1அக்காலத்திலே யெரொபெயாமின் குமாரனாகிய அபியா வியாதியில் விழுந்தான்.
2அப்பொழுது யெரொபெயாம் தன் மனைவியைப் பார்த்து: நீ எழுந்து, நீ யெரொபெயாமின் மனைவியென்று ஒருவரும் அறியாதபடிக்கு வேஷம்மாறி சீலோவுக்குப் போ; இந்த ஜனத்தின்மேல் நான் ராஜாவாவேன் என்று என்னோடே சொன்ன தீர்க்கதரிசியாகிய அகியா அங்கே இருக்கிறான்.
3நீ உன் கையிலே பத்து அப்பங்களையும், பணியாரங்களையும், ஒரு கலசம் தேனையும் எடுத்துக்கொண்டு அவனிடத்துக்குப் போ; பிள்ளைக்குச் சம்பவிக்கப்போகிறது இன்னதென்று அவன் உனக்கு அறிவிப்பான் என்றான்.
4அப்படியே யெரொபெயாமின் மனைவி செய்தாள்; அவள் எழுந்து சீலோவுக்குப் போய், அகியாவின் வீட்டிற்குள் பிரவேசித்தாள்; அகியாவோ முதிர் வயதானதினால் அவன் கண்கள் மங்கலடைந்து பார்க்கக்கூடாதிருந்தான்.
5கர்த்தர் அகியாவினிடத்தில்: இதோ, யெரொபெயாமின் மனைவி வியாதியாருக்கிற தன் குமாரனுக்காக உன்னை ஒரு விசேஷம் கேட்க வருகிறாள்; நீ அவளுக்கு இன்ன இன்ன பிரகாரமாகச் சொல்லவேண்டும்; அவள் உட்பிரவேசிக்கிறபோது, தன்னை அந்நிய ஸ்திரீயாகக் காண்பிப்பாள் என்றார்.
6ஆகையால் வாசற்படிக்குள் பிரவேசிக்கும் அவளுடைய நடையின் சத்தத்தை அகியா கேட்டவுடனே, அவன்: யெரொபெயாமின் மனைவியே, உள்ளே வா; உன்னை அந்நிய ஸ்திரீயாகக் காண்பிக்கிறதென்ன? துக்கசெய்தியை உனக்கு அறிவிக்க நான் அனுப்பப்பட்டேன்.
7நீ போய் யெரொபெயாமை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்; ஜனத்தினின்று உன்னை நான் உயர்த்தி, உன்னை இஸ்ரவேல் என்னும் என் ஜனத்தின்மேல் அதிபதியாக வைத்தேன்.
8நான் ராஜ்யபாரத்தைத் தாவீது வம்சத்தாரின் கையிலிருந்து பிடுங்கி உனக்குக் கொடுத்தேன்; ஆனாலும் என் கற்பனைகளைக் கைக்கொண்டு, என் பார்வைக்குச் செம்மையானதையே செய்ய, தன் முழு இருதயத்தோடும் என்னைப் பின்பற்றின என் தாசனாகிய தாவீதைப்போல நீ இராமல்,
9உனக்கு முன்னிருந்த எல்லாரைப்பார்க்கிலும் பொல்லாப்புச் செய்தாய்; எனக்குக் கோபம் உண்டாக்க, நீ போய் உனக்கு அந்நிய தேவர்களையும் வார்க்கப்பட்ட விக்கிரகங்களையும் உண்டுபண்ணி, உனக்குப் புறம்பே என்னைத் தள்ளிவிட்டாய்.
10ஆகையால் இதோ, நான் யெரொபெயாமுடைய வீட்டின்மேல் பொல்லாப்பை வரப்பண்ணி, யெரொபெயாமுக்கு, சுவர்மேல் நீர்விடும் ஒரு நாய் முதலாயிராதபடிக்கு, இஸ்ரவேலிலே அடைபட்டவனையும் விடுபட்டவனையும் சங்காரம்பண்ணி, குப்பை கழித்துப்போடப்படுகிறதுபோல யெரொபெயாமின் பின்னடியாரை அவர்கள் கட்டோடே அற்றுப்போகுமட்டும் கழித்துப்போடுவேன் என்றார்.
11யெரொபெயாமின் சந்ததியாரில் பட்டணத்திலே சாகிறவனை நாய்கள் தின்னும்; வெளியிலே சாகிறவனை ஆகாயத்தின் பறவைகள் தின்னும்; கர்த்தர் இதை உரைத்தார்.
12ஆகையால் நீ எழுந்து, உன் வீட்டுக்குப்போ, உன் கால்கள் பட்டணத்திற்குள் பிரவேசிக்கையில் பிள்ளையாண்டான் செத்துப்போவான்.
13அவனுக்காக இஸ்ரவேலரெல்லாரும் துக்கங்கொண்டாடி அவனை அடக்கம்பண்ணுவார்கள்; யெரொபெயாமின் வீட்டாரில் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக அவனிடத்திலே நல்ல காரியம் காணப்பட்டதினால், யெரொபெயாமின் சந்ததியில் அவன் ஒருவனே கல்லறைக்குட்படுவான்.
14ஆனாலும் கர்த்தர் தமக்கு இஸ்ரவேலின்மேல் ஒரு ராஜாவை எழும்பப்பண்ணுவார்; அவன் அந்நாளிலே யெரொபெயாமின் வீட்டாரைச் சங்கரிப்பான்; இப்போதே இது நடந்தேறும்.
15தண்ணீரிலே நாணல் அசைகிறதுபோல, கர்த்தர் இஸ்ரவேலை முறிந்தசையப்பண்ணி, அவர்கள் பிதாக்களுக்குத் தாம் கொடுத்த இந்த நல்ல தேசத்திலிருந்து இஸ்ரவேலை வேரோடே பிடுங்கி, அவர்கள் தங்களுக்கு தோப்பு விக்கிரகங்களை வைத்து, கர்த்தருக்குக் கோபம் உண்டாக்கினபடியினால், அவர்களை நதிக்கப்பாலே சிதறடித்து,
16யெரொபெயாம் செய்ததும் இஸ்ரவேலைச் செய்யப்பண்ணினதுமான பாவத்தினிமித்தம் இஸ்ரவேலை ஒப்புக்கொடுத்துவிடுவார் என்றான்.
17அப்பொழுது யெரொபெயாமின் மனைவி எழுந்து புறப்பட்டு திர்சாவுக்கு வந்தாள்; அவள் வாசற்படியிலே வருகையில் பிள்ளையாண்டான் செத்துப்போனான்.
18கர்த்தர் தீர்க்கதரிசியாகிய அகியா என்னும் தமது ஊழியக்காரனைக் கொண்டு சொன்ன வார்த்தையின்படியே, அவர்கள் அவனை அடக்கம்பண்ணி, இஸ்ரவேலர் எல்லாரும் அவனுக்காகத் துக்கங்கொண்டாடினார்கள்.
19யெரொபெயாம் யுத்தம்பண்ணினதும் ஆண்டதுமான அவனுடைய மற்ற வர்த்தமானங்கள் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.
20யெரொபெயாம் ராஜ்யபாரம்பண்ணின காலம் இருபத்திரண்டு வருஷம்; அவன் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய நாதாப் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
21சாலொமோனின் குமாரனாகிய ரெகொபெயாம் யூதாவிலே ராஜ்யபாரம்பண்ணினான்; ரெகொபெயாம் ராஜாவாகிறபோது நாற்பத்தொரு வயதாயிருந்து, கர்த்தர் தம்முடைய நாமம் விளங்கும்படி இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் தெரிந்துகொண்ட நகரமாகிய எருசலேமிலே பதினேழு வருஷம் ராஜ்யபாரம் பண்ணினான்; அம்மோன் ஜாதியான அவனுடைய தாயின் பேர் நாமாள்.
22யூதா ஜனங்கள் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, தாங்கள் செய்து வருகிற தங்களுடைய பாவங்களினால் தங்கள் பிதாக்கள் செய்த எல்லாவற்றைப்பார்க்கிலும் அவருக்கு அதிக எரிச்சலை மூட்டினார்கள்.
23அவர்களும் உயர்ந்த சகல மேட்டின் மேலும், பச்சையான சகல மரத்தின் கீழும், மேடைகளையும் சிலைகளையும் தோப்புவிக்கிரகங்களையும் தங்களுக்கு உண்டாக்கினார்கள்.
24தேசத்திலே இலச்சையான புணர்ச்சிக்காரரும் இருந்தார்கள்; கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்திவிட்ட ஜாதிகளுடைய அருவருப்புகளின்படியெல்லாம் செய்தார்கள்.
25ரெகொபெயாம் ராஜ்யபாரம்பண்ணும் ஐந்தாம் வருஷத்திலே, எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் எருசலேமுக்கு விரோதமாய் வந்து,
26கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களையும், ராஜாவுடைய அரமனையின் பொக்கிஷங்களையும், சாலொமோன் செய்வித்த பொன் பரிசைகள் ஆகிய சகலத்தையும் எடுத்துக்கொண்டு போய்விட்டான்.
27அவைகளுக்குப் பதிலாக ராஜாவாகிய ரெகொபெயாம் வெண்கலப் பரிசைகளைச் செய்வித்து, அவைகளை ராஜாவின் வாசற்படியைக் காக்கிற சேவகருடைய தலைவரின் கையில் ஒப்புவித்தான்.
28ராஜா கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கும்போது, அரமனைச்சேவகர் அவைகளைப் பிடித்துக்கொண்டுபோய், திரும்பத் தங்கள் அறையிலே வைப்பார்கள்.
29ரெகொபெயாமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
30ரெகொபெயாமுக்கும் யெரொபெயாமுக்கும் அவர்கள் இருந்த நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.
31ரெகொபெயாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தாவீதின் நகரத்தில் தன் பிதாக்களண்டையில் அடக்கம் பண்ணப்பட்டான்; அம்மோன் ஜாதியான அவன் தாய்க்கு நாமாள் என்று பேர்; அவன் குமாரனாகிய அபியாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
1தேவனுடைய சித்தத்தினாலே இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயும்,
2கொலோசே பட்டணத்தில் கிறிஸ்துவுக்குள் பரிசுத்தவான்களும் விசுவாசிகளுமாயிருக்கிற சகோதரர்களுக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
3கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள உங்கள் விசுவாசத்தையும், பரிசுத்தவான்களெல்லார்மேலுமுள்ள உங்கள் அன்பையுங்குறித்து நாங்கள் கேள்விப்பட்டு,
4பரலோகத்தில் உங்களுக்காக வைத்திருக்கிற நம்பிக்கையினிமித்தம்,
5நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தி, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டுதல்செய்கிறோம்.
6அந்த நம்பிக்கையைக்குறித்து, நீங்கள் முன்னமே சத்தியவசனமாகிய சுவிசேஷத்தினாலே கேள்விப்பட்டீர்கள்; அந்தச் சுவிசேஷம் உலகமெங்கும்பரம்பிப் பலன்தருகிறதுபோல, உங்களிடத்திலும் வந்து, நீங்கள் அதைக் கேட்டு, தேவகிருபையைச் சத்தியத்தின்படி அறிந்துகொண்ட நாள்முதல், அது உங்களுக்குள்ளும் பலன்தருகிறதாயிருக்கிறது;
7அதை எங்களுக்குப் பிரியமான உடன்வேலையாளும், உங்களுக்காகக் கிறிஸ்துவின் உண்மையான ஊழியக்காரனுமாயிருக்கிற எப்பாப்பிராவினிடத்தில் நீங்கள் கற்றறிந்திருக்கிறீர்கள்;
8ஆவிக்குள்ளான உங்கள் அன்பையும் அவனே எங்களுக்குத் தெரியப்படுத்தினான்.
9இதினிமித்தம், நாங்கள் அதைக்கேட்ட நாள்முதல் உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம்பண்ணுகிறோம்; நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும்,
10சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும்,
11சந்தோஷத்தோடே கூடிய எல்லாப்பொறுமையும் நீடியசாந்தமும் உண்டாவதற்கு மகிமையான அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படவும், உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம்.
12ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைவதற்கு, நம்மைத் தகுதியுள்ளவர்களாக்கினவரும்,
13இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம்.
14(குமாரனாகிய) அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.
15அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வசிருஷ்டிக்கும் முந்தினபேறுமானவர்.
16ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.
17அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது.
18அவரே சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர்.
19சகல பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாயிருக்கவும்,
20அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று.
21முன்னே அந்நியராயும் துர்க்கிரியைகளினால் மனதிலே சத்துருக்களாயும் இருந்த உங்களையும் பரிசுத்தராகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்கு முன்நிறுத்தும்படியாக அவருடைய மாம்சசரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார்.
22நீங்கள் கேட்ட சுவிசேஷத்தினால் உண்டாகும் நம்பிக்கையைவிட்டு அசையாமல், ஸ்திரமாயும் உறுதியாயும் விசுவாசத்திலே நிலைத்திருப்பீர்களானால் அப்படியாகும்.
23அந்தச் சுவிசேஷம் வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டுவருகிறது; அதற்கென்றே பவுலாகிய நான் ஊழியக்காரனானேன்.
24இப்பொழுது நான் உங்கள்நிமித்தம் அநுபவிக்கிற பாடுகளில் சந்தோஷமடைந்து, கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை அவருடைய சரீரமாகிய சபைக்காக, என் மாம்சத்திலே நிறைவேற்றுகிறேன்.
25ஆதிகாலங்களுக்கும் தலைமுறை தலைமுறைகளுக்கும் மறைவாயிருந்து, இப்பொழுது அவருடைய பரிசுத்தவான்களுக்கு வெளியாக்கப்பட்ட இரகசியமாகிய தேவவசனத்தைப் பூரணமாய்த் தெரியப்படுத்துகிறதற்கு,
26உங்கள்பொருட்டு தேவனால் எனக்கு அளிக்கப்பட்ட உத்தியோகத்தின்படியே நான் அந்தச் சபைக்கு ஊழியக்காரனானேன்.
27புறஜாதிகளுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தச் சித்தமானார்; கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்.
28எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம் பண்ணுகிறோம்.
29அதற்காக நான் எனக்குள்ளே வல்லமையாய்க் கிரியை நடப்பிக்கிற அவருடைய பலத்தின்படி போராடிப் பிரயாசப்படுகிறேன்.
1பின்பு அவர் என்னை கிழக்குக்கு எதிரே பரிசுத்த ஸ்தலத்துக்குப் புறவாசல் வழியே திரும்பப்பண்ணினார்; அது பூட்டப்பட்டிருந்தது.
2அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: இந்த வாசல் திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருக்கும்; ஒருவரும் இதற்குள் பிரவேசிப்பதில்லை; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இதற்குள் பிரவேசித்தார், ஆகையால் இது பூட்டப்பட்டிருக்கவேண்டும்.
3இது அதிபதிக்கே உரியது, அதிபதி கர்த்தருடைய சந்நிதியில் போஜனம்பண்ணும்படி இதில் உட்காருவான்; அவன் வாசல் மண்டபத்தின் வழியாய்ப் பிரவேசித்து, மறுபடியும் அதின் வழியாய்ப் புறப்படுவான் என்றார்.
4பின்பு அவர் என்னை வடக்கு வாசல்வழியாய் ஆலயத்தின் முகப்பிலே அழைத்துக்கொண்டுபோனார்; இதோ, கர்த்தருடைய ஆலயம் கர்த்தருடைய மகிமையால் நிறைந்ததை நான் கண்டு, முகங்குப்புற விழுந்தேன்.
5அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, கர்த்தருடைய ஆலயத்தின் சகல நியமங்களையும் அதின் சகல சட்டங்களையும் குறித்து நான் உன்னோடே சொல்வதையெல்லாம் நீ உன் மனதிலே கவனித்து, உன் கண்களினாலே பார்த்து, உன் காதுகளினாலே கேட்டு, பரிசுத்த ஸ்தலத்தினுடைய எல்லா வாசற்படிகளின் வழியாய் ஆலயத்துக்குள் பிரவேசிப்பதும் அதிலிருந்து புறப்படுவதும் இன்னவிதமென்று நீ ஆலோசித்துப் பார்த்து,
6இஸ்ரவேல் வம்சத்தாராகிய கலகக்காரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் செய்த சகல அருவருப்புகளும் போதும்.
7நீங்கள் எனக்குச் செலுத்தவேண்டிய ஆகாரமாகிய நிணத்தையும் இரத்தத்தையும் செலுத்துகையில், என் ஆலயத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கும்படி விருத்தசேதனமில்லாத இருதயமும் விருத்தசேதனமில்லாத மாம்சமுமுள்ள அந்நிய புத்திரரை என் பரிசுத்த ஸ்தலத்துக்குள் இருக்கிறதற்காக அழைத்துக்கொண்டு வந்தீர்கள்; நீங்கள் செய்த எல்லா அருவருப்புகளினாலும் அவர்கள் என் உடன்படிக்கையை மீறினார்கள்.
8நீங்கள் என் பரிசுத்த வஸ்துக்களின் காவலைக் காவாமல், உங்களுக்கு இஷ்டமானவர்களை என் பரிசுத்த ஸ்தலத்திலே என் காவலைக் காக்கிறதற்காக வைத்தீர்கள்.
9கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் புத்திரரின் நடுவில் இருக்கிற சகல அந்நிய புத்திரரிலும் விருத்தசேதனமில்லாத இருதயமும் விருத்தசேதனமில்லாத மாம்சமுமுள்ள அந்நிய புத்திரன் ஒருவனும் என் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிப்பதில்லை.
10இஸ்ரவேல் வழிதப்பிப்போகையில், என்னைவிட்டுத் தூரமானவர்களும், என்னைவிட்டு வழிதப்பித் தங்கள் நரகலான விக்கிரகங்களைப் பின்பற்றினவர்களுமாகிய லேவியரும் தங்கள் அக்கிரமத்தைச் சுமப்பார்கள்.
11ஆகிலும் அவர்கள் என் ஆலயத்தின் வாசல்களைக் காத்து, என் ஆலயத்தில் ஊழியஞ்செய்து, என் பரிசுத்த ஸ்தலத்திலே பணிவிடைக்காரராயிருப்பார்கள்; அவர்கள் ஜனங்களுக்காக தகனபலிகளையும் மற்றப் பலிகளையும் செலுத்தி, இவர்களுக்கு ஊழியஞ்செய்கிறதற்கு இவர்கள் முன்பாக என் பரிசுத்த ஸ்தலத்திலே பணிவிடைக்காரராயிருப்பார்கள்.
12அவர்கள் இவர்களுடைய நரகலான விக்கிரகங்களுக்கு முன்பாக நின்று இவர்களுக்கு ஊழியஞ்செய்து, இஸ்ரவேல் வம்சத்தாரை அக்கிரமத்தில் விழப்பண்ணினபடியினால், நான் என் கையை அவர்களுக்கு விரோதமாய் உயர்த்தினேன், அவர்கள் தங்கள் அக்கிரமத்தைச் சுமப்பார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
13அவர்கள் எனக்கு ஆசாரியராய் ஆராதனை செய்யும்படி என் சமீபத்தில் வராமலும், மகா பரிசுத்தமான ஸ்தலத்தில் என் பரிசுத்த வஸ்துக்களில் யாதொன்றையும் கிட்டாமலும் இருக்கவேண்டும், அவர்கள் தங்கள் இலச்சையையும் தாங்கள் செய்த அருவருப்புகளையும் சுமக்கக்கடவர்கள்.
14ஆலயத்தின் சகல வேலைகளுக்கும் அதில் செய்யப்படவேண்டிய எல்லாவற்றிற்கும் நான் அவர்களை அதில் காவல்காக்கிறவர்களாயிருக்கக் கட்டளையிடுவேன்.
15இஸ்ரவேல் புத்திரரே, என்னை விட்டு வழிதப்பிப்போகையில், என் பரிசுத்த ஸ்தலத்தின் காவலைக் காக்கிற சாதோக்கின் புத்திரராகிய லேவியரென்னும் ஆசாரியர்களே எனக்கு ஆராதனைசெய்ய என் சமீபத்தில் சேர்ந்து, நிணத்தையும் இரத்தத்தையும் எனக்குச் செலுத்த என் சந்நிதியில் நிற்பார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
16இவர்கள் என் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிப்பார்கள், இவர்களே எனக்கு ஆராதனை செய்ய என் பீடத்தைக் கிட்டிவந்து, என் காவலைக் காப்பார்கள்.
17உட்பிராகாரத்தின் வாசல்களுக்குள் பிரவேசிக்கிறபோது, சணல்நூல் வஸ்திரங்களை உடுத்திக்கொள்வார்களாக; அவர்கள் உட்பிராகாரத்தின் வாசல்களிலும், உள்ளேயும் ஆராதனை செய்கையில், ஆட்டுமயிர் உடுப்பைத் தரிக்கலாகாது.
18அவர்களுடைய தலைகளில் சணல்நூல் குல்லாக்களையும், அவர்களுடைய இடைகளில் சணல்நூல் சல்லடங்களையும் தரிக்கவேண்டும்; வேர்வையுண்டாக்கத்தக்கதொன்றையும் அரையில் கட்டலாகாது.
19அவர்கள் வெளிப்பிராகாரமாகிய புறமுற்றத்திலே ஜனங்களிடத்தில் போகும்போது, அவர்கள் தாங்கள் ஆராதனைசெய்யும் சமயத்தில் உடுத்தியிருந்த தங்கள் வஸ்திரங்களைக் கழற்றி, அவைகளைப் பரிசுத்த அறைவீடுகளில் வைத்து, வேறே வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளக்கடவர்கள்; தங்கள் வஸ்திரங்களாலே ஜனங்களைப் பரிசுத்தப்படுத்தலாகாது.
20அவர்கள் தங்கள் தலைகளைச் சிரையாமலும், தங்கள் மயிரை நீளமாய் வளர்க்காமலும், தங்கள் தலைமயிரைக் கத்தரிக்கக்கடவர்கள்.
21ஆசாரியர்களில் ஒருவனும், உட்பிராகாரத்துக்குள் பிரவேசிக்கும்போது, திராட்சரசம் குடிக்கலாகாது.
22விதவையையும் தள்ளிவிடப்பட்டவளையும் அவர்கள் விவாகம்பண்ணாமல், இஸ்ரவேல் வம்சத்தாளாகிய கன்னிகையையாகிலும் ஒரு ஆசாரியரின் மனைவியாயிருந்த விதவையையாகிலும் விவாகம்பண்ணலாம்.
23அவர்கள் பரிசுத்தமானதற்கும் பரிசுத்தமல்லாததற்கும், தீட்டானதற்கும் தீட்டல்லாததற்கும் இருக்கும் வித்தியாசத்தை என் ஜனத்துக்குப்போதித்து, அவர்களுக்குத் தெரியப்பண்ணக்கடவர்கள்.
24வழக்கிருந்தால் அவர்கள் நியாயந்தீர்க்க ஆயத்தமாயிருந்து, என் நியாயங்களின்படி அதைத் தீர்த்து, என்னுடைய பண்டிகைகளில் எல்லாம் என் நியாயப்பிரமாணத்தையும் என் கட்டளைகளையும் கைக்கொண்டு, என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தமாக்கக்கடவர்கள்.
25தகப்பன், தாய், குமாரன், குமாரத்தி, சகோதரன், புருஷனுக்கு வாழ்க்கைப்படாத சகோதரி என்னும் இவர்களுடைய சவத்தினால் அவர்கள் தீட்டுப்படலாமேயல்லாமல், அவர்களில் ஒருவனும் செத்த ஒருவனிடத்தில் போய்த் தீட்டுப்படலாகாது.
26அவன் சுத்திகரிக்கப்பட்டபின்பு, அவனுக்கு ஏழுநாள் எண்ணப்படவேண்டும்.
27அவன் பரிசுத்த ஸ்தலத்தில் ஆராதனை செய்யும்படி பரிசுத்த ஸ்தலம் இருக்கிற உட்பிராகாரத்துக்குள் பிரவேசிக்கிற நாளிலே, அவன் தனக்காகப் பாவநிவாரண பலியைச் செலுத்தக்கடவன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
28அவர்களுக்குரிய சுதந்தரம் என்னவென்றால்: நானே அவர்கள் சுதந்தரம்; ஆகையால் இஸ்ரவேலில் அவர்களுக்குக் காணியாட்சியைக் கொடாதிருப்பீர்களாக; நானே அவர்கள் காணியாட்சி.
29போஜனபலியையும் பாவநிவாரணபலியையும் குற்றநிவாரணபலியையும் அவர்கள் புசிப்பார்கள்; இஸ்ரவேலிலே பொருத்தனை பண்ணப்பட்டதெல்லாம் அவர்களுடையதாயிருப்பதாக.
30சகலவித முதற்கனிகளில் எல்லாம் முந்தின பலனும், நீங்கள் காணிக்கையாய்ச் செலுத்தும் எவ்விதமான பொருள்களும் ஆசாரியர்களுடையதாயிருப்பதாக; உங்கள் வீட்டில் ஆசீர்வாதம் தங்கும்படிக்கு நீங்கள் பிசைந்தமாவில் முதற்பாகத்தையும் ஆசாரியனுக்குக் கொடுக்கக்கடவீர்கள்.
31பறவைகளிலும் மிருகங்களிலும் தானாய்ச் செத்ததும் பீறுண்டதுமான ஒன்றையும் ஆசாரியர்கள் புசிக்கலாகாது.
1கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார்; பூமி பூரிப்பாகி, திரளான தீவுகள் மகிழக்கடவது.
2மேகமும் மந்தாரமும் அவரைச் சூழ்ந்திருக்கிறது; நீதியும் நியாயமும் அவருடைய சிங்காசனத்தின் ஆதாரம்.
3அக்கினி அவருக்கு முன்சென்று, சுற்றிலும் இருக்கிற அவருடைய சத்துருக்களைச் சுட்டெரிக்கிறது.
4அவருடைய மின்னல்கள் பூச்சக்கரத்தைப் பிரகாசிப்பித்தது; பூமி அதைக்கண்டு அதிர்ந்தது.
5கர்த்தரின் பிரசன்னத்தினால் பர்வதங்கள் மெழுகுபோல உருகிற்று, சர்வ பூமியினுடைய ஆண்டவரின் பிரசன்னத்தினாலேயே உருகிப்போயிற்று.
6வானங்கள் அவருடைய நீதியை வெளிப்படுத்துகிறது; சகல ஜனங்களும் அவருடைய மகிமையைக் காண்கிறார்கள்.
7சொரூபங்களை வணங்கி, விக்கிரகங்களைப்பற்றிப் பெருமைபாராட்டுகிற யாவரும் வெட்கப்பட்டுப் போவார்களாக; தேவர்களே, நீங்களெல்லாரும் அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.
8சீயோன் கேட்டு மகிழ்ந்தது; கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகளினிமித்தம் யூதாவின் குமாரத்திகள் களிகூர்ந்தார்கள்.
9கர்த்தாவே, பூமி முழுவதுக்கும் நீர் உன்னதமானவர்; எல்லா தேவர்களிலும் நீரே மிகவும் உயர்ந்தவர்.
10கர்த்தரில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்; அவர் தம்முடைய பரிசுத்தவான்களின் ஆத்துமாக்களைக் காப்பாற்றி, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவிக்கிறார்.
11நீதிமானுக்காக வெளிச்சமும், செம்மையான இருதயத்தாருக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது.
12நீதிமான்களே, கர்த்தருக்குள் மகிழ்ந்து, அவருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலைக் கொண்டாடுங்கள்.
1கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; அவர் அதிசயங்களைச் செய்திருக்கிறார்; அவருடைய வலது கரமும், அவருடைய பரிசுத்த புயமும், இரட்சிப்பை உண்டாக்கினது.
2கர்த்தர் தமது இரட்சிப்பைப் பிரஸ்தாபமாக்கி, தமது நீதியை ஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக விளங்கப்பண்ணினார்.
3அவர் இஸ்ரவேல் குடும்பத்துக்காகத் தமது கிருபையையும் உண்மையையும் நினைவுகூர்ந்தார்; பூமியின் எல்லைகளெல்லாம் நமது தேவனுடைய இரட்சிப்பைக் கண்டது.
4பூமியின் குடிகளே, நீங்களெல்லாரும் கர்த்தரை நோக்கி ஆனந்தமாய் ஆர்ப்பரியுங்கள்; முழக்கமிட்டுக் கெம்பீரமாய்ப் பாடுங்கள்.
5சுரமண்டலத்தால் கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணுங்கள், சுரமண்டலத்தாலும் கீதசத்தத்தாலும் அவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள்.
6கர்த்தராகிய ராஜாவின் சமுகத்தில் பூரிகைகளாலும் எக்காள சத்தத்தாலும் ஆனந்தமாய் ஆர்ப்பரியுங்கள்.
7சமுத்திரமும் அதின் நிறைவும், பூச்சக்கரமும் அதின் குடிகளும் முழங்குவதாக.
8கர்த்தருக்கு முன்பாக ஆறுகள் கைகொட்டி, பர்வதங்கள் ஏகமாய்க் கெம்பீரித்துப் பாடக்கடவது.
9அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; பூலோகத்தை நீதியோடும் ஜனங்களை நிதானத்தோடும் நியாயந்தீர்ப்பார்.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com