‹ முகப்புமுழுத் திட்டம்

அக்டோபர் 1 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்அக்டோபர் 1அடுத்த நாள் ›
குடும்பம்

I இராஜாக்கள் 3

முழு அதிகாரம் ›

1சாலொமோன் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனோடே சம்பந்தங்கலந்து, பார்வோனின் குமாரத்தியை விவாகம்பண்ணி, தன்னுடைய அரமனையையும் கர்த்தருடைய ஆலயத்தையும் எருசலேமின் சுற்றுமதிலையும் கட்டித் தீருமட்டும் அவன்அவளைத் தாவீதின் நகரத்தில் கொண்டுவந்து வைத்தான்.

2அந்நாட்கள் மட்டும் கர்த்தருடைய நாமத்திற்கு ஒரு ஆலயம் கட்டப்படாதிருந்ததினால், ஜனங்கள் மேடைகளிலே பலியிட்டு வந்தார்கள்.

3சாலொமோன் கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்து, தன் தகப்பனாகிய தாவீதின் கட்டளைகளில் நடந்தான்; ஆனாலும் அவன் மேடைகளிலே பலியிட்டுத் தூபங்காட்டி வந்தான்.

4அப்படியே ராஜா பலியிட கிபியோனுக்குப் போனான்; அது பெரிய மேடையாயிருந்தது; அந்தப் பலிபீடத்தின்மேல் சாலொமோன் ஆயிரம் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தினான்.

5கிபியோனிலே கர்த்தர் சாலொமோனுக்கு இராத்திரியில் சொப்பனத்திலே தரிசனமாகி: நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்று தேவன் சொன்னார்.

6அதற்குச் சாலொமோன்: என் தகப்பனாகிய தாவீது என்னும் உமது அடியான் உம்மைப்பற்றி உண்மையும் நீதியும் மனநேர்மையுமாய் உமக்கு முன்பாக நடந்தபடியே தேவரீர் அவருக்குப் பெரிய கிருபைசெய்து, அந்தப் பெரிய கிருபையை அவருக்குக் காத்து, இந்நாளில் இருக்கிறபடியே அவருடைய சிங்காசனத்தில் வீற்றிருக்கிற ஒரு குமாரனை அவருக்குத் தந்தீர்.

7இப்போதும் என் தேவனாகிய கர்த்தாவே, தேவரீர் உமது அடியேனை என் தகப்பனாகிய தாவீதின் ஸ்தானத்திலே ராஜாவாக்கினீரே, நானோவென்றால் போக்கு வரவு அறியாத சிறுபிள்ளையாயிருக்கிறேன்.

8நீர் தெரிந்துகொண்டதும் ஏராளத்தினால் எண்ணிக்கைக்கு அடங்காததும் இலக்கத்திற்கு உட்படாததுமான திரளான ஜனங்களாகிய உமது ஜனத்தின் நடுவில் அடியேன் இருக்கிறேன்.

9ஆகையால் உமது ஜனங்களை நியாயம் விசாரிக்கவும், நன்மை தீமை இன்னதென்று வகையறுக்கவும், அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும்; ஏராளமாயிருக்கிற இந்த உமது ஜனங்களை நியாயம் விசாரிக்க யாராலே ஆகும் என்றான்.

10சாலொமோன் இந்தக் காரியத்தைக் கேட்டது ஆண்டவருடைய பார்வைக்கு உகந்த விண்ணப்பமாயிருந்தது.

11ஆகையினால் தேவன் அவனை நோக்கி: நீ உனக்கு நீடித்த நாட்களைக் கேளாமலும், ஐசுவரியத்தைக் கேளாமலும், உன் சத்துருக்களின் பிராணனைக் கேளாமலும், நீ இந்தக் காரியத்தையே கேட்டு, நியாயம் விசாரிக்கிறதற்கு ஏற்ற ஞானத்தை உனக்கு வேண்டிக்கொண்டபடியினால்,

12உன் வார்த்தைகளின்படி செய்தேன்; ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன்; இதிலே உனக்குச் சரியானவன் உனக்குமுன் இருந்ததுமில்லை, உனக்குச் சரியானவன் உனக்குப்பின் எழும்புவதுமில்லை.

13இதுவுமன்றி, நீ கேளாத ஐசுவரியத்தையும் மகிமையையும் உனக்குத் தந்தேன்; உன் நாட்களில் இருக்கிற ராஜாக்களில் ஒருவனும் உனக்குச் சரியானவன் இருப்பதில்லை.

14உன் தகப்பனாகிய தாவீது நடந்தது போல, நீயும் என் கட்டளைகளையும் என் நியமங்களையும் கைக்கொண்டு, என் வழிகளில் நடப்பாயாகில், உன் நாட்களையும் நீடித்திருக்கப்பண்ணுவேன் என்றார்.

15சாலொமோனுக்கு நித்திரை தெளிந்தபோது, அது சொப்பனம் என்று அறிந்தான்; அவன் எருசலேமுக்கு வந்து, கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக நின்று, சர்வாங்க தகனபலிகளையிட்டு, சமாதானபலிகளைச் செலுத்தி, தன் ஊழியக்காரர் எல்லாருக்கும் விருந்துசெய்தான்.

16அப்பொழுது வேசிகளான இரண்டு ஸ்திரீகள் ராஜாவினிடத்தில் வந்து, அவனுக்கு முன்பாக நின்றார்கள்.

17அவர்களில் ஒருத்தி: என் ஆண்டவனே, நானும் இந்த ஸ்திரீயும் ஒரே வீட்டிலே குடியிருக்கிறோம்; நான் இவளோடே வீட்டிலிருக்கையில் ஆண்பிள்ளை பெற்றேன்.

18நான் பிள்ளைபெற்ற மூன்றாம் நாளிலே, இந்த ஸ்திரீயும் ஆண்பிள்ளை பெற்றாள்; நாங்கள் ஒருமித்திருந்தோம், எங்கள் இருவரையும் தவிர, வீட்டுக்குள்ளே வேறொருவரும் இல்லை.

19இராத்திரி தூக்கத்திலே இந்த ஸ்திரீ தன் பிள்ளையின்மேல் புரண்டுபடுத்ததினால் அது செத்துப்போயிற்று.

20அப்பொழுது, உமது அடியாள் நித்திரைபண்ணுகையில், இவள் நடுஜாமத்தில் எழுந்து, என் பக்கத்திலே கிடக்கிற என் பிள்ளையை எடுத்து, தன் மார்பிலே கிடத்திக்கொண்டு, செத்த தன் பிள்ளையை எடுத்து, என் மார்பிலே கிடத்திவிட்டாள்.

21என் பிள்ளைக்குப் பால்கொடுக்கக் காலமே நான் எழுந்திருந்தபோது, அது செத்துக் கிடந்தது; பொழுது விடிந்தபின் நான் அதை உற்றுப்பார்க்கும்போது, அது நான் பெற்ற பிள்ளை அல்லவென்று கண்டேன் என்றாள்.

22அதற்கு மற்ற ஸ்திரீ: அப்படியல்ல, உயிரோடிருக்கிறது என் பிள்ளை, செத்தது உன் பிள்ளை என்றாள். இவளோ: இல்லை, செத்தது உன் பிள்ளை, உயிரோடிருக்கிறது என் பிள்ளை என்றாள்; இப்படி ராஜாவுக்கு முன்பாக வாதாடினார்கள்.

23அப்பொழுது ராஜா: உயிரோடிருக்கிறது என் பிள்ளை, செத்தது உன் பிள்ளை என்று இவள் சொல்லுகிறாள்; அப்படியல்ல, செத்தது உன் பிள்ளை, உயிரோடிருக்கிறது என் பிள்ளை என்று அவள் சொல்லுகிறாள் என்று சொல்லி,

24ஒரு பட்டயத்தைக் கொண்டுவாருங்கள் என்றான்; அவர்கள் ஒரு பட்டயத்தை ராஜாவினிடத்தில் கொண்டுவந்தார்கள்.

25ராஜா உயிரோடிருக்கிற பிள்ளையை இரண்டாக பிளந்து, பாதியை இவளுக்கும் பாதியை அவளுக்கும் கொடுங்கள் என்றான்.

26அப்பொழுது உயிரோடிருக்கிற பிள்ளையின் தாய், தன் பிள்ளைக்காக அவள் குடல் துடித்ததினால், ராஜாவை நோக்கி: ஐயோ, என் ஆண்டவனே, உயிரோடிருக்கிற பிள்ளையைக் கொல்லவேண்டாம்; அதை அவளுக்கே கொடுத்துவிடும் என்றாள்; மற்றவள் அது எனக்கும் வேண்டாம், உனக்கும் வேண்டாம், பிளந்து போடுங்கள் என்றாள்.

27அப்பொழுது ராஜா உயிரோடிருக்கிற பிள்ளையைக் கொல்லாமல், அவளுக்குக் கொடுத்துவிடுங்கள்; அவளே அதின் தாய் என்றான்.

28ராஜா தீர்த்த இந்த நியாயத்தை இஸ்ரவேலர் எல்லாரும் கேள்விப்பட்டு, நியாயம் விசாரிக்கிறதற்கு தேவன் அருளின ஞானம் ராஜாவுக்கு உண்டென்று கண்டு, அவனுக்குப் பயந்தார்கள்.

1தேவனுடைய சித்தத்தினாலே இயேசுகிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனாகிய பவுல், எபேசுவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் விசுவாசிகளாயிருக்கிற பரிசுத்தவான்களுக்கு எழுதுகிறதாவது:

2நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும், சமாதானமும் உண்டாவதாக.

3நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்.

4தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்குமுன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே,

5பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக,

6தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார்.

7அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.

8அந்தக் கிருபையை அவர் சகல ஞானத்தோடும் புத்தியோடும் எங்களிடத்தில் பெருகப்பண்ணினார்.

9காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் நியமத்தின்படி பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்படவேண்டுமென்று,

10தமக்குள்ளே தீர்மானித்திருந்த தம்முடைய தயவுள்ள சித்தத்தின் இரகசியத்தை எங்களுக்கு அறிவித்தார்.

11மேலும் கிறிஸ்துவின்மேல் முன்னே நம்பிக்கையாயிருந்த நாங்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாயிருக்கும்படிக்கு,

12தமது சித்தத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே நாங்கள் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி தெரிந்து கொள்ளப்பட்டோம்.

13நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள்.

14அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய சுதந்தரத்தின் அச்சாரமாயிருக்கிறார்.

15ஆனபடியினாலே, கர்த்தராகிய இயேசுவின்மேலுள்ள உங்கள் விசுவாசத்தையும், பரிசுத்தவான்களெல்லார்மேலுமுள்ள உங்கள் அன்பையுங்குறித்து நான் கேள்விப்பட்டு,

16இடைவிடாமல் உங்களுக்காக ஸ்தோத்திரம்பண்ணி, என் ஜெபங்களில் உங்களை நினைத்து,

17நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும்,

18தாம் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை இன்னதென்றும், பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற சுதந்தரத்தினுடைய மகிமையின் ஐசுவரியம் இன்னதென்றும்;

19தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமைப்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் வேண்டிக்கொள்ளுகிறேன்.

20எல்லாத் துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும், இம்மையில் மாத்திரமல்ல மறுமையிலும் பேர்பெற்றிருக்கும் எல்லா நாமத்துக்கும் மேலாய் அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக,

21அவரை உன்னதங்களில் தம்முடைய வலதுபாரிசத்தில் உட்காரும்படி செய்து,

22எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி,

23எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார்.

தனிவாசிப்பு

எசேக்கியேல் 34

முழு அதிகாரம் ›

1கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

2மனுபுத்திரனே, இஸ்ரவேலின் மேய்ப்பருக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரை; நீ தீர்க்கதரிசனம் உரைத்து, அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் மேய்ப்பருக்குச் சொல்லுகிறார்; தங்களையே மேய்க்கிற இஸ்ரவேலின் மேய்ப்பருக்கு ஐயோ! மேய்ப்பர் அல்லவா மந்தையை மேய்க்கவேண்டும்.

3நீங்கள் நெய்யைச் சாப்பிட்டு, ஆட்டுமயிரை உடுப்பாக்கிக்கொள்ளுகிறீர்கள்: கொழுத்ததை அடிக்கிறீர்கள்; மந்தையையோ மேய்க்காமற்போகிறீர்கள்.

4நீங்கள் பலவீனமானவைகளைப் பலப்படுத்தாமலும், நசல்கொண்டவைகளைக் குணமாக்காமலும், எலும்பு முறிந்தவைகளைக் காயங்கட்டாமலும், துரத்துண்டவைகளைத் திருப்பிக்கொண்டு வராமலும், காணாமற்போனவைகளைத் தேடாமலும் போய், பலாத்காரமும் கடூரமுமாய் அவைகளை ஆண்டீர்கள்.

5மேய்ப்பன் இல்லாததினால் அவைகள் சிதறுண்டுபோயின; சிதறுண்டு போனவைகள் காட்டு மிருகங்களுக்கெல்லாம் இரையாயின.

6என் ஆடுகள் சகல மலைகளிலும் உயரமான சகல மேடுகளிலும் அலைப்புண்டு, பூமியின்மீதெங்கும் என் ஆடுகள் சிதறித்திரிகிறது; விசாரிக்கிறவனுமில்லை, தேடுகிறவனுமில்லை.

7ஆகையால், மேய்ப்பரே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

8கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நான் என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; மேய்ப்பன் இல்லாததினால் என் ஆடுகள் சூறையாகி, என் ஆடுகள் காட்டுமிருகங்களுக்கெல்லாம் இரையாய்ப் போயின; என் மேய்ப்பர்கள் என் ஆடுகளை விசாரியாமற்போனார்கள், மேய்ப்பர்கள் மந்தையை மேய்க்காமல் தங்களையே மேய்த்தார்கள்.

9ஆகையால் மேய்ப்பரே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

10கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: இதோ, நான் மேய்ப்பருக்கு விரோதமாக வந்து, என் ஆடுகளை அவர்கள் கையிலே கேட்டு, மேய்ப்பர் இனித் தங்களையே மேய்க்காதபடி, மந்தையை மேய்க்கும் தொழிலைவிட்டு அவர்களை விலக்கி, என் ஆடுகள் அவர்களுக்கு ஆகாரமாயிராதபடி, அவைகளை அவர்கள் வாய்க்குத் தப்பப்பண்ணுவேன் என்று சொல்லு.

11கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் நானே என் ஆடுகளை விசாரித்து, அவைகளைத் தேடிப்பார்ப்பேன்.

12ஒரு மேய்ப்பன் சிதறுண்ட தன் ஆடுகளின் நடுவே இருக்கிற நாளில் தன் மந்தையைத் தேடிக்கொண்டிருக்கிறதுபோல, நான் என் ஆடுகளைத்தேடி, மப்பும் மந்தாரமுமான நாளிலே அவைகள் சிதறுண்டுபோன எல்லா இடங்களிலுமிருந்து அவைகளைத் தப்பிவரப்பண்ணி,

13அவைகளை ஜனங்களிடத்திலிருந்து புறப்படவும் தேசங்களிலிருந்து சேரவும்பண்ணி, அவைகளுடைய சுயதேசத்திலே அவைகளைக் கொண்டுவந்து, இஸ்ரவேல் மலைகளின்மேலும் ஆறுகள் அண்டையிலும் தேசத்தின் சகல வாசஸ்தலங்களிலும் அவைகளை மேய்ப்பேன்.

14அவைகளை நல்ல மேய்ச்சலிலே மேய்ப்பேன்; இஸ்ரவேலுடைய உயர்ந்த மலைகளில் அவைகளுடைய தொழுவம் இருக்கும்; அங்கே அவைகள் நல்ல தொழுவத்தில் படுத்துக்கொள்ளும் இஸ்ரவேலின் மலைகளின்மேல் நல்ல மேய்ச்சலை மேயும்.

15என் ஆடுகளை நான் மேய்த்து, அவைகளை நான் மடக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

16நான் காணாமற்போனதைத் தேடி, துரத்துண்டதைத் திரும்பக் கொண்டுவந்து, எலும்பு முறிந்ததைக் காயங்கட்டி, நசல் கொண்டதைத் திடப்படுத்துவேன்; நியாயத்துக்குத்தக்கதாய் அவைகளை மேய்த்து, புஷ்டியும் பெலமுமுள்ளவைகளை அழிப்பேன்.

17என் மந்தையே, கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, ஆட்டுக்கும் ஆட்டுக்கும், ஆட்டுக்கடாக்களுக்கும், வெள்ளாட்டுக்கடாக்களுக்கும் நான் நியாயந்தீர்ப்பேன்.

18நீங்கள் நல்ல மேய்ச்சலை மேய்ந்து, உங்கள் மேய்ச்சல்களில் மீதியானதை உங்கள் கால்களால் மிதிக்கலாமா? தெளிந்த தண்ணீரைக் குடித்து மீதியாயிருக்கிறதை உங்கள் கால்களால் குழப்பிப்போடலாமா?

19என் ஆடுகள் உங்கள் கால்களால் மிதிக்கப்பட்டதை மேயவும், உங்கள் கால்களால் குழப்பப்பட்டதைக் குடிக்கவும் வேண்டுமோ?

20ஆகையால், கர்த்தராகிய ஆண்டவர் அவைகளை நோக்கி: இதோ, நான், நானே கொழுத்த ஆடுகளுக்கும் இளைத்த ஆடுகளுக்கும் நியாயந்தீர்ப்பேன்.

21நீங்கள் பலவீனமாயிருக்கிறவைகளையெல்லாம் புறம்பாக்கிச் சிதறப்பண்ணும்படி, அவைகளைப் பக்கத்தினாலும் முன்னந்தொடைகளினாலும் தள்ளி உங்கள் கொம்புகளைக்கொண்டு முட்டுகிறபடியினாலே,

22நான் என் ஆடுகளை இனிச் சூறையாகாதபடிக்கு இரட்சித்து, ஆடுகளுக்கும் ஆடுகளுக்கும் நியாயந்தீர்ப்பேன்.

23அவர்களை மேய்க்கும்படி என் தாசனாகிய தாவீது என்னும் ஒரே மேய்ப்பனை நான் அவர்கள்மேல் விசாரிப்பாயிருக்க ஏற்படுத்துவேன்; இவர் அவர்களை மேய்த்து, இவரே அவர்களுக்கு மேய்ப்பனாயிருப்பார்.

24கர்த்தராகிய நான் அவர்களுக்குத் தேவனாக இருப்பேன், என் தாசனாகிய தாவீது அவர்கள் நடுவில் அதிபதியாயிருப்பார்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன்.

25நான் அவர்களோடு சமாதான உடன்படிக்கைசெய்து, துஷ்ட மிருகங்களை தேசத்தில் இராதபடிக்கு ஒழியப்பண்ணுவேன்; அவர்கள் சுகமாய் வனாந்தரத்தில் தாபரித்து, காடுகளில் நித்திரைபண்ணுவார்கள்.

26நான் அவர்களையும் என் மேட்டின் சுற்றுப்புறங்களையும் ஆசீர்வாதமாக்கி, ஏற்றகாலத்திலே மழையைப் பெய்யப்பண்ணுவேன்; ஆசீர்வாதமான மழை பெய்யும்.

27வெளியின் விருட்சங்கள் தங்கள் கனியைத்தரும்; பூமி தன் பலனைக் கொடுக்கும்; அவர்கள் தங்கள் தேசத்தில் சுகமாயிருப்பார்கள்; நான் அவர்கள் நுகத்தின் கயிறுகளை அறுத்து, அவர்களை அடிமைகொண்டவர்களின் கைக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.

28இனி அவர்கள் புறஜாதிகளுக்குக் கொள்ளையாவதில்லை, பூமியின் மிருகங்கள் அவர்களைப் பட்சிப்பதுமில்லை; தத்தளிக்கப்பண்ணுவார் இல்லாமல் சுகமாய்த் தங்குவார்கள்.

29நான் அவர்களுக்குக் கீர்த்திபொருந்திய ஒரு நாற்றை எழும்பப்பண்ணுவேன்; அவர்கள் இனித் தேசத்திலே பஞ்சத்தால் வாரிக்கொள்ளப்படுவதுமில்லை, இனிப் புறஜாதிகள் செய்யும் அவமானத்தைச் சுமப்பதுமில்லை.

30தங்கள் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் தங்களோடே இருக்கிறதையும், இஸ்ரவேல் வம்சத்தாராகிய தாங்கள் என் ஜனமாயிருக்கிறதையும், அவர்கள் அறிந்துகொள்வார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

31என் மந்தையும் என் மேய்ச்சலின் ஆடுகளுமாகிய நீங்கள் மனுஷர்; நான் உங்கள் தேவன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

சங்கீதம் 83-84

முழு அதிகாரம் ›
சங்கீதம் 83

1தேவனே, மவுனமாயிராதேயும், பேசாமலிராதேயும்; தேவனே, சும்மாயிராதேயும்.

2இதோ, உம்முடைய சத்துருக்கள் கொந்தளித்து, உம்முடைய பகைஞர் தலையெடுக்கிறார்கள்.

3உமது ஜனத்துக்கு விரோதமாக உபாய தந்திரங்களை யோசித்து, உமது மறைவிலிருக்கிறவர்களுக்கு விரோதமாக ஆலோசனைபண்ணுகிறார்கள்.

4அவர்கள் இனி ஒரு ஜாதியாராயிராமலும், இஸ்ரவேலின் பேர் இனி நினைக்கப்படாமலும் போவதற்காக, அவர்களை அதம்பண்ணுவோம் வாருங்கள் என்கிறார்கள்.

5இப்படி, ஏதோமின் கூடாரத்தாரும், இஸ்மவேலரும், மோவாபியரும், ஆகாரியரும்,

6கேபாலரும், அம்மோனியரும், அமலேக்கியரும், தீருவின் குடிகளோடுகூடிய பெலிஸ்தரும்,

7ஏகமனநிர்ணயமாய் ஆலோசனைசெய்து, உமக்கு விரோதமாய் ஒப்பந்தம் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

8அசீரியரும் அவர்களோடேகூடக் கலந்து, லோத்தின் புத்திரருக்குப் புயபலமானார்கள். (சேலா)

9மீதியானியருக்குச் செய்தது போலவும், கீசோன் என்னும் ஆற்றண்டை எந்தோரிலே அழிக்கப்பட்டு,

10நிலத்துக்கு எருவாய்ப்போன சிசெரா, யாபீன் என்பவர்களுக்குச் செய்ததுபோலவும், அவர்களுக்குச் செய்யும்.

11அவர்களையும் அவர்கள் அதிபதிகளையும் ஓரேபுக்கும் சேபுக்கும், அவர்கள் பிரபுக்களையெல்லாம் சேபாவுக்கும் சல்முனாவுக்கும் சமமாக்கும்.

12தேவனுடைய வாசஸ்தலங்களை எங்களுக்குச் சுதந்தரமாக நாங்கள் கட்டிக்கொள்வோம் என்று சொல்லுகிறார்களே.

13என் தேவனே, அவர்களைச் சுழல்காற்றின் புழுதிக்கும், காற்று முகத்தில் பறக்கும் துரும்புக்கும் சமமாக்கும்.

14நெருப்பு காட்டைக் கொளுத்துவதுபோலவும், அக்கினி ஜூவாலைகள் மலைகளை எரிப்பது போலவும்,

15நீர் உமது புசலினாலே அவர்களைத் தொடர்ந்து, உமது பெருங்காற்றினாலே அவர்களைக் கலங்கப்பண்ணும்.

16கர்த்தாவே, அவர்கள் உமது நாமத்தைத் தேடும்படிக்கு, அவர்கள் முகங்களை அவமானத்தாலே மூடும்.

17யேகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர் என்று மனுஷர் உணரும்படி,

18அவர்கள் என்றைக்கும் வெட்கிக் கலங்கி, நாணமடைந்து அழிந்துபோவார்களாக.

சங்கீதம் 84

1சேனைகளின் கர்த்தாவே, உமது வாசஸ்தலங்கள் எவ்வளவு இன்பமானவைகள்!

2என் ஆத்துமா கர்த்தருடைய ஆலயப்பிராகாரங்களின்மேல் வாஞ்சையும் தவனமுமாயிருக்கிறது; என் இருதயமும் என் மாம்சமும் ஜீவனுள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடுகிறது.

3என் ராஜாவும் என் தேவனுமாகிய சேனைகளின் கர்த்தாவே, உம்முடைய பீடங்களண்டையில் அடைக்கலான் குருவிக்கு வீடும், தகைவிலான் குருவிக்குத் தன் குஞ்சுகளை வைக்கும் கூடும் கிடைத்ததே.

4உம்முடைய வீட்டில் வாசமாயிருக்கிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் எப்பொழுதும் உம்மைத் துதித்துக்கொண்டிருப்பார்கள் (சேலா)

5உம்மிலே பெலன்கொள்ளுகிற மனுஷனும், தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள்.

6அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக் கொள்ளுகிறார்கள்; மழையும் குளங்களை நிரப்பும்.

7அவர்கள் பலத்தின்மேல் பலம் அடைந்து, சீயோனிலே தேவசந்நிதியில் வந்து காணப்படுவார்கள்.

8சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, என் விண்ணப்பத்தை கேளும்; யாக்கோபின் தேவனே, செவிகொடும். (சேலா)

9எங்கள் கேடகமாகிய தேவனே, கண்ணோக்கமாயிரும்; நீர் அபிஷேகம் பண்ணினவரின் முகத்தைப் பாரும்.

10ஆயிரம் நாளைப்பார்க்கிலும் உமது பிராகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது; ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப் பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன்.

11தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்.

12சேனைகளின் கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com