1அப்னேர் எப்ரோனிலே செத்துப்போனதைச் சவுலின் குமாரன் கேட்டபோது, அவன் கைகள் திடனற்றுப்போயிற்று; இஸ்ரவேலரெல்லாரும் கலங்கினார்கள்.
2சவுலின் குமாரனுக்குப் படைத்தலைவரான இரண்டுபேர் இருந்தார்கள்; ஒருவனுக்குப் பேர் பானா, மற்றவனுக்குப் பேர் ரேகாப்; அவர்கள் பென்யமீன் புத்திரரில் பேரோத்தியனாகிய ரிம்மோனின் குமாரர்கள். பேரோத்தும் பென்யமீனுக்கு அடுத்ததாய் எண்ணப்பட்டது.
3பேரோத்தியர் கித்தாயீமுக்கு ஓடிப்போய், இந்நாள் வரைக்கும் அங்கே சஞ்சரிக்கிறார்கள்.
4சவுலின் குமாரன் யோனத்தானுக்கு இரண்டு காலும் முடமான ஒரு குமாரன் இருந்தான்; சவுலும் யோனத்தானும் மடிந்த செய்தி யெஸ்ரயேலிலிருந்து வருகிறபோது, அவன் ஐந்து வயதுள்ளவனாயிருந்தான்; அப்பொழுது அவனுடைய தாதி அவனை எடுத்துக்கொண்டு ஓடிப்போனாள்; அவள் ஓடிப்போகிற அவசரத்தில் அவன் விழுந்து முடவனானான்: அவனுக்கு மேவிபோசேத் என்று பேர்.
5பேரோத்தியனான அந்த ரிம்மோனின் குமாரராகிய ரேகாபும் பானாவும் போய், இஸ்போசேத் மத்தியானத்திலே வெய்யில் நேரத்தில் படுக்கையின்மேல் சயனித்திருக்கும்போது அவன் வீட்டிற்குள் பிரவேசித்து,
6கோதுமை வாங்க வருகிறவர்கள்போல, நடுவீடுமட்டும் வந்து, அவனை வயிற்றிலே குத்திப்போட்டார்கள்; பின்பு ரேகாபும் அவன் சகோதரன் பானாவும் தப்பி ஓடிப்போனார்கள்.
7அவன் தன் பள்ளி அறையிலே தன் கட்டிலின்மேல் படுத்திருக்கும்போது இவர்கள் உள்ளே போய், அவனைக் குத்திக்கொன்று போட்டு, அவன் தலையை வெட்டிப்போட்டார்கள்; பின்பு அவன் தலையை எடுத்துக்கொண்டு, இராமுழுதும் அந்தரவெளி வழியாய் நடந்து,
8எப்ரோனிலிருக்கிற தாவீதினிடத்தில் இஸ்போசேத்தின் தலையைக்கொண்டுவந்து, ராஜாவை நோக்கி: இதோ, உம்முடைய பிராணனை வாங்கத்தேடின உம்முடைய சத்துருவாயிருந்த சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தின் தலை; இன்றையதினம் கர்த்தர் ராஜாவாகிய எங்கள் ஆண்டவனுக்காகச் சவுலின் கையிலும் அவன் குடும்பத்தாரின் கையிலும் பழிவாங்கினார் என்றார்கள்.
9ஆனாலும் தாவீது பேரோத்தியனான ரிம்மோனின் குமாரராகிய ரேகாபுக்கும், அவன் சகோதரன் பானாவுக்கும் பிரதியுத்தரமாக: என் ஆத்துமாவை எல்லா இக்கட்டுக்கும் நீங்கலாக்கி மீட்ட கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு நான் சொல்லுகிறதைக் கேளுங்கள்.
10இதோ, ஒருவன் எனக்கு நற்செய்தி கொண்டுவருகிறவன் என்று எண்ணி, சவுல் செத்துப்போனான் என்று எனக்கு அறிவித்து, தனக்கு வெகுமானம் கிடைக்கும் என்று நினைத்தபோது, அவனை நான் பிடித்து சிக்லாகிலே கொன்றுபோட்டேனே.
11தமது வீட்டிற்குள் தமது படுக்கையின்மேல் படுத்திருந்த நீதிமானைக் கொலை செய்த பொல்லாத மனுஷருக்கு எவ்வளவு அதிகமாய் ஆக்கினை செய்யவேண்டும்? இப்போதும் நான் அவருடைய இரத்தப்பழியை உங்கள் கைகளில் வாங்கி, உங்களை பூமியிலிருந்து அழித்துப்போடாதிருப்பேனோ என்று சொல்லி,
12அவர்களைக் கொன்று போடவும், அவர்கள் கைகளையும் கால்களையும் தறித்து, எப்ரோனிலிருக்கிற குளத்தண்டையிலே தூக்கிப்போடவும் தன் சேவகருக்குக் கட்டளையிட்டான். இஸ்போசேத்தின் தலையை எடுத்து, எப்ரோனிலிருக்கிற அப்னேரின் கல்லறையிலே அடக்கம்பண்ணினார்கள்.
1அக்காலத்திலே இஸ்ரவேலின் கோத்திரங்களெல்லாம் எப்ரோனிலிருக்கிற தாவீதினிடத்தில் வந்து: இதோ, நாங்கள் உம்முடைய எலும்பும் உம்முடைய மாம்சமுமானவர்கள்.
2சவுல் எங்கள்மேல் ராஜாவாயிருக்கும்போதே இஸ்ரவேலை நடத்திக்கொண்டுபோனவரும், நடத்திக்கொண்டு வந்தவரும் நீரே; கர்த்தர்: என் ஜனமாகிய இஸ்ரவேலை நீ மேய்த்து, நீ இஸ்ரவேலின்மேல் தலைவனாயிருப்பாய் என்று உம்மிடத்தில் சொன்னாரே என்றார்கள்.
3இஸ்ரவேலின் மூப்பர் எல்லாரும் எப்ரோனிலே ராஜாவினிடத்தில் வந்தார்கள்; தாவீது ராஜா எப்ரோனிலே கர்த்தருக்கு முன்பாக அவர்களோடே உடன்படிக்கைபண்ணினபின்பு, அவர்கள் தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள்.
4தாவீது ராஜாவாகும்போது, முப்பது வயதாயிருந்தான்; அவன் நாற்பது வருஷம் ராஜ்யபாரம் பண்ணினான்.
5அவன் எப்ரோனிலே யூதாவின்மேல் ஏழு வருஷமும் ஆறு மாதமும், எருசலேமிலே சமஸ்த இஸ்ரவேலின்மேலும் யூதாவின்மேலும் முப்பத்துமூன்று வருஷமும் ராஜ்யபாரம்பண்ணினான்.
6தேசத்திலே குடியிருக்கிற எபூசியர்மேல் யுத்தம்பண்ண ராஜாவானவன் தன் மனுஷரோடேகூட எருசலேமுக்குப் போனான். அவர்கள்: இதிலே பிரவேசிக்க தாவீதினால் கூடாது என்று எண்ணி, தாவீதை நோக்கி: நீ இதற்குள் பிரவேசிப்பதில்லை; குருடரும் சப்பாணிகளும் உன்னைத் தடுப்பார்கள் என்று சொன்னார்கள்.
7ஆனாலும் தாவீது சீயோன் கோட்டையைப் பிடித்தான்; அது தாவீதின் நகரமாயிற்று.
8எவன் சாலகத்தின் வழியாய் ஏறி, எபூசியரையும் தாவீதின் ஆத்துமா பகைக்கிற சப்பாணிகளையும், குருடரையும் முறிய அடிக்கிறானோ, அவன் தலைவனாயிருப்பான் என்று தாவீது அன்றையதினம் சொல்லியிருந்தான்; அதனால் குருடனும் சப்பாணியும் வீட்டிலே வரலாகாது என்று சொல்லுகிறதுண்டு.
9அந்தக் கோட்டையிலே தாவீது வாசம்பண்ணி, அதற்குத் தாவீதின் நகரம் என்று பேரிட்டு, மில்லோ என்னும் ஸ்தலந்துவக்கி, உட்புறமட்டும் சுற்றிலும் இருக்கிற மதிலைக் கட்டினான்.
10தாவீது நாளுக்குநாள் விருத்தியடைந்தான்; சேனைகளின் தேவனாகிய கர்த்தர் அவனோடேகூட இருந்தார்.
11தீருவின் ராஜாவாகிய ஈராம் தாவீதினிடத்தில் ஸ்தானாபதிகளையும், கேதுரு மரங்களையும், தச்சரையும், கல்தச்சரையும் அனுப்பினான்; அவர்கள் தாவீதுக்கு ஒரு வீட்டைக் கட்டினார்கள்.
12கர்த்தர் தன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாகத் திடப்படுத்தி, தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலினிமித்தம் தன்னுடைய ராஜ்யத்தை உயர்த்தினார் என்று தாவீது கண்டறிந்தபோது,
13அவன் எப்ரோனிலிருந்து வந்த பின்பு, எருசலேமில் இன்னும் அதிகமான மறுமனையாட்டிகளையும் ஸ்திரீகளையும் கொண்டான்; இன்னும் அதிக குமாரரும் குமாரத்திகளும் தாவீதுக்குப் பிறந்தார்கள்.
14எருசலேமில் அவனுக்குச் சம்முவா, சோபாப், நாத்தான், சாலொமோன்,
15இப்பார், எலிசூவா, நெப்பேக், யப்பியா,
16எலிஷாமா, எலியாதா, எலிப்பேலேத் என்னும் பேர்களையுடைய குமாரர் பிறந்தார்கள்.
17தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள் என்று பெலிஸ்தர் கேள்விப்பட்டபோது, அவர்கள் எல்லாரும் தாவீதைத் தேடும்படி வந்தார்கள்; அதைத் தாவீது கேட்டபோது, ஒரு அரணிப்பான இடத்துக்குப் போனான்.
18பெலிஸ்தரோ வந்து, ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே பரவியிருந்தார்கள்.
19பெலிஸ்தருக்கு விரோதமாய்ப் போகலாமா, அவர்களை என் கையிலே ஒப்புக்கொடுப்பீரா என்று தாவீது கர்த்தரிடத்தில் விசாரித்தபோது, கர்த்தர்: போ, பெலிஸ்தரை உன் கையில் நிச்சயமாய் ஒப்புக்கொடுப்பேன் என்று தாவீதுக்குச் சொன்னார்.
20தாவீது பாகால் பிராசீமுக்கு வந்து, அங்கே அவர்களை முறிய அடித்து: தண்ணீர்கள் உடைத்தோடுகிறதுபோல, கர்த்தர் என் சத்துருக்களை எனக்கு முன்பாக உடைத்து ஓடப்பண்ணினார் என்று சொல்லி, அதினிமித்தம் அந்த ஸ்தலத்திற்குப் பாகால்பிராசீம் என்று பேரிட்டான்.
21அங்கே பெலிஸ்தர் தங்கள் விக்கிரகங்களைவிட்டு ஓடிப்போனார்கள்; அவைகளைத் தாவீதும் அவன் மனுஷரும் சுட்டெரித்தார்கள்.
22பெலிஸ்தர் திரும்பவும் வந்து, ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே இறங்கினார்கள்.
23தாவீது கர்த்தரிடத்தில் விசாரித்ததற்கு, அவர்: நீ நேராய்ப் போகாமல், அவர்களுக்குப் பின்னாலே சுற்றி, முசுக்கட்டைச் செடிகளுக்கு எதிரேயிருந்து, அவர்கள்மேல் பாய்ந்து,
24முசுக்கட்டைச் செடிகளின் நுனிகளிலே செல்லுகிற இரைச்சலை நீ கேட்கும்போது, சீக்கிரமாய் எழும்பிப்போ; அப்பொழுது பெலிஸ்தரின் பாளயத்தை முறிய அடிக்க, கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்பட்டிருப்பார் என்றார்.
25கர்த்தர் தாவீதுக்குக் கட்டளையிட்டபிரகாரம் அவன் செய்து, பெலிஸ்தரைக் கேபா துவக்கிக் கேசேர் எல்லைமட்டும் முறிய அடித்தான்.
1அன்றியும், சகோதரரே, நான் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தை மறுபடியும் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்; நீங்களும் அதை ஏற்றுக்கொண்டு, அதிலே நிலைத்திருக்கிறீர்கள்.
2நான் உங்களுக்குப் பிரசங்கித்தபிரகாரமாய், நீங்கள் அதைக் கைக்கொண்டிருந்தால், அதினாலே நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்; மற்றப்படி உங்கள் விசுவாசம் விருதாவாயிருக்குமே.
3நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து,
4அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்து,
5கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார்.
6அதன்பின்பு அவர் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரேவேளையில் தரிசனமானார்; அவர்களில் அநேகர் இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள், சிலர் மாத்திரம் நித்திரையடைந்தார்கள்.
7பின்பு யாக்கோபுக்கும், அதன்பின்பு அப்போஸ்தலரெல்லாருக்கும் தரிசனமானார்.
8எல்லாருக்கும் பின்பு, அகாலப்பிறவிபோன்ற எனக்கும் தரிசனமானார்.
9நான் அப்போஸ்தலரெல்லாரிலும் சிறியவனாயிருக்கிறேன்; தேவனுடைய சபையைத் துன்பப்படுத்தினதினாலே, நான் அப்போஸ்தலனென்று பேர்பெறுவதற்கும் பாத்திரன் அல்ல.
10ஆகிலும் நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை; அவர்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டேன்; ஆகிலும் நான் அல்ல, என்னுடனே இருக்கிற தேவகிருபையே அப்படிச் செய்தது.
11ஆகையால் நானாகிலும் அவர்களாகிலும் இப்படியே பிரசங்கித்துவருகிறோம், நீங்களும் இப்படியே விசுவாசித்திருக்கிறீர்கள்.
12கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்தாரென்று பிரசங்கிக்கப்பட்டிருக்க, மரித்தோரின் உயிர்தெழுதலில்லையென்று உங்களில் சிலர் எப்படிச் சொல்லலாம்?
13மரித்தோரின் உயிர்த்தெழுதலில்லாவிட்டால், கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லையே.
14கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா.
15மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், தேவன் எழுப்பாத கிறிஸ்துவை அவர் எழுப்பினாரென்று நாங்கள் தேவனைக்குறித்துச் சாட்சிசொன்னதினாலே, தேவனுக்காகப் பொய்ச்சாட்சி சொல்லுகிறவர்களாகவும் காணப்படுவோமே.
16மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லை.
17கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள்.
18கிறிஸ்துவுக்குள் நித்திரையடைந்தவர்களும் கெட்டிருப்பார்களே.
19இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்.
20கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்தெழுந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்.
21மனுஷனால் மரணம் உண்டானபடியால், மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று.
22ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.
23அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.
24அதன்பின்பு முடிவு உண்டாகும்; அப்பொழுது அவர் சகல துரைத்தனத்தையும் சகல அதிகாரத்தையும் வல்லமையையும் பரிகரித்து, தேவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார்.
25எல்லாச் சத்துருக்களையும் தமது பாதத்திற்குக் கீழாக்கிப்போடும்வரைக்கும், அவர் ஆளுகை செய்யவேண்டியது.
26பரிகரிக்கப்படுங்கடைசிச் சத்துரு மரணம்.
27சகலத்தையும் அவருடைய பாதத்திற்குக் கீழ்ப்படுத்தினாரே; ஆகிலும் சகலமும் அவருக்குக் கீழ்ப்படுத்தப்பட்டதென்று சொல்லியிருக்கும்போது, சகலத்தையும் அவருக்குக் கீழ்ப்படுத்தினவர் கீழ்ப்படுத்தப்படவில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது.
28சகலமும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்.
29மேலும் மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், மரித்தவர்களுக்காக ஞானஸ்நானம் பெறுகிறவர்கள் என்ன செய்வார்கள்? மரித்தவர்களுக்காக ஏன் ஞானஸ்நானம் பெறுகிறார்கள்?
30நாங்களும் ஏன் எந்நேரமும் நாசமோசத்திற்கு ஏதுவாயிருக்கிறோம்?
31நான் அநுதினமும் சாகிறேன்; அதை நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினால் உங்களைக்குறித்து, நான் பாராட்டுகிற மேன்மையைக்கொண்டு சத்தியமாய்ச் சொல்லுகிறேன்.
32நான் எபேசுவிலே துஷ்டமிருகங்களுடனே போராடினேனென்று மனுஷர் வழக்கமாய்ச் சொல்லுகிறேன்; அப்படிப் போராடினதினாலே எனக்குப் பிரயோஜனமென்ன? மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், புசிப்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம் என்று சொல்லலாமே?
33மோசம்போகாதிருங்கள்; ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்.
34நீங்கள் பாவஞ்செய்யாமல் நீதிக்கேற்க விழித்துக்கொண்டு, தெளிந்தவர்களாயிருங்கள்; சிலர் தேவனைப்பற்றி அறிவில்லாதிருக்கிறார்களே; உங்களுக்கு வெட்கமுண்டாக இதைச் சொல்லுகிறேன்.
35ஆகிலும், மரித்தோர் எப்படி எழுந்திருப்பார்கள், எப்படிப்பட்ட சரீரத்தோடே வருவார்களென்று ஒருவன் சொல்வானாகில்,
36புத்தியீனனே, நீ விதைக்கிற விதை செத்தாலொழிய உயிர்க்கமாட்டாதே.
37நீ விதைக்கிறபோது, இனி உண்டாகும் மேனியை விதையாமல், கோதுமை, அல்லது மற்றொரு தானியத்தினுடைய வெறும் விதையையே விதைக்கிறாய்.
38அதற்கு தேவன் தமது சித்தத்தின்படியே மேனியைக் கொடுக்கிறார்; விதை வகைகள் ஒவ்வொன்றிற்கும் அதற்கேற்ற மேனியையே கொடுக்கிறார்.
39எல்லா மாம்சமும் ஒரேவிதமான மாம்சமல்ல; மனுஷருடைய மாம்சம் வேறே, மிருகங்களுடைய மாம்சம் வேறே, மச்சங்களுடைய மாம்சம் வேறே, பறவைகளுடைய மாம்சம் வேறே.
40வானத்துக்குரிய மேனிகளுமுண்டு, பூமிக்குரிய மேனிகளுமுண்டு; வானத்துக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே, பூமிக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே;
41சூரியனுடைய மகிமையும் வேறே, சந்திரனுடைய மகிமையும் வேறே, நட்சத்திரங்களுடைய மகிமையும் வேறே, மகிமையிலே நட்சத்திரத்துக்கு நட்சத்திரம் விசேஷித்திருக்கிறது.
42மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். அழிவுள்ளதாய் விதைக்கப்படும், அழிவில்லாததாய் எழுந்திருக்கும்;
43கனவீனமுள்ளதாய் விதைக்கப்படும், மகிமையுள்ளதாய் எழுந்திருக்கும்; பலவீனமுள்ளதாய் விதைக்கப்படும், பலமுள்ளதாய் எழுந்திருக்கும்.
44ஜென்மசரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்; ஜென்மசரீரமுமுண்டு, ஆவிக்குரிய சரீரமுமுண்டு.
45அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது; பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார்.
46ஆகிலும் ஆவிக்குரிய சரீரம் முந்தினதல்ல, ஜென்மசரீரமே முந்தினது; ஆவிக்குரிய சரீரம் பிந்தினது.
47முந்தின மனுஷன் பூமியிலிருந்துண்டான மண்ணானவன்; இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்து வந்த கர்த்தர்.
48மண்ணானவன் எப்படிப்பட்டவனோ மண்ணானவர்களும் அப்படிப்பட்டவர்களே; வானத்துக்குரியவர் எப்படிப்பட்டவரோ, வானத்துக்குரியவர்களும் அப்படிப்பட்டவர்களே.
49மேலும் மண்ணானவனுடைய சாயலை நாம் அணிந்திருக்கிறதுபோல, வானவருடைய சாயலையும் அணிந்துகொள்ளுவோம்.
50சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியாமையைச் சுதந்தரிப்பதுமில்லை.
51இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்.
52எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம்.
53அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளவேண்டும்.
54அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும்.
55மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?
56மரணத்தின் கூர் பாவம், பாவத்தின் பெலன் நியாயப்பிரமாணம்.
57நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.
58ஆகையால், எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிறபிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக.
1கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
2மனுபுத்திரனே, தீர்க்கதரிசனம் சொல்லுகிற இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாக நீ தீர்க்கதரிசனம் உரைத்து, தங்கள் இருதயத்தில் இருக்கிறதையே எடுத்துத் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவர்களோடே நீ சொல்ல வேண்டியது என்னவென்றால்: கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.
3கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: தாங்கள் ஒன்றும் தரிசியாதிருந்தும், தங்களுடைய ஆவியின் ஏவுதலைப்பின்பற்றுகிற மதிகெட்ட தீர்க்கதரிசிகளுக்கு ஐயோ!
4இஸ்ரவேலே, உன் தீர்க்கதரிசிகள் வனாந்தரங்களிலுள்ள நரிகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.
5நீங்கள் கர்த்தருடைய நாளிலே யுத்தத்தில் நிலைநிற்கும்படிக்கு, திறப்புகளில் ஏறினதுமில்லை; இஸ்ரவேல் வம்சத்தாருக்காகச் சுவரை அடைத்ததுமில்லை.
6கர்த்தர் தங்களை அனுப்பாதிருந்தும், கர்த்தர் உரைத்தாரென்று சொல்லி, அவர்கள் அபத்தத்தையும் பொய்க்குறியையும் தரிசித்து, காரியத்தை நிர்வாகம்பண்ணலாமென்று நம்பிக்கையாயிருக்கிறார்கள்.
7நான் உரைக்காதிருந்தும், நீங்கள் கர்த்தர் உரைத்தார் என்று சொல்லும்போது, அபத்தமான தரிசனையைத் தரிசித்து, பொய்க்குறியைச் சொல்லுகிறீர்கள் அல்லவா?
8ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: நீங்கள் அபத்தமானதைச் சொல்லி, பொய்யானதைத் தரிசிக்கிறபடியினால், இதோ, நான் உங்களுக்கு விரோதமானவர் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
9அபத்தமானதைத் தரிசித்து, பொய்க்குறியைச் சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு என் கை விரோதமாயிருக்கும்; அவர்கள் என் ஜனத்தின் சங்கத்தில் இருப்பதுமில்லை; இஸ்ரவேல் வம்சத்தாரின் அட்டவணையில் எழுதப்படுவதுமில்லை; இஸ்ரவேல் தேசத்துக்குள் பிரவேசிப்பதுமில்லை; அப்பொழுது நான் கர்த்தராகிய ஆண்டவரென்று அறிந்துகொள்வீர்கள்.
10சமாதானம் இல்லாதிருந்தும் சமாதானமென்று சொல்லி, அவர்கள் என் ஜனத்தை மோசம் போக்குகிறார்கள்; ஒருவன் மண்சுவரை வைக்கிறான்; இதோ, மற்றவர்கள் சாரமில்லாத சாந்தை அதற்குப் பூசுகிறார்கள்.
11சாரமில்லாத சாந்தைப் பூசுகிறவர்களை நோக்கி: அது இடிந்து விழுமென்று சொல்; வெள்ளமாகப் பெருகுகிற மழை பெய்யும்; மகா கல்மழையே, நீ சொரிவாய்; கொடிய புசல்காற்றும் அதைப் பிளக்கும்.
12இதோ, சுவர் விழும்போது: நீங்கள் பூசின பூச்சு எங்கே என்று சொல்வார்கள் அல்லவா?
13ஆகையால் என் உக்கிரத்திலே கொடிய புசல்காற்றை எழும்பி அடிக்கப்பண்ணுவேன்; என் கோபத்திலே வெள்ளமாக அடிக்கிற மழையும், என் உக்கிரத்திலே நிர்மூலமாக்கத்தக்க பெருங்கல்மழையும், சொரியும் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
14அப்பொழுது நீங்கள் சாரமில்லாத சாந்தைப் பூசின சுவரை நான் இடித்து, அதின் அஸ்திபாரம் திறந்து கிடக்கும்படி அதைத் தரையிலே விழப்பண்ணுவேன்; உள்ளே இருக்கிற நீங்கள் நிர்மூலமாகும்படி அது விழும்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.
15இப்படிச் சுவரிலும், அதற்குச் சாரமில்லாத சாந்தைப் பூசினவர்களிலும் நான் என் உக்கிரத்தைத் தீர்த்துக்கொண்டு: சுவருமில்லை, அதற்குச் சாந்துபூசினவர்களுமில்லை.
16எருசலேமைக்குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொல்லி, சமாதானம் இல்லாதிருந்தும் சமாதானம் உண்டென்று தரிசனங்காண்கிற இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகள் இல்லாமற்போவார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.
17மனுபுத்திரனே, தங்களுடைய இருதயத்தில் இருக்கிறதையே எடுத்து, தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற உன் ஜனத்தின் குமாரத்திகளுக்கு எதிராக உன் முகத்தைத் திருப்பி, அவர்களுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து, சொல்லவேண்டியது என்னவென்றால்:
18ஆத்துமாக்களை வேட்டையாடும்படிக்குச் சகல கைகளுக்கும் தழுவணைகளைத் தைத்து, அந்தந்த வயதுள்ளவர்களுடைய தலைக்கும் தலையணைகளை உண்டுபண்ணுகிறவர்களுக்கு ஐயோ! நீங்கள் என் ஜனத்தின் ஆத்துமாக்களை வேட்டையாடி, அவைகளை உங்களுக்கு உயிரோடே காப்பாற்றுவீர்களோ?
19சாகத்தகாத ஆத்துமாக்களைக் கொல்வதற்கும், உயிரோடே இருக்கத்தகாத ஆத்துமாக்களை உயிரோடே காப்பாற்றுவதற்குமாக நீங்கள் பொய்க்குச் செவிகொடுக்கிற என் ஜனத்துக்குப் பொய் சொல்லுகிறதினாலே சில சிறங்கை வாற்கோதுமைக்காகவும் அப்பத்துண்டுகளுக்காகவும் என்னை என் ஜனத்துக்குள்ளே பரிசுத்தக்குலைச்சலாக்குவீர்களோ என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.
20ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நீங்கள் ஆத்துமாக்களைப் பறக்கடிக்கும்படி வேட்டையாடுகிற உங்கள் தழுவணைகளுக்கு விரோதமாக நான் வந்து, அவைகளை உங்கள் புயங்களிலிருந்து பிடுங்கிக்கிழித்து, நீங்கள் பறக்கடிக்க வேட்டையாடுகிற ஆத்துமாக்களை நான் விடுதலைபண்ணி,
21உங்கள் தலையணைகளைக் கிழித்து, என் ஜனத்தை உங்கள் கைகளுக்கு நீங்கலாக்கிவிடுவேன்; அவர்கள் இனி வேட்டையாடப்படும்படி உங்கள் கைகளில் இரார்கள்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.
22நான் சஞ்சலப்படுத்தாத நீதிமானின் இருதயத்தை நீங்கள் வீணாய் முறியப்பண்ணினபடியினாலும், துன்மார்க்கன் தன் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பவும் நான் அவனை உயிரோடே காக்கவுங்கூடாதபடிக்கு நீங்கள் அவனுடைய கைகளைத் திடப்படுத்தினபடியினாலும்,
23நீங்கள் இனி அபத்தமானதைத் தரிசிப்பதுமில்லை, சாஸ்திரம் பார்ப்பதுமில்லை; நான் என் ஜனத்தை உங்கள் கைகளுக்கு நீங்கலாக்கிவிடுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்றார்.
1பலவானே, பொல்லாப்பில் ஏன் பெருமைபாராட்டுகிறாய்? தேவனுடைய கிருபை எந்நாளுமுள்ளது.
2நீ கேடுகளைச் செய்ய எத்தனம்பண்ணுகிறாய், கபடுசெய்யும் உன் நாவு தீட்டப்பட்ட சவரகன் கத்தியைப்போல் இருக்கிறது.
3நன்மையைப்பார்க்கிலும் தீமையையும், யாதார்த்தம் பேசுகிறதைப்பார்க்கிலும் பொய்யையும் விரும்புகிறாய். (சேலா)
4கபடமுள்ள நாவே, சங்கரிக்கும் சகல வார்த்தைகளையும் நீ விரும்புகிறாய்;
5தேவன் உன்னை என்றென்றைக்கும் இராதபடி அழித்துப்போடுவார்; அவர் உன்னைப் பிடித்து, உன் வாசஸ்தலத்திலிருந்து பிடுங்கி, நீ ஜீவனுள்ளோர் தேசத்தில் இராதபடிக்கு உன்னை நிர்மூலமாக்குவார். (சேலா)
6நீதிமான்கள் அதைக்கண்டு பயந்து, அவனைப்பார்த்து நகைத்து:
7இதோ, தேவனைத் தன் பெலனாக எண்ணாமல், தன் செல்வப்பெருக்கத்தை நம்பி, தன் தீவினையில் பலத்துக்கொண்ட மனுஷன் இவன்தான் என்பார்கள்.
8நானோ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப் போலிருக்கிறேன், தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிருக்கிறேன்.
9நீரே இதைச் செய்தீர் என்று உம்மை என்றென்றைக்கும் துதித்து, உமது நாமத்திற்குக் காத்திருப்பேன்; உம்முடைய பரிசுத்தவான்களுக்கு முன்பாக அது நலமாயிருக்கிறது.
1தேவன் இல்லை என்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்; அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான அக்கிரமங்களைச் செய்து வருகிறார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.
2தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, தேவன் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார்.
3அவர்கள் எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.
4அக்கிரமக்காரருக்கு அறிவு இல்லையா? அப்பத்தைப் பட்சிக்கிறதுபோல் என் ஜனத்தைப் பட்சிக்கிறார்களே; அவர்கள் தேவனைத் தொழுதுகொள்ளுகிறதில்லை.
5உனக்கு விரோதமாய்ப் பாளயமிறங்கினவனுடைய எலும்புகளைத் தேவன் சிதறப்பண்ணினபடியால், பயமில்லாத இடத்தில் மிகவும் பயந்தார்கள்; தேவன் அவர்களை வெறுத்தபடியினால் நீ அவர்களை வெட்கப்படுத்தினாய்.
6சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக; தேவன் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குக் களிப்பும் இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.
1தேவனே, உமது நாமத்தினிமித்தம் என்னை இரட்சித்து, உமது வல்லமையினால் எனக்கு நியாயஞ் செய்யும்.
2தேவனே, என் விண்ணப்பத்தைக் கேட்டு, என் வாயின் வார்த்தைகளுக்குச் செவிகொடும்.
3அந்நியர் எனக்கு விரோதமாய் எழும்புகிறார்கள்; கொடியர் என் பிராணனை வாங்கத் தேடுகிறார்கள்; தேவனைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி நோக்கார்கள். (சேலா)
4இதோ, தேவன் எனக்குச் சகாயர்; ஆண்டவர் என் ஆத்துமாவை ஆதரிக்கிறவர்களோடே இருக்கிறார்.
5அவர் என் சத்துருக்களுக்குத் தீமைக்குத் தீமையைச் சரிக்கட்டுவார், உமது சத்தியத்தினிமித்தம் அவர்களை நிர்மூலமாக்கும்.
6உற்சாகத்துடன் நான் உமக்குப் பலியிடுவேன்; கர்த்தாவே, உமது நாமத்தைத் துதிப்பேன், அது நலமானது.
7அவர் எல்லா நெருக்கத்தையும் நீக்கி, என்னை விடுவித்தார்; என் கண் என் சத்துருக்களில் நீதி சரிக்கட்டுதலைக் கண்டது.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com