‹ முகப்புமுழுத் திட்டம்

ஜூலை 14 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்ஜூலை 14அடுத்த நாள் ›
குடும்பம்
யோசுவா 20

1கர்த்தர் யோசுவாவை நோக்கி:

2நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: அறியாமல் கைப்பிசகாய் ஒருவனைக் கொன்றவன் ஓடிப்போயிருக்கும்படி; நான் மோசேயைக்கொண்டு உங்களுக்குக் கற்பித்த அடைக்கலப்பட்டணங்களை உங்களுக்கு ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.

3அவைகள் உங்களுக்கு இரத்தப்பழி வாங்குகிறவனுடைய கைக்குத் தப்பிப்போயிருக்கத்தக்க அடைக்கலமாயிருக்கும்.

4அந்தப் பட்டணங்களில் ஒன்றிற்கு ஓடிவருகிறவன், பட்டணத்தின் ஒலிமுகவாசலில் நின்றுகொண்டு, அந்தப் பட்டணத்தினுடைய மூப்பரின் செவிகள் கேட்க, தன் காரியத்தைச் சொல்வானாக; அப்பொழுது அவர்கள் அவனைத் தங்களிடத்தில் பட்டணத்துக்குள்ளே சேர்த்துக்கொண்டு, தங்களோடே குடியிருக்க அவனுக்கு இடம் கொடுக்கக்கடவர்கள்.

5பழிவாங்குகிறவன் அவனைத் தொடர்ந்துவந்தால், அவன் பிறனை முற்பகையின்று அறியாமல் கொன்றதினால், அவனை இவன் கையில் ஒப்புக்கொடாதிருக்கவேண்டும்.

6நியாயம் விசாரிக்கும் சபைக்கு முன்பாக அவன் நிற்கும்வரைக்கும், அந்நாட்களிலிருக்கிற பிரதான ஆசாரியன் மரணமடையும் வரைக்கும், அவன் அந்தப் பட்டணத்திலே குடியிருக்கக்கடவன்; பின்பு கொலைசெய்தவன் தான் விட்டோடிப்போன தன் பட்டணத்திற்கும் தன் வீட்டிற்கும் திருப்பிப்போகவேண்டும் என்று சொல் என்றார்.

7அப்படியே அவர்கள் நப்தலியின் மலைத்தேசமான கலிலேயாவிலுள்ள கேதேசையும், எப்பிராயீமின் மலைத்தேசத்திலுள்ள எபிரோனாகிய கீரியாத் அர்பாவையும் ஏற்படுத்தினார்கள்.

8எரிகோவிலிருக்கும் யோர்தானுக்கு அக்கரையான கிழக்கிலே ரூபன் கோத்திரத்திற்கு இருக்கும் சமபூமியின் வனாந்தரத்திலுள்ள பேசேரையும், காத் கோத்திரத்திற்கு இருக்கும் கீலேயாத்திலுள்ள ராமோத்தையும், மனாசே கோத்திரத்திற்கு இருக்கும் பாசானிலுள்ள கோலானையும் குறித்துவைத்தார்கள்.

9கைப்பிசகாய் ஒருவனைக் கொன்றவன் எவனோ அவன் சபைக்கு முன்பாக நிற்கும்வரைக்கும், பழிவாங்குகிறன் கையினால் சாகாதபடிக்கு ஓடிப்போய் ஒதுங்கும்படி, இஸ்ரவேல் புத்திரர் யாவருக்கும், அவர்கள் நடுவே தங்குகிற பரதேசிக்கும், குறிக்கப்பட்ட பட்டணங்கள் இவைகளே.

யோசுவா 21

1அப்பொழுது லேவியரின் வம்சப்பிதாக்களின் தலைவர்; கானான்தேசத்திலிருக்கிற சீலோவிலே ஆசாரியனாகிய எலெயாசாரிடத்திலும், நூனின் குமாரனாகிய யோசுவாவினிடத்திலும், இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரப் பிதாக்களிலுள்ள தலைவரிடத்திலும் சேர்ந்துவந்து:

2நாங்கள் குடியிருக்கும் பட்டணங்களையும், எங்கள் மிருகஜீவனுக்காக வெளிநிலங்களையும் எங்களுக்குக் கொடுக்கும்படி, கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டாரே என்றார்கள்.

3கர்த்தருடைய வாக்கின்படியே, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சுதந்தரத்திலே லேவியருக்குப் பட்டணங்களையும் அவைகளின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்.

4கோகாத்தியரின் வம்சங்களுக்குச் சீட்டு விழுந்தது; அந்தச் சீட்டின்படி லேவியரில் ஆசாரியனாகிய ஆரோனின் குமாரருக்கு யூதா கோத்திரத்திலும், சிமியோன் கோத்திரத்திலும், பென்யமீன் கோத்திரத்திலும் கிடைத்த பட்டணங்கள் பதின்மூன்று.

5கோகாத்தின் மற்றப் புத்திரருக்கு, எப்பிராயீம் கோத்திரத்தின் வம்சங்களுக்குள்ளும், தாண் கோத்திரத்திலும், மனாசேயின் பாதிக் கோத்திரத்திலும், சீட்டினால் கிடைத்த பட்டணங்கள் பத்து.

6கெர்சோன் புத்திரருக்கு, இசக்கார் கோத்திரத்தின் வம்சங்களுக்குள்ளும், ஆசேர் கோத்திரத்திலும், நப்தலி கோத்திரத்திலும், பாசானிலிருக்கிற மனாசேயின் பாதிக் கோத்திரத்திலும், சீட்டினால் கிடைத்த பட்டணங்கள் பதின்மூன்று.

7மெராரி புத்திரருக்கு, அவர்கள் வம்சங்களின்படியே, ரூபன் கோத்திரத்திலும், காத் கோத்திரத்திலும், செபுலோன் கோத்திரத்திலும் கிடைத்த பட்டணங்கள் பன்னிரண்டு.

8இந்தப் பட்டணங்களையும் அவைகளின் வெளிநிலங்களையும் இஸ்ரவேல் புத்திரர், கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டபடியே, சீட்டுப்போட்டு லேவியருக்குக் கொடுத்தார்கள்.

9லேவியின் குமாரரில் முதலாம் சீட்டைப்பெற்ற கோகாத்தியரின் வம்சங்களிலே இருக்கிற ஆரோனின் குமாரருக்கு,

10யூதா புத்திரரின் கோத்திரத்திலும், சிமியோன் புத்திரரின் கோத்திரத்திலும், அவர்கள் கொடுத்தவைகளும் பேர்பேராகச் சொல்லப்பட்டவைகளுமான பட்டணங்களின் நாமங்களாவன:

11யூதாவின் மலைத்தேசத்தில் ஆனாக்கின் தகப்பனாகிய அர்பாவின் பட்டணமான எபிரோனையும் அதைச் சூழ்ந்த வெளிநிலங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள்.

12பட்டணத்தைச் சேர்ந்த வயல்களையும் அதின் பட்டிகளையும் எப்புன்னேயின் குமாரனாகிய காலேபுக்குக் காணியாட்சியாகக் கொடுத்தார்கள்.

13இப்படியே கொலைசெய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமாக ஆசாரியனாகிய ஆரோனின் குமாரருக்கு எபிரோனையும் அதின் வெளிநிலங்களையும், லிப்னாவையும் அதின் வெளிநிலங்களையும்,

14யாத்தீரையும் அதின் வெளிநிலங்களையும், எஸ்தெமொவாவையும் அதின் வெளிநிலங்களையும்,

15ஓலோனையும் அதின் வெளிநிலங்களையும், தெபீரையும் அதின் வெளிநிலங்களையும்,

16ஆயினையும் அதின் வெளிநிலங்களையும், யுத்தாவையும் அதின் வெளிநிலங்களையும், பெத்ஷிமேசையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; அந்த இரண்டு கோத்திரங்களிலிருக்கிற பட்டணங்கள் ஒன்பது.

17பென்யமீன் கோத்திரத்திலே அவர்களுக்குக் கிபியோனையும் அதின் வெளிநிலங்களையும் கேபாவையும் அதின் வெளிநிலங்களையும்,

18ஆனதோத்தையும் அதின் வெளிநிலங்களையும், அல்மோனையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நாலு.

19ஆசாரியரான ஆரோனுடைய குமாரரின் பட்டணங்களெல்லாம் அவைகளின் வெளிநிலங்களுட்பட பதின்மூன்று.

20லேவியரான கோகாத்தின் புத்திரரில் மீதியான அவர்களுடைய மற்ற வம்சங்களுக்கு எப்பிராயீம் கோத்திரத்திலே அவர்களுக்குப் பங்குவீதமாக அவர்கள் கொடுத்த பட்டணங்களாவன:

21கொலைசெய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமான எப்பிராயீமின் மலைத்தேசத்தில் இருக்கிற சீகேமையும் அதின் வெளிநிலங்களையும், கேசேரையும் அதின் வெளிநிலங்களையும்,

22கிப்சாயீமையும் அதின் வெளிநிலங்களையும், பெத்தொரோனையும் அதின் வெளிநிலங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நாலு.

23தாண் கோத்திரத்திலே எல்தெக்கேயையும் அதின் வெளிநிலங்களையும், கிபெத்தோனையும் அதின் வெளிநிலங்களையும்,

24ஆயலோனையும் அதின் வெளிநிலங்களையும், காத்ரிம்மோனையும் அதின் வெளிநிலங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நாலு.

25மனாசேயின் பாதிக் கோத்திரத்திலே தானாகையும் அதின் வெளிநிலங்களையும், காத்ரிம்மோனையும் அதின் வெளிநிலங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் இரண்டு.

26கோகாத் புத்திரரின் மீதியான வம்சங்களுக்கு உண்டான பட்டணங்களெல்லாம் அவைகளின் வெளிநிலங்களுட்பட பத்து.

27லேவியரின் வம்சங்களிலே கெர்சோன் புத்திரருக்கு மனாசேயின் பாதிக் கோத்திரத்தில் கொலை செய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமான பாசானிலுள்ள கோலானையும் அதின் வெளிநிலங்களையும், பெயேஸ்திராவையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் இரண்டு.

28இசக்காரின் கோத்திரத்திலே கீசோனையும் அதின் வெளிநிலங்களையும், தாபராத்தையும் அதின் வெளிநிலங்களையும்,

29யர்மூத்தையும் அதின் வெளிநிலங்களையும், என்கன்னீமையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நாலு.

30ஆசேரின் கோத்திரத்திலே மிஷயாலையும் அதின் வெளிநிலங்களையும், அப்தோனையும் அதின் வெளிநிலங்களையும்,

31எல்காத்தையும் அதின் வெளிநிலங்களையும், ரேகோபையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நாலு.

32நப்தலி கோத்திரத்திலே கொலைசெய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமாக கலிலேயாவிலுள்ள கேதேசையும் அதின் வெளிநிலங்களையும், அம்மோத்தோரையும் அதின் வெளிநிலங்களையும், கர்தானையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் மூன்று.

33கெர்சோனியருக்கு அவர்கள் வம்சங்களின்படி உண்டான பட்டணங்களெல்லாம் அவைகளின் வெளிநிலங்களுட்பட பதின்மூன்று.

34மற்ற லேவியராகிய மெராரி புத்திரரின் வம்சங்களுக்குச் செபுலோன் கோத்திரத்திலே யொக்னியாமையும் அதின் வெளிநிலங்களையும், கர்தாவையும் அதின் வெளிநிலங்களையும்,

35திம்னாவையும் அதின் வெளிநிலங்களையும், நகலாலையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நாலு.

36ரூபன் கோத்திரத்திலே பேசேரையும் அதின் வெளிநிலங்களையும், யாகசாவையும் அதின் வெளிநிலங்களையும்,

37கெதெமோத்தையும் அதின் வெளிநிலங்களையும், மெபாகாத்தையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நாலு.

38காத் கோத்திரத்திலே கொலை செய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமாக, கீலேயாத்திலுள்ள ராமோத்தையும் அதின் வெளிநிலங்களையும், மக்னாயீமையும் அதின் வெளிநிலங்களையும்,

39எஸ்போனையும் அதின் வெளிநிலங்களையும், யாசேரையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நாலு.

40இவைகளெல்லாம் லேவியரின் மற்றவம்சங்களாகிய மெராரி புத்திரருக்கு, அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த பட்டணங்கள்; அவர்களுடைய பங்குவீதம் பன்னிரண்டு பட்டணங்கள்.

41இஸ்ரவேல் புத்திரருடைய காணியாட்சியின் நடுவிலே இருக்கிற லேவியரின் பட்டணங்களெல்லாம், அவைகளின் வெளிநிலங்களுட்பட நாற்பத்தெட்டு.

42இந்தப் பட்டணங்களில் ஒவ்வொன்றிற்கும் அததைச் சூழ்ந்த வெளிநிலங்கள் இருந்தது; எல்லாப் பட்டணங்களுக்கும் அப்படியே இருந்தது.

43இந்தப்பிரகாரமாகக் கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கொடுப்பேன் என்று அவர்களுடைய பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தையெல்லாம் கொடுத்தார்; அவர்கள் அவைகளைச் சுதந்தரித்துக்கொண்டு, அவைகளிலே குடியிருந்தார்கள்.

44கர்த்தர் அவர்களுடைய பிதாக்களுக்கு ஆணையிட்டபடியெல்லாம் அவர்களைச் சுற்றிலும் யுத்தமில்லாமல் இளைப்பாறப்பண்ணினார்; அவர்களுடைய எல்லாச் சத்துருக்களிலும் ஒருவரும் அவர்களுக்கு முன்பாக நிற்கவில்லை; அவர்கள் சத்துருக்களையெல்லாம் கர்த்தர் அவர்கள் கையில் ஒப்புக்கொடுத்தார்.

45கர்த்தர் இஸ்ரவேல் குடும்பத்தாருக்குச் சொல்லியிருந்த நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை; எல்லாம் நிறைவேறிற்று.

அப்போஸ்தலர் 1

முழு அதிகாரம் ›

1தெயோப்பிலுவே, இயேசுவானவர் தாம் தெரிந்துகொண்ட அப்போஸ்தலருக்குப் பரிசுத்த ஆவியினாலே கட்டளையிட்டபின்பு,

2அவர் எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரைக்கும் செய்யவும் உபதேசிக்கவும் தொடங்கின எல்லாவற்றையுங்குறித்து, முதலாம் பிரபந்தத்தை உண்டுபண்ணினேன்.

3அவர் பாடுபட்டபின்பு, நாற்பது நாளளவும் அப்போஸ்தலருக்குத் தரிசனமாகி, தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளை அவர்களுடனே பேசி, அநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார்.

4அன்றியும், அவர் அவர்களுடனே கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானம் கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்.

5ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்.

6அப்பொழுது கூடிவந்திருந்தவர்கள் அவரை நோக்கி: ஆண்டவரே, இக்காலத்திலா இராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர் என்று கேட்டார்கள்.

7அதற்கு அவர்: பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல.

8பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிப்பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.

9இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், உயர எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது.

10அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்துபார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, வெண்மையான வஸ்திரந்தரித்தவர்கள் இரண்டுபேர் அவர்களருகே நின்று:

11கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.

12அப்பொழுது அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய் ஒரு ஓய்வுநாள் பிரயாணதூரத்திலிருக்கிற ஒலிவமலை என்னப்பட்ட மலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பிப்போனார்கள்.

13அவர்கள் அங்கே வந்தபோது மேல்வீட்டில் ஏறினார்கள்; அதில் பேதுருவும், யாக்கோபும், யோவானும், அந்திரேயாவும், பிலிப்பும், தோமாவும், பர்த்தொலொமேயும், மத்தேயும், அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபும், செலோத்தே என்னப்பட்ட சீமோனும், யாக்கோபின் சகோதரனாகிய யூதாவும் தங்கியிருந்தார்கள்.

14அங்கே இவர்களெல்லாரும், ஸ்திரீகளோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரரோடுங்கூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள்.

15அந்நாட்களிலே, சீஷர்களில் ஏறக்குறைய நூற்றிருபதுபேர் கூடியிருந்தபோது, அவர்கள் நடுவிலே பேதுரு எழுந்து நின்று:

16சகோதரரே, இயேசுவைப் பிடித்தவர்களுக்கு வழிகாட்டின யூதாசைக்குறித்துப் பரிசுத்த ஆவி தாவீதின் வாக்கினால் முன் சொன்ன வேதவாக்கியம் நிறைவேறவேண்டியதாயிருந்தது.

17அவன் எங்களில் ஒருவனாக எண்ணப்பட்டு, இந்த ஊழியத்திலே பங்குபெற்றவனாயிருந்தான்.

18அநீதத்தின் கூலியினால் அவன் ஒரு நிலத்தைச் சம்பாதித்து, தலைகீழாக விழுந்தான்; அவன் வயிறுவெடித்து, குடல்களெல்லாம் சரிந்துபோயிற்று.

19இது எருசலேமிலுள்ள குடிகள் யாவருக்கும் தெரிந்திருக்கிறது; அதினாலே அந்த நிலம் அவர்களுடைய பாஷையிலே இரத்தநிலம் என்று அர்த்தங்கொள்ளும் அக்கெல்தமா என்னப்பட்டிருக்கிறது.

20சங்கீத புஸ்தகத்திலே: அவனுடைய வாசஸ்தலம் பாழாகக்கடவது, ஒருவனும் அதில் வாசம்பண்ணாதிருப்பானாக என்றும்; அவனுடைய கண்காணிப்பை வேறொருவன் பெறக்கடவன் என்றும் எழுதியிருக்கிறது.

21ஆதலால், யோவான் ஞானஸ்நானம்கொடுத்த நாள்முதற்கொண்டு, கர்த்தராகிய இயேசுவானவர் நம்மிடத்திலிருந்து உயர எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரைக்கும்,

22அவர் நம்மிடத்தில் சஞ்சரித்திருந்த காலங்களிலெல்லாம் எங்களுடனேகூட இருந்த மனுஷர்களில் ஒருவன் அவர் உயிரோடெழுந்ததைக்குறித்து, எங்களுடனேகூடச் சாட்சியாக ஏற்படுத்தப்படவேண்டும் என்றான்.

23அப்பொழுது அவர்கள் யுஸ்து என்னும் மறுநாமமுள்ள பர்சபா என்னப்பட்ட யோசேப்பும் மத்தியாவும் ஆகிய இவ்விரண்டுபேரையும் நிறுத்தி:

24எல்லாருடைய இருதயங்களையும் அறிந்திருக்கிற கர்த்தாவே, யூதாஸ் என்பவன் தனக்குரிய இடத்துக்குப் போகும்படி இழந்துபோன இந்த ஊழியத்திலும் இந்த அப்போஸ்தலப்பட்டத்திலும் பங்கு பெறுவதற்காக,

25இவ்விரண்டு பேரில் தேவரீர் தெரிந்துகொண்டவனை எங்களுக்குக் காண்பித்தருளும் என்று ஜெபம்பண்ணி;

26பின்பு, அவர்களைக்குறித்துச் சீட்டுப்போட்டார்கள்; சீட்டு மத்தியாவின் பேருக்கு விழுந்தது; அப்பொழுது அவன் பதினொரு அப்போஸ்தலருடனே சேர்த்துக்கொள்ளப்பட்டான்.

தனிவாசிப்பு

1இஸ்ரவேல் வீட்டாரே, கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிற வசனத்தைக் கேளுங்கள்:

2புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள்; வானத்தின் அடையாளங்களாலே புறஜாதிகள் கலங்குகிறார்களே என்று சொல்லி, நீங்கள் அவைகளாலே கலங்காதிருங்கள்.

3ஜனங்களின் வழிபாடுகள் வீணாயிருக்கிறது; காட்டில் ஒரு மரத்தை வெட்டுகிறார்கள்; அது தச்சன் கையாடுகிற வாச்சியால் பணிப்படும்.

4வெள்ளியினாலும் பொன்னினாலும் அதை அலங்கரித்து, அது அசையாதபடிக்கு அதை ஆணிகளாலும் சுத்திகளாலும் உறுதியாக்குகிறார்கள்.

5அவைகள் பனையைப்போல நெட்டையாய் நிற்கிறது, அவைகள் பேசமாட்டாதவைகள், அவைகள் நடக்கமாட்டாததினால் சுமக்கப்படவேண்டும்; அவைகளுக்குப் பயப்படவேண்டாம்; அவைகள் தீமை செய்யக்கூடாது, நன்மை செய்யவும் அவைகளுக்குச் சக்தி இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.

6கர்த்தாவே, உமக்கு ஒப்பானவன் இல்லை; நீரே பெரியவர்; உமது நாமமே வல்லமையில் பெரியது.

7ஜாதிகளின் ராஜாவே, உமக்குப் பயப்படாதிருப்பவன் யார்? தேவரீருக்கே பயப்படவேண்டியது; ஜாதிகளுடைய எல்லா ஞானிகளிலும், அவர்களுடைய எல்லா ராஜ்யத்திலும் உமக்கு ஒப்பானவன் இல்லை.

8அவர்கள் யாவரும் மிருககுணமும் மதியீனமுமுள்ளவர்கள்; அந்தக் கட்டை மாயையான போதகமாயிருக்கிறது.

9தகடாக்கப்பட்ட வெள்ளி தர்ஷீசிலும், பொன் ஊப்பாசிலுமிருந்து கொண்டுவரப்பட்டு, அவைகள் தொழிலாளியினாலும், தட்டான் கைகளினாலும் செய்யப்படுகிறது; இளநீலமும் இரத்தாம்பரமும் அவைகளின் உடுமானம்; அவைகளெல்லாம் தொழிலாளிகளின் கைவேலையாயிருக்கிறது.

10கர்த்தரோ மெய்யான தெய்வம்; அவர் ஜீவனுள்ள தேவன், நித்திய ராஜா; அவருடைய கோபத்தினால் பூமி அதிரும்; அவருடைய உக்கிரத்தை ஜாதிகள் சகிக்கமாட்டார்கள்.

11வானத்தையும் பூமியையும் உண்டாக்காத தெய்வங்கள், பூமியிலும் இந்த வானத்தின்கீழும் இராதபடிக்கு அழிந்துபோகும் என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள்.

12அவரே பூமியைத் தம்முடைய வல்லமையினால் உண்டாக்கி, பூச்சக்கரத்தைத் தம்முடைய ஞானத்தினால் படைத்து, வானத்தைத் தம்முடைய அறிவினால் விரித்தார்.

13அவர் சத்தமிடுகையில் வானத்திலே திரளான தண்ணீர் உண்டாகிறது; அவர் பூமியின் கடையாந்தரத்திலிருந்து மேகங்களை எழும்பப்பண்ணி, மழையுடனே மின்னல்களை உண்டாக்கி, காற்றைத் தமது பண்டகசாலைகளிலிருந்து புறப்படப்பண்ணுகிறார்.

14மனுஷர் அனைவரும் அறிவில்லாமல் மிருககுணமுள்ளவர்களானார்கள்; தட்டார் அனைவரும் வார்ப்பித்த சுரூபங்களாலே வெட்கிப்போகிறார்கள்; அவர்கள் வார்ப்பித்த விக்கிரகம் பொய்யே, அவைகளில் ஆவி இல்லை.

15அவைகள் மாயையும், மகா எத்தான கிரியையுமாயிருக்கிறது; அவைகள் விசாரிக்கப்படும் நாளிலே அழியும்.

16யாக்கோபின் பங்காயிருக்கிறவர் அவைகளைப்போல் அல்ல, அவர் சர்வத்தையும் உருவாக்கினவர்; இஸ்ரவேல் அவருடைய சுதந்தரமான கோத்திரம்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்.

17அரணில் குடியிருக்கிறவளே, தேசத்திலிருந்து உன் பொருள்களைச் சேர்த்துக்கொள்.

18இதோ, நான் இந்த முறை தேசத்தின் குடிகளைக் கவண்கொண்டெறிந்து, அவர்கள் கண்டு உணரும்படி அவர்களுக்கு நெருக்கமுண்டாக்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

19ஐயோ! நான் நொறுக்கப்பட்டேன்; என் காயம் கொடிதாயிருக்கிறது; ஆனாலும் இது நான் சகிக்கவேண்டிய என் நோய் என்று நான் சொல்லுவேன்.

20என் கூடாரம் அழிந்துபோயிற்று, என் கயிறுகளெல்லாம் அறுப்புண்டுபோயின; என் பிள்ளைகள் என்னை விட்டுப்போய்விட்டார்கள்; அவர்களில் ஒருவனுமில்லை; இனி என் கூடாரத்தை விரித்து என் திரைகளைத் தூக்கிக்கட்டுவாரில்லை.

21மேய்ப்பர்கள் மிருககுணமுள்ளவர்களாகி, கர்த்தரைத் தேடாமற்போனார்கள்; ஆகையால், அவர்கள் காரியம் வாய்க்காமற்போய், அவர்கள் மந்தையெல்லாம் சிதறடிக்கப்பட்டது.

22இதோ, யூதாவின் பட்டணங்களைப் பாழும் வலுசர்ப்பங்களின் தாவுமாக்கிப்போடும் செய்தியின் சத்தமும், வடதேசத்திலிருந்து பெரிய கொந்தளிப்பும் வருகிறது.

23கர்த்தாவே, மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன்.

24கர்த்தாவே, என்னைத் தண்டியும்; ஆனாலும் நான் அவமாய்ப்போகாதபடிக்கு உம்முடைய கோபத்தினாலே அல்ல, மட்டாய்த் தண்டியும்.

25உம்மை அறியாத ஜாதிகளின்மேலும், உமது நாமத்தைத் தொழுதுகொள்ளாத வம்சங்களின்மேலும், உம்முடைய உக்கிரத்தை ஊற்றிவிடும்; அவர்கள் யாக்கோபைப் பட்சித்து, அவனை விழுங்கி, அவனை நிர்மூலமாக்கி, அவன் வாசஸ்தலத்தைப் பாழாக்கினார்களே.

1இயேசு தேவாலயத்தை விட்டுப் புறப்பட்டுப்போகையில், அவருடைய சீஷர்கள் தேவாலயத்தின் கட்டடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடத்தில் வந்தார்கள்.

2இயேசு அவர்களை நோக்கி: இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே, இவ்விடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

3பின்பு, அவர் ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கையில், சீஷர்கள் அவரிடத்தில் தனித்துவந்து: இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள்.

4இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்;

5ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்.

6யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும், முடிவு உடனே வராது.

7ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.

8இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்.

9அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்: என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்.

10அப்பொழுது, அநேகர் இடறலடைந்து, ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள்.

11அநேகக் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள்.

12அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோகும்.

13முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.

14ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.

15மேலும், பாழாக்குகிற அருவருப்பைக்குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே, வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன். நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும்போது,

16யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள்.

17வீட்டின்மேல் இருக்கிறவன் தன் வீட்டிலே எதையாகிலும் எடுப்பதற்கு இறங்காதிருக்கக்கடவன்.

18வயலில் இருக்கிறவன் தன் வஸ்திரங்களை எடுப்பதற்குத் திரும்பாதிருக்கக்கடவன்.

19அந்நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ.

20நீங்கள் ஓடிப்போவது மாரிகாலத்திலாவது, ஓய்வுநாளிலாவது, சம்பவியாதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள்.

21ஏனெனில், உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்.

22அந்நாட்கள் குறைக்கப்படாதிருந்தால், ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை; தெரிந்துகொள்ளப்பட்டவர்களினிமித்தமோ அந்த நாட்கள் குறைக்கப்படும்.

23அப்பொழுது, இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள்.

24ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.

25இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்.

26ஆகையால்: அதோ, வனாந்தரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால், புறப்படாதிருங்கள்; இதோ, அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதிருங்கள்.

27மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும்.

28பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும்.

29அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்.

30அப்பொழுது மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்.

31வலுவாய்த் தொனிக்கும் எக்காளசத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார்கள்.

32அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள்.

33அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள்.

34இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

35வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.

36அந்த நாளையும் அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்.

37நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்.

38எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள்வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண்கொண்டும் பெண்கொடுத்தும்,

39ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்.

40அப்பொழுது, இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான்.

41இரண்டு ஸ்திரீகள் எந்திரம் அரைத்துக்கொண்டிருப்பார்கள்; ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், ஒருத்தி கைவிடப்படுவாள்.

42உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள்.

43திருடன் இன்ன ஜாமத்தில் வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டானென்று அறிவீர்கள்.

44நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.

45ஏற்றவேளையிலே தன் வேலைக்காரருக்குப் போஜனங்கொடுத்து அவர்களை விசாரிக்கும்படி எஜமான் வைத்த உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன் யாவன்?

46எஜமான் வரும்போது அப்படிச் செய்கிறவனாகக் காணப்படுகிற ஊழியக்காரனே பாக்கியவான்.

47தன் ஆஸ்திகள் எல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பானென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

48அந்த ஊழியக்காரனோ பொல்லாதவனாயிருந்து: என் ஆண்டவன் வர நாள் செல்லும் என்று தன் உள்ளத்திலே சொல்லிக்கொண்டு,

49தன் உடன்வேலைக்காரரை அடிக்கத்தொடங்கி, வெறியரோடே புசிக்கவும் குடிக்கவும் தலைப்பட்டால்,

50அந்த ஊழியக்காரன் நினையாத நாளிலும், அறியாத நாழிகையிலும், அவனுடைய எஜமான் வந்து,

51அவனைக் கடினமாய்த் தண்டித்து, மாயக்காரரோடே அவனுக்குப் பங்கை நியமிப்பான்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com