‹ முகப்புமுழுத் திட்டம்

செப்டம்பர் 28 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்செப்டம்பர் 28அடுத்த நாள் ›
குடும்பம்

II சாமுவேல் 24

முழு அதிகாரம் ›

1கர்த்தருடைய கோபம் திரும்ப இஸ்ரவேலின்மேல் மூண்டது. இஸ்ரவேல் யூதா என்பவர்களை இலக்கம் பார் என்று அவர்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிறதற்கு தாவீது ஏவப்பட்டான்.

2அப்படியே ராஜா தன்னோடிருக்கிற சேனாபதியாகிய யோவாபைப் பார்த்து: ஜனங்களின் இலக்கத்தை நான் அறியும்படிக்கு நீ தாண்முதல் பெயெர்செபா மட்டுமுள்ள இஸ்ரவேலரின் கோத்திரமெங்கும் சுற்றித்திரிந்து ஜனங்களைத் தொகையிடுங்கள் என்றான்.

3அப்பொழுது யோவாப் ராஜாவைப் பார்த்து: ராஜாவாகிய என் ஆண்டவனுடைய கண்கள் காணும்படி உம்முடைய தேவனாகிய கர்த்தர் ஜனங்களை இப்பொழுது இருக்கிறதைப்பார்க்கிலும், நூறுமடங்கு அதிகமாய் வர்த்திக்கப்பண்ணுவாராக; ஆனாலும் என் ஆண்டவனாகிய ராஜா இந்தக் காரியத்தை விரும்புகிறது என்ன என்றான்.

4ஆகிலும் யோவாபும் இராணுவத்தலைவரும் சொன்ன வார்த்தை செல்லாதபடிக்கு, ராஜாவின் வார்த்தை பலத்தது; அப்படியே இஸ்ரவேல் ஜனங்களைத் தொகையிட, யோவாபும் இராணுவத்தலைவரும் ராஜாவைவிட்டு புறப்பட்டுப்போய்,

5யோர்தானைக் கடந்து, காத் என்னும் ஆறுகளின் நடுவே இருக்கிற பட்டணத்திற்கு வலதுபுறமான ஆரோவேரிலும் யாசேரிடத்திலும் பாளயமிறங்கி,

6அங்கேயிருந்து கீலேயாத்திற்கும் தாதீம்ஒத்சிக்கும் போய், அங்கேயிருந்து தாண்யானுக்கும், சீதோனின் சுற்றுப்புறங்களுக்கும் போய்,

7பிற்பாடு தீரு என்னும் கோட்டைக்கும் ஏவியர் கானானியருடைய சகல பட்டணங்களுக்கும் போய், அங்கேயிருந்து யூதாவின் தென்புறமான பெயெர்செபாவுக்குப் போய்,

8இப்படி தேசமெங்கும் சுற்றித்திரிந்து, ஒன்பது மாதமும் இருபது நாளும் ஆனபிற்பாடு எருசலேமுக்கு வந்தார்கள்.

9யோவாப் ஜனத்தை இலக்கம் பார்த்த தொகையை ராஜாவுக்குக் கொடுத்தான்; இஸ்ரவேலிலே பட்டயம் உருவத்தக்க யுத்த சேவகர் எட்டு லட்சம்பேர் இருந்தார்கள்; யூதா மனுஷர் ஐந்து லட்சம்பேர் இருந்தார்கள்.

10இவ்விதமாய் ஜனங்களை எண்ணினபின்பு, ராஜாவின் இருதயம் அவனை வாதித்தது; அப்பொழுது தாவீது கர்த்தரை நோக்கி: நான் இப்படிச் செய்ததினாலே பெரிய பாவஞ்செய்தேன்; இப்போதும் ஆண்டவரே, உமது அடியானின் அக்கிரமத்தை நீக்கிவிடும்; நான் மகா புத்தியீனமாய்ச் செய்தேன் என்றான்.

11தாவீது காலமே எழுந்திருந்தபோது, தாவீதின் ஞானதிருஷ்டிக்காரனாகிய காத் என்னும் தீர்க்கதரிசிக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகிச் சொன்னது:

12நீ தாவீதினிடத்தில் போய், மூன்று காரியங்களை உனக்கு முன்பாக வைக்கிறேன்; அவைகளில் ஒரு காரியத்தைத் தெரிந்துகொள், அதை நான் உனக்குச் செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

13அப்படியே காத் தாவீதினிடத்தில் வந்து, அவனை நோக்கி: உம்முடைய தேசத்திலே ஏழு வருஷம் பஞ்சம் வரவேண்டுமோ? அல்லது மூன்று மாதம் உம்முடைய சத்துருக்கள் உம்மைப் பின்தொடர, நீர் அவர்களுக்கு முன்பாக ஓடிப்போகவேண்டுமோ? அல்லது உம்முடைய தேசத்திலே மூன்று நாள் கொள்ளை நோய் உண்டாக வேண்டுமோ? இப்போதும் என்னை அனுப்பினவருக்கு நான் என்ன மறுஉத்தரவு கொண்டுபோக வேண்டும் என்பதை நீர் யோசித்துப் பாரும் என்று சொன்னான்.

14அப்பொழுது தாவீது காத்தை நோக்கி: கொடிய இடுக்கணில் அகப்பட்டிருக்கிறேன்; இப்போது நாம் கர்த்தருடைய கையிலே விழுவோமாக; அவருடைய இரக்கங்கள் மகா பெரியது; மனுஷர் கையிலே விழாதிருப்பேனாக என்றான்.

15அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலிலே அன்று காலமேதொடங்கி குறித்தகாலம் வரைக்கும் கொள்ளை நோயை வரப்பண்ணினார்; அதினால் தாண்முதல் பெயெர்செபா மட்டுமுள்ள ஜனங்களில் எழுபதினாயிரம்பேர் செத்துப் போனார்கள்.

16தேவதூதன் எருசலேமை அழிக்கத் தன் கையை அதின்மேல் நீட்டினபோது, கர்த்தர் அந்தத் தீங்குக்கு மனஸ்தாபப்பட்டு, ஜனங்களைச் சங்கரிக்கிற தூதனை நோக்கி: போதும், இப்போது உன் கையை நிறுத்து என்றார்; அந்த வேளையில் கர்த்தருடைய தூதன் எபூசியனாகிய அர்வனாவின் போரடிக்கிற களத்திற்கு நேரே இருந்தான்.

17ஜனத்தை உபாதிக்கிற தூதனை தாவீது கண்டபோது, அவன் கர்த்தரை நோக்கி: இதோ, நான்தான் பாவஞ்செய்தேன்; நான்தான் அக்கிரமம் பண்ணினேன்; இந்த ஆடுகள் என்ன செய்தது? உம்முடைய கை எனக்கும் என் தகப்பன் வீட்டுக்கும் விரோதமாயிருப்பதாக என்று விண்ணப்பம்பண்ணினான்.

18அன்றையதினம் காத் என்பவன் தாவீதினிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் போய், எபூசியனாகிய அர்வனாவின் களத்திலே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கும் என்றான்.

19காத்துடைய வார்த்தையின்படியே தாவீது கர்த்தர் கற்பித்த பிரகாரமாகப் போனான்.

20அர்வனா ஏறிட்டுப்பார்த்து: ராஜாவும் அவனுடைய ஊழியக்காரரும் தன்னிடத்தில் வருகிறதைக்கண்டு, அர்வனா எதிர்கொண்டுபோய் தரைமட்டும் குனிந்து ராஜாவை வணங்கி,

21ராஜாவாகிய என் ஆண்டவன் தமது அடியானிடத்தில் வருகிற காரியம் என்ன என்று கேட்டதற்கு, தாவீது: வாதை ஜனத்தைவிட்டு நிறுத்தப்படக் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டும்படிக்கு இந்தக் களத்தை உன் கையிலே கொள்ளவந்தேன் என்றான்.

22அர்வனா தாவீதைப் பார்த்து: ராஜாவாகிய என் ஆண்டவன் இதை வாங்கிக் கொண்டு, தம்முடைய பார்வைக்கு நலமானபடி பலியிடுவாராக; இதோ, தகனபலிக்கு மாடுகளும் விறகுக்குப் போரடிக்கிற உருளைகளும் மாடுகளின் நுகத்தடிகளும் இங்கே இருக்கிறது என்று சொல்லி,

23அர்வனா ராஜயோக்கியமாய் அவை எல்லாவற்றையும் ராஜாவுக்குக் கொடுத்த பின்பு, அர்வனா ராஜாவை நோக்கி: உம்முடைய தேவனாகிய கர்த்தர் உம்மிடத்தில் கிருபையாயிருப்பாராக என்றான்.

24ராஜா அர்வனாவைப் பார்த்து: அப்படியல்ல; நான் இலவசமாய் வாங்கி, என் தேவனாகிய கர்த்தருக்கு சர்வாங்கதகனபலிகளைச் செலுத்தாமல், அதை உன் கையிலே விலைக்கிரயமாய் வாங்குவேன் என்று சொல்லி, தாவீது அந்தக் களத்தையும் மாடுகளையும் ஐம்பது சேக்கல் நிறைவெள்ளிக்குக் கொண்டான்.

25அங்கே தாவீது கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, சர்வாங்கதகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தினான்; அப்பொழுது கர்த்தர் தேசத்துக்காகச் செய்யப்பட்ட வேண்டுதலைக் கேட்டருளினார்; இஸ்ரவேலின் மேலிருந்த அந்த வாதை நிறுத்தப்பட்டது.

கலாத்தியர் 4

முழு அதிகாரம் ›

1பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில், சுதந்தரவாளியானவன் எல்லாவற்றிற்கும் எஜமானாயிருந்தும், அவன் சிறுபிள்ளையாயிருக்குங்காலமளவும், அவனுக்கும் அடிமையானவனுக்கும் வித்தியாசமில்லை.

2தகப்பன் குறித்த காலம்வரைக்கும் அவன் காரியக்காரருக்கும் வீட்டு விசாரணைக்காரருக்கும் கீழ்ப்பட்டிருக்கிறான்.

3அப்படியே நாமும் சிறுபிள்ளைகளாயிருந்த காலத்தில் இவ்வுலகத்தின் வழிபாடுகளுக்கு அடிமைப்பட்டவர்களாயிருந்தோம்.

4நாம் புத்திரசுவிகாரத்தையடையும்படி நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக்கொள்ளத்தக்கதாக,

5காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார்.

6மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்.

7ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்; நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய்.

8நீங்கள் தேவனை அறியாமலிருந்தபோது, சுபாவத்தின்படி தேவர்களல்லாதவர்களுக்கு அடிமைகளாயிருந்தீர்கள்.

9இப்பொழுதோ நீங்கள் தேவனை அறிந்திருக்க அல்லது தேவனாலே அறியப்பட்டிருக்க, பெலனற்றதும் வெறுமையானதுமான அவ்வழிபாடுகளுக்கு நீங்கள் மறுபடியும் திரும்பி, மறுபடியும் அவைகளுக்கு அடிமைப்படும்படி விரும்புகிறதெப்படி?

10நாட்களையும், மாதங்களையும், காலங்களையும், வருஷங்களையும் பார்க்கிறீர்களே.

11நான் உங்களுக்காகப் பிரயாசப்பட்டது வீணாய்ப்போயிற்றோ என்று உங்களைக்குறித்துப் பயந்திருக்கிறேன்.

12சகோதரரே, என்னைப்போலாகுங்கள் என்று உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; நான் உங்களைப்போலுமானேனே. எனக்கு நீங்கள் அநியாயம் ஒன்றும் செய்யவில்லை.

13உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நான் சரீர பலவீனத்தோடு முதலாந்தரம் உங்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தேன்.

14அப்படியிருந்தும், என் சரீரத்தில் உண்டாயிருக்கிற சோதனையை நீங்கள் அசட்டைபண்ணாமலும், அரோசியாமலும், தேவதூதனைப்போலவும், கிறிஸ்து இயேசுவைப்போலவும், என்னை ஏற்றுக்கொண்டீர்கள்.

15அப்பொழுது நீங்கள் கொண்டிருந்த ஆனந்தபாக்கியம் எங்கே? உங்கள் கண்களைப் பிடுங்கி எனக்குக் கொடுக்கக்கூடுமானால், அப்படியும் செய்திருப்பீர்கள் என்று உங்களுக்குச் சாட்சியாயிருக்கிறேன்.

16நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொன்னதினாலே உங்களுக்குச் சத்துருவானேனோ?

17அவர்கள் உங்களை நாடி வைராக்கியம் பாராட்டுகிறார்கள்; ஆகிலும் நல்மனதோடே அப்படிச் செய்யாமல், நீங்கள் அவர்களை நாடி வைராக்கியம் பாராட்டும்பொருட்டு உங்களைப் புறம்பாக்க விரும்புகிறார்கள்.

18நல்விஷயத்தில் வைராக்கியம் பாராட்டுவது நல்லதுதான்; அதை நான் உங்களிடத்தில், இருக்கும்பொழுதுமாத்திரமல்ல, எப்பொழுதும் பாராட்டவேண்டும்.

19என் சிறுப்பிள்ளைகளே, கிறிஸ்து உங்ளிடத்தில் உருவாகுமளவும் உங்களுக்காக மறுபடியும் கர்ப்பவேதனைப்படுகிறேன்;

20உங்களைக்குறித்து நான் சந்தேகப்படுகிறபடியால், நான் இப்பொழுது உங்களிடத்தில் வந்திருந்து, வேறுவகையாகப் பேச விரும்புகிறேன்.

21நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிருக்க விரும்புகிற நீங்கள் நியாயப்பிரமாணம் சொல்லுகிறதைக் கேட்கவில்லையா? இதை எனக்குச் சொல்லுங்கள்.

22ஆபிரகாமுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள் என்று எழுதியிருக்கிறது; ஒருவன் அடிமையானவளிடத்தில் பிறந்தவன் ஒருவன் சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன்.

23அடிமையானவளிடத்தில் பிறந்தவன் மாம்சத்தின்படி பிறந்தான், சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன் வாக்குத்தத்தத்தின்படி பிறந்தான்.

24இவைகள் ஞான அர்த்தமுள்ளவைகள்; அந்த ஸ்திரீகள் இரண்டு ஏற்பாடுகளாம்; ஒன்று சீனாய்மலையிலுண்டான ஏற்பாடு, அது அடிமைத்தனத்திற்குள்ளாகப் பிள்ளைபெறுகிறது, அது ஆகார் என்பவள்தானே.

25ஆகார் என்பது அரபிதேசத்திலுள்ள சீனாய்மலை; அந்த ஆகார் இப்பொழுதிருக்கிற எருசலேமுக்குச் சரி; இவள் தன் பிள்ளைகளோடேகூட அடிமைப்பட்டிருக்கிறாளே.

26மேலான எருசலேமோ சுயாதீனமுள்ளவள், அவளே நம்மெல்லாருக்கும் தாயானவள்.

27அந்தப்படி பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்திரு; கர்ப்பவேதனைப்படாதவளே, களிப்பாய் எழும்பி ஆர்ப்பரி; புருஷனுள்ளவளைப்பார்க்கிலும் அநாத ஸ்திரீக்கே அதிக பிள்ளைகளுண்டு என்று எழுதியிருக்கிறது.

28சகோதரரே, நாம் ஈசாக்கைப்போல வாக்குத்தத்தத்துப் பிள்ளைகளாயிருக்கிறோம்.

29ஆகிலும் மாம்சத்தின்படி பிறந்தவன் ஆவியின்படி பிறந்தவனை அப்பொழுது துன்பப்படுத்தினதுபோல, இப்பொழுதும் நடந்துவருகிறது.

30அதைக்குறித்து வேதம் என்ன சொல்லுகிறது: அடிமையானவளின் மகன் சுயாதீனமுள்ளவளுடைய குமாரனோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை; ஆகையால் அடிமையானவளையும், அவளுடைய மகனையும் புறம்பே தள்ளு என்று சொல்லுகிறது.

31இப்படியிருக்க, சகோதரரே, நாம் அடிமையானவளுக்குப் பிள்ளைகளாயிராமல், சுயாதீனமுள்ளவளுக்கே பிள்ளைகளாயிருக்கிறோம்.

தனிவாசிப்பு

எசேக்கியேல் 31

முழு அதிகாரம் ›

1பதினோராம் வருஷம் மூன்றாம் மாதம் முதலாந்தேதியிலே கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

2மனுபுத்திரனே, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனோடும் அவனுடைய திரளான ஜனத்தோடும் நீ சொல்லவேண்டியது என்னவென்றால்: நீ உன் மகத்துவத்திலே யாருக்கு ஒப்பாயிருக்கிறாய்?

3இதோ, அசீரியன் லீபனோனிலே அலங்காரக் கொப்புகளோடும், நிழலிடும் தழைகளோடும், வளர்ந்தோங்கிய கேதுரு விருட்சமாயிருந்தான்; அதின் கிளைகளின் தழைகளுக்குள்ளே அதின் நுனிக்கொழுந்து உயர்ந்திருந்தது.

4தண்ணீர்கள் அதைப் பெரிதும், ஆழம் அதை உயர்த்தியும் ஆக்கின; அதின் ஆறுகள் அதின் அடிமரத்தைச் சுற்றிலும் ஓடின; தன் நீர்க்கால்களை வெளியின் விருட்சங்களுக்கெல்லாம் பாயவிட்டது.

5ஆகையால் வெளியின் சகலவிருட்சங்களிலும் அது மிகவும் உயர்ந்தது; அது துளிர்விடுகையில் திரளான தண்ணீரினால் அதின் கிளைகள் பெருகி, அதின் கொப்புகள் நீளமாயின.

6அதின் கொப்புகளில் ஆகாயத்தின் பறவைகளெல்லாம் கூடுகட்டின; அதின் கொப்புகளின்கீழ் வெளியின் மிருகங்களெல்லாம் குட்டிகளைப்போட்டன; பெரிதான சகலஜாதிகளும் அதின் நிழலிலே குடியிருந்தார்கள்.

7அப்படியே அதின் வேர் திரளான தண்ணீர்களருகே இருந்ததினால் அது தன் செழிப்பினாலும் தன் கொப்புகளின் நீளத்தினாலும் அலங்காரமாயிருந்தது.

8தேவனுடைய வனத்திலுள்ள கேதுருக்கள் அதை மறைக்கக்கூடாதிருந்தது; தேவதாரு விருட்சங்கள் அதின் கொப்புகளுக்குச் சமானமல்ல; அர்மோன் மரங்கள் அதின் கிளைகளுக்கு நிகரல்ல; தேவனுடைய வனத்திலுள்ள ஒரு விருட்சமும் அலங்காரத்திலே அதற்கு ஒப்பல்ல.

9அதின் கிளைகளின் திரளினால் அதை அலங்கரித்தேன்; தேவனுடைய வனமாகிய ஏதேனின் விருட்சங்களெல்லாம் அதின்பேரில் பொறாமைகொண்டன.

10ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அது தன் வளர்த்தியிலே மேட்டிமையாகி, கொப்புகளின் தழைகளுக்குள்ளே தன் நுனிக்கிளையை ஓங்கவிட்டபடியினாலும், அதின் இருதயம் தன் மேட்டிமையினால் உயர்ந்துபோனபடியினாலும்,

11நான் அதை ஜாதிகளில் மகா வல்லமையுள்ளவன் கையிலே ஒப்புக்கொடுத்தேன்; அவன் தனக்கு இஷ்டமானபடி அதற்குச் செய்வான்; அதினுடைய அக்கிரமத்தினிமித்தம் அதைத் தள்ளிப்போட்டேன்.

12ஜாதிகளில் வல்லவராகிய அந்நிய தேசத்தார் அதை வெட்டிப்போட்டு, விட்டுப்போனார்கள்; அதின் கொப்புகள் மலைகளின்மேலும் சகல பள்ளத்தாக்குகளிலும் விழுந்தன; அதின் கிளைகள் தேசத்தினுடைய எல்லா ஆறுகளினருகே முறிந்தன; பூமியிலுள்ள ஜனங்களெல்லாரும் அதின் நிழலைவிட்டுக் கலைந்து போனார்கள்.

13விழுந்துகிடக்கிற அதின்மேல் ஆகாயத்துப் பறவைகளெல்லாம் தாபரித்தன; அதின் கொம்புகளின்மேல் வெளியின் மிருகங்களெல்லாம் தங்கின.

14தண்ணீரின் ஓரமாய் வளருகிற எந்த விருட்சங்களும் தங்கள் உயரத்தினாலே மேட்டிமை கொள்ளாமலும், தங்கள் கொப்புகளின் தழைக்குள்ளே தங்கள் நுனிக்கிளையை ஓங்கவிடாமலும், தண்ணீரைக் குடிக்கிற எந்த மரங்களும், தங்கள் உயர்த்தியினாலே தங்கள்மேல் நம்பிக்கைவைக்காமலும் இருக்கும்பொருட்டு இப்படிச் செய்வேன்; மனுபுத்திரரின் நடுவே அவர்கள் எல்லாரும் குழியில் இறங்குகிறவர்களோடேகூட மரணத்துக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு, பூமியின் தாழ்விடங்களில் போனார்கள்.

15கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அவன் பாதாளத்தில் இறங்குகிற நாளிலே புலம்பலை வருவித்தேன்; நான் அவனிமித்தம் ஆழத்தை மூடிப்போட்டு, திரளான தண்ணீர்கள் ஓடாதபடிக்கு அதின் ஆறுகளை அடைத்து, அவனிமித்தம் லீபனோனை இருளடையப்பண்ணினேன்; வெளியின் விருட்சங்களெல்லாம் அவனிமித்தம் பட்டுப்போயின.

16நான் அவனைக் குழியில் இறங்குகிறவர்களோடேகூடப் பாதாளத்தில் இறங்கப்பண்ணுகையில், அவன் விழுகிற சத்தத்தினால் ஜாதிகளை அதிரப்பண்ணினேன்; அப்பொழுது பூமியின் தாழ்விடங்களில் ஏதேனின் விருட்சங்களும். லீபனோனின் மேன்மையான சிறந்த விருட்சங்களும், தண்ணீர் குடிக்கும் சகல மரங்களும் ஆறுதல் அடைந்தன.

17அவனோடேகூட இவர்களும், ஜாதிகளின் நடுவே அவன் நிழலில் குடியிருந்து அவனுக்குப் புயபலமாயிருந்தவர்களும், பட்டயத்தால் வெட்டுண்டவர்களண்டையிலே பாதாளத்தில் இறங்கினார்கள்.

18இப்படிப்பட்ட மகிமையிலும் மகத்துவத்திலும் ஏதேனின் விருட்சங்களில் நீ எதற்கு ஒப்பானவன்? ஏதேனின் விருட்சங்களோடேகூட நீயும் பூமியின் தாழ்விடங்களில் இறக்கப்பட்டு, பட்டயத்தாலே வெட்டுண்டவர்களோடேகூட விருத்தசேதனமில்லாதவர்களின் நடுவிலே கிடப்பாய்; பார்வோனும் அவன் கூட்டமும் இதுவே என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

1தேவனே, புறஜாதியார் உமது சுதந்தரத்தில் வந்து, உமது பரிசுத்த ஆலயத்தைத் தீட்டுப்படுத்தி, எருசலேமை மண்மேடுகளாக்கினார்கள்.

2உமது ஊழியக்காரரின் பிரேதங்களை ஆகாயத்துப் பறவைகளுக்கும், உமது பரிசுத்தவான்களின் மாம்சத்தைப் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகக் கொடுத்தார்கள்.

3எருசலேமைச் சுற்றிலும் அவர்களுடைய இரத்தத்தை தண்ணீரைப்போலச் சிந்தினார்கள்; அவர்களை அடக்கம்பண்ணுவாருமில்லை.

4எங்கள் அயலாருக்கு நிந்தையும், எங்கள் சுற்றுப்புறத்தாருக்குப் பரியாசமும் சக்கந்தமுமானோம்.

5எதுவரைக்கும் கர்த்தாவே! நீர் என்றைக்கும் கோபமாயிருப்பீரோ? உம்முடைய எரிச்சல் அக்கினியைப் போல் எரியுமோ?

6உம்மை அறியாத ஜாதிகள்மேலும், உமது நாமத்தைத் தொழுதுகொள்ளாத ராஜ்யங்கள்மேலும், உம்முடைய உக்கிரத்தை ஊற்றிவிடும்.

7அவர்கள் யாக்கோபைப் பட்சித்து, அவன் குடியிருப்பைப் பாழாக்கினார்களே.

8பூர்வகாலத்து அக்கிரமங்களை எங்களுக்கு விரோதமாக நினையாதேயும்; உம்முடைய இரக்கங்கள் சீக்கிரமாய் எங்களுக்கு நேரிடுவதாக; நாங்கள் மிகவும் தாழ்த்தப்பட்டுப்போனோம்.

9எங்களை இரட்சிக்கும் தேவனே, நீர் உமது நாமத்தின் மகிமையினிமித்தம் எங்களுக்கு உதவிசெய்து, உமது நாமத்தினிமித்தம் எங்களை விடுவித்து, எங்கள் பாவங்களை நிவிர்த்தியாக்கும்.

10அவர்களுடைய தேவன் எங்கே என்று புறஜாதிகள் சொல்வானேன்? உமது ஊழியக்காரருடைய சிந்துண்ட இரத்தத்தின் பழிவாங்குதல் ஜாதிகளுக்குள்ளே எங்கள் கண்களுக்கு முன்பாக விளங்கும்படி செய்யும்.

11கட்டுண்டவனுடைய பெருமூச்சு உமக்கு முன்பாக வரட்டும்; கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களை உமது புயபலத்தினால் உயிரோடே காத்தருளும்.

12ஆண்டவரே, எங்கள் அயலார் உம்மை நிந்தித்த நிந்தையை, ஏழத்தனையாக அவர்கள் மடியிலே திரும்பப்பண்ணும்.

13அப்பொழுது, உம்முடைய ஜனங்களும் உம்முடைய மேய்ச்சலின் ஆடுகளுமாகிய நாங்கள் உம்மை என்றென்றைக்கும் புகழுவோம்; தலைமுறை தலைமுறையாக உமது துதியைச் சொல்லிவருவோம்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com