‹ முகப்புமுழுத் திட்டம்

ஆகஸ்ட் 26 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்ஆகஸ்ட் 26அடுத்த நாள் ›
குடும்பம்

I சாமுவேல் 18

முழு அதிகாரம் ›

1அவன் சவுலோடே பேசி முடிந்த பின்பு, யோனத்தானுடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடே ஒன்றாய் இசைந்திருந்தது; யோனத்தான் அவனைத் தன் உயிரைப்போலச் சிநேகித்தான்.

2சவுல் அவனை அவன் தகப்பன் வீட்டுக்குத் திரும்பிப்போக ஒட்டாமல், அன்று முதல் தன்னிடத்தில் வைத்துக்கொண்டான்.

3யோனத்தான் தாவீதைத் தன் ஆத்துமாவைப்போலச் சிநேகித்ததினால், அவனும் இவனும் உடன்படிக்கைபண்ணிக்கொண்டார்கள்.

4யோனத்தான் போர்த்துக்கொண்டிருந்த சால்வையைக் கழற்றி, அதையும், தன் வஸ்திரத்தையும், தன் பட்டயத்தையும், தன் வில்லையும், தன் கச்சையையும் கூடத் தாவீதுக்குக் கொடுத்தான்.

5தாவீது சவுல் தன்னை அனுப்புகிற எவ்விடத்திற்கும் போய், புத்தியாய்க் காரியத்தை நடப்பித்ததினால், சவுல் அவனை யுத்தமனுஷரின்மேல் அதிகாரியாக்கினான்; அவன் எல்லா ஜனத்தின் கண்களுக்கும், சவுலுடைய ஊழியக்காரரின் கண்களுக்கும்கூடப் பிரியமாயிருந்தான்.

6தாவீது பெலிஸ்தனைக் கொன்று திரும்பி வந்தபின்பு, ஜனங்கள் திரும்ப வரும்போதும், ஸ்திரீகள் இஸ்ரவேலின் சகல பட்டணங்களிலுமிருந்து, ஆடல் பாடலுடன் புறப்பட்டு, மேளங்களோடும் கீதவாத்தியங்களோடும் சந்தோஷமாய் ராஜாவாகிய சவுலுக்கு எதிர்கொண்டு வந்தார்கள்.

7அந்த ஸ்திரீகள் ஆடிப்பாடுகையில்: சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று முறைமுறையாகப் பாடினார்கள்.

8அந்த வார்த்தை சவுலுக்கு விசனமாயிருந்தது; அவன் மிகுந்த எரிச்சலடைந்து, தாவீதுக்குப் பதினாயிரம், எனக்கோ ஆயிரம் கொடுத்தார்கள்; இன்னும் ராஜாங்கமாத்திரம் அவனுக்குக் குறைவாயிருக்கிறது என்று சொல்லி,

9அந்நாள் முதற்கொண்டு சவுல் தாவீதைக் காய்மகாரமாய்ப் பார்த்தான்.

10மறுநாளிலே தேவனால் விடப்பட்ட பொல்லாத ஆவி சவுலின்மேல் இறங்கிற்று; அவன் வீட்டிற்குள்ளே தீர்க்கதரிசனம் சொல்லிக்கொண்டிருந்தான்; அப்பொழுது தாவீது தினந்தோறும் செய்கிறபடி, தன் கையினால் சுரமண்டலத்தை வாசித்துக்கொண்டிருந்தான்; சவுலின் கையிலே ஈட்டியிருந்தது.

11அப்பொழுது சவுல் தாவீதைச் சுவரோடே சேர்த்து உருவக் குத்திப்போடுவேன் என்று ஈட்டியை அவன்மேல் எறிந்தான்; ஆனாலும் தாவீது விலகி இரண்டு தரம் அவனுக்குத் தப்பினான்.

12கர்த்தர் தாவீதோடேகூட இருக்கிறார் என்றும் தன்னை விட்டு விலகிப்போனார் என்றும், சவுல் கண்டு, தாவீதுக்குப் பயந்து,

13அவனைத் தன்னைவிட்டு அப்புறப்படுத்தி, அவனை ஆயிரம்பேருக்கு அதிபதியாக வைத்தான்; அப்படியே அவன் ஜனத்திற்கு முன்பாகப் போக்கும் வரத்துமாயிருந்தான்.

14தாவீது தன் செய்கைகளிலெல்லாம் புத்திமானாய் நடந்தான்; கர்த்தர் அவனோடேகூட இருந்தார்.

15அவன் மகா புத்திமானாய் நடக்கிறதைச் சவுல் கண்டு, அவனுக்குப் பயந்திருந்தான்.

16இஸ்ரவேலரும் யூதா ஜனங்களுமாகிய யாவரும் தாவீதைச் சிநேகித்தார்கள்; அவர்களுக்கு முன்பாக அவன் போக்கும் வரத்துமாயிருந்தான்.

17என் கை அல்ல, பெலிஸ்தரின் கையே அவன்மேல் விழட்டும் என்று சவுல் நினைத்துக்கொண்டு, சவுல் தாவீதை நோக்கி: இதோ, என் மூத்த குமாரத்தியாகிய மேராவை உனக்கு மனைவியாகக் கொடுப்பேன்; நீ எனக்கு நல்ல சேவகனாய் மாத்திரம் இருந்து, கர்த்தருடைய யுத்தங்களை நடத்து என்றான்.

18அப்பொழுது தாவீது சவுலைப் பார்த்து: ராஜாவுக்கு மருமகனாகிறதற்கு நான் எம்மாத்திரம், என் ஜீவன் எம்மாத்திரம், இஸ்ரவேலிலே என் தகப்பன் வம்சமும் எம்மாத்திரம் என்றான்.

19சவுலின் குமாரத்தியாகிய மேராப் தாவீதுக்குக் கொடுக்கப்படுங்காலம் வந்தபோது, அவள் மேகோலாத்தியனாகிய ஆதரியேலுக்கு மனைவியாகக் கொடுக்கப்பட்டாள்.

20சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தாவீதை நேசித்தாள்; அது சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அது அவனுக்குச் சந்தோஷமாயிருந்தது.

21அவள் அவனுக்குக் கண்ணியாயிருக்கவும், பெலிஸ்தரின் கை அவன்மேல் விழவும், அவளை அவனுக்குக் கொடுப்பேன் என்று சவுல் எண்ணி, தாவீதை நோக்கி: நீ என்னுடைய இரண்டாம் குமாரத்தியினால் இன்று எனக்கு மருமகனாவாய் என்றான்.

22பின்பு சவுல் தன் ஊழியக்காரரைப் பார்த்து: நீங்கள் தாவீதோடே இரகசியமாய்ப் பேசி: இதோ, ராஜா உன்மேல் பிரியமாயிருக்கிறார்; அவருடைய ஊழியக்காரர் எல்லாரும் உம்மைச் சிநேகிக்கிறார்கள்; இப்போதும் நீர் ராஜாவுக்கு மருமகனானால் நலம் என்று சொல்லுங்கள் என்று கற்பித்தான்.

23சவுலின் ஊழியக்காரர் இந்த வார்த்தைகளைத் தாவீதின் செவிகள் கேட்கப் பேசினார்கள்; அப்பொழுது தாவீது, நான் ராஜாவுக்கு மருமகனாகிறது லேசான காரியமா? நான் எளியவனும், அற்பமாய் எண்ணப்பட்டவனுமாயிருக்கிறேன் என்றான்.

24தாவீது இன்ன இன்னபடி சொன்னான் என்று சவுலின் ஊழியக்காரர் அவனுக்கு அறிவித்தார்கள்.

25அப்பொழுது சவுல்: ராஜா பரிசத்தை விரும்பாமல், பெலிஸ்தரின் நூறு நுனித்தோல்களினால் ராஜாவின் சத்துருக்களிடத்தில் பழிவாங்க விருப்பமாயிருக்கிறார் என்று தாவீதுக்குச் சொல்லுங்கள் என்றான்; தாவீதை பெலிஸ்தரின் கையினால் விழப்பண்ணுவதே சவுலுடைய எண்ணமாயிருந்தது.

26அவன் ஊழியக்காரர் தாவீதுக்கு இந்த வார்த்தைகளைச் சொன்னபோது, ராஜாவுக்கு மருமகனாகிறது தாவீதுக்குப் பிரியமாயிருந்தது.

27அதற்குக் குறித்த நாட்கள் நிறைவேறுமுன்னே, தாவீது எழுந்து, தன் மனுஷரைக் கூட்டிக்கொண்டுபோய், பெலிஸ்தரில் இருநூறுபேரை வெட்டி, அவர்கள் நுனித்தோல்களைக் கொண்டு வந்து, தான் ராஜாவுக்கு மருமகனாகும்படிக்கு, அவைகளை ராஜாவுக்கு எண்ணிச் செலுத்தினான்; அப்பொழுது சவுல் தன் குமாரத்தியாகிய மீகாளை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான்.

28கர்த்தர் தாவீதோடிருக்கிறார் என்று சவுல் கண்டறிந்து கொண்டான்; சவுலின் குமாரத்தியாகிய மீகாளும் அவனை நேசித்தாள்.

29ஆகையால் சவுல் இன்னும் அதிகமாய்த் தாவீதுக்குப் பயந்து, தான் உயிரோடிருந்த நாளெல்லாம் தாவீதுக்குச் சத்துருவாயிருந்தான்.

30பெலிஸ்தருடைய பிரபுக்கள் புறப்படுகிறபோதெல்லாம் தாவீது சவுலுடைய ஊழியக்காரர் எல்லாரைப்பார்க்கிலும் புத்திமானாய் நடந்துகொண்டான்; அவன் பேர் மிகவும் கனம்பெற்றது.

1கெங்கிரேயா ஊர் சபைக்கு ஊழியக்காரியாகிய நம்முடைய சகோதரி பெபேயாளை நீங்கள் கர்த்தருக்குள் பரிசுத்தவான்களுக்கேற்றபடி ஏற்றுக்கொண்டு,

2எந்தக் காரியத்தில் உங்கள் உதவி அவளுக்குத் தேவையாயிருக்கிறதோ அதிலே நீங்கள் அவளுக்கு உதவிசெய்யவேண்டுமென்று அவளை உங்களிடத்தில் ஒப்புவிக்கிறேன்; அவள் அநேகருக்கும் எனக்குங்கூட ஆதரவாயிருந்தவள்.

3கிறிஸ்து இயேசுவுக்குள் என் உடன் வேலையாட்களாகிய பிரிஸ்கில்லாளையும் ஆக்கில்லாவையும் வாழ்த்துங்கள்.

4அவர்கள் என் பிராணனுக்காகத் தங்கள் கழுத்தைக் கொடுத்தவர்கள்; அவர்களைப்பற்றி நான் மாத்திரமல்ல, புறஜாதியாரில் உண்டான சபையாரெல்லாரும் நன்றியறிதலுள்ளவர்களாயிருக்கிறார்கள்.

5அவர்களுடைய வீட்டிலே கூடிவருகிற சபையையும் வாழ்த்துங்கள். அகாயாவிலே கிறிஸ்துவுக்கு முதற்பலனாகிய என் பிரியமான எப்பனெத்தை வாழ்த்துங்கள்.

6எங்களுக்காக மிகவும் பிரயாசப்பட்ட மரியாளை வாழ்த்துங்கள்.

7அப்போஸ்தலருக்குள் பெயர்பெற்றவர்களும் எனக்கு முந்திக் கிறிஸ்துவுக்குள்ளானவர்களும் என் இனத்தாரும் என்னுடனேகூடக் காவலில் கட்டுண்டவர்களுமாயிருக்கிற அன்றோனீக்கையும் யூனியாவையும் வாழ்த்துங்கள்.

8கர்த்தருக்குள் எனக்குப் பிரியமான அம்பிலியாவை வாழ்த்துங்கள்.

9கிறிஸ்துவுக்குள் நம்மோடே உடன்வேலையாளாகிய உர்பானையும், என் பிரியமான ஸ்தாக்கியையும் வாழ்த்துங்கள்.

10கிறிஸ்துவுக்குள் உத்தமனாகிய அப்பெல்லேயை வாழ்த்துங்கள். அரிஸ்தொபூலுவின் வீட்டாரை வாழ்த்துங்கள்.

11என் இனத்தானாகிய ஏரோதியோனை வாழ்த்துங்கள். நர்கீசுவின் வீட்டாரில் கர்த்தருக்குட்பட்டவர்களை வாழ்த்துங்கள்.

12கர்த்தருக்குள் பிரயாசப்படுகிற திரிபேனாளையும் திரிபோசாளையும் வாழ்த்துங்கள். கர்த்தருக்குள் மிகவும் பிரயாசப்பட்ட பிரியமான பெர்சியாளை வாழ்த்துங்கள்.

13கர்த்தருக்குள் தெரிந்துகொள்ளப்பட்ட ரூபையும், எனக்கும் தாயாகிய அவனுடைய தாயையும் வாழ்த்துங்கள்.

14அசிங்கிரீத்துவையும், பிலெகோனையும், எர்மாவையும், பத்திரொபாவையும், எர்மேயையும், அவர்களோடிருக்கிற சகோதரரையும் வாழ்த்துங்கள்.

15பிலொலோகையும், யூலியாளையும், நேரேயையும், அவனுடைய சகோதரியையும், ஒலிம்பாவையும், அவர்களோடிருக்கிற பரிசுத்தவான்களெல்லாரையும் வாழ்த்துங்கள்.

16ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள். கிறிஸ்துவின் சபையார் உங்களை வாழ்த்துகிறார்கள்.

17அன்றியும் சகோதரரே, நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய்ப் பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக்குறித்து எச்சரிக்கையாயிருந்து, அவர்களை விட்டு விலகவேண்டுமென்று உங்களுக்குப் புத்தி சொல்லுகிறேன்.

18அப்படிப்பட்டவர்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்யாமல் தங்கள் வயிற்றுக்கே ஊழியஞ்செய்து, நயவசனிப்பினாலும் இச்சகப்பேச்சினாலும், கபடில்லாதவர்களுடைய இருதயங்களை வஞ்சிக்கிறவர்களாயிருக்கிறார்கள்.

19உங்கள் கீழ்ப்படிதல் யாவருக்கும் தெரியவந்திருக்கிறது. ஆகையால் உங்களைக்குறித்துச் சந்தோஷப்படுகிறேன்; ஆனாலும் நீங்கள் நன்மைக்கு ஞானிகளும் தீமைக்குப் பேதைகளுமாயிருக்கவேண்டுமென்று விரும்புகிறேன்.

20சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்.

21என் உடன்வேலையாளாகிய தீமோத்தேயும், என் இனத்தாராகிய லூகியும், யாசோனும், சொசிபத்தரும் உங்களை வாழ்த்துகிறார்கள்.

22இந்த நிருபத்தை எழுதின தெர்தியுவாகிய நான் கர்த்தருக்குள் உங்களை வாழ்த்துகிறேன்.

23என்னையும் சபையனைத்தையும் உபசரித்துவருகிற காயு உங்களை வாழ்த்துகிறான். பட்டணத்து உக்கிராணக்காரனாகிய ஏரஸ்தும், சகோதரனாகிய குவர்த்தும் உங்களை வாழ்த்துகிறார்கள்.

24நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.

25ஆதிகாலமுதல் அடக்கமாயிருந்து, இப்பொழுது தீர்க்கதரிசன ஆகமங்களினாலே அநாதி தேவனுடைய கட்டளையின்படி வெளியரங்கமாக்கப்பட்டதும், சகல ஜாதிகளும் விசுவாசத்திற்குக் கீழ்ப்படியும்படிக்கு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுமாயிருக்கிற இரகசியத்தை வெளிப்படுத்துகிறதான,

26இயேசுகிறிஸ்துவைப்பற்றிய பிரசங்கமாகிய என் சுவிசேஷத்தின்படியே உங்களை ஸ்திரப்படுத்த வல்லவரும்,

27தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாயிருக்கிற தேவனுக்கு இயேசுகிறிஸ்துவின் மூலமாய் என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

தனிவாசிப்பு

1ஆண்டவருடைய சினத்தின் மிலாற்றினால் உண்டான சிறுமையைக் கண்ட புருஷன் நான்.

2அவர் என்னை வெளிச்சத்திலே அல்ல, இருளிலே அழைத்து நடத்திவந்தார்.

3அவர் தமது கையை எனக்கு விரோதமாகவே நித்தமும் திருப்பினார்.

4என் சதையையும், என் தோலையும் முற்றலாக்கினார்; என் எலும்புகளை நொறுக்கினார்.

5அவர் எனக்கு விரோதமாகக் கொத்தளங்கட்டி, கசப்பினாலும் வருத்தத்தினாலும் என்னை வளைந்துகொண்டார்.

6பூர்வகாலத்தில் செத்துக்கிடக்கிறவர்களைப்போல என்னை இருளான இடங்களில் கிடக்கப்பண்ணினார்.

7நான் புறப்படக்கூடாதபடி என்னைச்சூழ வேலியடைத்தார்; என் விலங்கைப் பாரமாக்கினார்.

8நான் சத்தமிட்டுக் கூப்பிட்டாலும், என் ஜெபத்துக்கு வழியை அடைத்துப்போட்டார்.

9வெட்டின கற்களின் சுவரால் என் வழிகளை அடைத்துப்போட்டார், என் பாதைகளைத் தாறுமாறாக்கினார்.

10அவர் எனக்குப் பதிவிருக்கிற கரடியும், மறைவிடங்களில் தங்குகிற சிங்கமுமாயிருக்கிறார்.

11என் வழிகளை அப்புறப்படுத்தி, என்னைத் துண்டித்துப்போட்டார்; என்னைப்பாழாக்கிவிட்டார்.

12தமது வில்லை நாணேற்றி, என்னை அம்புக்கு இலக்காக வைத்தார்.

13தம்முடைய அம்பறாத்தூணியின் அம்புகளை என் உள்ளிந்திரியங்களில் படப்பண்ணினார்.

14நான் என் ஜனத்தார் யாவருக்கும் பரியாசமும், நித்தம் அவர்கள் கின்னரப்பாடலுமானேன்.

15கசப்பினால் என்னை நிரப்பி, எட்டியினால் என்னை வெறிக்கச்செய்தார்.

16அவர் பருக்கைக்கற்களால் என் பற்களை நொறுக்கி, என்னைச் சாம்பலில் புரளப்பண்ணினார்.

17என் ஆத்துமாவைச் சமாதானத்துக்குத் தூரமாக்கினார்; சுகத்தை மறந்தேன்.

18என் பெலனும் நான் கர்த்தருக்குக் காத்திருந்த நம்பிக்கையும் அழிந்துபோயிற்று என்றேன்.

19எட்டியும் பிச்சுமாகிய என் சிறுமையையும் என் தவிப்பையும் நினைத்தருளும்.

20என் ஆத்துமா அவைகளை நினைத்து நினைத்து எனக்குள் முறிந்துபோகிறது.

21இதை என் மனதிலே வைத்து, நம்பிக்கை கொண்டிருப்பேன்.

22நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.

23அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது.

24கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கை கொண்டிருப்பேன்.

25தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர்.

26கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது.

27தன் இளம்பிராயத்தில் நுகத்தைச் சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது.

28அவரே அதைத் தன்மேல் வைத்தாரென்று அவன் தனித்திருந்து மெளனமாயிருக்கக்கடவன்.

29நம்பிக்கைக்கு இடமுண்டோ என்று தன் வாயைத் தூளில் நுழுந்துவானாக.

30தன்னை அடிக்கிறவனுக்குத் தன் கன்னத்தைக் காட்டி, நிந்தையால் நிறைந்திருப்பானாக.

31ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார்.

32அவர் சஞ்சலப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி இரங்குவார்.

33அவர் மனப்பூர்வமாய் மனுபுத்திரரைச் சிறுமையாக்கிச் சஞ்சலப்படுத்துகிறதில்லை.

34ஒருவன் பூமியில் சிறைப்பட்டவர்கள் யாவரையும் தன் கால்களின்கீழ் நசுக்குகிறதையும்,

35உன்னதமானவரின் சமுகத்தில் மனுஷருடைய நியாயத்தைப் புரட்டுகிறதையும்,

36மனுஷனை அவனுடைய வழக்கிலே மாறுபாடாக்குகிறதையும், ஆண்டவர் காணாதிருப்பாரோ?

37ஆண்டவர் கட்டளையிடாதிருக்கக் காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்?

38உன்னதமானவருடைய வாயிலிருந்து தீமையும் நன்மையும் புறப்படுகிறதில்லையோ?

39உயிருள்ள மனுஷன் முறையிடுவானேன்? அவன் தன் பாவத்துக்கு வரும் தண்டனையைக்குறித்து முறையிடுகிறதென்ன?

40நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம்.

41நாம் நம்முடைய கைகளோடுங்கூட நம்முடைய இருதயத்தையும் பரலோகத்திலிருக்கிற தேவனிடத்திற்கு ஏறெடுக்கக்கடவோம்.

42நாங்கள் துரோகஞ்செய்து, கலகம்பண்ணினோம்; ஆகையால் தேவரீர் மன்னியாதிருந்தீர்.

43தேவரீர் கோபத்தால் மூடிக்கொண்டு, எங்களைத் தப்பவிடாமல் பின்தொடர்ந்து கொன்றீர்.

44ஜெபம் உட்பிரவேசிக்கக்கூடாதபடிக்கு உம்மை மேகத்தால் மூடிக்கொண்டீர்.

45ஜனங்களுக்குள்ளே எங்களைக் குப்பையும் அருவருப்புமாக்கினீர்.

46எங்கள் பகைஞர் எல்லாரும் எங்களுக்கு விரோதமாய்த் தங்கள் வாயைத் திறந்தார்கள்.

47திகிலும் படுகுழியும் பாழ்க்கடிப்பும் சங்காரமும் எங்களுக்கு நேரிட்டது.

48என் ஜனமாகிய குமாரத்தி அடைந்த கேட்டினிமித்தம் என் கண்களிலிருந்து நீர்க்கால்கள் பாய்கிறது.

49கர்த்தர் பரலோகத்திலிருந்து நோக்கிப்பார்க்குமட்டும்,

50என் கண் இடைவிடாமல் ஓய்வின்றிச் சொரிகிறது.

51என் நகரத்தினுடைய குமாரத்திகள் அனைவரினிமித்தமும், என் கண் என் ஆத்துமாவுக்கு நோவுண்டாக்குகிறது.

52முகாந்தரம் இல்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என்னை ஒரு பட்சியைப்போல வேட்டையாடினார்கள்.

53காவற்கிடங்கிலே என் பிராணனை ஒடுக்கி, என்மீதில் கல்லைவைத்தார்கள்.

54தண்ணீர் என் தலையின்மேல் புரண்டது; நாசமானேன் என்றேன்.

55மகா ஆழமான கிடங்கிலிருந்து, கர்த்தாவே, உம்முடைய நாமத்தைப்பற்றிக் கூப்பிட்டேன்.

56என் சத்தத்தைக் கேட்டீர்; என் பெருமூச்சுக்கும் என் கூப்பிடுதலுக்கும் உமது செவியை அடைத்துக்கொள்ளாதேயும்.

57நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டநாளிலே நீர் அணுகி: பயப்படாதே என்றீர்.

58ஆண்டவரே, என் ஆத்துமாவின் வழக்கை நடத்தினீர்; என் பிராணனை மீட்டுக்கொண்டீர்.

59கர்த்தாவே, எனக்கு உண்டான அநியாயத்தைக் கண்டீர்; என் நியாயத்தைத் தீரும்.

60அவர்களுடைய எல்லாக் குரோதத்தையும், அவர்கள் எனக்கு விரோதமாக நினைத்த எல்லா நினைவுகளையும் கண்டீர்.

61கர்த்தாவே, அவர்கள் நிந்திக்கும் நிந்தையையும், அவர்கள் எனக்கு விரோதமாய் நினைத்த எல்லா நினைவுகளையும்,

62எனக்கு விரோதமா.ய் எழும்பினவர்களின் வாய்மொழிகளையும், அவர்கள் நாள்முழுவதும் எனக்கு விரோதமாய் யோசிக்கும் யோசனைகளையும் கேட்டீர்.

63அவர்கள் உட்கார்ந்திருப்பதையும் அவர்கள் எழுந்திருப்பதையும் நோக்கிப் பாரும்; நான் அவர்களுடைய பாடலாயிருக்கிறேன்.

64கர்த்தாவே, அவர்கள் கைகள் செய்த கிரியைகளுக்குத்தக்கதாக அவர்களுக்குப் பலன் அளிப்பீர்.

65அவர்களுக்கு இருதய வேதனையைக் கொடுப்பீர், உம்முடைய சாபம் அவர்கள்மேல் இருக்கும்.

66கோபமாய் அவர்களைப் பின்தொடர்ந்து கர்த்தருடைய வானங்களின் கீழ் இராதபடிக்கு அவர்களை அழித்துவிடுவீர்.

1கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்.

2கர்த்தருக்குள் என் ஆத்துமா மேன்மைபாராட்டும்; சிறுமைப்பட்டவர்கள் அதைக்கேட்டு மகிழுவார்கள்.

3என்னோடே கூடக் கர்த்தரை மகிமைப்படுத்துங்கள்; நாம் ஒருமித்து அவர் நாமத்தை உயர்த்துவோமாக.

4நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்.

5அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை.

6இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார்.

7கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார்.

8கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

9கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவருக்குப் பயந்திருங்கள்; அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை.

10சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங்குறைவுபடாது.

11பிள்ளைகளே, வந்து எனக்குச் செவிகொடுங்கள்; கர்த்தருக்குப் பயப்படுதலை உங்களுக்குப் போதிப்பேன்.

12நன்மையைக் காணும்படி, ஜீவனை விரும்பி, நீடித்த நாட்களை அபேட்சிக்கிற மனுஷன் யார்?

13உன் நாவைப் பொல்லாப்புக்கும், உன் உதடுகளைக் கபட்டுவசனிப்புக்கும் விலக்கிக் காத்துக்கொள்.

14தீமையை விட்டு விலகி, நன்மை செய்; சமாதானத்தைத் தேடி, அதைத் தொடர்ந்துகொள்.

15கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது.

16தீமைசெய்கிறவர்களுடைய பேரைப் பூமியில் இராமல் அற்றுப்போகப்பண்ண, கர்த்தருடைய முகம் அவர்களுக்கு விரோதமாயிருக்கிறது.

17நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார்.

18நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்.

19நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்.

20அவனுடைய எலும்புகளையெல்லாம் காப்பாற்றுகிறார்; அவைகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை.

21தீமை துன்மார்க்கனைக் கொல்லும்; நீதிமானைப் பகைக்கிறவர்கள் குற்றவாளிகளாவார்கள்.

22கர்த்தர் தமது ஊழியக்காரரின் ஆத்துமாவை மீட்டுக்கொள்ளுகிறார்; அவரை நம்புகிற ஒருவன்மேலும் குற்றஞ்சுமராது.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com