‹ முகப்புமுழுத் திட்டம்

அக்டோபர் 17 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்அக்டோபர் 17அடுத்த நாள் ›
குடும்பம்

I இராஜாக்கள் 20

முழு அதிகாரம் ›

1சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் தன் சேனையையெல்லாம் கூட்டிக்கொண்டுபோய், சமாரியாவை முற்றிக்கைபோட்டு அதின்மேல் யுத்தம்பண்ணினான்; அவனோடேகூட முப்பதிரண்டு ராஜாக்கள் இருந்ததுமல்லாமல், குதிரைகளும் இரதங்களும் இருந்தது.

2அவன் நகரத்திற்குள் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபிடத்தில் ஸ்தானாபதிகளை அனுப்பி:

3உன்னுடைய வெள்ளியும் உன்னுடைய பொன்னும் என்னுடையது; உன்னுடைய ஸ்திரீகளும் உன்னுடைய குமாரருக்குள் சமர்த்தராயிருக்கிறவர்களும் என்னுடையவர்கள் என்று பெனாதாத் சொல்லுகிறான் என்று அவனுக்குச் சொல்லச்சொன்னான்.

4இஸ்ரவேலின் ராஜா அதற்குப் பிரதியுத்தரமாக: ராஜாவாகிய என் ஆண்டவனே, உம்முடைய வார்த்தையின்படியே, நானும் எனக்கு உண்டான யாவும் உம்முடையவைகள்தான் என்று சொல்லியனுப்பினான்.

5அந்த ஸ்தானாபதிகள் திரும்பவும் வந்து: பெனாதாத் சொல்லுகிறது என்னவென்றால், உன் வெள்ளியையும், உன் பொன்னையும், உன் ஸ்திரீகளையும், உன் குமாரர்களையும் நீ எனக்குக் கொடுக்கவேண்டும் என்று உமக்குச் சொல்லியனுப்பினேனே.

6ஆனாலும் நாளை இந்நேரத்தில் என் ஊழியக்காரரை உன்னிடத்தில் அனுப்புவேன்; அவர்கள் உன் வீட்டையும் உன் ஊழியக்காரரின் வீடுகளையும் சோதித்து, உன் கண்ணுக்குப் பிரியமானவைகள் எல்லாவற்றையும் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு போவார்கள் என்றார் என்று சொன்னார்கள்.

7அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா, தேசத்தின் மூப்பரையெல்லாம் அழைப்பித்து: இவன் பொல்லாப்புத் தேடுகிற விதத்தைக் கவனித்துப் பாருங்கள்; என் ஸ்திரீகளையும், என் குமாரர்களையும், என் வெள்ளியையும், என் பொன்னையும் கேட்க, இவன் என்னிடத்தில் ஆள் அனுப்பினபோது, நான் கொடுக்கமாட்டேன் என்று இவனுக்கு மறுக்கவில்லையே என்றான்.

8அப்பொழுது சகல மூப்பரும் சகல ஜனங்களும் அவனைப் பார்த்து: நீர் அவனுக்குச் செவிகொடுக்கவும், அவனுக்குச் சம்மதிக்கவும் வேண்டாம் என்றார்கள்.

9அதினால் அவன் பெனாதாத்தின் ஸ்தானாபதிகளை நோக்கி: நீங்கள் ராஜாவாகிய என் ஆண்டவனுக்குச் சொல்ல வேண்டியது என்னவென்றால், நீர் முதல் விசை உமது அடியானுக்குச் சொல்லியனுப்பின யாவும் செய்வேன்; இந்தக் காரியத்தையோ நான் செய்யக்கூடாது என்று சொல்லுங்கள் என்றான்; ஸ்தானாபதிகள் போய், இந்த மறுமொழியை அவனுக்குச் சொன்னார்கள்.

10அப்பொழுது பெனாதாத் அவனிடத்தில் ஆள் அனுப்பி: எனக்குப் பின் செல்லுகிற ஜனங்கள் எல்லாரும் கைக்கு ஒரு பிடியாவது வாரிக்கொள்ள சமாரியாவின் தூள் போதுமானதாயிருந்தால், தேவர்கள் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்கள் என்று சொல்லச்சொன்னான்.

11அதற்கு இஸ்ரவேலின் ராஜா பிரதியுத்தரமாக; ஆயுதம் தரித்திருக்கிறவன், ஆயுதம் உரிந்து போடுகிறவனைப்போலப் பெருமைபாராட்டலாகாது என்று அவனுக்குச் சொல்லுங்கள் என்றான்.

12பெனாதாத்தும், மற்ற ராஜாக்களும் கூடாரங்களிலே குடித்துக்கொண்டிருக்கையில், இந்த வார்த்தையைக் கேட்டு, தன் ஊழியக்காரரை நோக்கி: ஆயத்தம்பண்ணுங்கள் என்றான்; அப்படியே நகரத்தின்மேல் சண்டைசெய்ய ஆயத்தம்பண்ணினார்கள்.

13அப்பொழுது ஒரு தீர்க்கதரிசி இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபிடத்தில் வந்து: அந்த ஏராளமான ஜனக்கூட்டத்தையெல்லாம் கண்டாயா? இதோ, நானே கர்த்தர் என்று நீ அறியும்படி இன்றைக்கு அதை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

14யாரைக்கொண்டு என்று ஆகாப் கேட்டான்; அதற்கு அவன்: மாகாணங்களுடைய அதிபதிகளின் சேவகரைக்கொண்டு என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்; பின்பு அவன், யுத்தத்தை யார் துவக்கவேண்டும் என்று கேட்டதற்கு; அவன், நீர்தான் என்றான்.

15அவன் மாகாணங்களுடைய அதிபதிகளின் சேவகரை இலக்கம் பார்த்தான், அவர்கள் இருநூற்று முப்பதிரண்டுபேர்; அவர்களுப்பின்பு, இஸ்ரவேல் புத்திரராகிய சகல ஜனத்தின் இலக்கமும் பார்த்து ஏழாயிரம்பேர் என்று கண்டான்.

16அவர்கள் மத்தியான வேளையிலே வெளியே புறப்பட்டார்கள்; பெனாதாத்தும், அவனுக்கு உதவியாக வந்த முப்பத்திரண்டு ராஜாக்களாகிய மற்ற ராஜாக்களும், கூடாரங்களில் குடித்து வெறி கொண்டிருந்தார்கள்.

17மாகாணங்களுடைய அதிபதிகளின் சேவகர் முன்தண்டாகப் புறப்படுகிறபோது, பெனாதாத் அனுப்பின மனுஷர்: சமாரியாவிலிருந்து மனுஷர் புறப்பட்டு வருகிறார்கள் என்று அவனுக்கு அறிவித்தார்கள்.

18அப்பொழுது அவன்: அவர்கள் சமாதானத்திற்காகப் புறப்பட்டு வந்தாலும் அவர்களை உயிரோடே பிடியுங்கள்; அவர்கள் யுத்தத்திற்காகப் புறப்பட்டு வந்தாலும் அவர்களை உயிரோடே பிடியுங்கள் என்றான்.

19மாகாணங்களுடைய அதிபதிகளின் சேவகரான அவர்களும், அவர்கள் பின்னே வருகிற இராணுவமும், நகரத்திலிருந்து வெளியே வந்தபோது,

20அவர்கள் அவரவர் தங்களுக்கு எதிர்ப்படுகிறவர்களை வெட்டினார்கள்; சீரியர் முறிந்தோடி போனார்கள்; இஸ்ரவேலர் அவர்களைத் துரத்தினார்கள்; சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத், குதிரையின் மேல் ஏறிச் சில குதிரை வீரரோடுங்கூடத் தப்பியோடிப்போனான்.

21இஸ்ரவேலின் ராஜா புறப்பட்டு, குதிரைகளையும், இரதங்களையும் முறிய அடித்து, சீரியரில் மகா சங்காரம் உண்டாக வெட்டினான்.

22பின்பு அந்தத் தீர்க்கதரிசி இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் போய் உம்மைப் பலப்படுத்திக்கொண்டு, நீர் செய்யத்தக்கது இன்னதென்று கவனித்துப்பாரும்; மறுவருஷத்திலே சீரியாவின் ராஜா உமக்கு விரோதமாக வருவான் என்றான்.

23சீரியாவின் ராஜாவுடைய ஊழியக்காரர் அவனைப் பார்த்து: அவர்களுடைய தேவர்கள் மலைத்தேவர்கள், அதினால் அவர்கள் நம்மை மேற்கொண்டார்கள்; நாம் அவர்களோடே சமபூமியிலே யுத்தம்பண்ணினால் நல்லது; அப்பொழுது அவர்களை மேற்கொள்வது நிச்சயம்.

24அதற்காக நீர் செய்யவேண்டியது என்னவென்றால், இந்த ராஜாக்கள் ஒவ்வொருவரையும் தங்கள் ஸ்தலத்திலிருந்து மாற்றி, அவர்களுக்குப் பதிலாகச் சேனாபதிகளை ஏற்படுத்தி;

25நீர் மடியக்கொடுத்த சேனைக்குச் சரியாய்ச் சேனையையும், அந்தக் குதிரைகளுக்குச் சரியாய்க் குதிரைகளையும், இரதங்களுக்குச் சரியாய் இரதங்களையும் இலக்கம் பார்த்துக்கொள்ளும்; பிற்பாடு சமபூமியிலே நாம் அவர்களோடு யுத்தம்பண்ணி, நிச்சயமாய் அவர்களை மேற்கொள்வோம் என்றார்கள்; அவன் அவர்கள் சொற்கேட்டு அப்படியே செய்தான்.

26மறுவருஷத்திலே பெனாதாத் சீரியரை இலக்கம்பார்த்து, இஸ்ரவேலோடு யுத்தம்பண்ண ஆப்பெக்குக்கு வந்தான்.

27இஸ்ரவேல் புத்திரரும் இலக்கம் பார்க்கப்பட்டு, தேவையானதைச் சம்பாதித்துக்கொண்டு, அவர்களை எதிர்க்கப்புறப்பட்டு, அவர்களுக்கு எதிரே இரண்டு சிறிய வெள்ளாட்டுக் கிடைகளைப்போலப் பாளயமிறங்கினார்கள்; தேசம் சீரியரால் நிறைந்திருந்தது.

28அப்பொழுது தேவனுடைய மனுஷன் ஒருவன் வந்து, இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: கர்த்தர் பள்ளத்தாக்குகளின் தேவனாயிராமல், மலைகளின் தேவனாயிருக்கிறார் என்று சீரியர் சொல்லியிருக்கிறபடியினால், நான் இந்த ஏராளமான ஜனக்கூட்டத்தையெல்லாம் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்; அதினால் நானே கர்த்தர் என்று நீங்கள் அறிவீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

29ஏழுநாளளவும் அவர்கள் முகமுகமாய்ப் பாளயமிறங்கியிருந்தார்கள்; ஏழாம் நாளில் யுத்தம் கலந்து, இஸ்ரவேல் புத்திரர் ஒரே நாளிலே சீரியரில் இலட்சம் காலாட்களை மடங்கடித்தார்கள்.

30மீதியானவர்கள் ஆப்பெக் பட்டணத்திற்குள் ஓடிப்போனார்கள்; அங்கே மீதியாயிருந்த இருபத்தேழாயிரம்பேரின்மேல் அலங்கம் இடிந்து விழுந்தது; பெனாதாத்தும் ஓடிப்போய் நகரத்திற்குள் புகுந்து, உள்ளறையிலே பதுங்கினான்.

31அப்பொழுது அவன் ஊழியக்காரர் அவனை நோக்கி: இதோ, இஸ்ரவேல் வம்சத்து ராஜாக்கள் தயவுள்ள ராஜாக்கள் என்று கேட்டிருக்கிறோம்; நாங்கள் இரட்டுகளை எங்கள் அரைகளில் கட்டி, கயிறுகளை எங்கள் தலைகளில் சுற்றிக்கொண்டு, இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் போவோம்; ஒருவேளை உம்மை உயிரோடே வைப்பார் என்று சொல்லி,

32இரட்டைத் தங்கள் அரைகளில் கட்டி, கயிறுகளைத் தங்கள் தலைகளில் சுற்றிக்கொண்டு, இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் வந்து: என்னை உயிரோடே வையும் என்று உமது அடியானாகிய பெனாதாத் விண்ணப்பம்பண்ணுகிறான் என்றார்கள். அதற்கு அவன், இன்னும் அவன் உயிரோடே இருக்கிறானா, அவன் என் சகோதரன் என்றான்.

33அந்த மனுஷர் நன்றாய்க் கவனித்து, அவன் வாயின் சொல்லை உடனே பிடித்து: உமது சகோதரனாகிய பெனாதாத் இருக்கிறான் என்றார்கள்; அப்பொழுது அவன்: நீங்கள் போய், அவனை அழைத்துக்கொண்டு வாருங்கள் என்றான்; பெனாதாத் அவனிடத்தில் வந்தபோது, அவனைத் தன் இரதத்தில் ஏற்றிக்கொண்டான்.

34அப்பொழுது பெனாதாத் இவனைப்பார்த்து: என் தகப்பன் உம்முடைய தகப்பனார் கையிலே பிடித்த பட்டணங்களைத் திரும்பக் கொடுத்துவிடுகிறேன்; என் தகப்பன் சமாரியாவிலே செய்ததுபோல, நீரும் தமஸ்குவிலே வீதிகளை உண்டாக்கிக்கொள்ளலாம் என்றான். அதற்கு அவன், இந்த உடன்படிக்கை செய்து நான் உம்மை அனுப்பிவிடுகிறேன் என்று சொல்லி, அவனோடு உடன்படிக்கைபண்ணி அவனை அனுப்பிவிட்டான்.

35அப்பொழுது தீர்க்கதரிசிகளின் புத்திரரில் ஒருவன் கர்த்தருடைய வார்த்தையின்படி தன் தோழனை நோக்கி: நீ என்னை அடி என்றான்; அந்த மனுஷன் அவனைப்பார்த்து அடிக்கமாட்டேன் என்றான்.

36அப்பொழுது அவன் இவனைப் பார்த்து: நீ கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமற் போனபடியால், இதோ, நீ என்னைவிட்டுப் புறப்பட்டுப் போனவுடனே ஒரு சிங்கம் உன்னைக் கொல்லும் என்றான்; அப்படியே இவன் அவனைவிட்டுப் புறப்பட்டவுடனே, ஒரு சிங்கம் இவனைக் கண்டு கொன்றுபோட்டது.

37அதின்பின் அவன் வேறொருவனைக் கண்டு: என்னை அடி என்றான்; அந்த மனுஷன், அவனைக் காயமுண்டாக அடித்தான்.

38அப்பொழுது அந்தத் தீர்க்கதரிசி போய், தன் முகத்தின்மேல் சாம்பலைப் போட்டு, வேஷமாறினவனாய் வழியிலே ராஜாவுக்காகக் காத்திருந்தான்.

39ராஜா அவ்வழியாய் வருகிறபோது, இவன் ராஜாவைப் பார்த்துக் கூப்பிட்டு: உமது அடியான் யுத்தத்தில் நின்றபோது, ஒருவன் விலகி, என்னிடத்தில் ஒருவனைக் கொண்டுவந்து, இந்த மனுஷனைப் பத்திரம்பண்ணு; இவன் தப்பிப்போனால் உன் பிராணன் அவன் பிராணனுக்கு ஈடாயிருக்கும், அல்லது ஒரு தாலந்து வெள்ளியை நீ கொடுக்கவேண்டும் என்றான்.

40ஆனாலும் உமது அடியான் இங்கும் அங்கும் அலுவலாயிருக்கும்போது, அவன் போய்விட்டான் என்றான். இஸ்ரவேலின் ராஜா அவனைப் பார்த்து: நீ சொன்ன தீர்ப்பின்படியே ஆகும் என்றான்.

41அப்பொழுது அவன் சீக்கிரமாய்த் தன் முகத்தின் மேலிருக்கும் சாம்பலைத் துடைத்துவிட்டதினால், இஸ்ரவேலின் ராஜா அவன் தீர்க்கதரிசிகளில் ஒருவன் என்று அறிந்துகொண்டான்.

42அப்பொழுது இவன் அவனை நோக்கி: சங்காரத்திற்கு நான் நியமித்த மனுஷனை உன் கையிலிருந்து தப்பிப்போகும்படி நீ விட்டபடியினால், உன் பிராணன் அவன் பிராணனுக்கு ஈடாகவும், உன் ஜனம் அவன் ஜனத்திற்கு ஈடாகவும் இருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

43அதினால் இஸ்ரவேலின் ராஜா சலிப்பும் விசனமுமாய்த் தன் வீட்டிற்குப் போகப்புறப்பட்டுச் சமாரியாவுக்கு வந்தான்.

I தெசலோனிக்கேயர் 3

முழு அதிகாரம் ›

1ஆகையால், நாங்கள் இனிப் பொறுத்திருக்கக்கூடாமல், அத்தேனே பட்டணத்தில் தனித்துவிடப்படுகிறது நன்மையென்று நினைத்து,

2இந்த உபத்திரவங்களினாலே ஒருவனும் அசைக்கப்படாதபடிக்கு உங்களைத் திடப்படுத்தவும், உங்கள் விசுவாசத்தைப்பற்றி உங்களுக்குப் புத்திசொல்லவும், நம்முடைய சகோதரனும் தேவ ஊழியக்காரனும் கிறிஸ்துவின் சுவிசேஷத்தில் எங்கள் உடன்வேலையாளுமாகிய தீமோத்தேயுவை அனுப்பினோம்.

3இப்படிப்பட்ட உபத்திரவங்களைச் சகிக்க நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே.

4நமக்கு உபத்திரவம் வருமென்று நாங்கள் உங்களிடத்திலிருந்தபோது, உங்களுக்கு முன்னறிவித்தோம்; அப்படியே வந்து நேரிட்டதென்றும் அறிந்திருக்கிறீர்கள்.

5ஆகையால், நான் இனிப் பொறுத்திருக்கக்கூடாமல், எங்கள் வேலை வீணாய்ப்போகத்தக்கதாகச் சோதனைக்காரன் உங்களைச் சோதனைக்குட்படுத்தினதுண்டோவென்று, உங்கள் விசுவாசத்தை அறியும்படிக்கு, அவனை அனுப்பினேன்.

6இப்பொழுது தீமோத்தேயு உங்களிடத்திலிருந்து எங்களிடத்தில் வந்து, உங்கள் விசுவாசத்தையும் அன்பையும்குறித்தும், நீங்கள் எப்பொழுதும் எங்களைப் பட்சமாய் நினைத்துக்கொண்டு, நாங்கள் உங்களைக் காண வாஞ்சையாயிருக்கிறதுபோல நீங்களும் எங்களைக் காண வாஞ்சையாயிருக்கிறீர்களென்பதைக் குறித்தும், எங்களுக்கு நற்செய்தி சொன்னதினாலே,

7சகோதரரே, எங்களுக்கு நேரிட்ட எல்லா இக்கட்டிலும் உபத்திரவத்திலும் உங்கள் விசுவாசத்தினாலே உங்களைக் குறித்து ஆறுதலடைந்தோம்.

8நீங்கள் கர்த்தருக்குள் நிலைத்திருந்தால் நாங்கள் பிழைத்திருப்போம்.

9மேலும், நம்முடைய தேவனுக்கு முன்பாக நாங்கள் உங்களைக்குறித்து அடைந்திருக்கிற மிகுந்த சந்தோஷத்திற்காக, நாங்கள் தேவனுக்கு எவ்விதமாய் ஸ்தோத்திரம் செலுத்துவோம்?

10உங்கள் முகத்தைக் கண்டு, உங்கள் விசுவாசத்தின் குறைவுகளை நிறைவாக்கும்பொருட்டு, இரவும் பகலும் மிகவும் வேண்டிக்கொள்ளுகிறோமே.

11நம்முடைய பிதாவாகிய தேவனும் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் உங்களிடத்திற்கு எங்களை நேராக வழிநடத்துவாராக.

12நாங்கள் உங்களிடத்தில் வைத்திருக்கிற அன்புக்கொப்பாய், நீங்களும் ஒருவரிடத்தில் ஒருவர் வைக்கும் அன்பிலும் மற்றெல்லா மனுஷரிடத்தில் வைக்கும் அன்பிலும் கர்த்தர் உங்களைப் பெருகவும் நிலைத்தோங்கவும் செய்து,

13இவ்விதமாய் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தமது பரிசுத்தவான்கள் அனைவரோடுங்கூட வரும்போது, நீங்கள் நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாகப் பிழையற்ற பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கும்படி உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துவாராக.

தனிவாசிப்பு

1நேபுகாத்நேச்சார் ராஜ்யபாரம்பண்ணும் இரண்டாம் வருஷத்திலே, நேபுகாத்நேச்சார் சொப்பனங்களைக் கண்டான்; அதினால், அவனுடைய ஆவி கலங்கி, அவனுடைய நித்திரை கலைந்தது.

2அப்பொழுது ராஜா தன் சொப்பனங்களைத் தனக்குத் தெரிவிக்கும்பொருட்டு சாஸ்திரிகளையும் ஜோசியரையும் சூனியக்காரரையும் கல்தேயரையும் அழைக்கச் சொன்னான்; அவர்கள் வந்து, ராஜசமுகத்தில் நின்றார்கள்.

3ராஜா அவர்களை நோக்கி: ஒரு சொப்பனம் கண்டேன்; அந்தச் சொப்பனத்தை அறியவேண்டுமென்று என் ஆவி கலங்கியிருக்கிறது என்றான்.

4அப்பொழுது கல்தேயர் ராஜாவை நோக்கி: ராஜாவே, நீர் என்றும் வாழ்க; சொப்பனத்தை உமது அடியாருக்குச் சொல்லும், அப்பொழுது அதின் அர்த்தத்தை விடுவிப்போம் என்று சீரிய பாஷையிலே சொன்னார்கள்.

5ராஜா கல்தேயருக்குப் பிரதியுத்தரமாக: என்னிடத்திலிருந்து பிறக்கிற தீர்மானம் என்னவென்றால், நீங்கள் சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் எனக்கு அறிவியாமற்போனால் துண்டித்துப்போடப்படுவீர்கள்; உங்கள் வீடுகள் எருக்களங்களாக்கப்படும்.

6சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் தெரிவித்தீர்களேயாகில், என்னிடத்தில் வெகுமதிகளையும் பரிசுகளையும் மிகுந்த கனத்தையும் பெறுவீர்கள்; ஆகையால் சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் எனக்குத் தெரிவியுங்கள் என்றான்.

7அவர்கள் மறுபடியும் பிரதியுத்தரமாக: ராஜா அடியாருக்குச் சொப்பனத்தைச் சொல்வாராக; அப்பொழுது அதின் அர்த்தத்தை விடுவிப்போம் என்றார்கள்.

8அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: என்னிடத்திலிருந்து தீர்மானம் பிறந்தபடியினாலே நீங்கள் காலதாமதம் பண்ணப்பார்க்கிறீர்களென்று நிச்சயமாக எனக்குத் தெரியவருகிறது.

9காலம் மாறுமென்று நீங்கள் எனக்கு முன்பாக பொய்யும் புரட்டுமான விசேஷத்தைச் சொல்லும்படி எத்தனம்பண்ணி இருக்கிறீர்கள்; நீங்கள் சொப்பனத்தை எனக்குத் தெரிவிக்காமற்போனால், உங்களெல்லாருக்கும் இந்த ஒரே தீர்ப்பு பிறந்திருக்கிறது; ஆகையால் சொப்பனத்தை எனக்குச் சொல்லுங்கள்; அப்பொழுது அதின் அர்த்தத்தையும் உங்களால் காண்பிக்கக்கூடுமென்று அறிந்துகொள்ளுவேன் என்றான்.

10கல்தேயர் ராஜசமுகத்தில் பிரதியுத்தரமாக: ராஜா கேட்கும் காரியத்தை அறிவிக்கத்தக்க மனுஷன் பூமியில் ஒருவனும் இல்லை; ஆகையால் மகத்துவமும் வல்லமையுமான எந்த ராஜாவும் இப்படிப்பட்ட காரியத்தை ஒரு சாஸ்திரியினிடத்திலாவது ஜோசியனிடத்திலாவது கல்தேயனிடத்திலாவது கேட்டதில்லை.

11ராஜா கேட்கிற காரியம் மிகவும் அருமையானது; மாம்சமாயிருக்கிறவர்களோடே வாசம்பண்ணாத தேவர்களேயொழிய ராஜசமுகத்தில் அதை அறிவிக்கத்தக்கவர் ஒருவரும் இல்லை என்றார்கள்.

12இதினிமித்தம் ராஜா மகா கோபமும் உக்கிரமுங்கொண்டு, பாபிலோனில் இருக்கிற எல்லா ஞானிகளையும் கொலைசெய்யும்படி கட்டளையிட்டான்.

13ஞானிகளைக் கொலைசெய்யவேண்டுமென்கிற கட்டளை வெளிப்பட்டபோது, தானியேலையும் அவன் தோழரையும் கொலைசெய்யத் தேடினார்கள்.

14பாபிலோனின் ஞானிகளைக் கொலைசெய்யப் புறப்பட்ட ராஜாவினுடைய தலையாரிகளுக்கு அதிபதியாகிய ஆரியோகோடே தானியேல் யோசனையும் புத்தியுமாய்ப் பேசி:

15இந்தக் கட்டளை ராஜாவினால் இத்தனை அவசரமாய்ப் பிறந்ததற்குக் காரணம் என்ன என்று ராஜாவின் சேர்வைக்காரனாகிய ஆரியோகினிடத்தில் கேட்டான்; அப்பொழுது ஆரியோகு தானியேலுக்குக் காரியத்தை அறிவித்தான்.

16தானியேல் ராஜாவினிடத்தில் போய், சொப்பனத்தின் அர்த்தத்தை ராஜாவுக்குக் காண்பிக்கும்படித் தனக்குத் தவணைகொடுக்க விண்ணப்பம்பண்ணினான்.

17பின்பு தானியேல் தன் வீட்டுக்குப்போய், தானும் தன் தோழரும் பாபிலோனின் மற்ற ஞானிகளோடேகூட அழியாதபடிக்கு இந்த மறைபொருளைக்குறித்துப் பரலோகத்தின் தேவனை நோக்கி இரக்கம் கேட்கிறதற்காக,

18அனனியா, மீஷாவேல், அசரியா என்னும் தன்னுடைய தோழருக்கு இந்தக் காரியத்தை அறிவித்தான்.

19பின்பு இராக்காலத்தில் தரிசனத்திலே தானியேலுக்கு மறைபொருள் வெளிப்படுத்தப்பட்டது; அப்பொழுது தானியேல் பரலோகத்தின் தேவனை ஸ்தோத்திரித்தான்.

20பின்பு தானியேல் சொன்னது: தேவனுடைய நாமத்துக்கு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரமுண்டாவதாக; ஞானமும் வல்லமையும் அவருக்கே உரியது.

21அவர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர்; ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்; ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர்.

22அவரே ஆழமும் மறைபொருளுமானதை வெளிப்படுத்துகிறவர்; இருளில் இருக்கிறதை அவர் அறிவார்; வெளிச்சம் அவரிடத்தில் தங்கும்.

23என் பிதாக்களின் தேவனே, நீர் எனக்கு ஞானமும் வல்லமையும் கொடுத்து, நாங்கள் உம்மிடத்தில் வேண்டிக்கொண்டதை இப்பொழுது எனக்கு அறிவித்து, ராஜாவின் காரியத்தை எங்களுக்குத் தெரிவித்தபடியினால், உம்மைத் துதித்துப் புகழுகிறேன் என்றான்.

24பின்பு தானியேல் பாபிலோனின்ஞானிகளை அழிக்க ராஜா கட்டளையிட்ட ஆரியோகினிடத்தில் போய்: பாபிலோனின்ஞானிகளை அழிக்காதேயும், என்னை ராஜாவின் முன்பாக அழைத்துக்கொண்டுபோம்; ராஜாவுக்கு அர்த்தத்தைத் தெரிவிப்பேன் என்று சொன்னான்.

25அப்பொழுது ஆரியோகு தானியேலை ராஜாவின் முன்பாகத் தீவிரமாய் அழைத்துக்கொண்டுபோய்: சிறைப்பட்டுவந்த யூதேயா தேசத்தாரில் ஒரு புருஷனைக் கண்டுபிடித்தேன்; அவன் ராஜாவுக்கு அர்த்தத்தைத் தெரிவிப்பான் என்றான்.

26ராஜா பெல்தெஷாத்சாரென்னும் நாமமுள்ள தானியேலை நோக்கி: நான் கண்ட சொப்பனங்களையும் அதின் அர்த்தத்தையும் நீ எனக்கு அறிவிக்கக்கூடுமா என்று கேட்டான்.

27தானியேல் ராஜசமுகத்தில் பிரதியுத்தரமாக: ராஜா கேட்கிற மறைபொருளை ராஜாவுக்குத் தெரிவிக்க ஞானிகளாலும், ஜோசியராலும், சாஸ்திரிகளாலும், குறிசொல்லுகிறவர்களாலும் கூடாது.

28மறைபொருள்களை வெளிப்படுத்துகிற பரலோகத்திலிருக்கிற தேவன் கடைசிநாட்களில் சம்பவிப்பதை ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருக்குத் தெரிவித்திருக்கிறார்; உம்முடைய சொப்பனமும் உமது படுக்கையின்மேல் உம்முடைய தலையில் உண்டான தரிசனங்களும் என்னவென்றால்:

29ராஜாவே, உம்முடைய படுக்கையின்மேல் நீர் படுத்திருக்கையில், இனிமேல் சம்பவிக்கப்போகிறதென்ன என்கிற நினைவுகள் உமக்குள் எழும்பிற்று; அப்பொழுது மறைபொருள்களை வெளிப்படுத்துகிறவர் சம்பவிக்கப்போகிறதை உமக்குத் தெரிவித்தார்.

30உயிரோடிருக்கிற எல்லாரைப்பார்க்கிலும் எனக்கு அதிக ஞானம் உண்டென்பதினாலே அல்ல; அர்த்தம் ராஜாவுக்குத் தெரியவரவும், உம்முடைய இருதயத்தின் நினைவுகளை நீர் அறியவும், இந்த மறைபொருள் எனக்கு வெளியாக்கப்பட்டது.

31ராஜாவே, நீர் ஒரு பெரிய சிலையைக் கண்டீர்; அந்தப் பெரிய சிலை மிகுந்த பிரகாசமுள்ளதாயிருந்தது; அது உமக்கு எதிரே நின்றது; அதின் ரூபம் பயங்கரமாயிருந்தது.

32அந்தச் சிலையின் தலை பசும்பொன்னும், அதின் மார்பும் அதின் புயங்களும் வெள்ளியும், அதின் வயிறும் அதின் தொடையும் வெண்கலமும்,

33அதின் கால்கள் இரும்பும், அதின் பாதங்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாயிருந்தது.

34நீர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, கைகளால் பெயர்க்கப்படாத ஒரு கல் பெயர்ந்து உருண்டுவந்தது; அது அந்தச் சிலையை இரும்பும் களிமண்ணுமாகிய அதின் பாதங்களில் மோதி, அவைகளை நொறுக்கிப்போட்டது.

35அப்பொழுது அந்த இரும்பும் களிமண்ணும் வெண்கலமும் வெள்ளியும் பொன்னும் ஏகமாய் நொறுங்குண்டு, கோடைகாலத்தில் போரடிக்கிற களத்திலிருந்து பறந்துபோகிற பதரைப்போலாயிற்று; அவைகளுக்கு ஒரு இடமும் கிடையாதபடி காற்று அவைகளை அடித்துக்கொண்டுபோயிற்று; சிலையை மோதின கல்லோவென்றால், ஒரு பெரிய பர்வதமாகி பூமியையெல்லாம் நிரப்பிற்று.

36சொப்பனம் இதுதான்; அதின் அர்த்தத்தையும், ராஜசமுகத்தில் தெரிவிப்போம்.

37ராஜாவே, நீர் ராஜாதி ராஜாவாயிருக்கிறீர்; பரலோகத்தின் தேவன் உமக்கு ராஜரீகத்தையும் பராக்கிரமத்தையும் வல்லமையையும் மகிமையையும் அருளினார்.

38சகல இடங்களிலுமுள்ள மனுபுத்திரரையும் வெளியின் மிருகங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும் அவர் உமது கையில் ஒப்புக்கொடுத்து, உம்மை அவைகளையெல்லாம் ஆளும்படி செய்தார். பொன்னான அந்தத் தலை நீரே.

39உமக்குப்பிறகு உமக்குக் கீழ்த்தரமான வேறொரு ராஜ்யம் தோன்றும்; பின்பு பூமியையெல்லாம் ஆண்டுகொள்ளும் வெண்கலமான மூன்றாம் ராஜ்யம் ஒன்று எழும்பும்.

40நாலாவது ராஜ்யம் இரும்பைப்போல உரமாயிருக்கும்; இரும்பு எல்லாவற்றையும் எப்படி நொறுக்கிச் சின்னபின்னமாக்குகிறதோ, அப்படியே இது நொறுக்கிப்போடுகிற இரும்பைப்போல அவைகளையெல்லாம் நொறுக்கித் தகர்த்துப்போடும்.

41பாதங்களும் கால்விரல்களும் பாதி குயவனின் களிமண்ணும், பாதி இரும்புமாயிருக்க நீர் கண்டீரே, அந்த ராஜ்யம் பிரிக்கப்படும்; ஆகிலும் களிமண்ணோடே இரும்பு கலந்திருக்க நீர் கண்டபடியே இரும்பினுடைய உறுதியில் கொஞ்சம் அதிலே இருக்கும்.

42கால்விரல்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாயிருந்தது என்னவென்றால், அந்த ராஜ்யம் ஒருபங்கு உரமும் ஒருபங்கு நெரிசலுமாயிருக்கும்.

43நீர் இரும்பைக் களிமண்ணோடே கலந்ததாகக் கண்டீரே, அவர்கள் மற்ற மனுஷரோடே சம்பந்தங்கலப்பார்கள்; ஆகிலும் இதோ, களிமண்ணோடே இரும்பு கலவாததுபோல அவர்கள் ஒருவரோடொருவர் ஒட்டிக்கொள்ளாதிருப்பார்கள்.

44அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; ஒரு கல் கையால் பெயர்க்கப்படாமல் மலையிலிருந்து பெயர்ந்து, உருண்டுவந்து, இரும்பையும் வெண்கலத்தையும் களிமண்ணையும் வெள்ளியையும் பொன்னையும் நொறுக்கினதை நீர் கண்டீரே, அப்படியே அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.

45இனிமேல் சம்பவிக்கப்போகிறதை மகா தேவன் ராஜாவுக்குத் தெரிவித்திருக்கிறார்; சொப்பனமானது நிச்சயம், அதின் அர்த்தம் சத்தியம் என்றான்.

46அப்பொழுது ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் முகங்குப்புற விழுந்து, தானியேலை வணங்கி, அவனுக்குக் காணிக்கைசெலுத்தவும் தூபங்காட்டவும் கட்டளையிட்டான்.

47ராஜா தானியேலை நோக்கி: நீ இந்த மறைபொருளை வெளிப்படுத்தினபடியினால், மெய்யாய் உங்கள் தேவனே தேவர்களுக்கு தேவனும், ராஜாக்களுக்கு ஆண்டவரும், மறைபொருள்களை வெளிப்படுத்துகிறவருமாயிருக்கிறார் என்றான்.

48பின்பு ராஜா தானியேலைப் பெரியவனாக்கி, அவனுக்கு அநேகம் சிறந்த வெகுமதிகளைக் கொடுத்து, அவனைப் பாபிலோன் மாகாணம் முழுதுக்கும் அதிபதியாகவும், பாபிலோனிலுள்ள சகல ஞானிகளின்மேலும் பிரதான அதிகாரியாகவும் நியமித்தான்.

49தானியேல் ராஜாவை வேண்டிகொண்டதின்பேரில் அவன் சாத்ராக்கையும், மேஷாக்கையும், ஆபேத்நேகோவையும் பாபிலோன் மாகாணத்துக் காரியங்களை விசாரிக்கும்படிவைத்தான்; தானியேலோவென்றால் ராஜாவின் கொலுமண்டபத்தில் இருந்தான்.

சங்கீதம் 106

முழு அதிகாரம் ›

1அல்லேலூயா, கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.

2கர்த்தருடைய வல்லமையான செய்கைகளைச் சொல்லி, அவருடைய துதியையெல்லாம் பிரஸ்தாபப்படுத்தத்தக்கவன் யார்?

3நியாயத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும், எக்காலத்திலும் நீதியைச் செய்கிறவர்களும் பாக்கியவான்கள்.

4கர்த்தாவே, நீர் தெரிந்துகொண்டவர்களின் நன்மையை நான் கண்டு, உம்முடைய ஜாதியின் மகிழ்ச்சியால் மகிழ்ந்து, உம்முடைய சுதந்தரத்தோடே மேன்மைபாராட்டும்படிக்கு,

5உம்முடைய ஜனங்களுக்கு நீர் பாராட்டும் கிருபையின்படி என்னை நினைத்து, உம்முடைய இரட்சிப்பினால் என்னைச் சந்தித்தருளும்.

6எங்கள் பிதாக்களோடுங்கூட நாங்களும் பாவஞ்செய்து, அக்கிரமம் நடப்பித்து, ஆகாமியம் பண்ணினோம்.

7எங்கள் பிதாக்கள் எகிப்திலே உம்முடைய அதிசயங்களை உணராமலும், உம்முடைய கிருபைகளின் திரட்சியை நினையாமலும் போய், சிவந்த சமுத்திர ஓரத்திலே கலகம்பண்ணினார்கள்.

8ஆனாலும் அவர் தமது வல்லமையை வெளிப்படுத்தும்படி, தம்முடைய நாமத்தினிமித்தம் அவர்களை இரட்சித்தார்.

9அவர் சிவந்த சமுத்திரத்தை அதட்டினார், அது வற்றிப்போயிற்று; வெட்டாந்தரையில் நடக்கிறதுபோல அவர்களை ஆழங்களில் நடந்துபோகப்பண்ணினார்.

10பகைஞன் கைக்கு அவர்களை விலக்கி இரட்சித்து, சத்துருவின் கைக்கு அவர்களை விலக்கி மீட்டார்.

11அவர்கள் சத்துருக்களைத் தண்ணீர்கள் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனும் மீந்திருக்கவில்லை.

12அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை விசுவாசித்து, அவருடைய துதியைப் பாடினார்கள்.

13ஆனாலும் சீக்கிரமாய் அவருடைய கிரியைகளை மறந்தார்கள்; அவருடைய ஆலோசனைக்கு அவர்கள் காத்திராமல்,

14வனாந்தரத்திலே இச்சையுள்ளவர்களாகி, அவாந்தரவெளியிலே தேவனைப் பரீட்சைபார்த்தார்கள்.

15அப்பொழுது அவர்கள் கேட்டதை அவர்களுக்குக் கொடுத்தார், அவர்கள் ஆத்துமாக்களிலோ இளைப்பை அனுப்பினார்.

16பாளயத்தில் அவர்கள் மோசேயின்மேலும், கர்த்தருடைய பரிசுத்தனாகிய ஆரோனின்மேலும் பொறாமைகொண்டார்கள்.

17பூமி பிளந்து தாத்தானை விழுங்கி, அபிராமின் கூட்டத்தை மூடிப்போட்டது.

18அவர்கள் கூட்டத்தில் அக்கினி பற்றியெரிந்தது; அக்கினி ஜூவாலை துன்மார்க்கரை எரித்துப்போட்டது.

19அவர்கள் ஓரேபிலே ஒரு கன்றுக்குட்டியையுண்டாக்கி, வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தை நமஸ்கரித்தார்கள்.

20தங்கள் மகிமையைப் புல்லைத் தின்கிற மாட்டின் சாயலாக மாற்றினார்கள்.

21எகிப்திலே பெரிய கிரியைகளையும், காமின் தேசத்திலே அதிசயங்களையும், சிவந்த சமுத்திரத்தண்டையிலே பயங்கரமானவைகளையும் செய்தவராகிய,

22தங்கள் இரட்சகரான தேவனை மறந்தார்கள்.

23ஆகையால், அவர்களை நாசம்பண்ணுவேன் என்றார்; அப்பொழுது அவரால் தெரிந்துகொள்ளப்பட்ட மோசே, அவர்களை அவர் அழிக்காதபடிக்கு, அவருடைய உக்கிரத்தை ஆற்றும்பொருட்டு, அவருக்கு முன்பாகத் திறப்பின் வாயிலே நின்றான்.

24அவருடைய வார்த்தையை விசுவாசியாமல், இச்சிக்கப்படத்தக்க தேசத்தை அசட்டைபண்ணினார்கள்.

25கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிகொடாமல், தங்கள் கூடாரங்களில் முறுமுறுத்தார்கள்.

26அப்பொழுது அவர்கள் வனாந்தரத்திலே மடியவும், அவர்கள் சந்ததி ஜாதிகளுக்குள்ளே அழியவும்,

27அவர்கள் பற்பல தேசங்களிலே சிதறடிக்கப்படவும், அவர்களுக்கு விரோதமாகத் தம்முடைய கையை எடுத்தார்.

28அவர்கள் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்டு, ஜீவனில்லாதவைகளுக்கு இட்ட பலிகளைப் புசித்து,

29தங்கள் கிரியைகளினால் அவருக்குக் கோபம் மூட்டினார்கள்; ஆகையால் வாதை அவர்களுக்குள் புகுந்தது.

30அப்பொழுது பினெகாஸ் எழுந்து நின்று நியாயஞ்செய்தான்; அதினால் வாதை நிறுத்தப்பட்டது.

31அது தலைமுறை தலைமுறையாக என்றைக்கும் அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.

32மேரிபாவின் தண்ணீர்களிடத்திலும் அவருக்குக் கடுங்கோபம் மூட்டினார்கள்; அவர்கள் நிமித்தம் மோசேக்கும் பொல்லாப்பு வந்தது.

33அவர்கள் அவன் ஆவியை விசனப்படுத்தினதினாலே, தன் உதடுகளினால் பதறிப்பேசினான்.

34கர்த்தர் தங்களுக்குச் சொன்னபடி, அவர்கள் அந்த ஜனங்களை அழிக்கவில்லை.

35ஜாதிகளுடனே கலந்து, அவர்கள் கிரியைகளைக் கற்று;

36அவர்களுடைய விக்கிரகங்களைச் சேவித்தார்கள்; அவைகள் அவர்களுக்குக் கண்ணியாயிற்று.

37அவர்கள் தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் பிசாசுகளுக்குப் பலியிட்டார்கள்.

38அவர்கள் கானான் தேசத்து விக்கிரகங்களுக்குப் பலியிட்டு, தங்கள் குமாரர் குமாரத்திகளுடைய குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தினார்கள்; தேசம் இரத்தத்தால் தீட்டுப்பட்டது.

39அவர்கள் தங்கள் கிரியைகளினால் அசுத்தமாகி, தங்கள் செய்கைகளினால் சோரம்போனார்கள்.

40அதினால் கர்த்தருடைய கோபம் தமது ஜனத்தின்மேல் மூண்டது; அவர் தமது சுதந்தரத்தை அருவருத்தார்.

41அவர்களை ஜாதிகளுடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்களுடைய பகைஞர் அவர்களை ஆண்டார்கள்.

42அவர்களுடைய சத்துருக்கள் அவர்களை ஒடுக்கினார்கள்; அவர்களுடைய கையின்கீழ்த் தாழ்த்தப்பட்டார்கள்.

43அநேகந்தரம் அவர்களை விடுவித்தார்; அவர்களோ தங்கள் யோசனையினால் அவருக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, தங்களுடைய அக்கிரமத்தினால் சிறுமைப்படுத்தப்பட்டார்கள்.

44அவர்கள் கூப்பிடுதலை அவர் கேட்கும்போதோ, அவர்களுக்கு உண்டான இடுக்கத்தை அவர் கண்ணோக்கி,

45அவர்களுக்காகத் தமது உடன்படிக்கையை நினைத்து, தமது மிகுந்த கிருபையின்படி மனஸ்தாபப்பட்டு,

46அவர்களைச் சிறைபிடித்த யாவரும் அவர்களுக்கு இரங்கும்படி செய்தார்.

47எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நாங்கள் உமது பரிசுத்த நாமத்தைப் போற்றி, உம்மைத் துதிக்கிறதில் மேன்மைபாராட்டும்படி எங்களை இரட்சித்து, எங்களை ஜாதிகளிலிருந்து சேர்த்தருளும்.

48இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அநாதியாய் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர். ஜனங்களெல்லாரும்: ஆமென், அல்லேலூயா, என்பார்களாக.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com