‹ முகப்புமுழுத் திட்டம்

ஜூலை 16 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்ஜூலை 16அடுத்த நாள் ›
குடும்பம்

1கர்த்தர் இஸ்ரவேலைச் சுற்றிலும் இருந்த அவர்களுடைய எல்லாச் சத்துருக்களாலும் யுத்தமில்லாதபடிக்கு இளைப்பாறப்பண்ணி அநேகநாள் சென்றபின்பு, யோசுவா வயதுசென்று முதிர்ந்தவனானபோது,

2யோசுவா இஸ்ரவேலின் மூப்பரையும், தலைவரையும், நியாயாதிபதிகளையும், அதிபதிகளையும், மற்ற எல்லாரையும் அழைப்பித்து, அவர்களை நோக்கி: நான் வயதுசென்று முதிர்ந்தவனானேன்.

3உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு முன்பாக இந்தச் சகல ஜாதிகளுக்கும் செய்த யாவையும் நீங்கள் கண்டீர்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர் தாமே உங்களுக்காக யுத்தம்பண்ணினார்.

4பாருங்கள், யோர்தான் முதல் நான் நிர்மூலமாக்கினவைகளும், மேற்கிலுள்ள பெரிய சமுத்திரமட்டும் இன்னும் மீதியாயிருக்கிறவைகளுமான சகல ஜாதிகளின் தேசத்தையும் சீட்டுப்போட்டு; உங்களுக்கு, உங்கள் கோத்திரங்களுக்குத் தக்கதாய், சுதந்தரமாகப் பங்கிட்டேன்.

5உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் அவர்களுடைய தேசத்தைக் கட்டிக்கொள்ளும்படிக்கு, உங்கள் தேவனாகிய கர்த்தர் தாமே அவர்களை உங்களுக்கு முன்பாகத் துரத்தி, உங்கள் பார்வையினின்று அகற்றிப்போடுவார்.

6ஆகையால், மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிறதைவிட்டு, வலதுபுறமாகிலும் இடதுபுறமாகிலும் விலகிப்போகாமல், அதையெல்லாம் கைக்கொள்ளவும் செய்யவும் நிர்ணயம் பண்ணிக்கொள்ளுங்கள்.

7உங்களுக்குள்ளே மீதியாயிருக்கிற இந்த ஜாதிகளோடு கலவாமலும், அவர்களுடைய தேவர்களின் பேரை நினையாமலும், அவைகளைக்கொண்டு ஆணையிடாமலும், அவைகளைச் சேவியாமலும், பணிந்துகொள்ளாமலும் இருக்கும்படி எச்சரிக்கையாயிருங்கள்.

8இந்நாள்மட்டும் நீங்கள் செய்தது போல, உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பற்றிக்கொண்டிருங்கள்.

9கர்த்தர் உங்களுக்கு முன்பாகப் பெரியவைகளும் பலத்தவைகளுமான ஜாதிகளைத் துரத்தியிருக்கிறார்; இந்நாள்மட்டும் ஒருவரும் உங்களுக்கு முன்பாக நிற்கவில்லை.

10உங்களில் ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்துவான்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடி, அவர் தாமே உங்களுக்காக யுத்தம்பண்ணுகிறார்.

11ஆகையால், உங்கள் தேவனாகிய கர்த்தரில் அன்புகூரும்படி, உங்கள் ஆத்துமாக்களைக்குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்.

12நீங்கள் பின்வாங்கிப்போய், உங்களுக்குள்ளே மீதியாயிருக்கிற இந்த ஜாதிகளைச் சேர்ந்து, அவர்களோடே சம்பந்தங்கலந்து, நீங்கள் அவர்களிடத்திலும் அவர்கள் உங்களிடத்திலும் உறவாடினால்,

13உங்கள் தேவனாகிய கர்த்தர் இனி இந்த ஜாதிகளை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடமாட்டார் என்றும், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த இந்த நல்ல தேசத்திலிருந்து அழிந்துபோகுமட்டும், அவர்கள் உங்களுக்குக் கண்ணியாகவும், வலையாகவும், உங்கள் விலாக்களுக்குச் சவுக்காகவும், உங்கள் கண்களுக்கு முள்ளுகளாகவும் இருப்பார்கள் என்றும் நிச்சயமாய் அறியுங்கள்.

14இதோ, இன்று நான் பூலோகத்தார் எல்லாரும் போகிறவழியே போகிறேன்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகச் சொன்ன நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை என்பதை உங்கள் முழு இருதயத்தாலும் உங்கள் முழு ஆத்துமாவாலும் அறிந்திருக்கிறீர்கள்; அவைகளெல்லாம் உங்களுக்கு நிறைவேறிற்று, அவைகளில் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை.

15இப்பொழுதும் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடே சொன்ன நல்ல காரியமெல்லாம் உங்களிடத்திலே எப்படி நிறைவேறிற்றோ, அப்படியே, உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கட்டளையிட்ட அவருடைய உடன்படிக்கையை நீங்கள் மீறி, அந்நிய தேவர்களைச் சேவித்து, அவைகளைப் பணிந்து கொள்ளுங்காலத்தில்,

16உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த இந்த நல்ல தேசத்திலிருந்து உங்களை நிர்மூலமாக்குமட்டும், கர்த்தர் உங்கள்மேல் சகல தீமையான காரியங்களையும் வரப்பண்ணுவார்; கர்த்தருடைய கோபம் உங்கள்மேல் பற்றியெரியும்; அவர் உங்களுக்குக் கொடுத்த நல்ல தேசத்திலிருந்து நீங்கள் சீக்கிரமாய் அழிந்துபோவீர்கள் என்றான்.

அப்போஸ்தலர் 3

முழு அதிகாரம் ›

1ஜெபவேளையாகிய ஒன்பதாம்மணி நேரத்திலே பேதுருவும் யோவானும் தேவாலயத்துக்குப் போனார்கள்.

2அப்பொழுது தன் தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாய்ப் பிறந்த ஒரு மனுஷனைச் சுமந்துகொண்டு வந்தார்கள்; தேவாலயத்திலே பிரவேசிக்கிறவர்களிடத்தில் பிச்சைகேட்கும்படி, நாடோறும் அவனை அலங்கார வாசல் என்னப்பட்ட தேவாலய வாசலண்டையிலே வைப்பார்கள்.

3தேவாலயத்திலே பிரவேசிக்கப்போகிற பேதுருவையும், யோவானையும் அவன் கண்டு பிச்சை கேட்டான்.

4பேதுருவும், யோவானும் அவனை உற்றுப்பார்த்து: எங்களை நோக்கிப்பார் என்றார்கள்.

5அவன் அவர்களிடத்தில் ஏதாகிலும் கிடைக்குமென்று எண்ணி, அவர்களை நோக்கிப்பார்த்தான்.

6அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி,

7வலதுகையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான்; உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலன் கொண்டது.

8அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடனேகூட தேவாலயத்திற்குள் பிரவேசித்தான்.

9அவன் நடக்கிறதையும், தேவனைத்துதிக்கிறதையும், ஜனங்களெல்லாரும் கண்டு:

10தேவாலயத்தின் அலங்கார வாசலண்டையிலே பிச்சைகேட்க உட்கார்ந்திருந்தவன் இவன்தான் என்று அறிந்து, அவனுக்குச் சம்பவித்ததைக்குறித்து மிகவும் ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள்.

11குணமாக்கப்பட்ட சப்பாணி பேதுருவையும் யோவானையும் பற்றிக்கொண்டிருக்கையில், ஜனங்களெல்லாரும் பிரமித்து, சாலொமோன் மண்டபம் என்னப்பட்ட மண்டபத்திலே அவர்களிடத்திற்கு ஓடிவந்தார்கள்.

12பேதுரு அதைக் கண்டு ஜனங்களை நோக்கி: இஸ்ரவேலரே, இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படுகிறதென்ன? நாங்கள் எங்கள் சுயசக்தியினாலாவது, எங்கள் சுயபக்தியினாலாவது, இவனை நடக்கப்பண்ணினோமென்று நீங்கள் எங்களை நோக்கிப்பார்க்கிறதென்ன?

13ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனாகிய நம்முடைய பிதாக்களின் தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை மகிமைப்படுத்தினார்; அவரை நீங்கள் ஒப்புக்கொடுத்தீர்கள்; பிலாத்து அவரை விடுதலையாக்கத் தீர்மானித்தபோது, அவனுக்கு முன்பாக அவரை மறுதலித்தீர்கள்.

14பரிசுத்தமும் நீதியுமுள்ளவரை நீங்கள் மறுதலித்து, கொலைபாதகனை உங்களுக்காக விடுதலை பண்ணவேண்டுமென்று கேட்டு,

15ஜீவாதிபதியைக் கொலைசெய்தீர்கள்; அவரைத் தேவன் மரித்தோரிலிருந்தெழுப்பினார்; அதற்கு நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம்.

16அவருடைய நாமத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே அவருடைய நாமமே நீங்கள் பார்த்து அறிந்திருக்கிற இவனைப்பெலப்படுத்தினது; அவரால் உண்டாகிய விசுவாசமே உங்களெல்லாருக்கும் முன்பாக, இந்தச் சர்வாங்க சுகத்தை இவனுக்குக் கொடுத்தது.

17சகோதரரே, நீங்களும் உங்கள் அதிகாரிகளும் அறியாமையினாலே இதைச் செய்தீர்களென்று அறிந்திருக்கிறேன்.

18கிறிஸ்து பாடுபடவேண்டுமென்று தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகளெல்லாருடைய வாக்கினாலும் முன்னறிவித்தவைகளை இவ்விதமாய் நிறைவேற்றினார்.

19ஆனபடியினாலே கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து இளைப்பாறுதலின் காலங்கள் வரும்படிக்கும், முன்னே குறிக்கப்பட்ட இயேசுகிறிஸ்துவை அவர் உங்களிடத்தில் அனுப்பும்படிக்கும்,

20உங்கள் பாவங்கள் நிவிர்த்திசெய்யப்படும்பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள்.

21உலகத்தோற்றமுதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளெல்லாருடைய வாக்கினாலும் உரைத்தவைகள் எல்லாம் நிறைவேறித் தீருங்காலங்கள் வருமளவும் பரலோகம் அவரை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

22மோசே பிதாக்களை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவர் உங்களுக்குச் சொல்லும் எல்லாவற்றிலும் அவருக்குச் செவிகொடுப்பீர்களாக.

23அந்தத் தீர்க்கதரிசியின் சொற்கேளாதவனெவனோ, அவன் ஜனத்திலிராதபடிக்கு நிர்மூலமாக்கப்படுவான் என்றான்.

24சாமுவேல் முதற்கொண்டு, எத்தனைபேர் தீர்க்கதரிசனம் உரைத்தார்களோ, அத்தனைபேரும் இந்த நாட்களை முன்னறிவித்தார்கள்.

25நீங்கள் அந்தத் தீர்க்கதரிசிகளுக்குப் புத்திரராயிருக்கிறீர்கள்; உன் சந்ததியினாலே பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும் என்று தேவன் ஆபிரகாமுக்குச் சொல்லி, நம்முடைய முன்னோர்களோடேபண்ணின உடன்படிக்கைக்கும் புத்திரராயிருக்கிறீர்கள்.

26அவர் உங்களெல்லாரையும் உங்கள் பொல்லாங்குகளிலிருந்து விலக்கி, உங்களை ஆசீர்வதிக்கும்படி தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை எழுப்பி, முதலாவது உங்களிடத்திற்கே அவரை அனுப்பினார் என்றான்.

தனிவாசிப்பு

1கர்த்தாவே, உம்மோடே நான் வழக்காடப்போனால், தேவரீர் நீதியுள்ளவராமே; ஆகிலும் உம்முடைய நியாயங்களைக் குறித்து உம்மோடே நான் பேசும்படி வேண்டுகிறேன்; ஆகாதவர்களின் வழி வாய்க்கிறதென்ன? துரோகஞ்செய்துவருகிற அனைவரும் சுகித்திருக்கிறதென்ன?

2நீர் அவர்களை நாட்டினீர், வேர் பற்றித் தேறிப்போனார்கள், கனியும் கொடுக்கிறார்கள்; நீர் அவர்கள் வாய்க்குச் சமீபமும், அவர்கள் உள்ளிந்திரியங்களுக்கோ தூரமுமாயிருக்கிறீர்.

3கர்த்தாவே, நீர் என்னை அறிந்திருக்கிறீர், என்னைக் காண்கிறீர்; என் இருதயம் உமக்கு முன்பாக எப்படிப்பட்டதென்று சோதித்து அறிகிறீர்; அடிக்கப்படும் ஆடுகளைப்போல அவர்களைப் பிடுங்கிப்போட்டு, கொலைநாளுக்கு அவர்களை நியமியும்.

4எந்தமட்டும் தேசம் புலம்பி, எல்லா வெளியின் புல்லும் வாடி, அதின் குடிகளுடைய பொல்லாப்பினிமித்தம் மிருகங்களும் பறவைகளும் அழியவேண்டும்! எங்கள் முடிவை அவன் காண்பதில்லையென்கிறார்கள்.

5நீ காலாட்களோடே ஓடும்போதே உன்னை இளைக்கப்பண்ணினார்களானால், குதிரைகளோடே எப்படிச் சேர்ந்து ஓடுவாய்? சமாதானமுள்ள தேசத்திலேயே நீ அடைக்கலம் தேடினால், யோர்தான் பிரவாகித்து வரும்போது நீ என்ன செய்வாய்?

6உன் சகோதரரும், உன் தகப்பன் வம்சத்தாரும் உனக்கு துரோகம்பண்ணி, அவர்களும் உன்னைப் பின்தொடர்ந்து மிகவும் ஆரவாரம்பண்ணினார்கள்; அவர்கள் உன்னோடே இனியவார்த்தைகளைப் பேசினாலும் அவர்களை நம்பவேண்டாம்.

7நான் என் வீட்டை விட்டுவிட்டேன், என் சுதந்தரத்தை நெகிழவிட்டேன்; என் ஆத்துமா நேசித்தவனை அவனுடைய சத்துருவின் கையிலே ஒப்புக்கொடுத்தேன்.

8என் சுதந்தரம் காட்டிலுள்ள சிங்கத்தைப்போல் எனக்காயிற்று; அது எனக்கு விரோதமாய் கெர்ச்சிக்கிறது; ஆதலால் அதை வெறுக்கிறேன்.

9என் சுதந்தரம் பலவர்ணமானபட்சியைப்போல் எனக்காயிற்று; ஆகையால், பட்சிகள் அதைச் சுற்றிலும் வருவதாக; வெளியின் சகல ஜீவன்களே அதைப் பட்சிக்கும்படி கூடிவாருங்கள்.

10அநேக மேய்ப்பர்கள் என் திராட்சத்தோட்டத்தை அழித்து, என் பங்கைக் காலால் மிதித்து, என் பிரியமான பங்கைப் பாழான வனாந்தரமாக்கினார்கள்.

11அதைப் பாழாக்கிவிட்டார்கள்; பாழாய்க்கிடக்கிற அது என்னை நோக்கிப் புலம்புகிறது; தேசமெல்லாம் பாழாயிற்று; ஒருவனும் அதை மனதிலே வைக்கிறதில்லை.

12கொள்ளைக்காரர் வனாந்தரத்திலுள்ள எல்லா உயர்நிலங்களின்மேலும் வருகிறார்கள்; கர்த்தருடைய பட்டயம் தேசத்தின் ஒருமுனை தொடங்கித் தேசத்தின் மறுமுனைமட்டும் பட்சித்துக் கொண்டிருக்கும்; மாம்சமாகிய ஒன்றுக்கும் சமாதானமில்லை.

13கோதுமையை விதைத்தார்கள், முள்ளுகளை அறுப்பார்கள்; பிரயாசப்படுவார்கள், பிரயோஜனமடையார்கள்; கர்த்தருடைய உக்கிரகோபத்தினால் உங்களுக்கு வரும் பலனைக்குறித்து வெட்கப்படுங்கள்.

14இதோ, நான் என் ஜனமாகிய இஸ்ரேவலுக்குக் காணியாட்சியாகக் கொடுத்த என் சுதந்தரத்தை தொடுகிற துஷ்டரான அயலார் அனைவரையும் தங்கள் தேசத்தில் இராதபடிக்குப் பிடுங்கிப்போடுவேன் என்று, கர்த்தர் அவர்களைக்குறித்துச் சொல்லுகிறார்; யூதா வம்சத்தாரையும் அவர்கள் நடுவில் இராதபடிக்குப் பிடுங்கிப்போடுவேன்.

15அவர்களை நான் பிடுங்கிப்போட்ட பிற்பாடு, நான் திரும்பவும் அவர்கள்மேல் இரங்கி, அவர்களைத் தங்கள்தங்கள் சுதந்தரத்துக்கும் தங்கள்தங்கள் பூமிக்கும் திரும்பப்பண்ணுவேன்.

16அப்புறம் அவர்கள் என் ஜனத்துக்குப் பாகாலின்மேல் ஆணையிடக் கற்றுக்கொடுத்ததுபோல, கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு என்று சொல்லி, என் நாமத்தின்மேல் ஆணையிடும்படி என் ஜனத்தின் வழிகளை நன்றாய்க் கற்றுக்கொண்டால், அவர்கள் என் ஜனத்தின் நடுவிலே ஊன்றக் கட்டப்படுவார்கள்.

17கேளார்களேயாகில், நான் அப்படிப்பட்ட ஜாதியை வேரோடே பிடுங்கிப்போட்டு அழித்துவிடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

1இயேசு இந்த வசனங்களையெல்லாம் சொல்லி முடித்தபின்பு, அவர் தம்முடைய சீஷரை நோக்கி:

2இரண்டுநாளைக்குப்பின்பு பஸ்காபண்டிகை வருமென்று அறிவீர்கள்; அப்பொழுது, மனுஷகுமாரன் சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றார்.

3அப்பொழுது, பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் ஜனத்தின் மூப்பரும், காய்பா என்னப்பட்ட பிரதான ஆசாரியனுடைய அரமனையிலே கூடிவந்து,

4இயேசுவைத் தந்திரமாய்ப் பிடித்துக்கொலைசெய்யும்படி ஆலோசனைபண்ணினார்கள்.

5ஆகிலும் ஜனங்களுக்குள்ளே கலகமுண்டாகாதபடிக்குப் பண்டிகையிலே அப்படிச்செய்யலாகாது என்றார்கள்.

6இயேசு பெத்தானியாவில் குஷ்டரோகியாயிருந்த சீமோன் வீட்டில் இருக்கையில்,

7ஒரு ஸ்திரீ விலையேறப்பெற்ற பரிமளதைலமுள்ள வெள்ளைக்கல்பரணியைக் கொண்டுவந்து, அவர் போஜனபந்தியிலிருக்கும்போது, அந்தத் தைலத்தை அவர் சிரசின்மேல் ஊற்றினாள்.

8அவருடைய சீஷர்கள் அதைக் கண்டு விசனமடைந்து: இந்த வீண்செலவு என்னத்திற்கு?

9இந்தத் தைலத்தை உயர்ந்த விலைக்கு விற்று, தரித்திரருக்குக் கொடுக்கலாமே என்றார்கள்.

10இயேசு அதை அறிந்து, அவர்களை நோக்கி: நீங்கள் இந்த ஸ்திரீயை ஏன் தொந்தரவுப்படுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள்.

11தரித்திரர் எப்போதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள்; நானோ எப்போதும் உங்களிடத்தில் இரேன்.

12இவள் இந்தத் தைலத்தை என் சரீரத்தின்மேல் ஊற்றினது என்னை அடக்கம்பண்ணுவதற்கு எத்தனமான செய்கையாயிருக்கிறது.

13இந்தச் சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

14அப்பொழுது, பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் பிரதான ஆசாரியரிடத்திற்குப் போய்:

15நான் அவரை உங்களுக்குக் காட்டிக்கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான். அவர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுக்க உடன்பட்டார்கள்.

16அதுமுதல் அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்குச் சமயம் பார்த்துக்கொண்டிருந்தான்.

17புளிப்பில்லாத அப்பப்பண்டிகையின் முதல்நாளிலே, சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்கே உமக்கு ஆயத்தம்பண்ணச் சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள்.

18அதற்கு அவர்: நீங்கள் நகரத்திலே இன்னானிடத்திற்குப் போய்: என் வேளை சமீபமாயிருக்கிறது, உன் வீட்டிலே என் சீஷரோடேகூடப் பஸ்காவை ஆசரிப்பேன் என்று போதகர் சொல்லுகிறார் என்று அவனுக்குச் சொல்லுங்கள் என்றார்.

19இயேசு கற்பித்தபடி சீஷர்கள் போய், பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள்.

20சாயங்காலமானபோது, பன்னிருவரோடுங்கூட அவர் பந்தியிருந்தார்.

21அவர்கள் போஜனம்பண்ணுகையில், அவர்: உங்களிலொருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

22அப்பொழுது, அவர்கள் மிகவும் துக்கமடைந்து, அவரை நோக்கி: ஆண்டவரே, நானோ, நானோ? என்று ஒவ்வொருவராய்க் கேட்கத்தொடங்கினார்கள்.

23அவர் பிரதியுத்தரமாக: என்னோடேகூடத் தாலத்தில் கையிடுகிறவனே என்னைக் காட்டிக்கொடுப்பான்.

24மனுஷகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆகிலும், எந்த மனுஷனால் மனுஷகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனுஷனுக்கு ஐயோ; அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும் என்றார்.

25அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவரை நோக்கி: ரபீ, நானோ? என்றான்; அதற்கு அவர்: நீ சொன்னபடிதான் என்றார்.

26அவர்கள் போஜனம்பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார்.

27பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்;

28இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது.

29இதுமுதல் இந்தத் திராட்சப்பழரசத்தை நவமானதாய் உங்களோடுகூட என் பிதாவின் ராஜ்யத்திலே நான் பானம்பண்ணும் நாள்வரைக்கும் இதைப் பானம்பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

30அவர்கள் ஸ்தோத்திரப்பாட்டைப்பாடினபின்பு, ஒலிவமலைக்குப் புறப்பட்டுப்போனார்கள்.

31அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி: மேய்ப்பனை வெட்டுவேன்; மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்கள் எல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள்.

32ஆகிலும் நான் உயிர்த்தெழுந்த பின்பு, உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போவேன் என்றார்.

33பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: உமது நிமித்தம் எல்லாரும் இடறலடைந்தாலும், நான் ஒருக்காலும் இடறலடையேன் என்றான்.

34இயேசு அவனை நோக்கி: இந்த இராத்திரியிலே சேவல் கூவுகிறதற்கு முன்னே, நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று, மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

35அதற்குப் பேதுரு: நான் உம்மோடே மரிக்கவேண்டியதாயிருந்தாலும் உம்மை மறுதலிக்கமாட்டேன் என்றான்; சீஷர்கள் எல்லாரும் அப்படியே சொன்னார்கள்.

36அப்பொழுது, இயேசு அவர்களோடே கெத்செமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்து, சீஷர்களை நோக்கி: நான் அங்கே போய் ஜெபம்பண்ணுமளவும் நீங்கள் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி;

37பேதுருவையும் செபெதேயுவின் குமாரர் இருவரையும் கூட்டிக்கொண்டுபோய், துக்கமடையவும் வியாகுலப்படவும் தொடங்கினார்.

38அப்பொழுது, அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது; நீங்கள் இங்கே தங்கி, என்னோடேகூட விழித்திருங்கள் என்று சொல்லி,

39சற்று அப்புறம்போய், முகங்குப்புறவிழுந்து: என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.

40பின்பு, அவர் சீஷர்களிடத்தில் வந்து, அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக் கண்டு, பேதுருவை நோக்கி: நீங்கள் ஒரு மணி நேரமாவது என்னோடேகூட விழித்திருக்கக்கூடாதா?

41நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்.

42அவர் மறுபடியும் இரண்டாந்தரம் போய்: என் பிதாவே, இந்தப் பாத்திரத்தில் நான் பானம்பண்ணினாலொழிய இது என்னைவிட்டு நீங்கக்கூடாதாகில், உம்முடைய சித்தத்தின்படி ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.

43அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் மறுபடியும் நித்திரைபண்ணுகிறதைக் கண்டார்; அவர்களுடைய கண்கள் மிகுந்த நித்திரைமயக்கம் அடைந்திருந்தது.

44அவர் மறுபடியும் அவர்களை விட்டுப்போய், மூன்றாந்தரமும் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்பண்ணினார்.

45பின்பு அவர் தம்முடைய சீஷர்களிடத்தில் வந்து: இனி நித்திரைபண்ணி இளைப்பாறுங்கள்; இதோ, மனுஷகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிற வேளைவந்தது.

46என்னைக் காட்டிக்கொடுக்கிறவன், இதோ, வந்துவிட்டான், எழுந்திருங்கள், போவோம் என்றார்.

47அவர் இப்படிப் பேசுகையில், பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான்; அவனோடேகூடப் பிரதானஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் அனுப்பின திரளான ஜனங்கள் பட்டயங்களையும் தடிகளையும் பிடித்துக்கொண்டுவந்தார்கள்.

48அவரைக் காட்டிக்கொடுக்கிறவன்: நான் எவனை முத்தஞ்செய்வேனோ அவன்தான், அவனைப் பிடித்துக்கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான்.

49உடனே, அவன் இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, வாழ்க என்று சொல்லி, அவரை முத்தஞ்செய்தான்.

50இயேசு அவனை நோக்கி: சிநேகிதனே, என்னத்திற்காக வந்திருக்கிறாய் என்றார். அப்பொழுது, அவர்கள் கிட்டவந்து, இயேசுவின்மேல் கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள்.

51அப்பொழுது இயேசுவோடிருந்தவர்களில் ஒருவன் கைநீட்டித் தன் பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதறவெட்டினான்.

52அப்பொழுது, இயேசு அவனை நோக்கி: உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்துபோவார்கள்.

53நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா?

54அப்படிச் செய்வேனானால், இவ்விதமாய்ச் சம்பவிக்கவேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும் என்றார்.

55அந்த வேளையிலே இயேசு ஜனங்களை நோக்கி: கள்ளனைப் பிடிக்கப் புறப்படுகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்; நான் தினந்தோறும் உங்கள் நடுவிலே உட்கார்ந்து தேவாலயத்தில் உபதேசம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது, நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே.

56ஆகிலும் தீர்க்கதரிசிகள் எழுதியிருக்கிற வசனங்கள் நிறைவேறும்படி இவைகளெல்லாம் சம்பவிக்கிறது என்றார். அப்பொழுது, சீஷர்களெல்லாரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள்.

57இயேசுவைப் பிடித்தவர்கள் அவரைப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அங்கே வேதபாரகரும் மூப்பரும் கூடிவந்திருந்தார்கள்.

58பேதுரு, தூரத்திலே அவருக்குப் பின்சென்று, பிரதான ஆசாரியனுடைய அரமனைவரைக்கும் வந்து, உள்ளே பிரவேசித்து, முடிவைப் பார்க்கும்படி சேவகரோடே உட்கார்ந்தான்.

59பிரதான ஆசாரியரும் மூப்பரும் சங்கத்தார் யாவரும் இயேசுவைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி தேடினார்கள்;

60ஒருவரும் அகப்படவில்லை; அநேகர் வந்து பொய்ச்சாட்சி சொல்லியும் அவர்கள் சாட்சி ஒவ்வவில்லை; கடைசியிலே இரண்டு பொய்ச்சாட்சிகள் வந்து:

61தேவனுடைய ஆலயத்தை இடித்துப்போடவும், மூன்று நாளைக்குள்ளே அதைக் கட்டவும் என்னாலே ஆகும் என்று இவன் சொன்னான் என்றார்கள்.

62அப்பொழுது, பிரதான ஆசாரியன் எழுந்திருந்து, அவரை நோக்கி: இவர்கள் உனக்கு விரோதமாய்ச் சாட்சிசொல்லுகிறதைக்குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்றான்.

63இயேசுவோ பேசாமலிருந்தார். அப்பொழுது, பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன் என்றான்.

64அதற்கு இயேசு: நீர் சொன்னபடிதான்; அன்றியும், மனுஷகுமாரன் சர்வவல்லவருடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்களென்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

65அப்பொழுது பிரதான ஆசாரியன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: இவன் தேவதூஷணம் சொன்னான்; இனிச் சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன? இதோ, இவன் தூஷணத்தை இப்பொழுது கேட்டீர்களே.

66உங்களுக்கு என்னமாய்த் தோன்றுகிறது என்று கேட்டான். அதற்கு அவர்கள்: மரணத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்றார்கள்.

67அப்பொழுது, அவருடைய முகத்தில் துப்பி, அவரைக் குட்டினார்கள்; சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து:

68கிறிஸ்துவே, உம்மை அடித்தவன் யார்? அதை ஞானதிருஷ்டியினால் எங்களுக்குச் சொல்லும் என்றார்கள்.

69அத்தருணத்தில் பேதுரு வெளியே வந்து அரமனை முற்றத்தில் உட்கார்ந்திருந்தான். அப்பொழுது, வேலைக்காரி ஒருத்தி அவனிடத்தில் வந்து: நீயும் கலிலேயனாகிய இயேசுவோடேகூட இருந்தாய் என்றாள்.

70அதற்கு அவன்: நீ சொல்லுகிறது எனக்குத் தெரியாது என்று எல்லாருக்கும் முன்பாக மறுதலித்தான்.

71அவன், வாசல் மண்டபத்திற்குப்போனபொழுது வேறொருத்தி அவனைக் கண்டு: இவனும் நசரேயனாகிய இயேசுவோடேகூட இருந்தான் என்று அங்கே இருந்தவர்களுக்குச் சொன்னான்.

72அவனோ: அந்த மனுஷனை நான் அறியேன் என்று ஆணையிட்டு, மறுபடியும் மறுதலித்தான்.

73சற்றுநேரத்துக்குப்பின்பு அங்கே நின்றவர்கள் பேதுருவினிடத்தில் வந்து: மெய்யாகவே நீயும் அவர்களில் ஒருவன்; உன் பேச்சு உன்னை வெளிப்படுத்துகிறது என்றார்கள்.

74அப்பொழுது அவன்: அந்த மனுஷனை அறியேன் என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம்பண்ணவும் தொடங்கினான். உடனே சேவல் கூவிற்று.

75அப்பொழுது பேதுரு: சேவல் கூவுகிறதற்குமுன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று இயேசு தன்னிடத்தில் சொன்ன வசனத்தை நினைத்துக்கொண்டு, வெளியே போய், மனங்கசந்து அழுதான்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com