1கர்த்தர் தாவீதை அவனுடைய எல்லாச் சத்துருக்களின் கைக்கும், சவுலின் கைக்கும், நீங்கலாக்கி விடுவித்தபோது, அவன் கர்த்தருக்கு முன்பாகப் பாடின பாட்டு:
2கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகருமானவர்.
3தேவன் நான் நம்பியிருக்கிற துருக்கமும், என் கேடகமும், என் இரட்சண்ணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமும், என் புகலிடமும், என் இரட்சகருமானவர்; என்னை வல்லடிக்கு நீங்கலாக்கி இரட்சிக்கிறவர் அவரே.
4ஸ்துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாக்கி இரட்சிக்கப்படுவேன்.
5மரண அலைகள் என்னைச் சூழ்ந்துகொண்டு, துர்ச்சனப்பிரவாகம் என்னைப் பயப்படுத்தினது.
6பாதாளக் கட்டுகள் என்னைச் சூழ்ந்து கொண்டது; மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது.
7எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார்; என் கூப்பிடுதல் அவர் செவிகளில் ஏறிற்று.
8அப்பொழுது பூமி அசைந்து அதிர்ந்தது; அவர் கோபங்கொண்டபடியால் வானத்தின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தது.
9அவர் நாசியிலிருந்து பட்சிக்கிற புகை எழும்பிற்று, அவர் வாயிலிருந்து அக்கினி புறப்பட்டது, அதனால் தழல் மூண்டது.
10வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; அவர் பாதங்களின்கீழ் காரிருள் இருந்தது.
11கேருபீனின்மேல் ஏறி வேகமாய்ச் சென்றார். காற்றின் செட்டைகளின் மீதில் தரிசனமானார்.
12ஆகாயத்து மேகங்களிலே கூடிய தண்ணீர்களின் இருளைத் தம்மைச் சுற்றிலும் இருக்கும் கூடாரமாக்கினார்.
13அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் நெருப்புத்தழலும் எரிந்தது.
14கர்த்தர் வானத்திலிருந்து குமுறி, உன்னதமானவர் தமது சத்தத்தைத் தொனிக்கப்பண்ணினார்.
15அவர் அம்புகளை எய்து, அவர்களைச் சிதற அடித்து, மின்னல்களைப் பிரயோகித்து, அவர்களைக் கலங்கப்பண்ணினார்.
16கர்த்தருடைய கண்டிதத்தினாலும், அவருடைய நாசியின் சுவாசக் காற்றினாலும் சமுத்திரத்தின் மதகுகள் திறவுண்டு, பூதலத்தின் அஸ்திபாரங்கள் காணப்பட்டது.
17உயரத்திலிருந்து அவர் கை நீட்டி, என்னைப் பிடித்து, ஜலப்பிரவாகத்திலிருக்கிற என்னைத் தூக்கிவிட்டார்.
18என்னிலும் பலவான்களாயிருந்த என் பலத்த சத்துருவுக்கும் என் பகைஞருக்கும் என்னை விடுவித்தார்.
19என் ஆபத்து நாளிலே எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார்.
20என்மேல் அவர் பிரியமாயிருந்தபடியால், விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, என்னைத் தப்புவித்தார்.
21கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாக எனக்குப் பதில் அளித்தார்; என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிக்கட்டினார்.
22கர்த்தருடைய வழிகளைக் காத்துக்கொண்டுவந்தேன்; நான் என் தேவனுக்குத் துரோகம் பண்ணினதில்லை.
23அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக நிறுத்தினேன்; நான் அவருடைய பிரமாணங்களை விட்டு விலகாமல்,
24அவர் முன்பாக மனஉண்மையாயிருந்து, என் துர்க்குணத்திற்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன்.
25ஆகையால் கர்த்தர் என் நீதிக்குத் தக்கதாகவும், தம்முடைய கண்களுக்கு முன் இருக்கிற என் சுத்தத்திற்குத்தக்கதாகவும் எனக்குப் பலனளித்தார்.
26தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்,
27புனிதனுக்கு நீர் புனிதராகவும், மாறுபாடானவனுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர்.
28சிறுமைப்பட்ட ஜனத்தை இரட்சிப்பீர்; மேட்டிமையானவர்களைத் தாழ்த்த, உம்முடைய கண்கள் அவர்களுக்கு விரோதமாய்த் திருப்பப்பட்டிருக்கிறது.
29கர்த்தராகிய தேவரீர் என் விளக்காயிருக்கிறீர்; கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குகிறவர்.
30உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்.
31தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்.
32கர்த்தரை அல்லாமல் தேவன் யார்? நம்முடைய தேவனையன்றி கன்மலையும் யார்?
33தேவன் எனக்குப் பலத்த அரணானவர்; அவர் என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர்.
34அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப்போலாக்கி, என் உயர்தலங்களில் என்னை நிறுத்துகிறார்.
35வெண்கல வில்லும் என் புயங்களால் வளையும்படி, என் கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார்.
36உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும்.
37என் கால்கள் வழுவாதபடிக்கு நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர்.
38என் சத்துருக்களைப் பின்தொடர்ந்து அவர்களை அழிப்பேன்; அவர்களை நிர்மூலமாக்கும்வரைக்கும் திரும்பேன்.
39அவர்கள் எழுந்திருக்கமாட்டாதபடிக்கு என் பாதங்களின் கீழ் விழுந்தார்கள்; அவர்களை முறிய அடித்து வெட்டினேன்.
40யுத்தத்திற்கு நீர் என்னைப் பலத்தால் இடைகட்டி, என்மேல் எழும்பினவர்களை என்கீழ் மடங்கப்பண்ணினீர்.
41நான் என் பகைஞரைச் சங்கரிக்கும்படியாக, என் சத்துருக்களின் பிடரியை எனக்கு ஒப்புக்கொடுத்தீர்.
42அவர்கள் நோக்கிப் பார்க்கிறார்கள், அவர்களை இரட்சிப்பார் ஒருவருமில்லை; கர்த்தரை நோக்கிப் பார்க்கிறார்கள், அவர்களுக்கு அவர் உத்தரவு கொடுக்கிறதில்லை.
43அவர்களை பூமியின் தூளாக இடித்து, தெருக்களின் சேற்றைப்போல அவர்களை மிதித்து சிதறப்பண்ணுகிறேன்.
44என் ஜனத்தின் சண்டைகளுக்கு நீர் என்னை விலக்கிவிட்டு, ஜாதிகளுக்கு என்னைத் தலைவனாக வைக்கிறீர்; நான் அறியாத ஜனங்கள் என்னைச் சேவிக்கிறார்கள்.
45அந்நியர் இச்சகம் பேசி எனக்கு அடங்கி, என் சத்தத்தைக் கேட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள்.
46அந்நியர் முனைவிழுந்துபோய், தங்கள் அரண்களிலிருந்து தத்தளிப்பாய்ப் புறப்படுகிறார்கள்.
47கர்த்தர் ஜீவனுள்ளவர்; என் கன்மலையானவர் ஸ்தோத்திரிக்கப்படுவாராக; என் இரட்சிப்பின் கன்மலையாகிய தேவன் உயர்ந்திருப்பாராக.
48அவர் எனக்காகப் பழிக்குப் பழி வாங்கி, ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிற தேவனானவர்.
49அவரே என் சத்துருக்களுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர்; எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள்மேல் என்னை உயர்த்திக் கொடுமையான மனுஷனுக்கு என்னைத் தப்புவிக்கிறீர்.
50இதினிமித்தம் கர்த்தாவே, ஜாதிகளுக்குள் உம்மைத் துதித்து, உம்முடைய நாமத்திற்குச் சங்கீதம் பாடுவேன்.
51தாம் ஏற்படுத்தின ராஜாவுக்கு மகத்தான இரட்சிப்பை அளித்து, தாம் அபிஷேகம்பண்ணின தாவீதுக்கும் அவன் சந்ததிக்கும் சதாகாலமும் கிருபை செய்கிறார்.
1பதினாலு வருஷம் சென்றபின்பு, நான் தீத்துவைக் கூட்டிக்கொண்டு, பர்னபாவுடனேகூட மறுபடியும் எருசலேமுக்குப் போனேன்.
2நான் தேவ அறிவிப்பினாலே போய், புறஜாதிகளிடத்தில் நான் பிரசங்கிக்கிற சுவிசேஷத்தை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தேன்; ஆயினும் நான் ஓடுகிறதும், ஓடினதும் வீணாகாதபடிக்கு எண்ணிக்கையுள்ளவர்களுக்கே தனிமையாய் விவரித்துக் காண்பித்தேன்.
3ஆனாலும் என்னுடனேகூட இருந்த தீத்து கிரேக்கனாயிருந்தும் விருத்தசேதனம் பண்ணிக்கொள்ளும்படிக்குக் கட்டாயம்பண்ணப்படவில்லை.
4கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு உண்டான சுயாதீனத்தை உளவுபார்த்து நம்மை நியாயப்பிரமாணத்திற்கு அடிமைகளாக்கும்பொருட்டாகப் பக்கவழியாய் நுழைந்த கள்ளச் சகோதரர் நிமித்தம் அப்படியாயிற்று.
5சுவிசேஷத்தின் சத்தியம் உங்களிடத்திலே நிலைத்திருக்கும்படி, நாங்கள் ஒரு நாழிகையாகிலும் அவர்களுக்குக் கீழ்ப்படிந்து இணங்கவில்லை.
6அல்லாமலும் எண்ணிக்கையுள்ளவர்களாயிருந்தவர்கள் எனக்கு ஒன்றும் போதிக்கவில்லை; அவர்கள் எப்படிப்பட்டவர்களாயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை. தேவன் மனுஷரிடத்தில் பட்சபாதமுள்ளவரல்லவே.
7அதுவுமல்லாமல், விருத்தசேதனமுள்ளவர்களுக்கு அப்போஸ்தலனாயிருக்கும்படி பேதுருவைப் பலப்படுத்தினவர் புறஜாதிகளுக்கு அப்போஸ்தலனாயிருக்கும்படி என்னையும் பலப்படுத்தினபடியால்,
8விருத்தசேதனமுள்ளவர்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி பேதுருவுக்குக் கையளிக்கப்பட்டதுபோல, விருத்தசேதனம் இல்லாதவர்களுக்குப் பிரசங்கிக்கும்படி அது எனக்கும் கையளிக்கப்பட்டதென்று அவர்கள் கண்டு;
9எனக்கு அளிக்கப்பட்ட கிருபையை அறிந்தபோது, தூண்களாக எண்ணப்பட்ட யாக்கோபும், கேபாவும், யோவானும், தாங்கள் விருத்தசேதனமுள்ளவர்களுக்கும், நாங்கள் புறஜாதிகளுக்கும் பிரசங்கிக்கும்படி, அந்நியோந்நிய ஐக்கியத்திற்கு அடையாளமாக எனக்கும் பர்னபாவுக்கும் வலதுகை கொடுத்து,
10தரித்திரரை நினைத்துக்கொள்ளும்படிக்குமாத்திரம் சொன்னார்கள்; அப்படிச் செய்யும்படி அதற்கு முன்னமே நானும் கருத்துள்ளவனாயிருந்தேன்.
11மேலும், பேதுரு அந்தியோகியாவுக்கு வந்தபோது, அவன்மேல் குற்றஞ்சுமந்ததினால், நான் முகமுகமாய் அவனோடே எதிர்த்தேன்.
12எப்படியெனில், யாக்கோபினிடத்திலிருந்து சிலர் வருகிறதற்குமுன்னே அவன் புறஜாதியாருடனே சாப்பிட்டான்; அவர்கள் வந்தபோதோ, விருத்தசேதனமுள்ளவர்களுக்குப் பயந்து, விலகிப் பிரிந்தான்.
13மற்ற யூதரும் அவனுடனேகூட மாயம்பண்ணினார்கள்; அவர்களுடைய மாயத்தினாலே பர்னபாவும் இழுப்புண்டான்.
14இப்படி அவர்கள் சுவிசேஷத்தின் சத்தியத்திற்கேற்றபடி சரியாய் நடவாததை நான் கண்டபோது, எல்லாருக்கும் முன்பாக நான் பேதுருவை நோக்கிச் சொன்னது என்னவென்றால்: யூதனாயிருக்கிற நீர் யூதர் முறைமையாக நடவாமல், புறஜாதியார் முறைமையாக நடந்து கொண்டிருக்க, புறஜாதியாரை யூதர் முறைமையாக நடக்கும்படி நீர் எப்படிக் கட்டாயம்பண்ணலாம்?
15புறஜாதியாரில் பிறந்த பாவிகளாயிராமல், சுபாவத்தின்படி யூதராயிருக்கிற நாமும் இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலேயன்றி, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே மனுஷன் நீதிமானாக்கப்படுவதில்லையென்று அறிந்து, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலல்ல, கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படும்படிக்குக் கிறிஸ்து இயேசுவின்மேல் விசுவாசிகளானோம்.
16நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லையே.
17கிறிஸ்துவுக்குள் நீதிமான்களாக்கப்படும்படி நாடுகிற நாமும் பாவிகளாகக் காணப்படுவோமானால், கிறிஸ்து பாவத்திற்குக் காரணரோ? அல்லவே.
18நான் இடித்துப்போட்டவைகளையே நான் மறுபடியும் கட்டினால், பிரமாணத்தை மீறுகிறவனென்று காணப்படுவேன்.
19தேவனுக்கென்று பிழைக்கும்படி நான் நியாயப்பிரமாணத்தினாலே நியாயப்பிரமாணத்திற்கு மரித்தேனே.
20கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.
21நான் தேவனுடைய கிருபையை விருதாவாக்குகிறதில்லை; நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால் கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே.
1பத்தாம் வருஷம் பத்தாம் மாதம் பன்னிரண்டாம் தேதியிலே கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
2மனுபுத்திரனே, நீ எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு எதிராக உன் முகத்தைத் திருப்பி, அவனுக்கும் எகிப்து முழுதுக்கும் விரோதமாய்த் தீர்க்கதரிசனம் உரைத்து, சொல்லவேண்டியது என்னவென்றால்:
3கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார், எகிப்தின் ராஜாவாகிய பார்வோனே. நீ உன் நதிகளின் நடுவிலே படுத்துக்கொண்டு: என் நதி என்னுடையது, நான் அதை எனக்காக உண்டுபண்ணினேன் என்று சொல்லுகிற பெரிய முதலையே, இதோ, நான் உனக்கு விரோதமாய் வந்து,
4உன் வாயிலே துறடுகளை மாட்டி, உன் நதிகளின் மச்சங்களை உன் செதிள்களில் ஒட்டிக்கொள்ளும்படி செய்து, உன்னை உன் நதிகளின் நடுவிலிருந்து தூக்கிவிடுவேன்; உன் நதிகளின் மச்சங்களெல்லாம் உன் செதில்களில் ஒட்டிக்கொண்டிருக்கும்.
5உன்னையும் உன் நதிகளின் எல்லா மச்சங்களையும் வனாந்தரத்திலே போட்டுவிடுவேன்; வெட்டவெளியிலே விழுவாய்; நீ சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை; உன்னை பூமியின் மிருகங்களுக்கும் ஆகாயத்தின் பறவைகளுக்கும் இரையாகக் கொடுப்பேன்.
6அப்பொழுது எகிப்துதேசத்தின் குடிகளெல்லாரும் நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்; அவர்கள் இஸ்ரவேல் வம்சத்தாருக்கு நாணற்கோலாயிருந்தார்களே.
7அவர்கள் உன்னைக் கையிலே பிடிக்கும்போது, நீ ஒடிந்துபோய், அவர்கள் விலாவையெல்லாம் பிளப்பாய்; அவர்கள் உன்மேல் சாயும்போது, நீ முறிந்து, அவர்கள் இடுப்பு முழுவதையும் மரத்துப் போகப்பண்ணுவாய்.
8ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் உன்மேல் பட்டயத்தை வரப்பண்ணி, உன்னில் மனுஷரையும் மிருகங்களையும் சங்காரம்பண்ணுவேன்.
9எகிப்துதேசம் பாழும் வனாந்தரமுமாகும்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்: நதி என்னுடையது, நான் அதை உண்டாக்கினேன் என்று சொன்னானே.
10ஆகையால், இதோ, நான் உனக்கும் உன் நதிகளுக்கும் விரோதமாக வந்து, மிக்தோல்முதல் எத்தியோப்பியாவின் எல்லையிலுள்ள செவெனேவரைக்கும் எகிப்துதேசத்தை அவாந்தரமும் பாழுமான வனாந்தரங்களாக்குவேன்.
11மனுஷனுடைய கால் அதைக் கடப்பதுமில்லை, மிருகஜீவனுடைய கால் அதை மிதிப்பதுமில்லை; அது நாற்பது வருஷம் குடியற்றிருக்கும்.
12எகிப்துதேசத்தைப் பாழாய்ப்போன தேசங்களின் நடுவிலே பாழாய்ப்போகப்பண்ணுவேன்; அதின் பட்டணங்கள் அவாந்தரமாக்கப்பட்ட பட்டணங்களின் நடுவிலே நாற்பதுவருஷம் பாழாய்க்கிடக்கும்; நான் எகிப்தியரை ஜாதிகளுக்குள்ளே சிதறடித்து, அவர்களை தேசங்களுக்குள்ளே தூற்றிவிடுவேன்.
13கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நாற்பதுவருஷம் முடியும்போது, நான் எகிப்தியரை அவர்கள் சிதறுண்டிருக்கிற ஜனங்களிடத்திலிருந்து சேர்த்துக்கொண்டு,
14எகிப்தியரின் சிறையிருப்பைத் திருப்பி, அவர்களை அவர்களுடைய ஜனன தேசமாகிய பத்ரோஸ் தேசத்திலே திரும்பி வரப்பண்ணுவேன்; அங்கே அவர்கள் அற்ப ராஜ்யமாயிருப்பார்கள்.
15அது இனி ஜாதிகளின்மேல் தன்னை உயர்த்தாமல், மற்ற ராஜ்யங்களிலும் அற்பமானதாயிருக்கும்; அவர்கள் இனி ஜாதிகளை ஆளாதபடிக்கு அவர்களைக் குறுகிப்போகப்பண்ணுவேன்.
16அவர்களின் பிறகேபோய், அவர்களை நோக்கிக்கொண்டிருக்கிறதினால் இஸ்ரவேல் வம்சத்தார் எனக்குத் தங்கள் அக்கிரமத்தை நினைப்பூட்டாதபடிக்கு, இனி அவர்கள் இவர்களுடைய நம்பிக்கையாயிராமற்போவார்கள்; அப்பொழுது நான் கர்த்தராகிய ஆண்டவர் என்று அறிந்துகொள்வார்கள் என்கிறார் என்று சொல் என்றார்.
17இருபத்தேழாம்வருஷம் முதலாம் மாதம் முதலாம் தேதியிலே, கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
18மனுபுத்திரனே, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் தீருவின் முன்னே தன் சேனையினிடத்தில் கடும் ஊழியம் வாங்கினான்; ஒவ்வொரு தலையும் மொட்டையாயிற்று; ஒவ்வொரு தோள்பட்டையின் தோளும் உரிந்துபோயிற்று; ஆனாலும் அவன் தீருவுக்கு விரோதமாகச் செய்த ஊழியத்தினால் அவனுக்காவது அவன் சேனைக்காவது கூலி கிடைக்கவில்லை.
19ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருக்கு எகிப்துதேசத்தைக் கொடுக்கிறேன்; அவன் அதின் ஏராளமான ஜனத்தைச் சிறைபிடித்து அதின் ஆஸ்தியைச் சூறையாடி, அதின் கொள்ளைப்பொருளை எடுத்துக்கொள்வான்; இது அவனுடைய சேனைக்குக் கூலியாயிருக்கும்.
20அவன் அதிலே செய்த வேலைக்கு எகிப்துதேசத்தை நான் அவனுக்குக் கூலியாகக் கொடுத்தேன்; எனக்காக அதைச் செய்தார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
21அந்நாளிலே நான் இஸ்ரவேல் வம்சத்தாரின் கொம்பை முளைக்கப்பண்ணி, அவர்கள் நடுவிலே தாராளமாய்ப் பேசும் வாயை உனக்குக் கட்டளையிடுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்து கொள்வார்கள் என்றார்.
1என் ஜனங்களே, என் உபதேசத்தைக் கேளுங்கள்; என் வாயின் வசனங்களுக்கு உங்கள் செவிகளைச் சாயுங்கள்.
2என் வாயை உவமைகளால் திறப்பேன்; பூர்வகாலத்து மறைபொருள்களை வெளிப்படுத்துவேன்.
3அவைகளை நாங்கள் கேள்விப்பட்டு அறிந்தோம்; எங்கள் பிதாக்கள் அவைகளை எங்களுக்குத் தெரிவித்தார்கள்.
4பின்வரும் சந்ததியான பிள்ளைகளுக்கு நாங்கள் அவைகளை மறைக்காமல், கர்த்தரின் துதிகளையும் அவருடைய பலத்தையும், அவர் செய்த அவருடைய அதியங்களையும் விவரிப்போம்.
5அவர் யாக்கோபிலே சாட்சியை ஏற்படுத்தி, இஸ்ரவேலிலே வேதத்தை ஸ்தாபித்து, அவைகளைத் தங்கள் பிள்ளைகளுக்கு அறிவிக்கும்படி நம்முடைய பிதாக்களுக்குக் கட்டளையிட்டார்.
6இனிப் பிறக்கும் பிள்ளைகளாகிய பின்சந்ததியார் அதை அறிந்துகொண்டு, அவர்கள் எழும்பித் தங்கள் பிள்ளைகளுக்கு அவைகளைச் சொல்லும்படிக்கும்;
7தேவன்மேல் அவர்கள் தங்கள் நம்பிக்கையை வைத்து, தேவனுடைய செயல்களை மறவாமல், அவர் கற்பனைகளைக் கைக்கொள்ளும்படிக்கும்;
8இருதயத்தைச் செவ்வைப்படுத்தாமலும், தேவனை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளாமலும் இருந்த முரட்டாட்டமும் கலகமுமுள்ள சந்ததியாகிய தங்கள் பிதாக்களுக்கு அவர்கள் ஒப்பாகாதபடிக்கும், இவைகளைக் கட்டளையிட்டார்.
9ஆயுதமணிந்த வில்வீரரான எப்பிராயீம் புத்திரர் யுத்தநாளிலே முதுகு காட்டினார்கள்.
10அவர்கள் தேவனுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்ளாமலும், அவருடைய கட்டளைகளின்படி நடக்கச் சம்மதியாமலும்,
11அவருடைய செயல்களையும், அவர் தங்களுக்குக் காண்பித்த அதிசயங்களையும் மறந்தார்கள்.
12அவர்களுடைய பிதாக்களுக்கு முன்பாக, எகிப்து தேசத்துச் சோவான் வெளியிலே, அவர் அதிசயமானவைகளைச் செய்தார்.
13கடலைப் பிளந்து, அவர்களைக் கடக்கப்பண்ணி, ஜலத்தைக் குவியலாக நிற்கும்படிச்செய்தார்.
14பகலிலே மேகத்தினாலும், இராமுழுவதும் அக்கினி வெளிச்சத்தினாலும் அவர்களை வழிநடத்தினார்.
15வனாந்தரத்திலே கன்மலைகளைப் பிளந்து, மகா ஆழங்களிலிருந்து தண்ணீரை அவர்களுக்குக் குடிக்கக் கொடுத்தார்.
16கன்மலையிலிருந்து நீரோட்டங்களைப் புறப்படப்பண்ணி, தண்ணீரை நதிபோல ஓடிவரும்படி செய்தார்.
17என்றாலும், அவர்கள் பின்னும் அவருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, வறண்ட வெளியிலே உன்னதமானவருக்குக் கோபம் மூட்டினார்கள்.
18தங்கள் இச்சைக்கேற்ற போஜனத்தைக்கேட்டு, தங்கள் இருதயத்தில் தேவனைப் பரீட்சைபார்த்தார்கள்.
19அவர்கள் தேவனுக்கு விரோதமாய்ப் பேசி: தேவன் வனாந்தரத்திலே போஜனபந்தியை ஆயத்தப்படுத்தக்கூடுமோ?
20இதோ அவர் கன்மலையை அடித்ததினால் தண்ணீர் புறப்பட்டு, நதிகளாய்ப் புரண்டுவந்தது; அவர் அப்பத்தையும் கொடுக்கக்கூடுமோ? தம்முடைய ஜனத்திற்கு மாம்சத்தையும் ஆயத்தப்படுத்துவாரோ? என்றார்கள்.
21ஆகையால் கர்த்தர் அதைக் கேட்டுக் கோபங்கொண்டார்; அவர்கள் தேவனை விசுவாசியாமலும், அவருடைய இரட்சிப்பை நம்பாமலும் போனதினால்,
22யாக்கோபுக்கு விரோதமாய் அக்கினி பற்றியெரிந்தது; இஸ்ரவேலுக்கு விரோதமாய்க் கோபம் மூண்டது.
23அவர் உயரத்திலுள்ள மேகங்களுக்குக் கட்டளையிட்டு, வானத்தின் கதவுகளைத் திறந்து,
24மன்னாவை அவர்களுக்கு ஆகாரமாக வருஷிக்கப்பண்ணி, வானத்தின் தானியத்தை அவர்களுக்குக் கொடுத்தார்.
25தூதர்களின் அப்பத்தை மனுஷன் சாப்பிட்டான்; அவர்களுக்கு ஆகாரத்தைப் பூரணமாய் அனுப்பினார்.
26ஆகாசத்திலே கீழ்காற்றை வரப்பண்ணி, தம்முடைய வல்லமையினால் தென்றலையும் வீசச்செய்து,
27மாம்சத்தைத் தூளத்தனையாயும், சிறகுள்ள பறவைகளைக் கடற்கரை மணலத்தனையாயும் வருஷிக்கப்பண்ணி,
28அவைகளை அவர்கள் பாளயத்தின் நடுவிலும், அவர்கள் கூடாரங்களைச் சுற்றிலும் இறங்கப்பண்ணினார்.
29அவர்கள் புசித்துத் திருப்தியடைந்தார்கள்; அவர்கள் இச்சித்ததை அவர்களுக்குக் கொடுத்தார்.
30அவர்கள் தங்கள் இச்சையை வெறுக்கவில்லை; அவர்களுடைய போஜனம் அவர்கள் வாயில் இருக்கும்போதே.
31தேவகோபம் அவர்கள்மேல் எழும்பி, அவர்களில் கொழுத்தவர்களைச் சங்கரித்து, இஸ்ரவேலில் விசேஷித்தவர்களை மடியப்பண்ணிற்று.
32இவையெல்லாம் நடந்தும், அவர் செய்த அதிசயங்களை அவர்கள் நம்பாமல், பின்னும் பாவஞ்செய்தார்கள்.
33ஆதலால் அவர்கள் நாட்களை விருதாவிலும், அவர்கள் வருஷங்களைப் பயங்கரத்திலும் கழியப்பண்ணினார்.
34அவர்களை அவர் கொல்லும்போது அவரைக்குறித்து விசாரித்து, அவர்கள் திரும்பிவந்து தேவனை அதிகாலமே தேடி;
35தேவன் தங்கள் கன்மலையென்றும், உன்னதமான தேவன் தங்கள் மீட்பர் என்றும், நினைவுகூர்ந்தார்கள்.
36ஆனாலும் அவர்கள் தங்கள் வாயினால் அவருக்கு இச்சகம்பேசி, தங்கள் நாவினால் அவரிடத்தில் பொய்சொன்னார்கள்.
37அவர்கள் இருதயம் அவரிடத்தில் நிலைவரப்படவில்லை; அவருடைய உடன்படிக்கையில் அவர்கள் உண்மையாயிருக்கவில்லை.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com