‹ முகப்புமுழுத் திட்டம்

அக்டோபர் 8 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்அக்டோபர் 8அடுத்த நாள் ›
குடும்பம்

I இராஜாக்கள் 11

முழு அதிகாரம் ›

1ராஜாவாகிய சாலொமோன், பார்வோனின் குமாரத்தியை நேசித்ததுமல்லாமல், மோவாபியரும், அம்மோனியரும், ஏதோமியரும், சீதோனியரும், ஏத்தியருமாகிய அந்நிய ஜாதியாரான அநேகம் ஸ்திரீகள்மேலும் ஆசைவைத்தான்.

2கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நீங்கள் அவர்களண்டைக்கும் அவர்கள் உங்களண்டைக்கும் பிரவேசிக்கலாகாது; அவர்கள் நிச்சயமாய்த் தங்கள் தேவர்களைப் பின்பற்றும்படி உங்கள் இருதயத்தைச் சாயப்பண்ணுவார்கள் என்று சொல்லியிருந்தார்; சாலொமோன் அவர்கள்மேல் ஆசைவைத்து, அவர்களோடு ஐக்கியமாயிருந்தான்.

3அவனுக்குப் பிரபுக்கள் குலமான எழுநூறு மனையாட்டிகளும், முந்நூறு மறுமனையாட்டிகளும் இருந்தார்கள்; அவனுடைய ஸ்திரீகள் அவன் இருதயத்தை வழுவிப்போகப்பண்ணினார்கள்.

4சாலொமோன் வயது சென்றபோது, அவனுடைய மனைவிகள் அவன் இருதயத்தை அந்நிய தேவர்களைப் பின்பற்றும்படி சாயப்பண்ணினார்கள்; அதினால் அவனுடைய இருதயம் அவன் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப்போல, தன் தேவனாகிய கர்த்தரோடே உத்தமமாயிருக்கவில்லை.

5சாலொமோன் சீதோனியரின் தேவியாகிய அஸ்தரோத்தையும், அம்மோனியரின் அருவருப்பாகிய மில்கோமையும் பின்பற்றினான்.

6சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீதைப்போல கர்த்தரைப் பூரணமாய்ப் பின்பற்றாமல், கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.

7அப்பொழுது சாலொமோன் எருசலேமுக்கு எதிரான மலையிலே மோவாபியரின் அருவருப்பாகிய காமோசுக்கும், அம்மோன் புத்திரரின் அருவருப்பாகிய மோளோகுக்கும் மேடையைக் கட்டினான்.

8இப்படியே தங்கள் தேவர்களுக்குத் தூபங்காட்டிப் பலியிடுகிற அந்நிய ஜாதியாரான தன் ஸ்திரீகள் எல்லாருக்காகவும் செய்தான்.

9ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சாலொமோனுக்கு இரண்டு விசை தரிசனமாகி, அந்நிய தேவர்களைப் பின்பற்ற வேண்டாம் என்று கட்டளையிட்டிருந்தும், அவன் கர்த்தரை விட்டுத் தன் இருதயத்தைத் திருப்பி,

10அவர் கற்பித்ததைக் கைக்கொள்ளாமற்போனதினால் கர்த்தர் அவன்மேல் கோபமானார்.

11ஆகையால் கர்த்தர் சாலொமோனை நோக்கி: நான் உனக்குக் கட்டளையிட்ட என் உடன்படிக்கையையும் என் கட்டளைகளையும் நீ கைக்கொள்ளாமற்போய் இந்தக் காரியத்தைச் செய்தபடியினால், ராஜ்யபாரத்தை உன்னிடத்திலிருந்து பிடுங்கி, அதை உன் ஊழியக்காரனுக்குக் கொடுப்பேன்.

12ஆகிலும் உன் தகப்பனாகிய தாவீதினிமித்தம், நான் அதை உன் நாட்களிலே செய்வதில்லை; உன் குமாரனுடைய கையினின்று அதைப் பிடுங்குவேன்.

13ஆனாலும் ராஜ்யம் முழுவதையும் நான் பிடுங்காமல், என் தாசனாகிய தாவீதினிமித்தமும், நான் தெரிந்துகொண்ட எருசலேமினிமித்தமும், ஒரு கோத்திரத்தை நான் உன் குமாரனுக்குக் கொடுப்பேன் என்றார்.

14கர்த்தர் ஏதோமியனாகிய ஆதாத் என்னும் ஒரு விரோதியைச் சாலொமோனுக்கு எழுப்பினார்; இவன் ஏதோமிலிருந்த ராஜகுலமானவன்.

15தாவீது ஏதோமில் இருக்கும்போது படைத்தலைவனாகிய யோவாப் ஏதோமிலுள்ள ஆண்மக்களையெல்லாம் சங்கரித்து, வெட்டுண்டவர்களை அடக்கம்பண்ணப்போனான்.

16அவர்களையெல்லாம் சங்கரிக்குமளவும், தானும் இஸ்ரவேல் அனைத்தும் அங்கே ஆறுமாதம் இருக்கும்போது,

17ஆதாதும் அவனோடேகூட அவன் தகப்பனுடைய ஊழியக்காரரில் சில ஏதோமியரும் எகிப்திற்குப்போக ஓடிப்போனார்கள்; ஆதாத் அப்பொழுது ஒரு சிறுபிள்ளையாயிருந்தான்.

18அவர்கள் மீதியானிலிருந்து எழுந்து, பாரானுக்குச் சென்று, பாரானிலே சில மனுஷரைக் கூட்டிக்கொண்டு, எகிப்திற்குப் பார்வோன் என்னும் எகிப்தின் ராஜாவினிடத்திற்குப் போனார்கள்; அவன் இவனுக்கு ஒரு வீடு கொடுத்து, இவனுக்கு ஆகாரத்தைத் திட்டம்பண்ணி, நிலத்தையும் கொடுத்தான்.

19ஆதாதுக்குப் பார்வோனின் கண்களில் மிகுந்த தயை கிடைத்தபடியினால், அவன் ராஜஸ்திரீயாகிய தாப்பெனேஸ் என்னும் தன் மனைவியின் சகோதரியை அவனுக்கு விவாகஞ்செய்துகொடுத்தான்.

20தாப்பெனேசின் சகோதரியாகிய இவள் அவனுக்குக் கேனுபாத் என்னும் ஒரு குமாரனைப் பெற்றாள்; அவனைத் தாப்பெனேஸ் பார்வோனின் வீட்டிலே வளர்த்தாள்; அப்படியே கேனுபாத் பார்வோனின் வீட்டில் அவனுடைய குமாரருடன் இருந்தான்.

21தாவீது தன் பிதாக்களோடே நித்திரையடைந்தான் என்றும், படைத்தலைவனாகிய யோவாப் இறந்துபோனான் என்றும், எகிப்திலே ஆதாத் கேள்விப்பட்டபோது, ஆதாத் பார்வோனை நோக்கி: நான் என் சுயதேசத்துக்குப் போக என்னை அனுப்பவேண்டும் என்றான்.

22அதற்குப் பார்வோன்: இதோ, நீ உன் சுயதேசத்துக்குப்போக விரும்புகிறதற்கு, என்னிடத்தில் உனக்கு என்ன குறைவு இருக்கிறது என்றான்; அதற்கு அவன்: ஒரு குறைவும் இல்லை; ஆகிலும் என்னை அனுப்பிவிடவேண்டும் என்றான்.

23எலியாதாவின் குமாரனாகிய ரேசோன் என்னும் வேறொரு விரோதியை தேவன் எழுப்பினார்; இவன் தன் ஆண்டவனாகிய ஆதாதேசர் என்னும் சோபாவின் ராஜாவை விட்டு ஓடிப்போய்,

24தாவீது சோபாவில் உள்ளவர்களைக் கொன்றுபோடுகையில், அவன் தன்னோடே சில மனுஷரைச் சேர்த்துக் கொண்டு, அந்தக் கூட்டத்திற்குத் தலைவனானான்; இவர்கள் தமஸ்குவுக்குப் போய், அங்கே குடியிருந்து, தமஸ்குவில் ஆண்டார்கள்.

25ஆதாத் பொல்லாப்புச் செய்ததுமல்லாமல், ரேசோன் சாலொமோனுடைய நாளெல்லாம் இஸ்ரவேலுக்கு விரோதியாகி, சீரியாவின்மேல் ராஜாவாயிருந்து, இஸ்ரவேலைப் பகைத்தான்.

26சேரேதா ஊரிலுள்ள எப்பிராயீம் மனுஷனாகிய நேபாத்தின் குமாரன் யெரொபெயாம் என்னும் சாலொமோனின் ஊழியக்காரனும் ராஜாவுக்கு விரோதமாய்க் கையெடுத்தான்; அவனுடைய தாய் செரூகாள் என்னும் பேருள்ள ஒரு விதவை.

27அவன் ராஜாவுக்கு விரோதமாய்க் கையெடுத்த முகாந்தரம் என்னவென்றால், சாலொமோன் மில்லோவைக்கட்டி, தன் தகப்பனாகிய தாவீதுடைய நகரத்தின் இடிந்துபோன இடங்களைப் பழுது பார்த்தபோது,

28யெரொபெயாம் என்பவன் பராக்கிரமசாலியாயிருந்தான்; அவன் காரியசமர்த்தனான வாலிபன் என்று சாலொமோன் கண்டு, யோசேப்பு வம்சத்தாரின் காரியத்தையெல்லாம் அவன் விசாரிப்புக்கு ஒப்புவித்தான்.

29அக்காலத்திலே யெரொபெயாம் எருசலேமிலிருந்து வெளியே போகிறபோது, சீலோனியனான அகியா என்னும் தீர்க்கதரிசி புதுச்சால்வையைப் போர்த்துக்கொண்டிருந்து, வழியிலே அவனைக் கண்டான்; இருவரும் வயல்வெளியிலே தனித்திருக்கையில்,

30அகியா தான் போர்த்துக்கொண்டிருந்த புதுச்சால்வையைப் பிடித்து, அதைப் பன்னிரண்டு துண்டாகக் கிழித்துப்போட்டு,

31யெரொபெயாமை நோக்கி: பத்துத்துண்டுகளை எடுத்துக்கொள்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் ராஜ்யபாரத்தைச் சாலொமோனுடைய கையிலிருந்து எடுத்துக் கிழித்து, உனக்குப் பத்துக் கோத்திரங்களைக் கொடுப்பேன்.

32ஆனாலும் என் தாசனாகிய தாவீதுக்காகவும், நான் இஸ்ரவேல் கோத்திரங்களில் எல்லாம் தெரிந்துகொண்ட எருசலேம் நகரத்துக்காகவும், ஒரு கோத்திரம் அவனுக்கு இருக்கும்.

33அவர்கள் என்னைவிட்டு, சீதோனியரின் தேவியாகிய அஸ்தரோத்தையும், மோவாபியரின் தேவனாகிய காமோசையும், அம்மோன் புத்திரரின் தேவனாகிய மில்கோமையும் பணிந்துகொண்டு, அவன் தகப்பனாகிய தாவீதைப்போல என் பார்வைக்குச் செம்மையாய் இருக்கிறதைச் செய்யவும், என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொள்ளவும், அவர்கள் என் வழிகளில் நடவாமற்போனபடியினால் அப்படிச் செய்வேன்.

34ஆனாலும் ராஜ்யபார முழுவதையும் நான் அவன் கையிலிருந்து எடுத்துப்போடுவதில்லை; நான் தெரிந்துகொண்டவனும், என் கற்பனைகளையும் என் கட்டளைகளையும் கைக்கொண்டவனுமான என் தாசனாகிய தாவீதினிமித்தம், அவன் உயிரோடிருக்கும் நாளெல்லாம் அவனை அதிபதியாக வைப்பேன்.

35ஆனாலும் ராஜ்யபாரத்தை அவன் குமாரன் கையிலிருந்து எடுத்து, அதிலே பத்துக் கோத்திரங்களை உனக்குத் தருவேன்.

36என் நாமம் விளங்கும்படிக்கு, நான் தெரிந்துகொண்ட நகரமாகிய எருசலேமிலே என் சமுகத்தில் என் தாசனாகிய தாவீதுக்கு எந்நாளும் ஒரு விளக்கு இருக்கத்தக்கதாக, அவன் குமாரனுக்கு ஒரு கோத்திரத்தைக் கொடுப்பேன்.

37நீ உன் மனவிருப்பத்தின்படி ஆண்டுகொண்டு, இஸ்ரவேலின்மேல் ராஜாவாய் இருப்பதற்காக நான் உன்னைத் தெரிந்துகொண்டேன்.

38நான் உனக்குக் கட்டளையிட்டதையெல்லாம் நீ கேட்டுக் கைக்கொண்டு, நீ என் வழிகளில் நடந்து, என் தாசனாகிய தாவீது செய்ததுபோல, என் கட்டளைகளையும் என் கற்பனைகளையும் கைக்கொள்ளும்படிக்கு என் பார்வைக்குச் செம்மையானதைச் செய்கிறதுண்டானால், நான் உன்னோடிருந்து, நான் தாவீதுக்குக் கட்டினதுபோல உனக்கும் நிலையான வீட்டைக் கட்டி இஸ்ரவேலை உனக்குத் தருவேன்.

39இப்படி நான் இந்தக் காரியத்தினிமித்தம் தாவீதின் சந்ததியைச் சிறுமைப்படுத்துவேன்; ஆகிலும் எந்நாளும் அப்படியிராது என்று சொன்னான்.

40அதினிமித்தம் சாலொமோன் யெரொபெயாமைக் கொல்ல வகைதேடினான்; யெரொபெயாம் எழுந்து, எகிப்திற்குச் சீஷாக் என்னும் எகிப்தின் ராஜாவினிடத்தில் ஓடிப்போய், சாலொமோன் மரணமடையுமட்டும் எகிப்தில் இருந்தான்.

41சாலொமோனின் மற்ற நடபடிகளும், அவன் செய்தவை அனைத்தும், அவனுடைய ஞானமும், சாலொமோனுடைய நடபடிப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

42சாலொமோன் எருசலேமிலே இஸ்ரவேலையெல்லாம் அரசாண்ட நாட்கள் நாற்பது வருஷம்.

43சாலொமோன் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தன் தகப்பனாகிய தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய ரெகொபெயாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

பிலிப்பியர் 2

முழு அதிகாரம் ›

1ஆதலால் கிறிஸ்துவுக்குள் யாதொரு ஆறுதலும், அன்பினாலே யாதொரு தேறுதலும், ஆவியின் யாதொரு ஐக்கியமும், யாதொரு உருக்கமான பட்சமும் இரக்கங்களும் உண்டானால்,

2நீங்கள் ஏக சிந்தையும் ஏக அன்புமுள்ளவர்களாயிருந்து, இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றையே சிந்தித்து, என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள்.

3ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்.

4அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக.

5கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது;

6அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,

7தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.

8அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.

9ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி,

10இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,

11பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.

12ஆதலால், எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கும்பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்.

13ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.

14நான் வீணாக ஓடினதும் வீணாகப் பிரயாசப்பட்டதுமில்லையென்கிற மகிழ்ச்சி கிறிஸ்துவின் நாளில் எனக்கு உண்டாயிருப்பதற்கு, ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு, உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற நீங்கள்,

15கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு,

16எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள்.

17மேலும், உங்கள் விசுவாசமாகிய பலியின்மேலும் ஊழியத்தின்மேலும் நான் வார்க்கப்பட்டுப்போனாலும், நான் மகிழ்ந்து, உங்களனைவரோடுங்கூடச் சந்தோஷப்படுவேன்.

18இதினிமித்தம் நீங்களும் மகிழ்ந்து, என்னோடேகூடச் சந்தோஷப்படுங்கள்.

19அன்றியும், நானும் உங்கள் செய்திகளை அறிந்து மனத்தேறுதல் அடையும்படிக்குச் சீக்கிரமாய்த் தீமோத்தேயுவை உங்களிடத்தில் அனுப்பலாமென்று கர்த்தராகிய இயேசுவுக்குள் நம்பியிருக்கிறேன்.

20அதேனென்றால், உங்கள் காரியங்களை உண்மையாய் விசாரிக்கிறதற்கு என்னைப்போல மனதுள்ளவன் அவனையன்றி வேறொருவனும் என்னிடத்திலில்லை.

21மற்றவர்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குரியவைகளைத் தேடாமல், தங்களுக்குரியவைகளையே தேடுகிறார்கள்.

22தகப்பனுக்குப் பிள்ளை ஊழியஞ்செய்வதுபோல, அவன் என்னுடனேகூட சுவிசேஷத்தினிமித்தம் ஊழியஞ்செய்தானென்று அவனுடைய உத்தமகுணத்தை அறிந்திருக்கிறீர்கள்.

23ஆகையால் என் காரியங்கள் இன்னபடி நடக்கும் என்று நான் அறிந்தவுடனே அவனை அனுப்பலாமென்று நினைத்திருக்கிறேன்.

24அன்றியும் நானே சீக்கிரத்தில் வருவேனென்று கர்த்தருக்குள் நம்பிக்கையாயிருக்கிறேன்.

25மேலும், என் சகோதரனும், உடன் வேளையாளும், உடன்சேவகனும், உங்கள் ஸ்தானாபதியும், என் குறைச்சலுக்கு உதவிசெய்தவனுமான எப்பாப்பிரோதீத்துவை உங்களிடத்தில் அனுப்பவேண்டுமென்று எண்ணினேன்.

26அவன் உங்கள் எல்லார்மேலும் வாஞ்சையுள்ளவனும், தான் வியாதிப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டதினாலே மிகவும் வியாகுலப்படுகிறவனுமாயிருந்தான்.

27அவன் வியாதிப்பட்டு மரணத்திற்குச் சமீபமாயிருந்தது மெய்தான். ஆகிலும், தேவன் அவனுக்கு இரங்கினார்; அவனுக்கு இரங்கினதுமல்லாமல், துக்கத்தின்மேல் துக்கம் எனக்கு உண்டாகாதபடிக்கு, எனக்கும் இரங்கினார்.

28ஆகையால் நீங்கள் அவனை மறுபடியும் கண்டு சந்தோஷப்படவும், என் துக்கங்குறையவும், அவனை அதிசீக்கிரமாய் அனுப்பினேன்.

29ஆனபடியினாலே நீங்கள் கர்த்தருக்குள் மிகுந்த சந்தோஷத்தோடே அவனை ஏற்றுக்கொண்டு, இப்படிப்பட்டவர்களைக் கனமாய் எண்ணுங்கள்.

30ஏனெனில் நீங்கள் எனக்குச் செய்யவேண்டிய ஊழியத்திலே உங்கள் குறைவை நிறைவாக்கும்படிக்கு, அவன் தன் பிராணனையும் எண்ணாமல், கிறிஸ்துவின் ஊழியத்தினிமித்தம் மரணத்திற்குச் சமீபமாயிருந்தான்.

தனிவாசிப்பு

எசேக்கியேல் 41

முழு அதிகாரம் ›

1பின்பு அவர் என்னைத் தேவாலயத்திற்கு அழைத்துக்கொண்டுபோய், தூணாதாரங்களை இந்தப்புறத்தில் ஆறுமுழ அகலமும் அந்தப்புறத்தில் ஆறுமுழ அகலமுமாக அளந்தார்; அது வாசஸ்தலத்தின் அகல அளவாம்.

2வாசல் நடையின் அகலம் பத்து முழமும் வாசல் நடையின் பக்கங்கள் இந்தப்புறத்தில் ஐந்து முழமும் அந்தப்புறத்தில் ஐந்து முழமுமாயிருந்தது; அதின் நீளத்தை நாற்பது முழமும் அகலத்தை இருபது முழமுமாக அளந்தார்.

3பின்பு அவர் உள்ளே போய், வாசல் நடையின் தூணாதாரங்களை இரண்டு முழமாகவும், வாசல் நடையை ஆறுமுழமாகவும், வாசல் நடையின் அகலத்தை ஏழுமுழமாகவும் அளந்தார்.

4பின்பு அவர் தேவாலயத்தின் முன்புறத்திலே அதின் நீளத்தை இருபது முழமாகவும், அதின் அகலத்தை இருபது முழமாகவும் அளந்து, என்னை நோக்கி: இது மகா பரிசுத்த ஸ்தலம் என்றார்.

5பின்பு அவர் ஆலயத்தின் சுவரை ஆறு முழமாகவும், ஆலயத்தைச் சுற்றிலும் இருந்த சுற்றுக்கட்டினுடைய அகலத்தை நாலுமுழமாகவும் அளந்தார்.

6இந்தச் சுற்றுக்கட்டுகள் பக்கக்கட்டின்மேல் பக்கக்கட்டான வரிசைகளாய் முப்பத்துமூன்று இருந்தது; அவைகள் ஆலயத்தின் சுவருக்குள் ஊன்றியிராமல், சுற்றுக்கட்டுகளுக்காகச் சுற்றிலும் அவைகள் ஊன்றும்படிக்கு ஆலயத்துக்கு அடுத்திருந்த ஒட்டுச்சுவரிலே பாய்ந்திருந்தது.

7உயர உயரச் சுற்றிலும் சுற்றுக்கட்டுகளுக்கு அகலம் அதிகமாயிருந்தது; ஆலயத்தைச் சுற்றிலும் உயர உயர ஆலயத்தைச் சுற்றிச் சுற்றி அகலம் வரவர அதிகமாயிருந்தது; ஆதலால் இவ்விதமாய்க் கீழ்நிலையிலிருந்து நடுநிலைவழியாய் மேல்நிலைக்கு ஏறும் வழியிருந்தது.

8மாளிகைக்குச் சுற்றிலும் இருந்த உயரத்தையும் பார்த்தேன், சுற்றுக்கட்டுகளின் அஸ்திபாரங்கள் ஆறுபெரிய முழங்கொண்ட ஒரு முழக்கோலின் உயரமாயிருந்தது.

9புறம்பே சுற்றுக்கட்டுக்கு இருந்த சுவரின் அகலம் ஐந்துமுழமாயிருந்தது; ஆலயத்துக்கு இருக்கும் சுற்றுக்கட்டுகளின் மாளிகையிலே வெறுமையாய் விட்டிருந்த இடங்களும் அப்படியே இருந்தது.

10ஆலயத்தைச் சுற்றிலும் அறைவீடுகளுக்கு நடுவாக இருந்த விசாலம் இருபது முழமாயிருந்தது.

11சுற்றுக்கட்டினுடைய வாசல்நடைகள், வெறுமையாய் விட்டிருந்த இடங்களிலிருந்து, ஒரு வாசல் நடை வடக்கேயும், ஒரு வாசல்நடை தெற்கேயும் இருந்தது; வெறுமையாய் விட்டிருந்த இடங்களின் விசாலம் சுற்றிலும் ஐந்து முழமாயிருந்தது.

12மேற்றிசையிலே பிரத்தியேகமான இடத்துக்கு முன்னிருந்த மாளிகைமட்டும் அகலம் எழுபது முழமும், மாளிகையினுடைய சுவரின் அகலம் சுற்றிலும் ஐந்துமுழமும், அதினுடைய நீளம் தொண்ணூறு முழமுமாயிருந்தது.

13அவர் ஆலயத்தை நூறு முழ நீளமாகவும், பிரத்தியேகமான இடத்தையும் மாளிகையையும், அதின் சுவர்களையும் நூறு முழ நீளமாகவும் அளந்தார்.

14ஆலயத்தின் முற்புறமும் கிழக்குக்கு எதிரான பிரத்தியேகமான இடமும் இருந்த அகலம் நூறு முழமாயிருந்தது.

15பிரத்தியேகமான இடத்தின் பின்புறமாக அதற்கு எதிரே இருந்த மாளிகையின் நீளத்தையும், அதற்கு இந்தப்புறத்திலும் அந்தப்புறத்திலும் இருந்த நடைகாவணங்களையும் அளந்தார்; உள்ளான தேவாலயமும் முற்றத்தின் மண்டபங்களும் உட்பட நூறு முழமாயிருந்தது.

16வாசற்படிகளும், ஒடுக்கமான ஜன்னல்களும், மூன்று பக்கங்களில் சுற்றிலும் வாசல்களுக்கு எதிரான நடைகாவணங்களும் சுற்றிலும் தரை துவக்கி ஜன்னல்கள் மட்டாகப் பலகை அடித்திருந்தது; ஜன்னல்கள் மூடப்பட்டிருந்தது.

17வாசலின் மேலேதுவக்கி ஆலயத்தின் உட்புறமும் வெளிப்புறமும் சுற்றிலும் சுவரின் உட்புறமும் வெளிப்புறமும் எல்லாம் அளவிட்டிருந்தது.

18கேருபீன்களும் பேரீச்சமரங்களும் சித்திரிக்கப்பட்டிருந்தது; கேருபீனுக்கும் கேருபீனுக்கும் நடுவாக ஒவ்வொரு பேரீச்சமரம் இருந்தது; ஒவ்வொரு கேருபீனுக்கும் இரண்டிரண்டு முகங்கள் இருந்தது.

19பேரீச்சமரத்துக்கு இந்தண்டையில் மனுஷமுகமும், பேரீச்சமரத்துக்கு அந்தண்டையில் சிங்கமுகமும் இருந்தது; இப்படியே ஆலயத்தைச் சுற்றிலும் செய்திருந்தது.

20தரை துவக்கி வாசலின் மேற்புறமட்டும், தேவாலயத்தின் சுவரிலும், கேருபீன்களும் பேரீச்சமரங்களும் சித்திரிக்கப்பட்டிருந்தது.

21தேவாலயத்தின் கதவு நிலைகள் சதுரமும், பரிசுத்த ஸ்தலத்தினுடைய முகப்பின் உருவம் அந்த உருவத்துக்குச் சரியுமாயிருந்தது.

22மரத்தினால் செய்யப்பட்ட பலிபீடத்தின் உயரம் மூன்று முழமும், அதின் நீளம் இரண்டு முழமுமாயிருந்தது; அதின் கோடிகளும் அதின் விளிம்புகளும், அதின் பக்கங்களும் மரத்தினால் செய்யப்பட்டிருந்தது. அவர் என்னை நோக்கி: இது கர்த்தருடைய சந்நிதியிலிருக்கிற பீடம் என்றார்.

23தேவாலயத்துக்கும் பரிசுத்த ஸ்தலத்துக்கும் இரண்டு வாசல்களும்,

24வாசல்களுக்கு மடக்குக் கதவுகளாகிய இரட்டைக் கதவுகளும் இருந்தது; ஒரு வாசலுக்கு இரண்டு கதவுகளும் மற்ற வாசலுக்கு இரண்டு கதவுகளும் இருந்தது.

25சுவர்களில் சித்திரிக்கப்பட்டிருந்ததுபோல் ஆலயத்தினுடைய கதவுகளிலும் கேருபீன்களும் பேரீச்சமரங்களும் சித்தரிக்கப்பட்டிருந்தது; புறம்பே மண்டபத்தின் முன்பாக உத்திரங்கள் வைத்திருந்தது.

26மண்டபத்தின் பக்கங்களில் இந்தப்புறத்திலும் அந்தப்புறத்திலும், ஆலயத்தின் சுற்றுக்கட்டுகளிலும் ஒடுக்கமான ஜன்னல்களும் சித்தரிக்கப்பட்ட பேரீச்சமரங்களும் உத்திரங்களும் இருந்தது.

சங்கீதம் 92-93

முழு அதிகாரம் ›
சங்கீதம் 92

1கர்த்தரைத் துதிப்பதும், உன்னதமானவரே, உமது நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுவதும்,

2பத்துநரம்பு வீணையினாலும், தம்புருவினாலும், தியானத்தோடு வாசிக்கும் சுரமண்டலத்தினாலும்,

3காலையிலே உமது கிருபையையும், இரவிலே உமது சத்தியத்தையும் அறிவிப்பதும் நலமாயிருக்கும்.

4கர்த்தாவே, உமது செய்கைகளால் என்னை மகிழ்ச்சியாக்கினீர், உமது கரத்தின் கிரியைகளினிமித்தம் ஆனந்தசத்தமிடுவேன்.

5கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு மகத்துவமானவைகள்! உமது யோசனைகள் மகா ஆழமானவைகள்.

6மிருககுணமுள்ள மனுஷன் அதை அறியான்; மூடன் அதை உணரான்.

7துன்மார்க்கர் புல்லைப்போலே தழைத்து, அக்கிரமக்காரர் யாவரும் செழிக்கும்போது, அது அவர்கள் என்றென்றைக்கும் அழிந்துபோவதற்கே ஏதுவாகும்.

8கர்த்தாவே, நீர் என்றென்றைக்கும் உன்னதமானவராயிருக்கிறீர்.

9கர்த்தாவே, உமது சத்துருக்கள் அழிவார்கள்; உமது சத்துருக்கள் அழிந்தேபோவார்கள்; சகல அக்கிரமக்காரரும் சிதறுண்டுபோவார்கள்.

10என் கொம்பைக் காண்டாமிருகத்தின் கொம்பைப்போல உயர்த்துவீர்; புது எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்படுகிறேன்.

11என் சத்துருக்களுக்கு நேரிடுவதை என் கண் காணும்; எனக்கு விரோதமாய் எழும்புகிற துன்மார்க்கருக்கு நேரிடுவதை என் காது கேட்கும்.

12நீதிமான் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்.

13கர்த்தருடைய ஆலயத்திலே நாட்டப்பட்டவர்கள் எங்கள் தேவனுடைய பிராகாரங்களில் செழித்திருப்பார்கள்.

14கர்த்தர் உத்தமரென்றும், என் கன்மலையாகிய அவரிடத்தில் அநீதியில்லையென்றும், விளங்கப்பண்ணும்படி,

15அவர்கள் முதிர்வயதிலும் கனிதந்து, புஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள்.

சங்கீதம் 93

1கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார், மகத்துவத்தை அணிந்துகொண்டிருக்கிறார்; கர்த்தர் பராக்கிரமத்தை அணிந்து, அவர் அதைக் கச்சையாகக் கட்டிக்கொண்டிருக்கிறார்; ஆதலால் பூச்சக்கரம் அசையாதபடி நிலைபெற்றிருக்கிறது.

2உமது சிங்காசனம் பூர்வமுதல் உறுதியானது; நீர் அநாதியாயிருக்கிறீர்.

3கர்த்தாவே, நதிகள் எழும்பின; நதிகள் இரைச்சலிட்டு எழும்பின; நதிகள் அலைதிரண்டு எழும்பின.

4திரளான தண்ணீர்களின் இரைச்சலைப்பார்க்கிலும், சமுத்திரத்தின் வலுமையான அலைகளைப்பார்க்கிலும், கர்த்தர் உன்னதத்திலே வல்லமையுள்ளவர்.

5உமது சாட்சிகள் மிகவும் உண்மையுள்ளவைகள்; கர்த்தாவே, பரிசுத்தமானது நித்திய நாளாக உமது ஆலயத்தின் அலங்காரமாயிருக்கிறது.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com