‹ முகப்புமுழுத் திட்டம்

செப்டம்பர் 27 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்செப்டம்பர் 27அடுத்த நாள் ›
குடும்பம்

II சாமுவேல் 23

முழு அதிகாரம் ›

1தாவீதுடைய கடைசி வார்த்தைகள்: மேன்மையாய் உயர்த்தப்பட்டு, யாக்கோபுடைய தேவனால் அபிஷேகம் பெற்று, இஸ்ரவேலின் சங்கீதங்களை இன்பமாய்ப் பாடின ஈசாயின் குமாரனாகிய தாவீது என்னும் புருஷன் சொல்லுகிறது என்னவென்றால்;

2கர்த்தருடைய ஆவியானவர் என்னைக் கொண்டு பேசினார்; அவருடைய வசனம் என்னுடைய நாவில் இருந்தது.

3இஸ்ரவேலின் தேவனும் இஸ்ரவேலின் கன்மலையுமானவர் எனக்குச் சொல்லி உரைத்ததாவது: நீதிபரராய் மனுஷரை ஆண்டு, தெய்வபயமாய்த் துரைத்தனம்பண்ணுகிறவர் இருப்பார்.

4அவர் காலையில் மந்தாரமில்லாமல் உதித்து, மழைக்குப்பிற்பாடு தன் காந்தியினால் புல்லைப் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணுகிற சூரியனுடைய விடியற்கால வெளிச்சத்தைப்போல இருப்பார் என்றார்.

5என்னுடைய வீடு தேவனிடத்தில் இப்படியிராதோ? சகலமும் திட்டம்பண்ணப்பட்டிருக்கிற நிச்சயமான நித்திய உடன்படிக்கையை என்னுடன் அவர் செய்திருக்கிறார்; ஆதலால் என்னுடைய எல்லா இரட்சிப்பும் எல்லா வாஞ்சையும் வளர்ந்தோங்கச் செய்யாரோ?

6பேலியாளின் மக்கள் அனைவருமோ, கையினால் பிடிக்கப்படக்கூடாததாய் எறிந்து போடப்படவேண்டிய முள்ளுக்குச் சமானமானவர்கள்.

7அவைகளை ஒருவன் தொடப்போனால், இருப்பாயுதத்தையும் ஈட்டித்தாங்கையும் கெட்டியாய்ப் பிடித்துக்கொள்ளவேண்டும்; அவைகள் இருக்கிற இடத்தில்தானே அக்கினியினால் முற்றும் சுட்டெரிக்கப்படும் என்றான்.

8தாவீதுக்கு இருந்த பராக்கிரமசாலிகளின் நாமங்களாவன: தக்கெமோனியின் குமாரனாகிய யோசேப்பாசெபெத் என்பவன் சேர்வைக்காரரின் தலைவன்; இவன் எண்ணூறுபேர்களின்மேல் விழுந்து, அவர்களை ஒருமிக்க வெட்டிப்போட்ட அதீனோஏஸ்னி ஊரானானவன்.

9இவனுக்கு இரண்டாவது, அகோயின் குமாரனாகிய தோதோவின் மகன் எலெயாசார் என்பவன்; இவன் பெலிஸ்தர் யுத்தத்திற்குக் கூடின ஸ்தலத்திலே இஸ்ரவேல் மனுஷர் போகையில், தாவீதோடே இருந்து பெலிஸ்தரை நிந்தித்த மூன்று பராக்கிரமசாலிகளில் ஒருவனாயிருந்தான்.

10இவன் எழும்பித் தன் கைசலித்து, தன் கை பட்டயத்தோடு ஒட்டிக்கொள்ளுமட்டும் பெலிஸ்தரை வெட்டினான்; அன்றையதினம் கர்த்தர் பெரிய இரட்சிப்பை நடப்பித்தார்; ஜனங்கள் கொள்ளையிட மாத்திரம் அவனைப் பின்சென்றார்கள்.

11இவனுக்கு மூன்றாவது, ஆகேயின் குமாரனாகிய சம்மா என்னும் ஆராரியன்; சிறுபயறு நிறைந்த வயலிருந்த இடத்திலே பெலிஸ்தர் ஏராளமாய்க் கூடி, ஜனங்கள் பெலிஸ்தரைக் கண்டு ஓடுகிறபோது,

12இவன் அந்த நிலத்தின் நடுவிலே நின்று அதைக் காப்பாற்றி, பெலிஸ்தரை மடங்கடித்துப்போட்டான்; அதனால் கர்த்தர் பெரிய இரட்சிப்பை நடப்பித்தார்.

13முப்பது தலைவருக்குள்ளே இந்த மூன்று பேரும் அறுப்பு நாளிலே அதுல்லாம் கெபியிலே தாவீதிடத்தில் போயிருந்தார்கள்; பெலிஸ்தரின் தண்டு ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே பாளயமிறங்கினபோது,

14தாவீது அரணான ஒரு இடத்தில் இருந்தான்; அப்பொழுது பெலிஸ்தரின் தாணையம் பெத்லகேமிலே இருந்தது.

15தாவீது பெத்லகேமின் ஒலிமுகவாசலில் இருக்கிற கிணற்றின் தண்ணீரின் மேல் ஆவல்கொண்டு: என் தாகத்திற்குக் கொஞ்சந் தண்ணீர் கொண்டுவருகிறவன் யார் என்றான்.

16அப்பொழுது இந்த மூன்று பராக்கிரமசாலிகளும் பெலிஸ்தரின் பாளயத்திலே துணிந்து புகுந்துபோய், பெத்லகேமின் ஒலிமுகவாசலில் இருக்கிற கிணற்றிலே தண்ணீர் மொண்டு, தாவீதினிடத்தில் கொண்டு வந்தார்கள்; ஆனாலும் அவன் அதைக் குடிக்க மனதில்லாமல் அதைக் கர்த்தருக்கென்று ஊற்றிப்போட்டு:

17கர்த்தாவே, தங்கள் பிராணனை எண்ணாமல் போய்வந்த அந்த மனுஷரின் இரத்தத்தைக் குடிக்கும் இந்தச்செயல் எனக்குத் தூரமாயிருப்பதாக என்று சொல்லி, அதைக் குடிக்க மனதில்லாதிருந்தான்; இப்படி இந்த மூன்று பராக்கிரமசாலிகளும் செய்தார்கள்.

18யோவாபின் சகோதரனும் செருயாவின் குமாரனுமான அபிசாய் என்பவன், அந்த மூன்றுபேரில் பிரதானமானவன்; அவன் தன் ஈட்டியை ஓங்கி முந்நூறு பேரை மடங்கடித்ததினால், இந்த மூன்று பேர்களில் பேர்பெற்றவனானான்.

19இந்த மூன்றுபேர்களில் அவன் மேன்மையுள்ளவனாயிருந்ததினாலல்லவோ, அவர்களில் தலைவனானான்; ஆனாலும் அந்த முந்தின மூன்று பேருக்கு அவன் சமமானவன் அல்ல.

20பராக்கிரமசாலியாகிய யோய்தாவின் குமாரனும் கப்செயேல் ஊரானுமாகிய பெனாயாவும் செய்கைகளில் வல்லவனாயிருந்தான்; அவன் மோவாப் தேசத்தின் இரண்டு வலுமையான சிங்கங்களைக் கொன்றதுமல்லாமல், உறைந்த மழை காலத்தில் அவன் இறங்கிப்போய், ஒரு கெபிக்குள் இருந்த ஒரு சிங்கத்தையும் கொன்றுபோட்டான்.

21அவன் பயங்கர ரூபமான ஒரு எகிப்தியனையும் கொன்றுபோட்டான்; அந்த எகிப்தியன் கையில் ஒரு ஈட்டியிருக்கையில், இவன் ஒரு தடியைப்பிடித்து, அவனிடத்தில், போய், அந்த எகிப்தியன் கையிலிருந்த ஈட்டியைப் பறித்து, அவன் ஈட்டியினாலே அவனைக் கொன்றுபோட்டான்.

22இவைகளை யோய்தாவின் குமாரனாகிய பெனாயா செய்தபடியினால், மூன்று பராக்கிரமசாலிகளுக்குள்ளே பேர்பெற்றவனாயிருந்தான்.

23முப்பதுபேரிலும் இவன் மேன்மையுள்ளவன்; ஆனாலும் அந்த முந்தின மூன்று பேருக்கும் இவன் சமானமானவன் அல்ல; இவனைத் தாவீது தன் மெய்க்காவலருக்குத் தலைவனாக வைத்தான்.

24யோவாபின் தம்பி ஆசகேல் மற்ற முப்பதுபேரில் ஒருவன்; அவர்கள் யாரெனில், பெத்லகேம் ஊரானாகிய தோதோவின் குமாரன் எல்க்கானான்,

25ஆரோதியனாகிய சம்மா, ஆரோதியனாகிய எலிக்கா,

26பல்தியனாகிய ஏலெஸ், இக்கேசின் குமாரனாகிய ஈரா என்னும் தெக்கோவியன்.

27ஆனதோத்தியனாகிய அபியேசர், ஊசாத்தியனாகிய மெபுன்னாயி,

28அகோகியனாகிய சல்மோன், நெத்தோபாத்தியனாகிய மகராயி,

29பானாவின் குமாரனாகிய ஏலேப் என்னும் நெத்தோபாத்தியன், பென்யமீன் புத்திரரின் கிபியா ஊரானாகிய ரிபாயின் குமாரன் இத்தாயி,

30பிரத்தோனியனாகிய பெனாயா, காகாஸ் நீரோடைகளின் தேசத்தானாகிய ஈத்தாயி,

31அர்பாத்தியனாகிய அபிஅல்பொன், பருமியனாகிய அஸ்மாவேத்,

32சால்போனியனாகிய எலியூபா, யாசேனின் குமாரரில் யோனத்தான் என்பவன்.

33ஆராரியனாகிய சம்மா, சாராரின் குமாரனாகிய அகியாம் என்னும் ஆராரியன்,

34மாகாத்தியனின் குமாரனாகிய அகஸ்பாயிம் மகன் எலிப்பெலேத், கீலோனியனாகிய அகித்தோப்பேலின் குமாரன் எலியாம் என்பவன்.

35கர்மேலியனாகிய எஸ்ராயி, அர்பியனாகிய பாராயி,

36சோபா ஊரானாகிய நாத்தானின் குமாரன் ஈகால், காதியனாகிய பானி,

37அம்மோனியனாகிய சேலேக், செருயாவின் குமாரனாகிய யோவாபின் ஆயுததாரியான பெரோத்தியனாகிய நகராய்,

38இத்ரியனாகிய ஈரா, இத்ரியனாகிய காரேப்,

39ஏத்தியனாகிய உரியா என்பவர்களே; ஆக முப்பத்தேழுபேர்.

கலாத்தியர் 3

முழு அதிகாரம் ›

1புத்தியில்லாத கலாத்தியரே, நீங்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமற்போகத்தக்கதாக உங்களை மயக்கினவன் யார்? இயேசுகிறிஸ்து சிலுவையிலறையப்பட்டவராக உங்கள் கண்களுக்குமுன் பிரத்தியட்சமாய் உங்களுக்குள்ளே வெளிப்படுத்தப்பட்டிருந்தாரே.

2ஒன்றைமாத்திரம் உங்களிடத்தில் அறிய விரும்புகிறேன்; நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசுவாசக் கேள்வியினாலேயோ, எதினாலே ஆவியைப் பெற்றீர்கள்?

3ஆவியினாலே ஆரம்பம்பண்ணின நீங்கள் இப்பொழுது மாம்சத்தினாலே முடிவு பெறப்போகிறீர்களோ? நீங்கள் இத்தனை புத்தியீனரா?

4இத்தனை பாடுகளையும் வீணாய்ப்பட்டீர்களோ? அவைகள் வீணாய்ப்போயிற்றே.

5அன்றியும் உங்களுக்கு ஆவியை அளித்து, உங்களுக்குள்ளே அற்புதங்களை நடப்பிக்கிறவர் அதை நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசுவாசக் கேள்வியினாலேயோ, எதினாலே செய்கிறார்?

6அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.

7ஆகையால் விசுவாசமார்க்கத்தார்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக.

8மேலும் தேவன் விசுவாசத்தினாலே புறஜாதிகளை நீதிமான்களாக்குகிறாரென்று வேதம் முன்னாகக் கண்டு: உனக்குள் சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆபிரகாமுக்குச் சுவிசேஷமாய் முன்னறிவித்தது.

9அந்தப்படி விசுவாசமார்க்கத்தார் விசுவாசமுள்ள ஆபிரகாமுடனே ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.

10நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்; நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே.

11நியாயப்பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. ஏனெனில் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே.

12நியாயப்பிரமாணமோ விசுவாசத்திற்குரியதல்ல; அவைகளைச் செய்கிற மனுஷனே அவைகளால் பிழைப்பான்.

13மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.

14ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வரும்படியாகவும், ஆவியைக்குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெறும்படியாகவும் இப்படியாயிற்று.

15சகோதரரே, மனுஷர் முறைமையின்படி சொல்லுகிறேன்; மனுஷர்களுக்குள்ளே உறுதிபண்ணப்பட்ட உடன்படிக்கையை ஒருவனும் தள்ளுகிறதுமில்லை, அதினோடே ஒன்றையும் கூட்டுகிறதுமில்லை.

16ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் வாக்குத்தத்தங்கள்பண்ணப்பட்டன; சந்ததிகளுக்கு என்று அநேகரைக்குறித்துச் சொல்லாமல், உன் சந்ததிக்கு என்று ஒருவனைக்குறித்துச் சொல்லியிருக்கிறார், அந்தச் சந்ததி கிறிஸ்துவே.

17ஆதலால் நான் சொல்லுகிறதென்னவெனில், கிறிஸ்துவை முன்னிட்டு தேவனால் முன் உறுதிபண்ணப்பட்ட உடன்படிக்கையை நானூற்றுமுப்பது வருஷத்திற்குப்பின்பு உண்டான நியாயப்பிரமாணமானது தள்ளி, வாக்குத்தத்தத்தை வியர்த்தமாக்கமாட்டாது.

18அன்றியும், சுதந்தரமானது நியாயப்பிரமாணத்தினாலே உண்டானால் அது வாக்குத்தத்தத்தினாலே உண்டாயிராது; தேவன் அதை ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தத்தினாலே அருளிச்செய்தாரே.

19அப்படியானால், நியாயப்பிரமாணத்தின் நோக்கமென்ன? வாக்குத்தத்தத்தைப்பெற்ற சந்ததி வருமளவும் அது அக்கிரமங்களினிமித்தமாகக் கூட்டப்பட்டு, தேவதூதரைக்கொண்டு மத்தியஸ்தன் கையிலே கட்டளையிடப்பட்டது.

20மத்தியஸ்தன் ஒருவனுக்குரியவனல்ல, தேவனோ ஒருவர்.

21அப்படியானால் நியாயப்பிரமாணம் தேவனுடைய வாக்குத்தத்தங்களுக்கு விரோதமா? அல்லவே; உயிரைக் கொடுக்கத்தக்க நியாயப்பிரமாணம் அருளப்பட்டிருந்ததானால், நீதியானது நியாயப்பிரமாணத்தினால் உண்டாயிருக்குமே.

22அப்படியிராதபடியால், இயேசுகிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கிற வாக்குத்தத்தம் விசுவாசமுள்ளவர்களுக்கு அளிக்கப்படும்படி வேதம் எல்லாரையும் ஏகமாய்ப் பாவத்தின்கீழ் அடைத்துப்போட்டது.

23ஆதலால் விசுவாசம் வருகிறதற்கு முன்னே, வெளிப்படப்போகிற விசுவாசத்திற்கு ஏதுவாக நாம் அடைக்கப்பட்டவர்களாய் நியாயப்பிரமாணத்தின்கீழ் காவல்பண்ணப்பட்டிருந்தோம்.

24இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுவதற்கு நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் இருந்தது.

25விசுவாசம் வந்தபின்பு நாம் உபாத்திக்குக் கீழானவர்களல்லவே.

26நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே.

27ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே.

28யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.

29நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயும் இருக்கிறீர்கள்.

தனிவாசிப்பு

எசேக்கியேல் 30

முழு அதிகாரம் ›

1கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

2மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் சொல்லு: கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், ஐயோ! ஆபத்துநாள் வருகிறதென்று அலறுங்கள்.

3நாள் சமீபமாயிருக்கிறது; ஆம், கர்த்தருடைய நாள் சமீபமாயிருக்கிறது; அது மந்தாரமான நாள், அது புறஜாதிகளுக்கு வரும் காலம்.

4பட்டயம் எகிப்திலே வரும்; எகிப்திலே கொலையுண்கிறவர்கள் விழும்போது எத்தியோப்பியாவிலே மகாவேதனை உண்டாயிருக்கும்; அதின் ஏராளமான ஜனத்தைப் பிடித்துக்கொண்டுபோவார்கள்; அதின் அஸ்திபாரங்கள் நிர்மூலமாக்கப்படும்.

5எத்தியோப்பியரும், பூத்தியரும், லூத்தியரும், கலந்த கூட்டமாகிய அனைவரும், கூபியரும், உடன்படிக்கைக்குள்ளான தேசத்தின் புத்திரரும் அவர்களோடேகூடப் பட்டயத்தால் விழுவார்கள்.

6எகிப்தை ஆதரிக்கிறவர்களும் விழுவார்கள்; அதினுடைய பலத்தின் முக்கியமும் தாழ்ந்துபோகும் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அதிலே மிக்தோல் முதல் செவ்வெனேவரைக்கும் பட்டயத்தினால் விழுவார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

7பாழாய்ப்போன தேசங்களின் நடுவிலே பாழாய்ப்போவார்கள்; அவாந்தரமாக்கப்பட்ட பட்டணங்களில் அவர்கள் பட்டணங்களும் அவாந்தரமாகும்.

8நான் எகிப்திலே தீக்கொளுத்தும்போதும், உனக்குத் துணைநின்ற யாவரும் முறிக்கப்படும்போதும், நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.

9நிர்விசாரமான எத்தியோப்பியரைத் தத்தளிக்கப்பண்ண அந்நாளிலே என் கட்டளையினால் தூதாட்கள் கப்பல்களிலே போவார்கள்; அப்பொழுது எகிப்தின் நாளிலே உண்டானதுபோல அவர்களுக்குள்ளே மகா வேதனை உண்டாயிருக்கும்; இதோ, அது வருகிறது.

10கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரைக் கொண்டு எகிப்தின் சந்ததியை ஒழியப்பண்ணுவேன்.

11இவனும் இவனோடேகூட ஜாதிகளில் மகா பலசாலிகளான இவனுடைய ஜனங்களும் தேசத்தை அழிப்பதற்காக ஏவப்பட்டு வந்து, தங்கள் பட்டயங்களை எகிப்துக்கு விரோதமாக உருவி, கொலையுண்டவர்களாலே தேசத்தை நிரப்புவார்கள்.

12அப்பொழுது நான் நதிகளை வற்றிப்போகப்பண்ணி, தேசத்தைத் துஷ்டர்களின் கையிலே விற்று, தேசத்தையும் அதிலுள்ள யாவையும் அந்நிய தேசத்தாரின் கையால் பாழாக்கிப்போடுவேன்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன்.

13கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் நரகலான விக்கிரகங்களை அழித்து, நோப்பின் சிலைகளை ஒழியப்பண்ணுவேன்; இனி எகிப்துதேசத்தில் ஒரு அதிபதியும் இரான்; நான் எகிப்துதேசத்தில் பயமுண்டாக்கி,

14பத்ரோசைப் பாழாக்கி, சோவானிலே தீக்கொளுத்தி, நோ பட்டணத்தில் ஆக்கினைகளைச் செய்து,

15எகிப்தின் பெலனாகிய சீனின்மேல் என் உக்கிரத்தை ஊற்றி, நோ பட்டணத்தின் ஏராளமான ஜனத்தைச் சங்கரிப்பேன்.

16எகிப்தில் தீக்கொளுத்துவேன்; சீன் மகா வேதனை அடையும்; நோ பட்டணம் தகர்ந்து இடிந்துபோகும்; நோப்புக்குத் தினந்தோறும் நெருக்கங்களுண்டாகும்.

17ஆவென், பிபேசெத் என்கிற பட்டணங்களின் வேலைக்காரர் பட்டயத்தால் விழுவார்கள்; அவைகளின் குடிகள் சிறையிருப்புக்குப் போவார்கள்.

18எகிப்தின் நுகங்களை நான் முறிக்கும்போதும், அதினுடைய பெலத்தின் முக்கியம் அதிலே ஓயும்போதும், மந்தாரம் அதை மூடும்; தக்பானேசிலே பகல் இருண்டுபோகும்; அதின் குமாரத்திகள் சிறைப்பட்டுப்போவார்கள்.

19இப்படி எகிப்திலே நியாயத்தீர்ப்புகளைச் செய்வேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் என்கிறார் என்று சொல் என்றார்.

20பதினோராம்வருஷம் முதலாம் மாதம் ஏழாந்தேதியிலே, கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

21மனுபுத்திரனே, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுடைய புயத்தை முறித்துப்போடுவேன்; இதோ, அது குணமாகத்தக்கதாகக் கட்டப்படுவதில்லை; அது பட்டயத்தைப் பிடிக்கத்தக்க பெலனை அடையும்படி பத்தை வைத்துக் கட்டப்படுவதுமில்லை.

22ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு விரோதமாக வந்து, பெலனுள்ளதும் முறிந்ததுமாகிய அவனுடைய புயங்களை முறித்துப்போடுவேன்; பட்டயத்தை நான் அவன் கையிலிருந்து விழப்பண்ணி,

23எகிப்தியரை ஜாதிகளுக்குள்ளே சிதறடித்து, அவர்களை தேசங்களில் தூற்றிவிடுவேன்.

24பாபிலோன் ராஜாவின் புயங்களைப் பெலப்படுத்தி, அவன் கையிலே என் பட்டயத்தைக் கொடுத்து, பார்வோனின் புயங்களை முறித்துவிடுவேன்; அப்பொழுது அவன் கொலையுண்கிறவன் தவிக்கிறதுபோல அவனுக்கு முன்பாகத் தவிப்பான்.

25பாபிலோன் ராஜாவின் புயங்களைப் பெலப்படுத்துவேன்; பார்வோனின் புயங்களோ விழுந்துபோகும்; என் பட்டயத்தை நான் பாபிலோன் ராஜாவின் கையில் கொடுக்கும்போதும், அவன் அதை எகிப்து தேசத்தின்மேல் நீட்டும்போதும், நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.

26நான் எகிப்தியரை ஜாதிகளுக்குள்ளே சிதறடித்து, அவர்களை தேசங்களில் தூற்றிப்போடுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.

சங்கீதம் 78:38-72

முழு அதிகாரம் ›

38அவரோ அவர்களை அழிக்காமல், இரக்கமுள்ளவராய் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்தார்; அவர் தமது உக்கிரம் முழுவதையும் எழுப்பாமல், அநேகந்தரம் தமது கோபத்தை விலக்கிவிட்டார்.

39அவர்கள் மாம்சமென்றும், திரும்பிவராமல் அகலுகிற காற்றென்றும் நினைவுகூர்ந்தார்.

40எத்தனைதரமோ வனாந்தரத்திலே அவருக்குக் கோபம் மூட்டி, அவாந்தர வெளியிலே அவரை விசனப்படுத்தினார்கள்.

41அவர்கள் திரும்பி தேவனைப் பரீட்சை பார்த்து, இஸ்ரவேலின் பரிசுத்தரை மட்டுப்படுத்தினார்கள்.

42அவருடைய கரத்தையும், அவர் தங்களைச் சத்துருவுக்கு விலக்கி மீட்ட நாளையும் நினையாமற் போனார்கள்.

43அவர் எகிப்திலே தம்முடைய அடையாளங்களையும், சோவான் வெளியிலே தம்முடைய அற்புதங்களையும் செய்தார்.

44அவர்களுடைய நதிகளை இரத்தமாக மாற்றி, அவர்களுடைய ஆறுகளிலுள்ள ஜலத்தைக் குடிக்கக்கூடாதபடி செய்தார்.

45அவர்களை அழிக்கும்படி வண்டு ஜாதிகளையும், அவர்களைக் கெடுக்கும்படி தவளைகளையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார்.

46அவர்களுடைய விளைச்சலைப் புழுக்களுக்கும், அவர்களுடைய பிரயாசத்தின் பலனை வெட்டுக்கிளிகளுக்கும் கொடுத்தார்.

47கல்மழையினால் அவர்களுடைய திராட்சச்செடிகளையும், ஆலாங்கட்டியினால் அவர்களுடைய அத்திமரங்களையும் அழித்து,

48அவர்களுடைய மிருகஜீவன்களைக் கல்மழைக்கும், அவர்களுடைய ஆடுமாடுகளை இடிகளுக்கும் ஒப்புக்கொடுத்தார்.

49தமது உக்கிரமான கோபத்தையும், மூர்க்கத்தையும், சினத்தையும், உபத்திரவத்தையும், தீங்குசெய்யும் தூதர்களையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார்.

50அவர் தம்முடைய கோபத்துக்கு வழிதிறந்து, அவர்கள் ஆத்துமாவை மரணத்துக்கு விலக்கிக் காவாமல், அவர்கள் ஜீவனைக் கொள்ளைநோய்க்கு ஒப்புக்கொடுத்தார்.

51எகிப்திலே தலைச்சன்கள் அனைத்தையும், காமின் கூடாரங்களிலே அவர்களுடைய பெலனில் முதற்பலனான யாவரையும் அழித்து;

52தம்முடைய ஜனங்களை ஆடுகளைப்போல் புறப்படப்பண்ணி, அவர்களை வனாந்தரத்திலே மந்தையைப்போல் கூட்டிக்கொண்டுபோய்;

53அவர்கள் பயப்படாதபடிக்கு அவர்களைப் பத்திரமாய் வழிநடத்தினார்; அவர்கள் சத்துருக்களைக் கடல் மூடிப்போட்டது.

54அவர்களைத் தமது பரிசுத்த ஸ்தலத்தின் எல்லைவரைக்கும், தமது வலதுகரம் சம்பாதித்த இந்தப் பர்வதமட்டுக்கும் அழைத்துக்கொண்டுவந்து,

55அவர்கள் முகத்திற்கு முன்பாக ஜாதிகளைத் துரத்திவிட்டு, தேசத்தை நூல்போட்டுப் பங்கிட்டு, அவர்களுடைய கூடாரங்களில் இஸ்ரவேலின் கோத்திரங்களைக் குடியேற்றினார்.

56ஆனாலும் அவர்கள் உன்னதமான தேவனைப் பரீட்சை பார்த்து, அவருக்குக் கோபம் மூட்டி, அவருடைய சாட்சிகளைக் கைக்கொள்ளாமற்போய்,

57தங்கள் பிதாக்களைப்போல வழிவிலகி, துரோகம்பண்ணி, மோசம்போக்கும் வில்லைப்போல் துவண்டு,

58தங்கள் மேடைகளினால் அவருக்குக் கோபம் மூட்டி, தங்கள் விக்கிரகங்களினால் எரிச்சல் உண்டாக்கினார்கள்.

59தேவன் அதைக் கேட்டு உக்கிரமாகி, இஸ்ரவேலை மிகவும் வெறுத்து,

60தாம் மனுஷருக்குள்ளே போட்ட கூடாரமாகிய சீலோவிலுள்ள வாசஸ்தலத்தை விட்டுவிலகி,

61தமது பலத்தைச் சிறையிருப்புக்கும், தமது மகிமையைச் சத்துருவின் கைக்கும் ஒப்புக்கொடுத்து,

62தமது ஜனத்தைப் பட்டயத்துக்கு இரையாக்கி, தமது சுதந்தரத்தின்மேல் கோபங்கொண்டார்.

63அவர்கள் வாலிபரை அக்கினி பட்சித்தது, அவர்கள் கன்னியாஸ்திரீகள் வாழ்க்கைப்படாதிருந்தார்கள்.

64அவர்களுடைய ஆசாரியர்கள் பட்டயத்தால் விழுந்தார்கள், அவர்களுடைய விதவைகள் அழவில்லை.

65அப்பொழுது ஆண்டவர் நித்திரை தெளிந்தவனைப்போலவும், திராட்சரசத்தால் கெம்பீரிக்கிற பராக்கிரமசாலியைப்போலவும் விழித்து,

66தம்முடைய சத்துருக்களைப் பின்புறமாக அடித்து, அவர்களுக்கு நித்திய நிந்தையை வரப்பண்ணினார்.

67அவர் யோசேப்பின் கூடாரத்தைப் புறக்கணித்தார்; எப்பிராயீம் கோத்திரத்தை அவர் தெரிந்துகொள்ளாமல்,

68யூதா கோத்திரத்தையும் தமக்குப் பிரியமான சீயோன் பர்வதத்தையும் தெரிந்துகொண்டார்.

69தம்முடைய பரிசுத்த ஸ்தலத்தை மலைகளைப்போலவும், என்றைக்கும் நிற்கும்படி தாம் அஸ்திபாரப்படுத்தின பூமியைப்போலவும் கட்டினார்.

70தம்முடைய தாசனாகிய தாவீதைத் தெரிந்துகொண்டு, ஆட்டுத்தொழுவங்களிலிருந்து அவனை எடுத்தார்.

71கறவலாடுகளின் பின்னாகத் திரிந்த அவனை, தம்முடைய ஜனமாகிய யாக்கோபையும் தம்முடைய சுதந்தரமாகிய இஸ்ரவேலையும் மேய்ப்பதற்காக, அழைத்துக்கொண்டுவந்தார்.

72இவன் அவர்களைத் தன் இருதயத்தின் உண்மையின்படியே மேய்த்து, தன் கைகளின் திறமையினால் அவர்களை நடத்தினான்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com