‹ முகப்புமுழுத் திட்டம்

ஆகஸ்ட் 24 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்ஆகஸ்ட் 24அடுத்த நாள் ›
குடும்பம்

I சாமுவேல் 16

முழு அதிகாரம் ›

1கர்த்தர் சாமுவேலை நோக்கி: இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிராதபடிக்கு, நான் புறக்கணித்துத் தள்ளின சவுலுக்காக நீ எந்தமட்டும் துக்கித்துக்கொண்டிருப்பாய்; நீ உன் கொம்பை தைலத்தால் நிரப்பிக்கொண்டுவா; பெத்லெகேமியனாகிய ஈசாயினிடத்துக்கு உன்னை அனுப்புவேன்; அவன் குமாரரில் ஒருவனை நான் ராஜாவாகத் தெரிந்துகொண்டேன் என்றார்.

2அதற்குச் சாமுவேல்: நான் எப்படிப்போவேன்; சவுல் இதைக் கேள்விப்பட்டால், என்னைக் கொன்றுபோடுவானே என்றான்; அப்பொழுது கர்த்தர்: நீ ஒரு காளையைக் கையோடே கொண்டுபோய், கர்த்தருக்குப் பலியிடவந்தேன் என்று சொல்லி,

3ஈசாயைப் பலிவிருந்துக்கு அழைப்பாயாக; அப்பொழுது நீ செய்யவேண்டியதை நான் உனக்கு அறிவிப்பேன்; நான் உனக்குச் சொல்லுகிறவனை எனக்காக அபிஷேகம்பண்ணுவாயாக என்றார்.

4கர்த்தர் சொன்னபடியே சாமுவேல் செய்து, பெத்லெகேமுக்குப் போனான்; அப்பொழுது அவ்வூரின் மூப்பர் தத்தளிப்போடே அவனுக்கு எதிர்கொண்டுவந்து, நீர் வருகிறது சமாதானமா என்றார்கள்.

5அதற்கு அவன்: சமாதானந்தான்; கர்த்தருக்குப் பலியிடவந்தேன்; நீங்கள் உங்களைப் பரிசுத்தம் பண்ணிக்கொண்டு, என்னுடனேகூடப் பலிவிருந்துக்கு வாருங்கள் என்றான்; மேலும் ஈசாயையும் அவன் குமாரரையும் பரிசுத்தம்பண்ணி, அவர்களைப் பலிவிருந்துக்கு அழைத்தான்.

6அவர்கள் வந்தபோது, அவன் எலியாபைப் பார்த்தவுடனே: கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்படுபவன் இவன்தானாக்கும் என்றான்.

7கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீரவளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்.

8அப்பொழுது ஈசாய் அபினதாபை அழைத்து, அவனைச் சாமுவேலுக்கு முன்பாகக் கடந்துபோகப்பண்ணினான்; அவன்: இவனையும் கர்த்தர் தெரிந்து கொள்ளவில்லை என்றான்.

9ஈசாய் சம்மாவையும் கடந்துபோகப்பண்ணினான்; அவன்: இவனையும் கர்த்தர் தெரிந்துகொள்ளவில்லை என்றான்.

10இப்படி ஈசாய் தன் குமாரரில் ஏழு பேரை சாமுவேலுக்கு முன்பாகக் கடந்துபோகப்பண்ணினான்; பின்பு சாமுவேல் ஈசாயைப் பார்த்து: கர்த்தர் இவர்களில் ஒருவனையும் தெரிந்துகொள்ளவில்லை என்று சொல்லி;

11உன் பிள்ளைகள் இவ்வளவுதானா என்று ஈசாயைக் கேட்டான். அதற்கு அவன்: இன்னும் எல்லாருக்கும் இளையவன் ஒருவன் இருக்கிறான்; அவன் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறான் என்றான்; அப்பொழுது சாமுவேல் ஈசாயை நோக்கி: ஆள் அனுப்பி அவனை அழைப்பி; அவன் இங்கே வருமட்டும் நான் பந்தியிருக்கமாட்டேன் என்றான்.

12ஆள் அனுப்பி அவனை அழைப்பித்தான்; அவன் சிவந்த மேனியும், அழகிய கண்களும், நல்ல ரூபமுள்ளவனாயிருந்தான்; அப்பொழுது கர்த்தர் இவன்தான், நீ எழுந்து இவனை அபிஷேகம்பண்ணு என்றார்.

13அப்பொழுது சாமுவேல்: தைலக்கொம்பை எடுத்து, அவனை அவன் சகோதரர் நடுவிலே அபிஷேகம்பண்ணினான்; அந்நாள் முதற்கொண்டு, கர்த்தருடைய ஆவியானவர் தாவீதின்மேல் வந்து இறங்கியிருந்தார்; சாமுவேல் எழுந்து ராமாவுக்குப் போய்விட்டான்.

14கர்த்தருடைய ஆவி சவுலை விட்டு நீங்கினார்; கர்த்தரால் வரவிடப்பட்ட ஒரு பொல்லாத ஆவி அவனைக் கலங்கப்பண்ணிக்கொண்டிருந்தது.

15அப்பொழுது சவுலின் ஊழியக்காரர் அவனை நோக்கி: இதோ, தேவனால் விடப்பட்ட ஒரு பொல்லாத ஆவி உம்மைக் கலங்கப்பண்ணுகிறதே.

16சுரமண்டலம் வாசிக்கிறதில் தேறின ஒருவனைத் தேடும்படிக்கு, எங்கள் ஆண்டவனாகிய நீர் உமக்கு முன்பாக நிற்கிற உம்முடைய அடியாருக்குக் கட்டளையிடும்; அப்பொழுது தேவனால் விடப்பட்ட பொல்லாத ஆவி உம்மேல் இறங்குகையில், அவன் தன் கையினால் அதை வாசித்தால் உமக்குச் சவுக்கியமுண்டாகும் என்றார்கள்.

17சவுல் தன் ஊழியக்காரரைப் பார்த்து: நன்றாய் வாசிக்கத்தக்க ஒருவனைத் தேடி, என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்.

18அப்பொழுது அந்த வேலைக்காரரில் ஒருவன் பிரதியுத்தரமாக: இதோ, பெத்லெகேமியனாகிய ஈசாயின் குமாரன் ஒருவனைக் கண்டிருக்கிறேன்; அவன் வாசிப்பதில் தேறினவன், அவன் பராக்கிரமசாலி, யுத்தவீரன், காரியசமர்த்தன், சவுந்தரியமுள்ளவன்; கர்த்தர் அவனோடேகூட இருக்கிறார் என்றான்.

19அப்பொழுது சவுல்: ஈசாயினிடத்தில் ஆட்களை அனுப்பி, ஆட்டு மந்தையில் இருக்கிற உன் குமாரனாகிய தாவீதை என்னிடத்தில் அனுப்பு என்று சொல்லச் சொன்னான்.

20அப்பொழுது ஈசாய்: அப்பத்தையும், ஒரு துருத்தி திராட்சரசத்தையும், ஒரு வெள்ளாட்டுக்குட்டியையும் கழுதையின் மேல் ஏற்றி, தன் குமாரனாகிய தாவீதின் வசமாய் சவுலுக்கு அனுப்பினான்.

21அப்படியே தாவீது சவுலிடத்தில் வந்து, அவனுக்கு முன்பாக நின்றான்; அவன் இவனை மிகவும் சிநேகித்தான்; அவனுக்கு இவன் ஆயுததாரியானான்.

22சவுல் ஈசாயினிடத்தில் ஆள் அனுப்பி, தாவீது எனக்கு முன்பாக நிற்கட்டும்; என் கண்களில் அவனுக்குத் தயவு கிடைத்தது என்று சொல்லச் சொன்னான்.

23அப்படியே தேவனால் விடப்பட்ட ஆவி சவுலைப் பிடிக்கும்போது, தாவீது சுரமண்டலத்தை எடுத்து, தன் கையினால் வாசிப்பான்; அதினாலே பொல்லாத ஆவி அவனை விட்டு நீங்க, சவுல் ஆறுதலடைந்து, சொஸ்தமாவான்.

1விசுவாசத்தில் பலவீனமுள்ளவனைச் சேர்த்துக்கொள்ளுங்கள்; ஆனாலும் அவனுடைய மன ஐயங்களைக் குற்றமாய் நிர்ணயிக்காமலிருங்கள்.

2ஒருவன் எந்தப் பதார்த்தத்தையும் புசிக்கலாமென்று நம்புகிறான்; பலவீனனோ மரக்கறிகளைமாத்திரம் புசிக்கிறான்.

3புசிக்கிறவன் புசியாதிருக்கிறவனை அற்பமாயெண்ணாதிருப்பானாக; புசியாதிருக்கிறவனும் புசிக்கிறவனைக் குற்றவாளியாகத் தீர்க்காதிருப்பானாக; தேவன் அவனை ஏற்றுக்கொண்டாரே.

4மற்றொருவனுடைய வேலைக்காரனைக் குற்றவாளியாகத் தீர்க்கிறதற்கு நீ யார்? அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய எஜமானுக்கே அவன் உத்தரவாதி; அவன் நிலைநிறுத்தப்படுவான்; தேவன் அவனை நிலைநிறுத்த வல்லவராயிருக்கிறாரே.

5அன்றியும், ஒருவன் ஒருநாளை மற்றொருநாளிலும் விசேஷமாக எண்ணுகிறான்; வேறொருவன் எல்லா நாட்களையும் சரியாக எண்ணுகிறான்; அவனவன் தன்தன் மனதிலே முழு நிச்சயத்தை உடையவனாயிருக்கக்கடவன்.

6நாட்களை விசேஷித்துக்கொள்ளுகிறவன் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளுகிறான்; நாட்களை விசேஷித்துக்கொள்ளாதவனும் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளாதிருக்கிறான். புசிக்கிறவன் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறபடியால், கர்த்தருக்கென்று புசிக்கிறான்; புசியாதிருக்கிறவனும் கர்த்தருக்கென்று புசியாதிருந்து, தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறான்.

7நம்மில் ஒருவனும் தனக்கென்று பிழைக்கிறதுமில்லை, ஒருவனும் தனக்கென்று மரிக்கிறதுமில்லை.

8நாம் பிழைத்தாலும் கர்த்தருக்கென்று பிழைக்கிறோம், நாம் மரித்தாலும் கர்த்தருக்கென்று மரிக்கிறோம்; ஆகையால் பிழைத்தாலும் மரித்தாலும் நாம் கர்த்தருடையவர்களாயிருக்கிறோம்.

9கிறிஸ்துவும் மரித்தோர்மேலும் ஜீவனுள்ளோர்மேலும் ஆண்டவராயிருக்கும்பொருட்டு, மரித்தும் எழுந்தும் பிழைத்துமிருக்கிறார்.

10இப்படியிருக்க, நீ உன் சகோதரனைக் குற்றவாளியென்று தீர்க்கிறதென்ன? நீ உன் சகோதரனை அற்பமாய் எண்ணுகிறதென்ன? நாமெல்லாரும் கிறிஸ்துவினுடைய நியாயாசனத்திற்கு முன்பாக நிற்போமே.

11அந்தப்படி: முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் தேவனை அறிக்கைபண்ணும் என்று என் ஜீவனைக்கொண்டு உரைக்கிறேன் என்பதாய்க் கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது.

12ஆதலால் நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்து தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான்.

13இப்படியிருக்க, நாம் இனிமேல் ஒருவரையொருவர் குற்றவாளிகளென்று தீர்க்காதிருப்போமாக. ஒருவனும் தன் சகோதரனுக்கு முன்பாகத் தடுக்கலையும் இடறலையும் போடலாகாதென்றே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

14ஒரு பொருளும் தன்னிலே தீட்டுள்ளதல்லவென்று கர்த்தராகிய இயேசுவுக்குள் அறிந்து நிச்சயித்திருக்கிறேன்; ஒரு பொருளைத் தீட்டுள்ளதென்று எண்ணிக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு அது தீட்டுள்ளதாயிருக்கும்.

15போஜனத்தினாலே உன் சகோதரனுக்கு விசனமுண்டாக்கினால், நீ அன்பாய் நடக்கிறவனல்ல; அவனை உன் போஜனத்தினாலே கெடுக்காதே, கிறிஸ்து அவனுக்காக மரித்தாரே.

16உங்கள் நன்மை தூஷிக்கப்பட இடங்கொடாதிருங்கள்.

17தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது.

18இவைகளிலே கிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்கிறவன் தேவனுக்குப்பிரியனும் மனுஷரால் அங்கிகரிக்கப்பட்டவனுமாயிருக்கிறான்.

19ஆனபடியால் சமாதானத்துக்கடுத்தவைகளையும், அந்நியோந்நிய பக்திவிருத்தி உண்டாக்கத்தக்கவைகளையும் நாடக்கடவோம்.

20போஜனத்தினிமித்தம் தேவனுடைய கிரியையை அழித்துப்போடாதே. எந்தப் பதார்த்தமும் சுத்தமுள்ளதுதான்; ஆனாலும் இடறலுண்டாகப் புசிக்கிறவனுக்கு அது தீமையாயிருக்கும்.

21மாம்சம் புசிக்கிறதும், மதுபானம்பண்ணுகிறதும், மற்றெதையாகிலும் செய்கிறதும், உன் சகோதரன் இடறுகிறதற்காவது, தவறுகிறதற்காவது பலவீனப்படுகிறதற்காவது ஏதுவாயிருந்தால், அவைகளில் ஒன்றையும் செய்யாமலிருப்பதே நன்மையாயிருக்கும்.

22உனக்கு விசுவாசமிருந்தால் அது தேவனுக்கு முன்பாக உன்மட்டும் இருக்கட்டும். நல்லதென்று நிச்சயித்த காரியத்தில் தன்னைக் குற்றவாளியாக்காதவன் பாக்கியவான்.

23ஒருவன் சமுசயப்படுகிறவனாய்ப் புசித்தால், அவன் விசுவாசமில்லாமல் புசிக்கிறபடியினால், ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுகிறான். விசுவாசத்தினாலே வராத யாவும் பாவமே.

தனிவாசிப்பு

1ஐயோ! ஜனம்பெருத்த நகரி தனிமையாக உட்கார்ந்திருக்கிறாளே! விதவைக்கு ஒப்பானாளே! ஜாதிகளில் பெரியவளும், சீமைகளில் நாயகியுமாயிருந்தவள் கப்பங்கட்டுகிறவளானாளே!

2இராக்காலத்திலே அழுதுகொண்டிருக்கிறாள்; அவளுடைய கண்ணீர் அவள் கன்னங்களில் வடிகிறது; அவளுடைய நேசர் எல்லாருக்குள்ளும் அவளைத் தேற்றுவார் ஒருவரும் இல்லை; அவளுடைய சிநேகிதர் எல்லாரும் அவளுக்குத் துரோகிகளும் சத்துருக்களுமானார்கள்.

3யூதா ஜனங்கள் உபத்திரவப்படவும், கொடுமையான அடிமைவேலைசெய்யவும் சிறைப்பட்டுப்போனார்கள். அவள் புறஜாதிகளுக்குள்ளே தங்குகிறாள், இளைப்பாறுதல் அடையாள்; அவளைத் துன்பப்படுத்துகிற யாவரும் அவளை இடுக்கமான இடங்களிலே தொடர்ந்துபிடித்தார்கள்.

4பண்டிகைக்கு வருவார் இல்லாததினால், சீயோனுக்குப் போகிற வழிகள் புலம்புகிறது; அவள் வாசல்கள் எல்லாம் பாழாய்க்கிடக்கிறது; அவள் ஆசாரியர்கள் தவிக்கிறார்கள்; அவள் கன்னிகைகள் சஞ்சலப்படுகிறார்கள்; அவளுக்குக் கசப்பே உண்டாயிருக்கிறது.

5அவள் சத்துருக்கள் தலைமையானார்கள், அவள் பகைஞர் சுகித்திருக்கிறார்கள்; அவளுடைய திரளான பாதகங்களினிமித்தம் கர்த்தர் அவளைச் சஞ்சலப்படுத்தினார்; அவள் பிள்ளைகள் சத்துருவுக்கு முன்பாகச் சிறைப்பட்டுப்போனார்கள்.

6சீயோன் குமாரத்தியின் அழகெல்லாம் அவளை விட்டுப்போயிற்று; அவள் பிரபுக்கள் மேய்ச்சலைக் காணாத மான்களுக்கு ஒப்பாகி, தொடருகிறவனுக்கு முன்பாகச் சத்துவமில்லாமல் நடந்துபோனார்கள்.

7தனக்குச் சிறுமையும் தவிப்பும் உண்டாகிய நாட்களிலே எருசலேம் பூர்வநாட்கள் முதற்கொண்டு தனக்கு உண்டாயிருந்த இன்பமானவைகளையெல்லாம் நினைக்கிறாள்; அவளுக்கு உதவிசெய்வார் இல்லாமல் அவளுடைய ஜனங்கள் சத்துருவின் கையிலே விழுகையில், பகைஞர் அவளைப் பார்த்து, அவளுடைய ஓய்வு நாட்களைக் குறித்துப் பரியாசம்பண்ணினார்கள்.

8எருசலேம் மிகுதியாய்ப் பாவஞ்செய்தாள்; ஆதலால் தூரஸ்திரீயைப்போலானாள்; அவளைக் கனம்பண்ணினவர்கள் எல்லாரும் அவளை அசட்டைபண்ணுகிறார்கள்; அவளுடைய மானத்தைக் கண்டார்கள்; அவளும் பெருமூச்சுவிட்டுப் பின்னிட்டுத் திரும்பினாள்.

9அவளுடைய அசூசம் அவள் வஸ்திர ஓரங்களில் இருந்தது; தனக்கு வரப்போகிற முடிவை நினையாதிருந்தாள்; ஆகையால் அதிசயமாய்த் தாழ்த்தப்பட்டுப்போனாள்; தேற்றுவார் இல்லை; கர்த்தாவே, என் சிறுமையைப் பாரும்; பகைஞன் பெருமைபாராட்டினானே.

10அவளுடைய இன்பமான எல்லாவற்றின்மேலும் சத்துரு தன் கையை நீட்டினான்; உம்முடைய சபையிலே வரலாகாதென்று தேவரீர் விலக்கிய புறஜாதியார் உமது பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்ததைக் கண்டாள்.

11அவளுடைய ஜனங்களெல்லாரும் அப்பந்தேடித் தவிக்கிறார்கள்; தங்கள் உயிரைக் காப்பாற்றத் தங்களுடைய இன்பமானவைகளை ஆகாரத்துக்கென்று கொடுத்துவிட்டார்கள்; கர்த்தாவே, நோக்கிப்பாரும்; எண்ணமற்றவளானேனே.

12வழியில் நடந்துபோகிற சகல ஜனங்களே, இதைக்குறித்து உங்களுக்குக் கவையில்லையா? கர்த்தர் தமது உக்கிரமான கோபமூண்ட நாளிலே என்னைச் சஞ்சலப்படுத்தினதினால் எனக்கு உண்டான என் துக்கத்துக்குச் சரியான துக்கம் உண்டோ என்று என்னை நோக்கிப்பாருங்கள்.

13உயரத்திலிருந்து என் எலும்புகளில் அக்கினியை அனுப்பினார், அது அவைகளில் பற்றியெரிகிறது; என் கால்களுக்கு வலையை வீசினார்; என்னைப் பின்னிட்டு விழப்பண்ணினார்; என்னைப் பாழாக்கினார்; நித்தம் நான் பலட்சயப்பட்டுப்போகிறேன்.

14என் பாதகங்களின் நுகம் அவருடைய கையால் பூட்டப்பட்டிருக்கிறது; அவைகள் பிணைக்கப்பட்டு என் கழுத்தைச் சுற்றிக்கொண்டது; என் பெலனை விழப்பண்ணினார்; நான் எழுந்திருக்கக்கூடாதபடிக்கு ஆண்டவர் என்னை ஒடுக்குகிறவர்களின் கையில் ஒப்புக்கொடுத்தார்.

15என்னிலுள்ள பராக்கிரமசாலிகளாகிய என்னுடையவர்களெல்லாரையும் ஆண்டவர் மிதித்துப்போட்டார்; என் வாலிபரை நொறுக்கும்படி எனக்கு விரோதமாய் ஒரு கூட்டத்தை வரவழைத்தார்; திராட்சப்பழத்தை ஆலையில் மிதிக்கிறதுபோல, ஆண்டவர் யூதா குமாரத்தியாகிய கன்னிகையை மிதித்தார்.

16இவைகளினிமித்தம் நான் அழுகிறேன்; என் கண், என் கண்ணே நீராய்ச்சொரிகிறது; என் உயிரைக் காப்பாற்றித் தேற்றுகிறவர் என்னை விட்டுத் தூரமானார்; பகைஞன் மேற்கொண்டதினால் என் பிள்ளைகள் பாழாய்ப்போனார்கள்.

17சீயோன் தன் கைகளை விரிக்கிறாள்; அவளைத் தேற்றுவார் ஒருவருமில்லை; கர்த்தர் யாக்கோபின் சுற்றுப்புறத்தாரை அவனுக்குச் சத்துருக்களாகக் கட்டளையிட்டார்; அவர்களுக்குள்ளே எருசலேம் தூர ஸ்திரீக்கு ஒப்பானாள்.

18கர்த்தர் நீதிபரர்; அவருடைய வாக்குக்கு விரோதமாய் நான் எழும்பினேன்; ஜனங்களே, நீங்கள் எல்லாரும் இதைக் கேட்டு என் துக்கத்தைப் பாருங்கள்; என் கன்னிகைகளும் என் வாலிபரும் சிறைப்பட்டுப்போனார்கள்.

19என்னைச் சிநேகித்தவர்களைக் கூப்பிட்டேன், அவர்களோ என்னை மோசம்போக்கினார்கள்; என் ஆசாரியர்களும் என் மூப்பர்களும் தங்கள் உயிரைக் காப்பாற்றத் தங்களுக்கு அப்பந்தேடுகையிலே நகரத்தில் மூச்சொடுங்கி மாண்டார்கள்.

20கர்த்தாவே, பாரும், நான் நெருக்கப்படுகிறேன்; என் குடல் கொதிக்கிறது; நான் கடுந்துரோகம் பண்ணினபடியினால் என் இருதயம் வியாகுலப்படுகிறது; வெளியிலே பட்டயம் என்னைப் பிள்ளையற்றவளாக்கிற்று, வீட்டுக்குள்ளே மரணம் வந்திருக்கிறது.

21நான் தவிக்கிறதை அவர்கள் கேட்டாலும் என்னைத் தேற்றுவார் ஒருவரும் இல்லை; என் பகைஞர் எல்லாரும் எனக்கு வந்த ஆபத்தைக் கேட்டு, தேவரீர் அதைச் செய்தபடியால் சந்தோஷமாயிருக்கிறார்கள்; நீர் கூறின நாளை வரப்பண்ணுவீர். அப்பொழுது அவர்களும் என்னைப்போலாவார்கள்.

22அவர்களுடைய பொல்லாப்பெல்லாம் உமது முகத்துக்கு முன்பாக வரக்கடவது. என் சகல பாதகங்களினிமித்தமும் நீர் எனக்குச் செய்ததுபோல அவர்களுக்கும் செய்யும்; என் பெருமூச்சுகள் மிகுதியாயின, என் இருதயம் பலட்சயமாயிருக்கிறது.

1எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான்.

2எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ, அவன் பாக்கியவான்.

3நான் அடக்கிவைத்தமட்டும், நித்தம் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று.

4இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாயிருந்ததினால், என் சாரம் உஷ்ணகால வறட்சிபோல வறண்டுபோயிற்று. (சேலா)

5நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன்; தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர். (சேலா)

6இதற்காகச் சகாயங்கிடைக்குங்காலத்தில் பக்தியுள்ளவனெவனும் உம்மை நோக்கி விண்ணப்பஞ் செய்வான்; அப்பொழுது மிகுந்த ஜலப்பிரவாகம் வந்தாலும் அது அவனை அணுகாது.

7நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர்; என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக்காத்து, இரட்சணியப் பாடல்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்வீர். (சேலா)

8நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.

9வாரினாலும் கடிவாளத்தினாலும் வாய் கட்டப்பட்டாலொழிய, உன் கிட்டச் சேராத புத்தியில்லாக் குதிரையைப்போலவும் கோவேறு கழுதையைப்போலவும் இருக்கவேண்டாம்.

10துன்மார்க்கனுக்கு அநேக வேதனைகளுண்டு; கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்து கொள்ளும்.

11நீதிமான்களே, கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; செம்மையான இருதயமுள்ளவர்களே, நீங்கள் எல்லாரும் ஆனந்தமுழக்கமிடுங்கள்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com