1பின்பு யோசுவா இஸ்ரவேலின் கோத்திரங்களையெல்லாம் சீகேமிலே கூடிவரப்பண்ணி, இஸ்ரவேலின் மூப்பரையும், தலைவரையும், நியாயாதிபதிகளையும், அதிபதிகளையும் வரவழைத்தான்; அவர்கள் தேவனுடைய சந்நிதியில் வந்து நின்றார்கள்.
2அப்பொழுது யோசுவா சகல ஜனங்களையும் நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: பூர்வத்திலே உங்கள் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் நாகோருக்கும் தகப்பனான தேராகு என்பவன், நதிக்கு அப்புறத்திலே குடியிருந்தபோது அவர்கள் வேறே தேவர்களைச் சேவித்தார்கள்;
3நான் நதிக்கு அப்புறத்தில் இருந்த உங்கள் தகப்பனாகிய ஆபிரகாமை அழைத்துக்கொண்டுவந்து, அவனைக் கானான்தேசமெங்கும் சஞ்சரிக்கச்செய்து, அவன் சந்ததியைத் திரட்சியாக்கி, அவனுக்கு ஈசாக்கைக் கொடுத்தேன்.
4ஈசாக்குக்கு யாக்கோபையும் ஏசாவையும் கட்டளையிட்டு, ஏசாவுக்குச் சேயீர் மலைத்தேசத்தைச் சுதந்தரிக்கும்படி கொடுத்தேன்; யாக்கோபும் அவன் பிள்ளைகளுமோ எகிப்துக்குப் போனார்கள்;
5நான் மோசேயையும் ஆரோனையும் அனுப்பி, எகிப்தியரை வாதித்தேன்; அப்படி அவர்கள் நடுவிலே நான் செய்த பின்பு உங்களைப் புறப்படப்பண்ணினேன்.
6நான் உங்கள் பிதாக்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினபோது, சமுத்திரக்கரைக்கு வந்தீர்கள்; எகிப்தியர் இரதங்களோடும் குதிரைவீரரோடும் உங்கள் பிதாக்களைச் சிவந்த சமுத்திரமட்டும் பின்தொடர்ந்தார்கள்.
7அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அப்பொழுது அவர் உங்களுக்கும் எகிப்தியருக்கும் நடுவே அந்தகாரத்தை வரப்பண்ணி, சமுத்திரத்தை அவர்கள்மேல் புரளச்செய்து, அவர்களை மூடிப்போட்டார்; நான் எகிப்திலே செய்ததை உங்கள் கண்கள் கண்டது; பின்பு வனாந்தரத்தில் அநேகநாள் சஞ்சரித்தீர்கள்.
8அதற்குப்பின்பு உங்களை யோர்தானுக்கு அப்புறத்திலே குடியிருந்த எமோரியரின் தேசத்திற்குக் கொண்டுவந்தேன்; அவர்கள் உங்களோடு யுத்தம்பண்ணுகிறபோது, அவர்களை உங்கள் கையில் ஒப்புக்கொடுத்தேன்; அவர்கள் தேசத்தைக் கட்டிக்கொண்டீர்கள்; அவர்களை உங்கள் முகத்தினின்று அழித்துவிட்டேன்.
9அப்பொழுது சிப்போரின் குமாரன் பாலாக் என்னும் மோவாபியரின் ராஜா எழும்பி, இஸ்ரவேலோடு யுத்தம்பண்ணி, உங்களைச் சபிக்கும்படி, பேயோரின் குமாரனாகிய பிலேயாமை அழைத்தனுப்பினான்.
10பிலேயாமுக்குச் செவிகொடுக்க எனக்குச் சித்தமில்லாததினாலே, அவன் உங்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தான், இவ்விதமாய் உங்களை அவன் கைக்குத் தப்புவித்தேன்.
11பின்பு யோர்தானைக் கடந்து எரிகோவுக்கு வந்தீர்கள்; எரிகோவின் குடிகளும், எமோரியரும், பெரிசியரும், கானானியரும், ஏத்தியரும், கிர்காசியரும், ஏவியரும், எபூசியரும், உங்களுக்கு விரோதமாக யுத்தம்பண்ணினார்கள்; ஆனாலும் அவர்களை நான் உங்கள் கையிலே ஒப்புக்கொடுத்தேன்.
12எமோரியரின் இரண்டு ராஜாக்களையும் உங்கள் பட்டயத்தாலும் உங்கள் வில்லாலும் நீங்கள் துரத்தவில்லை; நான் உங்களுக்கு முன்பாகக் குளவிகளை அனுப்பினேன்; அவைகள் அவர்களை உங்கள் முன்னின்று துரத்திவிட்டது.
13அப்படியே நீங்கள் பண்படுத்தாத தேசத்தையும், நீங்கள் கட்டாத பட்டணங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகளில் குடியிருக்கிறீர்கள்; நீங்கள் நடாத திராட்சத்தோட்டங்களின் பலனையும், ஒலிவத்தோப்புக்களின் பலனையும் புசிக்கிறீர்கள் என்றார்.
14ஆகையால் நீங்கள் கர்த்தருக்குப் பயந்து, அவரை உத்தமமும் உண்மையுமாய்ச் சேவித்து, உங்கள் பிதாக்கள் நதிக்கு அப்புறத்திலும் எகிப்திலும் சேவித்த தேவர்களை அகற்றிவிட்டு, கர்த்தரைச் சேவியுங்கள்.
15கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்; நதிக்கு அப்புறத்தில் உங்கள் பிதாக்கள் சேவித்த தேவர்களைச் சேவிப்பீர்களோ? நீங்கள் வாசம்பண்ணுகிற தேசத்துக் குடிகளாகிய எமோரியரின் தேவர்களைச் சேவிப்பீர்களோ? நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம் என்றான்.
16அப்பொழுது ஜனங்கள் பிரதியுத்தரமாக: வேறே தேவர்களைச் சேவிக்கும்படி, கர்த்தரை விட்டு விலகுகிற காரியம் எங்களுக்குத் தூரமாயிருப்பதாக.
17நம்மையும் நம்முடைய பிதாக்களையும் அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணி, நம்முடைய கண்களுக்கு முன்பாகப் பெரிய அடையாளங்களைச் செய்து, நாம் நடந்த எல்லா வழியிலும், நாம் கடந்து வந்த எல்லா ஜனங்களுக்குள்ளும் நம்மைக் காப்பாற்றினவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்தாமே.
18தேசத்திலே குடியிருந்த எமோரியர் முதலான சகல ஜனங்களையும் கர்த்தர் நமக்கு முன்பாகத் துரத்தினாரே; ஆகையால் நாங்களும் கர்த்தரைச் சேவிப்போம், அவரே நம்முடைய தேவன் என்றார்கள்.
19யோசுவா ஜனங்களை நோக்கி: நீங்கள் கர்த்தரைச் சேவிக்கமாட்டீர்கள்; அவர் பரிசுத்தமுள்ள தேவன், அவர் எரிச்சலுள்ள தேவன்; உங்கள் மீறுதலையும் உங்கள் பாவங்களையும் மன்னியார்.
20கர்த்தர் உங்களுக்கு நன்மை செய்திருக்க, நீங்கள் கர்த்தரை விட்டு, அந்நிய தேவர்களைச் சேவித்தால், அவர் திரும்பி உங்களுக்குத் தீமை செய்து, உங்களை நிர்மூலமாக்குவார் என்றான்.
21ஜனங்கள் யோசுவாவை நோக்கி: அப்படியல்ல, நாங்கள் கர்த்தரையே சேவிப்போம் என்றார்கள்.
22அப்பொழுது யோசுவா ஜனங்களை நோக்கி: கர்த்தரைச் சேவிக்கும்படி நீங்கள் அவரைத் தெரிந்துகொண்டதற்கு நீங்களே உங்களுக்குச் சாட்சிகள் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களே சாட்சிகள் என்றார்கள்.
23அப்பொழுது அவன்: அப்படியானால், இப்பொழுதும் உங்கள் நடுவே இருக்கிற அந்நியதேவர்களை அகற்றிவிட்டு, உங்கள் இருதயத்தை இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு நேராகத் திருப்புங்கள் என்றான்.
24அப்பொழுது ஜனங்கள் யோசுவாவை நோக்கி: நம்முடைய தேவனாகிய கர்த்தரையே சேவித்து, அவர் சத்தத்திற்கே கீழ்ப்படிவோம் என்றார்கள்.
25அந்தப்படி யோசுவா அந்நாளில் சீகேமிலே ஜனங்களோடே உடன்படிக்கைபண்ணி, அவர்களுக்கு அதைப் பிரமாணமும் நியாயமுமாக ஏற்படுத்தினான்.
26இந்த வார்த்தைகளை யோசுவா தேவனுடைய நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதி, ஒரு பெரிய கல்லை எடுத்து, அதை அங்கே கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலத்தின் அருகில் இருந்த கர்வாலி மரத்தின்கீழ் நாட்டி,
27எல்லா ஜனங்களையும் நோக்கி: இதோ, இந்தக் கல் நமக்குள்ளே சாட்சியாயிருக்கக்கடவது; கர்த்தர் நம்மோடே சொன்ன எல்லா வார்த்தைகளையும் இது கேட்டது; நீங்கள் உங்கள் தேவனுக்கு விரோதமாகப் பொய்சொல்லாதபடிக்கு, இது உங்களுக்குச் சாட்சியாயிருக்கக்கடவது என்று சொல்லி,
28யோசுவா ஜனங்களை அவரவர் சுதந்தரத்திற்கு அனுப்பிவிட்டான்.
29இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் கர்த்தருடைய ஊழியக்காரன் நூற்றுப்பத்து வயதுள்ளவனாய் மரணமடைந்தான்.
30அவனை எப்பிராயீமின் மலைத்தேசத்திலுள்ள காயாஸ் மலைக்கு வடக்கே இருக்கிற திம்னாத் சேரா என்னும் அவனுடைய சுதந்தரத்தின் எல்லைக்குள்ளே அடக்கம்பண்ணினார்கள்.
31யோசுவா உயிரோடிருந்த சகல நாட்களிலும், கர்த்தர் இஸ்ரவேலுக்குச் செய்த அவருடைய கிரியைகள் யாவையும் அறிந்து யோசுவாவுக்குப்பின்பு வெகுநாள் உயிரோடிருந்த மூப்பருடைய சகல நாட்களிலும், இஸ்ரவேலர் கர்த்தரைச் சேவித்தார்கள்.
32இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலேயிருந்து கொண்டுவந்த யோசேப்பின் எலும்புகளை, அவர்கள் சீகேமிலே யாக்கோபு சீகேமின் தகப்பனாகிய எமோரியருடைய புத்திரரின் கையில் நூறு வெள்ளிக்காசுக்குக் கொண்ட நிலத்தின் பங்கிலே அடக்கம்பண்ணினார்கள்; அந்த நிலம் யோசேப்பின் புத்திரருக்குச் சுதந்தரமாயிற்று.
33ஆரோனின் குமாரனாகிய எலெயாசாரும் மரணமடைந்தான், அவன் குமாரனாகிய பினெகாசுக்கு எப்பிராயீமின் மலைத்தேசத்திலே கொடுக்கப்பட்ட மேட்டிலே அவனை அடக்கம்பண்ணினார்கள்.
1அவர்கள் ஜனங்களுடனே பேசிக்கொண்டிருக்கையில், ஆசாரியர்களும் தேவாலயத்துச் சேனைத்தலைவனும் சதுசேயரும் அவர்களிடத்தில் வந்து,
2அவர்கள் ஜனங்களுக்கு உபதேசிக்கிறதினாலும், இயேசுவை முன்னிட்டு, மரித்தோரிலிருந்து உயர்த்தெழுதலைப் பிரசங்கிக்கிறதினாலும், சினங்கொண்டு,
3அவர்களைப் பிடித்து, சாயங்காலமாயிருந்தபடியினால், மறுநாள்வரைக்கும் காவலில் வைத்தார்கள்.
4வசனத்தைக் கேட்டவர்களில் அநேகர் விசுவாசித்தார்கள்; அவர்கள் தொகை ஏறக்குறைய ஐயாயிரமாயிருந்தது.
5மறுநாளிலே ஜனங்களுடைய அதிகாரிகளும் மூப்பரும் வேதபாரகரும்,
6பிரதான ஆசாரியனாகிய அன்னாவும், காய்பாவும், யோவானும், அலெக்சந்தரும், பிரதான ஆசாரியருடைய குடும்பத்தார் யாவரும் எருசலேமிலே கூட்டங்கூடி,
7அவர்களை நடுவே நிறுத்தி: நீங்கள் எந்த வல்லமையினாலே, எந்த நாமத்தினாலே, இதைச் செய்தீர்கள் என்று கேட்டார்கள்.
8அப்பொழுது பேதுரு பரிசுத்த ஆவியினாலே நிறைந்து, அவர்களை நோக்கி: ஜனத்தின் அதிகாரிகளே, இஸ்ரவேலின் மூப்பர்களே,
9பிணியாளியாயிருந்த இந்த மனுஷனுக்குச் செய்யப்பட்ட உபகாரத்தைக் குறித்து எதினாலே இவன் ஆரோக்கியமானானென்று நீங்கள் இன்று எங்களிடத்தில் விசாரித்துக்கேட்டால்,
10உங்களால் சிலுவையில் அறையப்பட்டவரும், தேவனால் மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டவருமாயிருக்கிற நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலேயே இவன் உங்களுக்கு முன்பாகச் சொஸ்தமாய் நிற்கிறானென்று உங்களெல்லாருக்கும், இஸ்ரவேல் ஜனங்களெல்லாருக்கும் தெரிந்திருக்கக்கடவது.
11வீடுகட்டுகிறவர்களாகிய உங்களால் அற்பமாய் எண்ணப்பட்ட அவரே மூலைக்குத் தலைக்கல்லானவர்.
12அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.
13பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதைமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவுடனேகூட இருந்தவர்களென்றும் அறிந்துகொண்டார்கள்.
14சொஸ்தமாக்கப்பட்ட மனுஷன் அவர்கள் அருகே நிற்கிறதைக் கண்டபடியால், எதிர்பேச அவர்களுக்கு இடமில்லாதிருந்தது.
15அப்பொழுது அவர்களை ஆலோசனைச் சங்கத்தைவிட்டு வெளியே போகும்படி கட்டளையிட்டு, தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டு:
16இந்த மனுஷரை நாம் என்ன செய்யலாம்? எருசலேமில் வாசம்பண்ணுகிற எல்லாருக்கும் தெரிந்திருக்கிறபடி வெளியரங்கமான அற்புதம் இவர்களால் செய்யப்பட்டதே, அதை நாம் இல்லையென்று சொல்லக்கூடாது.
17ஆகிலும் இது அதிகமாய் ஜனத்துக்குள்ளே பரம்பாதபடிக்கு, இதுமுதல் ஒருவரோடும் இந்த நாமத்தைக்குறித்துப் பேசக்கூடாதென்று, அவர்களை உறுதியாய்ப் பயமுறுத்தவேண்டுமென்று சொல்லிக்கொண்டு,
18அவர்களை அழைத்து: இயேசுவின் நாமத்தைக்குறித்து எவ்வளவும் பேசவும் போதிக்கவும் கூடாதென்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
19பேதுருவும் யோவானும் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவனுக்குச் செவிகொடுக்கிறதைப்பார்க்கிலும் உங்களுக்குச் செவிகொடுக்கிறது தேவனுக்கு முன்பாக நியாயமாயிருக்குமோ என்று நீங்களே நிதானித்துப்பாருங்கள்.
20நாங்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் பேசாமலிருக்கக்கூடாதே என்றார்கள்.
21நடந்த சங்கதிகளைக்குறித்து எல்லாரும் தேவனை மகிமைப்படுத்தினபடியால், ஜனங்களுக்குப் பயந்து அவர்களைத் தண்டிக்க வகையொன்றுங்காணாமல், அவர்களைப் பயமுறுத்தி விட்டுவிட்டார்கள்.
22அற்புதமாய்ச் சொஸ்தமாக்கப்பட்ட மனுஷன் நாற்பது வயதுக்கு மேற்பட்டவனாயிருந்தான்.
23அவர்கள் விடுதலையாக்கப்பட்ட பின்பு, தங்களைச் சேர்ந்தவர்களிடத்தில் வந்து, பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் தங்களுக்குச் சொன்ன யாவையும் அறிவித்தார்கள்.
24அவர்கள் அதைக் கேட்டு, ஒருமனப்பட்டு தேவனை நோக்கிச் சத்தமிட்டு: கர்த்தாவே, நீர் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனாயிருக்கிறீர்.
25புறஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதா காரியங்களைச் சிந்திப்பானேன் என்றும்,
26கர்த்தருக்கு விரோதமாகவும் அவருடைய கிறிஸ்துவுக்கு விரோதமாகவும் பூமியின் ராஜாக்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஏகமாய்க் கூட்டங்கூடினார்கள் என்றும் தேவரீர் உம்முடைய தாசனாகிய தாவீதின் வாக்கினால் உரைத்தீரே.
27அந்தப்படி உம்முடைய கரமும் உம்முடைய ஆலோசனையும் முன்குறித்தவைகள் யாவையும் செய்யும்படி,
28ஏரோதும் பொந்தியுபிலாத்தும், புறஜாதிகளோடும் இஸ்ரவேல் ஜனங்களோடுங்கூட, நீர் அபிஷேகம்பண்ணின உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவுக்கு விரோதமாய், மெய்யாகவே கூட்டங்கூடினார்கள்.
29இப்பொழுதும், கர்த்தாவே, அவர்கள் பயமுறுத்தல்களை தேவரீர் கவனித்து,
30உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவின் நாமத்தினாலே அடையாளங்களும் அற்புதங்களும் நடக்கும்படி செய்து, பிணியாளிகளைக் குணமாக்கும்படி உம்முடைய கரத்தை நீட்டி, உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை முழு தைரியத்தோடும் சொல்லும்படி அவர்களுக்கு அநுக்கிரகஞ்செய்தருளும் என்றார்கள்.
31அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள்.
32விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள். ஒருவனாகிலும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை; சகலமும் அவர்களுக்குப் பொதுவாயிருந்தது.
33கர்த்தராகிய இயேசுவின் உயிரத்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர்கள் மிகுந்த பலமாய்ச் சாட்சிகொடுத்தார்கள்; அவர்களெல்லார்மேலும் பூரணகிருபை உண்டாயிருந்தது.
34நிலங்களையும் வீடுகளையும் உடையவர்கள் அவைகளை விற்று, விற்கப்பட்டவைகளின் கிரயத்தைக் கொண்டுவந்து,
35அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தார்கள். அவனவனுக்குத் தேவையானதற்குத்தக்கதாய்ப் பகிர்ந்துகொடுக்கப்பட்டது; அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவாயிருந்ததில்லை.
36சீப்புருதீவானும் லேவியனும் அப்போஸ்தலராலே ஆறுதலின் மகன் என்று அர்த்தங்கொள்ளும் பர்னபா என்னும் மறுபேர்பெற்றவனுமாகிய யோசே என்பவன்,
37தனக்கு உண்டாயிருந்த நிலத்தை விற்று, அதின் கிரயத்தைக் கொண்டு வந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான்.
1கர்த்தர் என்னை நோக்கி: நீ போய், உனக்கு ஒரு சணல்கச்சையை வாங்கி, அதை உன் அரையிலே கட்டிக்கொள்; அதைத் தண்ணீரிலே படவொட்டாதே என்றார்.
2நான் கர்த்தருடைய வார்த்தையின்படியே ஒரு கச்சையை வாங்கி, அதை என் அரையிலே கட்டிக்கொண்டேன்.
3இரண்டாம்விசை கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
4நீ வாங்கினதும் உன் அரையிலிருக்கிறதுமான கச்சையை எடுத்துக்கொண்டு எழுந்து, ஐப்பிராத்து நதிமட்டும் போய், அதை அங்கே ஒரு கன்மலை வெடிப்பிலே ஒளித்துவை என்றார்.
5நான் போய், கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டபடியே அதை ஐப்பிராத்து நதியின் ஓரத்தில் ஒளித்து வைத்தேன்.
6அநேகநாள் சென்றபின்பு கர்த்தர் என்னை நோக்கி: நீ எழுந்து ஐப்பிராத்து நதிக்குப்போய் அங்கே ஒளித்துவைக்க நான் உனக்குக் கட்டளையிட்ட கச்சையை அவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டுவா என்றார்.
7அப்பொழுது நான் ஐப்பிராத்து நதிக்குப்போய், கச்சையை ஒளித்துவைத்த இடத்திலே தோண்டி அதை எடுத்தேன்; ஆனால், இதோ, அந்தக்கச்சை கெட்டு ஒன்றுக்கும் உதவாமற்போயிற்று.
8அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்:
9இப்படியே நான் யூதாவுடைய பெருமையையும், எருசலேமுடைய மிகுந்த பெருமையையும் கெட்டுப்போகப்பண்ணுவேன்.
10என் வார்த்தைகளைக் கேட்கமாட்டோம் என்று மறுத்து, தங்கள் இருதயத்தின் கடினத்தின்படி நடந்து, அந்நிய தேவர்களைச் சேவிக்கவும் அவர்களைப் பணிந்துகொள்ளவும் அவர்களைப் பின்பற்றுகிற இந்தப் பொல்லாத ஜனங்கள் ஒன்றுக்கும் உதவாமற்போன இந்தக் கச்சையைப்போலாவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
11கச்சையானது மனுஷனுடைய அரைக்குச் சேர்க்கையாயிருக்கிறதுபோல, நான் இஸ்ரவேல் குடும்பத்தார் அனைவரையும் யூதாவின் குடும்பத்தார் அனைவரையும், எனக்கு ஜனங்களாகவும், கீர்த்தியாகவும், துதியாகவும், மகிமையாகவும் சேர்க்கையாக்கிக்கொண்டேன்; ஆனாலும் அவர்கள் செவிகொடாமற்போனார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
12சகல ஜாடிகளும் திராட்சரசத்தினாலே நிரப்பப்படுமென்று, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறார் என்கிற வார்த்தையை அவர்களுடனே சொல்; அதற்கு அவர்கள்: சகல ஜாடிகளும் திராட்சரசத்தினாலே நிரப்பப்படுவது எங்களுக்குத் தெரியாதா என்று உன்னுடனே சொல்லுவார்கள்.
13அப்பொழுது நீ அவர்களை நோக்கி: இதோ, இந்தத் தேசத்தின் குடிகளெல்லாரையும், தாவீதின் சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்திருக்கிற ராஜாக்களையும், ஆசாரியர்களையும், தீர்க்கதரிசிகளையும், எருசலேமின் குடிகள் எல்லாரையும் நான் வெறியினால் நிரப்பி,
14பிதாக்களும் பிள்ளைகளுமாகிய அவர்களை ஒருவர்மேல் ஒருவர் மோதி விழும்படிப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்களை அழிப்பதேயன்றி மன்னிப்பதுமில்லை, தப்பவிடுவதுமில்லை, இரங்குவதுமில்லையென்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
15நீங்கள் செவிகொடுத்துக் கேளுங்கள்; மேட்டிமையாய் இராதேயுங்கள்; கர்த்தர் விளம்பினார்.
16அவர் அந்தகாரத்தை வரப்பண்ணுவதற்கு முன்னும், இருண்ட மலைகளில் உங்கள் கால்கள் இடறுவதற்கு முன்னும், நீங்கள் வெளிச்சத்துக்குக் காத்திருக்கும்போது, அவர் அதை அந்தகாரமும் காரிருளுமாக மாறப்பண்ணுவதற்கு முன்னும், உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு மகிமையைச் செலுத்துங்கள்.
17நீங்கள் இதைக் கேளாமற்போனீர்களானால், என் ஆத்துமா மறைவிடங்களில் உங்கள் பெருமையினிமித்தம் துக்கித்து, கர்த்தருடைய மந்தை சிறைப்பட்டுப்போனதென்று என் கண் மிகவும் அழுது கண்ணீர் சொரியும்.
18நீங்கள் ராஜாவையும் ராஜாத்தியையும் நோக்கி: தாழவந்து உட்காருங்கள்; உங்கள் சிரசின் சிங்காரமாகிய உங்கள் மகிமையின் கிரீடம் விழுந்ததென்று சொல்லுங்கள்.
19தெற்கிலுள்ள பட்டணங்கள் அடைக்கப்பட்டன; அவைகளைத் திறப்பார் இல்லை; யூதா அனைத்தும் குடிவிலக்கப்பட்டுப்போகும்; அது சமூலமாய்ச் சிறைப்பட்டுப்போகும்.
20உங்கள் கண்களை ஏறெடுத்து, வடக்கேயிருந்து வருகிறவர்களைப் பாருங்கள்; உனக்குக் கொடுக்கப்பட்டிருந்த மந்தையும், உன் மகிமையான ஆட்டுக்கிடையும் எங்கே?
21அவர் உன்னை விசாரிக்கும்போது என்ன சொல்லுவாய்? அவர்கள் உன்மேல் ஆதிக்கக்காரரும் தலைவருமாயிருக்க, நீ அவர்களைப் பழக்குவித்தாயே; கர்ப்பவதிக்குப் பிரசவவேதனை உண்டாகும்போது உண்டாகும் வேதனைகளைப்போல் வேதனைகள் உன்னைப் பிடிப்பதில்லையோ?
22இவைகள் எனக்கு நேரிட்டது ஏதென்று நீ உன் இருதயத்தில் சொன்னாயாகில், உன் திரளான அக்கிரமத்தினிமித்தமே உன் வஸ்திரத்து ஒரங்கள் விலக்கப்பட்டு, உன் பாதங்கள் பலவந்தஞ்செய்யப்படுகின்றன.
23எத்தியோப்பியன் தன் தோலையும் சிவிங்கி தன் புள்ளிகளையும் மாற்றக்கூடுமோ? கூடுமானால், தீமைசெய்யப்பழகின நீங்களும் நன்மைசெய்யக்கூடும்.
24ஆதலால் வனாந்தரக் காற்றால் பறக்கடிக்கப்படும் துரும்பைப்போல அவர்களைச் சிதறடிப்பேன்.
25நீ என்னை மறந்து, பொய்யை நம்பினபடியினாலே, இது உன்னுடைய வீதமும், என்னால் உனக்கு அளக்கப்படும் உன்னுடைய பங்குமாயிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
26உன் மானம் காணப்பட நான் உன் வஸ்திரத்து ஓரங்களை உன் முகமட்டாக எடுத்துப்போடுவேன்.
27உன் விபசாரங்களையும், உன் கனைக்குதல்களையும், வெளியிலே மேடுகளின்மேல் நீ பண்ணின வேசித்தனத்தின் முறைகேடுகளாகிய உன் அருவருப்புகளையும் நான் கண்டேன்; எருசலேமே, உனக்கு ஐயோ! நீ சுத்திகரிக்கப்படமாட்டாயா? இது இன்னும் எத்தனை காலத்துக்குப்பின் நடக்கும்? என்கிறார்.
1விடியற்காலமானபோது, சகல பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும், இயேசுவைக் கொலைசெய்யும்படி, அவருக்கு விரோதமாக ஆலோசனைபண்ணி,
2அவரைக் கட்டி, கொண்டுபோய், தேசாதிபதியாகிய பொந்தியுபிலாத்துவினிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள்.
3அப்பொழுது, அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், அவர் மரணாக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைக் கண்டு, மனஸ்தாபப்பட்டு, அந்த முப்பது வெள்ளிக்காசைப் பிரதான ஆசாரியரிடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் திரும்பக்கொண்டுவந்து:
4குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவஞ்செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்பாடு என்றார்கள்.
5அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசை தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான்.
6பிரதான ஆசாரியர் அந்த வெள்ளிக்காசை எடுத்து: இது இரத்தக்கிரயமானதால், காணிக்கைப் பெட்டியிலே இதைப் போடலாகாதென்று சொல்லி,
7ஆலோசனைபண்ணினபின்பு, அந்நியரை அடக்கம்பண்ணுவதற்குக் குயவனுடைய நிலத்தை அதினாலே கொண்டார்கள்.
8இதினிமித்தம் அந்த நிலம் இந்நாள்வரைக்கும் இரத்தநிலம் என்னப்படுகிறது.
9இஸ்ரவேல் புத்திரரால் மதிக்கப்பட்டவருக்குக் கிரயமாகிய முப்பது வெள்ளிக்காசை அவர்கள் எடுத்து,
10கர்த்தர் எனக்குக் கற்பித்தபடி குயவனுடைய நிலத்திற்காக அதைக் கொடுத்தார்கள் என்று எரேமியா தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது அப்பொழுது நிறைவேறிற்று.
11இயேசு தேசாதிபதிக்கு முன்பாக நின்றார்; தேசாதிபதி அவரை நோக்கி: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு இயேசு: நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.
12பிரதான ஆசாரியரும் மூப்பரும் அவர்மேல் குற்றஞ்சாட்டுகையில், அவர் மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை.
13அப்பொழுது, பிலாத்து அவரை நோக்கி: இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சாட்டுகிறார்களே, நீ அவைகளைக் கேட்கவில்லையா என்றான்.
14அவரோ ஒரு வார்த்தையும் மாறுத்தரமாகச் சொல்லவில்லை; அதனால் தேசாதிபதி மிகவும் ஆச்சரியப்பட்டான்.
15காவல்பண்ணப்பட்டவர்களில் எவனை விடுதலையாக்கவேண்டுமென்று ஜனங்கள் கேட்டுக்கொள்ளுவார்களோ, அவனை அவர்களுக்காக விடுதலையாக்குவது பண்டிகைதோறும் தேசாதிபதிக்கு வழக்கமாயிருந்தது.
16அப்பொழுது காவல்பண்ணப்பட்டவர்களில் பரபாஸ் என்னப்பட்ட பேர்போன ஒருவன் இருந்தான்.
17பொறாமையினாலே அவரை ஒப்புக்கொடுத்தார்கள் என்று பிலாத்து அறிந்து,
18அவர்கள் கூடியிருக்கையில், அவர்களை நோக்கி: எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்கவேண்டுமென்றிருக்கிறீர்கள்? பரபாசையோ? கிறிஸ்து என்னப்படுகிற இயேசுவையோ? என்று கேட்டான்.
19அவன் நியாயாசனத்தில் உட்கார்ந்திருக்கையில், அவனுடைய மனைவி அவனிடத்தில் ஆளனுப்பி: நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்யவேண்டாம்; அவர்நிமித்தம் இன்றைக்குச் சொப்பனத்தில் வெகு பாடுபட்டேன் என்று சொல்லச்சொன்னாள்.
20பரபாசை விட்டுவிடக் கேட்டுக்கொள்ளவும், இயேசுவைக் கொலைசெய்விக்கவும் பிரதான ஆசாரியரும் மூப்பரும் ஜனங்களை ஏவிவிட்டார்கள்.
21தேசாதிபதி ஜனங்களை நோக்கி: இவ்விருவரில் எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்கவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரபாசை என்றார்கள்.
22பிலாத்து அவர்களை நோக்கி: அப்படியானால், கிறிஸ்து என்னப்பட்ட இயேசுவை நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று எல்லாரும் சொன்னார்கள்.
23தேசாதிபதியோ: ஏன், என்ன பொல்லாப்புச் செய்தான் என்றான். அதற்கு அவர்கள்: அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று அதிகமதிகமாய்க் கூக்குரலிட்டுச் சொன்னார்கள்.
24கலகம் அதிகமாகிறதேயல்லாமல் தன் பிரயத்தனத்தினாலே பிரயோஜனமில்லையென்று பிலாத்து கண்டு, தண்ணீரை அள்ளி, ஜனங்களுக்கு முன்பாகக் கைகளைக் கழுவி: இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன், நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்றான்.
25அதற்கு ஜனங்களெல்லாரும்: இவனுடைய இரத்தப்பழி எங்கள்மேலும் எங்கள் பிள்ளைகள்மேலும் இருப்பதாக என்று சொன்னார்கள்.
26அப்பொழுது, அவன் பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான்.
27அப்பொழுது, தேசாதிபதியின் போர்ச்சேவகர் இயேசுவைத் தேசாதிபதியின் அரமனையிலே கொண்டுபோய், போர்ச்சேவகரின் கூட்டம் முழுவதையும் அவரிடத்தில் கூடிவரச்செய்து,
28அவர் வஸ்திரங்களைக் கழற்றி, சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி,
29முள்ளுகளால் ஒரு முடியைப்பின்னி, அவர் சிரசின்மேல் வைத்து, அவர் வலதுகையில் ஒரு கோலைக் கொடுத்து, அவர் முன்பாக முழங்காற்படியிட்டு: யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரைப் பரியாசம்பண்ணி,
30அவர்மேல் துப்பி, அந்தக் கோலை எடுத்து, அவரைச் சிரசில் அடித்தார்கள்.
31அவரைப் பரியாசம்பண்ணினபின்பு, அவருக்கு உடுத்தின மேலங்கியைக் கழற்றி, அவருடைய வஸ்திரங்களை அவருக்கு உடுத்தி, அவரைச் சிலுவையில் அறையும்படி கொண்டுபோனார்கள்.
32போகையில், சிரேனே ஊரானாகிய சீமோன் என்னப்பட்ட ஒரு மனுஷனை அவர்கள் கண்டு, அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பலவந்தம்பண்ணினார்கள்.
33கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்துக்கு அவர்கள் வந்தபோது,
34கசப்புக்கலந்த காடியை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவர் அதை ருசிபார்த்து, குடிக்க மனதில்லாதிருந்தார்.
35அவரைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவர்கள் சீட்டுப்போட்டு அவருடைய வஸ்திரங்களைப் பங்கிட்டுக் கொண்டார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்பேரில் சீட்டுப்போட்டார்கள் என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
36அவர்கள் அங்கே உட்கார்ந்து, அவரைக் காவல்காத்துக்கொண்டிருந்தார்கள்.
37அன்றியும் அவர் அடைந்த ஆக்கினையின் முகாந்தரத்தைக் காண்பிக்கும்பொருட்டு, இவன் யூதருடைய ராஜாவாகிய இயேசு என்று எழுதி, அவர் சிரசுக்கு மேலாகவைத்தார்கள்.
38அப்பொழுது, அவருடைய வலதுபக்கத்தில் ஒருவனும் அவருடைய இடதுபக்கத்தில் ஒருவனுமாக இரண்டு கள்ளர் அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்டார்கள்.
39அந்த வழியாய் நடந்துபோகிறவர்கள் தங்கள் தலைகளைத் துலுக்கி:
40தேவாலயத்தை இடித்து, மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே, உன்னை நீயே இரட்தித்துக்கொள்; நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலிருந்து இறங்கிவா என்று அவரைத் தூஷித்தார்கள்.
41அப்படியே பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் பரியாசம்பண்ணி:
42மற்றவர்களை இரட்சித்தான்; தன்னைத்தான் இரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை; இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கிவரட்டும், அப்பொழுது இவனை விசுவாசிப்போம்.
43தன்னைத் தேவனுடைய குமாரனென்று சொல்லி, தேவன்மேல் நம்பிக்கையாயிருந்தானே; அவர் இவன்மேல் பிரியமாயிருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்றார்கள்.
44அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்ட கள்ளரும் அந்தப்படியே அவரை நிந்தித்தார்கள்.
45ஆறாம்மணி நேரமுதல் ஒன்பதாம்மணி நேரம்வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று.
46ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
47அங்கே நின்றவர்களில் சிலர் அதைக்கேட்டபொழுது: இவன் எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள்.
48உடனே அவர்களில் ஒருவன் ஓடி. கடற்காளானை எடுத்து, காடியில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி. அவருக்குக் குடிக்கக் கொடுத்தான்.
49மற்றவர்களோ: பொறு, எலியா இவனை இரட்சிக்க வருவானோ, பார்ப்போம் என்றார்கள்.
50இயேசு, மறுபடியும் மகா சத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார்.
51அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது.
52கல்லறைகளும் திறந்தது, நித்திரையடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது.
53அவர் உயிர்த்தெழுந்தபின்பு, இவர்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து, அநேகருக்குக் காணப்பட்டார்கள்.
54நூற்றுக்கு அதிபதியும், அவனோடேகூட இயேசுவைக் காவல்காத்திருந்தவர்களும், பூமியதிரிச்சியையும் சம்பவித்த காரியங்களையும் கண்டு, மிகவும் பயந்து: மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள்.
55மேலும், இயேசுவுக்கு ஊழியஞ்செய்யும்படி கலிலேயாவிலிருந்து அவரோடே வந்திருந்த அநேக ஸ்திரீகள் அங்கே தூரத்திலே நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
56அவர்களுக்குள்ளே மகதலேனா மரியாளும், யாக்கோபுக்கும், யோசேக்கும் தாயாகிய மரியாளும், செபெதேயுவின் குமாரருடைய தாயும் இருந்தார்கள.
57சாயங்காலமானபோது, இயேசுவுக்குச் சீஷனும் ஐசுவரியவானுமாயிருந்த யோசேப்பு என்னும் பேர்கொண்ட அரிமத்தியா ஊரானாகிய ஒரு மனுஷன் வந்து,
58பிலாத்துவினிடத்தில் போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான். அப்பொழுது, சரீரத்தைக் கொடுக்கும்படி பிலாத்து கட்டளையிட்டான்.
59யோசேப்பு அந்தச் சரீரத்தை எடுத்து, துய்யதான மெல்லிய துப்பட்டியிலே சுற்றி,
60தான் கன்மலையில் வெட்டியிருந்த தன்னுடைய புதிய கல்லறையிலே அதை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு பெரிய கல்லைப் புரட்டிவைத்துப்போனான்.
61அங்கே மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறைக்கு எதிராக உட்கார்ந்திருந்தார்கள்.
62ஆயத்தநாளுக்குப் பின்னான மறுநாளிலே பிரதானஆசாரியரும் பரிசேயரும் பிலாத்துவினிடத்தில் கூடிவந்து:
63ஆண்டவனே, அந்த எத்தன் உயிரோடிருக்கும்போது, மூன்று நாளைக்குப்பின் எழுந்திருப்பேன் என்று சொன்னது எங்களுக்கு ஞாபகமிருக்கிறது.
64ஆகையால், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டுபோய், மரித்தோரிலிருந்து எழுந்தானென்று ஜனங்களுக்குச் சொல்லாதபடிக்கும், முந்தின எத்தைப்பார்க்கிலும் பிந்தின எத்து கொடிதாகாதபடிக்கும், நீர் மூன்றுநாள்வரைக்கும் கல்லறையைப் பத்திரப்படுத்தும்படி கட்டளையிடவேண்டும் என்றார்கள்.
65அதற்குப் பிலாத்து: உங்களுக்குக் காவல் சேவகர் உண்டே; போய், உங்களால் கூடியமட்டும் பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள் என்றான்.
66அவர்கள் போய்க் கல்லுக்கு முத்திரைபோட்டு, காவல்வைத்து, கல்லறையைப் பத்திரப்படுத்தினார்கள்.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com