‹ முகப்புமுழுத் திட்டம்

ஆகஸ்ட் 25 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்ஆகஸ்ட் 25அடுத்த நாள் ›
குடும்பம்

I சாமுவேல் 17

முழு அதிகாரம் ›

1பெலிஸ்தர் யுத்தம் பண்ணுகிறதற்குத் தங்கள் சேனைகளைச் சேர்த்து, யூதாவிலுள்ள சோக்கோவிலே ஒருமித்துக் கூடி, சோக்கோவுக்கும் அசெக்காவுக்கும் நடுவே இருக்கிற எபேஸ்தம்மீமிலே பாளயமிறங்கினார்கள்.

2சவுலும் இஸ்ரவேல் மனுஷரும் ஒருமித்துக் கூடி, ஏலா பள்ளத்தாக்கிலே பாளயமிறங்கி, பெலிஸ்தருக்கு எதிராக யுத்தத்திற்கு அணிவகுத்து நின்றார்கள்.

3பெலிஸ்தர் அந்தப்பக்கத்தில் ஒரு மலையின்மேலும், இஸ்ரவேலர் இந்தப்பக்கத்தில் ஒரு மலையின்மேலும் நின்றார்கள்; அவர்களுக்கு நடுவே பள்ளத்தாக்கு இருந்தது.

4அப்பொழுது காத் ஊரானாகிய கோலியாத் என்னும் பேருள்ள ஒரு வீரன் பெலிஸ்தரின் பாளயத்திலிருந்து புறப்பட்டு வந்து நடுவே நிற்பான்; அவன் உயரம் ஆறு முழமும் ஒரு ஜாணுமாம்.

5அவன் தன் தலையின்மேல் வெண்கலச் சீராவைப் போட்டு, ஒரு போர்க்கவசம் தரித்துக்கொண்டிருப்பான்; அந்தக் கவசத்தின் நிறை ஐயாயிரம் சேக்கலான வெண்கலமாயிருக்கும்.

6அவன் தன் கால்களிலே வெண்கலக்கவசத்தையும் தன் தோள்களின்மேல் வெண்கலக் கேடகத்தையும் தரித்திருப்பான்.

7அவனுடைய ஈட்டித்தாங்கு நெசவுக்காரரின் படைமரத்தின் கனதியும் அவன் ஈட்டியின் அலகு அறுநூறு சேக்கல் இரும்புமாயிருக்கும்; பரிசை பிடிக்கிறவன் அவனுக்கு முன்னாக நடப்பான்.

8அவன் வந்து நின்று, இஸ்ரவேல் சேனைகளைப் பார்த்துச் சத்தமிட்டு, நீங்கள் யுத்தத்திற்கு அணிவகுத்து நிற்கிறது என்ன? நான் பெலிஸ்தன் அல்லவா? நீங்கள் சவுலின் சேவகர் அல்லவா? உங்களில் ஒருவனைத் தெரிந்து கொள்ளுங்கள், அவன் என்னிடத்தில் வரட்டும்.

9அவன் என்னோடே யுத்தம்பண்ணவும் என்னைக் கொல்லவும் சமர்த்தனானால், நாங்கள் உங்களுக்கு வேலைக்காரராயிருப்போம்; நான் அவனை ஜெயித்து அவனைக் கொல்வேனானால், நீங்கள் எங்களுக்கு வேலைக்காரராயிருந்து, எங்களைச் சேவிக்கவேண்டும் என்று சொல்லி,

10பின்னும் அந்தப் பெலிஸ்தன்: நான் இன்றையதினம் இஸ்ரவேலுடைய சேனைகளை நிந்தித்தேன்; நாம் ஒருவரோடு ஒருவர் யுத்தம்பண்ண ஒருவனை விடுங்கள் என்று சொல்லிக்கொண்டு வருவான்.

11சவுலும் இஸ்ரவேலர் அனைவரும் அந்தப் பெலிஸ்தனுடைய வார்த்தைகளைக் கேட்டு, கலங்கி மிகவும் பயப்பட்டார்கள்.

12தாவீது என்பவன் யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானாகிய ஈசாய் என்னும் பேருள்ள எப்பிராத்திய மனுஷனுடைய குமாரனாயிருந்தான்; ஈசாயுக்கு எட்டுக் குமாரர் இருந்தார்கள்; இவன் சவுலின் நாட்களிலே மற்ற ஜனங்களுக்குள்ளே வயது சென்ற கிழவனாய் மதிக்கப்பட்டான்.

13ஈசாயினுடைய மூன்று மூத்த குமாரர் சவுலோடேகூட யுத்தத்திற்குப் போயிருந்தார்கள்; யுத்தத்திற்குப் போயிருந்த அவனுடைய மூன்று குமாரரில் மூத்தவனுக்கு எலியாப் என்றும், இரண்டாங்குமாரனுக்கு அபினதாப் என்றும், மூன்றாங்குமாரனுக்குச் சம்மா என்றும் பேர்.

14தாவீது எல்லாருக்கும் இளையவன்; மூத்தவர்களாகிய அந்த மூன்று பேரும் சவுலோடேகூடப் போயிருந்தார்கள்.

15தாவீது சவுலைவிட்டுத் திரும்பிப் போய் பெத்லெகேமிலிருக்கிற தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான்.

16அந்தப் பெலிஸ்தன் காலையிலும் மாலையிலும் நாற்பது நாள் வந்துவந்து நிற்பான்.

17ஈசாய் தன் குமாரனாகிய தாவீதை நோக்கி: உன் சகோதரருக்கு இந்த ஒரு மரக்கால் வறுத்த பயற்றையும், இந்தப் பத்து அப்பங்களையும் எடுத்துக்கொண்டு, பாளயத்திலிருக்கிற உன் சகோதரரிடத்தில் ஓட்டமாய்ப் போய்,

18இந்தப் பத்துப் பால்கட்டிகளை ஆயிரம்பேருக்கு அதிபதியானவனிடத்தில் கொடுத்து, உன் சகோதரர் சுகமாயிருக்கிறார்களா என்று விசாரித்து, அவர்களிடத்தில் அடையாளம் வாங்கிக்கொண்டுவா என்றான்.

19அப்பொழுது சவுலும், அவர்களும், இஸ்ரவேலர் எல்லாரும், ஏலா பள்ளத்தாக்கிலே பெலிஸ்தரோடு யுத்தம்பண்ணிக்கொண்டிருந்தார்கள்.

20தாவீது அதிகாலையில் எழுந்து, ஆடுகளைக் காவலாளி வசமாய் விட்டு, ஈசாய் தனக்குக் கற்பித்தபடியே எடுத்துக்கொண்டுபோய், இரதங்கள் இருக்கிற இடத்திலே வந்தான்; சேனைகள் அணிவகுத்து நின்று, யுத்தத்திற்கென்று ஆர்ப்பரித்தார்கள்.

21இஸ்ரவேலரும் பெலிஸ்தரும் ஒருவருக்கு எதிராக ஒருவர் அணிவகுத்துக் கொண்டிருந்தார்கள்.

22அப்பொழுது தாவீது: தான் கொண்டுவந்தவைகளை இறக்கி, ரஸ்துக்களைக் காக்கிறவன் வசமாக வைத்துவிட்டு, சேனைக்குள் ஓடி, தன் சகோதரரைப் பார்த்து: சுகமாயிருக்கிறீர்களா என்று கேட்டான்.

23அவன் இவர்களோடே பேசிக்கொண்டிருக்கையில், இதோ, காத் ஊரானாகிய கோலியாத் என்னும் பேருள்ள அந்தப் பெலிஸ்த வீரன் பெலிஸ்தரின் சேனைகளிலிருந்து எழும்பிவந்து நின்று, முன் சொன்ன வார்த்தைகளையே சொன்னான்; அதைத் தாவீது கேட்டான்.

24இஸ்ரவேலர் எல்லாரும் அந்த மனுஷனைக் காணும்போது மிகவும் பயப்பட்டு, அவன் முகத்துக்கு விலகி ஓடிப்போவார்கள்.

25அந்நேரத்திலே இஸ்ரவேலர்: வந்து நிற்கிற அந்த மனுஷனைக் கண்டீர்களா, இஸ்ரவேலை நிந்திக்க வந்து நிற்கிறான்; இவனைக் கொல்லுகிறவன் எவனோ, அவனை ராஜா மிகவும் ஐசுவரியவானாக்கி, அவனுக்குத் தம்முடைய குமாரத்தியைத் தந்து, அவன் தகப்பன் வீட்டாருக்கு இஸ்ரவேலிலே சர்வமானியம் கொடுப்பார் என்றார்கள்.

26அப்பொழுது தாவீது தன்னண்டையிலே நிற்கிறவர்களைப் பார்த்து, இந்தப் பெலிஸ்தனைக் கொன்று இஸ்ரவேலுக்கு நேரிட்ட நிந்தையை நீக்குகிறவனுக்கு என்ன செய்யப்படும்; ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்திக்கிறதற்கு விருத்தசேதனம் இல்லாத இந்த பெலிஸ்தன் எம்மாத்திரம் என்றான்.

27அதற்கு ஜனங்கள்: அவனைக் கொல்லுகிறவனுக்கு இன்ன இன்னபடி செய்யப்படும் என்று முன் சொன்ன வார்த்தைகளையே அவனுக்குச் சொன்னார்கள்.

28அந்த மனுஷரோடே அவன் பேசிக்கொண்டிருக்கிறதை அவன் மூத்த சகோதரனாகிய எலியாப் கேட்டபோது, அவன் தாவீதின்மேல் கோபங்கொண்டு: நீ இங்கே வந்தது என்ன? வனாந்தரத்திலுள்ள அந்தக் கொஞ்ச ஆடுகளை நீ யார் வசத்தில் விட்டாய்? யுத்தத்தைப் பார்க்க அல்லவா வந்தாய்? உன் துணிகரத்தையும், உன் இருதயத்தின் அகங்காரத்தையும் நான் அறிவேன் என்றான்.

29அதற்குத் தாவீது: நான் இப்பொழுது செய்தது என்ன? நான் வந்ததற்கு முகாந்தரம் இல்லையா என்று சொல்லி,

30அவனை விட்டு, வேறொருவனிடத்தில் திரும்பி, அந்தப்பிரகாரமாகவே கேட்டான்; ஜனங்கள் முன்போலவே உத்தரவு சொன்னார்கள்.

31தாவீது சொன்ன வார்த்தைகளை அவர்கள் கேட்டு, அதைச் சவுலின் சமுகத்தில் அறிவித்தார்கள்; அப்பொழுது அவன் அவனை அழைப்பித்தான்.

32தாவீது சவுலை நோக்கி: இவனிமித்தம் ஒருவனுடைய இருதயமும் கலங்க வேண்டியதில்லை; உம்முடைய அடியானாகிய நான் போய், இந்தப் பெலிஸ்தனோடே யுத்தம்பண்ணுவேன் என்றான்.

33அப்பொழுது சவுல் தாவீதை நோக்கி: நீ இந்தப் பெலிஸ்தனோடே எதிர்த்து யுத்தம்பண்ண உன்னால் ஆகாது; நீ இளைஞன், அவனோ தன் சிறுவயது முதல் யுத்தவீரன் என்றான்.

34தாவீது சவுலைப்பார்த்து: உம்முடைய அடியான் என் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறபோது, ஒரு விசை ஒரு சிங்கமும் ஒரு விசை ஒரு கரடியும் வந்து, மந்தையிலிருக்கிற ஒரு ஆட்டைப் பிடித்துக்கொண்டது.

35நான் அதைத் தொடர்ந்துபோய், அதை அடித்து, அதை அதின் வாய்க்குத் தப்புவித்தேன்; அது என்மேல் பாய்ந்தபோது, நான் அதின் தாடியைப் பிடித்து, அதை அடித்துக் கொன்று போட்டேன்.

36அந்தச் சிங்கத்தையும் அந்தக் கரடியையும் உம்முடைய அடியானாகிய நான் கொன்றேன்; விருத்தசேதனமில்லாத இந்தப் பெலிஸ்தனும் அவைகளில் ஒன்றைப் போல இருப்பான்; அவன் ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்தித்தானே என்றான்.

37பின்னும் தாவீது: என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்தப் பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார் என்றான்; அப்பொழுது சவுல் தாவீதைப் பார்த்து: போ, கர்த்தர் உன்னுடனேகூட இருப்பாராக என்றான்.

38சவுல் தாவீதுக்குத் தன் வஸ்திரங்களை உடுத்துவித்து வெண்கலமான ஒரு சீராவை அவன் தலையின்மேல் போட்டு, ஒரு கவசத்தையும் அவனுக்குத் தரிப்பித்தான்.

39அவனுடைய பட்டயத்தை தாவீது தன் வஸ்திரங்கள்மேல் கட்டிக்கொண்டு, அதிலே அவனுக்குப் பழக்கமில்லாததினால் நடந்து பார்த்தான்; அப்பொழுது தாவீது சவுலை நோக்கி: நான் இவைகளைப் போட்டுக்கொண்டு போகக்கூடாது; இந்த அப்பியாசம் எனக்கு இல்லை என்று சொல்லி, அவைகளைக் களைந்துபோட்டு,

40தன் தடியைக் கையிலே பிடித்துக்கொண்டு, ஆற்றிலிருக்கிற ஐந்து கூழாங்கல்லுகளைத் தெரிந்தெடுத்து, அவைகளை மேய்ப்பருக்குரிய தன்னுடைய அடைப்பப்பையிலே போட்டு, தன் கவணைத் தன் கையிலே பிடித்துக்கொண்டு, அந்தப் பெலிஸ்தனண்டையிலே போனான்.

41பெலிஸ்தனும் நடந்து, தாவீதண்டைக்குக் கிட்டி வந்தான்; பரிசையைப் பிடிக்கிறவன் அவனுக்கு முன்னாக நடந்தான்.

42பெலிஸ்தன் சுற்றிப்பார்த்து: தாவீதைக் கண்டு, அவன் இளைஞனும் சவுந்தரிய ரூபமான சிவந்த மேனியுள்ளவனுமாயிருந்தபடியினால், அவனை அசட்டைபண்ணினான்.

43பெலிஸ்தன் தாவீதைப் பார்த்து: நீ தடிகளோடே என்னிடத்தில் வர நான் நாயா என்று சொல்லி, அவன் தன் தேவர்களைக்கொண்டு தாவீதைச் சபித்தான்.

44பின்னும் அந்தப் பெலிஸ்தன் தாவீதைப் பார்த்து: என்னிடத்தில் வா; நான் உன் மாம்சத்தை ஆகாயத்துப் பறவைகளுக்கும் காட்டு மிருகங்களுக்கும் கொடுப்பேன் என்றான்.

45அதற்குத் தாவீது: பெலிஸ்தனை நோக்கி: நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன்.

46இன்றையதினம் கர்த்தர் உன்னை என் கையில் ஒப்புக்கொடுப்பார்; நான் உன்னைக் கொன்று, உன் தலையை உன்னை விட்டு வாங்கி, பெலிஸ்தருடைய பாளயத்தின் பிணங்களை இன்றையதினம் ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் காட்டு மிருகங்களுக்கும் கொடுப்பேன்; அதனால் இஸ்ரவேலில் தேவன் ஒருவர் உண்டு என்று பூலோகத்தார் எல்லாரும் அறிந்துகொள்ளுவார்கள்.

47கர்த்தர் பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் இரட்சிக்கிறவர் அல்ல என்று இந்த ஜனக்கூட்டமெல்லாம் அறிந்து கொள்ளும்; யுத்தம் கர்த்தருடையது; அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான்.

48அப்பொழுது அந்தப் பெலிஸ்தன் எழும்பி, தாவீதுக்கு எதிராகக் கிட்டி வருகையில், தாவீது தீவிரமாய் அந்தச் சேனைக்கும் அந்தப் பெலிஸ்தனுக்கும் எதிராக ஓடி,

49தன் கையை அடைப்பத்திலே போட்டு, அதிலிருந்து ஒரு கல்லை எடுத்து, கவணிலே வைத்துச் சுழற்றி, பெலிஸ்தனுடைய நெற்றியிலே பட எறிந்தான்; அந்தக் கல் அவன் நெற்றியில் பதிந்து போனதினால், அவன் தரையிலே முகங்குப்புற விழுந்தான்.

50இவ்விதமாகத் தாவீது ஒரு கவணினாலும் ஒரு கல்லினாலும் பெலிஸ்தனை மேற்கொண்டு, அவனை மடங்கடித்து, அவனைக் கொன்று போட்டான்; தாவீதின் கையில் பட்டயம் இல்லாதிருந்தது.

51ஆகையால் தாவீது பெலிஸ்தனண்டையில் ஓடி அவன்மேல் நின்று, அவன் பட்டயத்தை எடுத்து, அதை அதின் உறையிலிருந்து உருவி, அவனைக்கொன்று அதினாலே அவன் தலையை வெட்டிப்போட்டான்; அப்பொழுது தங்கள் வீரன் செத்துப்போனான் என்று பெலிஸ்தர் கண்டு, ஓடிப்போனார்கள்.

52அப்பொழுது இஸ்ரவேலரும் யூதா மனுஷரும் எழும்பி, ஆர்ப்பரித்து, பள்ளத்தாக்கின் எல்லைமட்டும், எக்ரோனின் வாசல்கள்மட்டும், பெலிஸ்தரைத் துரத்தினார்கள்; சாராயீமின் வழியிலும், காத் பட்டணமட்டும், எக்ரோன் பட்டணமட்டும், பெலிஸ்தர் வெட்டுண்டு விழுந்தார்கள்.

53இஸ்ரவேல் புத்திரர் பெலிஸ்தரை மூர்க்கமாய்த் துரத்தின பிற்பாடு, திரும்பி வந்து, அவர்களுடைய பாளயங்களைக் கொள்ளையிட்டார்கள்.

54தாவீது பெலிஸ்தனுடைய தலையை எடுத்து, அதை எருசலேமுக்குக் கொண்டு வந்தான்; அவன் ஆயுதங்களையோ தன் கூடாரத்திலே வைத்தான்.

55தாவீது பெலிஸ்தனுக்கு எதிராகப் புறப்பட்டுப் போகிறதைச் சவுல் கண்டபோது, அவன் சேனாபதியாகிய அப்னேரைப் பார்த்து: அப்னேரே, இந்த வாலிபன் யாருடைய மகன் என்று கேட்டான்; அதற்கு அப்னேர்: ராஜாவே, எனக்குத் தெரியாது என்று உம்முடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.

56அப்பொழுது ராஜா: அந்தப் பிள்ளையாண்டான் யாருடைய மகன் என்று விசாரி என்றான்.

57தாவீது பெலிஸ்தனைக் கொன்று திரும்புகையில், அப்னேர் அவனைச் சவுலுக்கு முன்பாக அழைத்துக்கொண்டு போய்விட்டான்; பெலிஸ்தனுடைய தலை அவன் கையில் இருந்தது.

58அப்பொழுது சவுல்: வாலிபனே, நீ யாருடைய மகன் என்று அவனைக்கேட்டதற்கு, தாவீது: நான் பெத்லெகேம் ஊரானாயிருக்கிற உம்முடைய அடியானாகிய ஈசாயின் மகன் என்றான்.

1அன்றியும், பலமுள்ளவர்களாகிய நாம் நமக்கே பிரியமாய் நடவாமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்கவேண்டும்.

2நம்மில் ஒவ்வொருவனும் பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான நன்னையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன்.

3கிறிஸ்துவும் தமக்கே பிரியமாய் நடவாமல்: உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தைகள் என்மேல் விழுந்தது என்று எழுதியிருக்கிறபடியே நடந்தார்.

4தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது.

5நீங்கள் ஒருமனப்பட்டு நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனை ஒரே வாயினால் மகிமைப்படுத்தும்படிக்கு,

6பொறுமையையும் ஆறுதலையும் அளிக்கும் தேவன், கிறிஸ்து இயேசுவினுடைய மாதிரியின்படியே, நீங்கள் ஏகசிந்தையுள்ளவர்களாயிருக்கும்படி உங்களுக்கு அநுக்கிரகஞ்செய்வாராக.

7ஆதலால் தேவனுக்கு மகிமையுண்டாக, கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டதுபோல, நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள்.

8மேலும், பிதாக்களுக்குப்பண்ணப்பட்ட வாக்குத்தத்தங்களை உறுதியாக்கும்படிக்கு, தேவனுடைய சத்தியத்தினிமித்தம் இயேசுகிறிஸ்து விருத்தசேதனமுள்ளவர்களுக்கு ஊழியக்காரரானாரென்றும்;

9புறஜாதியாரும் இரக்கம்பெற்றதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்துகிறார்களென்றும் சொல்லுகிறேன். அந்தப்படி: இதினிமித்தம் நான் புறஜாதிகளுக்குள்ளே உம்மை அறிக்கைபண்ணி, உம்முடைய நாமத்தைச் சொல்லி, சங்கீதம் பாடுவேன் என்று எழுதியிருக்கிறது.

10மேலும், புறஜாதிகளே, அவருடைய ஜனங்களோடேகூடக் களிகூருங்கள் என்கிறார்.

11மேலும், புறஜாதிகளே, எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள்; ஜனங்களே, எல்லாரும் அவரைப் புகழுங்கள் என்றும் சொல்லுகிறார்.

12மேலும், ஈசாயின் வேரும் புறஜாதியாரை ஆளும்படிக்கு எழும்புகிறவருமாகிய ஒருவர் தோன்றுவார்; அவரிடத்தில் புறஜாதியார் நம்பிக்கை வைப்பார்கள் என்று ஏசாயா சொல்லுகிறான்.

13பரிசுத்த ஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக.

14என் சகோதரரே, நீங்கள் நற்குணத்தினால் நிறைந்தவர்களும், சகல அறிவினாலும் நிரப்பப்பட்டவர்களும், ஒருவருக்கொருவர் புத்திசொல்ல வல்லவர்களுமாயிருக்கிறீர்களென்று நானும் உங்களைக் குறித்து நிச்சயித்திருக்கிறேன்.

15அப்படியிருந்தும், சகோதரரே, புறஜாதியாராகிய பலி பரிசுத்த ஆவியினாலே பரிசுத்தமாக்கப்பட்டு, தேவனுக்குப் பிரியமான பலியாகும்படிக்கு, நான் தேவனுடைய சுவிசேஷ ஊழியத்தை நடத்தும் ஆசாரியனாயிருந்து புறஜாதிகளுக்கு இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனாகும்பொருட்டு,

16தேவன் எனக்கு அளித்த கிருபையினாலே உங்களுக்கு ஞாபகப்படுத்தும்படிக்கு இவைகளை நான் அதிக தைரியமாய் எழுதினேன்.

17ஆதலால் நான் தேவனுக்குரியவைகளைக்குறித்து இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மேன்மைபாராட்ட எனக்கு இடமுண்டு.

18புறஜாதியாரை வார்த்தையினாலும் செய்கையினாலும் கீழ்ப்படியப்பண்ணும்படிக்கு, அற்புத அடையாளங்களின் பலத்தினாலும், தேவ ஆவியின் பலத்தினாலும், கிறிஸ்துவானவர் என்னைக்கொண்டு நடப்பித்தவைகளைச் சொல்வதல்லாமல் வெறொன்றையும் சொல்ல நான் துணிவதில்லை.

19இப்படி எருசலேம் துவக்கிச் சுற்றிலும், இல்லிரிக்கம் தேசம்வரைக்கும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பூரணமாய்ப் பிரசங்கித்திருக்கிறேன்.

20மேலும் அவருடைய செய்தியை அறியாதிருந்தவர்கள் காண்பார்களென்றும், கேள்விப்படாதிருந்தவர்கள் உணர்ந்துகொள்வார்களென்றும் எழுதியிருக்கிறபடியே,

21நான் மற்றொருவனுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டாதபடிக்கு கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்பட்டிராத இடங்களில் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி நாடுகிறேன்.

22உங்களிடத்தில் வருகிறதற்கு இதினாலே அநேகந்தரம் தடைபட்டேன்.

23இப்பொழுது இந்தத் திசைகளிலே எனக்கு இடமில்லாதபடியினாலும், உங்களிடத்தில் வரும்படி அனேக வருஷமாய் எனக்கு மிகுந்த விருப்பம் உண்டாயிருக்கிறபடியினாலும்,

24நான் ஸ்பானியா தேசத்திற்குப் பிரயாணம்பண்ணுகையில் உங்களிடத்தில் வந்து, உங்களைக் கண்டுகொள்ளவும், உங்களிடத்தில் சற்றுத் திருப்தியடைந்த பின்பு, அவ்விடத்திற்கு உங்களால் வழிவிட்டனுப்பப்படவும், எனக்குச் சமயங்கிடைக்குமென்று நம்பியிருக்கிறேன்.

25இப்பொழுதோ பரிசுத்தவான்களுக்கு உதவிசெய்யுங்காரியமாக நான் எருசலேமுக்குப் பிரயாணம்பண்ண எத்தனமாயிருக்கிறேன்.

26மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ளவர்கள் எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்குள்ளே இருக்கிற தரித்திரருக்காகச் சில பொருள்சகாயம்செய்ய விருப்பங்கொண்டிருக்கிறார்கள்;

27இப்படிச்செய்வது நல்லதென்று எண்ணினார்கள்; இப்படிச் செய்கிறதற்கு அவர்கள் கடனாளிகளாயும் இருக்கிறார்கள். எப்படியென்றால், புறஜாதியார் அவர்களுடைய ஞானநன்மைகளில் பங்குபெற்றிருக்க, சரீரநன்மைகளால் அவர்களுக்கு உதவிசெய்ய இவர்கள் கடனாளிகளாயிருக்கிறார்களே.

28இந்தக் காரியத்தை நான் நிறைவேற்றி, இந்தப் பலனை அவர்கள் கையிலே பத்திரமாய் ஒப்புவித்தபின்பு, உங்கள் ஊர் வழியாய் ஸ்பானியாவுக்குப் போவேன்.

29நான் உங்களிடத்தில் வரும்போது கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் சம்பூரணமான ஆசீர்வாதத்தோடே வருவேனென்று அறிந்திருக்கிறேன்.

30மேலும் சகோதரரே, தேவசித்தத்தினாலே நான் சந்தோஷத்துடனே உங்களிடத்தில் வந்து உங்களோடு இளைப்பாறும்படியாக,

31யூதேயாவிலிருக்கிற அவிசுவாசிகளுக்கு நான் தப்புவிக்கப்படும்படிக்கும், நான் எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்குச் செய்யப்போகிற தர்மசகாயம் அவர்களால் அங்கிகரிக்கப்படும்படிக்கும்,

32நீங்கள் தேவனை நோக்கிச் செய்யும் ஜெபங்களில், நான் போராடுவதுபோல நீங்களும் என்னோடுகூடப் போராடவேண்டுமென்று நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிமித்தமும், ஆவியானவருடைய அன்பினிமித்தமும், உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.

33சமாதானத்தின் தேவன் உங்களனைவரோடுங்கூட இருப்பாராக. ஆமென்.

தனிவாசிப்பு

1ஐயோ! ஆண்டவர் தமது கோபத்தில் சீயோன் குமாரத்தியை மந்தாரத்தினால் மூடினார்; அவர் தமது கோபத்தின் நாளிலே தமது பாதபீடத்தை நினையாமல் இஸ்ரவேலின் மகிமையை வானத்திலிருந்து தரையிலே விழத்தள்ளினார்.

2ஆண்டவர் தப்பவிடாமல் யாக்கோபின் வாசஸ்தலங்களையெல்லாம் விழுங்கினார்; அவர் யூதா குமாரத்தியின் அரண்களையெல்லாம் தமது சினத்திலே இடித்து, தரையோடே தரையாக்கிப்போட்டார்; ராஜ்யத்தையும் அதின் பிரபுக்களையும் பரிசுத்தக்குலைச்சலாக்கினார்.

3அவர் தமது உக்கிரகோபத்திலே இஸ்ரவேலின் கொம்பு முழுவதையும் வெட்டிப்போட்டார்; சத்துருவுக்கு முன்பாக அவர் தமது வலதுகரத்தைப் பின்னாகத் திருப்பி, சுற்றிலும் இருப்பதைப் பட்சிக்கிற அக்கினிஜூவாலையைப்போல் யாக்கோபுக்கு விரோதமாக எரித்தார்.

4பகைஞனைப்போல் தம்முடைய வில்லை நாணேற்றினார்; சத்துருவைப்போல் தம்முடைய வலதுகரத்தை நீட்டி நின்று, கண்ணுக்கு இன்பமானதையெல்லாம் அழித்துப்போட்டார்; சீயோன் குமாரத்தியின் கூடாரத்திலே தம்முடைய உக்கிரத்தை அக்கினியைப்போல் சொரியப்பண்ணினார்.

5ஆண்டவர் பகைஞன் போலானார்; இஸ்ரவேலை விழுங்கினார்; அதின் அரமனைகளையெல்லாம் விழுங்கினார்; அதின் அரண்களை அழித்து, யூதா குமாரத்திக்கு மிகுந்த துக்கிப்பையும் சலிப்பையும் உண்டாக்கினார்.

6தோட்டத்தின் வேலியைப்போல இருந்த தம்முடைய வேலியைப் பலவந்தமாய்ப் பிடுங்கிப்போட்டார்; சபைகூடுகிற தம்முடைய ஸ்தலங்களை அழித்தார்; கர்த்தர் சீயோனிலே பண்டிகையையும் ஓய்வு நாளையும் மறக்கப்பண்ணி, தமது உக்கிரமான கோபத்தில் ராஜாவையும் ஆசாரியனையும் புறக்கணித்துவிட்டார்.

7ஆண்டவர் தமது பலிபீடத்தை ஒழித்துவிட்டார்; தமது பரிசுத்த ஸ்தலத்தை வெறுத்துவிட்டார்; அதினுடைய அரமனைகளின் மதில்களைச் சத்துருவின் கையில் ஒப்புக்கொடுத்தார்; பண்டிகைநாளில் ஆரவாரம்பண்ணுகிறதுபோல் கர்த்தரின் ஆலயத்தில் ஆரவாரம்பண்ணினார்கள்.

8கர்த்தர் சீயோன் குமாரத்தியின் அலங்கத்தை நிர்மூலமாக்க நினைத்தார்; நூலைப்போட்டார்; அழிக்காதபடித் தம்முடைய கையை அவர் முடக்கிக்கொண்டதில்லை; அரணிப்பையும் அலங்கத்தையும் புலம்பச்செய்தார்; அவைகள் முற்றிலும் பெலனற்றுக்கிடக்கிறது.

9அவள் வாசல்கள் தரையில் அமிழ்ந்திக்கிடக்கிறது; அவள் தாழ்ப்பாள்களை முறித்து உடைத்துப்போட்டார்; அவள் ராஜாவும் அவள் பிரபுக்களும் புறஜாதியாருக்குள் இருக்கிறார்கள்; வேதமுமில்லை; அவள் தீர்க்கதரிசிகளுக்குக் கர்த்தரால் தரிசனம் கிடைக்கிறதுமில்லை.

10சீயோன் குமாரத்தியின் மூப்பர்கள் தரையில் உட்கார்ந்து மெளனமாய் இருக்கிறார்கள்; தங்கள் தலைகளின்மேல் புழுதியைப் போட்டுக்கொள்ளுகிறார்கள்; இரட்டு உடுத்தியிருக்கிறார்கள்; எருசலேமின் கன்னியர்கள் தலைகவிழ்ந்து தரையை நோக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

11என் ஜனமாகிய குமாரத்தியின் நொறுங்குதலினிமித்தம் கண்ணீர் சொரிகிறதினால் என் கண்கள் பூத்துப்போகிறது; என் குடல்கள் கொதிக்கிறது; என் ஈரல் இளகித் தரையிலே வடிகிறது; குழந்தைகளும் பாலகரும் நகரத்தின் வீதிகளிலே மூர்ச்சித்துக்கிடக்கிறார்கள்.

12அவைகள் குத்துண்டவர்களைப்போல நகரத்தின் வீதிகளிலே மூர்ச்சித்துக்கிடக்கும்போதும், தங்கள் தாய்களின் மடியிலே தங்கள் பிராணனை விடும்போதும், தங்கள் தாய்களை நோக்கி: தானியமும் திராட்சரசமும் எங்கே என்கிறார்கள்.

13எருசலேம் குமாரத்தியே, நான் உனக்குச் சாட்சியாக என்னத்தைச் சொல்லுவேன்? உன்னை எதற்கு ஒப்பிடுவேன்? சீயோன் குமாரத்தியாகிய கன்னிகையே, நான் உன்னைத் தேற்றும்படிக்கு உன்னை எதற்கு நிகர்சொல்லுவேன்? உன் காயம் சமுத்திரத்தைபோல் பெரிதாயிருக்கிறதே, உன்னைக் குணமாக்குகிறவன் யார்?

14உன் தீர்க்கதரிசிகள் அபத்தமும் வியர்த்தமுமான தரிசனங்களை உனக்காகத் தரிசித்தார்கள்; அவர்கள் உன் சிறையிருப்பை விலக்கும்படி உன் அக்கிரமத்தை எடுத்துக்காட்டாமல், அபத்தமானவைகளையும் கேடானவைகளையும் உனக்காகத் தரிசித்தார்கள்.

15வழிப்போக்கர் யாவரும் உன்பேரில் கை கொட்டுகிறார்கள்; எருசலேம் குமாரத்தியின்பேரில் ஈசற்போட்டு, தங்கள் தலைகளைத் துலுக்கி: பூரணவடிவும் சர்வபூமியின் மகிழ்ச்சியுமான நகரம் இதுதானா என்கிறார்கள்.

16உன் பகைஞர் எல்லாரும் உன்பேரில் தங்கள் வாயைத் திறக்கிறார்கள்; ஈசற்போட்டுப் பற்கடிக்கிறார்கள்; அதை விழுங்கினோம், நாம் காத்திருந்த நாள் இதுவே, இப்பொழுது நமக்குக் கிடைத்தது, அதைக் கண்டோம் என்கிறார்கள்.

17கர்த்தர் தாம் நினைத்ததைச் செய்தார்; பூர்வநாட்கள் முதற்கொண்டு தாம் கட்டளையிட்ட தமது வார்த்தையை நிறைவேற்றினார்; அவர் தப்பவிடாமல் நிர்மூலமாக்கி, உன்மேல் பகைஞன் சந்தோஷிக்கும்படி செய்தார்; உன் சத்துருக்களின் கொம்பை உயர்த்தினார்.

18அவர்கள் இருதயம் ஆண்டவரை நோக்கிக் கூப்பிடுகிறது; சீயோன் குமாரத்தியின் மதிலே, இரவும் பகலும் நதியவ்வளவு கண்ணீர் விடு, ஓய்ந்திராதே, உன் கண்ணின் கறுப்புவிழியை சும்மாயிருக்கவொட்டாதே.

19எழுந்திரு, இராத்திரியிலே முதற்சாமத்தில் கூப்பிடு; ஆண்டவரின் சமுகத்தில் உன் இருதயத்தைத் தண்ணீரைப்போல ஊற்றிவிடு; எல்லாத் தெருக்களின் முனையிலும் பசியினால் மூர்ச்சித்துப்போகிற உன் குழந்தைகளின் பிராணனுக்காக உன் கைகளை அவரிடத்திற்கு ஏறெடு.

20கர்த்தாவே, யாருக்கு இந்தப் பிரகாரமாகச் செய்தீரென்று நோக்கிப்பாரும்; ஸ்திரீகள் கைக்குழந்தைகளாகிய தங்கள் கர்ப்பக்கனியைத் தின்னவேண்டுமோ? ஆண்டவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் ஆசாரியனும் தீர்க்கதரிசியும் கொலைசெய்யப்படவேண்டுமோ?

21இளைஞனும் முதிர்வயதுள்ளவனும் தெருக்களில் தரையிலே கிடக்கிறார்கள்; என் கன்னிகைகளும் என் வாலிபரும் பட்டயத்தால் விழுந்தார்கள்; உமது கோபத்தின் நாளிலே வெட்டி, அவர்களைத் தப்பவிடாமல் கொன்றுபோட்டீர்.

22பண்டிகைநாளில் கும்புகளை வரவழைப்பதுபோல் சுற்றிலுமிருந்து எனக்குத் திகில்களை வரவழைத்தீர்; கர்த்தருடைய கோபத்தின் நாளிலே தப்பினவனும் மீதியானவனுமில்லை; நான் கைகளில் ஏந்தி வளர்த்தவர்களை என் பகைஞன் நாசம்பண்ணினான்.

1நீதிமான்களே, கர்த்தருக்குள் களிகூருங்கள்; துதிசெய்வது செம்மையானவர்களுக்குத் தகும்.

2சுரமண்டலத்தினால் கர்த்தரைத் துதித்து, பத்து நரம்பு வீணையினாலும் அவரைக் கீர்த்தனம் பண்ணுங்கள்.

3அவருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; ஆனந்த சத்தத்தோடே வாத்தியங்களை நேர்த்தியாய் வாசியுங்கள்.

4கர்த்தருடைய வார்த்தை உத்தமமும், அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது.

5அவர் நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறார்; பூமி கர்த்தருடைய காருணியத்தினால் நிறைந்திருக்கிறது.

6கர்த்தருடைய வார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டது.

7அவர் சமுத்திர ஜலங்களைக் குவியலாகச் சேர்த்து, ஆழமான ஜலங்களைப் பொக்கிஷவைப்பாக வைக்கிறார்.

8பூமியெல்லாம் கர்த்தருக்குப் பயப்படுவதாக; உலகத்திலுள்ள குடிகளெல்லாம் அவருக்கு அஞ்சியிருப்பதாக.

9அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும்.

10கர்த்தர் ஜாதிகளின் ஆலோசனையை விருதாவாக்கி, ஜனங்களுடைய நினைவுகளை அவமாக்குகிறார்.

11கர்த்தருடைய ஆலோசனை நித்தியகாலமாகவும், அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாகவும் நிற்கும்.

12கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட ஜாதியும், அவர் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்துகொண்ட ஜனமும் பாக்கியமுள்ளது.

13கர்த்தர் வானத்திலிருந்து நோக்கிப்பார்த்து, எல்லா மனுபுத்திரரையும் காண்கிறார்.

14தாம் வாசமாயிருக்கிற ஸ்தானத்திலிருந்து பூமியின் குடிகள் எல்லார்மேலும் கண்ணோக்கமாயிருக்கிறார்.

15அவர்களுடைய இருதயங்களையெல்லாம் அவர் உருவாக்கி, அவர்கள் செய்கைகளையெல்லாம் கவனித்திருக்கிறார்.

16எந்த ராஜாவும் தன் சேனையின் மிகுதியால் இரட்சிக்கப்படான்; சவுரியவானும் தன் பலத்தின் மிகுதியால் தப்பான்.

17இரட்சிக்கிறதற்குக் குதிரை விருதா; அது தன் மிகுந்த வீரியத்தால் தப்புவியாது.

18தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்;

19பஞ்சத்தில் அவர்களை உயிரோடே காக்கவும், கர்த்தருடைய கண் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கிறது.

20நம்முடைய ஆத்துமா கர்த்தருக்குக் காத்திருக்கிறது; அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர்.

21அவருடைய பரிசுத்த நாமத்தை நாம் நம்பியிருக்கிறபடியால், நம்முடைய இருதயம் அவருக்குள் களிகூரும்.

22கர்த்தாவே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறபடியே உமது கிருபை எங்கள்மேல் இருப்பதாக.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com