‹ முகப்புமுழுத் திட்டம்

செப்டம்பர் 9 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்செப்டம்பர் 9அடுத்த நாள் ›
குடும்பம்

II சாமுவேல் 3

முழு அதிகாரம் ›

1சவுலின் குடும்பத்துக்கும் தாவீதின் குடும்பத்துக்கும் நெடுநாள் யுத்தம் நடந்தது; தாவீது வரவர பலத்தான்; சவுலின் குடும்பத்தாரோ வரவர பலவீனப்பட்டுப்போனார்கள்.

2எப்ரோனிலே தாவீதுக்குப் பிறந்த குமாரர்: யெஸ்ரயேல் ஊராளான அகினோவாமிடத்திலே பிறந்த அம்னோன் அவனுக்கு முதல் பிறந்தவன்.

3நாபாலின் மனைவியாயிருந்த கர்மேல் ஊராளான அபிகாயிலிடத்திலே பிறந்த கீலேயாப் அவனுடைய இரண்டாம் குமாரன்; மூன்றாம் குமாரன் கேசூரின் ராஜாவான தல்மாய் குமாரத்தியாகிய மாக்காள் பெற்ற அப்சலோம் என்பவன்.

4நாலாம் குமாரன் ஆகீத் பெற்ற அதொனியா என்பவன்; ஐந்தாம் குமாரன் அபித்தால் பெற்ற செப்பத்தியா என்பவன்.

5ஆறாம் குமாரன் தாவீதின் மனைவியாகிய எக்லாளிடத்தில் பிறந்த இத்ரேயாம் என்பவன்; இவர்கள் எப்ரோனிலே தாவீதுக்குப் பிறந்தவர்கள்.

6சவுலின் குடும்பத்துக்கும் தாவீதின் குடும்பத்துக்கும் யுத்தம் நடந்து வருகிறபோது, அப்னேர் சவுலின் குடும்பத்திலே பலத்தவனானான்.

7சவுலுக்கு ஆயாவின் குமாரத்தியாகிய ரிஸ்பாள் என்னும் பேருள்ள ஒரு மறுமனையாட்டி இருந்தாள்; இஸ்போசேத் அப்னேரை நோக்கி: நீ என் தகப்பனாருடைய மறுமனையாட்டியினிடத்தில் பிரவேசித்தது என்ன என்றான்.

8அப்னேர் இஸ்போசேத்தின் வார்த்தைகளுக்காக மிகவும் கோபங்கொண்டு: உம்மைத் தாவீதின் கையில் ஒப்புக்கொடாமல், இந்நாள்மட்டும் உம்முடைய தகப்பனாகிய சவுலின் குடும்பத்துக்கும், அவருடைய சகோதரருக்கும், சிநேகிதருக்கும், தயவு செய்கிறவனாகிய என்னை நீர் இன்று ஒரு ஸ்திரீயினிமித்தம் குற்றம் பிடிக்கிறதற்கு, நான் யூதாவுக்கு உட்கையான ஒரு நாய்த்தலையா?

9நான் ராஜ்யபாரத்தைச் சவுலின் குடும்பத்தை விட்டுத் தாண்டப்பண்ணி, தாவீதின் சிங்காசனத்தைத் தாண் துவக்கிப் பெயெர்செபாமட்டுமுள்ள இஸ்ரவேலின்மேலும் யூதாவின்மேலும் நிலைநிறுத்தும்படிக்கு,

10கர்த்தர் தாவீதுக்கு ஆணையிட்டபடியே, நான் அவனுக்குச் செய்யாமற்போனால், தேவன் அப்னேருக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யக்கடவர் என்றான்.

11அப்பொழுது அவன் அப்னேருக்குப் பயப்பட்டதினால், அப்புறம் ஒரு மறுமொழியும் அவனுக்குச் சொல்லாதிருந்தான்.

12அப்னேர் தன் நாமத்தினாலே தாவீதினிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: தேசம் யாருடையது? என்னோடு உடன்படிக்கைபண்ணும்; இதோ, இஸ்ரவேலையெல்லாம் உம்மிடத்தில் திருப்ப, என் கை உம்மோடிருக்கும் என்று சொல்லச் சொன்னான்.

13அதற்குத் தாவீது: நல்லது, உன்னோடே நான் உடன்படிக்கைபண்ணுவேன்; ஆனாலும் ஒரே காரியம் உன்னிடத்தில் கேட்டுக்கொள்ளுகிறேன்; அது என்னவெனில், நீ என் முகத்தைப் பார்க்க வரும்போது, சவுலின் குமாரத்தியாகிய மீகாளை நீ அழைத்து வரவேண்டும்; அதற்குமுன் நீ என் முகத்தைப் பார்ப்பதில்லை என்று சொல்லச்சொல்லி,

14அவன் சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தினிடத்திற்கும் ஸ்தானாபதிகளை அனுப்பி: நான் பெலிஸ்தருடைய நூறு நுனித்தோல்களைப் பரிசமாகக் கொடுத்து, விவாகம்பண்ணின என் மனைவியாகிய மீகாளை அனுப்பிவிடும் என்று சொல்லச் சொன்னான்.

15அப்பொழுது, இஸ்போசேத் அவளை லாயிசின் குமாரனாகிய பல்த்தியேல் என்னும் புருஷனிடத்திலிருந்து அழைத்து வர ஆட்களை அனுப்பினான்.

16அவள் புருஷன் பகூரீம் மட்டும் அவள் பிறகாலே அழுதுகொண்டு வந்தான். அப்னேர் அவனை நோக்கி: நீ திரும்பிப்போ என்றான்; அவன் திரும்பிப் போய்விட்டான்.

17அப்னேர் இஸ்ரவேலின் மூப்பரோடே பேசி: தாவீதை உங்கள்மேல் ராஜாவாக வைக்கும்படிக்கு நீங்கள் அநேகநாளாய்த் தேடினீர்களே.

18இப்போதும் அப்படிச் செய்யுங்கள்; என் தாசனாகிய தாவீதின் கையினால், என் ஜனமாகிய இஸ்ரவேலைப் பெலிஸ்தரின் கைக்கும், அவர்களுடைய எல்லாச் சத்துருக்களின் கைக்கும் நீங்கலாக்கி இரட்சிப்பேன் என்று கர்த்தர் தாவீதைக்குறித்துச் சொல்லியிருக்கிறாரே என்றான்.

19இந்தப்பிரகாரமாக அப்னேர் பென்யமீன் மனுஷர் காதுகள் கேட்கப் பேசினான்; பின்பு அப்னேர் இஸ்ரவேலர் பார்வைக்கும், பென்யமீனுடைய எல்லாக் குடும்பத்தாரின் பார்வைக்கும், சம்மதியானதையெல்லாம் எப்ரோனிலே தாவீதின் காதுகள் கேட்கப் பேசுகிறதற்குப் போனான்.

20அப்னேரும், அவனோடேகூட இருபதுபேரும் எப்ரோனிலிருக்கிற தாவீதினிடத்தில் வந்தபோது, தாவீது அப்னேருக்கும், அவனோடே வந்த மனுஷருக்கும் விருந்துசெய்தான்.

21பின்பு அப்னேர் தாவீதை நோக்கி: நான் எழுந்துபோய், இஸ்ரவேலரை எல்லாம் உம்மோடே உடன்படிக்கைபண்ணும்படிக்கு, ராஜாவாகிய என் ஆண்டவனிடத்தில் சேர்த்துக்கொண்டுவருகிறேன்; அதினாலே உம்முடைய ஆத்துமா அரசாள விரும்புகிற இடமெல்லாம் அரசாளுவீர் என்றான்; அப்படியே தாவீது அப்னேரை அனுப்பிவிட்டான்; அவன் சமாதானத்தோடேபோனான்.

22தாவீதின் சேவகரும் யோவாபும் அநேகம் பொருட்களைக் கொள்ளையிட்டு, தண்டிலிருந்து கொண்டு வந்தார்கள்; அப்பொழுது அப்னேர் எப்ரோனில் தாவீதினிடத்தில் இல்லை; அவனை அனுப்பிவிட்டான்; அவன் சமாதானத்தோடே போய்விட்டான்.

23யோவாபும் அவனோடிருந்த எல்லாச் சேனையும் வந்தபோது, நேரின் குமாரனாகிய அப்னேர் ராஜாவினிடத்தில் வந்தான் என்றும், அவர் அவனைச் சமாதானமாய்ப்போக அனுப்பிவிட்டார் என்றும், யோவாபுக்கு அறிவித்தார்கள்.

24அப்பொழுது யோவாப் ராஜாவண்டையில் பிரவேசித்து: என்ன செய்தீர்? இதோ, அப்னேர் உம்மிடத்தில் வந்தானே, நீர் அவனைப் போகவிட்டது என்ன?

25நேரின் குமாரனாகிய அப்னேரை அறிவீரே; அவன் உம்மை மோசம் போக்கவும், உம்முடைய போக்குவரத்தை அறியவும், நீர் செய்கிறதையெல்லாம் ஆராயவும் வந்தான் என்று சொன்னான்.

26யோவாப் தாவீதை விட்டுப் புறப்பட்டவுடனே, அவன் அப்னேரைத் தாவீதுக்குத் தெரியாமல் கூட்டிக்கொண்டு வரும்படி ஆட்களை அனுப்பினான்; அவர்கள் சீரா என்னும் துரவுமட்டும் போய் அவனை அழைத்துக்கொண்டுவந்தார்கள்.

27அப்னேர் எப்ரோனுக்குத் திரும்பி வருகிறபோது, யோவாப் அவனோடே இரகசியமாகப் பேசப்போகிறவன்போல, அவனை ஒலிமுகவாசலின் நடுவே ஒரு பக்கமாய் அழைத்துப்போய், தன் தம்பி ஆசகேலுடைய இரத்தப்பழியை வாங்க, அங்கே அவனை வயிற்றிலே குத்திக் கொன்றுபோட்டான்.

28தாவீது அதைக் கேட்டபோது: நேரின் குமாரனாகிய அப்னேரின் இரத்தத்திற்காக, என்மேலும் என் ராஜ்யத்தின் மேலும் கர்த்தருக்கு முன்பாக என்றைக்கும் பழியில்லை.

29அது யோவாபுடைய தலையின் மேலும், அவன் தகப்பன் குடும்பத்தின் மேலும் சுமந்திருப்பதாக; யோவாபின் வீட்டாரிலே பிரமியக்காரனும், குஷ்டரோகியும், கோல் ஊன்றி நடக்கிறவனும், பட்டயத்தால் விழுகிறவனும், அப்பம் குறைச்சலுள்ளவனும், ஒருக்காலும் ஒழிந்துபோவதில்லை என்றான்.

30அப்னேர் கிபியோனில் நடந்த யுத்தத்திலே தங்கள் தம்பியாகிய ஆசகேலைக் கொன்றதினிமித்தம் யோவாபும் அவன் சகோதரனாகிய அபிசாயும் அவனைச் சங்காரம்பண்ணினார்கள்.

31தாவீது யோவாபையும், அவனோடிருந்த சகல ஜனங்களையும் பார்த்து: நீங்கள் உங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, இரட்டுடுத்தி, அப்னேருக்கு முன்னாக நடந்து துக்கங்கொண்டாடுங்கள் என்று சொல்லி, தாவீது ராஜா தானும் பாடைக்குப் பின்சென்றான்.

32அவர்கள் அப்னேரை எப்ரோனிலே அடக்கம்பண்ணுகையில், ராஜா அப்னேரின் கல்லறையண்டையிலே சத்தமிட்டு அழுதான்; சகல ஜனங்களும் அழுதார்கள்.

33ராஜா அப்னேருக்காகப் புலம்பி: மதிகெட்டவன் சாகிறதுபோல, அப்னேர் செத்துப்போனானோ?

34உன் கைகள் கட்டப்படவும் இல்லை; உன் கால்களில் விலங்கு போடப்படவும் இல்லை; துஷ்டர் கையில் மடிகிறதுபோல மடிந்தாயே என்றான்; அப்பொழுது ஜனங்களெல்லாரும் பின்னும் அதிகமாய் அவனுக்காக அழுதார்கள்.

35பொழுது இன்னும் இருக்கையில், ஜனங்கள் எல்லாரும் வந்து: அப்பம் புசியும் என்று தாவீதுக்குச் சொன்னபோது, தாவீது: சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னே நான் அப்பத்தையாகிலும் வேறெதையாகிலும் ருசி பார்த்தால், தேவன் எனக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யக்கடவர் என்று ஆணையிட்டுச் சொன்னான்.

36ஜனங்கள் எல்லாரும் அதைக் கவனித்தார்கள், அது அவர்கள் பார்வைக்கு நன்றாயிருந்தது; அப்படியே ராஜா செய்ததெல்லாம் சகல ஜனங்களுக்கும் நலமாய்த் தோன்றினது.

37நேரின் குமாரனாகிய அப்னேரைக் கொன்றுபோட்டது ராஜாவினால் உண்டானதல்லவென்று அந்நாளிலே சகல ஜனங்களும், இஸ்ரவேலர் அனைவரும் அறிந்துகொண்டார்கள்.

38ராஜா தன் ஊழியக்காரரை நோக்கி: இன்றையதினம் இஸ்ரவேலில் பிரபுவும் பெரிய மனுஷனுமாகிய ஒருவன் விழுந்தான் என்று அறியீர்களா?

39நான் ராஜாவாக அபிஷேகம்பண்ணப்பட்டவனாயிருந்தபோதிலும், நான் இன்னும் பலவீனன்; செருயாவின் குமாரராகிய இந்த மனுஷர் என் பலத்துக்கு மிஞ்சினவர்களாயிருக்கிறார்கள், அந்தப் பொல்லாப்பைச் செய்தவனுக்குக் கர்த்தர் அவன் பொல்லாப்புக்குத்தக்கதாய்ச் சரிக்கட்டுவாராக என்றான்.

I கொரிந்தியர் 14

முழு அதிகாரம் ›

1அன்பை நாடுங்கள்; ஞானவரங்களையும் விரும்புங்கள்; விசேஷமாய்த் தீர்க்கதரிசன வரத்தை விரும்புங்கள்.

2ஏனெனில், அந்நிய பாஷையில் பேசுகிறவன், ஆவியினாலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.

3தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவனோ மனுஷருக்கு பக்திவிருத்தியும், புத்தியும், ஆறுதலும் உண்டாகத்தக்கதாகப் பேசுகிறான்.

4அந்நியப்பாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப்பேசுகிறான்; தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவனோ சபைக்கு பக்திவிருத்தி உண்டாகப்பேசுகிறான்.

5நீங்களெல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன்; ஆகிலும், அந்நியபாஷைகளில் பேசுகிறவன் சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகும்படிக்கு அர்த்தத்தையும் சொல்லாவிட்டால், தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவன் அவனிலும் மேன்மையுள்ளவன்; ஆதலால் நீங்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவர்களாகவேண்டுமென்று அதிகமாய் விரும்புகிறேன்.

6மேலும், சகோதரரே, நான் உங்களிடத்தில் வந்து உங்களுக்கு இரகசியங்களை வெளிப்படுத்துவதற்காவது, அறிவுண்டாக்குவதற்காவது, தீர்க்கதரிசனத்தை அறிவிக்கிறதற்காவது, போதகத்தைப் போதிக்கிறதற்காவது ஏதுவானதைச் சொல்லாமல், அந்நியபாஷைகளில் பேசினால் என்னாலே உங்களுக்குப் பிரயோஜனம் என்ன?

7அப்படியே புல்லாங்குழல், சுரமண்டலம் முதலாகிய சத்தமிடுகிற உயிரில்லாத வாத்தியங்கள் தொனிகளில் வித்தியாசம் காட்டாவிட்டால், குழலாலே ஊதப்படுகிறதும், சுரமண்டலத்தாலே வாசிக்கப்படுகிறதும் இன்னதென்று எப்படித் தெரியும்?

8அந்தப்படி எக்காளமும் விளங்காத சத்தமிட்டால் எவன் யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணுவான்?

9அதுபோல, நீங்களும் தெளிவான பேச்சை நாவினால் வசனியாவிட்டால் பேசப்பட்டது இன்னதென்று எப்படித் தெரியும்? ஆகாயத்தில் பேசுகிறவர்களாயிருப்பீர்களே.

10உலகத்திலே எத்தனையோவிதமான பாஷைகள் உண்டாயிருக்கிறது, அவைகளில் ஒன்றும் அர்த்தமில்லாததல்ல.

11ஆயினும், பாஷையின் கருத்தை நான் அறியாமலிருந்தால், பேசுகிறவனுக்கு அந்நியனாயிருப்பேன், பேசுகிறவனும் எனக்கு அந்நியனாயிருப்பான்.

12நீங்களும் ஆவிக்குரிய வரங்களை நாடுகிறவர்களானபடியால், சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகத்தக்கதாக அவைகளில் தேறும்படி நாடுங்கள்;

13அந்தப்படி அந்நியபாஷையில் பேசுகிறவன் அதின் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக விண்ணப்பம் பண்ணக்கடவன்.

14என்னத்தினாலெனில், நான் அந்நியபாஷையிலே விண்ணப்பம்பண்ணினால் என் ஆவி விண்ணப்பம்பண்ணுமேயன்றி, என் கருத்து பயனற்றதாயிருக்கும்.

15இப்படியிருக்க, செய்யவேண்டுவதென்ன? நான் ஆவியோடும் விண்ணப்பம்பண்ணுவேன்; கருத்தோடும் விண்ணப்பம்பண்ணுவேன்; நான் ஆவியோடும் பாடுவேன், கருத்தோடும் பாடுவேன்.

16இல்லாவிட்டால், நீ ஆவியோடு ஸ்தோத்திரம்பண்ணும்போது, கல்லாதவன் உன் ஸ்தோத்திரத்திற்கு ஆமென் என்று எப்படிச் சொல்லுவான்? நீ பேசுகிறது இன்னதென்று அவன் அறியானே.

17நீ நன்றாய் ஸ்தோத்திரம்பண்ணுகிறாய், ஆகிலும் மற்றவன் பக்திவிருத்தியடையமாட்டானே.

18உங்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பாஷைகளைப் பேசுகிறேன், இதற்காக என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.

19அப்படியிருந்தும், நான் சபையிலே அந்நியபாஷையில் பதினாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதிலும், மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடே ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாயிருக்கும்.

20சகோதரரே, நீங்கள் புத்தியிலே குழந்தைகளாயிராதேயுங்கள்; துர்க்குணத்திலே குழந்தைகளாயும், புத்தியிலோ தேறினவர்களாயுமிருங்கள்.

21மறுபாஷைக்காரராலும், மறுவுதடுகளாலும் இந்த ஜனங்களிடத்தில் பேசுவேன்; ஆகிலும் அவர்கள் எனக்குச் செவிகொடுப்பதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று வேதத்தில் எழுதியிருக்கிறதே.

22அப்படியிருக்க, அந்நியபாஷைகள் விசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது; தீர்க்கதரிசனமோ அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், விசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது.

23ஆகையால், சபையாரெல்லாரும் ஏகமாய்க் கூடிவந்து, எல்லாரும் அந்நியபாஷைகளிலே பேசிக்கொள்ளும்போது, கல்லாதவர்களாவது, அவிசுவாசிகளாவது உள்ளே பிரவேசித்தால், அவர்கள் உங்களைப் பைத்தியம் பிடித்தவர்களென்பார்களல்லவா?

24எல்லாரும் தீர்க்கதரிசனஞ் சொல்லுகையில், அவிசுவாசியொருவன், அல்லது கல்லாதவனொருவன், உள்ளே பிரவேசித்தால், அவன் எல்லாராலும் உணர்த்துவிக்கப்பட்டும், எல்லாராலும் நிதானிக்கப்பட்டும் இருப்பான்.

25அவனுடைய இருதயத்தின் அந்தரங்கங்களும் வெளியரங்கமாகும்; அவன் முகங்குப்புற விழுந்து, தேவனைப்பணிந்துகொண்டு, தேவன் மெய்யாய் உங்களுக்குள்ளே இருக்கிறாரென்று அறிக்கையிடுவான்.

26நீங்கள் கூடிவந்திருக்கிறபோது, உங்களில் ஒருவன் சங்கீதம் பாடுகிறான், ஒருவன் போதகம் பண்ணுகிறான், ஒருவன் அந்நியபாஷையைப் பேசுகிறான், ஒருவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான், ஒருவன் வியாக்கியானம்பண்ணுகிறான். சகோதரரே, இது என்ன? சகலமும் பக்திவிருத்திக்கேதுவாகச் செய்யப்படக்கடவது.

27யாராவது அந்நியபாஷையிலே பேசுகிறதுண்டானால், அது இரண்டுபேர்மட்டில், அல்லது மிஞ்சினால் மூன்றுபேர்மட்டில் அடங்கவும், அவர்கள் ஒவ்வொருவராய்ப் பேசவும், ஒருவன் அர்த்தத்தைச் சொல்லவும் வேண்டும்.

28அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால், சபையிலே பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேசக்கடவன்.

29தீர்க்கதரிசிகள் இரண்டு பேராவது மூன்றுபேராவது பேசலாம், மற்றவர்கள் நிதானிக்கக்கடவர்கள்.

30அங்கே உட்கார்ந்திருக்கிற மற்றொருவனுக்கு ஏதாகிலும் வெளிப்படுத்தப்பட்டால், முந்திப் பேசினவன் பேசாமலிருக்கக்கடவன்.

31எல்லாரும் கற்கிறதற்கும் எல்லாரும் தேறுகிறதற்கும், நீங்கள் அனைவரும் ஒவ்வொருவராகத் தீர்க்கதரிசனஞ்சொல்லலாம்.

32தீர்க்கதரிசிகளுடைய ஆவிகள் தீர்க்கதரிசிகளுக்கு அடங்கியிருக்கிறதே.

33தேவன் கலகத்திற்குத் தேவனாயிராமல், சமாதானத்திற்குத் தேவனாயிருக்கிறார்; பரிசுத்தவான்களுடைய சபைகளெல்லாவற்றிலேயும் அப்படியே இருக்கிறது.

34சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக்கடவர்கள்; பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை; அவர்கள் அமர்ந்திருக்கவேண்டும்; வேதமும் அப்படியே சொல்லுகிறது.

35அவர்கள் ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ளவிரும்பினால், வீட்டிலே தங்கள் புருஷரிடத்தில் விசாரிக்கக்கடவர்கள்; ஸ்திரீகள் சபையிலே பேசுகிறது அயோக்கியமாயிருக்குமே.

36தேவவசனம் உங்களிடத்திலிருந்தா புறப்பட்டது? அது உங்களிடத்துக்கு மாத்திரமா வந்தது?

37ஒருவன் தன்னைத் தீர்க்கதரிசியென்றாவது, ஆவியைப் பெற்றவனென்றாவது எண்ணினால், நான் உங்களுக்கு எழுதுகிறவைகள் கர்த்தருடைய கற்பனைகளென்று அவன் ஒத்துக்கொள்ளக்கடவன்.

38ஒருவன் அறியாதவனாயிருந்தால், அவன் அறியாதவனாயிருக்கட்டும்.

39இப்படியிருக்க, சகோதரரே, தீர்க்கதரிசனஞ்சொல்ல நாடுங்கள், அந்நியபாஷைகளைப் பேசுகிறதற்கும் தடைபண்ணாதிருங்கள்.

40சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது.

தனிவாசிப்பு

எசேக்கியேல் 12

முழு அதிகாரம் ›

1கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

2மனுபுத்திரனே, நீ கலகவீட்டாரின் நடுவிலே தங்கியிருக்கிறாய்; காணும்படிக்கு அவர்களுக்குக் கண்கள் இருந்தாலும் காணாமற்போகிறார்கள்; கேட்கும்படிக்கு அவர்களுக்குக் காதுகள் இருந்தாலும் கேளாமற்போகிறார்கள்; அவர்கள் கலகவீட்டார்.

3இப்போதும் மனுபுத்திரனே, நீ பரதேசம் போகும்படி பிரயாண சமான்களை ஆயத்தப்படுத்தி, பகற்காலத்திலே அவர்கள் கண்களுக்கு முன்பாகப் பிரயாணப்படு; உன் ஸ்தலத்தைவிட்டு வேறே ஸ்தலத்துக்கு அவர்களுடைய கண்களுக்கு முன்பாகப் புறப்பட்டுப்போ; அவர்கள் கலகவீட்டாரானபோதிலும் ஒருவேளை சிந்தித்து உணருவார்கள்.

4சிறையிருப்புக்குப் போகிறவனைப்போல் உன் சாமான்களை நீ பகற்காலத்திலே அவர்கள் கண்களுக்கு முன்பாக வெளியே வைத்து, நீ சாயங்காலத்திலே அவர்கள் கண்களுக்கு முன்பாகச் சிறையிருப்புக்குப் போகிறவனைப்போல் புறப்படுவாயாக.

5அவர்களுடைய கண்களுக்கு முன்பாக நீ சுவரிலே துவாரமிட்டு, அதின் வழியாய் அவைகளை வெளியே கொண்டுபோவாயாக.

6அவர்களுடைய கண்களுக்கு முன்பாக அவைகளை உன் தோளின்மேல் எடுத்து, மாலைமயங்கும் வேளையிலே வெளியே கொண்டுபோவாயாக; நீ தேசத்தைப் பாராதபடி உன் முகத்தை மூடிக்கொள்; இஸ்ரவேல் வம்சத்தாருக்கு உன்னை அடையாளமாக்கினேன் என்றார்.

7எனக்குக் கட்டளையிட்டபடியே நான் செய்தேன்; சிறைப்பட்டுப்போகும்போது சாமான்களைக் கொண்டுபோவதுபோல என் சாமான்களைப் பகற்காலத்தில் வெளியே வைத்தேன்; சாயங்காலத்திலோ கையினால் சுவரிலே துவாரமிட்டு, மாலைமயங்கும் வேளையிலே அவைகளை வெளியே கொண்டுபோய், அவர்கள் கண்களுக்கு முன்பாக அவைகளைத் தோளின்மேல் எடுத்துக்கொண்டுபோனேன்.

8விடியற்காலத்திலே கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

9மனுபுத்திரனே, கலகவீட்டாராகிய இஸ்ரவேல் வம்சத்தார் உன்னைப் பார்த்து: நீ செய்கிறது என்னவென்று உன்னைக் கேட்டார்கள் அல்லவா?

10இது எருசலேமில் இருக்கிற அதிபதியின்மேலும் அதின் நடுவில் இருக்கிற இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரின்மேலும் சுமரும் பாரம் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று அவர்களிடத்தில் சொல்லு.

11நீ அவர்களை நோக்கி: நான் உங்களுக்கு அடையாளமாயிருக்கிறேன்; நான் செய்வது எப்படியோ, அப்படியே அவர்களுக்கும் செய்யப்படும்; சிறைப்பட்டுப் பரதேசம் போவார்கள்.

12அவர்கள் நடுவில் இருக்கிற அதிபதி மாலைமயங்கும்போது தோளின்மேல் சுமைசுமந்து புறப்படுவான்; வெளியே சுமைகொண்டுபோகச் சுவரிலே துவாரமிடுவார்கள்; கண்ணினாலே அவன் தன் தேசத்தைக் காணாதபடி தன் முகத்தை மூடிக்கொள்வான்.

13நான் என் வலையை அவன்மேல் வீசுவேன், அவன் என் கண்ணியிலே பிடிபடுவான்; அவனைக் கல்தேயர் தேசமாகிய பாபிலோனுக்குக் கொண்டுபோவேன்; அங்கே அவன் சாவான்; ஆகிலும் அதைக் காணமாட்டான்.

14அவனுக்கு உதவியாக அவனைச் சுற்றிலும் இருக்கிற யாவரையும் அவனுடைய எல்லா இராணுவங்களையும் நான் சகல திசைகளிலும் தூற்றி, அவர்கள் பின்னே பட்டயத்தை உருவுவேன்.

15அப்படி நான் அவர்களை ஜாதிகளுக்குள்ளே தூற்றி, அவர்களை தேசங்களிலே சிதறடிக்கும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.

16ஆனாலும் தாங்கள் போய்ச்சேரும் ஜாதிகளுக்குள்ளே தங்கள் அருவருப்புகளையெல்லாம் விவரிக்கும்படி, நான் அவர்களில் கொஞ்சம்பேரைப் பஞ்சத்துக்கும் பட்டயத்துக்கும் கொள்ளைநோய்க்கும் தப்பி மீந்திருக்கப்பண்ணுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் என்று சொல் என்றார்.

17பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

18மனுபுத்திரனே, நீ உன் அப்பத்தை நடுக்கத்தோடே புசித்து, உன் தண்ணீரைத் தத்தளிப்போடும் விசாரத்தோடும் குடித்து,

19தேசத்திலுள்ள ஜனங்களை நோக்கி: இஸ்ரவேல் தேசத்திலுள்ள எருசலேமின் குடிகளைக் குறித்துக் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், தங்கள் அப்பத்தை விசாரத்தோடே புசித்து, தங்கள் தண்ணீரைத் திகிலோடே குடிப்பார்கள்; அவர்களுடைய தேசத்துக் குடிகளுடைய கொடுமைகளினிமித்தம் அதிலுள்ளதெல்லாம் அழிய, அது பாழாகும்.

20குடியேறியிருக்கிற பட்டணங்கள் வனாந்தரங்களாகி, தேசம் பாழாய்ப்போகும்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்றார்.

21பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

22மனுபுத்திரனே, நாட்கள் நீடிக்கும், தரிசனம் எல்லாம் அவமாகும் என்று இஸ்ரவேல் தேசத்திலே வழங்கும் பழமொழி என்ன?

23ஆகையால் நீ அவர்களை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், அவர்கள் இனி இஸ்ரவேலிலே இந்தப் பழமொழியைச் சொல்லி வராதபடிக்கு நான் அதை ஒழியப்பண்ணுவேன்; நாட்களும் எல்லாத் தரிசனத்தின் பொருளும் சமீபித்து வந்தன என்று அவர்களோடே சொல்லு.

24இஸ்ரவேல் வம்சத்தாரின் நடுவில் இனிச்சகல கள்ளத்தரிசனமும் முகஸ்துதியான குறிசொல்லுதலும் இராமற்போகும்.

25நான் கர்த்தர், நான் சொல்லுவேன், நான் சொல்லும் வார்த்தை நிறைவேறும்; இனித் தாமதியாது; கலகவீட்டாரே, உங்கள் நாட்களிலே நான் வார்த்தையைச் சொல்லுவேன், அதை நிறைவேறவும் பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

26பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

27மனுபுத்திரனே, இதோ, இஸ்ரவேல் வம்சத்தார்: இவன் காண்கிற தரிசனம் நிறைவேற அநேகநாள் செல்லும்; தூரமாயிருக்கிற காலங்களைக்குறித்து இவன் தீர்க்கதரிசனம் சொல்லுகிறான் என்கிறார்கள்.

28ஆகையால் என் வார்த்தைகளில் ஒன்றாகிலும் இனித் தாமதிப்பதில்லையென்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்; நான் சொன்ன வார்த்தை நிறைவேறும் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று அவர்களோடே சொல் என்றார்.

1தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும்.

2என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும்.

3என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது.

4தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து, உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன்; நீர் பேசும்போது உம்முடைய நீதி விளங்கவும், நீர் நியாயந்தீர்க்கும்போது, உம்முடைய பரிசுத்தம் விளங்கவும் இதை அறிக்கையிடுகிறேன்.

5இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்.

6இதோ, உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர்; அந்தக்கரணத்தில் ஞானத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்.

7நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன்; என்னைக் கழுவியருளும்; அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்.

8நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படிச் செய்யும், அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் களிகூரும்.

9என் பாவங்களைப் பாராதபடிக்கு நீர் உமது முகத்தை மறைத்து, என் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும்.

10தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.

11உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும்.

12உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்.

13அப்பொழுது பாதகருக்கு உமது வழிகளை உபதேசிப்பேன்; பாவிகள் உம்மிடத்தில் மனந்திரும்புவார்கள்.

14தேவனே, என்னை இரட்சிக்குந்தேவனே, இரத்தப்பழிகளுக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; அப்பொழுது என் நாவு உம்முடைய நீதியைக் கெம்பீரமாய்ப் பாடும்.

15ஆண்டவரே, என் உதடுகளைத் திறந்தருளும்; அப்பொழுது என் வாய் உம்முடைய புகழை அறிவிக்கும்.

16பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன்; தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல.

17தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.

18சீயோனுக்கு உமது பிரியத்தின்படி நன்மை செய்யும்; எருசலேமின் மதில்களைக் கட்டுவீராக.

19அப்பொழுது தகனபலியும் சர்வாங்க தகனபலியுமாகிய நீதியின் பலிகளில் பிரியப்படுவீர்; அப்பொழுது உமது பீடத்தின்மேல் காளைகளைப் பலியிடுவார்கள்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com