1தாவீது மரணமடையும் காலம் சமீபித்தபோது, அவன் தன் குமாரனாகிய சாலொமோனுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது:
2நான் பூலோகத்தார் யாவரும் போகிறவழியே போகிறேன்; நீ திடன்கொண்டு புருஷனாயிரு.
3நீ என்ன செய்தாலும், நீ எங்கே போனாலும், எல்லாவற்றிலும் புத்திமானாயிருக்கிறதற்கும், கர்த்தர் என்னைக் குறித்து: உன் பிள்ளைகள் தங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் எனக்கு முன்பாக உண்மையாய் நடக்கும்படிக்குத் தங்கள் தங்கள் வழியைக் காத்துக்கொண்டால், இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கத்தக்க புருஷன் உனக்கு இல்லாமற்போவதில்லை என்று சொன்ன தம்முடைய வார்த்தையைத் திடப்படுத்துகிறதற்கும்,
4மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி, நீ உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளையும், கற்பனைகளையும், நியாயங்களையும், சாட்சிகளையும் கைக்கொள்ள, அவர் வழிகளில் நடக்கும்படிக்கு அவருடைய காவலைக் காப்பாயாக.
5செருயாவின் குமாரனாகிய யோவாப், இஸ்ரவேலின் இரண்டு சேனாபதிகளாகிய நேரின் குமாரன் அப்னேருக்கும், ஏத்தேரின் குமாரன் அமாசாவுக்கும் செய்த காரியத்தினால் எனக்குச் செய்த குற்றத்தை நீ அறிந்திருக்கிறாயே; அவன் அவர்களைக் கொன்று, சமாதானகாலத்திலே யுத்தகாலத்து இரத்தத்தைச் சிந்தி, யுத்தகாலத்து இரத்தத்தைத் தன் அரையிலுள்ள கச்சையிலும் தன் கால்களில் இருந்த பாதரட்சையிலும் வடியவிட்டானே.
6ஆகையால் உன் யுக்தியின்படியே நீ செய்து, அவனுடைய நரைமயிர் சமாதானமாய்ப் பாதாளத்தில் இறங்கவொட்டாதிரு.
7கீலேயாத்தியனான பர்சிலாயின் குமாரருக்குத் தயைசெய்வாயாக; அவர்கள் உன் பந்தியிலே சாப்பிடுகிறவர்களுடன் இருப்பார்களாக; உன் சகோதரனாகிய அப்சலோமுக்கு முன்பாக நான் ஓடிப்போகையில், அவர்கள் என்னை ஆதரித்தார்கள்.
8மேலும் பகூரிம் ஊரானான பென்யமீனனாகிய கேராவின் மகன் சீமேயி உன்னிடத்தில் இருக்கிறான்; நான் மக்னாயீமுக்குப் போகிற நாளிலே, அவன் என்னைக் கொடிய தூஷணமாய்த் தூஷித்தான்; ஆனாலும் அவன் யோர்தானிலே எனக்கு எதிர்கொண்டுவந்தபடியினால்: நான் உன்னைப் பட்டயத்தாலே கொன்றுபோடுவதில்லை என்று கர்த்தர்மேல் அவனுக்கு ஆணையிட்டுக்கொடுத்தேன்.
9ஆகிலும் நீ அவனைக் குற்றமற்றவன் என்று எண்ணாதே; நீ புத்திமான்; அவனுடைய நரைமயிரை இரத்தத்துடன் பாதாளத்தில் இறங்கப்பண்ண, நீ அவனுக்குச் செய்யவேண்டியதை அறிவாய் என்றான்.
10பின்பு தாவீது தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தாவீதின் நகரத்தில் அடக்கம் பண்ணப்பட்டான்.
11தாவீது இஸ்ரவேலை அரசாண்ட நாட்கள் நாற்பது வருஷம்; அவன் எப்ரோனில் ஏழு வருஷமும், எருசலேமில் முப்பத்துமூன்று வருஷமும் அரசாண்டான்.
12சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீதுடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தான்; அவன் ராஜ்யபாரம் மிகவும் ஸ்திரப்பட்டது.
13ஆகீத்தின் குமாரனாகிய அதோனியா சாலொமோனின் தாயாகிய பத்சேபாளிடத்தில் வந்தான். நீ சமாதானமாய் வருகிறாயா என்று அவள் கேட்டதற்கு: சமாதானமாய்த்தான் வருகிறேன் என்றான்.
14பின்பு அவன்: உம்மோடே நான் பேசவேண்டிய ஒரு காரியம் இருக்கிறது என்றான். அதற்கு அவள்: சொல் என்றாள்.
15அப்பொழுது அவன்: ராஜ்யம் என்னுடையதாயிருந்தது என்றும், நான் அரசாளுகிறதற்கு இஸ்ரவேலரெல்லாரும் என்மேல் நோக்கமாய் இருந்தார்கள் என்றும் நீர் அறிவீர்; ஆனாலும் ராஜ்யபாரம் என்னைவிட்டுத் தாண்டி, என் சகோதரனுக்கு ஆயிற்று; கர்த்தரால் அது அவருக்குக் கிடைத்தது.
16இப்பொழுது நான் உம்மிடத்தில் ஒரு மன்றாட்டைக் கேட்கிறேன்; அதை எனக்கு மறுக்கவேண்டாம் என்றான். அவள்: சொல் என்றாள்.
17அப்பொழுது அவன்: ராஜாவாகிய சாலொமோன் உம்முடைய சொல்லை மறுப்பதில்லை; சூனேம் ஊராளாகிய அபிஷாகை எனக்கு அவர் விவாகம்பண்ணிக்கொடுக்க, அவரோடே பேசும்படி வேண்டுகிறேன் என்றான்.
18அதற்குப் பத்சேபாள்; நல்லது, நான் உனக்காக ராஜாவிடத்தில் பேசுவேன் என்றாள்.
19பத்சேபாள் அதோனியாவுக்காக ராஜாவாகிய சாலொமோனிடத்தில் பேசும்படி போனாள்; அப்பொழுது ராஜா எழுந்திருந்து, அவளுக்கு எதிர்கொண்டு வந்து அவளை வணங்கி, தன் சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து, ராஜாவின் தாயார் தன் வலதுபுறமாக உட்கார அவளுக்கு ஒரு ஆசனத்தை வைத்தான்.
20அப்பொழுது அவள்: நான் உம்மை ஒரு சிறிய மன்றாட்டைக் கேட்க விரும்புகிறேன்; எனக்கு அதை மறுக்க வேண்டாம் என்றாள். அதற்கு ராஜா: என் தாயாரே, கேளும்; நான் உமக்கு மறுப்பதில்லை என்றான்.
21அப்பொழுது அவள்: சூனேம் ஊராளாகிய அபிஷாகை உம்முடைய சகோதரனாகிய அதோனியாவுக்கு விவாகம்பண்ணிக்கொடுக்கவேண்டும் என்றாள்.
22ராஜாவாகிய சாலொமோன் தன் தாயாருக்குப் பிரதியுத்தரமாக: நீர் சூனேம் ஊராளாகிய அபிஷாகை அதோனியாவுக்குக் கேட்பானேன்? அப்படியானால் ராஜ்யபாரத்தையும் அவனுக்குக் கேளும்; அவன் எனக்கு மூத்த சகோதரன்; அவனுக்கும் ஆசாரியனாகிய அபியத்தாருக்கும் செரூயாவின் குமாரன் யோவாபுக்குமே அதைக் கேளும் என்றான்.
23பின்பு சாலொமோன் ராஜா: அதோனியா இந்த வார்த்தையைத் தன் பிராணனுக்குச் சேதமாகச் சொல்லாதிருந்தால், தேவன் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்று கர்த்தர்மேல் ஆணையிட்டு,
24இப்போதும் இன்றைக்கு அதோனியா கொலையுண்பான் என்று என்னைத் திடப்படுத்தினவரும், என்னை என் தகப்பனாகிய தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருக்கப்பண்ணி, தாம் சொன்னபடி எனக்கு வீட்டைக் கட்டுவித்தவருமாகிய கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று சொல்லி,
25ராஜாவாகிய சாலொமோன் யோய்தாவின் குமாரன் பெனாயாவுக்குக் கட்டளைகொடுத்து அவனை அனுப்பினான்; இவன் அவன்மேல் விழுந்து அவனைக் கொன்றுபோட்டான்.
26ராஜா: ஆசாரியனாகிய அபியத்தாரை நோக்கி: நீ உன் நிலங்கள் இருக்கிற ஆனதோத்திற்குப் போய்விடு; நீ மரணத்திற்குப் பாத்திரவானாயிருந்தும், நீ என் தகப்பனாகிய தாவீதுக்கு முன்பாகக் கர்த்தராகிய ஆண்டவருடைய பெட்டியைச் சுமந்தபடியினாலும், என் தகப்பன் அநுபவித்த உபத்திரவத்தையெல்லாம் நீ கூட அநுபவித்தபடியினாலும், இன்றைய தினம் நான் உன்னைக் கொலை செய்யமாட்டேன் என்றான்.
27அப்படியே கர்த்தர் சீலோவிலே ஏலியின் வீட்டாரைக்குறித்துச் சொன்ன வார்த்தையை நிறைவேற்றும்படியாக, சாலொமோன் அபியத்தாரைக் கர்த்தருடைய ஆசாரியனாயிராதபடிக்குத் தள்ளிப்போட்டான்.
28நடந்த இந்தச் செய்தி யோவாபுக்கு வந்தபோது, அவன் கர்த்தருடைய கூடாரத்திற்கு ஓடிப்போய், பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டான்; யோவாப் அப்சலோமின் பட்சம் சாயாதவனாயிருந்தும், அதோனியாவின் பட்சம் சாய்ந்திருந்தான்.
29யோவாப் கர்த்தரின் கூடாரத்திற்கு ஓடிப்போனான் என்றும், இதோ, பலிபீடத்தண்டையில் நிற்கிறான் என்றும், ராஜாவாகிய சாலொமோனுக்கு அறிவிக்கப்பட்டபோது, சாலொமோன் யோய்தாவின் குமாரனாகிய பெனாயாவை அனுப்பி, நீ போய் அவன்மேல் விழு என்றான்.
30பெனாயா கர்த்தரின் கூடாரத்திற்குப் போய், அவனைப் பார்த்து: வெளியே வா என்று ராஜா சொல்லுகிறார் என்றான். அதற்கு அவன்: நான் வரமாட்டேன்; இங்கேயே சாவேன் என்றான்; ஆகையால் பெனாயா ராஜாவினிடத்தில் போய், யோவாப் இன்னபடி சொல்லி, இன்னபடி எனக்கு மறுஉத்தரவு கொடுத்தான் என்று மறுசெய்தி சொன்னான்.
31அப்பொழுது ராஜா அவனை நோக்கி: அவன் சொன்னபடியே நீ செய்து, அவனைக் கொன்று, அடக்கம்பண்ணி, இவ்விதமாய் யோவாப் முகாந்தரமில்லாமல் சிந்தின இரத்தத்தை என்னைவிட்டும் என் பிதாவின் வீட்டைவிட்டும் விலக்கிப்போடு.
32அவன் தன்னைப்பார்க்கிலும் நீதியும் நற்குணமுமுள்ள இரண்டு பேராகிய நேரின் குமாரன் அப்னேர் என்னும் இஸ்ரவேலின் படைத்தலைவன்மேலும், ஏதேரின் குமாரன் அமாசா என்னும் யூதாவின் படைத்தலைவன்மேலும் விழுந்து, என் தகப்பனாகிய தாவீதுக்குத் தெரியாமல் அவர்களைப் பட்டயத்தால் கொன்ற அவனுடைய இரத்தப்பழியைக் கர்த்தர் அவனுடைய தலையின்மேல் திரும்பப்பண்ணுவாராக.
33இப்படியே அவர்களுடைய இரத்தப் பழி என்றும் யோவாபுடைய தலையின்மேலும், அவன் சந்ததியாரின் தலையின்மேலும் திரும்பவும், தாவீதுக்கும் அவர் சந்ததியாருக்கும் அவர் வீட்டாருக்கும் அவர் சிங்காசனத்திற்கும் என்றென்றைக்கும் கர்த்தராலே சமாதானம் உண்டாயிருக்கவும்கடவது என்றான்.
34அப்படியே யோய்தாவின் குமாரன் பெனாயா போய், அவன்மேல் விழுந்து அவனைக் கொன்றுபோட்டான்; அவன் வனாந்தரத்திலிருக்கிற தன்னுடைய வீட்டிலே அடக்கம்பண்ணப்பட்டான்.
35அவனுக்குப் பதிலாக ராஜா யோய்தாவின் குமாரன் பெனாயாவை இராணுவத்தின்மேலும், ஆசாரியனாகிய சாதோக்கை அபியத்தாரின் ஸ்தானத்திலும் வைத்தான்.
36பின்பு ராஜா சீமேயியை அழைப்பித்து, அவனை நோக்கி: நீ எருசலேமிலே உனக்கு ஒரு வீட்டைக்கட்டி, அங்கேயிருந்து எங்கேயாவது வெளியே போகாமல், அங்கேதானே குடியிரு.
37நீ வெளியே போய்க் கீதரோன் ஆற்றைக் கடக்கும் நாளில், நீ சாகவே சாவாய்; அப்பொழுது உன் இரத்தப்பழி உன் தலையின்மேல் இருக்கும் என்பதை நீ நிச்சயமாய் அறிந்துகொள் என்றான்.
38சீமேயி ராஜாவைப் பார்த்து: அது நல்ல வார்த்தை; ராஜாவாகிய என் ஆண்டவன் சொன்னபடியே, உமது அடியானாகிய நான் செய்வேன் என்று சொல்லி, சீமேயி அநேகநாள் எருசலேமிலே குடியிருந்தான்.
39மூன்று வருஷம் சென்றபோது, சீமேயியின் வேலைக்காரர் இரண்டுபேர் மாக்காவின் குமாரனாகிய ஆகீஸ் என்னும் காத்தின் ராஜாவினிடத்துக்கு ஓடிப்போனார்கள்; உன் வேலைக்காரர் காத் ஊரில் இருக்கிறார்கள் என்று சீமேயிக்கு அறிவித்தார்கள்.
40அப்பொழுது சீமேயி எழுந்து, தன் கழுதையின்மேல் சேணம் வைத்து, தன் வேலைக்காரரைத் தேட, காத் ஊரிலிருக்கிற ஆகீசிடத்துக்குப் புறப்பட்டுப் போனான்; இப்படிச் சீமேயி போய், தன் வேலைக்காரரைக் காத் ஊரிலிருந்து கொண்டுவந்தான்.
41சீமேயி எருசலேமிலிருந்து காத் ஊருக்குப் போய், திரும்பி வந்தான் என்று சாலொமோனுக்கு அறிவிக்கப்பட்டபோது,
42ராஜா சீமேயியை அழைப்பித்து: நீ வெளியே புறப்பட்டு எங்கேயாவது போகிற நாளிலே சாகவேசாவாய் என்பதை நீ நிச்சயமாய் அறிந்துகொள் என்று நான் உன்னைக் கர்த்தர்மேல் ஆணையிடச் செய்து, உனக்குத் திடச்சாட்சியாகச் சொல்லியிருக்க, அதற்கு நீ: நான் கேட்ட வார்த்தை நல்லதென்று சொல்லவில்லையா?
43நீ கர்த்தரின் ஆணையையும், நான் உனக்குக் கற்பித்த கட்டளையையும் கைக்கொள்ளாதே போனதென்ன? என்று சொல்லி,
44பின்னும் ராஜா சீமேயியைப் பார்த்து: நீ என் தகப்பனாகிய தாவீதுக்குச் செய்ததும் உன் மனதுக்குத் தெரிந்திருக்கிறதுமான எல்லாப் பொல்லாப்பையும் அறிந்திருக்கிறாய்; ஆகையால் கர்த்தர் உன் பொல்லாப்பை உன் தலையின்மேல் திரும்பப்பண்ணுவார்.
45ராஜாவாகிய சாலொமோனோ ஆசீர்வதிக்கப்பட்டவனாயிருப்பான்; தாவீதின் சிங்காசனம் என்றைக்கும் கர்த்தருக்கு முன்பாக உறுதியாயிருக்கும் என்று சொல்லி,
46ராஜா யோய்தாவின் குமாரனாகிய பெனாயாவுக்குக் கட்டளை கொடுத்தான்; அவன் வெளியே போய், அவன்மேல் விழுந்து அவனைக் கொன்றுபோட்டான். ராஜ்யபாரம் சாலொமோனின் கையிலே ஸ்திரப்பட்டது.
1சகோதரரே, ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள்; நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக்குறித்து எச்சரிக்கையாயிரு.
2ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்.
3ஒருவன், தான் ஒன்றுமில்லாதிருந்தும், தன்னை ஒரு பொருட்டென்று எண்ணினால், தன்னைத்தானே வஞ்சிக்கிறவனாவான்.
4அவனவன் தன்தன் சுயகிரியையைச் சோதித்துப்பார்க்கக்கடவன்; அப்பொழுது மற்றவனைப் பார்க்கும்போதல்ல, தன்னையே பார்க்கும்போது மேன்மைபாராட்ட அவனுக்கு இடமுண்டாகும்.
5அவனவன் தன்தன் பாரத்தைச் சுமப்பானே.
6மேலும், திருவசனத்தில் உபதேசிக்கப்படுகிறவன் உபதேசிக்கிறவனுக்குச் சகல நன்மைகளிலும் பகிர்ந்துகொடுக்கக்கடவன்.
7மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.
8தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்.
9நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.
10ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்.
11என் கையெழுத்தாய் எவ்வளவு எழுதினேனென்று பாருங்கள்.
12மாம்சத்தின்படி நல்வேஷமாய்க் காணப்பட விரும்புகிறவர்கள் எவர்களோ, அவர்கள் தாங்கள் கிறிஸ்துவினுடைய சிலுவையினிமித்தம் துன்பப்படாதபடிக்கே உங்களை விருத்தசேதனம் பண்ணிக்கொள்ளக் கட்டாயம்பண்ணுகிறார்கள்.
13விருத்தசேதனம் அடைந்திருக்கிற அவர்களும் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளாமலிருக்கிறார்கள்; அப்படியிருந்தும், அவர்கள் உங்கள் மாம்சத்தைக்குறித்து மேன்மைபாராட்டும்படிக்கு நீங்கள் விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளவேண்டுமென்று விரும்புகிறார்கள்.
14நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக்குறித்தேயல்லாமல் வேறொன்றையுங்குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக; அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன்.
15கிறிஸ்து இயேசுவுக்குள் விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை; புது சிருஷ்டியே காரியம்.
16இந்தப் பிரமாணத்தின்படி நடந்துவருகிறவர்கள் எவர்களோ, அவர்களுக்கும், தேவனுடைய இஸ்ரவேலருக்கும், சமாதானமும் இரக்கமும் உண்டாயிருப்பதாக.
17இனிமேல் ஒருவனும் எனக்கு வருத்தம் உண்டாக்காதிருப்பானாக; கர்த்தராகிய இயேசுவினுடைய அச்சடையாளங்களை நான் என்சரீரத்திலே தரித்துக்கொண்டிருக்கிறேன்.
18சகோதரரே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியுடனேகூட இருப்பதாக. ஆமென்.
1கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
2மனுபுத்திரனே, நீ உன் ஜனத்தின்புத்திரரோடே பேசி, அவர்களோடே சொல்லவேண்டியதாவது: நான் தேசத்தின்மேல் பட்டயத்தை வரப்பண்ணுகையில் தேசத்தின் ஜனம் தங்கள் எல்லைகளிலுள்ள ஒருவனை அழைத்து, அவனைத் தங்களுக்குக் காவற்காரனாக வைத்தபின்பு,
3இவன் தேசத்தின்மேல் பட்டயம் வருவதைக்கண்டு, எக்காளம் ஊதி, ஜனத்தை எச்சரிக்கும்போது,
4எக்காளத்தின் சத்தத்தைக் கேட்கிறவன் அதைக் கேட்டும், எச்சரிக்கையாயிராமல், பட்டயம் வந்து அவனை வாரிக்கொள்ளுகிறது உண்டானால், அவனுடைய இரத்தப்பழி அவன் தலையின்மேல் சுமரும்.
5அவன் எக்காளத்தின் சத்தத்தைக் கேட்டும், எச்சரிக்கையாயிருக்கவில்லை; அவனுடைய இரத்தப்பழி அவன் பேரிலே சுமரும்; எச்சரிக்கையாயிருக்கிறவனோ தன் ஜீவனைத் தப்புவித்துக்கொள்ளுவான்.
6காவற்காரன் பட்டயம் வருவதைக் கண்டும், அவன் எக்காளம் ஊதாமலும் ஜனங்கள் எச்சரிக்கப்படாமலும், பட்டயம் வந்து அவர்களில் யாதொருவனை வாரிக்கொள்ளுகிறது உண்டானால், அவன் தன் அக்கிரமத்திலே வாரிக்கொள்ளப்பட்டான்; ஆனாலும் அவன் இரத்தப்பழியைக் காவற்காரன் கையிலே கேட்பேன்.
7மனுபுத்திரனே, நான் உன்னை இஸ்ரவேல் வம்சத்தாருக்குக் காவற்காரனாக வைத்தேன்; ஆகையால் நீ என் வாயினாலே வார்த்தையைக் கேட்டு, என் நாமத்தினாலே அவர்களை எச்சரிப்பாயாக.
8நான் துன்மார்க்கனை நோக்கி: துன்மார்க்கனே, நீ சாகவே சாவாய் என்று சொல்லுகையில், நீ துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கத்தில் இராதபடி எச்சரிக்கத்தக்கதாக அதை அவனுக்குச் சொல்லாமற்போனால், அந்தத் துன்மார்க்கன் தன் அக்கிரமத்திலே சாவான்: ஆனாலும் அவன் இரத்தப்பழியை உன் கையிலே கேட்பேன்.
9துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பும்படி நீ அவனை எச்சரித்தும், அவன் தன் வழியைவிட்டுத் திரும்பாமற்போனால், அவன் தன் அக்கிரமத்திலே சாவான்; நீயோ உன் ஆத்துமாவைத் தப்புவிப்பாய்.
10மனுபுத்திரனே, நீ இஸ்ரவேல் வம்சத்தாரை நோக்கி: எங்கள் துரோகங்களும் எங்கள் பாவங்களும் எங்கள்மேல் இருக்கிறது, நாங்கள் சோர்ந்துபோகிறோம், நாங்கள் பிழைப்பது எப்படியென்று நீங்கள் சொல்லுகிறீர்கள்.
11கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: நான் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல், துன்மார்க்கன் தன் வழியை விட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள் பொல்லாத வழிகளை விட்டுத் திரும்புங்கள், திரும்புங்கள்; நீங்கள் ஏன் சாகவேண்டும் என்கிறார் என்று அவர்களோடே சொல்லு.
12மனுபுத்திரனே, நீ உன் ஜனத்தின் புத்திரரை நோக்கி: நீதிமான் துரோகம்பண்ணுகிற நாளிலே அவனுடைய நீதி அவனைத் தப்புவிப்பதில்லை; துன்மார்க்கன் தன் துன்மார்க்கத்தைவிட்டுத் திரும்புகிற நாளிலே அவன் தன் அக்கிரமத்தினால் விழுந்து போவதுமில்லை; நீதிமான் பாவஞ்செய்கிற நாளிலே தன் நீதியினால் பிழைப்பதுமில்லை.
13பிழைக்கவே பிழைப்பாய் என்று நான் நீதிமானுக்குச் சொல்லும்போது, அவன் தன் நீதியை நம்பி, அநியாயஞ்செய்தால், அவனுடைய நீதியில் ஒன்றும் நினைக்கப்படுவதில்லை, அவன் செய்த தன் அநியாயத்திலே சாவான்.
14பின்னும் சாகவே சாவாய் என்று நான் துன்மார்க்கனுக்குச் சொல்லும்போது, அவன் தன் பாவத்தைவிட்டுத் திரும்பி, நியாயமும் நீதியுஞ்செய்து,
15துன்மார்க்கன் தான் வாங்கின அடைமானத்தையும் தான் கொள்ளையிட்ட பொருளையும் திரும்பக் கொடுத்துவிட்டு, அநியாயம் செய்யாதபடி ஜீவப்பிரமாணங்களில் நடந்தால், அவன் சாகாமல் பிழைக்கவே பிழைப்பான்.
16அவன் செய்த அவனுடைய எல்லாப் பாவங்களும் அவனுக்கு விரோதமாக நினைக்கப்படுவதில்லை; அவன் நியாயமும் நீதியும் செய்தான், பிழைக்கவே பிழைப்பான் என்று சொல்லு.
17உன் ஜனத்தின் புத்திரரோ, ஆண்டவருடைய வழி செம்மையானதல்ல என்கிறார்கள்; அவர்களுடைய வழியே செம்மையானதல்ல.
18நீதிமான் தன் நீதியைவிட்டுத்திரும்பி, அநியாயஞ்செய்தால், அவன் அதினால் சாவான்.
19துன்மார்க்கன் தன் அக்கிரமத்தைவிட்டுத் திரும்பி, நியாயமும் நீதியும் செய்தால், அவன் அவைகளினால் பிழைப்பான்.
20நீங்களோ, ஆண்டவருடைய வழி செம்மையானதல்ல என்கிறீர்கள், இஸ்ரவேல் வீட்டாரே, நான் உங்களில் ஒவ்வொருவனையும் அவனவன் வழிகளின்படியே நியாயந்தீர்ப்பேன் என்று சொல் என்றார்.
21எங்கள் சிறையிருப்பின் பன்னிரண்டாம் வருஷம் பத்தாம் மாதம் ஐந்தாந்தேதியிலே எருசலேமிலிருந்து தப்பின ஒருவன் என்னிடத்தில் வந்து: நகரம் அழிக்கப்பட்டது என்றான்.
22தப்பினவன் வருகிறதற்கு முந்தின சாயங்காலத்திலே கர்த்தருடைய கை என்மேல் அமர்ந்து, அவன் காலையில் என்னிடத்தில் வருமட்டும் என் வாயைத் திறந்திருக்கப்பண்ணிற்று; என் வாய் திறக்கப்பட்டது, பின்பு நான் மௌனமாயிருக்கவில்லை.
23அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
24மனுபுத்திரனே, இஸ்ரவேல் தேசத்தின் பாழான இடங்களிலுள்ள குடிகள்: ஆபிரகாம் ஒருவனாயிருந்து, தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டான்; நாங்கள் அநேகராயிருக்கிறோம், எங்களுக்கு இந்த தேசம் சுதந்தரமாகக் கொடுக்கப்பட்டது என்று சொல்லுகிறார்கள்.
25ஆகையால், நீ அவர்களை நோக்கி: நீங்கள் இரத்தத்தோடே கூடியதைத் தின்று, உங்கள் நரகலான விக்கிரகங்களுக்கு நேராக உங்கள் கண்களை ஏறெடுத்து, இரத்தத்தைச் சிந்தியிருக்கிறீர்கள், நீங்கள் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்வீர்களோ?
26நீங்கள் உங்கள் பட்டயத்தை நம்பிக்கொண்டு, அருவருப்பானதைச் செய்து, உங்களில் அவனவன் தன்தன் அயலான் மனைவியைத் தீட்டுப்படுத்துகிறீர்கள்; நீங்கள் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்வீர்களோ என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல்லு.
27நீ அவர்களை நோக்கி: பாழான இடங்களில் இருக்கிறவர்கள் பட்டயத்தால் விழுவார்கள்; வெளிகளில் இருக்கிறவனை மிருகங்களுக்கு இரையாக ஒப்புக்கொடுப்பேன்; கோட்டைகளிலும் கெபிகளிலும் இருக்கிறவர்கள் கொள்ளைநோயால் சாவார்கள்.
28நான் தேசத்தைப் பாழும் அவாந்தரமுமாக்குவேன்; அப்பொழுது அதினுடைய பெலத்தின் பெருமை ஒழிந்துபோகும்; அப்பொழுது இஸ்ரவேலின் மலைகள் கடந்துபோவாரில்லாமல் அவாந்தரமாய்க்கிடக்கும்.
29அவர்கள் செய்த அவர்களுடைய எல்லா அருவருப்புக்களினிமித்தமும் நான் தேசத்தைப் பாழும் அவாந்தரமுமாக்கும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள், இதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல்லு.
30மேலும் மனுபுத்திரனே, உன் ஜனத்தின் புத்திரர் சுவர் ஓரங்களிலும் வீட்டுவாசல்களிலும் உன்னைக்குறித்துப்பேசி, கர்த்தரிடத்திலிருந்து புறப்பட்ட வார்த்தை என்னவென்று கேட்போம் வாருங்கள் என்று ஒருவரோடொருவரும் சகோதரனோடே சகோதரனும் சொல்லி,
31ஜனங்கள் கூடிவருகிற வழக்கத்தின்படி உன்னிடத்தில் வந்து, உனக்கு முன்பாக என் ஜனங்கள்போல் உட்கார்ந்து, உன் வார்த்தைகளைக் கேட்கிறார்கள்; ஆனாலும் அவர்கள் அவைகளின்படி செய்கிறதில்லை; அவர்கள் தங்கள் வாயினாலே இன்பமாய்ப் பேசுகிறார்கள், அவர்கள் இருதயமோ பொருளாசையைப் பின்பற்றிப்போகிறது.
32இதோ, நீ இனிய குரலும் கீதவாத்தியம் வாசிப்பதில் சாமர்த்தியமுமுடையவன் பாடும் இன்பமான பாட்டுக்குச் சமானமாயிருக்கிறாய்; அவர்கள் உன் வார்த்தைகளைக் கேட்கிறார்கள்; ஆனாலும் அவைகளின்படி செய்யாமற்போகிறார்கள்.
33இதோ, அது வருகிறது, அது வருகையில் தங்கள் நடுவிலே ஒரு தீர்க்கதரிசி இருந்தான் என்று அறிந்துகொள்வார்கள் என்றார்.
1நம்முடைய பெலனாகிய தேவனைக் கெம்பீரமாய்ப் பாடி, யாக்கோபின் தேவனைக்குறித்து ஆர்ப்பரியுங்கள்.
2தம்புரு வாசித்து, வீணையையும் இனிய ஓசையான சுரமண்டலத்தையும் எடுத்து, சங்கீதம் பாடுங்கள்.
3மாதப்பிறப்பிலும், நியமித்தகாலத்திலும், நம்முடைய பண்டிகைநாட்களிலும், எக்காளம் ஊதுங்கள்.
4இது இஸ்ரவேலுக்குப் பிரமாணமும், யாக்கோபின் தேவன் விதித்த நியாயமுமாயிருக்கிறது.
5நாம் அறியாத பாஷையைக்கேட்ட எகிப்துதேசத்தைவிட்டுப் புறப்படுகையில், இதை யோசேப்பிலே சாட்சியாக ஏற்படுத்தினார்.
6அவன் தோளைச் சுமைக்கு விலக்கினேன்; அவன் கைகள் கூடைக்கு நீங்கலாக்கப்பட்டது.
7நெருக்கத்திலே நீ கூப்பிட்டாய், நான் உன்னைத் தப்புவித்தேன்; இடிமுழக்கம் உண்டாகும் மறைவிடத்திலிருந்து உனக்கு உத்தரவு அருளினேன்; மேரிபாவின் தண்ணீர்களிடத்தில் உன்னைச் சோதித்து அறிந்தேன். (சேலா)
8என் ஜனமே கேள், உனக்குச் சாட்சியிட்டுச் சொல்லுவேன்; இஸ்ரவேலே, நீ எனக்குச் செவிகொடுத்தால் நலமாயிருக்கும்.
9உனக்குள் வேறு தேவன் உண்டாயிருக்கவேண்டாம்; அந்நிய தேவனை நீ நமஸ்கரிக்கவும் வேண்டாம்.
10உன்னை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே; உன் வாயை விரிவாய்த் திற, நான் அதை நிரப்புவேன்.
11என் ஜனமோ என் சத்தத்துக்குச் செவிகொடுக்கவில்லை; இஸ்ரவேல் என்னை விரும்பவில்லை.
12ஆகையால் அவர்களை அவர்கள் இருதயத்தின் கடினத்திற்கு விட்டுவிட்டேன்; தங்கள் யோசனைகளின்படியே நடந்தார்கள்.
13ஆ, என் ஜனம் எனக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேல் என் வழிகளில் நடந்தால் நலமாயிருக்கும்!
14நான் சீக்கிரத்தில் அவர்கள் எதிராளிகளைத் தாழ்த்தி, என் கையை அவர்கள் சத்துருக்களுக்கு விரோதமாகத் திருப்புவேன்.
15அப்பொழுது கர்த்தரைப் பகைக்கிறவர்கள் அவருக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள்; அவர்களுடைய காலம் என்றென்றைக்கும் இருக்கும்.
16உச்சிதமான கோதுமையினால் அவர்களைப் போஷிப்பார்; கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன்.
1தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்; தேவர்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார்.
2எதுவரைக்கும் நீங்கள் அநியாயத்தீர்ப்புச்செய்து, துன்மார்க்கருக்கு முகதாட்சிணியம்பண்ணுவீர்கள். (சேலா)
3ஏழைக்கும் திக்கற்றபிள்ளைக்கும் நியாயஞ்செய்து, சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யுங்கள்.
4பலவீனனையும் எளியவனையும் விடுவித்து, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவியுங்கள்.
5அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள், அந்தகாரத்திலே நடக்கிறார்கள்; தேசத்தின் அஸ்திபாரங்களெல்லாம் அசைகிறது.
6நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன்.
7ஆனாலும் நீங்கள் மனுஷரைப்போலச் செத்து, லோகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்து போவீர்கள்.
8தேவனே, எழுந்தருளும், பூமிக்கு நியாயத்தீர்ப்புச் செய்யும்; நீரே சகல ஜாதிகளையும் சுதந்தரமாகக் கொண்டிருப்பவர்.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com