1கர்த்தர் ராஜாவைச் சுற்றிலும் இருந்த அவனுடைய எல்லாச் சத்துருக்களுக்கும் அவனை நீங்கலாக்கி, இளைப்பாறப்பண்ணினபோது, அவன் தன் வீட்டிலே வாசமாயிருக்கையில்,
2ராஜா தீர்க்கதரிசியாகிய நாத்தானை நோக்கி: பாரும், கேதுரு மரங்களால் செய்யப்பட்ட வீட்டிலே நான் வாசம்பண்ணும்போது, தேவனுடைய பெட்டி திரைகளின் நடுவே வாசமாயிருக்கிறதே என்றான்.
3அப்பொழுது நாத்தான் ராஜாவை நோக்கி: நீர் போய் உம்முடைய இருதயத்தில் உள்ளபடியெல்லாம் செய்யும்; கர்த்தர் உம்மோடு இருக்கிறாரே என்றான்.
4அன்று இராத்திரியிலே கர்த்தருடைய வார்த்தை நாத்தானுக்கு உண்டாகி, அவர்:
5நீ போய் என் தாசனாகிய தாவீதை நோக்கி: கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் வாசமாயிருக்கத்தக்க ஆலயத்தை நீ எனக்குக் கட்டுவாயோ?
6நான் இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணின நாள்முதற்கொண்டு இந்நாள்வரைக்கும், நான் ஒரு ஆலயத்திலே வாசம்பண்ணாமல், கூடாரத்திலும் வாசஸ்தலத்திலும் உலாவினேன்.
7நான் இஸ்ரவேலாகிய என் ஜனத்தை மேய்க்கும்படி கட்டளையிட்ட இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒரு கோத்திரத்தையாவது நோக்கி: நீங்கள் எனக்குக் கேதுரு மரத்தால் செய்யப்பட்ட ஆலயத்தைக் கட்டாதிருக்கிறது என்ன என்று நான் இஸ்ரவேல் புத்திரருக்குள் உலாவி வந்த எவ்விடத்திலாவது யாதொரு வார்த்தையைச் சொன்னதுண்டோ?
8இப்போதும் நீ என் தாசனாகிய தாவீதை நோக்கி: சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நீ இஸ்ரவேல் என்கிற என் ஜனங்களுக்கு அதிபதியாயிருக்கும்படி, ஆடுகளின் பின்னே நடந்த உன்னை நான் ஆட்டுமந்தையை விட்டுஎடுத்து,
9நீ போன எவ்விடத்திலும் உன்னோடே இருந்து, உன் சத்துருக்களையெல்லாம் உனக்கு முன்பாக நிர்மூலமாக்கி, பூமியிலிருக்கிற பெரியோர்களின் நாமத்திற்கு ஒத்த பெரிய நாமத்தை உனக்கு உண்டாக்கினேன்.
10நான் என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு ஒரு இடத்தை ஏற்படுத்தி, அவர்கள் தங்கள் ஸ்தானத்திலே குடியிருக்கவும், இனி அவர்கள் அலையாமலும், முன்போலும், நான் என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் நியாயாதிபதிகளைக் கட்டளையிட்ட நாள்வரையில் நடந்ததுபோலும், நியாயக்கேட்டின் மக்களால் இனிச் சிறுமைப்படாமலும் இருக்கும்படி அவர்களை நாட்டினேன்.
11உன்னுடைய எல்லாச் சத்துருக்களுக்கும் உன்னை நீங்கலாக்கி, இளைப்பாறவும் பண்ணினேன்; இப்போதும் கர்த்தர் உனக்கு வீட்டை உண்டுபண்ணுவார் என்பதைக் கர்த்தர் உனக்கு அறிவிக்கிறார்.
12உன் நாட்கள் நிறைவேறி, நீ உன் பிதாக்களோடே நித்திரைப்பண்ணும்போது, நான் உனக்குப்பின்பு உன் கர்ப்பப்பிறப்பாகிய உன் சந்ததியை எழும்பப்பண்ணி, அவன் ராஜ்யத்தை நிலைப்படுத்துவேன்.
13அவன் என் நாமத்திற்கென்று ஒரு ஆலயத்தைக் கட்டுவான்; அவன் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன்.
14நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன், அவன் எனக்குக் குமாரனாயிருப்பான்; அவன் அக்கிரமம் செய்தால், நான் அவனை மனுஷருடைய மிலாற்றினாலும் மனுபுத்திரருடைய அடிகளினாலும் தண்டிப்பேன்.
15உனக்கு முன்பாக நான் தள்ளிவிட்ட சவுலிடத்திலிருந்து என் கிருபையை விலக்கினதுபோல அவனைவிட்டு விலக்கமாட்டேன்.
16உன் வீடும், உன் ராஜ்யமும், என்றென்றைக்கும் உனக்கு முன்பாக ஸ்திரப்பட்டிருக்கும்; உன் ராஜாசனம் என்றென்றைக்கும் நிலைபெற்றிருக்கும் என்கிறார் என்று சொல்லச்சொன்னார்.
17நாத்தான் இந்த எல்லா வார்த்தைகளின்படியும், இந்த எல்லாத் தரிசனத்தின்படியும், தாவீதுக்குச் சொன்னான்.
18அப்பொழுது தாவீது ராஜா உட்பிரவேசித்து, கர்த்தருடைய சமுகத்திலிருந்து: கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு, நான் எம்மாத்திரம்? என் வீடும் எம்மாத்திரம்?
19கர்த்தராகிய ஆண்டவரே, இது இன்னும் உம்முடைய பார்வைக்குக் கொஞ்ச காரியமாயிருக்கிறது என்று கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற தேவரீர் உம்முடைய அடியானுடைய வீட்டைக் குறித்து, வெகுதூரமாயிருக்கும் காலத்துச்செய்தியை மனுஷர் முறைமையாய்ச் சொன்னீரே.
20இனி தாவீது உம்மிடத்தில் சொல்லவேண்டியது என்ன? கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நீர் உமது அடியானை அறிவீர்.
21உம்முடைய வாக்குத்தத்தத்தினிமித்தமும், உம்முடைய சித்தத்தின்படியேயும், இந்தப் பெரிய காரியங்களையெல்லாம் உமது அடியானுக்கு அறிவிக்கும்படிக்குத் தயவு செய்தீர்.
22ஆகையால் தேவனாகிய கர்த்தரே, நீர் பெரியவர் என்று விளங்குகிறது; நாங்கள் எங்கள் காதுகளாலே கேட்ட சகல காரியங்களின்படியும், தேவரீருக்கு நிகரானவர் இல்லை; உம்மைத்தவிர வேறே தேவனும் இல்லை.
23உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு நிகரான ஜனமும் உண்டோ? பூலோகத்து ஜாதிகளில் இந்த ஒரே ஜாதியைத் தேவன் தமக்கு ஜனமாக மீட்கிறதற்கும், தமக்குக் கீர்த்தி விளங்கப்பண்ணுகிறதற்கும் ஏற்பட்டாரே; தேவரீர் எகிப்திலிருந்து மீட்டுக்கொண்டு வந்த உம்முடைய ஜனத்திற்கு முன்பாகப் பயங்கரமான பெரிய காரியங்களை நடத்தி, உம்முடைய தேசத்திற்கும், அதிலிருந்த ஜாதிகளுக்கும், அவர்கள் தேவர்களுக்கும், உமது மகிமையை விளங்கச்செய்து,
24உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலர் என்றைக்கும் உம்முடைய ஜனமாயிருப்பதற்கு, அவர்களைத் திடப்படுத்தி, கர்த்தராகிய நீர்தாமே அவர்களுக்குத் தேவனானீர்.
25இப்போதும் தேவனாகிய கர்த்தாவே, நீர் உமது அடியானையும் அவன் வீட்டையும் குறித்துச் சொன்ன வார்த்தையை என்றென்றைக்கும் நிலைவரப்படுத்த, தேவரீர் சொன்னபடியே செய்தருளும்.
26அப்படியே சேனைகளின் கர்த்தர் இஸ்ரவேலின்மேல் தேவனானவர் என்று சொல்லி, உம்முடைய நாமம் என்றென்றைக்கும் மகிமைப்படுவதாக; உமது அடியானாகிய தாவீதின் வீடு உமக்கு முன்பாக நிலைநிற்பதாக.
27உனக்கு வீடுகட்டுவேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தராயிருக்கிற நீர் உமது அடியானின் செவிக்கு வெளிப்படுத்தினீர்: ஆகையால் உம்மை நோக்கி இந்த விண்ணப்பத்தைச் செய்ய உமது அடியானுக்கு மனத்தைரியம் கிடைத்தது.
28இப்போதும் கர்த்தராகிய ஆண்டவரே, நீரே தேவன்; உம்முடைய வார்த்தைகள் சத்தியம்; தேவரீர் உமது அடியானுக்கு இந்த நல்விசேஷங்களை வாக்குத்தத்தம்பண்ணினீர்.
29இப்போதும் உமது அடியானின் வீடு என்றைக்கும் உமக்கு முன்பாக இருக்கும்படி அதை ஆசீர்வதித்தருளும்; கர்த்தரான ஆண்டவராகிய தேவரீர் அதைச் சொன்னீர், உம்முடைய ஆசீர்வாதத்தினாலே உமது அடியானின் வீடு என்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதாக என்றான்.
1தேவனுடைய சித்தத்தினாலே இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயும், கொரிந்துபட்டணத்திலுள்ள தேவனுடைய சபைக்கும், அகாயா நாடெங்குமுள்ள எல்லாப் பரிசுத்தவான்களுக்கும் எழுதுகிறதாவது:
2நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
3நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம்.
4தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல்செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல்செய்கிறவர்.
5எப்படியெனில், கிறிஸ்துவினுடைய பாடுகள் எங்களிடத்தில் பெருகுகிறதுபோல, கிறிஸ்துவினாலே எங்களுக்கு ஆறுதலும் பெருகுகிறது.
6ஆதலால், நாங்கள் உபத்திரவப்பட்டாலும் அது உங்கள் ஆறுதலுக்கும் இரட்சிப்புக்கும் ஏதுவாகும்; நாங்கள் ஆறுதலடைந்தாலும் அதுவும் உங்கள் ஆறுதலுக்கும் இரட்சிப்புக்கும் ஏதுவாகும்; நாங்கள் பாடுபடுகிறதுபோல நீங்களும் பாடுபட்டுச் சகிக்கிறதினாலே அந்த இரட்சிப்பு பலன்செய்கிறது.
7நீங்கள் எங்களோடேகூடப் பாடுபடுகிறதுபோல, எங்களோடேகூட ஆறுதலும் அடைகிறீர்களென்று நாங்கள் அறிந்து, உங்களைக்குறித்து உறுதியான நம்பிக்கையுள்ளவர்களாயிருக்கிறோம்.
8ஆகையால் சகோதரரே, ஆசியாவில் எங்களுக்கு நேரிட்ட உபத்திரவத்தை நீங்கள் அறியாதிருக்க எங்களுக்கு மனதில்லை. என்னவெனில், பிழைப்போம் என்கிற நம்பிக்கை அற்றுப்போகத்தக்கதாக, எங்கள் பலத்திற்கு மிஞ்சின அதிக பாரமான வருத்தம் எங்களுக்கு உண்டாயிற்று.
9நாங்கள் எங்கள்மேல் நம்பிக்கையாயிராமல், மரித்தோரை எழுப்புகிற தேவன்மேல் நம்பிக்கையாயிருக்கத்தக்கதாக, மரணம் வருமென்று நாங்கள் எங்களுக்குள்ளே நிச்சயித்திருந்தோம்.
10அப்படிப்பட்ட மரணத்தினின்றும் அவர் எங்களைத் தப்புவித்தார், இப்பொழுதும் தப்புவிக்கிறார், இன்னும் தப்புவிப்பார் என்று அவரை நம்பியிருக்கிறோம்.
11அநேகர்மூலமாய் எங்களுக்கு உண்டான தயவுக்காக அநேகரால் எங்கள் நிமித்தம் ஸ்தோத்திரங்கள் செலுத்தப்படும்பொருட்டு, நீங்களும் விண்ணப்பத்தினால் எங்களுக்கு உதவிசெய்யுங்கள்.
12மாம்சத்திற்கேற்ற ஞானத்தோடே நடவாமல், தேவனுடைய கிருபையினால் நாங்கள் உலகத்திலேயும், விசேஷமாக உங்களிடத்திலேயும், கபடமில்லாமல் திவ்விய உண்மையோடே நடந்தோமென்று, எங்கள் மனது எங்களுக்குச் சொல்லுஞ்சாட்சியே எங்கள் புகழ்ச்சியாயிருக்கிறது.
13ஏனென்றால், நீங்கள் வாசித்தும் ஒத்துக்கொண்டுமிருக்கிற காரியங்களையேயன்றி, வேறொன்றையும் நாங்கள் உங்களுக்கு எழுதவில்லை; முடிவுபரியந்தமும் அப்படியே ஒத்துக்கொள்வீர்களென்று நம்பியிருக்கிறேன்.
14கர்த்தராகிய இயேசுவினுடைய நாளிலே நீங்கள் எங்களுக்குப் புகழ்ச்சியாயிருப்பதுபோல, நாங்களும் உங்களுக்குப் புகழ்ச்சியாயிருக்கிறதை ஒருவாறு ஒத்துக்கொண்டிருக்கிறீர்களே.
15நான் இப்படிப்பட்ட நம்பிக்கையைக் கொண்டிருக்கிறபடியினால், உங்களுக்கு இரண்டாந்தரமும் பிரயோஜனமுண்டாகும்படி, முதலாவது உங்களிடத்தில் வரவும்,
16பின்பு உங்கள் ஊர்வழியாய் மக்கெதோனியா நாட்டுக்குப் போகவும், மக்கெதோனியாவை விட்டு மறுபடியும் உங்களிடத்திற்கு வரவும், உங்களால் யூதேயா தேசத்துக்கு வழிவிட்டனுப்பப்படவும் யோசனையாயிருந்தேன்.
17இப்படி நான் யோசித்தது வீணாக யோசித்தேனோ? அல்லது ஆம் ஆம் என்கிறதும், அல்ல அல்ல என்கிறதும், என்னிடத்திலே இருக்கத்தக்கதாக, நான் யோசிக்கிறவைகளை மாம்சத்தின்படி யோசிக்கிறேனோ?
18நாங்கள் உங்களுக்குச் சொன்ன வார்த்தை ஆம் அல்ல என்று இருக்கவில்லை; அதற்கு உண்மையுள்ள தேவனே சாட்சி.
19என்னாலும், சில்வானுவினாலும், தீமோத்தேயுவினாலும், உங்களுக்குள்ளே பிரசங்கிக்கப்பட்ட தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவும் ஆம் என்றும் அல்ல என்றும் இராமல், ஆம் என்றே இருக்கிறார்.
20எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே.
21உங்களோடேகூட எங்களையும் கிறிஸ்துவுக்குள் ஸ்திரப்படுத்தி, நம்மை அபிஷேகம்பண்ணினவர் தேவனே.
22அவர் நம்மை முத்திரித்து, நம்முடைய இருதயங்களில் ஆவியென்னும் அச்சாரத்தையும் கொடுத்திருக்கிறார்.
23மேலும் நான் உங்களைத் தப்பவிடும்படிக்கே இதுவரைக்கும் கொரிந்துபட்டணத்திற்கு வராதிருக்கிறேனென்று, என் ஆத்துமாவின்பேரில் தேவனையே சாட்சியாகக் கோருகிறேன்.
24உங்கள் விசுவாசத்திற்கு நாங்கள் அதிகாரிகளாயிராமல், உங்கள் சந்தோஷத்திற்குச் சகாயராயிருக்கிறோம்; விசுவாசத்தினாலே நிலைநிற்கிறீர்களே.
1கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
2மனுபுத்திரனே, காட்டிலிருக்கிற செடிகளுக்குள் மற்ற எல்லாச் செடிகொடிகளைப்பார்க்கிலும் திராட்சச்செடிக்கு மேன்மை என்ன?
3யாதொரு வேலைசெய்ய அதிலே ஒரு கட்டை எடுக்கப்படுமோ? யாதொரு தட்டுமுட்டைத் தூக்கிவைக்கும்படி ஒரு முளையை அதினால் செய்வார்களோ?
4இதோ, அது அக்கினிக்கு இரையாக எறியப்படும்; அதின் இரண்டுமுனைகளையும் அக்கினி எரித்துப்போடும்; அதின் நடுத்துண்டும் வெந்துபோகும்; அது எந்த வேலைக்காவது உதவுமோ?
5இதோ, அது வேகாதிருக்கும்போதே ஒரு வேலைக்கும் உதவாதிருக்க, அக்கினி அதை எரித்து, அது வெந்துபோனபின்பு, அது இனி ஒரு வேலைக்கு உதவுவதெப்படி?
6ஆதலால், கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: காட்டுச்செடிகளுக்குள்ளிருக்கிற திராட்சச்செடியை நான் அக்கினிக்கு இரையாக ஒப்புக்கொடுத்ததுபோல, எருசலேமின் குடிகளையும் அப்படியே ஒப்புக்கொடுத்து,
7என் முகத்தை அவர்களுக்கு விரோதமாகத் திருப்புவேன்; அவர்கள் ஒரு அக்கினியிலிருந்து நீங்கித் தப்பினாலும், வேறே அக்கினி அவர்களைப் பட்சிக்கும்; அப்படியே நான் என் முகத்தை அவர்களுக்கு விரோதமாய்த் திருப்பும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.
8அவர்கள் துரோகம்பண்ணினபடியினால், நான் தேசத்தைப் பாழாய்ப் போகப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
1தேவனே, எனக்கு இரங்கும்; மனுஷன் என்னை விழுங்கப்பார்க்கிறான், நாள்தோறும் போர்செய்து, என்னை ஒடுக்குகிறான்.
2என் சத்துருக்கள் நாள்தோறும் என்னை விழுங்கப்பார்க்கிறார்கள்; உன்னதமானவரே, எனக்கு விரோதமாய் அகங்கரித்துப் போர்செய்கிறவர்கள் அநேகர்.
3நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்.
4தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்?
5நித்தமும் என் வார்த்தைகளைப் புரட்டுகிறார்கள்; எனக்குத் தீங்குசெய்வதே அவர்கள் முழு எண்ணமாயிருக்கிறது.
6அவர்கள் ஏகமாய்க் கூடி, பதிவிருக்கிறார்கள்; என் பிராணனை வாங்க விரும்பி, என் காலடிகளைத் தொடர்ந்துவருகிறார்கள்.
7அவர்கள் தங்கள் அக்கிரமத்தினால் தப்புவார்களோ? தேவனே, கோபங்கொண்டு ஜனங்களைக் கீழே தள்ளும்.
8என் அலைச்சல்களை தேவரீர் எண்ணியிருக்கிறீர்; என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்; அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது?
9நான் உம்மை நோக்கிக் கூப்பிடும் நாளில் என் சத்துருக்கள் பின்னிட்டுத் திரும்புவார்கள்; தேவன் என் பட்சத்தில் இருக்கிறார் என்பதை அறிவேன்.
10தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; கர்த்தரை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்.
11தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்னசெய்வான்?
12தேவனே, நான் உமக்குப் பண்ணினபொருத்தனைகள் என்மேல் இருக்கிறது; உமக்கு ஸ்தோத்திரங்களைச் செலுத்துவேன்.
13நான் தேவனுக்கு முன்பாக ஜீவனுள்ளோருடைய வெளிச்சத்திலே நடக்கும்படி, நீர் என் ஆத்துமாவை மரணத்துக்கும் என் கால்களை இடறலுக்கும் தப்புவியாதிருப்பீரோ?
1எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்; உம்மை என் ஆத்துமா அண்டிக்கொள்ளுகிறது; விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன்.
2எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்.
3என்னை விழுங்கப்பார்க்கிறவன் என்னை நிந்திக்கையில், அவர் பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி, என்னை இரட்சிப்பார்: (சேலா). தேவன் தமது கிருபையையும் தமது சத்தியத்தையும் அனுப்புவார்.
4என் ஆத்துமா சிங்கங்களின் நடுவிலிருக்கிறது; தீயை இறைக்கிற மனுபுத்திரருக்குள்ளே கிடக்கிறேன்; அவர்கள் பற்கள் ஈட்டிகளும் அம்புகளும், அவர்கள் நாவு கருக்கான பட்டயமுமாயிருக்கிறது.
5தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்தருளும்; உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக.
6என் கால்களுக்குக் கண்ணியை வைத்திருக்கிறார்கள்; என் ஆத்துமா தொய்ந்துபோயிற்று; எனக்கு முன்பாகக் குழியை வெட்டி, அதின் நடுவிலே விழுந்தார்கள் (சேலா)
7என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது, தேவனே, என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது; நான் பாடிக்கீர்த்தனம்பண்ணுவேன்.
8என் மகிமையே, விழி; வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள்; அதிகாலையில் விழித்துக்கொள்வேன்.
9ஆண்டவரே, ஜனங்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்; ஜாதிகளுக்குள்ளே உம்மைக் கீர்த்தனம் பண்ணுவேன்.
10உமது கிருபை வானபரியந்தமும், உமது சத்தியம் மேகமண்டலங்கள்பரியந்தமும் எட்டுகிறது.
11தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்தருளும்; உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com