‹ முகப்புமுழுத் திட்டம்

ஜூலை 15 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்ஜூலை 15அடுத்த நாள் ›
குடும்பம்

1அப்பொழுது யோசுவா ரூபனியரையும் காத்தியரையும் மனாசேயின் பாதிக்கோத்திரத்தையும் அழைத்து,

2அவர்களை நோக்கி: கர்த்தருடைய தாசனாகிய மோசே உங்களுக்குக் கட்டளையிட்டவைகளையெல்லாம் நீங்கள் கைக்கொண்டீர்கள்; நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவிலும் என் சொற்படி செய்தீர்கள்.

3நீங்கள் இதுவரைக்கும் அநேக நாளாக உங்கள் சகோதரரைக் கைவிடாமல், உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளையைக் காத்துக்கொண்டு நடந்தீர்கள்.

4இப்பொழுதும் உங்கள் தேவனாகிய கர்த்தர் தாம் உங்கள் சகோதரருக்குச் சொல்லியிருந்தபடியே, அவர்களை இளைப்பாறப்பண்ணினார்; ஆகையால் கர்த்தரின் தாசனாகிய மோசே யோர்தானுக்கு அப்புறத்திலே உங்களுக்குக் கொடுத்த உங்கள் காணியாட்சியான தேசத்திலிருக்கிற உங்கள் கூடாரங்களுக்குத் திரும்பிப்போங்கள்.

5ஆனாலும் நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவருடைய வழிகளிலெல்லாம் நடந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவரைப் பற்றிக்கொண்டிருந்து, அவரை உங்கள் முழு இருதயத்தோடும் உங்களை முழு ஆத்துமாவோடும் சேவிக்கிறதற்காக, கர்த்தரின் தாசனாகிய மோசே உங்களுக்குக் கற்பித்த கற்பனையின்படியேயும் நியாயப்பிரமாணத்தின்படியேயும் செய்யும்படி மாத்திரம் வெகு சாவதானமாயிருங்கள் என்றான்.

6இவ்விதமாய் யோசுவா அவர்களை ஆசீர்வதித்து, அவர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள்.

7மனாசேயின் பாதிக் கோத்திரத்துக்கு மோசே பாசானிலே சுதந்தரம் கொடுத்தான்; அதின் மற்றப் பாதிக்கு, யோசுவா யோர்தானுக்கு இப்புறத்திலே மேற்கே அவர்கள் சகோதரரோடேகூடச் சுதந்தரம் கொடுத்தான்; யோசுவா அவர்களை அவர்கள் கூடாரங்களுக்கு அனுப்பிவிடுகிறபோது, அவர்களை ஆசீர்வதித்து:

8நீங்கள் மிகுந்த ஐசுவரியத்தோடும், மகா ஏராளமான ஆடுமாடுகளோடும், பொன் வெள்ளி வெண்கலம் இரும்போடும், அநேக வஸ்திரங்களோடும் உங்கள் கூடாரங்களுக்குத் திரும்பி, உங்கள் சத்துருக்களிடத்திலே கொள்ளையிட்டதை உங்கள் சகோதரரோடே பங்கிட்டுக்கொள்ளுங்கள் என்றான்.

9அப்பொழுது ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும், கர்த்தர் மோசேயைக் கொண்டு கட்டளையிட்டபடியே, தாங்கள் கைவசம் பண்ணிக்கொண்ட தங்கள் காணியாட்சி தேசமான கீலேயாத் தேசத்துக்குப் போகும்படிக்கு, கானான்தேசத்திலுள்ள சீலோவிலிருந்த இஸ்ரவேல் புத்திரரை விட்டுத் திரும்பிப்போனார்கள்.

10கானான்தேசத்தில் இருக்கிற யோர்தானின் எல்லைகளுக்கு வந்தபோது, ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும், அங்கே யோர்தானின் ஓரத்திலே பார்வைக்குப் பெரிதான ஒரு பீடத்தைக் கட்டினார்கள்.

11ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் கானான் தேசத்துக்கு எதிரே இஸ்ரவேல் புத்திரருக்கு அடுத்த யோர்தானின் எல்லைகளில் ஒரு பீடத்தைக் கட்டினார்கள் என்று இஸ்ரவேல் புத்திரர் கேள்விப்பட்டார்கள்.

12அவர்கள் அதைக் கேள்விப்பட்டபோது, இஸ்ரவேல் புத்திரரின் சபையாரெல்லாரும் அவர்களுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணும்படி சீலோவிலே கூடி,

13கீலேயாத் தேசத்தில் இருக்கிற ரூபன் புத்திரரிடத்துக்கும் காத் புத்திரரிடத்துக்கும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரிடத்துக்கும், ஆசாரியனாகிய எலெயாசாருடைய குமாரனாகிய பினெகாசையும்,

14அவனோடேகூட இஸ்ரவேலுடைய எல்லாக் கோத்திரங்களிலும் ஒவ்வொரு பிதாவின் குடும்பத்துக்கு ஒவ்வொரு பிரபுவாகப் பத்துப் பிரபுக்களையும் அனுப்பினார்கள்; இஸ்ரவேலின் சேனைகளிலே ஆயிரவர்களுக்குள்ளே ஒவ்வொருவனும் தன் தன் பிதாவின் குடும்பத்துக்குத் தலைவனாயிருந்தான்.

15அவர்கள் கீலேயாத் தேசத்திலே ரூபன் புத்திரர் காத் புத்திரர் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாராகிய இவர்களிடத்திற்கு வந்து:

16நீங்கள் இந்நாளிலே கர்த்தரைப் பின்பற்றாதபடிக்குப் புரண்டு, இந்நாளிலே கர்த்தருக்கு விரோதமாய்க் கலகம்பண்ணும்படியாக உங்களுக்கு ஒரு பீடத்தைக் கட்டி, இஸ்ரவேலின் தேவனுக்கு விரோதமாகப் பண்ணின இந்தத் துரோகம் என்ன?

17பேயோரின் அக்கிரமம் நமக்குப் போதாதா? கர்த்தருடைய சபையிலே வாதை உண்டாயிருந்ததே; இந்நாள்வரைக்கும் நாம் அதினின்று நீங்கிச் சுத்தமாகவில்லையே.

18நீங்கள் இந்நாளில் கர்த்தரைப் பின்பற்றாதபடிக்குப் புரளுவீர்களோ? இன்று கர்த்தருக்கு விரோதமாய்க் கலகம்பண்ணுவீர்களோ? அவர் நாளைக்கு இஸ்ரவேல் சபையனைத்தின்மேலும் கடுங்கோபங்கொள்வாரே.

19உங்கள் காணியாட்சியான தேசம் தீட்டாயிருந்ததானால், கர்த்தருடைய வாசஸ்தலம் தங்குகிற கர்த்தருடைய காணியாட்சியான அக்கரையிலுள்ள தேசத்திற்கு வந்து, எங்கள் நடுவே காணியாட்சி பெற்றுக்கொள்ளலாமே; நீங்கள் நம்முடைய தேவனாகிய கர்த்தரின் பலிபீடத்தையல்லாமல் உங்களுக்கு வேறொரு பீடத்தைக் கட்டுகிறதினாலே, கர்த்தருக்கும் எங்களுக்கும் விரோதமான இரண்டகம் பண்ணாதிருங்கள்.

20சேராவின் குமாரனாகிய ஆகான் சாபத்தீடான பொருளைக்குறித்துத் துரோகம்பண்ணினதினாலே, இஸ்ரவேல் சபையின்மேலெல்லாம் கடுங்கோபம் வரவில்லையா? அவன் ஒருவன்மாத்திரம் தன் அக்கிரமத்தினாலே மடிந்துபோகவில்லையென்று கர்த்தருடைய சபையார் எல்லாரும் சொல்லச்சொன்னார்கள் என்றார்கள்.

21அப்பொழுது ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும், இஸ்ரவேலின் ஆயிரவரின் தலைவருக்குப் பிரதியுத்தரமாக:

22தேவாதி தேவனாகிய கர்த்தர், தேவாதி தேவனாகிய கர்த்தரே, அதை அறிந்திருக்கிறார்; இஸ்ரவேலரும் அறிந்துகொள்ளுவார்கள்; அது இரண்டகத்தினாலாவது, கர்த்தருடைய கட்டளைக்கு விரோதமான துரோகத்தினாலாவது செய்யப்பட்டதானால், இந்நாளில் அவர் எங்களைக் காப்பாற்றாமல் இருக்கக்கடவர்.

23ஒரு காரியத்தைக்குறித்து நாங்கள் எங்களுக்கு அந்தப் பீடத்தைக் கட்டினதே அல்லாமல், கர்த்தரைப் பின்பற்றாதபடிக்கு விலகுவதற்காவது, அதின்மேல் சர்வாங்கதகனபலியையாகிலும் போஜனபலியையாகிலும் சமாதானபலிகளையாகிலும் செலுத்துகிறதற்காவது அதைச் செய்ததுண்டானால், கர்த்தர் அதை விசாரிப்பாராக.

24நாளைக்கு உங்கள் பிள்ளைகள் எங்கள் பிள்ளைகளை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கும் உங்களுக்கும் என்ன?

25ரூபன் புத்திரர் காத் புத்திரர் ஆகிய உங்களுக்கும் எங்களுக்கும் நடுவே கர்த்தர் யோர்தானை எல்லையாக வைத்தார்; கர்த்தரிடத்தில் உங்களுக்குப் பங்கில்லை என்று சொல்லி, எங்கள் பிள்ளைகளைக் கர்த்தருக்குப் பயப்படாதிருக்கச் செய்வார்கள் என்கிற ஐயத்தினாலே நாங்கள் சொல்லிக்கொண்டது என்னவென்றால்:

26சர்வாங்கதகனத்திற்கு அல்ல, பலிக்கும் அல்ல, எங்கள் சர்வாங்கதகனங்களாலும் பலிகளாலும் சமாதானபலிகளாலும் நாங்கள் கர்த்தரின் சந்நிதியில் அவருடைய ஆராதனையைச் செய்யத்தக்கவர்கள் என்று எங்களுக்கும் உங்களுக்கும், நமக்குப் பின்வரும் நம்முடைய சந்ததியாருக்கும் நடுவே சாட்சி உண்டாயிருக்கும்படிக்கும்,

27கர்த்தரிடத்தில் உங்களுக்குப் பங்கில்லை என்று உங்கள் பிள்ளைகள் நாளைக்கு எங்கள் பிள்ளைகளோடே சொல்லாதபடிக்குமே, ஒரு பீடத்தை நமக்காக உண்டுபண்ணுவோம் என்றோம்.

28நாளைக்கு எங்களோடாவது, எங்கள் சந்ததியாரோடாவது அப்படிச் சொல்வார்களானால், அப்பொழுது சர்வாங்க தகனத்திற்கும் அல்ல, பலிக்கும் அல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே சாட்சிக்காக எங்கள் பிதாக்கள் உண்டுபண்ணின கர்த்தருடைய பலிபீடத்தின் சாயலான பீடத்தைப் பாருங்கள் என்று சொல்லலாம் என்றோம்.

29நம்முடைய தேவனாகிய கர்த்தரின் வாசஸ்தலத்திற்கு முன்பாக இருக்கிற அவருடைய பலிபீடத்தைத்தவிர, நாங்கள் சர்வாங்க தகனத்திற்கும், போஜனபலிக்கும், மற்றப் பலிக்கும் வேறொரு பீடத்தைக் கட்டுகிறதினாலே, கர்த்தருக்கு விரோதமாய்க் கலகம்பண்ணுவதும், இன்று கர்த்தரைப் பின்பற்றாதபடிக்கு விலகுவதும், எங்களுக்குத் தூரமாயிருப்பதாக என்றார்கள்.

30ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசே புத்திரரும் சொல்லுகிற வார்த்தைகளை ஆசாரியனாகிய பினெகாசும், அவனோடே இருந்த சபையின் பிரபுக்களும், இஸ்ரவேலுடைய ஆயிரவரின் தலைவரும் கேட்டபோது, அது அவர்கள் பார்வைக்கு நன்றாயிருந்தது.

31அப்பொழுது ஆசாரியனான எலெயாசாரின் குமாரனாகிய பினெகாஸ் ரூபன் புத்திரரையும் காத் புத்திரரையும் மனாசே புத்திரரையும் நோக்கி: நீங்கள் கர்த்தருக்கு விரோதமாய் அப்படிக்கொத்த துரோகத்தைச் செய்யாதிருக்கிறதினாலே, கர்த்தர் நம்முடைய நடுவே இருக்கிறார் என்பதை இன்று அறிந்திருக்கிறோம்; இப்பொழுது இஸ்ரவேல் புத்திரரைக் கர்த்தரின் கைக்குத் தப்புவித்தீர்கள் என்றான்.

32ஆசாரியனான எலெயாசாரின் குமாரனாகிய பினெகாசும், பிரபுக்களும், கீலேயாத் தேசத்தில் இருக்கிற ரூபன் புத்திரரையும் காத் புத்திரரையும் விட்டு, கானான் தேசத்திற்கு இஸ்ரவேல் புத்திரரிடத்தில், திரும்பிவந்து, அவர்களுக்கு மறுசெய்தி சொன்னார்கள்.

33அந்தச் செய்தி இஸ்ரவேல் புத்திரரின் பார்வைக்கு நன்றாயிருந்தது; ஆகையால் ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் குடியிருக்கிற தேசத்தை அழித்துவிட, அவர்கள்மேல் யுத்தத்திற்குப் புறப்படுவோம் என்கிற பேச்சை விட்டு, இஸ்ரவேல் புத்திரர் தேவனை ஸ்தோத்திரித்தார்கள்.

34கர்த்தரே தேவன் என்பதற்கு அந்தப் பீடம் நமக்குள்ளே சாட்சியாயிருக்கும் என்று சொல்லி, ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் அதற்கு ஏத் என்று பேரிட்டார்கள்.

அப்போஸ்தலர் 2

முழு அதிகாரம் ›

1பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள்.

2அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று.

3அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது.

4அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.

5வானத்தின் கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்துவந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே வாசம்பண்ணினார்கள்.

6அந்தச் சத்தம் உண்டானபோது, திரளான ஜனங்கள் கூடிவந்து, தங்கள் தங்கள் பாஷையிலே அவர்கள் பேசுகிறதை அவரவர்கள் கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள்.

7எல்லாரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து: இதோ, பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா?

8அப்படியிருக்க, நம்மில் அவரவர்களுடைய ஜென்மபாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி?

9பார்த்தரும், மேதரும், ஏலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா,

10பம்பிலியா, எகிப்து என்னும் தேசத்தார்களும், சிரேனே பட்டணத்தைச் சுற்றியிருக்கிற லீபியாவின் திசைகளிலே குடியிருக்கிறவர்களும், இங்கே சஞ்சரிக்கிற ரோமாபுரியாரும், யூதரும், யூதமார்க்கத்தமைந்தவர்களும்,

11கிரேத்தரும், அரபியருமாகிய நாம் நம்முடைய பாஷைகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே என்றார்கள்.

12எல்லாரும் பிரமித்துச் சந்தேகப்பட்டு, இதென்னமாய் முடியுமோ என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.

13மற்றவர்களோ: இவர்கள் மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்களென்று பரியாசம்பண்ணினார்கள்.

14அப்பொழுது பேதுரு பதினொருவரோடுங்கூட நின்று, அவர்களை நோக்கி, உரத்த சத்தமாய்: யூதர்களே, எருசலேமில் வாசம்பண்ணுகிற ஜனங்களே, நீங்களெல்லாரும் அறிந்துகொள்வீர்களாக, என் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள்.

15நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் வெறிகொண்டவர்களல்ல, பொழுது விடிந்து மூன்றாம் மணி வேளையாயிருக்கிறதே.

16தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது.

17கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்;

18என்னுடைய ஊழியக்காரர்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்.

19அல்லாமலும் உயர வானத்திலே அற்புதங்களையும், தாழ பூமியிலே இரத்தம், அக்கினி, புகைக்காடாகிய அதிசயங்களையும் காட்டுவேன்.

20கர்த்தருடைய பெரிதும் பிரகாசமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.

21அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான் என்று தேவன் உரைத்திருக்கிறார்.

22இஸ்ரவேலரே, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள்; நீங்கள் அறிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைக்கொண்டு தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார்.

23அப்படியிருந்தும், தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும் ஒப்புக்கொடுக்கப்பட்ட அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலைசெய்தீர்கள்.

24தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை எழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது.

25அவரைக்குறித்துத் தாவீது: கர்த்தரை ஏப்பொழுதும் எனக்கு முன்பாக நிறுத்தி நோக்கிக்கொண்டிருக்கிறேன்; நான் அசைக்கப்படாதபடி அவர் என் வலதுபாரிசத்திலே இருக்கிறார்;

26அதினாலே என் இருதயம் மகிழ்ந்தது, என் நாவு களிகூர்ந்தது, என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்;

27என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக்காணவொட்டீர்;

28ஜீவமார்க்கங்களை எனக்குத் தெரியப்படுத்தினீர்; உம்முடைய சந்நிதானத்திலே என்னைச் சந்தோஷத்தினால் நிரப்புவீர் என்று சொல்லுகிறான்.

29சகோதரரே, கோத்திரத்தலைவனாகிய தாவீதைக்குறித்து நான் உங்களுடனே தைரியமாய்ப் பேசுகிறதற்கு இடங்கொடுங்கள்; அவன் மரணமடைந்து அடக்கம்பண்ணப்பட்டான்; அவனுடைய கல்லறை இந்நாள்வரைக்கும் நம்மிடத்திலிருக்கிறது.

30அவன் தீர்க்கதரிசியாயிருந்து: உன் சிங்காசனத்தில் வீற்றிருக்க மாம்சத்தின்படி உன் சந்ததியிலே கிறிஸ்துவை ஏழும்பப்பண்ணுவேன் என்று தேவன் தனக்குச் சத்தியம்பண்ணினதை அறிந்தபடியால்,

31அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய மாம்சம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்னறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான்.

32இந்த இயேசுவை தேவன் எழுப்பினார்; இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம்.

33அவர் தேவனுடைய வலதுகரத்தினாலே உயர்த்தப்பட்டு, பிதா அருளிய வாக்குத்தத்தின்படி பரிசுத்த ஆவியைப் பெற்று, நீங்கள் இப்பொழுது காண்கிறதும் கேட்கிறதுமாகிய இதைப் பொழிந்தருளினார்.

34தாவீது பரலோகத்திற்கு எழுந்து போகவில்லையே. நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும்,

35நீர் என் வலதுபாரிசத்தில் உட்காருமென்று கர்த்தர் என் ஆண்டவருடனே சொன்னார் என்று அவனே சொல்லியிருக்கிறான்.

36ஆகையினால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள் என்றான்.

37இதை அவர்கள் கேட்டபொழுது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து: சகோதரரே, நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள்.

38பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.

39வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி;

40இன்னும் அநேக வார்த்தைகளாலும் சாட்சிகூறி, மாறுபாடுள்ள இந்தச் சந்ததியை விட்டுவிலகி உங்களை இரட்சித்துக்கொள்ளுங்கள் என்றும் புத்திசொன்னான்.

41அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.

42அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.

43எல்லாருக்கும் பயமுண்டாயிற்று. அப்போஸ்தலர்களாலே அநேக அற்புதங்களும் அடையாளங்களும் செய்யப்பட்டது.

44விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள்.

45காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத்தக்கதாக அவைகளில் எல்லாருக்கும் பகிர்ந்துகொடுத்தார்கள்.

46அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி,

47தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டுவந்தார்.

தனிவாசிப்பு

1கர்த்தராலே எரேமியாவுக்கு உண்டான வசனம்:

2நீங்கள் கேட்டு யூதாவின் மனுஷருக்கும் எருசலேமின் குடிகளுக்கும் சொல்லவேண்டிய உடன்படிக்கையின் வார்த்தைகளாவன:

3என் சத்தத்தைக் கேட்டு, நான் உங்களுக்குக் கற்பிக்கிறபடியே எல்லாக் காரியங்களையும் செய்யுங்கள்; அப்பொழுது நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள், நான் உங்கள் தேவனாயிருப்பேன்;

4நான் உங்கள் பிதாக்களை இருப்புக்காளவாயாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின நாளிலே அவர்களுக்குக் கற்பித்த இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கேளாதமனுஷன் சபிக்கப்பட்டவனென்று, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறாரென்று அவர்களுக்குச் சொல்லு.

5இன்றையதினம் இருக்கிறபடி, பாலும் தேனும் ஓடுகிற தேசத்தை உங்கள் பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று நான் அவர்களுக்கு இட்ட ஆணையை நான் திடப்படுத்தும்படி இப்படி ஆகும் என்றார்; அதற்கு நான் பிரதியுத்தரமாக, அப்படியே ஆகக்கடவது கர்த்தாவே என்றேன்.

6அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: நீ யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் இந்த வார்த்தைகளையெல்லம் கூறி: இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளை நீங்கள் கேட்டு, அவைகளின்படியே செய்யுங்கள்.

7நான் உங்கள் பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணின நாள்முதல், இந்நாள்மட்டும் நான் அவர்களுக்குத் திடச்சாட்சியாய் என் சத்தத்தைக் கேளுங்களென்று ஏற்கனவே சாட்சி விளங்கத்தக்கவிதமாய் எச்சரித்துவந்தேன்.

8ஆனாலும் அவர்கள் கேளாமலும், தங்கள் செவியைச்சாயாமலும்போய், அவரவர் தம்தம் பொல்லாத இருதயகடினத்தின்படி நடந்தார்கள்; ஆதலால் நான் அவர்கள் செய்யும்படி கட்டளையிட்டதும். அவர்கள் செய்யாமற்போனதுமான இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளையெல்லாம் அவர்களுக்குப் பலிக்கப்பண்ணுவேன் என்று சொல் என்றார்.

9பின்னையும் கர்த்தர் என்னை நோக்கி: யூதாவின் மனுஷருக்குள்ளும் எருசலேமின் குடிகளுக்குள்ளும் ஒரு கட்டுப்பாடு காணப்படுகிறது.

10அவர்கள் என் வார்த்தைகளைக் கேட்கமாட்டோமென்று அந்நிய தேவர்களைச் சேவிக்க அவைகளைப் பின்பற்றி, தங்களுடைய முன்னோர்களின் அக்கிரமங்களுக்குத் திரும்பினார்கள்; நான் தங்கள் பிதாக்களோடே பண்ணின உடன்படிக்கையை இஸ்ரவேல் குடும்பத்தாரும் யூதா குடும்பத்தாரும் மீறிப்போட்டார்கள்.

11ஆகையினால் இதோ, அவர்கள் தப்பித்துக்கொள்ளமாட்டாத தீங்கை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன்; அப்பொழுது என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள்; நான் அவர்களைக் கேளாதிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

12அப்பொழுது யூதா பட்டணங்களின் மனுஷரும், எருசலேமின் குடிகளும் போய்த் தாங்கள் தூபங்காட்டியிருந்த தேவர்களை நோக்கிக் கூப்பிட்டும், அவைகள் அவர்களுடைய ஆபத்துக்காலத்தில் அவர்களை இரட்சிப்பதில்லை.

13யூதாவே, உன் பட்டணங்களின் இலக்கமும் உன் தேவர்களின் இலக்கமும் சரி; எருசலேமுடைய வீதிகளின் இலக்கமும், நீங்கள் பாகாலுக்குத் தூபங்காட்டும்படி அந்த இலச்சையான காரியத்துக்கு ஸ்தாபித்த பீடங்களின் இலக்கமும் சரி.

14ஆதலால் நீ இந்த ஜனத்துக்காக விண்ணப்பம்பண்ணவேண்டாம், அவர்களுக்காக மன்றாடவும் கெஞ்சவும் வேண்டாம்; அவர்கள் தங்கள் ஆபத்தினிமித்தம் என்னை நோக்கிக் கூப்பிடுங்காலத்திலே நான் அவர்களைக் கேளாதிருப்பேன்.

15துர்ச்சனரோடு மகா தீவினை செய்யும்போது, என் பிரியமானவளுக்கு என் வீட்டில் என்ன இருக்கிறது? பரிசுத்த மாம்சத்தை உன்னைவிட்டுத் தாண்டிப்போகப்பண்ணுவார்கள்; உன் பொல்லாப்பு நடக்கும்போது நீ களிகூருகிறாயே.

16நல்ல கனி உண்டாயிருக்கிற நேர்த்தியும் பச்சையுமான ஒலிவமரமென்னும் பேரைக் கர்த்தர் உனக்கு இட்டார்; ஆனால் மகா அமளியின் சத்தமாய் அதைச் சுற்றிலும் நெருப்பைக் கொளுத்துகிறார், அதின் கொம்புகள் முறிக்கப்பட்டது.

17பாகாலுக்குத் தூபங்காட்டுகிறதினாலே எனக்குக் கோபமுண்டாக்க இஸ்ரவேல் குடும்பத்தாரும், யூதா குடும்பத்தாரும் தங்களுக்குக் கேடாகச் செய்த பொல்லாப்பினிமித்தம் உன்மேல் தீங்கை வரப்பண்ணுவேன் என்று உன்னை நாட்டின சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

18அதைக் கர்த்தர் எனக்கு அறிவித்ததினாலே அறிந்துகொண்டேன்; அவர்களுடைய செய்கைகளை அப்பொழுது எனக்குத் தெரியக்காட்டினீர்.

19மரத்தை அதின் கனிகளோடுங்கூட அழித்துப்போடுவோமென்றும், அவன் ஜீவனுள்ளோருடைய தேசத்திலிராமலும் அவன் பேர் இனி நினைக்கப்படாமலும்போக அவனைச் சங்கரிப்போமென்றும், எனக்கு விரோதமாய் ஆலோசனைபண்ணினார்கள் என்பதை அறியாதிருந்து, நான் அடிக்கப்படுவதற்குக் கொண்டுபோகப்படும் சாதுவான ஆட்டுக்குட்டியைப்போல இருந்தேன்.

20சேனைகளின் கர்த்தாவே, உள்ளிந்திரியங்களையும் இருதயத்தையும் சோதித்தறிகிற நீதியுள்ள நியாயாதிபதியே, நீர் அவர்களுக்கு நீதியைச் சரிக்கட்டுகிறதைப் பார்ப்பேனாக; என் வழக்கை உமக்கு வெளிப்படுத்திவிட்டேன் என்றேன்.

21ஆதலால் நீ எங்கள் கையினாலே சாகாதபடிக்குக் கர்த்தருடைய நாமத்தினாலே தீர்க்கதரிசனம் சொல்லவேண்டாம் என்று சொல்லி, உன் பிராணனை வாங்கத்தேடுகிற ஆனதோத்தின் மனுஷரைக்குறித்துக் கர்த்தர் சொல்லுகிறார்:

22இதோ, இதினிமித்தம் உங்களை விசாரிப்பேன்; இளவயதுள்ளவர்கள் பட்டயத்தாலே சாவார்கள்; அவர்கள் குமாரரும் அவர்கள் குமாரத்திகளும் பஞ்சத்தாலே சாவார்கள்.

23அவர்களில் மீதியாய் இருப்பவர்களில்லை; நான் ஆனதோத்தின் மனுஷரை விசாரிக்கும் வருஷத்திலே அவர்கள்மேல் ஆபத்தை வரப்பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

1அப்பொழுது பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு, மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப்புறப்பட்ட பத்துக்கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும்.

2அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும், ஐந்துபேர் புத்தியில்லாதவர்களுமாயிருந்தார்கள்.

3புத்தியில்லாதவர்கள் தங்கள் தீவட்டிகளை எடுத்துக்கொண்டுபோனார்கள், எண்ணெயையோ கூடக்கொண்டுபோகவில்லை.

4புத்தியுள்ளவர்கள் தங்கள் தீவட்டிகளோடுங்கூடத் தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டுபோனார்கள்.

5மணவாளன் வரத் தாமதித்தபோது, அவர்கள் எல்லாரும் நித்திரைமயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள்.

6நடுராத்திரியிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று.

7அப்பொழுது, அந்தக் கன்னிகைகள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினார்கள்.

8புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களை நோக்கி: உங்கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சங்கொடுங்கள், எங்கள் தீவட்டிகள் அணைந்துபோகிறதே என்றார்கள்.

9புத்தியுள்ளவர்கள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் போதாமலிராதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்திற்குப் போய், உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள்.

10அப்படியே அவர்கள் வாங்கப்போனபோது மணவாளன் வந்துவிட்டார்; ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடேகூடக் கலியாணவீட்டுக்குள் பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது.

11பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றார்கள்.

12அதற்கு அவர்: உங்களை அறியேன் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

13மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.

14அன்றியும், பரலோகராஜ்யம் புறத்தேசத்துக்குப் பிரயாணமாய்ப் போகிற ஒரு மனுஷன், தன் ஊழியக்காரரை அழைத்து, தன் ஆஸ்திகளை அவர்கள் வசமாய் ஒப்புக்கொடுத்ததுபோல் இருக்கிறது.

15அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக, ஒருவனிடத்தில் ஐந்து தாலந்தும், ஒருவனிடத்தில் இரண்டு தாலந்தும், ஒருவனிடத்தில் ஒரு தாலந்துமாகக் கொடுத்து, உடனே பிரயாணப்பட்டுப்போனான்.

16ஐந்து தாலந்தை வாங்கினவன் போய், அவைகளைக்கொண்டு வியாபாரம்பண்ணி, வேறு ஐந்து தாலந்தைச் சம்பாதித்தான்.

17அப்படியே இரண்டு தாலந்தை வாங்கினவனும், வேறு இரண்டு தாலந்தைச் சம்பாதித்தான்.

18ஒரு தாலந்தை வாங்கினவனோ, போய், நிலத்தைத் தோண்டி, தன் எஜமானுடைய பணத்தைப் புதைத்துவைத்தான்.

19வெகுகாலமானபின்பு அந்த ஊழியக்காரருடைய எஜமான் திரும்பிவந்து, அவர்களிடத்தில் கணக்குக் கேட்டான்.

20அப்பொழுது, ஐந்து தாலந்தை வாங்கினவன், வேறு ஐந்து தாலந்தைக் கொண்டுவந்து: ஆண்டவனே, ஐந்து தாலந்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ, வேறு ஐந்து தாலந்தைச் சம்பாதித்தேன் என்றான்.

21அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.

22இரண்டு தாலந்தை வாங்கினவனும் வந்து: ஆண்டவனே, இரண்டு தாலந்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ, வேறு இரண்டு தாலந்தைச் சம்பாதித்தேன் என்றான்.

23அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.

24ஒரு தாலந்தை வாங்கினவன் வந்து: ஆண்டவனே, நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவருமான கடினமுள்ள மனுஷன் என்று அறிவேன்.

25ஆகையால், நான் பயந்து போய், உமது தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன்; இதோ, உம்முடையதை வாங்கிக்கொள்ளும் என்றான்.

26அவனுடைய எஜமான் பிரதியுத்தரமாக: பொல்லாதவனும் சோம்பலுமான ஊழியக்காரனே, நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவனென்றும் தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவனென்றும் அறிந்திருந்தாயே.

27அப்படியானால், நீ என் பணத்தைக் காசுக்காரர் வசத்தில் போட்டுவைக்க வேண்டியதாயிருந்தது; அப்பொழுது, நான் வந்து என்னுடையதை வட்டியோடே வாங்கிக்கொள்ளுவேனே, என்று சொல்லி,

28அவனிடத்திலிருக்கிற தாலந்தை எடுத்து, பத்துத் தாலந்துள்ளவனுக்குக் கொடுங்கள்.

29உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.

30பிரயோஜனமற்ற ஊழியக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றான்.

31அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார்.

32அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து,

33செம்மறியாடுகளைத் தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடதுபக்கத்திலும் நிறுத்துவார்.

34அப்பொழுது, ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.

35பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்;

36வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள் என்பார்.

37அப்பொழுது, நீதிமான்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உமக்குப் போஜனங்கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக்கண்டு உம்முடைய தாகத்தைத் தீர்த்தோம்?

38எப்பொழுது உம்மை அந்நியராகக்கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை வஸ்திரமில்லாதவராகக் கண்டு உமக்கு வஸ்திரங்கொடுத்தோம்?

39எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும் காவலிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள்.

40அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.

41அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும், அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்.

42பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போஜனங்கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தீர்க்கவில்லை;

43அந்நியனாயிருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; வஸ்திரமில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு வஸ்திரங்கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாயும் காவலிலடைக்கப்பட்டவனாயும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லையென்பார்.

44அப்பொழுது, அவர்களும் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், வஸ்திரமில்லாதவராகவும், வியாதிப்பட்டவராகவும், காவலிடைக்கப்பட்டவராகவும் நாங்கள் எப்பொழுது கண்டு, உமக்கு உதவி செய்யாதிருந்தோம் என்பார்கள்.

45அப்பொழுது, அவர் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.

46அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினையை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com