‹ முகப்புமுழுத் திட்டம்

அக்டோபர் 9 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்அக்டோபர் 9அடுத்த நாள் ›
குடும்பம்

I இராஜாக்கள் 12

முழு அதிகாரம் ›

1ரெகொபெயாமை ராஜாவாக்கும்படி, இஸ்ரவேலர் எல்லாரும் சீகேமுக்கு வந்திருந்தபடியால், அவனும் சீகேமுக்குப் போனான்.

2ராஜாவாகிய சாலொமோனை விட்டு ஓடிப்போய், எகிப்திலே குடியிருந்த நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமோ, எகிப்தில் இருக்கையில் இதைக் கேள்விப்பட்டான்.

3அவர்கள் யெரொபெயாமுக்கு ஆள் அனுப்பி அவனை அழைப்பித்தார்கள்; அவனும் இஸ்ரவேல் சபை அனைத்தும் வந்து, ரெகொபெயாமை நோக்கி:

4உம்முடைய தகப்பன் பாரமான நுகத்தை எங்கள்மேல் வைத்தார்; இப்போதும் நீர் உம்முடைய தகப்பன் சுமத்தின கடினமான வேலையையும், அவர் எங்கள்மேல் வைத்த பாரமான நுகத்தையும் இலகுவாக்கும்; அப்பொழுது உம்மை சேவிப்போம் என்றார்கள்.

5அதற்கு அவன்: நீங்கள் போய், மூன்று நாள் பொறுத்து என்னிடத்தில் திரும்பிவாருங்கள் என்றான்; அப்படியே ஜனங்கள் போயிருந்தார்கள்.

6அப்பொழுது ராஜாவாகிய ரெகொபெயாம் தன் தகப்பனாகிய சாலொமோன் உயிரோடிருக்கையில் அவன் சமுகத்தில் நின்ற முதியோரோடே ஆலோசனைபண்ணி, இந்த ஜனங்களுக்கு மறுஉத்தரவு கொடுக்க, நீங்கள் என்ன யோசனை சொல்லுகிறீர்கள் என்று கேட்டான்.

7அதற்கு அவர்கள்: நீர் இன்று இந்த ஜனங்களுக்கு சேவகனாகி, அவர்களுக்கு இணங்கி, அவர்கள் சொற்படி செய்து, மறுமொழியாக நல்வார்த்தைகளைச் சொல்வீரானால், எந்நாளும் அவர்கள் உமக்கு ஊழியக்காரராயிருப்பார்கள் என்றார்கள்.

8முதியோர் தனக்குச் சொன்ன ஆலோசனையை அவன் தள்ளிவிட்டு, தன்னோடே வளர்ந்து தன் சமுகத்தில் நிற்கிற வாலிபரோடே ஆலோசனைபண்ணி,

9அவர்களை நோக்கி: உம்முடைய தகப்பன் எங்கள்மேல் வைத்த நுகத்தை இலகுவாக்கும் என்று என்னிடத்தில் சொன்ன இந்த ஜனங்களுக்கு மறுமொழி கொடுக்க, நீங்கள் என்ன யோசனை சொல்லுகிறீர்கள் என்று கேட்டான்.

10அப்பொழுது அவனோடே வளர்ந்த வாலிபர் அவனை நோக்கி: உம்முடைய தகப்பன் எங்கள் நுகத்தைப் பாரமாக்கினார், நீர் அதை எங்களுக்கு இலகுவாக்கும் என்று உம்மிடத்தில் சொன்ன இந்த ஜனத்திற்கு நீர் சொல்லவேண்டியது என்னவென்றால்: என் சுண்டுவிரல் என் தகப்பனாருடைய இடுப்பைப்பார்க்கிலும் பருமனாயிருக்கும்.

11இப்போதும் என் தகப்பன் பாரமான நுகத்தை உங்கள்மேல் வைத்தார், நான் உங்கள் நுகத்தை அதிக பாரமாக்குவேன்; என் தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று நீர் அவர்களோடே சொல்லவேண்டும் என்றார்கள்.

12மூன்றாம் நாள் என்னிடத்தில் வாருங்கள் என்று ராஜா சொல்லியிருந்தபடியே, யெரொபெயாமும் சகல ஜனங்களும் மூன்றாம் நாளிலே ரெகொபெயாமிடத்தில் வந்தார்கள்.

13ராஜா முதியோர் தனக்குச் சொன்ன ஆலோசனையைத் தள்ளிவிட்டு, வாலிபருடைய ஆலோசனையின்படியே அவர்களோடே பேசி:

14என் தகப்பன உங்கள் நுகத்தைப் பாரமாக்கினார், நான் உங்கள் நுகத்தை அதிக பாரமாக்குவேன்; என் தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று ஜனங்களுக்குக் கடினமான உத்தரவு கொடுத்தான்.

15ராஜா ஜனங்களுக்குச் செவிகொடாமற்போனான்; கர்த்தர் சீலோனியனான அகியாவைக்கொண்டு நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமுக்குச் சொன்ன தம்முடைய வார்த்தையை உறுதிப்படுத்தும்படி கர்த்தரால் இப்படி நடந்தது.

16ராஜா தங்களுக்குச் செவிகொடாததை இஸ்ரவேலர் எல்லாரும் கண்டபோது, ஜனங்கள் ராஜாவுக்கு மறுஉத்தரவாக: தாவீதோடே எங்களுக்குப் பங்கேது? ஈசாயின் குமாரனிடத்தில் எங்களுக்குச் சுதந்தரம் இல்லை; இஸ்ரவேலே, உன் கூடாரங்களுக்குப் போய்விடு; இப்போது தாவீதே, உன் சொந்த வீட்டைப் பார்த்துக்கொள் என்று சொல்லி, இஸ்ரவேலர் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள்.

17ஆனாலும் யூதாவின் பட்டணங்களிலே குடியிருந்த இஸ்ரவேல் புத்திரர்மேல் ரெகொபெயாம் ராஜாவாயிருந்தான்.

18பின்பு ராஜாவாகிய ரெகொபெயாம் பகுதி விசாரிப்புக்காரனாகிய அதோராமை அனுப்பினான்; இஸ்ரவேலர் எல்லாரும் அவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்; அப்பொழுது ராஜாவாகிய ரெகொபெயாம் தீவிரமாய் இரதத்தின்மேல் ஏறி, எருசலேமுக்கு ஓடிப்போனான்.

19அப்படியே இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி இஸ்ரவேலர் தாவீதின் வம்சத்தை விட்டு கலகம்பண்ணிப் பிரிந்து போயிருக்கிறார்கள்.

20யெரொபெயாம் திரும்பிவந்தான் என்று இஸ்ரவேலருக்கெல்லாம் கேள்வியானபோது, அவனைச் சபையினிடத்தில் அழைத்தனுப்பி, அவனைச் சமஸ்த இஸ்ரவேலின்மேலும் ராஜாவாக்கினார்கள்; யூதா கோத்திரம் மாத்திரமேயன்றி வேறொருவரும் தாவீதின் வம்சத்தைப் பின்பற்றவில்லை.

21ரெகொபெயாம் எருசலேமுக்கு வந்தபோது, இஸ்ரவேல் வம்சத்தாரோடே யுத்தம்பண்ணவும், ராஜ்யத்தைச் சாலொமோனின் குமாரனாகிய தன்னிடமாகத் திருப்பிக்கொள்ளவும், யூதா வம்சத்தார் பென்யமீன் கோத்திரத்தார் அனைவருமாகிய தெரிந்துகொள்ளப்பட்ட யுத்தவீரர் லட்சத்து எண்பதினாயிரம் பேரைக் கூட்டினான்.

22தேவனுடைய மனுஷனாகிய சேமாயாவுக்கு தேவனுடைய வார்த்தையுண்டாகி, அவர் சொன்னது:

23நீ யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாம் என்னும் சாலொமோனின் குமாரனையும் யூதா வம்சத்தார் அனைவரையும், பென்யமீனரையும், மற்ற ஜனங்களையும் நோக்கி:

24நீங்கள் போகாமலும், இஸ்ரவேல் புத்திரரான உங்கள் சகோதரரோடு யுத்தம்பண்ணாமலும், அவரவர் தம்தம் வீட்டிற்குத் திரும்புங்கள்; என்னாலே இந்தக் காரியம் நடந்தது என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்; அப்பொழுது அவர்கள்: கர்த்தருடைய சொல்லைக் கேட்டு, கர்த்தருடைய வார்த்தையின்படியே திரும்பிப் போய்விட்டார்கள்.

25யெரொபெயாம் எப்பிராயீம் மலைத்தேசத்தில் சீகேமைக் கட்டி, அதிலே வாசம்பண்ணி, அங்கிருந்து போய்ப் பெனூவேலைக் கட்டினான்.

26யெரொபெயாம்: இப்போது ராஜ்யபாரம் தாவீது வம்ச வசமாய்த் திரும்புகிறதாயிருக்கும்.

27இந்த ஜனங்கள் எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்திலே பலிகளைச் செலுத்தப்போனால், இந்த ஜனங்களின் இருதயம் யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாம் என்னும் தங்கள் ஆண்டவன் வசமாய்த் திரும்பி, அவர்கள் என்னைக் கொன்றுபோட்டு, யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாமின் பாரிசமாய்ப் போய் விடுவார்கள் என்று தன் மனதிலே சிந்தித்துக்கொண்டிருந்தான்.

28ஆகையால் ராஜாவானவன் யோசனைபண்ணி, பொன்னினால் இரண்டு கன்றுக்குட்டிகளை உண்டாக்கி, ஜனங்களைப் பார்த்து: நீங்கள் எருசலேமுக்குப் போகிறது உங்களுக்கு வருத்தம்; இஸ்ரவேலரே, இதோ, இவைகள் உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின உங்கள் தேவர்கள் என்று சொல்லி,

29ஒன்றைப் பெத்தேலிலும், ஒன்றைத் தாணிலும் ஸ்தாபித்தான்.

30இந்தக் காரியம் பாவமாயிற்று; ஜனங்கள் இந்த ஒரு கன்றுக்குட்டிக்காகத் தாண்மட்டும் போவார்கள்.

31அவன் மேடையாகிய ஒரு கோவிலையும் கட்டி, லேவியின் புத்திரராயிராத ஜனத்தின் ஈனமானவர்களை ஆசாரியராக்கினான்.

32யூதாவில் ஆசரிக்கப்படும் பண்டிகைக்கொப்பாக எட்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே யெரொபெயாம் ஒரு பண்டிகையையும் கொண்டாடி, பலிபீடத்தின்மேல் பலியிட்டான்; அப்படியே பெத்தேலிலே தான் உண்டாக்கின கன்றுக்குட்டிகளுக்குப் பலியிட்டு, தான் உண்டுபண்ணின மேடைகளின் ஆசாரியர்களைப் பெத்தேலிலே ஸ்தாபித்து,

33தன் மனதிலே தானே நியமித்துக் கொண்ட எட்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே பெத்தேலில் தான் உண்டாக்கின பலிபீடத்தின்மேல் பலியிட்டு, இஸ்ரவேல் புத்திரருக்குப் பண்டிகையை ஏற்படுத்தி, பலிபீடத்தின்மேல் பலியிட்டுத் தூபங்காட்டினான்.

பிலிப்பியர் 3

முழு அதிகாரம் ›

1மேலும், என் சகோதரரே, கர்த்தருக்குள் சந்தோஷப்படுங்கள். எழுதினவைகளையே எழுதுவது எனக்கு வருத்தமல்ல, அது உங்களுக்கு நலமாயிருக்கும்.

2நாய்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள், பொல்லாத வேலையாட்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள். சுன்னத்துக்காரருக்கு எச்சரிக்கையாயிருங்கள்.

3ஏனெனில் மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிராமல், ஆவியினாலே தேவனுக்கு ஆராதனைசெய்து, கிறிஸ்து இயேசுவுக்குள் மேன்மைபாராட்டுகிற நாமே விருத்தசேதனமுள்ளவர்கள்.

4மாம்சத்தின்மேல் நம்பிக்கை வைக்கவேண்டுமானால் நானும் வைக்கலாம்; வேறொருவன் மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிருக்க நினைத்தால் நான் அதிகமாய் அப்படிச் செய்யலாம்.

5நான் எட்டாம் நாளில் விருத்தசேதனமடைந்தவன், இஸ்ரவேல் வம்சத்தான், பென்யமீன் கோத்திரத்தான், எபிரெயரில் பிறந்த எபிரெயன், நியாயப்பிரமாணத்தின்படி பரிசேயன்;

6பக்திவைராக்கியத்தின்படி சபையைத் துன்பப்படுத்தினவன், நியாயப்பிரமாணத்திற்குரிய நீதியின்படி குற்றஞ்சாட்டப்படாதவன்.

7ஆகிலும், எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன்.

8அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின்மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்.

9நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதியை உடையவனாயிராமல், கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும் விசுவாசமூலமாய் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாயிருந்து, கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும்படிக்கும்,

10இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும்,

11அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்.

12நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன்.

13சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி,

14கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.

15ஆகையால், நம்மில் தேறினவர்கள் யாவரும் இந்தச் சிந்தையாயிருக்கக்கடவோம்; எந்தக் காரியத்திலாவது நீங்கள் வேறே சிந்தையாயிருந்தால், அதையும் தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துவார்.

16ஆகிலும் நாம் எதுவரையில் தேறியிருக்கிறோமோ, அதுமுதல் ஒரே ஒழுங்காய் நடந்துகொண்டு, ஒரே சிந்தையாயிருப்போமாக.

17சகோதரரே, நீங்கள் என்னோடேகூடப் பின்பற்றுகிறவர்களாகி, நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுகிறபடி நடக்கிறவர்களை மாதிரியாக நோக்குங்கள்.

18ஏனெனில், அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள்; அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன், இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன்.

19அவர்களுடைய முடிவு அழிவு, அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள்.

20நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

21அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்.

தனிவாசிப்பு

எசேக்கியேல் 42

முழு அதிகாரம் ›

1பின்பு அவர் என்னை வடதிசையின் வழியாக வெளிப்பிராகாரத்திலே புறப்படப்பண்ணி, பிரத்தியேகமான இடத்துக்கு எதிராகவும், மாளிகைக்கு எதிராகவும் வடக்கே இருந்த அறைவீடுகளுக்கு என்னை அழைத்துக்கொண்டுபோனார்.

2நூறு முழ நீளத்துக்கு முன்னே வடக்கு வாசல் இருந்தது; அவ்விடத்து அகலம் ஐம்பது முழம்.

3உட்பிராகாரத்தில் இருந்த இருபது முழத்துக்கு எதிராகவும் வெளிப்பிராகாரத்தில் இருந்த தளவரிசைக்கு எதிராகவும் ஒன்றுக்கொன்று எதிரான மூன்று நிலைகளுள்ள நடைகாவணங்கள் இருந்தது.

4உட்புறத்திலே அறைவீடுகளின் முன்பாகப் பத்து முழ அகலமான வழியும், ஒரு முழ அகலமான பாதையும் இருந்தது; அவைகளின் வாசல்கள் வடக்கே இருந்தது.

5உயர இருந்த அறைவீடுகள் அகலக்கட்டையாயிருந்தது; நடைகாவணங்கள் கீழேயிருக்கிற அறைவீடுகளுக்கும் நடுவேயிருக்கிறவைகளுக்கும் அதிக உயரமான மாளிகையாயிருந்தது.

6அவைகள் மூன்று அடுக்குகளாயிருந்தது; பிராகாரங்களின் தூண்களுக்கு இருந்ததுபோல, அவைகளுக்குத் தூண்களில்லை; ஆகையால் தரையிலிருந்து அளக்க, அவைகள் கீழேயும் நடுவேயும் இருக்கிறவைகளைப்பார்க்கிலும் அகலக்கட்டையாயிருந்தது.

7புறம்பே அறைவீடுகளுக்கு எதிரே வெளிப்பிராகாரத் திசையில் அறைவீடுகளுக்கு முன்பாக இருந்த மதிலின் நீளம் ஐம்பது முழம்.

8வெளிப்பிராகாரத்திலுள்ள அறைவீடுகளின் நீளம் ஐம்பது முழம், தேவாலயத்துக்கு முன்னே நூறு முழமாயிருந்தது.

9கிழக்கே வெளிப்பிராகாரத்திலிருந்து அந்த அறைவீடுகளுக்குள் பிரவேசிக்கிற நடை அவைகளின் கீழே இருந்தது.

10கீழ்த்திசையான பிராகாரத்துமதிலின் அகலத்திலே பிரத்தியேகமான இடத்துக்கு முன்பாகவும் மாளிகைக்கு முன்பாகவும் அறைவீடுகளும் இருந்தது.

11அவைகளுக்கு முன்னான வழியிலே அந்த அறைவீடுகள் நீளத்திலும் அகலத்திலும், எல்லா வாசற்படிகளிலும், திட்டங்களிலும், வாசல் நடைகளிலும் வடதிசையான அறைவீடுகளின் சாயலாயிருந்தது.

12தென்திசையான அறைவீடுகளின் வாசல் நடைக்கு ஒப்பாக ஒரு வாசல் நடைவழியின் முகப்பில் இருந்தது; கீழ்த்திசையில் அவைகளுக்குப் பிரவேசிக்கும் இடத்திலே செம்மையான மதிலின் எதிரே இருந்த வழியின் முகப்பில் ஒரு வாசலிருந்தது.

13அவர் என்னை நோக்கி: பிரத்தியேகமான இடத்துக்கு முன்னிருக்கிற வடபுறமான அறைவீடுகளும், தென்புறமான அறைவீடுகளும், பரிசுத்த அறைவீடுகளாயிருக்கிறது; கர்த்தரிடத்தில் சேருகிற ஆசாரியர் அங்கே மகா பரிசுத்தமானதையும் போஜனபலியையும், பாவநிவாரண பலியையும், குற்றநிவாரண பலியையும் வைப்பார்கள்; அந்த ஸ்தலம் பரிசுத்தமாயிருக்கிறது.

14ஆசாரியர் உட்பிரவேசிக்கும்போது, அவர்கள் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து வெளிப்பிராகாரத்துக்கு வராததற்கு முன்னே, அங்கே தாங்கள் ஆராதனை செய்து, உடுத்தியிருந்த வஸ்திரங்களைக் கழற்றிவைப்பார்கள்; அவ்வஸ்திரங்கள் பரிசுத்தமானவைகள்; வேறே வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, ஜனத்தின் பிராகாரத்திலேபோவார்கள் என்றார்.

15அவர் உள்வீட்டை அளந்து தீர்ந்தபின்பு, கீழ்த்திசைக்கு எதிரான வாசல்வழியாய் என்னை வெளியே அழைத்துக்கொண்டுபோய், அதைச் சுற்றிலும் அளந்தார்.

16கீழ்த்திசைப்பக்கத்தை அளவுகோலால் அளந்தார்; அது அளவுகோலின்படியே சுற்றிலும் ஐந்நூறு கோலாயிருந்தது.

17வடதிசைப்பக்கத்தை அளவுகோலால் சுற்றிலும் ஐந்நூறு கோலாய் அளந்தார்.

18தென்திசைப்பக்கத்தை அளவு கோலால் ஐந்நூறு கோலாய் அளந்தார்.

19மேற்றிசைப்பக்கத்துக்குத் திரும்பி அதை அளவுகோலால் ஐந்நூறு கோலாய் அளந்தார்.

20நாலு பக்கங்களிலும் அதை அளந்தார்; பரிசுத்தமானதற்கும் பரிசுத்தமில்லாததற்கும் வித்தியாசம் பண்ணும்படிக்கு அதற்கு ஐந்நூறு கோல் நீளமும் ஐந்நூறு கோல் அகலமுமான மதில் சுற்றிலும் இருந்தது.

1நீதியைச் சரிக்கட்டுகிற தேவனாகிய கர்த்தாவே, நீதியைச் சரிக்கட்டுகிற தேவனே, பிரகாசியும்.

2பூமியின் நியாயாதிபதியே, நீர் எழுந்து, பெருமைக்காரருக்குப் பதிலளியும்.

3கர்த்தாவே, துன்மார்க்கர் எதுவரைக்கும் மகிழ்ந்து, துன்மார்க்கர் எதுவரைக்கும் களிகூர்ந்திருப்பார்கள்?

4எதுவரைக்கும் அக்கிரமக்காரர் யாவரும் வாயாடி, கடினமாய்ப் பேசி, பெருமைபாராட்டுவார்கள்?

5கர்த்தாவே, அவர்கள் உமது ஜனத்தை நொறுக்கி, உமது சுதந்தரத்தை ஒடுக்குகிறார்கள்.

6விதவையையும் பரதேசியையும் கொன்று, திக்கற்ற பிள்ளைகளைக் கொலைசெய்து:

7கர்த்தர் பாரார், யாக்கோபின் தேவன் கவனியார் என்று சொல்லுகிறார்கள்.

8ஜனத்தில் மிருககுணமுள்ளவர்களே, உணர்வடையுங்கள்; மூடரே, எப்பொழுது புத்திமான்களாவீர்கள்?

9காதை உண்டாக்கினவர் கேளாரோ? கண்ணை உருவாக்கினவர் காணாரோ?

10ஜாதிகளை தண்டிக்கிறவர் கடிந்துகொள்ளாரோ? மனுஷனுக்கு அறிவைப் போதிக்கிறவர் அறியாரோ?

11மனுஷனுடைய யோசனைகள் வீணென்று கர்த்தர் அறிந்திருக்கிறார்.

12கர்த்தாவே, துன்மார்க்கனுக்குக் குழிவெட்டப்படும்வரைக்கும், நீர் தீங்கு நாட்களில் அமர்ந்திருக்கப்பண்ணி,

13சிட்சித்து, உம்முடைய வேதத்தைக்கொண்டு போதிக்கிற மனுஷன் பாக்கியவான்.

14கர்த்தர் தம்முடைய ஜனத்தை நெகிழவிடாமலும், தம்முடைய சுதந்தரத்தைக் கைவிடாமலும் இருப்பார்.

15நியாயம் நீதியினிடமாகத் திரும்பும்; செம்மையான இருதயத்தார் யாவரும் அதைப் பின்பற்றுவார்கள்.

16துன்மார்க்கருக்கு விரோதமாய் என் பட்சத்தில் எழும்புகிறவன் யார்? அக்கிரமக்காரருக்கு விரோதமாய் என் பட்சத்தில் நிற்பவன் யார்?

17கர்த்தர் எனக்குத் துணையாயிராவிட்டால், என் ஆத்துமா சீக்கிரமாய் மவுனத்தில் வாசம் பண்ணியிருக்கும்.

18என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது.

19என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது.

20தீமையைக் கட்டளையினால் பிறப்பிக்கிற கொடுங்கோலாசனம் உமக்கு இசைந்திருக்குமோ?

21அவர்கள் நீதிமானுடைய ஆத்துமாவுக்கு விரோதமாய்க் கூட்டங்கூடி, குற்றமில்லாத இரத்தத்தைக் குற்றப்படுத்துகிறார்கள்.

22கர்த்தரோ எனக்கு அடைக்கலமும், என் தேவன் நான் நம்பியிருக்கிற கன்மலையுமாயிருக்கிறார்.

23அவர்களுடைய அக்கிரமத்தை அவர்கள்மேல் திருப்பி, அவர்களுடைய பொல்லாப்பினிமித்தம் அவர்களைச் சங்கரிப்பார்; நம்முடைய தேவனாகிய கர்த்தரே அவர்களைச் சங்கரிப்பார்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com