1இஸ்ரவேல் புத்திரரின் சபையெல்லாம் சீலோவிலே கூடி, அங்கே ஆசரிப்புக் கூடாரத்தை நிறுத்தினார்கள். தேசம் அவர்கள் வசமாயிற்று.
2இஸ்ரவேல் புத்திரரில் தங்கள் சுதந்தரத்தை இன்னும் பங்கிட்டுக்கொள்ளாத ஏழு கோத்திரங்கள் இருந்தது.
3ஆகையால் யோசுவா இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளப்போகிறதற்கு, நீங்கள் எந்த மட்டும் அசதியாயிருப்பீர்கள்.
4கோத்திரத்திற்கு மும்மூன்று மனுஷரைத் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்கள் எழுந்து புறப்பட்டு, தேசத்திலே சுற்றித்திரிந்து அதைத் தங்கள் சுதந்தரத்திற்குத்தக்கதாக விவரமாய் எழுதி, என்னிடத்தில் கொண்டுவரும்படி அவர்களை அனுப்புவேன்.
5அதை ஏழு பங்காகப் பகிரக்கடவர்கள்; யூதா வம்சத்தார் தெற்கேயிருக்கிற தங்கள் எல்லையிலும், யோசேப்பு வம்சத்தார் வடக்கேயிருக்கிற தங்கள் எல்லையிலும் நிலைத்திருக்கட்டும்.
6நீங்கள் தேசத்தை ஏழு பங்காக விவரித்து எழுதி, இங்கே என்னிடத்தில் கொண்டுவாருங்கள்; அப்பொழுது இவ்விடத்திலே நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் உங்களுக்காகச் சீட்டுப்போடுவேன்.
7லேவியருக்கு உங்கள் நடுவே பங்கில்லை; கர்த்தருடைய ஆசாரியபட்டமே அவர்கள் சுதந்தரம்; காத்தும் ரூபனும் மனாசேயின் பாதிக் கோத்திரமும் யோர்தானுக்கு அப்புறத்திலே கிழக்கே கர்த்தரின் தாசனாகிய மோசே தங்களுக்குக் கொடுத்த தங்கள் சுதந்தரத்தை அடைந்து தீர்ந்தது என்றான்.
8அப்பொழுது அந்த மனுஷர் எழுந்து புறப்பட்டுப்போனார்கள்; தேசத்தைக் குறித்து விவரம் எழுதப்போகிறவர்களை யோசுவா நோக்கி: நீங்கள் போய், தேசத்திலே சுற்றித்திரிந்து, அதின் விவரத்தை எழுதி, என்னிடத்தில் திரும்பிவாருங்கள்; அப்பொழுது இங்கே சீலோவிலே கர்த்தருடைய சந்நிதியில் உங்களுக்காகச் சீட்டுப்போடுவேன் என்று சொன்னான்.
9அந்த மனுஷர் போய், தேசம் எங்கும் அந்தந்தப் பட்டணங்களின்படியே ஏழுபங்காக ஒரு புஸ்தகத்தில் எழுதிக்கொண்டு, சீலோவில் இருக்கிற பாளயத்திலே யோசுவாவினிடத்தில் வந்தார்கள்.
10அப்பொழுது யோசுவா அவர்களுக்காகச் சீலோவிலே கர்த்தருடைய சந்நிதியில் சீட்டுப்போட்டு, அங்கே இஸ்ரவேல் புத்திரருக்கு தேசத்தை அவர்கள் பங்குவீதப்படி பங்கிட்டான்.
11பென்யமீன் புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படியே அவர்களுடைய கோத்திரத்துக்குச் சீட்டு விழுந்தது; அவர்கள் பங்கு வீதத்தின் எல்லையானது யூதா புத்திரருக்கும் யோசேப்பு புத்திரருக்கும் நடுவே இருந்தது.
12அவர்களுடைய வட எல்லை, யோர்தானிலிருந்து வந்து, எரிகோவுக்கு வடபக்கமாய்ச் சென்று, அப்புறம் மேற்கே மலையில் ஏறி, பெத்தாவேன் வனாந்தரத்தில் போய் முடியும்.
13அங்கேயிருந்து அந்த எல்லை, பெத்தேலாகிய லூசுக்கு வந்து, லூசுக்குத் தென்பக்கமாய்ப் போய், அதரோத்அதாருக்குத் தாழ்வான பெத்தொரோனுக்குத் தெற்கேயிருக்கிற மலையருகே இறங்கும்.
14அங்கேயிருந்து எல்லை மேற்குமூலைக்குப் பெத்தொரோனுக்கு எதிரே தெற்காக இருக்கிற மலைக்குத் தென்புறமாய்ப் போய்த் திரும்பி, கீரியாத்பாகால் என்னப்பட்ட யூதா புத்திரரின் பட்டணமாகிய கீரியாத்யெயாரீம் அருகே போய் முடியும்; இது மேற்கு எல்லை.
15தென் எல்லை கீரியாத்யெயாரீமின் முடிவிலிருக்கிறது; அங்கேயிருந்து எல்லை மேற்கே போய், நெப்தோவாவின் நீரூற்றிற்குச் சென்று,
16அங்கேயிருந்து இராட்சதரின் பள்ளத்தாக்கில் வடக்கேயிருக்கிற இன்னோமுடைய குமாரரின் பள்ளத்தாக்குக்கு எதிரான மலையடிவாரத்திற்கு இறங்கி, அப்புறம் தெற்கே எபூசியருக்குப் பக்கமான இன்னோமின் பள்ளத்தாக்குக்கும், அங்கேயிருந்து என்ரொகேலுக்கும் இறங்கிவந்து,
17வடக்கே போய், என்சேமேசுக்கும், அங்கேயிருந்து அதும்மீம் மேட்டுக்கு எதிரான கெலிலோத்திற்கும், அங்கேயிருந்து ரூபன் குமாரனாகிய போகனின் கல்லினிடத்திற்கும் இறங்கிவந்து,
18அராபாவுக்கு எதிரான வடபக்கமாய்ப் போய், அராபாவுக்கு இறங்கும்.
19அப்புறம் அந்த எல்லை, பெத்ஓக்லாவுக்கு வடபக்கமாய்ப் போய், யோர்தானின் முகத்துவாரத்திற்குத் தெற்கான உப்புக்கடலின் வடமுனையிலே முடிந்துபோகும்; இது தென் எல்லை.
20கிழக்குப்புறத்தின் எல்லை யோர்தானே; இது பென்யமீன் புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படி சுற்றிலும் இருக்கிற எல்லைகளுக்குள்ளான சுதந்தரம்.
21பென்யமீன் புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களின்படி இருக்கிற பட்டணங்களாவன: எரிகோ, பெத்ஓக்லா, கேசீஸ் பள்ளத்தாக்கு,
22பெத்அரபா, செமராயிம், பெத்தேல்,
23ஆவீம், பாரா. ஓப்ரா,
24கேப்பார்அமோனாய், ஒப்னி, காபா என்னும் பன்னிரண்டு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே.
25கிபியோன், ராமா, பேரோத்,
26மிஸ்பே, கெப்பிரா, மோத்சா,
27ரெக்கேம், இர்பெயெல், தாராலா,
28சேலா, ஏலேப், எருசலேமாகிய எபூசி, கீபெயாத், கீரேயாத் என்னும் பதினான்கு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே; பென்யமீன் புத்திரருக்கு அவர்கள் வம்சங்களின்படி இருக்கிற சுதந்தரம் இதுவே.
1இரண்டாம் சீட்டு சிமியோனுக்கு விழுந்தது; சிமியோன் புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரம், யூதா புத்திரருடைய சுதந்தரத்தின் நடுவே இருக்கிறது.
2அவர்களுக்குச் சுதந்தரமாகக் கிடைத்த பட்டணங்களாவன: பெயெர்செபா, சேபா, மொலாதா,
3ஆசார்சூகால், பாலா, ஆத்சேம்,
4எல்தோலாத், பெத்தூல், ஒர்மா,
5சிக்லாக், பெத்மார்காபோத், ஆத்சார்சூசா,
6பெத்லெபாவோத், சருகேன் பட்டணங்களும் அவைகளின் கிராமங்களும் உட்படப் பதின்மூன்று.
7மேலும் ஆயின், ரிம்மோன். எத்தேர், ஆசான் என்னும் நாலு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே.
8இந்தப் பட்டணங்களைச் சுற்றிலும் பாலாத்பெயேர்மட்டும், தெற்கேயிருக்கிற ராமாத்மட்டும் இருக்கிற எல்லாக் கிராமங்களுமே; இவை சிமியோன் புத்திரருடைய கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரம்.
9சிமியோன் புத்திரருடைய சுதந்தரம் யூதா புத்திரரின் பங்குவீதத்திற்குள் இருக்கிறது; யூதா புத்திரரின் பங்கு அவர்களுக்கு மிச்சமாயிருந்தபடியால், சிமியோன் புத்திரர் அவர்கள் சுதந்தரத்தின் நடுவிலே சுதந்தரம் பெற்றார்கள்.
10மூன்றாம் சீட்டு செபுலோன் புத்திரருக்கு விழுந்தது; அவர்களுக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரபங்குவீதம் சாரீத்மட்டுமுள்ளது.
11அவர்களுடைய எல்லை மேற்கே மாராலாவுக்கு ஏறி, தாபசேத்துக்கு வந்து, யொக்கினேயாமுக்கு எதிரான ஆற்றுக்குப் போகும்.
12சாரீதிலிருந்து அது கிழக்கே சூரியன் உதிக்கும் முனையாய்க் கிஸ்லோத்தாபோரின் எல்லையினிடத்துக்குத் திரும்பி, தாபராத்துக்குச் சென்று, யப்பியாவுக்கு ஏறி,
13அங்கேயிருந்து கிழக்குப்புறத்திலே கித்தாஏபேரையும் இத்தாகாத்சீனையும் கடந்து, ரிம்மோன்மெத்தோவாருக்கும் நேயாவுக்கும் போகும்.
14அப்புறம் அந்த எல்லை வடக்கே அன்னத்தோனுக்குத் திரும்பி, இப்தாவேலின் பள்ளத்தாக்கிலே முடியும்.
15காத்தாத், நகலால், சிம்ரோன், இதாலா, பெத்லகேம் முதலான பன்னிரண்டு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களும்,
16செபுலோன் புத்திரருக்கு, அவர்கள் வம்சங்களின்படி, கிடைத்த சுதந்தரம்.
17நாலாம் சீட்டு இசக்காருக்கு விழுந்தது.
18இசக்கார் புத்திரருக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த எல்லை, யெஸ்ரயேல், கெசுல்லோத், சூனேம்,
19அப்பிராயீம், சீகோன் அனாகராத்,
20ராப்பித், கிஷியோன், அபெத்ஸ்,
21ரெமேத், என்கன்னீம், என்காதா, பெத்பாத்செஸ் இவைகளே.
22அப்புறம் அந்த எல்லை தாபோருக்கும், சகசீமாவுக்கும், பெத்ஷிமேசுக்கும் வந்து யோர்தானிலே முடியும்; அதற்குள் பதினாறு பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுண்டு.
23இந்தப் பட்டணங்களும் இவைகளைச்சேர்ந்த கிராமங்களும் இசக்கார் புத்திரரின் கோத்திரத்திற்கு, அவர்களுடைய வம்சங்களின்படி, கிடைத்த சுதந்தரம்.
24ஐந்தாம் சீட்டு ஆசேர் புத்திரருடைய கோத்திரத்துக்கு விழுந்தது.
25அவர்களுடைய வம்சங்களின்படி அவர்களுக்குக் கிடைத்த எல்லை, எல்காத், ஆலி, பேதேன், அக்சாப்,
26அலம்மேலெக், ஆமாத், மிஷயால் இவைகளே; பின்பு அது மேற்கே கர்மேலுக்கும் சீகோர்லிப்னாத்திற்கும் சென்று,
27கிழக்கே பெத்தாகோனுக்குத் திரும்பி, செபுலோனுக்கு வடக்கேயிருக்கிற இப்தாவேலின் பள்ளத்தாக்குக்கும் பெத்தேமேக்குக்கும் நேகியெலுக்கும் வந்து, இடதுபுறமான காபூலுக்கும்,
28எபிரோனுக்கும், ரேகோபுக்கும், அம்மோனுக்கும், கானாவுக்கும், பெரிய சீதோன்மட்டும் போகும்.
29அப்புறம் அந்த எல்லை ராமாவுக்கும் தீரு என்னும் அரணிப்பான பட்டணம் மட்டும் திரும்பும்; பின்பு அந்த எல்லை ஓசாவுக்குத் திரும்பி, அக்சீபின் எல்லை ஓரத்திலுள்ள சமுத்திரத்திலே முடியும்.
30உம்மாவும், ஆப்பெக்கும், ரேகோபும் அதற்கு அடுத்திருக்கிறது; இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் இருபத்திரண்டு.
31இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் ஆசேர் புத்திரரின் கோத்திரத்துக்கு, அவர்கள் வம்சங்களின்படி, கிடைத்த சுதந்தரம்.
32ஆறாம் சீட்டு நப்தலி புத்திரருக்கு விழுந்தது.
33நப்தலி புத்திரருக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த எல்லை, ஏலேப்பிலும், சானானிமிலுள்ள அல்லோனிலுமிருந்து வந்து, ஆதமி, நெக்கேபின் மேலும் யாப்னியேலின்மேலும், லக்கூம் மட்டும் போய், யோர்தானில் முடியும்.
34அப்புறம் அந்த எல்லை மேற்கே அஸ்னோத்தாபோருக்குத் திரும்பி, அங்கேயிருந்து உக்கோகுக்குச் சென்று, தெற்கே செபுலோனையும், மேற்கே ஆசேரையும் சூரியோதயப்புறத்திலே யோர்தானிலே யூதாவையும் சேர்ந்து வரும்.
35அரணிப்பான பட்டணங்களாவன: சீத்திம், சேர், அம்மாத், ரக்காத், கின்னரேத்,
36ஆதமா, ராமா, ஆத்சோர்,
37கேதேஸ், எத்ரேயி, என்ஆத்சோர்,
38ஈரோன், மிக்தாலேல், ஓரேம், பெதானாத் பெத்ஷிமேஸ் முதலானவைகளே; பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமுட்பட பத்தொன்பது.
39இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் நப்தலி புத்திரருடைய கோத்திரத்துக்கு, அவர்கள் வம்சங்களின்படி, உண்டான சுதந்தரம்.
40ஏழாம் சீட்டு தாண் புத்திரருடைய கோத்திரத்திற்கு விழுந்தது.
41அவர்களுக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரத்தின் எல்லையாவது, சோரா, எஸ்தாவோல், இர்சேமேஸ்,
42சாலாபீன், ஆயலோன், யெத்லா,
43ஏலோன், திம்னாதா, எக்ரோன்,
44எல்தெக்கே, கிபெத்தோன், பாலாத்,
45யேகூத், பெனபெராக், காத்ரிம்மோன்,
46மேயார்கோன், ராக்கோன் என்னும் பட்டணங்களும், யாப்போவுக்கு எதிரான எல்லையுமே.
47தாண் புத்திரரின் எல்லை அவர்களுக்கு ஒடுக்கமாயிருந்தபடியால், அவர்கள் புறப்பட்டுப்போய், லேசேமின்மேல் யுத்தம்பண்ணி. அதைப் பிடித்து, பட்டயக்கருக்கினால் சங்கரித்து, அதைச் சுதந்தரித்துக்கொண்டு, அதிலே குடியிருந்து, லேசேமுக்குத் தங்கள் தகப்பனாகிய தாணுடைய நாமத்தின்படியே தாண் என்று பேரிட்டார்கள்.
48இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் தாண் புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி உண்டான சுதந்தரம்.
49தேசத்தை அதின் எல்லைகளின்படி சுதந்தரமாகப் பங்கிட்டுத் தீர்ந்தபோது, இஸ்ரவேல் புத்திரர் நூனின் குமாரனாகிய யோசுவாவுக்குத் தங்கள் நடுவிலே ஒரு சுதந்தரத்தைக் கொடுத்தார்கள்.
50எப்பிராயீமின் மலைத்தேசத்தில் இருக்கிற திம்னாத்சேரா என்னும் அவன் கேட்ட பட்டணத்தை அவனுக்குக் கர்த்தருடைய வாக்கின்படியே கொடுத்தார்கள்; அந்தப் பட்டணத்தை அவன் கட்டி, அதிலே குடியிருந்தான்.
51ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் குமாரனாகிய யோசுவாவும், கோத்திரப் பிதாக்களுடைய தலைவரும் சீலோவிலே ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் இஸ்ரவேல் புத்திரரின் கோத்திரங்களுக்குச் சீட்டுப்போட்டுக் கொடுத்த சுதந்தரங்கள் இவைகளே; இவ்விதமாய் அவர்கள் தேசத்தைப் பங்கிட்டு முடித்தார்கள்.
1அல்லேலூயா, கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பரிசுத்தவான்களின் சபையிலே அவருடைய துதி விளங்குவதாக.
2இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரில் மகிழவும், சீயோன் குமாரர் தங்கள் ராஜாவில் களிகூரவுங்கடவர்கள்.
3அவருடைய நாமத்தை நடனத்தோடே துதித்து, தம்புரினாலும் கின்னரத்தினாலும் அவரைக் கீர்த்தனம் பண்ணக்கடவர்கள்.
4கர்த்தர் தம்முடைய ஜனத்தின்மேல் பிரியம் வைக்கிறார்; சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்.
5பரிசுத்தவான்கள் மகிமையோடே களிகூர்ந்து, தங்கள் படுக்கைகளின்மேல் கெம்பீரிப்பார்கள்.
6ஜாதிகளிடத்தில் பழிவாங்கவும், ஜனங்களை தண்டிக்கவும்,
7அவர்களுடைய ராஜாக்களைச் சங்கிலிகளாலும், அவர்களுடைய மேன்மக்களை இருப்பு விலங்குகளாலும் கட்டவும், எழுதப்பட்ட நியாயத்தீர்ப்பை அவர்கள்பேரில் செலுத்தவும்,
8அவர்கள் வாயில் கர்த்தரை உயர்த்தும் துதியும், அவர்கள் கையில் இருபுறமும் கருக்குள்ள பட்டயமும் இருக்கும்.
9இந்தக் கனம் அவருடைய பரிசுத்தவான்கள் யாவருக்கும் உண்டாகும். அல்லேலூயா.
1அல்லேலூயா, தேவனை அவருடைய பரிசுத்தஸ்தலத்தில் துதியுங்கள்; அவருடைய வல்லமை விளங்கும் ஆகாயவிரிவைப்பார்த்து அவரைத் துதியுங்கள்.
2அவருடைய வல்லமையுள்ள கிரியைகளுக்காக அவரைத் துதியுங்கள்; மாட்சிமை பொருந்திய அவருடைய மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள்.
3எக்காளதொனியோடே அவரைத் துதியுங்கள்; வீணையோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள்.
4தம்புரோடும் நடனத்தோடும் அவரைத் துதியுங்கள்; யாழோடும் தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள்.
5ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்; பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்.
6சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக. அல்லேலூயா.
1ஆ, என் தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீரூற்றுமானால் நலமாயிருக்கும்; அப்பொழுது என் ஜனமாகிய குமாரத்தி கொலையுண்ணக் கொடுத்தவர்கள் நிமித்தம் நான் இரவும்பகலும் அழுவேன்.
2ஆ, வனாந்தரத்தில் வழிப்போக்கரின் தாபரம் எனக்கு இருந்தால் நலமாயிருக்கும்; அப்பொழுது நான் என் ஜனத்தைவிட்டு, அவர்களிடத்தில் இராதபடிக்குப் போய்விடுவேன்; அவர்களெல்லாரும் விபசாரரும் துரோகிகளின் கூட்டமுமாயிருக்கிறார்கள்.
3அவர்கள் பொய்யைப் பிரயோகிக்கத் தங்கள் நாவாகிய வில்லை வளைக்கிறார்கள்; அவர்கள் இந்தத் தேசத்திலே பலத்துக்கொள்வது சத்தியத்துக்காக அல்ல; பொல்லாப்பிலிருந்து பொல்லாப்புக்கு நடந்தேறுகிறார்கள்; என்னையோ அறியாதிருக்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
4நீங்கள் அவனவன் தன்தன் சிநேகிதனுக்கு எச்சரிக்கையாயிருங்கள், எந்தச் சகோதரனையும் நம்பாதிருங்கள்; எந்தச் சகோதரனும் மோசம்பண்ணுகிறான், எந்தச் சிநேகிதனும் தூற்றித்திரிகிறான்.
5அவர்கள் மெய்யைப் பேசாமல் ஒவ்வொருவரும் தமக்கடுத்தவனை ஏய்க்கிறார்கள்; பொய்யைப்பேசத் தங்கள் நாவைப் பழக்குகிறார்கள், அக்கிரமஞ்செய்ய உழைக்கிறார்கள்.
6கபடத்தின் நடுவிலே குடியிருக்கிறாய்; கபடத்தினிமித்தம் அவர்கள் என்னை அறியமாட்டோமென்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
7ஆகையால், இதோ, நான் அவர்களை உருக்கி, அவர்களைப் புடமிடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; என் ஜனமாகிய குமாரத்தியை வேறெந்தப்பிரகாரமாக நடத்துவேன்?
8அவர்கள் நாவு கூர்மையாக்கப்பட்ட அம்பு, அது கபடம் பேசுகிறது; அவனவன் தன்தன் அயலானோடே தன்தன் வாயினாலே சமாதானமாய்ப் பேசுகிறான், ஆனாலும் தன் உள்ளத்திலே அவனுக்குப் பதிவிடை வைக்கிறான்.
9இவைகளினிமித்தம் அவர்களை விசாரியாதிருப்பேனோ? இப்படிப்பட்ட ஜாதிக்கு என் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.
10மலைகளுக்காக அழுது துக்கங்கொண்டாடுவேன்; வனாந்தரத் தாபரங்களுக்காகப் புலம்புவேன்; ஒருவனும் அவைகளைக் கடந்துபோகாதவண்ணமாய் அவைகள் பாழாக்கப்பட்டுக் கிடக்கின்றன; ஆடுமாடுகளின் சத்தம் கேட்கப்படுகிறதுமில்லை; ஆகாசத்துப் பறவைகளும் மிருகஜீவன்களும் எல்லாம் ஓடிச் சிதறிப்போயின.
11நான் எருசலேமை மண்மேடுகளும் வலுசர்ப்பங்களின் தாபரமுமாக்குவேன்; யூதாவின் பட்டணங்களையும் குடியில்லாதபடி பாழாக்கிப்போடுவேன்.
12இதை உணரத்தக்க ஞானமுள்ளவன் யார்? தேசம் அழிந்து, ஒருவனும் கடந்து போகாதபடி அது பாழாக்கப்படுகிற முகாந்தரமென்னவென்று கர்த்தருடைய வாய் தன்னுடனே சொல்லுகிறதைக் கேட்டு அறிவிக்கத்தக்கவன் யார்?
13நான் அவரவருக்கு விதித்த என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் விட்டு, என் சொல்லைக் கேளாமலும், அதின்படி நடவாமலும்,
14தங்களுடைய இருதயத்தின் கடினத்தையும், தங்கள் பிதாக்கள் தங்களுக்குக் கற்றுக்கொடுத்தபடி பாகால்களையும் பின்தொடர்ந்தார்களே என்று கர்த்தர் சொல்லுகிறார்.
15ஆதலால், இதோ, நான் இந்த ஜனத்துக்குப் புசிக்க எட்டியையும், குடிக்கப் பிச்சுக்கலந்த தண்ணீரையும் கொடுத்து,
16அவர்களும், அவர்கள் பிதாக்களும் அறியாத புறஜாதிகளுக்குள்ளே அவர்களைச் சிதறடித்து, பட்டயம் அவர்களை நிர்மூலமாக்குமட்டும் அதை அவர்களுக்குப் பின்னாக அனுப்புவேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
17நீங்கள் யோசனைபண்ணி, புலம்பற்காரிகளை வரவழைத்து, அதிலே பழகின ஸ்திரீகளைக் கூப்பிடுங்களென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
18அவர்கள் சீக்கிரமாய் வந்து, நம்முடைய கண்கள் கண்ணீராய்ச் சொரியத்தக்கதாகவும், நம்முடைய இமைகள் தண்ணீராய் ஓடத்தக்கதாகவும், ஒப்பாரி சொல்லக்கடவர்கள்.
19எத்தனையாய்ப் பாழாக்கப்பட்டோம்! மிகவும் கலங்கியிருக்கிறோம்; நாங்கள் தேசத்தை விட்டுப்போகிறோம், எங்கள் வாசஸ்தலங்களை அவர்கள் கவிழ்த்துப்போட்டார்கள் என்று சீயோனிலிருந்து உண்டாகிற புலம்பலின் சத்தம் கேட்கப்படும்.
20ஆதலால் ஸ்திரீகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; உங்கள் செவி அவருடைய வாயின் வசனத்தை ஏற்றுக்கொள்ளட்டும்; நீங்கள் உங்கள் குமாரத்திகளுக்கு ஒப்பாரியையும், அவளவள் தன்தன் தோழிக்குப் புலம்பலையும் கற்றுக்கொடுங்கள்.
21வீதியிலிருக்கிற குழந்தைகளையும், தெருக்களிலிருக்கிற இளைஞரையும் சங்காரம்பண்ணச் சாவு நம்முடைய பலகணிகளிலேறி, நம்முடைய அரமனைகளில் பிரவேசித்தது.
22மனுஷரின் சவங்கள் வயல்வெளியின்மேல் எருவைப்போலவும், அறுக்கிறவனுக்குப் பின்னாலே ஒருவனும் வாரிக்கொள்ளாதிருக்கிற அரியைப்போலவும் கிடக்கும் என்று கர்த்தர் உரைத்தாரென்று சொல்.
23ஞானி தன் ஞானத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; பராக்கிரமன் தன் பராக்கிரமத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்;
24மேன்மைபாராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும், நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; இவைகளின்மேல் பிரியமாயிருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
25இதோ, நாட்கள் வரும்; அப்பொழுது விருத்தசேதனமில்லாதவர்களோடுங்கூட விருத்தசேதனமுள்ள யாவரையும்,
26எகிப்தையும், யூதாவையும், ஏதோமையும், அம்மோன் புத்திரரையும், மோவாபையும், கடைசி எல்லைகளிலுள்ள வனாந்தரக்குடிகளான யாவரையும் தண்டிப்பேன்; புறஜாதியார் அனைவரும் விருத்தசேதனமில்லாதவர்கள்; ஆனாலும், இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரும் இருதயத்திலே விருத்தசேதனமில்லாதவர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
1பின்பு இயேசு ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் நோக்கி:
2வேதபாரகரும் பரிசேயரும் மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்;
3ஆகையால், நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்; ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள்.
4சுமப்பதற்கரிய பாரமான சுமைகளைக் கட்டி மனுஷர் தோள்களின்மேல் சுமத்துகிறார்கள்; தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொடமாட்டார்கள்.
5தங்கள் கிரியைகளையெல்லாம் மனுஷர் காணவேண்டுமென்று செய்கிறார்கள்; தங்கள் காப்புநாடாக்களை அகலமாக்கி, தங்கள் வஸ்திரங்களின் தொங்கல்களைப் பெரிதாக்கி,
6விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும்,
7சந்தைவெளிகளில் வந்தனங்களையும், மனுஷரால் ரபீ, ரபீ, என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள்.
8நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள்.
9பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்.
10நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார்.
11உங்களில் பெரியவனாயிருக்கிறவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன்.
12தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.
13மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, மனுஷர் பிரவேசியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை, பிரவேசிக்கப்போகிறவர்களைப் பிரவேசிக்கவிடுகிறதுமில்லை.
14மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, பார்வைக்காக நீண்ட ஜெபம்பண்ணி, விதவைகளின் வீடுகளைப் பட்சித்துப்போடுகிறீர்கள்; இதினிமித்தம் அதிக ஆக்கினையை அடைவீர்கள்.
15மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்கள் மார்க்கத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள்.
16குருடரான வழிகாட்டிகளே! உங்களுக்கு ஐயோ, எவனாகிலும் தேவாலயத்தின்பேரில் சத்தியம்பண்ணினால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாகிலும் தேவாலயத்தின் பொன்னின்பேரில் சத்தியம்பண்ணினால் அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள்.
17மதிகேடரே, குருடரே! எது முக்கியம்? பொன்னோ, பொன்னைப் பரிசுத்தமாக்குகிற தேவாலயமோ?
18மேலும், எவனாகிலும் பலிபீடத்தின் பேரில் சத்தியம்பண்ணினால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாகிலும் அதின்மேல் இருக்கிற காணிக்கையின்பேரில் சத்தியம்பண்ணினால், அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள்.
19மதிகேடரே, குருடரே! எது முக்கியம்? காணிக்கையோ, காணிக்கையைப் பரிசுத்தமாக்குகிற பலிபீடமோ?
20ஆகையால், பலிபீடத்தின்பேரில் சத்தியம்பண்ணுகிறவன் அதின்பேரிலும் அதின்மேலுள்ள எல்லாவற்றின்பேரிலும் சத்தியம்பண்ணுகிறான்.
21தேவாலயத்தின்பேரில் சத்தியம்பண்ணுகிறவன் அதின்பேரிலும் அதில் வாசமாயிருக்கிறவர்பேரிலும் சத்தியம்பண்ணுகிறான்.
22வானத்தின்பேரில் சத்தியம்பண்ணுகிறவன் தேவனுடைய சிங்காசனத்தின்பேரிலும் அதில் வீற்றிருக்கிறவர்பேரிலும் சத்தியம்பண்ணுகிறான்.
23மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தயத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள், இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே.
24குருடரான வழிகாட்டிகளே, கொசுகில்லாதபடி வடிகட்டி, ஒட்டகத்தை விழுங்குகிறவர்களாயிருக்கிறீர்கள்.
25மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள்; உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது.
26குருடனான பரிசேயனே! போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு.
27மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள், அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும்.
28அப்படியே நீங்களும் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்.
29மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் தீர்க்கதரிசிகளின் கல்லறைகளைக் கட்டி, நீதிமான்களின் சமாதிகளைச் சிங்காரித்து:
30எங்கள் பிதாக்களின் நாட்களில் இருந்தோமானால், அவர்களோடே நாங்கள் தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழிக்கு உடன்பட்டிருக்கமாட்டோம் என்கிறீர்கள்.
31ஆகையால், தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்தவர்களுக்குப் புத்திரராயிருக்கிறீர்கள் என்று உங்களைக்குறித்து நீங்களே சாட்சிகளாயிருக்கிறீர்கள்.
32நீங்களும் உங்கள் பிதாக்களின் அக்கிரம அளவை நிரப்புங்கள்.
33சர்ப்பங்களே, விரியன்பாம்புக்குட்டிகளே! நரகாக்கினைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவீர்கள்?
34ஆகையால், இதோ, தீர்க்கதரிசிகளையும் ஞானிகளையும் வேதபாரகரையும் உங்களிடத்தில் அனுப்புகிறேன்; அவர்களில் சிலரைக் கொன்று சிலுவைகளில் அறைவீர்கள், சிலரை உங்கள் ஆலயங்களில் வாரினால் அடித்து, ஊருக்கு ஊர் துன்பப்படுத்துவீர்கள்;
35நீதிமானாகிய ஆபேலின் இரத்தம்முதல் தேவாலயத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே நீங்கள் கொலைசெய்த பரகியாவின் குமாரனாகிய சகரியாவின் இரத்தம்வரைக்கும், பூமியின்மேல் சிந்தப்பட்ட நீதிமான்களின் இரத்தப்பழியெல்லாம் உங்கள்மேல் வரும்படியாக இப்படிச் செய்வீர்கள்.
36இவைகளெல்லாம் இந்தச் சந்ததியின்மேல் வருமென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
37எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று.
38இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்.
39கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லுமளவும், இதுமுதல் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com