1யாக்கோபு பிரயாணம் பண்ணுகையில், தேவதூதர்கள் அவனைச் சந்தித்தார்கள்.
2யாக்கோபு அவர்களைக் கண்டபோது: இது தேவனுடைய சேனை என்று சொல்லி, அந்த ஸ்தலத்திற்கு மக்னாயீம் என்று பேரிட்டான்.
3பின்பு, யாக்கோபு ஏதோம் சீமையாகிய சேயீர் தேசத்திலிருக்கிற தன் சகோதரனாகிய ஏசாவினிடத்துக்குப் போகும்படி ஆட்களை அழைப்பித்து:
4நீங்கள் என் ஆண்டவனாகிய ஏசாவினிடத்தில் போய், நான் இதுவரைக்கும் லாபானிடத்தில் தங்கியிருந்தேன் என்றும்,
5எனக்கு எருதுகளும், கழுதைகளும், ஆடுகளும், வேலைக்காரரும், வேலைக்காரிகளும் உண்டென்றும், உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைக்கத்தக்கதாக ஆண்டவனாகிய உமக்கு இதை அறிவிக்கும்படி ஆட்களை அனுப்பினேன் என்றும் உம்முடைய தாசனாகிய யாக்கோபு சொல்லச்சொன்னான் என்று சொல்லும்படி கட்டளைகொடுத்துத் தனக்கு முன்னாக அவர்களை அனுப்பினான்.
6அந்த ஆட்கள் யாக்கோபினிடத்துக்குத் திரும்பிவந்து: நாங்கள் உம்முடைய சகோதரனாகிய ஏசாவினிடத்துக்குப் போய்வந்தோம்; அவரும் நானூறு பேரோடே உம்மை எதிர்கொள்ள வருகிறார் என்றார்கள்.
7அப்பொழுது யாக்கோபு மிகவும் பயந்து, வியாகுலப்பட்டு, தன்னிடத்திலிருந்த ஜனங்களையும் ஆடுமாடுகளையும் ஒட்டகங்களையும் இரண்டு பகுதியாகப்பிரித்து:
8ஏசா ஒரு பகுதியின்மேல் விழுந்து அதை முறிய அடித்தாலும், மற்றப் பகுதி தப்பித்துக்கொள்ள இடம் உண்டு என்றான்.
9பின்பு யாக்கோபு: என் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும், என் தகப்பனாகிய ஈசாக்கின் தேவனுமாய் இருக்கிறவரே: உன் தேசத்துக்கும் உன் இனத்தாரிடத்துக்கும் திரும்பிப்போ, உனக்கு நன்மை செய்வேன் என்று என்னுடனே சொல்லியிருக்கிற கர்த்தாவே,
10அடியேனுக்கு தேவரீர் காண்பித்த எல்லா தயவுக்கும் எல்லா சத்தியத்துக்கும் நான் எவ்வளவேனும் பாத்திரன் அல்ல, நான் கோலும் கையுமாய் இந்த யோர்தானைக் கடந்துபோனேன்; இப்பொழுது இவ்விரண்டு பரிவாரங்களையும் உடையவனானேன்.
11என் சகோதரனாகிய ஏசாவின் கைக்கு என்னைத் தப்புவியும், அவன் வந்து என்னையும் பிள்ளைகளையும் தாய்மார்களையும் முறிய அடிப்பான் என்று அவனுக்கு நான் பயந்திருக்கிறேன்.
12தேவரீரோ: நான் உனக்கு மெய்யாகவே நன்மைசெய்து, உன் சந்ததியை எண்ணிமுடியாத கடற்கரை மணலைப்போல மிகவும் பெருகப்பண்ணுவேன் என்று சொன்னீரே என்றான்.
13அன்று இராத்திரி அவன் அங்கே தங்கி, தன் கைக்கு உதவினவைகளிலே தன் சகோதரனாகிய ஏசாவுக்கு வெகுமானமாக,
14இருநூறு வெள்ளாடுகளையும், இருபது வெள்ளாட்டுக் கடாக்களையும், இருநூறு செம்மறியாடுகளையும், இருபது ஆட்டுக்கடாக்களையும்,
15பால் கொடுக்கிற முப்பது ஒட்டகங்களையும், அவைகளின் குட்டிகளையும், நாற்பது கடாரிகளையும், பத்துக் காளைகளையும் இருபது கோளிகைக் கழுதைகளையும், பத்துக் கழுதைக்குட்டிகளையும் பிரித்தெடுத்து,
16வேலைக்காரர் கையில் ஒவ்வொரு மந்தையை தனித்தனியாக ஒப்புவித்து, நீங்கள் மந்தை மந்தைக்கு முன்னும் பின்னுமாக இடம் விட்டு எனக்கு முன்னாக ஓட்டிக்கொண்டுபோங்கள் என்று தன் வேலைக்காரருக்குச் சொல்லி,
17முன்னே போகிறவனை நோக்கி: என் சகோதரனாகிய ஏசா உனக்கு எதிர்ப்பட்டு: நீ யாருடையவன்? எங்கே போகிறாய்? உனக்குமுன் போகிற மந்தை யாருடையது? என்று உன்னைக் கேட்டால்,
18நீ: இது உமது அடியானாகிய யாக்கோபுடையது; இது என் ஆண்டவனாகிய ஏசாவுக்கு அனுப்பப்படுகிற வெகுமதி; இதோ, அவனும் எங்கள் பின்னே வருகிறான் என்று சொல் என்றான்.
19இரண்டாம் மூன்றாம் வேலைக்காரனையும், மந்தைகளின் பின்னாலே போகிற அனைவரையும் நோக்கி: நீங்களும் ஏசாவைக் காணும்போது, இந்தப்பிரகாரமாக அவனோடே சொல்லி,
20இதோ, உமது அடியானாகிய யாக்கோபு எங்கள் பின்னாலே வருகிறான் என்றும் சொல்லுங்கள் என்று கட்டளையிட்டான்; முன்னே வெகுமதியை அனுப்பி, அவனைச் சாந்தப்படுத்திக்கொண்டு, பின்பு அவன் முகத்தைப் பார்ப்பேன், அப்பொழுது ஒருவேளை என்பேரில் தயவாயிருப்பான் என்றான்.
21அந்தப்படியே வெகுமதி அவனுக்குமுன் போயிற்று; அவனோ அன்று இராத்திரி பாளயத்திலே தங்கி,
22இராத்திரியில் எழுந்திருந்து, தன் இரண்டு மனைவிகளையும், தன் இரண்டு பணிவிடைக்காரிகளையும், தன்னுடைய பதினொரு குமாரரையும் கூட்டிக்கொண்டு, யாப்போக்கு என்கிற ஆற்றின் துறையைக் கடந்தான்.
23அவர்களையும் சேர்த்து, ஆற்றைக்கடக்கப்பண்ணி, தனக்கு உண்டான யாவையும் அக்கரைப்படுத்தினான்.
24யாக்கோபு பிந்தித் தனித்திருந்தான்; அப்பொழுது ஒரு புருஷன் பொழுது விடியுமளவும் அவனுடனே போராடி,
25அவனை மேற்கொள்ளாததைக்கண்டு, அவனுடைய தொடைச்சந்தைத் தொட்டார்; அதினால் அவருடனே போராடுகையில் யாக்கோபின் தொடைச்சந்து சுளுக்கிற்று.
26அவர்: நான் போகட்டும், பொழுது விடிகிறது என்றார். அதற்கு அவன்: நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்றான்.
27அவர்: உன் பேர் என்ன என்று கேட்டார்; யாக்கோபு என்றான்.
28அப்பொழுது அவர்: உன் பேர் இனி யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் என்னப்படும்; தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே என்றார்.
29அப்பொழுது யாக்கோபு: உம்முடைய நாமத்தை எனக்கு அறிவிக்கவேண்டும் என்று கேட்டான்; அதற்கு அவர்: நீ என் நாமத்தைக் கேட்பானேன் என்று சொல்லி, அங்கே அவனை ஆசீர்வதித்தார்.
30அப்பொழுது யாக்கோபு: நான் தேவனை முகமுகமாய்க் கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன் என்று சொல்லி, அந்த ஸ்தலத்துக்கு பெனியேல் என்று பேரிட்டான்.
31அவன் பெனியேலைக் கடந்துபோகையில், சூரியன் உதயமாயிற்று; அவன் தொடைச்சுளுக்கினாலே நொண்டி நொண்டி நடந்தான்.
32அவர் யாக்கோபுடைய தொடைச்சந்து நரம்பைத் தொட்டபடியால், இஸ்ரவேல் புத்திரர் இந்நாள்வரைக்கும் தொடைச்சந்து நரம்பைப் புசிக்கிறதில்லை.
1மறுபடியும் அவர் ஜெபஆலயத்தில் பிரவேசித்தார். அங்கே சூம்பின கையையுடைய ஒரு மனுஷன் இருந்தான்.
2அவர் ஓய்வுநாளில் அவனைச் சொஸ்தமாக்கினால் அவர்பேரில் குற்றஞ்சாட்டலாமென்று அவர்மேல் நோக்கமாயிருந்தார்கள்.
3அப்பொழுது அவர் சூம்பின கையையுடைய மனுஷனை நோக்கி: எழுந்து நடுவே நில் என்று சொல்லி;
4அவர்களைப் பார்த்து: ஓய்வுநாட்களில் நன்மைசெய்வதோ, தீமைசெய்வதோ, ஜீவனைக் காப்பதோ, அழிப்பதோ, எது நியாயம் என்றார். அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள்.
5அவர்களுடைய இருதயகடினத்தினிமித்தம் அவர் விசனப்பட்டு, கோபத்துடனே சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்து, அந்த மனுஷனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார்; அவன் நீட்டினான்; அவன் கை மறுகையைப்போலச் சொஸ்தமாயிற்று.
6உடனே பரிசேயர் புறப்பட்டுப்போய், அவரைக் கொலைசெய்யும்படி, அவருக்கு விரோதமாய் ஏரோதியரோடேகூட ஆலோசனைபண்ணினார்கள்.
7இயேசு தம்முடைய சீஷர்களோடே அவ்விடம்விட்டு, கடலோரத்துக்குப் போனார்.
8கலிலேயாவிலும், யூதேயாவிலும், எருசலேமிலும், இதுமேயாவிலும், யோர்தானுக்கு அக்கரையிலுமிருந்து திரளான ஜனங்கள் வந்து, அவருக்குப் பின்சென்றார்கள். அல்லாமலும் தீரு சீதோன் பட்டணங்களின் திசைகளிலுமிருந்து திரளான ஜனங்கள் அவர் செய்த அற்புதங்களைக்குறித்துக் கேள்விப்பட்டு, அவரிடத்தில் வந்தார்கள்.
9அவர் அநேகரைச் சொஸ்தமாக்கினார். நோயாளிகளெல்லாரும் அதை அறிந்து அவரைத் தொடவேண்டுமென்று அவரிடத்தில் நெருங்கிவந்தார்கள்.
10ஜனங்கள் திரளாயிருந்தபடியால் அவர்கள் தம்மை நெருக்காதபடிக்கு, தமக்காக ஒரு படவை ஆயத்தம்பண்ணவேண்டுமென்று, தம்முடைய சீஷர்களுக்குச் சொன்னார்.
11அசுத்த ஆவிகளும் அவரைக் கண்டபோது, அவர் முன்பாக விழுந்து: நீர் தேவனுடைய குமாரன் என்று சத்தமிட்டன.
12தம்மைப் பிரசித்தம்பண்ணாதபடி அவைகளுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்.
13பின்பு அவர் ஒரு மலையின்மேல் ஏறி, தமக்குச் சித்தமானவர்களைத் தம்மிடத்தில் வரவழைத்தார்; அவர்கள் அவரிடத்திற்கு வந்தார்கள்.
14அப்பொழுது அவர் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு, அவர்கள் தம்மோடுகூட இருக்கவும், பிரசங்கம்பண்ணும்படியாகத் தாம் அவர்களை அனுப்பவும்,
15வியாதிகளைக் குணமாக்கிப் பிசாசுகளைத் துரத்தும்படி அவர்கள் அதிகாரமுடையவர்களாயிருக்கவும், அவர்களை ஏற்படுத்தினார்.
16அவர்கள் யாரெனில், சீமோன், இவனுக்குப் பேதுரு என்கிற பெயரிட்டார்.
17செபெதேயுவின் குமாரனாகிய யாக்கோபு, யாக்கோபின் சகோதரனாகிய யோவான், இவ்விருவருக்கும் இடிமுழக்கமக்களென்று அர்த்தங்கொள்ளும் பொவனெர்கேஸ் என்கிற பெயரிட்டார்,
18அந்திரேயா, பிலிப்பு, பற்தொலொமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு, கானானியனாகிய சீமோன்,
19அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவர்களே.
20பின்பு வீட்டுக்குப் போனார்கள்; அங்கே அவர்கள் சாப்பிடுவதற்கும் சமயமில்லாதபடிக்கு அநேக ஜனங்கள் மறுபடியும் கூடிவந்தார்கள்.
21அவருடைய இனத்தார் இதைக்கேட்டபோது, அவர் மதிமயங்கியிருக்கிறார் என்று சொல்லி, அவரைப் பிடித்துக்கொள்ளும்படி வந்தார்கள்.
22எருசலேமிலிருந்து வந்த வேதபாரகர்: இவன் பெயெல்செபூலைக்கொண்டிருக்கிறான், பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள்.
23அவர்களை அவர் அழைத்து, உவமைகளாய் அவர்களுக்குச் சொன்னதாவது: சாத்தானைச் சாத்தான் துரத்துவது எப்படி?
24ஒரு ராஜ்யம் தனக்குத்தானே விரோதமாகப்பிரிந்திருந்தால், அந்த ராஜ்யம் நிலைநிற்கமாட்டாதே.
25ஒரு வீடு தனக்குத்தானே விரோதமாகப்பிரிந்திருந்தால், அந்த வீடு நிலைநிற்கமாட்டாதே.
26சாத்தான் தனக்குத்தானே விரோதமாக எழும்பிப் பிரிந்திருந்தால், அவன் நிலைநிற்கமாட்டாமல், அழிந்துபோவானே.
27பலவானை முந்திக் கட்டினாலொழிய, ஒருவனும் பலவானுடைய வீட்டுக்குள் புகுந்து, அவன் உடைமைகளைக் கொள்ளையிடக்கூடாது; கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடுவான்.
28மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனுஷர்கள் செய்யும் எல்லாப் பாவங்களும், அவர்கள் தூஷிக்கும் எந்தத் தூஷணங்களும், அவர்களுக்கு மன்னிக்கப்படும்;
29ஒருவன் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகத் தூஷணஞ்சொல்வானாகில், அவன் என்றென்றைக்கும் மன்னிப்படையாமல் நித்திய ஆக்கினைக்குள்ளாயிருப்பான் என்றார்.
30அசுத்த ஆவியைக் கொண்டிருக்கிறானென்று அவர்கள் சொன்னபடியினாலே அவர் இப்படிச் சொன்னார்.
31அப்பொழுது அவருடைய சகோதரரும் தாயாரும் வந்து, வெளியே நின்று, அவரை அழைக்கும்படி அவரிடத்தில் ஆள் அனுப்பினார்கள்.
32அவரைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்த ஜனங்கள் அவரை நோக்கி: இதோ, உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் வெளியே நின்று உம்மைத் தேடுகிறார்கள் என்றார்கள்.
33அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி;
34தம்மைச் சூழ உட்கார்ந்திருந்தவர்களைச் சுற்றிப்பார்த்து: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே!
35தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும், எனக்குச் சகோதரியும், எனக்குத் தாயுமாய் இருக்கிறான் என்றார்.
1அன்றையதினம் அகாஸ்வேரு ராஜா யூதரின் சத்துருவாயிருந்த ஆமானின் வீட்டை ராஜாத்தியாகிய எஸ்தருக்குக் கொடுத்தான்; மொர்தெகாய் ராஜசமுகத்தில் வந்தான்; அவன் தனக்கு இன்ன உறவு என்று எஸ்தர் அறிவித்திருந்தாள்.
2ராஜா ஆமானின் கையிலிருந்து வாங்கிப்போட்ட தம்முடைய மோதிரத்தை எடுத்து, அதை மொர்தெகாய்க்குக் கொடுத்தான்; எஸ்தர் மொர்தெகாயை ஆமானின் அரமனைக்கு அதிகாரியாக வைத்தாள்.
3பின்னும் எஸ்தர் ராஜசமுகத்தில் பேசி, அவன் பாதங்களில் விழுந்து அழுது, ஆகாகியனான ஆமானின் தீவினையையும் அவன் யூதருக்கு விரோதஞ்செய்ய யோசித்த யோசனையையும் பரிகரிக்க அவனிடத்தில் விண்ணப்பம்பண்ணினாள்.
4அப்பொழுது ராஜா பொற்செங்கோலை எஸ்தருக்கு நீட்டினான்; எஸ்தர் எழுந்திருந்து ராஜசமுகத்தில் நின்று:
5ராஜாவுக்குச் சித்தமாயிருந்து அவர் சமுகத்தில் எனக்குக் கிருபைகிடைத்து, ராஜசமுகத்தில் நான் சொல்லும் வார்த்தை சரியென்று காணப்பட்டு, அவருடைய கண்களுக்கு நான் பிரியமாயிருந்தால், ராஜாவின் நாடுகளிலெல்லாம் இருக்கிற யூதரை அழிக்கவேண்டும் என்று அம்மெதாத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் ஆகாகியன் தீவினையாய் எழுதின கட்டளைகள் செல்லாமற்போகப்பண்ணும்படி எழுதி அனுப்பப்படவேண்டும்.
6என் ஜனத்தின்மேல் வரும் பொல்லாப்பை நான் எப்படிப் பார்க்கக்கூடும்? என் குலத்துக்கு வரும் அழிவை நான் எப்படிச் சகிக்கக்கூடும்? என்றாள்.
7அப்பொழுது அகாஸ்வேரு ராஜா ராஜாத்தியாகிய எஸ்தரையும் யூதனாகிய மொர்தெகாயையும் நோக்கி: இதோ, ஆமானின் வீட்டை எஸ்தருக்குக் கொடுத்தேன்; அவன் யூதர்மேல் தன் கையைப் போட எத்தனித்தபடியினால் அவனை மரத்திலே தூக்கிப்போட்டார்கள்.
8இப்போதும் உங்களுக்கு இஷ்டமானபடி நீங்கள் ராஜாவின் நாமத்தினால் யூதருக்காக எழுதி ராஜாவின் மோதிரத்தினால் முத்திரை போடுங்கள்; ராஜாவின் பேரால் எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரை போடப்பட்டதைச் செல்லாமற்போகப்பண்ண ஒருவராலும் கூடாது என்றான்.
9சீவான் மாதம் என்னும் மூன்றாம் மாதம் இருபத்துமூன்றாந்தேதியாகிய அக்காலத்திலேதானே ராஜாவின் சம்பிரதிகள் அழைக்கப்பட்டார்கள்; மொர்தெகாய் கற்பித்தபடியெல்லாம் யூதருக்கும் இந்து தேசம்முதல் எத்தியோப்பியா தேசமட்டுமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளின் தேசாதிபதிகளுக்கும், அதிபதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், அந்தந்த நாட்டில் வழங்கும் அட்சரத்திலும், அந்தந்த ஜாதியார் பேசும் பாஷையிலும், யூதருக்கும் அவர்கள் அட்சரத்திலும் அவர்கள் பாஷையிலும் எழுதப்பட்டது.
10அந்தக் கட்டளைகள் அகாஸ்வேரு ராஜாவின் பேரால் எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரை போடப்பட்டபின், குதிரைகள்மேலும் வேகமான ஒட்டகங்கள்மேலும், கோவேறு கழுதைகள்மேலும் ஏறிப்போகிற அஞ்சற்காரர் கையில் அனுப்பப்பட்டது.
11அவைகளில், அகாஸ்வேரு ராஜாவுடைய எல்லா நாடுகளிலும் ஆதார் மாதம் என்கிற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாந்தேதியாகிய அந்த ஒரே நாளிலே,
12அந்தந்தப் பட்டணத்திலிருக்கிற யூதர் ஒன்றாய்ச் சேர்ந்து, தங்கள் பிராணனைக் காப்பாற்றவும், தங்களை விரோதிக்கும் சத்துருக்களாகிய ஜனத்தாரும் தேசத்தாருமான எல்லாரையும், அவர்கள் குழந்தைகளையும், ஸ்திரீகளையும் அழித்துக் கொன்று நிர்மூலமாக்கவும், அவர்கள் உடைமைகளைக் கொள்ளையிடவும், ராஜா யூதருக்குக் கட்டளையிட்டார் என்று எழுதியிருந்தது.
13யூதர் தங்கள் பகைஞருக்குச் சரிக்குச் சரிக்கட்டும்படி நியமித்த அன்றையதினத்தில் ஆயத்தமாயிருக்க வேண்டுமென்று அந்தந்த நாட்டிலுள்ள சகல ஜனங்களுக்கும் கூறப்படுகிறதற்காகக் கொடுக்கப்பட்ட கட்டளையின் நகல் இதுவே; இது ஒவ்வொரு நாட்டிலும் பிரசித்தம்பண்ணப்பட்டது.
14அப்படியே வேகமான ஒட்டகங்கள்மேலும், கோவேறு கழுதைகள்மேலும் ஏறின அஞ்சற்காரர் ராஜாவின் வார்த்தையினாலே ஏவப்பட்டு, தீவிரத்தோடே புறப்பட்டுப்போனார்கள்; அந்தக் கட்டளை சூசான் அரமனையில் கொடுக்கப்பட்டது.
15அப்பொழுது மொர்தெகாய் இளநீலமும் வெள்ளையுமான ராஜவஸ்திரமும், பெரிய பொன்முடியும், பட்டும் இரத்தாம்பரமும் அணிந்தவனாய் ராஜாவினிடத்திலிருந்து புறப்பட்டான்; சூசான் நகரம் ஆர்ப்பரித்து மகிழ்ந்திருந்தது.
16இவ்விதமாய் யூதருக்கு வெளிச்சமும், மகிழ்ச்சியும், களிப்பும், கனமும் உண்டாயிற்று.
17ராஜாவின் வார்த்தையும் அவனுடைய கட்டளையும் போய்ச்சேர்ந்த எல்லா நாடுகளிலும், எல்லாப் பட்டணங்களிலும், யூதருக்குள்ளே அது மகிழ்ச்சியும், களிப்பும், விருந்துண்டு கொண்டாடும் நல்ல நாளுமாயிருந்தது; யூதருக்குப் பயப்படுகிற பயம் தேசத்து ஜனங்களைப் பிடித்ததினால், அவர்களில் அநேகர் யூத மார்க்கத்தில் அமைந்தார்கள்.
1இப்படியானால், யூதனுடைய மேன்மை என்ன? விருத்தசேதனத்தினாலே பிரயோஜனம் என்ன?
2அது எவ்விதத்திலும் மிகுதியாயிருக்கிறது; தேவனுடைய வாக்கியங்கள் அவர்களிடத்தில் ஒப்புவிக்கப்பட்டது விசேஷித்த மேன்மையாமே.
3சிலர் விசுவாசியாமற்போனாலுமென்ன? அவர்களுடைய அவிசுவாசம் தேவனுடைய உண்மையை அவமாக்குமோ?
4அப்படியாக்கமாட்டாது: நீர் உம்முடைய வசனங்களில் நீதிபரராய் விளங்கவும், உம்முடைய நியாயம் விசாரிக்கப்படும்போது வெற்றியடையவும் இப்படியாயிற்று என்று எழுதியிருக்கிறபடி, தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனுஷனும் பொய்யன் என்றும் சொல்வோமாக.
5நான் மனுஷர் பேசுகிற பிரகாரமாய்ப் பேசுகிறேன்; நம்முடைய அநீதி தேவனுடைய நீதியை விளங்கப்பண்ணினால் என்ன சொல்லுவோம்? கோபாக்கினையைச் செலுத்துகிற தேவன் அநீதராயிருக்கிறார் என்று சொல்லலாமா?
6அப்படிச் சொல்லக்கூடாது; சொல்லக்கூடுமானால், தேவன் உலகத்தை நியாயந்தீர்ப்பதெப்படி?
7அன்றியும், என் பொய்யினாலே தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமையுண்டாக விளங்கினதுண்டானால், இனி நான் பாவியென்று தீர்க்கப்படுவானேன்?
8நன்மை வரும்படிக்குத் தீமைசெய்வோமாக என்றும் சொல்லலாமல்லவா? நாங்கள் அப்படிப் போதிக்கிறவர்களென்றும் சிலர் எங்களைத் தூஷித்துச் சொல்லுகிறார்களே; அப்படிப் போதிக்கிறவர்கள்மேல் வரும் ஆக்கினை நீதியாயிருக்கும்.
9ஆனாலும் என்ன? அவர்களைப்பார்க்கிலும் நாங்கள் விசேஷித்தவர்களா? எவ்வளவேனும் விசேஷித்தவர்களல்ல, யூதர் கிரேக்கர் யாவரும் பாவத்திற்குட்பட்டவர்களென்பதை முன்பு திருஷ்டாந்தப்படுத்தினோமே.
10அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை;
11உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை;
12எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.
13அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக்குழி, தங்கள் நாவுகளால் வஞ்சனைசெய்கிறார்கள்; அவர்களுடைய உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது;
14அவர்கள் வாய் சபிப்பினாலும் கசப்பினாலும் நிறைந்திருக்கிறது;
15அவர்கள் கால்கள் இரத்தஞ்சிந்துகிறதற்குத் தீவிரிக்கிறது;
16நாசமும் நிர்ப்பந்தமும் அவர்கள் வழிகளிலிருக்கிறது;
17சமாதானவழியை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்;
18அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தெய்வபயமில்லை, என்று எழுதியிருக்கிறதே.
19மேலும், வாய்கள் யாவும் அடைக்கப்படும்படிக்கும், உலகத்தார் யாவரும் தேவனுடைய ஆக்கினைத்தீர்ப்புக்கு ஏதுவானவர்களாகும்படிக்கும், நியாயப்பிரமாணம் சொல்லுகிறதெல்லாம் நியாயப்பிரமாணத்துக்கு உட்பட்டிருக்கிறவர்களுக்கே சொல்லுகிறதென்று அறிந்திருக்கிறோம்.
20இப்படியிருக்க, பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால், எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை.
21இப்படியிருக்க, நியாயப்பிரமாணமில்லாமல் தேவநீதி வெளியாக்கப்பட்டிருக்கிறது; அதைக்குறித்து நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியிடுகிறது.
22அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை.
23எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி,
24இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்;
25தேவன் பொறுமையாயிருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களைத் தாம் பொறுத்துக்கொண்டதைக்குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிக்கும்பொருட்டாகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாய் விளங்கும்படி, இக்காலத்திலே தமது நீதியைக் காண்பிக்கும் பொருட்டாகவும்,
26கிறிஸ்து இயேசுவினுடைய இரத்ததைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதாரபலியாக அவரையே ஏற்படுத்தினார்.
27இப்படியிருக்க, மேன்மைபாராட்டல் எங்கே? அது நீக்கப்பட்டதே. எந்தப் பிரமாணத்தினாலே? கிரியாப்பிரமாணத்தினாலேயா? அல்ல; விசுவாசப்பிரமாணத்தினாலேயே.
28ஆதலால், மனுஷன் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளில்லாமல் விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான் என்று தீர்க்கிறோம்.
29தேவன் யூதருக்குமாத்திரமா தேவன்? புறஜாதிகளுக்கும் தேவனல்லவா? ஆம் புறஜாதிகளுக்கும் அவர் தேவன்தான்.
30விருத்தசேதனமுள்ளவர்களை விசுவாசத்தினாலும், விருத்தசேதனமில்லாதவர்களை விசுவாசத்தின் மூலமாயும் நீதிமான்களாக்குகிற தேவன் ஒருவரே.
31அப்படியானால், விசுவாசத்தினாலே நியாயப்பிரமாணத்தை அவமாக்குகிறோமா? அப்படியல்ல; நியாயப்பிரமாணத்தை நிலைநிறுத்துகிறோமே.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com