‹ முகப்புமுழுத் திட்டம்

செப்டம்பர் 11 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்செப்டம்பர் 11அடுத்த நாள் ›
குடும்பம்

II சாமுவேல் 6

முழு அதிகாரம் ›

1பின்பு தாவீது இஸ்ரவேலர் எல்லாருக்குள்ளும் தெரிந்துகொள்ளப்பட்ட முப்பதினாயிரம்பேரைக் கூட்டி,

2கேருபீன்களின் நடுவே வாசமாயிருக்கிற சேனைகளுடைய கர்த்தரின் நாமம் தொழுதுகொள்ளப்படுகிற தேவனுடைய பெட்டியைப் பாலையூதாவிலிருந்து கொண்டுவரும்படி, அவனும் அவனோடிருந்த அந்த ஸ்தலத்தாரும் எழுந்து போய்,

3தேவனுடைய பெட்டியை ஒரு புது இரதத்தின்மேல் ஏற்றி, அதைக் கிபியாவிலிருக்கிற அபினதாபின் வீட்டிலிருந்து கொண்டுவந்தார்கள்; அபினதாபின் குமாரராகிய ஊசாவும், அகியோவும் அந்தப் புது இரதத்தை நடத்தினார்கள்.

4அவர்கள் தேவனுடைய பெட்டியை ஏற்றி, அதைக் கிபியாவிலிருக்கிற அபினதாபின் வீட்டிலிருந்து நடத்திக்கொண்டு வருகிறபோது, அகியோ பெட்டிக்கு முன்னாலே நடந்தான்.

5தாவீதும் இஸ்ரவேல் சந்ததியார் அனைவரும் தேவதாரு மரத்தால் பண்ணப்பட்ட சகலவித கீதவாத்தியங்களோடும், சுரமண்டலம், தம்புரு, மேளம், வீணை, கைத்தாளம் ஆகிய இவைகளோடும், கர்த்தருக்கு முன்பாக ஆடிப்பாடிக்கொண்டு போனார்கள்.

6அவர்கள் நாகோனின் களம் இருக்கிற இடத்துக்கு வந்தபோது, மாடுகள் மிரண்டு பெட்டியை அசைத்தபடியினால், ஊசா தேவனுடைய பெட்டியினிடமாய்த் தன் கையை நீட்டி, அதைப் பிடித்தான்.

7அப்பொழுது கர்த்தருக்கு ஊசாவின் மேல் கோபமூண்டது; அவனுடைய துணிவினிமித்தம் தேவன் அங்கே அவனை அடித்தார்; அவன் அங்கே தேவனுடைய பெட்டியண்டையில் செத்தான்.

8அப்பொழுது கர்த்தர் ஊசாவை அடித்ததினிமித்தம் தாவீது விசனப்பட்டு, அந்த ஸ்தலத்திற்கு இந்நாள் மட்டும் வழங்கிவருகிற பேரேஸ்ஊசா என்னும் பேரிட்டான்.

9தாவீது அன்றையதினம் கர்த்தருக்குப் பயந்து, கர்த்தருடைய பெட்டி என்னிடத்தில் வருவது எப்படியென்று சொல்லி,

10அதைத் தன்னிடத்தில் தாவீதின் நகரத்தில் கொண்டுவர மனதில்லாமல், கித்தியனாகிய ஓபேத்ஏதோமின் வீட்டிலே கொண்டுபோய் வைத்தான்.

11கர்த்தருடைய பெட்டி கித்தியனாகிய ஓபேத்ஏதோமின் வீட்டிலே மூன்று மாதம் இருக்கையில் கர்த்தர் ஓபேத்ஏதோமையும் அவன் வீட்டார் அனைவரையும் ஆசீர்வதித்தார்.

12தேவனுடைய பெட்டியினிமித்தம் கர்த்தர் ஓபேத்ஏதோமின் வீட்டையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார் என்று தாவீது ராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது தாவீது தேவனுடைய பெட்டியை ஓபேத்ஏதோமின் வீட்டிலிருந்து தாவீதின் நகரத்துக்கு மகிழ்ச்சியுடனே கொண்டு வந்தான்.

13கர்த்தருடைய பெட்டியைச் சுமந்து போகிறவர்கள் ஆறு தப்படி நடந்தபோது, மாடுகளையும் கொழுத்த ஆட்டுக்கடாக்களையும் பலியிட்டான்.

14தாவீது சணல்நூல் ஏபோத்தைத் தரித்துக்கொண்டு, தன் முழுப் பலத்தோடும் கர்த்தருக்கு முன்பாக நடனம்பண்ணினான்.

15அப்படியே தாவீதும், இஸ்ரவேல் சந்ததியார் அனைவரும் கர்த்தருடைய பெட்டியைக் கெம்பீர சத்தத்தோடும் எக்காள தொனியோடும் கொண்டுவந்தார்கள்.

16கர்த்தருடைய பெட்டி தாவீதின் நகரத்திற்குள் பிரவேசிக்கிறபோது, சவுலின் குமாரத்தியாகிய மீகாள் பலகணி வழியாய்ப் பார்த்து, தாவீது ராஜா கர்த்தருக்கு முன்பாகக் குதித்து, நடனம்பண்ணுகிறதைக் கண்டு, தன் இருதயத்திலே அவனை அவமதித்தாள்.

17அவர்கள் கர்த்தருடைய பெட்டியை உள்ளே கொண்டுவந்து, அதற்குத் தாவீது போட்ட கூடாரத்திற்குள் இருக்கிற அதின் ஸ்தானத்திலே அதை வைத்தபோது, தாவீது கர்த்தருடைய சந்நிதியிலே சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் இட்டான்.

18தாவீது சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் இட்டபின்பு, சேனைகளின் கர்த்தருடைய நாமத்தினாலே ஜனங்களை ஆசீர்வதித்து,

19இஸ்ரவேலின் திரள்கூட்டமான ஸ்திரீ புருஷராகிய சகல ஜனங்களுக்கும், அவரவருக்கு ஒவ்வொரு அப்பத்தையும், ஒவ்வொரு இறைச்சித்துண்டையும், ஒவ்வொரு படி திராட்சரசத்தையும் பங்கிட்டான்; பிற்பாடு ஜனங்கள் எல்லாரும் அவரவர் தங்கள் வீட்டிற்குப் போய்விட்டார்கள்.

20தாவீது தன் வீட்டாரை ஆசீர்வதிக்கிறதற்குத் திரும்பும்போது, சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தாவீதுக்கு எதிர்கொண்டுவந்து, அற்பமனுஷரில் ஒருவன் தன் வஸ்திரங்களைக் கழற்றிப்போடுகிறதுபோல, இன்று தம்முடைய ஊழியக்காரருடைய பெண்களின் கண்களுக்கு முன்பாகத் தம்முடைய வஸ்திரங்களை உரிந்து போட்டிருந்த இஸ்ரவேலின் ராஜா இன்று எத்தனை மகிமைப்பட்டிருந்தார் என்றாள்.

21அதற்குத் தாவீது மீகாளைப் பார்த்து: உன் தகப்பனைப் பார்க்கிலும், அவருடைய எல்லா வீட்டாரைப் பார்க்கிலும், என்னை இஸ்ரவேலாகிய கர்த்தருடைய ஜனத்தின்மேல் தலைவனாகக் கட்டளையிடும்படிக்குத் தெரிந்துகொண்ட கர்த்தருடைய சமுகத்திற்கு முன்பாக ஆடிப்பாடினேன்.

22இதைப்பார்க்கிலும் இன்னும் நான் நீசனும் என் பார்வைக்கு அற்பனுமாவேன்: அப்படியே நீ சொன்ன பெண்களுக்குங்கூட மகிமையாய் விளங்குவேன் என்றான்.

23அதினால் சவுலின் குமாரத்தியாகிய மீகாளுக்கு மரணமடையும் நாள்மட்டும் பிள்ளை இல்லாதிருந்தது.

I கொரிந்தியர் 16

முழு அதிகாரம் ›

1பரிசுத்தவான்களுக்காகச் சேர்க்கப்படும் தர்மப்பணத்தைக்குறித்து நான் கலாத்தியா நாட்டுச் சபைகளுக்குப்பண்ணின திட்டத்தின்படியே நீங்களும் செய்யுங்கள்.

2நான் வந்திருக்கும்போது பணஞ்சேர்க்குதல் இராதபடிக்கு, உங்களில் அவனவன் வாரத்தின் முதல்நாள்தோறும், தன்தன் வரவுக்குத்தக்கதாக எதையாகிலும் தன்னிடத்திலே சேர்த்துவைக்கக்கடவன்.

3நான் வரும்போது உங்கள் உபகாரத்தை எருசலேமுக்குக் கொண்டுபோகும்படிக்கு, நீங்கள் தகுதியுள்ளவர்களாகக் குறிக்கிறவர்கள் எவர்களோ, அவர்களிடத்தில் நிருபங்களைக் கொடுத்து, அவர்களை அனுப்புவேன்.

4நானும் போகத்தக்கதானால், அவர்கள் என்னுடனேகூட வரலாம்.

5நான் மக்கெதோனியா நாட்டின் வழியாய்ப்போகிறபடியால், மக்கெதோனியா நாட்டைக் கடந்தபின்பு உங்களிடத்திற்கு வருவேன்.

6நான் எங்கே போனாலும் நீங்கள் என்னை வழிவிட்டனுப்பும்படிக்கு, நான் உங்களிடத்தில் சிலகாலம் தங்கவேண்டியதாயிருக்கும்; ஒருவேளை மழைகாலம் முடியும்வரைக்கும் இருப்பேன்.

7இப்பொழுது வழிப்பிரயாணத்திலே உங்களைக் கண்டுகொள்ளமாட்டேன்; கர்த்தர் உத்தரவு கொடுத்தால் உங்களிடத்தில் வந்து சிலகாலம் தங்கியிருக்கலாமென்று நம்புகிறேன்.

8ஆகிலும் பெந்தெகோஸ்தே பண்டிகைவரைக்கும் எபேசு பட்டணத்தில் இருப்பேன்.

9ஏனெனில் இங்கே பெரிதும் அநுகூலமுமான கதவு எனக்குத் திறக்கப்பட்டிருக்கிறது; விரோதஞ்செய்கிறவர்களும் அநேகர் இருக்கிறார்கள்.

10தீமோத்தேயு உங்களிடத்திற்கு வந்தானேயாகில், அவன் உங்களிடத்தில் பயமில்லாமலிருக்கப் பாருங்கள்; என்னைப்போல அவனும் கர்த்தருடைய கிரியையை நடப்பிக்கிறானே.

11ஆனபடியினால் ஒருவனும் அவனை அற்பமாய் எண்ணாதிருப்பானாக; சகோதரரோடேகூட அவன் வருகிறதற்கு நான் காத்திருக்கிறபடியால், என்னிடத்தில் வரும்படிக்கு அவனைச் சமாதானத்தோடே வழிவிட்டனுப்புங்கள்.

12சகோதரனாகிய அப்பொல்லோவைக்குறித்தோவெனில், சகோதரரோடேகூட உங்களிடத்தில் வரும்படிக்கு அவனை மிகவும் வேண்டிக்கொண்டேன்; ஆகிலும் இப்பொழுது வர அவனுக்கு மனதில்லை; அவனுக்கு நற்சமயம் உண்டாயிருக்கும்போது வருவான்.

13விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள், புருஷராயிருங்கள், திடன்கொள்ளுங்கள்.

14உங்கள் காரியங்களெல்லாம் அன்போடே செய்யப்படக்கடவது.

15சகோதரரே, ஸ்தேவானுடைய வீட்டார் அகாயா நாட்டிலே முதற்பலனானவர்களென்றும், பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்யும்படிக்குத் தங்களை ஒப்புவித்திருக்கிறார்களென்றும் அறிந்திருக்கிறீர்களே.

16இப்படிப்பட்டவர்களுக்கும், உடன்வேலையாட்களாய்ப் பிரயாசப்படுகிற மற்ற யாவருக்கும் நீங்கள் கீழ்ப்படிந்திருக்கவேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.

17ஸ்தேவான், பொர்த்துனாத்து, அகாயுக்கு என்பவர்கள் வந்ததற்காகச் சந்தோஷமாயிருக்கிறேன், நீங்கள் எனக்குச் செய்யவேண்டியதாயிருந்ததை அவர்கள் செய்திருக்கிறார்கள்.

18அவர்கள் என் ஆவிக்கும் உங்கள் ஆவிக்கும் ஆறுதல் செய்தார்கள்; இப்படிப்பட்டவர்களை அங்கிகாரம்பண்ணுங்கள்.

19ஆசியா நாட்டிலுள்ள சபையார் உங்களை வாழ்த்துகிறார்கள். ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் தங்கள் வீட்டிலே கூடுகிற சபையோடுங்கூடக் கர்த்தருக்குள் உங்களை மிகவும் வாழ்த்துகிறார்கள்.

20சகோதரரெல்லாரும் உங்களை வாழ்த்துகிறார்கள். ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடே வாழ்த்துங்கள்.

21பவுலாகிய நான் என் கையெழுத்தாலே உங்களை வாழ்த்துகிறேன்.

22ஒருவன் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் அன்புகூராமற்போனால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன், கர்த்தர் வருகிறார்.

23கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக.

24கிறிஸ்து இயேசுவுக்குள்ளான என்னுடைய அன்பு உங்களெல்லாரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.

தனிவாசிப்பு

எசேக்கியேல் 14

முழு அதிகாரம் ›

1இஸ்ரவேலுடைய மூப்பரில் சிலர் என்னிடத்தில் வந்து, எனக்கு முன்பாக உட்கார்ந்தார்கள்.

2அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

3மனுபுத்திரனே, இந்த மனுஷர் தங்கள் நரகலான விக்கிரகங்களைத் தங்கள் இருதயத்தின்மேல் நாட்டி, தங்கள் அக்கிரமமாகிய இடறலைத் தங்கள் முகத்துக்கு எதிராக வைத்துகொண்டிருக்கிறார்களே; இவர்கள் என்னிடத்தில் விசாரிக்கத்தகுமா?

4ஆகையால், நீ அவர்களோடே பேசிச்சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் வம்சத்தாரில் தன்னுடைய நரகலான விக்கிரகங்களைத் தன் இருதயத்தின்மேல் நாட்டி, தன் அக்கிரமமாகிய இடறலைத் தன் முகத்துக்கு எதிராக வைத்துக்கொண்டிருக்கிற எவனாகிலும் தீர்க்கதரிசியினிடத்தில் வந்தால், கர்த்தராகிய நான் இஸ்ரவேல் வம்சத்தாருடைய இருதயத்தில் இருக்கிறதைப் பிடிக்கும்படியாக அப்படிப்பட்டவனுடைய நரகலான விக்கிரகங்களின் திரட்சிக்குத்தக்கதாக உத்தரவு கொடுப்பேன்.

5அவர்கள் எல்லாரும் தங்கள் நரகலான விக்கிரகங்களைப் பின்பற்றி, என்னை விட்டுப் பேதலித்துப்போனார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

6ஆகையால், நீ இஸ்ரவேல் வம்சத்தாரை நோக்கி: திரும்புங்கள், உங்கள் நரகலான விக்கிரகங்களை விட்டுத் திரும்புங்கள்; உங்கள் சகல அருவருப்புகளையும் விட்டு உங்கள் முகங்களைத் திருப்புங்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.

7இஸ்ரவேல் வம்சத்தாரிலும் இஸ்ரவேலில் தங்குகிற அந்நியரிலும் என்னைப் பின்பற்றாமல் பேதலித்து, தன் நரகலான விக்கிரகங்களைத் தன் இருதயத்தின்மேல் நாட்டி, தன் அக்கிரமமாகிய இடறலைத் தன் முகத்துக்கெதிராக வைத்துக்கொண்டிருக்கிற எவனாகிலும் தீர்க்கதரிசியின் மூலமாய் என்னிடத்தில் விசாரிக்க வந்தால், அவனுக்குக் கர்த்தராகிய நானே உத்தரவுகொடுத்து,

8அந்த மனுஷனுக்கு விரோதமாக என் முகத்தைத் திருப்பி, அவனை அடையாளமாகவும் பழமொழியாகவும் வைத்து, அவனை என் ஜனத்தின் நடுவில் இராதபடிக்குச் சங்கரித்துப்போடுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.

9ஒரு தீர்க்கதரிசி எத்தப்பட்டு ஒரு விசேஷத்தைச் சொன்னானாகில், அப்படிக்கொத்த தீர்க்கதரிசியைக் கர்த்தராகிய நானே எத்தப்படப்பண்ணினேன்; நான் அவனுக்கு விரோதமாக என் கையை நீட்டி, அவனை இஸ்ரவேல் ஜனத்தின் நடுவில் இராதபடிக்கு அழிப்பேன்.

10அப்படியே அவரவர் தங்கள் தங்கள் அக்கிரமத்தைச் சுமப்பார்கள்; தீர்க்கதரிசியினிடத்தில் விசாரிக்கிறவனுடைய தண்டனை எப்படியோ அப்படியே தீர்க்கதரிசியினுடைய தண்டனையும் இருக்கும்.

11இஸ்ரவேல் வம்சத்தார் இனி என்னைவிட்டு வழிதப்பிப்போகாமலும், தங்கள் எல்லா மீறுதல்களாலும் இனி அசுசிப்படாமலும் இருக்கும்பொருட்டாக இப்படிச் சம்பவிக்கும்; அப்பொழுது அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

12கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

13மனுபுத்திரனே, ஒரு தேசம் எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணிக்கொண்டேயிருந்து, பாவஞ்செய்தால், நான் அதற்கு விரோதமாக என் கையை நீட்டி, அதில் அப்பம் என்னும் ஆதரவுகோலை முறித்து, அதில் பஞ்சத்தை அனுப்பி, மனுஷரையும் மிருகங்களையும் அதில் இராதபடிக்கு நாசம் பண்ணுவேன்.

14அப்பொழுது நோவா தானியேல் யோபு ஆகிய இம்மூன்று புருஷரும் அதின் நடுவில் இருந்தாலும், அவர்கள் தங்கள் நீதியினால் தங்கள் ஆத்துமாக்களைமாத்திரம் தப்புவிப்பார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

15நான் தேசத்தில் துஷ்டமிருகங்களை அனுப்ப, அம்மிருகங்களினிமித்தம் ஒருவரும் அதின் வழியாய் நடக்கக்கூடாதபடி வெறுமையும் பாழுமாகும்போது,

16அந்த மூன்று புருஷரும் அதின் நடுவில் இருந்தாலும், தாங்கள்மாத்திரம் தப்புவார்களேயல்லாமல், குமாரரையாகிலும் குமாரத்திகளையாகிலும் தப்புவிக்கமாட்டார்கள்; தேசமும் பாழாய்ப்போகும் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்பதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.

17அல்லது நான் அந்த தேசத்தின்மேல் பட்டயத்தை வரப்பண்ணி: பட்டயமே தேசத்தை உருவப்போ என்று சொல்லி, அதிலுள்ள மனுஷரையும் மிருகங்களையும் நாசம்பண்ணும்போது,

18அந்த மூன்று புருஷரும் அதின் நடுவில் இருந்தாலும், தாங்கள்மாத்திரம் தப்புவார்களேயல்லாமல், குமாரரையாகிலும் குமாரத்திகளையாகிலும் தப்புவிக்கமாட்டார்கள் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்பதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.

19அல்லது நான் அந்த தேசத்தில் கொள்ளை நோயை அனுப்பி, அதிலுள்ள மனுஷரையும் மிருகங்களையும் நாசம்பண்ணும்படி அதின்மேல் இரத்தப்பழியாக என் உக்கிரத்தை ஊற்றும்போது,

20நோவாவும் தானியேலும் யோபும் அதின் நடுவில் இருந்தாலும், அவர்கள் தங்கள் நீதியினால் தங்கள் ஆத்துமாக்களைமாத்திரம் தப்புவிப்பார்களேயல்லாமல், குமாரனையாகிலும், குமாரத்தியையாகிலும் தப்புவிக்கமாட்டார்கள் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்பதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.

21ஆகையால், கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் மனுஷரையும் மிருகங்களையும் நாசம்பண்ணும்படி எருசலேமுக்கு விரோதமாகப் பட்டயம், பஞ்சம், துஷ்டமிருகங்கள், கொள்ளைநோய் என்னும் இந்நான்கு கொடிய தண்டனைகளையும் அனுப்பும்போது எவ்வளவு அதிக சங்காரமாகும்?

22ஆகிலும், இதோ, அதிலே தப்பி மீதியாகி வெளியே கொண்டுவரப்படுகிற குமாரரும் குமாரத்திகளும் சிலர் இருப்பார்கள்; இதோ, அவர்கள் உங்களண்டைக்குப் புறப்பட்டு வருவார்கள்; அப்பொழுது நீங்கள் அவர்கள் மார்க்கத்தையும் அவர்கள் கிரியைகளையும் கண்டு, நான் எருசலேமின்மேல் வரப்பண்ணின தீங்கையும் அதின்மேல் நான் வரப்பண்ணின எல்லாவற்றையுங்குறித்துத் தேற்றப்படுவீர்கள்.

23நீங்கள் அவர்கள் மார்க்கத்தையும் அவர்கள் கிரியையையும் காணும்போது, அவர்கள் உங்களுக்குத் தேற்றரவாயிருப்பார்கள்; நான் அதிலே செய்த எல்லாவற்றையும் முகாந்தரமில்லாமல் செய்யவில்லையென்று அப்பொழுது அறிந்துகொள்வீர்கள் என்பதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொன்னார்.

1தேவனே, என் ஜெபத்தைக் கேட்டருளும்; என் விண்ணப்பத்திற்கு மறைந்திராதேயும்.

2எனக்குச் செவிகொடுத்து, உத்தரவு அருளிச்செய்யும்; சத்துருவினுடைய கூக்குரலினிமித்தமும், துன்மார்க்கர் செய்யும் இடுக்கத்தினிமித்தமும் என் தியானத்தில் முறையிடுகிறேன்.

3அவர்கள் என்மேல் பழிசாட்டி, குரோதங்கொண்டு, என்னைப் பகைக்கிறார்கள்.

4என் இருதயம் எனக்குள் வியாகுலப்படுகிறது; மரணத்திகில் என்மேல் விழுந்தது.

5பயமும் நடுக்கமும் என்னைப் பிடித்தது; அருக்களிப்பு என்னை மூடிற்று.

6அப்பொழுது நான்: ஆ, எனக்குப் புறாவைப்போல் சிறகுகள் இருந்தால், நான்பறந்துபோய் இளைப்பாறுவேன்.

7நான் தூரத்தில் அலைந்து திரிந்து வனாந்தரத்தில் தங்கியிருப்பேன். (சேலா)

8பெருங்காற்றுக்கும் புசலுக்கும் தப்பத் தீவிரித்துக்கொள்ளுவேன் என்றேன்.

9ஆண்டவரே, அவர்களை அழித்து, அவர்கள் பாஷையைப் பிரிந்துபோகப்பண்ணும்; கொடுமையையும் சண்டையையும் நகரத்திலே கண்டேன்;

10அவைகள் இரவும்பகலும் அதின் மதில்கள்மேல் சுற்றித்திரிகிறது; அக்கிரமமும் வாதையும் அதின் நடுவில் இருக்கிறது;

11கேடுபாடுகள் அதின் நடுவில் இருக்கிறது; கொடுமையும் கபடும் அதின் வீதியைவிட்டு விலகிப்போகிறதில்லை.

12என்னை நிந்தித்தவன் சத்துரு அல்ல, அப்படியிருந்தால் சகிப்பேன்; எனக்கு விரோதமாய்ப் பெருமை பாராட்டினவன் என் பகைஞன் அல்ல, அப்படியிருந்தால் அவனுக்கு மறைந்திருப்பேன்.

13எனக்குச் சமமான மனுஷனும், என் வழிகாட்டியும், என் தோழனுமாகிய நீயே அவன்.

14நாம் ஒருமித்து, இன்பமான ஆலோசனைபண்ணி, கூட்டத்தோடே தேவாலயத்துக்குப் போனோம்.

15மரணம் அவர்களைத் தொடர்ந்து பிடிப்பதாக; அவர்கள் உயிரோடே பாதாளத்தில் இறங்குவார்களாக; அவர்கள் வாசஸ்தலங்களிலும் அவர்கள் உள்ளத்திலும் பொல்லாங்கு இருக்கிறது.

16நானோ தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்; கர்த்தர் என்னை இரட்சிப்பார்.

17அந்திசந்தி மத்தியான வேளைகளிலும் நான் தியானம்பண்ணி முறையிடுவேன்; அவர் என் சத்தத்தைக் கேட்பார்.

18திரளான கூட்டமாய்க் கூடி என்னோடு எதிர்த்தார்கள்; அவரோ எனக்கு நேரிட்ட போரை நீக்கி, என் ஆத்துமாவைச் சமாதானத்துடன் மீட்டுவிட்டார்.

19ஆதிமுதலாய் வீற்றிருக்கிற தேவன் கேட்டு, அவர்களுக்குப் பதிலளிப்பார்; அவர்களுக்கு மாறுதல்கள் நேரிடாததினால், அவர்கள் தேவனுக்குப் பயப்படாமற்போகிறார்கள். (சேலா)

20அவன் தன்னோடே சமாதானமாயிருந்தவர்களுக்கு விரோதமாய்த் தன் கையை நீட்டி தன் உடன்படிக்கையை மீறி நடந்தான்.

21அவன் வாயின் சொற்கள் வெண்ணெயைப்போல மெதுவானவைகள், அவன் இருதயமோ யுத்தம்; அவன் வார்த்தைகள் எண்ணெயிலும் மிருதுவானவைகள். ஆனாலும் அவைகள் உருவின பட்டயங்கள்.

22கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.

23தேவனே, நீர் அவர்களை அழிவின் குழியில் இறங்கப்பண்ணுவீர்; இரத்தப்பிரியரும் சூதுள்ள மனுஷரும் தங்கள் ஆயுளின் நாட்களில் பாதிவரையிலாகிலும் பிழைத்திருக்கமாட்டார்கள்; நானோ உம்மை நம்பியிருக்கிறேன்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com