1அகசியாவின் தாயாகிய அத்தாலியாள் தன் குமாரன் இறந்து போனதைக் கண்டபோது, எழும்பி ராஜவம்சத்தார் யாவரையும் சங்காரம்பண்ணினாள்.
2யோராம் என்னும் ராஜாவின் குமாரத்தியும் அகசியாவின் சகோதரியுமாகிய யோசேபாள், கொலையுண்ணப்படுகிற ராஜகுமாரரின் நடுவிலிருக்கிற அகசியாவின் மகனாகிய யோவாசைக் களவாய் எடுத்தாள்; அவன் கொல்லப்படாதபடி, அவனையும் அவன் தாதியையும் அத்தாலியாளுக்குத் தெரியாமல் பள்ளியறையில் ஒளித்துவைத்தார்கள்.
3இவளோடேகூட அவன் ஆறுவருஷம் கர்த்தருடைய ஆலயத்தில் ஒளித்து வைக்கப்பட்டிருந்தான்; அத்தாலியாள் தேசத்தின்மேல் ராஜ்யபாரம்பண்ணினாள்.
4ஏழாம் வருஷத்திலே யோய்தா நூறுபேருக்கு அதிபதிகளையும் தலைவரையும் காவலாளரையும் அழைப்பித்து, அவர்களைத் தன்னிடத்தில் கர்த்தருடைய ஆலயத்திலே வரச்சொல்லி, அவர்களோடு உடன்படிக்கைபண்ணி, அவர்களைக் கர்த்தருடைய ஆலயத்திலே ஆணையிடுவித்துக்கொண்டு, அவர்களுக்கு ராஜாவின் குமாரனைக் காண்பித்து,
5அவர்களை நோக்கி: நீங்கள் செய்யவேண்டிய காரியம் என்னவென்றால், ஓய்வுநாளில் முறைப்படி இங்கே வருகிற உங்களில் மூன்றில் ஒருபங்கு ராஜாவின் அரமனைக் காவல் காக்கவேண்டும்.
6மூன்றில் ஒரு பங்கு சூர் என்னும் வாசலிலும், மூன்றில் ஒரு பங்கு காவலாளரின் காவலின் பிறகே இருக்கிற வாசலிலுமிருந்து ஆலயக்காவலைப் பத்திரமாய்க் காக்கவேண்டும்.
7இப்படியே ஓய்வு நாளில் முறைப்படியே உங்களில் இரண்டு பங்குபேர், ராஜாவினிடத்தில் கர்த்தருடைய ஆலயத்தைக் காவல் காக்கவேண்டும்.
8நீங்கள் அவரவர் தங்கள் ஆயுதங்களைக் கையிலே பிடித்தவர்களாய், ராஜாவைச் சுற்றிலும் வரிசையாய் நின்று கொண்டிருக்கவேண்டும்; வரிசைகளுக்குள் புகுந்துவருகிறவன் கொலை செய்யப்படக்கடவன்; ராஜா வெளியே போகும்போதும் உள்ளே வரும்போதும் நீங்கள் அவரோடே இருங்கள் என்றான்.
9ஆசாரியனாகிய யோய்தா கட்டளையிட்டபடியெல்லாம் நூறுபேருக்கு அதிபதிகள் செய்து, அவரவர் ஓய்வுநாளில் முறைப்படி வருகிறவர்களும் முறைப்படி போகிறவர்களுமாகிய தங்கள் மனுஷரைக் கூட்டிக்கொண்டு, ஆசாரியனாகிய யோய்தாவினிடத்தில் வந்தார்கள்.
10ஆசாரியன் கர்த்தரின் ஆலயத்தில் தாவீது ராஜா வைத்திருந்த ஈட்டிகளையும் கேடகங்களையும் நூறுபேருக்கு அதிபதிகளிடத்தில் கொடுத்தான்.
11காவலாளர் அவரவர் தங்கள் ஆயுதங்களைப் பிடித்தவர்களாய், ஆலயத்தின் வலதுபக்கம் தொடங்கி அதின் இடது பக்கமட்டும், பலிபீடத்திற்கு எதிராகவும் ஆலயத்திற்கு எதிராகவும் ராஜாவைச் சுற்றிலும் நின்றார்கள்.
12அப்பொழுது அவன்: ராஜகுமாரனை வெளியே கொண்டுவந்து, கிரீடத்தை அவன்மேல் வைத்து, சாட்சியின் ஆகமத்தை அவன் கையிலே கொடுத்தான்; இப்படி அவனை ராஜாவாக்கி அபிஷேகம் பண்ணி: ராஜா வாழ்க என்று சொல்லி கைகொட்டினார்கள்.
13ஓடிவருகிற ஜனங்கள் செய்த ஆரவாரத்தை அத்தாலியாள் கேட்டபோது: அவள் கர்த்தருடைய ஆலயத்திற்கு ஜனங்களிடத்தில் வந்து,
14இதோ, ராஜா முறைமையின்படியே தூணண்டையிலே நிற்கிறதையும், ராஜாவண்டையில் நிற்கிற பிரபுக்களையும், எக்காளம் ஊதுகிறவர்களையும், தேசத்து ஜனங்கள் எல்லாரும் சந்தோஷப்பட்டு எக்காளம் ஊதுகிறதையும் கண்டவுடனே, அத்தாலியாள் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: துரோகம் துரோகம் என்று கூவினாள்.
15ஆசாரியனாகிய யோய்தா இராணுவத்தலைவராகிய நூறு பேருக்கு அதிபதிகளானவர்களுக்குக் கட்டளையிட்டு: இவளை வரிசைகளுக்குப் புறம்பே கொண்டுபோங்கள்; இவளைப் பின்பற்றுகிறவனைப் பட்டயத்தாலே வெட்டிப்போடுங்கள் என்றான். கர்த்தருடைய ஆலயத்தில் அவளைக் கொல்லலாகாது என்று ஆசாரியன் சொல்லியிருந்தான்.
16அவர்கள் அவளுக்கு இடம் உண்டாக்கினபோது, ராஜாவின் அரமனைக்குள் குதிரைகள் பிரவேசிக்கிற வழியிலே அவள் போகையில், அவளைக் கொன்று போட்டார்கள்.
17அப்பொழுது யோய்தா, அவர்கள் கர்த்தருடைய ஜனமாயிருக்கும்படிக்கு, ராஜாவும் ஜனங்களும் கர்த்தரோடே உடன்படிக்கைபண்ணவும், ராஜாவும் ஜனங்களும் ஒருவரோடொருவர் உடன்படிக்கை பண்ணவும் செய்து,
18பின்பு தேசத்தின் ஜனங்கள் எல்லாரும் பாகாலின் கோவிலில் போய், அதை இடித்து, அதின் பலிபீடங்களையும் அதின் விக்கிரகங்களையும் முற்றிலும் உடைத்து, பாகாலின் பூஜாசாரியாகிய மாத்தானைப் பலிபீடங்களுக்கு முன்பாகக் கொன்றுபோட்டார்கள். ஆசாரியன் கர்த்தருடைய ஆலயத்தை விசாரிக்கும் உத்தியோகஸ்தரை ஏற்படுத்தினான்.
19நூறுபேருக்கு அதிபதிகளையும், தலைவரையும், காவலாளரையும் தேசத்தின் ஜனங்களையும் கூட்டி, ராஜாவைக் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து இறங்கப்பண்ணி, அவனைக் காவலாளரின் வாசல் வழியாய் ராஜ அரமனைக்கு அழைத்துக்கொண்டு போனார்கள்; அங்கே அவன் ராஜாக்களுடைய சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தான்.
20தேசத்தின் ஜனங்கள் எல்லாரும் மகிழ்ந்து நகரம் அமைதலாயிற்று. அத்தாலியாளையோ ராஜாவின் அரமனையண்டையில் பட்டயத்தால் கொன்றுபோட்டார்கள்.
21யோவாஸ் ராஜாவாகிறபோது ஏழு வயதாயிருந்தான்.
1யெகூவின் ஏழாம் வருஷத்தில் யோவாஸ் ராஜாவாகி, எருசலேமிலே நாற்பது வருஷம் ராஜ்யபாரம் பண்ணினான்; பெயெர்செபா ஊராளாகிய அவனுடைய தாயின் பேர் சிபியாள்.
2ஆசாரியனாகிய யோய்தா யோவாசைப் போதகம்பண்ணின நாளெல்லாம் அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.
3மேடைகளை மாத்திரம் அகற்றவில்லை; ஜனங்கள் இன்னும் மேடைகள்மேல் பலியிட்டுத் தூபங்காட்டி வந்தார்கள்.
4யோவாஸ் ஆசாரியரை நோக்கி: பிரதிஷ்டையாக்கப்பட்ட பொருள்களாகிய கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவரப்படுகிற எல்லாப் பணங்களையும், இலக்கத்திற்குட்படுகிறவர்களின் பணத்தையும், மீட்புக்காக மதிக்கப்படுகிற ஆட்களின் பணத்தையும், கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவரும்படி, அவரவர் தம்தம் மனதிலே நியமித்திருக்கும் எல்லாப் பணத்தையும்,
5ஆசாரியர்கள் அவரவர் தங்களுக்கு அறிமுகமானவர்கள் கையில் வாங்கிக்கொண்டு, ஆலயத்தில் எங்கெங்கே பழுது காண்கிறதோ, அங்கேயெல்லாம் ஆலயத்தைப் பழுதுபார்க்கவேண்டும் என்றான்.
6ஆனாலும் ராஜாவாகிய யோவாசின் இருபத்துமூன்றாம் வருஷமட்டும் ஆசாரியர்கள் ஆலயத்தைப் பழுதுபாராதேபோனபடியினால்,
7ராஜாவாகிய யோவாஸ் ஆசாரியனாகிய யோய்தாவையும் மற்ற ஆசாரியர்களையும் அழைப்பித்து: நீங்கள் ஆலயத்தைப் பழுதுபாராதேபோனதென்ன? இனி நீங்கள் உங்களுக்கு அறிமுகமானவர்கள் கையிலே பணத்தை வாங்காமல், அதை ஆலயத்தைப் பழுதுபார்க்கிறதற்காக விட்டுவிடுங்கள் என்றான்.
8அப்பொழுது ஆசாரியர்கள் ஜனத்தின் கையிலே பணத்தை வாங்கிக்கொள்ளாமலும், ஆலயத்தைப் பழுதுபாராமலும் இருக்கிறதற்குச் சம்மதித்தார்கள்.
9ஆசாரியனாகிய யோய்தா ஒரு பெட்டியை எடுத்து, அதின் மூடியிலே ஒரு துவாரமிட்டு, அதைப் பலிபீடத்தண்டையிலே கர்த்தருடைய ஆலயத்தில் ஜனங்கள் உட்பிரவேசிக்கும் வலதுபக்கத்தில் வைத்தான்; வாசற்படியைக் காக்கிற ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டுவரப்பட்ட பணத்தையெல்லாம் அதிலே போட்டார்கள்.
10பெட்டியிலே மிகுந்த பணம் உண்டென்று அவர்கள் காணும்போது, ராஜாவின் சம்பிரதியும் பிரதான ஆசாரியனும் வந்து: கர்த்தருடைய ஆலயத்திலே சேகரிக்கப்பட்ட பணத்தை எண்ணி முடிப்புக்கட்டி,
11எண்ணின பணத்தைக் கர்த்தருடைய ஆலயத்திலே விசாரிப்புக்காரர் கையிலே கொடுப்பார்கள்; அதை அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்க்கிற தச்சருக்கும், சிற்பாசாரிகளுக்கும்,
12கொற்றருக்கும், கல்தச்சருக்கும், கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்க்கத் தேவையான மரங்களையும் வெட்டின கற்களையும் கொள்ளுகிறதற்கும், ஆலயத்தைப் பழுதுபார்க்கிறதற்குச் செல்லும் எல்லாச் செலவுக்கும் கொடுப்பார்கள்.
13கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவரப்பட்ட பணத்தினாலே வெள்ளிக்கிண்ணங்களும், கீதவாத்தியங்களும், கலங்களும், எக்காளங்களும், பொற்பாத்திரங்களும், வெள்ளிப் பாத்திரங்களும் பண்ணப்படாமல்,
14கர்த்தருடைய ஆலயத்தைப் பழுது பார்க்கும்படிக்கு வேலை செய்கிறவர்களுக்கே அதைக் கொடுத்தார்கள்.
15வேலைசெய்கிறவர்களுக்குக் கொடுக்கும்படிக்கு, பணத்தை வரப்பற்றிக்கொண்ட மனுஷர் கையிலே கணக்குக் கேளாதிருந்தார்கள்; அவர்கள் உண்மையாய் அதை நடப்பித்தார்கள்.
16குற்றப்பிராயசித்தப் பணமும் பாவபிராயசித்தப் பணமும் கர்த்தருடைய ஆலயத்திற்காகக் கொண்டுவரப்படவில்லை; அது ஆசாரியரைச் சேர்ந்தது.
17அதற்குப் பின்பு சீரியாவின் ராஜாவாகிய ஆசகேல் வந்து, காத்தூரின்மேல் யுத்தம்பண்ணி அதைப் பிடித்தான்; அதின் பின்பு எருசலேமுக்கு விரோதமாய்ப் போக ஆசகேல் தன் முகத்தைத் திருப்பினான்.
18அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய யோவாஸ், தன் பிதாக்களாகிய யோசபாத் யோராம் அகசியா என்னும் யூதாவின் ராஜாக்கள் பரிசுத்தம்பண்ணிவைத்த எல்லாவற்றையும், தான் பரிசுத்தம் பண்ணிவைத்ததையும், கர்த்தருடைய ஆலயத்திலும் ராஜாவின் அரமனையிலுமுள்ள பொக்கிஷங்களில் அகப்பட்ட பொன் யாவையும் எடுத்து சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலுக்கு அனுப்பினான்; அப்பொழுது அவன் எருசலேமை விட்டுத் திரும்பிப்போனான்.
19யோவாசின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
20யோவாசின் ஊழியக்காரர் எழும்பி கட்டுப்பாடு பண்ணிக்கொண்டு, சில்லாவுக்குப் போகிற வழியிலிருக்கிற மில்லோ வீட்டிலே அவனைக் கொன்றுபோட்டார்கள்.
21சிமியாதின் குமாரன், யோசகார் சோமேரின் குமாரன் யோசபாத் என்னும் அவனுடைய ஊழியக்காரர் அவனைக் கொன்றார்கள்; இறந்துபோன அவனைத் தாவீதின் நகரத்தில் அவனுடைய பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய அமத்சியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
1ஆதலால், என் குமாரனே, நீ கிறிஸ்து இயேசுவிலுள்ள கிருபையில் பலப்படு.
2அநேக சாட்சிகளுக்கு முன்பாக நீ என்னிடத்தில் கேட்டவைகளை மற்றவர்களுக்குப் போதிக்கத்தக்க உண்மையுள்ள மனுஷர்களிடத்தில் ஒப்புவி.
3நீயும் இயேசுகிறிஸ்துவுக்கு நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கனுபவி.
4தண்டில் சேவகம்பண்ணுகிற எவனும், தன்னைச் சேவகமெழுதிக்கொண்டவனுக்கு ஏற்றவனாயிருக்கும்படி, பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ளமாட்டான்.
5மேலும் ஒருவன் மல்யுத்தம்பண்ணினாலும், சட்டத்தின்படி பண்ணாவிட்டால் முடிசூட்டப்படான்.
6பிரயாசப்பட்டுப் பயிரிடுகிறவன் பலனில் முந்திப் பங்கடையவேண்டும்.
7நான் சொல்லுகிறவைகளைச் சிந்தித்துக்கொள்; கர்த்தர் எல்லாக் காரியங்களிலும் உனக்குப் புத்தியைத் தந்தருளுவார்.
8தாவீதின் சந்ததியில் பிறந்த இயேசுகிறிஸ்து, என் சுவிசேஷத்தின்படியே, மரித்தோரிலிருந்தெழுப்பப்பட்டவரென்று நினைத்துக்கொள்.
9இந்தச் சுவிசேஷத்தினிமித்தம் நான் பாதகன்போலக் கட்டப்பட்டு, துன்பத்தை அனுபவிக்கிறேன்; தேவவசனமோ கட்டப்பட்டிருக்கவில்லை.
10ஆகையால், தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் கிறிஸ்து இயேசுவினால் உண்டான இரட்சிப்பை நித்திய மகிமையோடே பெற்றுக்கொள்ளும்படி, சகலத்தையும் அவர்கள் நிமித்தமாகச் சகிக்கிறேன்.
11இந்த வார்த்தை உண்மையுள்ளது; என்னவெனில், நாம் அவரோடேகூட மரித்தோமானால், அவரோடேகூடப் பிழைத்துமிருப்போம்;
12அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்; நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்;
13நாம் உண்மையில்லாதவர்களாயிருந்தாலும், அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார்; அவர் தம்மைத்தாம் மறுதலிக்கமாட்டார்.
14இவைகளைஅவர்களுக்கு நினைப்பூட்டி, ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாமல், கேட்கிறவர்களைக் கவிழ்த்துப்போடுகிறதற்கேதுவான வாக்குவாதம் செய்யாதபடிக்கு, கர்த்தருக்கு முன்பாக அவர்களுக்கு எச்சரித்துப் புத்திசொல்லு.
15நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னை தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு.
16சீர்கேடான வீண்பேச்சுகளுக்கு விலகியிரு; அவைகளால் (கள்ளப்போதகர்களான) அவர்கள் அதிக அவபக்தியுள்ளவர்களாவார்கள்;
17அவர்களுடைய வார்த்தை அரிபிளவையைப்போலப் படரும்; இமெநேயும் பிலேத்தும் அப்படிப்பட்டவர்கள்;
18அவர்கள் சத்தியத்தை விட்டு விலகி, உயிர்த்தெழுதல் நடந்தாயிற்றென்று சொல்லி, சிலருடைய விசுவாசத்தைக் கவிழ்த்துப்போடுகிறார்கள்.
19ஆகிலும் தேவனுடைய உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்கிறது; கர்த்தர் தம்முடையவர்களை அறிவாரென்பதும், கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லுகிற எவனும் அநியாயத்தைவிட்டு விலகக்கடவனென்பதும், அதற்கு முத்திரையாயிருக்கிறது.
20ஒரு பெரிய வீட்டிலே பொன்னும் வெள்ளியுமான பாத்திரங்களுமல்லாமல், மரமும் மண்ணுமான பாத்திரங்களுமுண்டு; அவைகளில் சில கனத்திற்கும் சில கனவீனத்திற்குமானவைகள்.
21ஆகையால் ஒருவன் இவைகளைவிட்டு, தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான்.
22அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு.
23புத்தியீனமும் அயுக்தமுமான (அறிவற்றதுமான) தர்க்கங்கள் சண்டைகளைப் பிறப்பிக்குமென்று அறிந்து, அவைகளுக்கு விலகியிரு.
24கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதகசமர்த்தனும், தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்கவேண்டும்.
25எதிர்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை அருளத்தக்கதாகவும்,
26பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிபட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கந்தெளிந்து அவன் கண்ணிக்கு நீங்கத்தக்கதாகவும், சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும்.
1பின்பு கர்த்தர் என்னை நோக்கி: அந்நிய தேவர்களை மதித்து, திராட்சரசமுள்ள பாத்திரங்களை விரும்புகிறவர்களான இஸ்ரவேல் புத்திரர்பேரில் கர்த்தர் வைத்திருக்கிற அன்புக்கு ஒப்பாக நீ இன்னும் போய், தன் நேசரால் நேசிக்கப்பட்டவளும், விபசாரியுமான ஒரு ஸ்திரீயை நேசித்துக்கொள் என்று சொன்னார்.
2அப்பொழுது நான் அவளை எனக்குப் பதினைந்து வெள்ளிக்காசுக்கும், ஒன்றரைக்கலம் வாற்கோதுமைக்கும் கொண்டு,
3அவளை நோக்கி: நீ வேசித்தனம்பண்ணாமலும், ஒருவனையும் சேராமலும் அநேகநாள் எனக்காகக் காத்திரு; உனக்காக நானும் காத்திருப்பேன் என்றேன்.
4இஸ்ரவேல் புத்திரர் அநேகநாள் ராஜா இல்லாமலும், அதிபதி இல்லாமலும், பலி இல்லாமலும், சிலை இல்லாமலும், ஏபோத் வஸ்திரம் இல்லாமலும், தேராபீம் இல்லாமலும் இருப்பார்கள்.
5பின்பு இஸ்ரவேல் புத்திரர் திரும்பி, தங்கள் தேவனாகிய கர்த்தரையும், தங்கள் ராஜாவாகிய தாவீதையும் தேடி, கடைசி நாட்களில் கர்த்தரையும், அவருடைய தயவையும் நாடி அஞ்சிக்கையாய் வருவார்கள்.
1இஸ்ரவேல் புத்திரரே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; தேசத்துக்குடிகளோடே கர்த்தருக்கு வழக்கு இருக்கிறது; அதேனென்றால் தேசத்திலே உண்மையும் இல்லை, இரக்கமும் இல்லை; தேவனைப்பற்றிய அறிவும் இல்லை.
2பொய்யாணையிட்டு, பொய்சொல்லி, கொலைசெய்து, திருடி, விபசாரம்பண்ணி, மிஞ்சி மிஞ்சிப்போகிறார்கள்; இரத்தப்பழிகளோடே இரத்தப்பழிகள் சேருகிறது.
3இதினிமித்தம் தேசம் புலம்பும்; அதில் குடியிருக்கிற அனைவரோடுங்கூட மிருகஜீவன்களும் ஆகாயத்துப் பறவைகளும் தொய்ந்துபோகும்; கடலின் மச்சங்களும் வாரிக்கொள்ளப்படும்.
4ஆகிலும் ஒருவனும் நியாயத்தைக் காண்பிக்கவும், ஒருவனும் அவர்களைக் கடிந்துகொள்ளவும் கூடாது; உன் ஜனங்கள் ஆசாரியனோடே வழக்காடுகிறவர்களைப்போல இருக்கிறார்கள்.
5ஆகையால் நீ பகலிலே இடறிவிழுவாய்; இரவிலே உன்னோடேகூடத் தீர்க்கதரிசியும் இடறிவிழுவான்; உன் தாயை நான் சங்காரம்பண்ணுவேன்.
6என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள்; நீ அறிவை வெறுத்தாய், ஆகையால் நீ என் ஆசாரியனாயிராதபடிக்கு நானும் உன்னை வெறுத்துவிடுவேன்; நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்துவிடுவேன்.
7அவர்கள் எவ்வளவாய்ப் பெருகினார்களோ, அவ்வளவாய் எனக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தார்கள்; அவர்களுடைய மகிமையை இலச்சையாக மாறப்பண்ணுவேன்.
8அவர்கள் என் ஜனத்தின் பாவத்தைத் தின்று, அவர்களுடைய அக்கிரமத்தின்பேரில் பசிதாகமாயிருக்கிறார்கள்.
9ஆதலால் ஜனங்களுக்கு எப்படியோ ஆசாரியனுக்கும் அப்படியே; அவர்கள் வழிகளின்படி நான் அவர்களை விசாரித்து, அவர்கள் கிரியைகளின்படி அவர்களுக்குப் பலனளிப்பேன்.
10அவர்கள் கர்த்தரை மதியாமலிருக்கிறபடியினால் அவர்கள் தின்றாலும் திருப்தியடையாதிருப்பார்கள்; அவர்கள் வேசித்தனம்பண்ணினாலும் பலுகாதிருப்பார்கள்.
11வேசித்தனமும் திராட்சரசமும் மதுபானமும் இருதயத்தை மயக்கும்.
12என் ஜனங்கள் கட்டையினிடத்தில் ஆலோசனை கேட்கிறார்கள்; அவர்களுடைய கோல் அவர்களுக்குச் செய்தியை அறிவிக்குமென்றிருக்கிறார்கள்; வேசித்தன ஆவி அவர்களை வழிதப்பித் திரியப்பண்ணிற்று; அவர்கள் தங்கள் தேவனுக்குக் கீழ்ப்பட்டிராமல் சோரமார்க்கம்போனார்கள்.
13அவர்கள் மலையுச்சியில் பலியிட்டு, மேடுகளிலே கர்வாலிமரங்களின் கீழும், புன்னைமரங்களின் கீழும், அரசமரங்களின் கீழும், அவைகளின் நிழல் நல்லதென்று, தூபங்காட்டுகிறார்கள்; இதினிமித்தம் உங்கள் குமாரத்திகள் வேசித்தனமும், உங்கள் மருமக்கள்மார் விபசாரமும் செய்கிறார்கள்.
14உங்கள் குமாரத்திகள் வேசித்தனம் செய்கிறதினிமித்தமும், உங்கள் மருமக்கள்மார் விபசாரம் செய்கிறதினிமித்தமும், நான் அவர்களை தண்டியாமலிருப்பேனோ? அவர்கள் விலகி வேசிகளோடே கூடப்போய் தாசிகளோடே பலியிடுகிறார்கள்; உணர்வில்லாத ஜனங்கள் அதினால் சிக்குண்டு விழுவார்கள்.
15இஸ்ரவேலே, நீ சோரம்போனாலும், யூதாவாகிலும் அந்தப் பாவத்துக்குள்ளாகாதிருப்பதாக; கில்காலுக்கு வராமலும், பெத்தாவேனுக்குப் போகாமலும் கர்த்தருடைய ஜீவனாணை என்று ஆணையிடாமலும் இருப்பீர்களாக.
16இஸ்ரவேல் அடங்காத கிடாரியைப்போல் அடங்காதிருக்கிறது; இப்போது கர்த்தர் அவர்களை விஸ்தாரமான வெளியிலே ஆட்டுக்குட்டியைப்போல் மேய்ந்து அலையப்பண்ணுவார்.
17எப்பிராயீம் விக்கிரகங்களோடு இணைந்திருக்கிறான், அவனைப் போகவிடு.
18அவர்களுடைய மதுபானம் புளித்தது, அவர்கள் எப்போதும் சோரம்போகிறார்கள்; அவர்களுடைய அதிபதிகள் தாருங்களென்று இலச்சையானதை நாடுகிறார்கள்.
19காற்று அவர்களைத் தன் செட்டைகளில் இறுகப்பிடிக்கும்; அவர்கள் தங்கள் பலிகளால் வெட்கப்படுவார்கள்.
121நியாயமும் நீதியும் செய்கிறேன்; என்னை ஒடுக்குகிறவர்களுக்கு என்னை ஒப்புக்கொடாதேயும்.
122உமது அடியேனுக்கு நன்மையாகத் துணைநில்லும்; அகங்காரிகள் என்னையொடுக்கவொட்டாதேயும்.
123உமது இரட்சிப்புக்கும் உமது நீதியின் வார்த்தைக்கும் காத்திருக்கிறதினால் என் கண்கள் பூத்துப்போகிறது.
124உமது அடியேனை உமது கிருபையின்படியே நடத்தி, உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.
125நான் உமது அடியேன்; உம்முடைய சாட்சிகளை நான் அறியும்படி என்னை உணர்வுள்ளவனாக்கும்.
126நீதியைச்செய்யக் கர்த்தருக்கு வேளைவந்தது; அவர்கள் உம்முடைய நியாயப்பிராணத்தை மீறினார்கள்.
127ஆதலால் நான் பொன்னிலும் பசும்பொன்னிலும் அதிகமாய் உமது கற்பனைகளில் பிரியப்படுகிறேன்.
128எல்லாவற்றைப்பற்றியும் நீர் அருளின எல்லாக் கட்டளைகளும் செம்மையென்று எண்ணி, சகல பொய்வழிகளையும் வெறுக்கிறேன்.
129உம்முடைய சாட்சிகள் அதிசயமானவைகள்; ஆகையால் என் ஆத்துமா அவைகளைக் கைக்கொள்ளும்.
130உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும்.
131உம்முடைய கற்பனைகளை நான் வாஞ்சிக்கிறபடியால், என் வாயை ஆவென்று திறந்து அவைகளுக்கு ஏங்குகிறேன்.
132உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்களுக்கு வழங்கும் நியாயத்தின்படியே என்னை நோக்கிப்பார்த்து, எனக்கு இரங்கும்.
133உம்முடைய வார்த்தையிலே என் காலடிகளை நிலைப்படுத்தி, ஒரு அநியாயமும் என்னை ஆளவொட்டாதேயும்.
134மனுஷர் செய்யும் இடுக்கத்துக்கு என்னை விலக்கி விடுவித்தருளும்; அப்பொழுது நான் உம்முடைய கட்டளைகளைக் காத்துக்கொள்ளுவேன்.
135உமது அடியேன்மேல் உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணி, உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.
136உம்முடைய வேதத்தை மனுஷர் காத்துநடவாதபடியால், என் கண்களிலிருந்து நீர்த்தாரைகள் ஓடுகிறது.
137கர்த்தாவே, நீர் நீதிபரர், உமது நியாயத்தீர்ப்புகள் செம்மையானவைகள்.
138நீர் கட்டளையிட்ட சாட்சிகள் நீதியும், மகா உண்மையுமானவைகள்.
139என் சத்துருக்கள் உம்முடைய வசனங்களை மறந்தபடியால், என் பக்திவைராக்கியம் என்னைப் பட்சிக்கிறது.
140உமது வார்த்தை மிகவும் புடமிடப்பட்டது, உமது அடியேன் அதில் பிரியப்படுகிறேன்.
141நான் சிறியவனும் அசட்டைபண்ணப்பட்டவனுமாயிருக்கிறேன்; ஆனாலும் உமது கட்டளைகளை மறவேன்.
142உம்முடைய நீதி நித்திய நீதி, உம்முடைய வேதம் சத்தியம்.
143இக்கட்டும் நெருக்கமும் என்னைப் பிடித்தது; ஆனாலும் உம்முடைய கற்பனைகள் என் மனமகிழ்ச்சி.
144உம்முடைய சாட்சிகளின் நீதி என்றைக்கும் நிற்கும்; என்னை உணர்வுள்ளவனாக்கும், அப்பொழுது நான் பிழைத்திருப்பேன்.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com