1யெரொபெயாம் தூபங்காட்ட பலிபீடத்தண்டையிலே நிற்கையில், இதோ, தேவனுடைய மனுஷன் ஒருவன் கர்த்தருடைய வார்த்தையின்படியே, யூதாவிலிருந்து பெத்தேலுக்கு வந்து,
2அந்தப் பலிபீடத்தை நோக்கி: பலிபீடமே பலிபீடமே, இதோ, தாவீதின் வம்சத்தில் யோசியா என்னும் பேருள்ள ஒரு குமாரன் பிறப்பான்; அவன் உன்மேல் தூபங்காட்டுகிற மேடைகளின் ஆசாரியர்களை உன்மேல் பலியிடுவான்; மனுஷரின் எலும்புகளும் உன்மேல் சுட்டெரிக்கப்படும் என்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்று கர்த்தருடைய வார்த்தையைக் கூறி;
3அன்றையதினம் அவன் ஒரு அடையாளத்தையும் சொல்லி, இதோ, இந்தப் பலிபீடம் வெடித்து, அதின்மேலுள்ள சாம்பல் கொட்டுண்டுபோகும்; கர்த்தர் உரைத்ததற்கு இதுவே அடையாளம் என்றான்.
4பெத்தேலில் இருக்கிற அந்தப் பலிபீடத்திற்கு எதிராக தேவனுடைய மனுஷன் கூறின வார்த்தையை ராஜாவாகிய யெரொபெயாம் கேட்டபோது, அவனைப் பிடியுங்கள் என்று தன் கையைப் பலிபீடத்திலிருந்து நீட்டினான்; அவனுக்கு விரோதமாய் நீட்டின கை தன்னிடமாக முடக்கக்கூடாதபடிக்கு மரத்துப்போயிற்று.
5தேவனுடைய மனுஷன் கர்த்தருடைய வார்த்தையால் குறித்திருந்த அடையாளத்தின்படியே பலிபீடம் வெடித்து, சாம்பல் பலிபீடத்திலிருந்து கொட்டுண்டுபோயிற்று.
6அப்பொழுது ராஜா, தேவனுடைய மனுஷனுக்குப் பிரதியுத்தரமாக: நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சமுகத்தை நோக்கி வேண்டிக்கொண்டு, என் கை முன்போலிருக்கும்படிக்கு எனக்காக விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றான்; அப்பொழுது தேவனுடைய மனுஷன் கர்த்தருடைய சமுகத்தை நோக்கி வருந்தி விண்ணப்பம்செய்தான், ராஜாவின் கை முன்னிருந்தபடி சீர்ப்பட்டது.
7அப்பொழுது ராஜா தேவனுடைய மனுஷனை நோக்கி: நீ என்னோடேகூட வீட்டுக்கு வந்து இளைப்பாறு; உனக்கு வெகுமானம் தருவேன் என்றான்.
8தேவனுடைய மனுஷன் ராஜாவை நோக்கி: நீர் எனக்கு உம்முடைய வீட்டில் பாதி கொடுத்தாலும், நான் உம்மோடே வருவதுமில்லை, இந்த ஸ்தலத்தில் அப்பம் புசிப்பதுமில்லை, தண்ணீர் குடிப்பதுமில்லை.
9ஏனென்றால் நீ அப்பம் புசியாமலும், தண்ணீர் குடியாமலும், போனவழியாய்த் திரும்பாலும் இருவென்று கர்த்தர் தம்முடைய வார்த்தையால் எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார் என்று சொல்லி,
10அவன் பெத்தேலுக்கு வந்த வழியாய்த் திரும்பாமல், வேறு வழியாய்ப் போய்விட்டான்.
11கிழவனான ஒரு தீர்க்கதரிசி பெத்தேலிலே குடியிருந்தான்; அவன் குமாரர் வந்து தேவனுடைய மனுஷன் அன்றையதினம் பெத்தேலிலே செய்த எல்லாச் செய்கைகளையும், அவன் ராஜாவோடே சொன்ன வார்த்தைகளையும் தங்கள் தகப்பனுக்கு அறிவித்தார்கள்.
12அப்பொழுது அவர்கள் தகப்பன்: அவன் எந்த வழி போனான் என்று அவர்களைக் கேட்டான். யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனுஷன் போனவழி இன்னதென்று அவன் குமாரர் பார்த்திருந்தபடியால்,
13அவன் தன் குமாரருடனே: கழுதையின்மேல் சேணம்வைத்துக் கொடுங்கள் என்றான்; அவர்கள் கழுதையின்மேல் சேணம்வைத்துக் கொடுத்தபின், அவன் அதின்மேல் ஏறி,
14தேவனுடைய மனுஷனைத் தொடர்ந்துபோய், ஒரு கர்வாலி மரத்தின்கீழ் உட்கார்ந்திருக்கிற அவனைக் கண்டு: யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனுஷன் நீர்தானா என்று அவனைக் கேட்டதற்கு; அவன், நான்தான் என்றான்.
15அப்பொழுது அவனை நோக்கி: என்னோடே வீட்டுக்கு வந்து அப்பம் புசியும் என்றான்.
16அதற்கு அவன்: நான் உம்மோடே திரும்பவும் உம்மோடே உள்ளே போகவுமாட்டேன்; இந்த ஸ்தலத்திலே உம்மோடே நான் அப்பம் புசிக்கவும் தண்ணீர் குடிக்கவுமாட்டேன்.
17ஏனென்றால் நீ அப்பம் புசியாமலும், அங்கே தண்ணீர் குடியாமலும், நீ போன வழியாய்த் திரும்பிவராமலும் இரு என்று கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாயிருக்கிறது என்றான்.
18அதற்கு அவன்: உம்மைப்போல நானும் தீர்க்கதரிசிதான்; அவன் அப்பம் புசித்துத் தண்ணீர் குடிக்க, நீ அவனைத் திருப்பி, உன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டுவா என்று ஒரு தூதன் கர்த்தருடைய வார்த்தையாக என்னோடே சொன்னான் என்று அவனிடத்தில் பொய் சொன்னான்.
19அப்பொழுது அவன் இவனோடே திரும்பிப் போய், இவன் வீட்டிலே அப்பம் புசித்துத் தண்ணீர் குடித்தான்.
20அவர்கள் பந்தியில் உட்கார்ந்திருக்கிறபோது, அவனைத் திருப்பிக்கொண்டு வந்த தீர்க்கதரிசிக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டானதினால்,
21அவன் யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனுஷனைப் பார்த்துச் சத்தமிட்டு, உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கற்பித்த கட்டளையை நீ கைக்கொள்ளாமல் கர்த்தருடைய வாக்கை மீறி,
22அப்பம் புசிக்கவும் தண்ணீர் குடிக்கவும் வேண்டாம் என்று அவர் விலக்கின ஸ்தலத்திற்கு நீ திரும்பி, அப்பம் புசித்துத் தண்ணீர் குடித்தபடியினால், உன்னுடைய பிரேதம் உன் பிதாக்களின் கல்லறையிலே சேருவதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
23அவன் போஜனபானம்பண்ணி முடிந்தபின்பு, அந்தத் தீர்க்கதரிசியைத் திருப்பிக்கொண்டு வந்தவன் அவனுக்குக் கழுதையின்மேல் சேணம்வைத்துக்கொடுத்தான்.
24அவன் போனபிற்பாடு வழியிலே ஒரு சிங்கம் அவனுக்கு எதிர்ப்பட்டு அவனைக் கொன்றுபோட்டது; அவன் பிரேதம் வழியிலே கிடந்தது; கழுதை அதினண்டையிலே நின்றது; சிங்கமும் பிரேதத்தண்டையிலே நின்றது.
25அந்த வழியே கடந்துவருகிற மனுஷர், வழியிலே கிடந்த பிரேதத்தையும், பிரேதத்தண்டையிலே நிற்கிற சிங்கத்தையும் கண்டு, கிழவனான தீர்க்கதரிசி குடியிருந்த பட்டணத்திலே வந்து சொன்னார்கள்.
26அவனை வழியிலிருந்து திரும்பப்பண்ணின தீர்க்கதரிசி அதைக் கேட்டபோது, அவன் கர்த்தருடைய வாக்கை மீறின தேவனுடைய மனுஷன்தான், கர்த்தர் அவனுக்குச் சொன்ன வார்த்தையின்படியே, கர்த்தர் அவனை ஒரு சிங்கத்திற்கு ஒப்புக்கொடுத்தார்; அது அவனை முறித்துக் கொன்றுபோட்டது என்று சொல்லி,
27தன் குமாரரை நோக்கி: எனக்குக் கழுதையின்மேல் சேணம்வைத்துக் கொடுங்கள் என்றான்; அவர்கள் சேணம்வைத்துக் கொடுத்தார்கள்.
28அப்பொழுது அவன் போய், வழியிலே கிடக்கிற அவன் பிரேதத்தையும், பிரேதத்தண்டையிலே கழுதையும் சிங்கமும் நிற்கிறதையும் கண்டான்; அந்தச் சிங்கம் பிரேதத்தைத் தின்னவுமில்லை, கழுதையை முறித்துப் போடவுமில்லை.
29அப்பொழுது கிழவனான அந்தத் தீர்க்கதரிசி தேவனுடைய மனுஷனின் பிரேதத்தை எடுத்து, அதைக் கழுதையின்மேல் வைத்து, அதற்காகத் துக்கங்கொண்டாடவும் அதை அடக்கம்பண்ணவும், அதைத் தன் பட்டணத்திற்குக் கொண்டுவந்து,
30அவன் பிரேதத்தைத் தன்னுடைய கல்லறையிலே வைத்தான். அவனுக்காக: ஐயோ, என் சகோதரனே என்று புலம்பி, துக்கங்கொண்டாடினார்கள்.
31அவனை அடக்கம்பண்ணினபின்பு, அவன் தன் குமாரரை நோக்கி: நான் மரிக்கும்போது, தேவனுடைய மனுஷன் அடக்கம்பண்ணப்பட்ட கல்லறையிலே என்னையும் நீங்கள் அடக்கம்பண்ணி, அவன் எலும்புகளண்டையிலே என் எலும்புகளையும் வையுங்கள்.
32அவன் பெத்தேலில் இருக்கிற பலிபீடத்திற்கும், சமாரியாவின் பட்டணங்களில் இருக்கிற மேடைகளாகிய சகல கோவில்களுக்கும் விரோதமாகக் கூறின கர்த்தருடைய வார்த்தை நிச்சயமாய் நிறைவேறும் என்றான்.
33இந்த நடபடிக்குப்பின்பு, யெரொபெயாம் தன் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பாமல், மறுபடியும் ஜனத்தில் ஈனமானவர்களை மேடைகளின் ஆசாரியராக்கினான்; எவன்மேல் அவனுக்கு மனதிருந்ததோ அவனைப் பிரதிஷ்டைபண்ணினான்; அப்படிப்பட்டவர்கள் மேடைகளின் ஆசாரியரானார்கள்.
34யெரொபெயாமின் வீட்டாரை பூமியின்மேல் வைக்காமல் அதம்பண்ணி அழிக்கும்படியாக இந்தக் காரியம் அவர்களுக்குப் பாவமாயிற்று.
1ஆதலால், எனக்குப் பிரியமும் வாஞ்சையுமான சகோதரரே, எனக்குச் சந்தோஷமும் கிரீடமுமானவர்களே, பிரியமானவர்களே, இந்தப்படியே கர்த்தருக்குள் நிலைத்திருங்கள்.
2கர்த்தருக்குள் ஒரே சிந்தையாயிருக்க எயோதியாளுக்கும் சிந்திகேயாளுக்கும் புத்திசொல்லுகிறேன்.
3அன்றியும், என் உத்தம கூட்டாளியே, அவர்களுக்கு உதவியாயிருக்கும்படி உன்னையும் வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் கிலேமெந்தோடும் மற்ற என் உடன்வேலையாட்களோடுங்கூடச் சுவிசேஷவிஷயத்தில் என்னோடேகூட மிகவும் பிரயாசப்பட்டார்கள், அவர்களுடைய நாமங்கள் ஜீவபுஸ்தகத்தில் இருக்கிறது.
4கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்.
5உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக. கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.
6நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.
7அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.
8கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்.
9நீங்கள் என்னிடத்தில் கற்றும் அடைந்தும் கேட்டும் கண்டும் இருக்கிறவைகளெவைகளோ, அவைகளையே செய்யுங்கள்; அப்பொழுது சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார்.
10என்னை விசாரிப்பதற்கு நீங்கள் இப்பொழுது மறுபடியும் மனமலர்ந்தபடியினாலே கர்த்தருக்குள் மிகவும் சந்தோஷப்பட்டேன்; இப்படிச் செய்ய எண்ணங்கொண்டிருந்தீர்கள், சமயம்மாத்திரம் உங்களுக்கு நேரிடவில்லை.
11என் குறைச்சலினால் நான் இப்படிச் சொல்லுகிறதில்லை; ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்.
12தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன்.
13என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.
14ஆகிலும் நீங்கள் என் உபத்திரவத்தில் என்னோடே உடன்பட்டது நலமாயிருக்கிறது.
15மேலும், பிலிப்பியரே, சுவிசேஷத்தின் ஆரம்பத்திலே நான் மக்கெதோனியாவிலிருந்து புறப்பட்டபோது, கொடுக்கல் வாங்கல் காரியத்தில் நீங்கள்மாத்திரம் எனக்கு உடன்பட்டதேயல்லாமல், வேறொரு சபையும் உடன்படவில்லை என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
16நான் தெசலோனிக்கேயிலிருந்தபோதும், என் குறைச்சலை நீக்கும்படி நீங்கள் இரண்டொருதரம் அனுப்பினீர்கள்.
17உபகாரத்தை நான் நாடாமல், உங்கள் கணக்குக்குப் பலன் பெருகும்படியே நாடுகிறேன்.
18எல்லாம் எனக்குக் கிடைத்தது, பரிபூரணமும் உண்டாயிருக்கிறது; உங்களால் அனுப்பப்பட்டவைகளைச் சுகந்த வாசனையும் தேவனுக்குப் பிரியமான உகந்தபலியுமாக எப்பாப்பிரோதீத்துவின் கையில் வரப்பற்றிக்கொண்டபடியால் நான் திருப்தியடைந்திருக்கிறேன்.
19என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.
20நம்முடைய பிதாவாகிய தேவனானவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
21கிறிஸ்து இயேசுவுக்குள்ளான பரிசுத்தவான்கள் யாவருக்கும் வாழ்த்துதல் சொல்லுங்கள். என்னோடிருக்கிற சகோதரர்கள் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
22பரிசுத்தவான்கள் அனைவரும், விசேஷமாக இராயனுடைய அரமனையிலுள்ளவர்களும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
23நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
1பின்பு அவர் என்னை கீழ்த்திசைக்கு எதிர் வாசலாகிய வாசலுக்கு அழைத்துக்கொண்டுபோனார்.
2இதோ, இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை கீழ்த்திசையிலிருந்து வந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்தின் இரைச்சலைப்போல இருந்தது; அவருடைய மகிமையினால் பூமி பிரகாசித்தது.
3நான் கண்ட இந்தத் தரிசனம் நகரத்தை அழிக்கவந்தபோது கண்டதரிசனம்போல இருந்தது; இந்தத் தரிசனங்கள் கேபார் நதியண்டையிலே நான் கண்டிருந்த தரிசனத்தைப்போலும் இருந்தது; நான் முகங்குப்புற விழுந்தேன்.
4கர்த்தருடைய மகிமை கீழ்த்திசைக்கு எதிரான வாசல்வழியாய் ஆலயத்துக்குள் பிரவேசித்தது.
5அப்பொழுது ஆவி என்னை எடுத்து, உட்பிராகாரத்திலே கொண்டுபோய்விட்டது; இதோ, கர்த்தருடைய மகிமை ஆலயத்தை நிரப்பிற்று.
6அவர் ஆலயத்திலிருந்து என்னோடே பேசுகிறதைக் கேட்டேன்; அந்தப் புருஷன் என்னண்டையில் நின்றிருந்தார்.
7அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இது நான் இஸ்ரவேல் புத்திரரின் நடுவே என்றென்றைக்கும் வாசம்பண்ணும் என் சிங்காசனமும் என் பாதபீடத்தின் ஸ்தானமுமாயிருக்கிறது; இனி இஸ்ரவேல் வம்சத்தாரும் அவர்களுடைய ராஜாக்களும் என் பரிசுத்த நாமத்தைத் தங்கள் மேடைகளில் தங்கள் வேசித்தனத்தினாலும் தங்கள் ராஜாக்களின் பிரேதங்களினாலும் தீட்டுப்படுத்துவதில்லை.
8அவர்கள் எனக்கும் தங்களுக்கும் நடுவே ஒரு சுவர் இருக்கும்படி, தங்கள் வாசற்படியை என் வாசற்படியண்டையிலும், தங்கள் வாசல் நிலைகளை என் வாசல் நிலைகளண்டையிலும் சேர்த்து, என் பரிசுத்த நாமத்தைத் தாங்கள் செய்த அருவருப்புகளினால் தீட்டுப்படுத்தினார்கள்; ஆகையால் என் கோபத்திலே அவர்களை நாசமாக்கினேன்.
9இப்பொழுதும் அவர்கள் தங்கள் வேசித்தனத்தையும் தங்கள் ராஜாக்களின் பிரேதங்களையும் என் சமுகத்தினின்று அகற்றினால் நான் என்றென்றைக்கும் அவர்கள் நடுவே வாசமாயிருப்பேன்.
10மனுபுத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தார் தங்கள் அக்கிரமங்களினிமித்தம் வெட்கப்படும்படிக்கு, நீ அவர்களுக்கு இந்த ஆலயத்தைக் காண்பி; அதின் அளவை அளக்கக்கடவர்கள்.
11அவர்கள் செய்த எல்லாவற்றினிமித்தமும் வெட்கப்பட்டால், அப்பொழுது இந்த ஆலயத்தின் ரூபத்தையும், அதின் அளவையும், அதின் முன்வாசல்களையும், அதின் பின் வாசல்களையும், அதின் எல்லா ஒழுங்குகளையும், அதின் எல்லாக் கட்டளைகளையும், அதின் எல்லா நியமங்களையும், அதின் எல்லாச் சட்டங்களையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தி, அவர்கள் அதினுடைய எல்லா ஒழுங்குகளையும், அதினுடைய எல்லா முறைமைகளையும் கைக்கொண்டு, அவைகளின்படி செய்யும்படிக்கு அதை அவர்கள் கண்களுக்கு முன்பாக எழுதிவை.
12ஆலயத்தினுடைய பிரமாணம் என்னவென்றால்: மலையுச்சியின்மேல் சுற்றிலும் அதின் எல்லையெங்கும் மிகவும் பரிசுத்தமாயிருக்கும்; இதுவே ஆலயத்தினுடைய பிரமாணம்.
13முழங்களின்படி அளக்கும் பலிபீடத்தின் அளவுகளாவன: ஒரு கை முழமும் நாலு விரற்கடையும் கொண்டது ஒரு முழமாகும்; அதின்படி சுற்றாதாரம், ஒரு முழ உயரமும், ஒரு முழ அகலமும், அதின் ஓரத்தைச் சுற்றிலுமுள்ள விளிம்பு ஒரு ஜாணுமாயிருக்கும்; இது பலிபீடத்தின் மேற்புறம்.
14தரையில் இருக்கிற ஆதாரந்துவக்கிக் கீழ்நிலைமட்டும் இரண்டு முழமும், அகலம் ஒருமுழமும், சின்ன நிலைதுவக்கிப் பெரிய நிலைமட்டும் நாலுமுழமும், அகலம் ஒருமுழமுமாயிருக்கும்.
15பலிபீடத்தின் சிகரம் நாலு முழ உயரமுமாயிருக்கும்; பலிபீடத்தின் சிகரத்துக்குமேலே நாலு கொம்புகள் இருக்கும்.
16பலிபீடத்தின் சிகரம் பன்னிரண்டு முழ நீளமும், பன்னிரண்டு முழ அகலமும் தன் நாலு பக்கங்களிலும் நாற்சதுரமுமாயிருக்கும்.
17அதின் நாலு பக்கங்களிலுள்ள சட்டத்தின் நீளம் பதிநாலு முழமும், அகலம் பதிநாலு முழமும், அதைச் சுற்றிலுமிருக்கிற விளிம்பு அரை முழமும், அதற்கு ஆதாரமானது சுற்றிலும் ஒரு முழமுமாயிருக்கும்; அதின் படிகள் கிழக்குக்கு எதிராயிருக்கும் என்றார்.
18பின்னும் அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்; பலிபீடத்தை உண்டுபண்ணும் நாளிலே அதின்மேல் தகனபலியிடுகிறதற்கும் அதின்மேல் இரத்தம் தெளிக்கிறதற்குமான கட்டளைகளாவன:
19எனக்கு ஆராதனை செய்கிறதற்கு என்னிடத்தில் சேருகிற சாதோக்கின் வம்சத்தாரான லேவி கோத்திரத்தாராகிய ஆசாரியர்களுக்கு நீ பாவநிவாரண பலியாக ஒரு இளங்காளையைக் கொடுப்பாயாக என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
20அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, அதின் நாலு கொம்புகளிலும், சட்டத்தின் நாலு கோடிகளிலும், சுற்றியிருக்கிற விளிம்பிலும் பூசி பாவநிவிர்த்திசெய்து, அதைச் சுத்திகரித்து,
21பின்பு பாவநிவாரணத்தின் காளையைக் கொண்டுபோய், அதை ஆலயத்திலே பரிசுத்த ஸ்தலத்துக்குப் புறம்பாகக் குறிக்கப்பட்ட இடத்திலே சுட்டெரிக்கவேண்டும்.
22இரண்டாம் நாளிலே பழுதற்ற ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரணத்துக்காகப் பலியிடுவாயாக; அவர்கள் இளங்காளையினாலே பலிபீடத்தைச் சுத்திசெய்ததுபோலப் பாவநிவாரணஞ் செய்யவேண்டும்.
23நீ பாவநிவாரணத்தை முடித்தபின்பு, பழுதற்ற ஒரு இளங்காளையையும் பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவையும் மந்தையிலிருந்தெடுத்துப் பலியிடுவாயாக.
24அவைகளைக் கர்த்தருடைய சந்நிதியில் பலியிடுவாயாக; ஆசாரியர்கள் அவைகளின்மேல் உப்புதூவி, அவைகளைக் கர்த்தருக்கு தகனபலியாக இடக்கடவர்கள்.
25ஏழுநாள்வரைக்கும் தினந்தினம் பாவநிவாரணத்துக்காக ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் படைப்பாயாக; பழுதற்றவைகளான இளங்காளையையும் மந்தையிலிருந்தெடுத்த ஆட்டுக்கடாவையும் படைப்பார்களாக.
26ஏழுநாள்வரைக்கும் பலிபீடத்தைப் பாவநிவிர்த்திசெய்து, அதைச் சுத்திகரித்து, பிரதிஷ்டை பண்ணக்கடவர்கள்.
27அந்நாட்கள் முடிந்தபின்பு, எட்டாம் நாள்முதல் ஆசாரியர்கள் பலிபீடத்தின்மேல் உங்கள் தகனபலிகளையும் உங்கள் ஸ்தோத்திரபலிகளையும் படைப்பார்களாக; அப்பொழுது உங்களை அங்கிகரிப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
1கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடி, நம்முடைய இரட்சணியக் கன்மலையைச் சங்கீர்த்தனம் பண்ணக்கடவோம் வாருங்கள்.
2துதித்தலுடனே அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து, சங்கீதங்களால் அவரை ஆர்ப்பரித்துப் பாடக்கடவோம்.
3கர்த்தரே மகா தேவனும், எல்லா தேவர்களுக்கும் மகாராஜனுமாயிருக்கிறார்.
4பூமியின் ஆழங்கள் அவர் கையில் இருக்கிறது; பர்வதங்களின் உயரங்களும் அவருடையவைகள்.
5சமுத்திரம் அவருடையது, அவரே அதை உண்டாக்கினார்; வெட்டாந்தரையையும் அவருடைய கரம் உருவாக்கிற்று.
6நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடக்கடவோம் வாருங்கள்.
7அவர் நம்முடைய தேவன்; நாம் அவர் மேய்ச்சலின் ஜனங்களும், அவர் கைக்குள்ளான ஆடுகளுமாமே.
8இன்று அவருடைய சத்தத்தைக்கேட்பீர்களாகில், வனாந்தரத்தில் கோபம் மூட்டினபோதும் சோதனை நாளிலும் நடந்ததுபோல, உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள்.
9அங்கே உங்கள் பிதாக்கள் என்னைச் சோதித்து, என்னைப் பரீட்சை பார்த்து, என் கிரியையையும் கண்டார்கள்.
10நாற்பதுவருஷமாய் நான் அந்தச் சந்ததியை அரோசித்து, அவர்கள் வழுவிப்போகிற இருதயமுள்ள ஜனமென்றும், என்னுடைய வழிகளை அறியாதவர்களென்றும் சொல்லி,
11என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்பதில்லையென்று, என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன்.
1கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைப் பாடுங்கள்.
2கர்த்தரைப் பாடி, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரித்து, நாளுக்குநாள் அவருடைய இரட்சிப்பைச் சுவிசேஷமாய் அறிவியுங்கள்.
3ஜாதிகளுக்குள் அவருடைய மகிமையையும், சகல ஜனங்களுக்குள்ளும் அவருடைய அதிசயங்களையும் விவரித்துச் சொல்லுங்கள்.
4கர்த்தர் பெரியவரும், மிகவும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறார்; எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவர் அவரே.
5சகல ஜனங்களுடைய தேவர்களும் விக்கிரகங்கள்தானே; கர்த்தரோ வானங்களை உண்டாக்கினவர்.
6மகிமையும் கனமும் அவர் சமுகத்தில் இருக்கிறது, வல்லமையும் மகத்துவமும் அவர் பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது.
7ஜனங்களின் வம்சங்களே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள், கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்.
8கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்தி, காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவருடைய பிராகாரங்களில் பிரவேசியுங்கள்.
9பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்; பூலோகத்தாரே, நீங்கள் யாவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள்.
10கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார், ஆகையால் பூச்சக்கரம் அசையாதபடி உறுதிப்பட்டிருக்கும் அவர் ஜனங்களை நிதானமாய் நியாயந்தீர்ப்பார் என்று ஜாதிகளுக்குள்ளே சொல்லுங்கள்.
11வானங்கள் மகிழ்ந்து, பூமி பூரிப்பாகி, சமுத்திரமும் அதின் நிறைவும் முழங்குவதாக.
12நாடும் அதிலுள்ள யாவும் களிகூருவதாக; அப்பொழுது கர்த்தருக்கு முன்பாக காட்டுவிருட்சங்களெல்லாம் கெம்பீரிக்கும்.
13அவர் வருகிறார், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; அவர் பூலோகத்தை நீதியோடும், ஜனங்களைச் சத்தியத்தோடும் நியாயந்தீர்ப்பார்.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com