரானும் கீலேயாத்தியனுமாகிய பர்சிலாவும்,
28மெத்தைகளையும், கலங்களையும், மண்பாண்டங்களையும், கோதுமையையும், வாற்கோதுமையையும், மாவையும், வறுத்த பயற்றையும், பெரும் பயற்றையும், சிறு பயற்றையும், வறுத்த சிறு பயற்றையும்,
29தேனையும், வெண்ணெயையும், ஆடுகளையும், பால்கட்டிகளையும், தாவீதுக்கும் அவனோடிருந்த ஜனங்களுக்கும் சாப்பிடுகிறதற்குக் கொண்டுவந்தார்கள்; அந்த ஜனங்கள் வனாந்தரத்திலே பசியும் இளைப்பும் தவனமுமாயிருப்பார்கள் என்று இப்படிச் செய்தார்கள்.
1உங்களுக்கு முன்பாக இருக்கும்போது தாழ்மையாயும், தூரத்திலே இருக்கும்போது உங்கள்மேல் கண்டிப்பாயும் இருக்கிற பவுலாகிய நான் கிறிஸ்துவின் சாந்தத்தையும் தயவையும் முன்னிட்டு உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
2எங்களை மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் என்று எண்ணுகிற சிலரைக்குறித்து நான் கண்டிப்பாயிருக்கவேண்டுமென்று நினைத்திருக்கிற தைரியத்தோடே, உங்கள் முன்பாக இருக்கும்போது, நான் கண்டிப்புள்ளவனாயிராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருக்க உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.
3நாங்கள் மாம்சத்தில் நடக்கிறவர்களாயிருந்தும், மாம்சத்தின்படி போர்செய்கிறவர்களல்ல.
4எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது.
5அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்.
6உங்கள் கீழ்ப்படிதல் நிறைவேறும்போது, எல்லாக் கீழ்ப்படியாமைக்குந்தக்க நீதியுள்ள தண்டனையைச் செலுத்த ஆயத்தமாயுமிருக்கிறோம்.
7வெளித்தோற்றத்தின்படி பார்க்கிறீர்களா? ஒருவன் தன்னைக் கிறிஸ்துவுக்குரியவனென்று நம்பினால், தான் கிறிஸ்துவுக்குரியவனாயிருக்கிறதுபோல நாங்களும் கிறிஸ்துவுக்குரியவர்களென்று அவன் தன்னிலேதானே சிந்திக்கக்கடவன்.
8மேலும், உங்களை நிர்மூலமாக்குகிறதற்கல்ல, உங்களை ஊன்றக் கட்டுகிறதற்குக் கர்த்தர் எங்களுக்குக் கொடுத்த அதிகாரத்தைக்குறித்து, நான் இன்னும் சற்றே அதிகமாய் மேன்மைபாராட்டினாலும் நான் வெட்கப்படுவதில்லை.
9நான் நிருபங்களாலே உங்களைப் பயமுறுத்துகிறவனாய்த் தோன்றாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன்.
10அவனுடைய நிருபங்கள் பாரயோசனையும் பலமுமுள்ளவைகள்; சரீரத்தின் தோற்றமோ பலவீனமும், வசனம் அற்பமுமாயிருக்கிறதென்கிறார்களே.
11அப்படிச் சொல்லுகிறவன், நாங்கள் தூரத்திலிருக்கும்போது எழுதுகிற நிருபங்களால் வசனத்தில் எப்படிப்பட்டவர்களாயிருக்கிறோமோ அப்படிப்பட்டவர்களாகவே சமீபத்திலிருக்கும்போதும் கிரியையிலும் இருப்போம் என்று சிந்திக்கக்கடவன்.
12ஆகிலும் தங்களைத்தாங்களே மெச்சிக்கொள்ளுகிற சிலருக்கு நாங்கள் எங்களைச் சரியாக்கவும் ஒப்பிடவும் துணியமாட்டோம்; தங்களைக்கொண்டு தங்களை அளந்துகொண்டு, தங்களுக்கே தங்களை ஒப்பிட்டுக்கொள்ளுகிற அவர்கள் புத்திமான்களல்ல.
13நாங்கள் அளவுக்கு மிஞ்சி மேன்மைபாராட்டாமல், உங்களிடம்வரைக்கும் வந்தெட்டத்தக்கதாக, தேவன் எங்களுக்கு அளந்து பகிர்ந்த அளவுப்பிரமாணத்தின்படியே மேன்மைபாராட்டுகிறோம்.
14உங்களிடத்தில் வந்தெட்டாதவர்களாய் நாங்கள் அளவுக்கு மிஞ்சிப்போகிறதில்லை; நாங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து உங்களிடம் வரைக்கும் வந்தோமே.
15எங்கள் அளவைக் கடந்து மற்றவர்களுடைய வேலைக்குட்பட்டு மேன்மைபாராட்டமாட்டோம்.
16ஆகிலும் உங்கள் விசுவாசம் விருத்தியாகும்போது, மற்றவர்களுடைய எல்லைகளுக்குள்ளே செய்யப்பட்டவைகளை நாங்கள் செய்ததாக மேன்மைபாராட்டாமல், உங்களுக்கு அப்புறமான இடங்களில் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கத்தக்கதாக, எங்கள் அளவின்படி உங்களால் மிகவும் பெருகி விருத்தியடைவோமென்று நம்பிக்கையாயிருக்கிறோம்.
17மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன்.
18தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்.
1ஒன்பதாம் வருஷம் பத்தாம் மாதம் பத்தாந்தேதியிலே கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
2மனுபுத்திரனே, இந்த நாளின் பேரையும், இந்தத் தேதியையும் நீ எழுதிவை, இந்தத் தேதியில்தானே பாபிலோன் ராஜா எருசலேமில் பாளயமிறங்கினான்.
3இப்போதும் நீ கலகவீட்டாருக்கு ஒரு உபமானத்தைக் காண்பித்து, அவர்களை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், ஒரு கொப்பரையை அடுப்பிலே வை; அதை அடுப்பிலே வைத்து, அதிலே தண்ணீரை விடு.
4சகல நல்ல கண்டங்களான பின்னந்தொடைகளும் முன்னந்தொடைகளுமாகிய கண்டங்களைச் சேர்த்து அதிலே போடு; நல்ல எலும்புகளால் அதை நிரப்பு.
5ஆட்டுமந்தையில் தெரிந்துகொள்ளப்பட்டதை அதற்காகக் கொண்டுவந்து, எலும்புகளை அதின் கீழே குவித்து எரிக்கவேண்டும்; அதிலுள்ள எலும்புகளும் வேகத்தக்கதாக அதைப் பொங்கப்பொங்கக் காய்ச்சவேண்டும்.
6இதற்காகக் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நுரை ஒட்டிக்கொண்டிருக்கிறதும் நுரை நீங்காததுமாகிய கொப்பரை என்னப்பட்ட இரத்தஞ்சிந்திய நகரத்துக்கு ஐயோ! அதில் இருக்கிறதைக் கண்டங்கண்டமாக எடுத்துக்கொண்டுபோ; அதின்பேரில் சீட்டுப்போடலாகாது.
7அவள் இரத்தம் அவள் நடுவில் இருக்கிறது; மண்ணிலே மறைந்துபோகும்படி அதைத் தரையிலே ஊற்றாமல் கற்பாறையிலே ஊற்றிப்போட்டாள்.
8நீதியைச் சரிக்கட்டுவதற்காகக் கோபம் மூளும்படி நான் அவள் இரத்தத்தை மறைக்காமல் கன்மலையின்மேல் வைத்தேன்.
9ஆதலால், கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இரத்தஞ்சிந்திய நகரத்துக்கு ஐயோ! நான் பெரிதான கட்டைகளைக் குவித்து எரியப்பண்ணுவேன்.
10திரளான விறகுகளைக் கூட்டு, தீயை மூட்டு, இறைச்சியை முறுக வேவித்துச் சம்பாரங்களை இடு; எலும்புகளை எரித்துப்போடு.
11பின்பு கொப்பரை காய்ந்து, அதின் களிம்பு வெந்து, அதற்குள் இருக்கிற அதின் அழுக்கு உருகி, அதின் நுரை நீங்கும்படி அதை வெறுமையாகத் தழலின்மேல் வை.
12அது மகா வருத்தத்தை உண்டாக்கியும், அதின் திரளான நுரை அதை விட்டு நீங்கவில்லை; அதின் நுரை அக்கினிக்கு உள்ளாகவேண்டியது.
13உன் அசுத்தத்தோடே முறைகேடும் இருக்கிறது; நான் உன்னைச் சுத்திகரித்தும், நீ சுத்தமாகாதபடியினால், இனி என் உக்கிரம் உன்னில் ஆறித்தீருமட்டும் உன் அசுத்தம் நீங்கிச் சுத்திகரிக்கப்படமாட்டாய்.
14கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன், இது நிறைவேறும், நான் இதைச் செய்வேன்; நான் பின்வாங்குவதும் தப்பவிடுவதும் மனஸ்தாபப்படுவதும் இல்லை; உன் வழிகளுக்கும் உன் செய்கைகளுக்குத்தக்கதாக உன்னை நியாயந்தீர்ப்பார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
15பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
16மனுபுத்திரனே, இதோ, நான் உன் கண்களுக்கு விருப்பமானவளை ஒரே அடியினாலே உன்னைவிட்டு எடுத்துக்கொள்ளுவேன்; ஆனாலும் நீ புலம்பாமலும் அழாமலும் கண்ணீர்விடாமலும் இருப்பாயாக.
17அலறாமல் பெருமூச்சு விடு, இழவு கொண்டாடவேண்டாம்; உன் பாகையை உன் தலையிலே கட்டி, உன் பாதரட்சையை உன் பாதங்களில் தொடுத்துக்கொள்; உன் தாடியை மூடாமலும் துக்கங்கொண்டாடுகிறவர்களின் அப்பத்தைப் புசியாமலும் இருக்கக்கடவாய் என்றார்.
18விடியற்காலத்தில் நான் ஜனங்களோடே பேசினேன்; அன்று சாயங்காலத்தில் என் மனைவி செத்துப்போனாள்; எனக்குக் கட்டளையிட்டபடியே விடியற்காலத்தில் செய்தேன்.
19அப்பொழுது ஜனங்கள் என்னை நோக்கி: நீர் செய்கிறவைகள் எங்களுக்கு என்னத்திற்கு அடையாளம் என்பதை எங்களுக்குத் தெரிவிக்கமாட்டீரா என்று கேட்டார்கள்.
20நான் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
21நீ இஸ்ரவேல் வீட்டாரை நோக்கி, கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, உங்கள் பலத்தின் முக்கியமும் உங்கள் கண்களின் விருப்பமும் உங்கள் ஆத்துமாவின் வாஞ்சையுமாகிய என் பரிசுத்த ஸ்தலத்தை நான் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறேன்; நீங்கள் விட்டுவந்த உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் பட்டயத்தால் விழுவார்கள்.
22அப்பொழுது நான் செய்ததுபோல நீங்களும் செய்வீர்கள்; தாடியை மூடாமலும் துக்கங்கொண்டாடுகிறவர்களின் அப்பத்தைப் புசியாமலும் இருப்பீர்கள்.
23உங்கள் பாகைகள் உங்கள் தலைகளிலும், உங்கள் பாதரட்சைகள் உங்கள் கால்களிலும் இருக்கும்; நீங்கள் புலம்பாமலும் அழாமலும் இருந்து, உங்கள் அக்கிரமங்களில் வாடிப்போய், ஒருவரையொருவர் பார்த்துத் தவிப்பீர்கள்.
24அப்படியே எசேக்கியேல் உங்களுக்கு அடையாளமாக இருப்பான்; அவன் செய்தபடி எல்லாம் நீங்களும் செய்வீர்கள்; இப்படி வரும்போது நான் கர்த்தராகிய ஆண்டவர் என்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்று உரைத்தார் என்றேன்.
25பின்னும் மனுபுத்திரனே, நான் எந்த நாளிலே அவர்களுடைய பலத்தையும், அவர்களுடைய அலங்காரத்தின் மகிழ்ச்சியையும், அவர்களுடைய கண்களின் விருப்பத்தையும், அவர்களுடைய ஆத்துமாவின் விசேஷித்தவாஞ்சையையும், அவர்களுடைய குமாரரையும், அவர்களுடைய குமாரத்திகளையும் அவர்களைவிட்டு எடுத்துக்கொள்ளுகிறேனோ,
26அந்த நாளிலேதானே தப்பிவந்த ஒருவன் உன்னிடத்தில் வந்து உன் காதுகள் கேட்கச் சொல்லுவான் அல்லவோ?
27அந்த நாளிலேதானே உன் வாய் திறக்கப்பட்டு, நீ தப்பிவந்தவனோடே பேசுவாய்; இனி மவுனமாயிருக்கமாட்டாய்; இப்படி நீ அவர்களுக்கு அடையாளமாக இருப்பாய்; நான் கர்த்தர் என்று அப்பொழுது அறிந்துகொள்வார்கள் என்றார்.
1தேவனே, ராஜாவுக்கு உம்முடைய நியாயத்தீர்ப்புகளையும், ராஜாவின் குமாரனுக்கு உம்முடைய நீதியையும் கொடுத்தருளும்.
2அவர் உம்முடைய ஜனங்களை நீதியோடும், உம்முடைய ஏழைகளை நியாயத்தோடும் விசாரிப்பார்.
3பர்வதங்கள் ஜனத்திற்குச் சமாதானத்தைத் தரும், மேடுகள் நீதியின் விளைவோடிருக்கும்.
4ஜனத்தில் சிறுமைப்படுகிறவர்களை அவர் நியாயம் விசாரித்து, ஏழையின் பிள்ளைகளை இரட்சித்து, இடுக்கண் செய்கிறவனை நொறுக்குவார்.
5சூரியனும் சந்திரனுமுள்ளமட்டும், அவர்கள் உமக்குத் தலைமுறை தலைமுறையாகப் பயந்திருப்பார்கள்.
6புல்லறுப்புண்ட வெளியின்மேல் பெய்யும் மழையைப்போலவும், பூமியை நனைக்கும் தூறலைப்போலவும் இறங்குவார்.
7அவருடைய நாட்களில் நீதிமான் செழிப்பான்; சந்திரனுள்ளவரைக்கும் மிகுந்த சமாதானம் இருக்கும்.
8ஒரு சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும், நதிதொடங்கி பூமியின் எல்லைகள்வரைக்கும் அவர் அரசாளுவார்.
9வனாந்தரத்தார் அவருக்கு முன்பாகக் குனிந்து வணங்குவார்கள்; அவருடைய சத்துருக்கள் மண்ணை நக்குவார்கள்.
10தர்ஷீசின் ராஜாக்களும் தீவுகளின் ராஜாக்களும் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள்; ஷேபாவிலும் சேபாவிலுமுள்ள ராஜாக்கள் வெகுமானங்களைக் கொண்டுவருவார்கள்.
11சகல ராஜாக்களும் அவரைப் பணிந்துகொள்வார்கள்; சகல ஜாதிகளும் அவரைச் சேவிப்பார்கள்.
12கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார்.
13பலவீனனுக்கும் எளியவனுக்கும் அவர் இரங்கி, எளியவர்களின் ஆத்துமாக்களை இரட்சிப்பார்.
14அவர்கள் ஆத்துமாக்களை வஞ்சகத்திற்கும் கொடுமைக்கும் தப்புவிப்பார்; அவர்களுடைய இரத்தம் அவருடைய பார்வைக்கு அருமையாயிருக்கும்.
15அவர் பிழைத்திருப்பார், ஷேபாவின் பொன் அவருக்குக் கொடுக்கப்படும்; அவர்நிமித்தம் இடைவிடாமல் ஜெபம்பண்ணப்படும், எந்நாளும் ஸ்தோத்திரிக்கப்படுவார்.
16பூமியிலே மலைகளின் உச்சிகளில் ஒரு பிடி தானியம் விதைக்கப்பட்டிருக்கும்; அதின் விளைவு லீபனோனைப்போல அசையும்; பூமியின் புல்லைப்போல நகரத்தார் செழித்தோங்குவார்கள்.
17அவருடைய நாமம் என்றென்றைக்கும் இருக்கும்; சூரியனுள்ளமட்டும் அவருடைய நாமம் சந்தான பரம்பரையாய் நிலைக்கும்; மனுஷர் அவருக்குள் ஆசீர்வதிக்கப்படுவார்கள், எல்லா ஜாதிகளும் அவரைப் பாக்கியமுடையவர் என்று வாழ்த்துவார்கள்.
18இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; அவரே அதிசயங்களைச் செய்கிறவர்.
19அவருடைய மகிமைபொருந்திய நாமத்துக்கு என்றென்றைக்கும் ஸ்தோத்திரமுண்டாவதாக; பூமிமுழுவதும் அவருடைய மகிமையால் நிறைந்திருப்பதாக. ஆமென், ஆமென்.
20ஈசாயின் புத்திரனாகிய தாவீதின் விண்ணப்பங்கள் முடிந்தது.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com