1அகசியா என்னும் யூதாவுடைய ராஜாவின் குமாரனாகிய யோவாசுடைய இருபத்துமூன்றாம் வருஷத்தில் யெகூவின் குமாரனாகிய யோவாகாஸ் இஸ்ரவேலின்மேல் சமாரியாவிலே பதினேழுவருஷம் ராஜ்யபாரம்பண்ணி,
2கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களைப் பின்பற்றி நடந்தான்; அவைகளை விட்டு அவன் விலகவில்லை.
3ஆகையால் கர்த்தருக்கு இஸ்ரவேலின்மேல் கோபமூண்டு, அவர்களைச் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலின் கையிலும் ஆசகேலின் குமாரனாகிய பெனாதாத்தின் கையிலும் அந்நாட்களிலெல்லாம் ஒப்புக்கொடுத்தார்.
4யோவாகாஸ் கர்த்தருடைய சமுகத்தை நோக்கிப் பிரார்த்தித்தான்; சீரியாவின் ராஜா இஸ்ரவேலை ஒடுக்குகிறதினால் அவர்கள் ஒடுங்கிப்போகிறதைப் பார்த்து: கர்த்தர் அவனுக்குச் செவிகொடுத்தார்.
5கர்த்தர் இஸ்ரவேலுக்கு ஒரு ரட்சகனைக் கொடுத்ததினால், அவர்கள் சீரியருடைய கையின்கீழிருந்து நீங்கலானார்கள்; ஆதலால் இஸ்ரவேல் புத்திரர் முன்போல் தங்கள் கூடாரங்களிலே குடியிருந்தார்கள்.
6ஆகிலும் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின யெரொபெயாம் வீட்டாரின் பாவங்களை அவர்கள் விட்டு விலகாமல் அதிலே நடந்தார்கள்; சமாரியாவிலிருந்த விக்கிரகத்தோப்பும் நிலையாயிருந்தது.
7யோவாகாசுக்குச் சீரியாவின் ராஜா, ஐம்பது குதிரைவீரரையும், பத்து இரதங்களையும், பதினாயிரம் காலாட்களையுமே அல்லாமல், ஜனங்களில் வேறொன்றும் மீதியாக வைக்கவில்லை; அவன் அவர்களை அழித்துப் போரடிக்கும் இடத்துத் தூளைப்போல ஆக்கிப்போட்டான்.
8யோவாகாசின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், அவனுடைய வல்லமையும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
9யோவாகாஸ் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவனைச் சமாரியாவிலே அடக்கம் பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய யோவாஸ் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
10யூதாவின் ராஜாவாகிய யோவாசுடைய முப்பத்தேழாம் வருஷத்தில் யோவாகாசின் குமாரனாகிய யோவாஸ், இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி சமாரியாவிலே பதினாறுவருஷம் ராஜ்யபாரம்பண்ணி,
11கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை விட்டு விலகாமல் அவைகளிலெல்லாம் நடந்தான்.
12யோவாசின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், அவன் யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவோடு அவன் யுத்தம்பண்ணின வல்லமையும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
13யோவாஸ் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், யெரொபெயாம் அவன் சிங்காசனத்தில் வீற்றிருந்தான்; யோவாஸ் சமாரியாவில் இஸ்ரவேலின் ராஜாக்களண்டையிலே அடக்கம்பண்ணப்பட்டான்.
14அவன் நாட்களில் எலிசா மரணத்துக்கு ஏதுவான வியாதியாய்க் கிடந்தான்; அப்பொழுது இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் அவனிடத்துக்குப் போய், அவன்மேல் விழுந்து, அழுது: என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாயிருந்தவரே என்றான்.
15எலிசா அவனைப் பார்த்து: வில்லையும் அம்புகளையும் பிடியும் என்றான்; அப்படியே வில்லையும் அம்புகளையும் பிடித்துக்கொண்டான்.
16அப்பொழுது அவன் இஸ்ரவேலின் ராஜாவை நோக்கி: உம்முடைய கையை வில்லின்மேல் வையும் என்றான்; அவன் தன் கையை வைத்தபோது, எலிசா தன் கைகளை ராஜாவுடைய கைகள்மேல் வைத்து:
17கிழக்கே இருக்கிற ஜன்னலைத் திறவும் என்றான்; அவன் அதைத் திறந்தபோது, எலிசா: எய்யும் என்றான்; இவன் எய்தபோது, அவன்: அது கர்த்தருடைய ரட்சிப்பின் அம்பும், சீரியரினின்று விடுதலையாக்கும் ரட்சிப்பின் அம்புமானது; நீர் ஆப்பெக்கிலே சீரியரைத் தீர முறிய அடிப்பீர் என்றான்.
18பின்பு அம்புகளைப் பிடியும் என்றான்; அவைகளைப் பிடித்தான். அப்பொழுது அவன் இஸ்ரவேலின் ராஜாவை நோக்கி: தரையிலே அடியும் என்றான்; அவன் மூன்று தரம் அடித்து நின்றான்.
19அப்பொழுது தேவனுடைய மனுஷன் அவன்மேல் கோபமாகி: நீர் ஐந்து ஆறுவிசை அடித்தீரானால், அப்பொழுது சீரியரைத் தீர முறிய அடிப்பீர்; இப்பொழுதோ சீரியரை மூன்றுவிசை மாத்திரம் முறிய அடிப்பீர் என்றான்.
20எலிசா மரணமடைந்தான்; அவனை அடக்கம்பண்ணினார்கள்; மறுவருஷத்திலே மோவாபியரின் தண்டுகள் தேசத்திலே வந்தது.
21அப்பொழுது அவர்கள், ஒரு மனுஷனை அடக்கம்பண்ணப்போகையில், அந்தத் தண்டைக் கண்டு, அந்த மனுஷனை எலிசாவின் கல்லறையில் போட்டார்கள்; அந்த மனுஷனின் பிரேதம் அதிலே விழுந்து எலிசாவின் எலும்புகளின்மேல் பட்டபோது, அந்த மனுஷன் உயிரடைந்து தன் கால்களை ஊன்றி எழுந்திருந்தான்.
22யோவாகாசின் நாட்களிலெல்லாம் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேல் இஸ்ரவேலை ஒடுக்கினான்.
23ஆனாலும் கர்த்தர் அவர்களுக்கு இரங்கி, ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களோடு செய்த தமது உடன்படிக்கையினிமித்தம் அவர்களை அழிக்கச் சித்தமாயிராமலும், அவர்களை இன்னும் தம்முடைய முகத்தைவிட்டுத் தள்ளாமலும் அவர்கள்மேல் மனதுருகி, அவர்களை நினைத்தருளினார்.
24சீரியாவின் ராஜாவாகிய ஆசகேல் இறந்துபோய், அவன் குமாரனாகிய பெனாதாத் அவன் ஸ்தானத்திலே ராஜாவான பின்பு,
25யோவாகாசின் குமாரனாகிய யோவாஸ், ஆசகேலோடே யுத்தம்பண்ணி, தன் தகப்பனாகிய யோவாகாசின் கையிலிருந்து பிடித்துக்கொண்ட பட்டணங்களை அவன் குமாரனாகிய பெனாதாத்தின் கையிலிருந்து திரும்பப் பிடித்துக்கொண்டான்; மூன்று விசை யோவாஸ் அவனை முறிய அடித்து இஸ்ரவேலின் பட்டணங்களைத் திரும்பக் கட்டிக்கொண்டான்.
1மேலும், கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக.
2எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும்,
3சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும்,
4துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும்,
5தேவபக்தியின் வேஷத்தைத்தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு.
6பாவங்களால் நிறைந்து, பற்பல இச்சைகளால் இழுப்புண்டு,
7எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிற பெண்பிள்ளைகளுடைய வீடுகளில் இப்படிப்பட்டவர்கள் நுழைந்து, அவர்களை வசப்படுத்திக்கொள்ளுகிறார்கள்.
8யந்நேயும் யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றதுபோல இவர்களும் சத்தியத்துக்கு எதிர்த்து நிற்கிறார்கள்; இவர்கள் துர்ப்புத்தியுள்ள மனுஷர்கள், விசுவாசவிஷயத்தில் பரீட்சைக்கு நில்லாதவர்கள்.
9ஆனாலும், இவர்கள் அதிகமாய்ப் பலப்படுவதில்லை; அவ்விருவருடைய மதிகேடு எல்லாருக்கும் வெளிப்பட்டதுபோல, இவர்களுடைய மதிகேடும் வெளிப்படும்.
10நீயோ என் போதகத்தையும் நடக்கையையும் நோக்கத்தையும் விசுவாசத்தையும் நீடிய சாந்தத்தையும் அன்பையும் பொறுமையையும்,
11அந்தியோகியா, இக்கோனியா, லீஸ்திரா என்னும் பட்டணங்களில் எனக்கு உண்டான துன்பங்களையும் பாடுகளையும் நன்றாய் அறிந்திருக்கிறாய்; எவ்வளவோ துன்பங்களைச் சகித்தேன்; இவையெல்லாவற்றினின்றும் கர்த்தர் என்னை நீங்கலாக்கிவிட்டார்.
12அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்.
13பொல்லாதவர்களும் எத்தர்களுமானவர்கள் மோசம்போக்குகிறவர்களாகவும், மோசம் போகிறவர்களாகவுமிருந்து மேன்மேலும் கேடுள்ளவர்களாவார்கள்.
14நீ கற்று நிச்சயித்துக்கொண்டவைகளில் நிலைத்திரு; அவைகளை இன்னாரிடத்தில் கற்றாய் என்று நீ அறிந்திருக்கிறதுமல்லாமல்,
15கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும்.
16வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ்செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக,
17அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.
1ஆசாரியர்களே, இதைக் கேளுங்கள்; இஸ்ரவேல் வம்சத்தாரே, கவனியுங்கள்; ராஜாவின் வீட்டாரே, செவிகொடுங்கள்; இந்த நியாயவிசாரிப்பு உங்கள்மேல் செல்லும்; நீங்கள் மிஸ்பாவில் கண்ணியும் தாபோரின்மேல் விரிக்கப்பட்ட வலையுமானீர்கள்.
2நெறிதவறினவர்கள் மிகுதியும் வதைசெய்கிறார்கள்; அவர்கள் எல்லாரையும் நான் தண்டிப்பேன்.
3எப்பிராயீமை நான் அறிவேன், இஸ்ரவேல் எனக்கு மறைவானதல்ல; எப்பிராயீமே, இப்போது நீ சோரம்போனாயே, இஸ்ரவேல் தீட்டுப்பட்டதே.
4அவர்கள் தங்கள் தேவனிடத்துக்குத் திரும்புவதற்குத் தங்கள் கிரியைகளைச் சீர்திருத்தமாட்டார்கள், வேசித்தன ஆவி அவர்கள் உள்ளத்தில் இருக்கிறது; கர்த்தரை அறியார்கள்.
5இஸ்ரவேலின் அகந்தை அவர்கள் முகத்துக்கு முன்பாகச் சாட்சியிடுகிறது; ஆகையால் இஸ்ரவேலும் எப்பிராயீமும் தங்கள் அக்கிரமத்தினால் இடறுண்டு விழுவார்கள்; அவர்களோடே யூதாவும் இடறுண்டு விழுவான்.
6அவர்கள் கர்த்தரைத் தேடும்படி தங்கள் ஆடுகளோடும் தங்கள் மாடுகளோடும் போவார்கள்; அவரைக் காணமாட்டார்கள்; அவர் அவர்களை விட்டு விலகினார்.
7கர்த்தருக்கு விரோதமாக துரோகம்பண்ணினார்கள்; அந்நியபிள்ளைகளைப் பெற்றார்கள்; இப்போதும் ஒரு மாதத்துக்குள்ளாக அவர்கள் தங்கள் பங்குகளோடே பட்சிக்கப்படுவார்கள்.
8கிபியாவிலே எக்காளத்தையும், ராமாவிலே பூரிகையையும் ஊதுங்கள்; பெத்தாவேனிலே கதறுங்கள்; பென்யமீனே உன்னைப் பின்தொடருகிறார்கள்.
9தண்டிப்பின் நாளிலே எப்பிராயீம் பாழாவான்; நிச்சயமாய் வரப்போகிறதை இஸ்ரவேலின் கோத்திரங்களுக்குள்ளே அறிவிக்கிறேன்.
10யூதாவின் பிரபுக்கள் எல்லைகளை ஒதுக்குகிறவர்களுக்கு ஒப்பானார்கள்; அவர்கள்மேல் என் உக்கிரகோபத்தைத் தண்ணீரைப்போல ஊற்றுவேன்.
11எப்பிராயீம் தகாத கற்பனையை மனதாரப் பின்பற்றிப்போனபடியால் அவன் ஒடுங்குண்டு, நியாயவிசாரணையில் நொறுக்கப்பட்டுப்போகிறான்.
12நான் எப்பிராயீமுக்குப் பொட்டரிப்பைப்போலவும், யூதாவின் வீட்டுக்கு உளுப்பைப்போலவும் இருப்பேன்.
13எப்பிராயீம் தன் வியாதியையும், யூதா தன் காயத்தையும் கண்டபோது, எப்பிராயீம் அசீரியனண்டைக்குப் போய் யாரேப் ராஜாவினிடத்தில் ஆள் அனுப்பினான்; ஆனாலும் உங்களைக் குணமாக்கவும் உங்களில் இருக்கிற காயத்தை ஆற்றவும் அவனால் கூடாமற்போயிற்று.
14நான் எப்பிராயீமுக்குச் சிங்கம்போலவும், யூதாவின் வம்சத்தாருக்குப் பாலசிங்கம்போலவும் இருப்பேன்; நான் நானே பீறிவிட்டுப் போய்விடுவேன்; தப்புவிப்பார் இல்லாமல் எடுத்துக்கொண்டு போவேன்.
15அவர்கள் தங்கள் குற்றங்களை உணர்ந்து, என் முகத்தைத் தேடுமட்டும் நான் என் ஸ்தானத்துக்குத் திரும்பிப் போய்விடுவேன்; தங்கள் ஆபத்தில் என்னைக் கருத்தாய்த் தேடுவார்கள்.
1கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள்; நம்மைப் பீறினார், அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார்.
2இரண்டுநாளுக்குப்பின்பு அவர் நம்மை உயிர்ப்பிப்பார்; மூன்றாம் நாளில் நம்மை எழுப்புவார்; அப்பொழுது நாம் அவருடைய சமுகத்தில் பிழைத்திருப்போம்.
3அப்பொழுது நாம் அறிவடைந்து, கர்த்தரை அறியும்படி தொடர்ந்து போவோம்; அவருடைய புறப்படுதல் அருணோதயம்போல ஆயத்தமாயிருக்கிறது; அவர் மழையைப்போலவும், பூமியின்மேல் பெய்யும் முன்மாரி பின்மாரியைப்போலவும் நம்மிடத்தில் வருவார்.
4எப்பிராயீமே, உனக்கு என்ன செய்வேன்? யூதாவே, உனக்கு என்ன செய்வேன்? உங்கள் பக்தி காலையில் காணும் மேகத்தைப்போலவும், விடியற்காலையில் தோன்றும் பனியைப்போலவும் ஒழிந்துபோகிறது.
5ஆகையால் தீர்க்கதரிசிகளைக்கொண்டு அவர்களை வெட்டினேன்; என் வாய்மொழிகளைக்கொண்டு அவர்களை அதம்பண்ணினேன்; உன்மேல் வரும் தண்டனைகள் வெளிச்சத்தைப்போல் வெளிப்படும்.
6பலியை அல்ல இரக்கத்தையும், தகனபலிகளைப்பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவையும், விரும்புகிறேன்.
7அவர்களோ ஆதாமைப்போல் உடன்படிக்கையை மீறி, அங்கே எனக்கு விரோதமாய்த் துரோகம் பண்ணினார்கள்.
8கீலேயாத் அக்கிரமம் செய்கிறவர்களின் பட்டணம்; அது இரத்தக்காலடிகளால் மிதிக்கப்பட்டிருக்கிறது.
9பறிகாரரின் கூட்டங்கள் ஒருவனுக்குக் காத்திருக்கிறதுபோல, சீகேமுக்குப் போகிற வழியிலே கொலைசெய்கிற ஆசாரியரின் கூட்டம் காத்திருக்கிறது; தோஷமான காரியங்களையே செய்கிறார்கள்.
10பயங்கரமான காரியத்தை இஸ்ரவேல் வம்சத்தாரில் கண்டேன்; அங்கே எப்பிராயீமின் வேசித்தனம் உண்டு; இஸ்ரவேல் தீட்டுப்பட்டுப்போயிற்று.
11யூதாவே, உனக்கு ஒரு அறுப்புக்காலம் நியமிக்கப்பட்டிருக்கிறது.
145முழு இருதயத்தோடும் கூப்பிட்டேன், கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும்; உம்முடைய பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்.
146உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை இரட்சியும்; அப்பொழுது நான் உம்முடைய சாட்சிகளைக் காத்துக்கொள்ளுவேன்.
147அதிகாலையில் நான் எழுந்து சத்தமிட்டேன்; உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன்.
148உமது வசனத்தைத் தியானிக்கும்படி, குறித்த ஜாமங்களுக்கு முன்னே என் கண்கள் விழித்துக்கொள்ளும்.
149உம்முடைய கிருபையின்படி என் சத்தத்தைக் கேளும்; கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்பின்படி என்னை உயிர்ப்பியும்.
150தீவினையைப் பின்பற்றுகிறவர்கள் சமீபிக்கிறார்கள்; அவர்கள் உம்முடைய வேதத்துக்குத் தூரமாயிருக்கிறார்கள்.
151கர்த்தாவே, நீர் சமீபமாயிருக்கிறீர்; உமது கற்பனைகளெல்லாம் உண்மை.
152நீர் உம்முடைய சாட்சிகளை என்றென்றைக்கும் நிற்க ஸ்தாபித்தீர் என்பதை, அவைகளால் நான் நெடுநாளாய் அறிந்திருக்கிறேன்.
153என் உபத்திரவத்தைப் பார்த்து, என்னை விடுவியும்; உமது வேதத்தை மறவேன்.
154எனக்காக நீர் வழக்காடி என்னை மீட்டுக்கொள்ளும், உம்முடைய வார்த்தையின்படியே என்னை உயிர்ப்பியும்.
155இரட்சிப்பு துன்மார்க்கருக்குத் தூரமாயிருக்கிறது, அவர்கள் உமது பிரமாணங்களைத் தேடார்கள்.
156கர்த்தாவே, உம்முடைய இரக்கங்கள் மிகுதியாயிருக்கிறது; உமது நியாயங்களின்படி என்னை உயிர்ப்பியும்.
157என்னைத் துன்பப்படுத்துகிறவர்களும் என்னை விரோதிக்கிறவர்களும் அநேகர்; ஆனாலும் உம்முடைய சாட்சிகளை விட்டுவிலகேன்.
158உமது வசனத்தைக் காத்துக்கொள்ளாத துரோகிகளை நான் கண்டபோது, எனக்கு அருவருப்பாயிருந்தது.
159இதோ, உம்முடைய கட்டளைகளை நேசிக்கிறேன்; கர்த்தாவே, உமது கிருபையின்படி என்னை உயிர்ப்பியும்.
160உம்முடைய வசனம் சமூலமும் சத்தியம், உம்முடைய நீதி நியாயமெல்லாம் நித்தியம்.
161பிரபுக்கள் காரணமில்லாமல் என்னைத் துன்பப்படுத்தினார்கள், ஆனாலும் என் இருதயம் உமது வசனத்திற்கே பயப்படுகிறது.
162மிகுந்த கொள்ளையுடைமையைக் கண்டுபிடிக்கிறவன் மகிழுகிறதுபோல, நான் உமது வார்த்தையின் பேரில் மகிழுகிறேன்.
163பொய்யைப் பகைத்து அருவருக்கிறேன்; உம்முடைய வேதத்தையோ நேசிக்கிறேன்.
164உமது நீதிநியாயங்களினிமித்தம், ஒருநாளில் ஏழுதரம் உம்மைத் துதிக்கிறேன்.
165உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை.
166கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்புக்கு நான் காத்திருந்து, உம்முடைய கற்பனைகளின்படி செய்கிறேன்.
167என் ஆத்துமா உமது சாட்சிகளைக் காக்கும்; அவைகளை நான் மிகவும் நேசிக்கிறேன்.
168உமது கட்டளைகளையும் உமது சாட்சிகளையும் காத்து நடக்கிறேன்; என் வழிகளெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது.
169கர்த்தாவே, என் கூப்பிடுதல் உமது சந்நிதியில் வருவதாக; உமது வசனத்தின்படியே என்னை உணர்வுள்ளவனாக்கும்.
170என் விண்ணப்பம் உமது சந்நிதியில் வருவதாக; உமது வார்த்தையின்படி என்னை விடுவித்தருளும்.
171உம்முடைய பிரமாணங்களை நீர் எனக்குப் போதிக்கும்போது, என் உதடுகள் உமது துதியைப் பிரஸ்தாபப்படுத்தும்.
172உமது கற்பனைகளெல்லாம் நீதியுள்ளவைகள்; ஆதலால், என் நாவு உம்முடைய வசனத்தை விவரித்துச் சொல்லும்.
173நான் உம்முடைய கட்டளைகளைத் தெரிந்துகொண்டபடியால், உமது கரம் எனக்குத் துணையாயிருப்பதாக.
174கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்பின்மேல் ஆவலாயிருக்கிறேன்; உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி.
175என் ஆத்துமா பிழைத்திருந்து உம்மைத் துதிக்கக்கடவது; உமது நியாயத்தீர்ப்புகள் எனக்கு உதவியாயிருப்பதாக.
176காணாமற்போன ஆட்டைப்போல வழிதப்பிப்போனேன்; உமது அடியேனைத் தேடுவீராக; உமது கற்பனைகளை நான் மறவேன்.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com