1அந்நாட்களிலே பெலிஸ்தர் இஸ்ரவேலின்மேல் யுத்தம்பண்ண, தங்கள் சேனைகளைப் போருக்குக் கூட்டினார்கள்; அப்பொழுது ஆகீஸ் தாவீதை நோக்கி: நீயும் உன் மனுஷரும் எவ்விதத்திலும் என்னோடேகூட யுத்தத்துக்கு வரவேண்டும் என்று அறியக்கடவாய் என்றான்.
2தாவீது ஆகீசைப் பார்த்து: உம்முடைய அடியான் செய்யப்போகிறதை நீர் நிச்சயமாய் அறிந்துகொள்வீர் என்றான்; அப்பொழுது ஆகீஸ் தாவீதை நோக்கி: இதற்காக உன்னை எந்நாளும் எனக்கு மெய்காவலனாக வைப்பேன் என்றான்.
3சாமுவேல் இதற்கு முன்னமே மரித்துப்போனான்; இஸ்ரவேலர் எல்லாரும் அவனுக்குத் துக்கங்கொண்டாடி, அவன் ஊராகிய ராமாவிலே அவனை அடக்கம்பண்ணினார்கள். சவுல் அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் தேசத்தில் இராதபடிக்குத் துரத்திவிட்டான்.
4பெலிஸ்தர் கூடிவந்து, சூநேமிலே பாளயமிறங்கினார்கள்; சவுலும் இஸ்ரவேலர் எல்லாரையும் கூட்டினான்; அவர்கள் கில்போவாவிலே பாளயமிறங்கினார்கள்.
5சவுல் பெலிஸ்தரின் பாளயத்தைக் கண்டபோது பயந்தான்; அவன் இருதயம் மிகவும் தத்தளித்துக்கொண்டிருந்தது.
6சவுல் கர்த்தரிடத்தில் விசாரிக்கும்போது, கர்த்தர் அவனுக்குச் சொப்பனங்களினாலாவது, ஊரீமினாலாவது, தீர்க்கதரிசிகளினாலாவது மறு உத்தரவு அருளவில்லை.
7அப்பொழுது சவுல் தன் ஊழியக்காரரை நோக்கி: அஞ்சனம் பார்க்கிற ஒரு ஸ்திரீயைத் தேடுங்கள்; நான் அவளிடத்தில் போய் விசாரிப்பேன் என்றான்; அதற்கு அவனுடைய ஊழியக்காரர்: இதோ, எந்தோரில் அஞ்சனம் பார்க்கிற ஒரு ஸ்திரீ இருக்கிறாள் என்றார்கள்.
8அப்பொழுது சவுல் வேஷம் மாறி, வேறு வஸ்திரம் தரித்துக்கொண்டு, அவனும் அவனோடேகூட இரண்டுபேரும் இராத்திரியிலே அந்த ஸ்திரீயினிடத்தில் போய்ச் சேர்ந்தார்கள்; அவளை அவன் நோக்கி: நீ அஞ்சனம் பார்த்து எனக்குக் குறிசொல்லி, நான் உன்னிடத்தில் சொல்லுகிறவனை எழும்பிவரச்செய் என்றான்.
9அதற்கு அந்த ஸ்திரீ: சவுல் அஞ்சனம் பார்க்கிறவர்களையும், குறிசொல்லுகிறவர்களையும், தேசத்தில் இராதபடிக்கு நீர்மூலமாக்கின செய்தியை நீர் அறிவீரே; என்னைக் கொன்றுபோடும்படி நீர் என் பிராணனுக்குக் கண்ணிவைக்கிறது என்ன என்றாள்.
10அப்பொழுது சவுல்: இந்தக் காரியத்திற்காக உனக்குப் பொல்லாப்பு வராது என்பதைக் கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று அவளுக்குக் கர்த்தர்மேல் ஆணையிட்டான்.
11அப்பொழுது அந்த ஸ்திரீ: உமக்கு நான் யாரை எழும்பிவரப்பண்ணவேண்டும் என்றதற்கு, அவன்: சாமுவேலை எழும்பிவரப்பண்ணவேண்டும் என்றான்.
12அந்த ஸ்திரீ சாமுவேலைக் கண்டமாத்திரத்தில் மகா சத்தமாய்க் கூப்பிட்டு, சவுலை நோக்கி: ஏன் என்னை மோசம்போக்கினீர்? நீர்தான் சவுலாச்சுதே என்றாள்.
13ராஜா அவளைப் பார்த்து: நீ பயப்படாதே; நீ காண்கிறது என்ன என்று கேட்டான். அதற்கு அந்த ஸ்திரீ: தேவர்கள் பூமிக்குள்ளிருந்து ஏறிவருகிறதைக் காண்கிறேன் என்று சவுலுக்குச் சொன்னாள்.
14அவருடைய ரூபம் என்ன என்று அவளைக் கேட்டான். அதற்கு அவள்: சால்வையைப் போர்த்துக்கொண்டிருக்கிற ஒரு முதிர்ந்த வயதான மனுஷன் எழும்பி வருகிறான் என்றாள்; அதினாலே சவுல் அவன் சாமுவேல் என்று அறிந்து கொண்டு தரைமட்டும் முகங்குனிந்து வணங்கினான்.
15சாமுவேல் சவுலை நோக்கி: நீ என்னை எழும்பிவரப்பண்ணி, என்னைக் கலைத்தது என்ன என்று கேட்டான். அதற்குச் சவுல்: நான் மிகவும் நெருக்கப்பட்டிருக்கிறேன்; பெலிஸ்தர் எனக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிறார்கள்; தேவனும் என்னைக் கைவிட்டார்; அவர் தீர்க்கதரிசிகளினாலாவது, சொப்பனங்களினாலாவது எனக்கு மறு உத்தரவு அருளுகிறதில்லை; ஆகையால் நான் செய்ய வேண்டியதை நீர் எனக்கு அறிவிக்கும்படிக்கு, உம்மை அழைப்பித்தேன் என்றான்.
16அதற்குச் சாமுவேல்: கர்த்தர் உன்னைவிட்டு விலகி, உனக்குச் சத்துருவாய் இருக்கும்போது, நீ என்னிடத்தில் கேட்பானேன்?
17கர்த்தர் என்னைக்கொண்டு சொன்னபடியே செய்துமுடித்து, ராஜ்யத்தை உன் கையிலிருந்து பறித்து, அதை உன் தோழனாகிய தாவீதுக்குக் கொடுத்துவிட்டார்.
18நீ கர்த்தருடைய சொற்கேளாமலும், அமலேக்கின்மேல் அவருக்கு இருந்த கோபத்தின் உக்கிரத்தைத் தீர்க்காமலும் போனபடியினால், கர்த்தர் இன்றையதினம் உனக்கு இந்தப் பிரகாரமாகச் செய்தார்.
19கர்த்தர் உன்னுடைய ஜனமாகிய இஸ்ரவேலரையும் பெலிஸ்தர் கையில் ஒப்புக்கொடுப்பார்; நாளைக்கு நீயும் உன் குமாரரும் என்னோடிருப்பீர்கள்; இஸ்ரவேலின் பாளயத்தையும் கர்த்தர் பெலிஸ்தரின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான்.
20அந்தக்ஷணமே சவுல் நெடிதாங்கிடையாய்த் தரையிலே விழுந்து, சாமுவேலின் வார்த்தைகளினாலே மிகவும் பயப்பட்டான்; அவன் இராப்பகல் முழுவதும் ஒன்றும் சாப்பிடாதிருந்தபடியினால், அவன் பலவீனமாயிருந்தான்.
21அப்பொழுது அந்த ஸ்திரீ சவுலிடத்தில் வந்து, அவன் மிகவும் கலங்கியிருக்கிறதைக் கண்டு, அவனை நோக்கி: இதோ, உம்முடைய அடியாளாகிய நான் உம்முடைய சொற்கேட்டு, என் பிராணனை என் கையிலே பிடித்துக்கொண்டு, நீர் எனக்குச் சொன்ன உம்முடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்தேன்.
22இப்பொழுது நீர் உம்முடைய அடியாளுடைய சொல்லைக் கேளும், நான் உமக்கு முன்பாகக் கொஞ்சம் அப்பம் வைக்கிறேன், அதைப் புசிப்பீராக; அப்பொழுது நீர் வழிநடந்து போகத்தக்க பெலன் உமக்குள் இருக்கும் என்றாள்.
23அவனோ தட்டுதல்பண்ணி, நான் புசிக்கமாட்டேன் என்றான்; ஆனாலும் அவனுடைய ஊழியக்காரரும் அந்த ஸ்திரீயும் அவனை மிகவும் வருந்திக்கொண்டதினால், அவன் அவர்கள் சொற்கேட்டு, தரையிலிருந்து எழுந்திருந்து கட்டிலின் மேல் உட்கார்ந்தான்.
24அந்த ஸ்திரீயினிடத்தில் கொழுத்த கன்றுக்குட்டி ஒன்று வீட்டில் இருந்தது; அதைத் தீவிரமாய் அடித்து, மா எடுத்துப் பிசைந்து, அதைப் புளிப்பில்லா அப்பங்களாகச் சுட்டு,
25சவுலுக்கும் அவன் ஊழியக்காரருக்கும் முன்பாகக் கொண்டுவந்து வைத்தாள்; அவர்கள் புசித்து எழுந்திருந்து, அந்த இராத்திரியிலேயே புறப்பட்டுப் போனார்கள்.
1நான் அப்போஸ்தலனல்லவா? நான் சுயாதீனனல்லவா? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை நான் தரிசிக்கவில்லையா? கர்த்தருக்குள் நீங்கள் என் கிரியையாயிருக்கிறீர்களல்லவா?
2நான் மற்றவர்களுக்கு அப்போஸ்தலனாயிராவிட்டாலும், உங்களுக்கல்லவோ அப்போஸ்தலனாயிருக்கிறேன்; கர்த்தருக்குள் நீங்கள் என் அப்போஸ்தல ஊழியத்திற்கு முத்திரையாயிருக்கிறீர்களே.
3என்னை நியாயம் விசாரிக்கிறவர்களுக்கு நான் சொல்லுகிற மாறுத்தரமாவது:
4புசிக்கவும் குடிக்கவும் எங்களுக்கு அதிகாரமில்லையா?
5மற்ற அப்போஸ்தலரும், கர்த்தருடைய சகோதரரும், கேபாவும் செய்கிறதுபோல, மனைவியாகிய ஒரு சகோதரியைக் கூட்டிக்கொண்டு திரிய எங்களுக்கும் அதிகாரமில்லையா?
6அல்லது, கைத்தொழில் செய்யாதிருக்கிறதற்கு எனக்கும் பர்னபாவுக்கும்மாத்திரந்தானா அதிகாரமில்லை?
7எவன் தன் சொந்தப்பணத்தைச் செலவழித்து, தண்டிலே சேவகம்பண்ணுவான்? எவன் திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதின் கனியில் புசியாதிருப்பான்? எவன் மந்தையை மேய்த்து, அதின் பாலைச் சாப்பிடாதிருப்பான்?
8இவைகளை மனுஷர் வழக்கத்தின்படி சொல்லுகிறேனோ? நியாயப்பிரமாணமும் இவைகளைச் சொல்லுகிறதில்லையா?
9போரடிக்கிற மாட்டை வாய்க்கட்டாயாக என்று மோசேயின் பிரமாணத்திலே எழுதியிருக்கிறதே. தேவன் மாடுகளுக்காகவே கவலையாயிருக்கிறாரோ?
10நமக்காகத்தான் இதைச் சொல்லுகிறாரோ? உழுகிறவன் நம்பிக்கையோடே உழவும், போரடிக்கிறவன் தான் நம்புகிறதில் பங்கடைவேன் என்கிற நம்பிக்கையோடே போரடிக்கவும் வேண்டியதே, ஆகையால், அது நமக்காகவே எழுதியிருக்கிறது.
11நாங்கள் உங்களுக்கு ஞானநன்மைகளை விதைத்திருக்க, உங்கள் சரீரநன்மைகளை அறுத்தால் அது பெரிய காரியமா?
12மற்றவர்கள் உங்களிடத்திலே இந்த அதிகாரத்தைச் செலுத்தினால், அவர்களிலும் நாங்கள் அதிகமாய்ச் செலுத்தலாமல்லவா? அப்படியிருந்தும், கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு யாதொரு தடையும் உண்டாகாதபடிக்கு, நாங்கள் இந்த அதிகாரத்தைச் செலுத்தாமல் எல்லாப்பாடும்படுகிறோம்.
13ஆசாரிய ஊழியஞ்செய்கிறவர்கள் தேவாலயத்திற்குரியவைகளில் புசிக்கிறார்களென்றும், பலிபீடத்தை அடுத்துப் பணிவிடை செய்கிறவர்களுக்குப் பலிபீடத்திலுள்ளவைகளில் பங்கு உண்டென்றும் அறியீர்களா?
14அந்தப்படியே சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்குச் சுவிசேஷத்தினாலே பிழைப்பு உண்டாகவேண்டுமென்று கர்த்தரும் கட்டளையிட்டிருக்கிறார்.
15அப்படியிருந்தும், நான் இவைகளில் ஒன்றையும் அநுபவிக்கவில்லை; இப்படி எனக்கு நடக்கவேண்டுமென்று இவைகளை நான் எழுதுகிறதுமில்லை. என் மேன்மைபாராட்டலை ஒருவன் அவத்தமாக்குகிறதைப்பார்க்கிலும் சாகிறது எனக்கு நலமாயிருக்கும்.
16சுவிசேஷத்தை நான் பிரசங்கித்து வந்தும், மேன்மைப்பாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ.
17நான் உற்சாகமாய் அப்படிச் செய்தால் எனக்குப் பலன் உண்டு; உற்சாகமில்லாதவனாய்ச் செய்தாலும், உக்கிராண உத்தியோகம் எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிறதே.
18ஆதலால் எனக்குப் பலன் என்ன? நான் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கையில் அதைப்பற்றி எனக்கு உண்டாயிருக்கிற அதிகாரத்தை முற்றிலும் செலுத்தாமல், கிறிஸ்துவின் சுவிசேஷத்தைச் செலவில்லாமல் ஸ்தாபிப்பதே எனக்குப் பலன்.
19நான் ஒருவருக்கும் அடிமைப்படாதவனாயிருந்தும், நான் அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, என்னைத்தானே எல்லாருக்கும் அடிமையாக்கினேன்.
20யூதரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு யூதருக்கு யூதனைப்போலவும், நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவனைப் போலவுமானேன்.
21நியாயப்பிரமாணமில்லாதவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு அவர்களுக்கு நியாயப்பிரமாணம் இல்லாதவனைப்போலவுமானேன். அப்படியிருந்தும், நான் தேவனுக்குமுன்பாக நியாயப்பிரமாணமில்லாதவனாயிராமல், கிறிஸ்துவின் பிரமாணத்துக்குள்ளானவனாயிருக்கிறேன்.
22பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப்போலானேன்; எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன்.
23சுவிசேஷத்தில் நான் உடன்பங்காளியாகும்படிக்கு, அதினிமித்தமே இப்படிச் செய்கிறேன்.
24பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்.
25பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்.
26ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன்.
27மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்.
1பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
2மனுபுத்திரனே, இஸ்ரவேல் தேசத்தைக்குறித்துக் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: முடிவு வருகிறது, தேசத்தின் நாலு முனைகளின் மேலும் முடிவு வருகிறது.
3இப்போதே உன்மேல் முடிவு வருகிறது; நான் என் கோபத்தை உன்மேல் வருவித்து, உன் வழிகளுக்குத்தக்கதாக உன்னை நியாயந்தீர்த்து, உன் எல்லா அருவருப்புகளின் பலனையும் உன்மேல் வரப்பண்ணுவேன்.
4என் கண் உன்னைத் தப்பவிடாது; நான் இரங்காமல் உன் வழிகளுக்குத்தக்கதை உன்மேல் வரப்பண்ணுவேன்; உன் அருவருப்புகளுக்குத்தக்கது உன் நடுவில் வந்திருக்கும்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.
5கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: தீங்கு வருகிறது; இதோ, ஏகமான தீங்கு வருகிறது.
6முடிவு வருகிறது, முடிவு வருகிறது, அது உன்மேல் நோக்கமாயிருக்கிறது; இதோ, வருகிறது.
7தேசத்தில் குடியிருக்கிறவனே, அந்நாளின் விடியற்காலம் வருகிறது, காலம் வருகிறது, அமளியின் நாள் சமீபித்திருக்கிறது, மலைகளில் சந்தோஷசத்தம் இல்லை.
8இப்பொழுது விரைவில் என் உக்கிரத்தை உன்மேல் ஊற்றி, என் கோபத்தை உன்னில் தீர்த்துக்கொண்டு, உன்னை உன் வழிகளுக்குத்தக்கதாக நியாயந்தீர்த்து, உன் எல்லா அருவருப்புகளின் பலனையும் உன்மேல் வரப்பண்ணுவேன்.
9என் கண் உன்னைத் தப்பவிடாது; நான் இரங்காமல் உன் வழிகளுக்குத்தக்கதை உன்மேல் வரப்பண்ணுவேன்; உன் அருவருப்புக்களுக்குத்தக்கது உன் நடுவில் வந்திருக்கும்; அப்பொழுது அடிக்கிறவராகிய நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.
10இதோ, அந்த நாள், இதோ, வருகிறது, அந்நாளின் விடியற்காலம் உதிக்கிறது, மிலாறு பூக்கிறது, அகந்தை செழிக்கிறது.
11அக்கிரமத்துக்கு மிலாறாகக்கொடுமை எழும்புகிறது; அவர்களிலும் அவர்களுடைய திரளான கும்பிலும் அவர்களுடைய அமளியிலும் ஒன்றும் மீதியாயிருப்பதில்லை; அவர்கள்நிமித்தம் புலம்பல் உண்டாயிருப்பதுமில்லை.
12அந்தக் காலம் வருகிறது, அந்த நாள் கிட்டுகிறது; கொள்ளுகிறவன் சந்தோஷப்படாமலும், விற்கிறவன் துக்கப்படாமலும் இருப்பானாக; அதின் திரளான கும்பின்மேலும் உக்கிரம் இறங்கும்.
13அவர்கள் ஜீவனுள்ளோருக்குள்ளே இன்னும் உயிரோடிருந்தாலும், விற்றவன் விற்கப்பட்டதற்குத் திரும்பிவருவதில்லை; அதின் திரளான கும்பின்மேலும் உண்டான தரிசனம் திரும்பாது; தன் அக்கிரமத்திலே வாழுகிற எவனும் தன்னைத் திடப்படுத்தமாட்டான்.
14அவர்கள் எக்காளம் ஊதி, எல்லாவற்றையும் ஆயத்தம்பண்ணியும், யுத்தத்துக்குப் போகிறவனில்லை; என் உக்கிரம் அதின் திரளான கும்பின்மேலும் இறங்குகிறது.
15வெளியே பட்டயமும் உள்ளே கொள்ளைநோயும் பஞ்சமும் உண்டு; வயல்வெளியில் இருக்கிறவன் பட்டயத்தால் சாவான்; நகரத்தில் இருக்கிறவனையோ பஞ்சமும் கொள்ளைநோயும் பட்சிக்கும்.
16அவர்களில் தப்புகிறவர்கள் தப்புவார்கள்; ஆனாலும் அவர்கள் அனைவரும் அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தம் துக்கித்துக் கூப்பிடுகிற பள்ளத்தாக்குகளின் புறாக்களைப்போல மலைகளில் இருப்பார்கள்.
17எல்லாக் கைகளும் சலித்து, எல்லா முழங்கால்களும் தண்ணீரைப்போல் தத்தளிக்கும்.
18இரட்டை உடுத்திக்கொள்வார்கள்; தத்தளிப்பு அவர்களை மூடும்; எல்லா முகங்களும் வெட்கப்படும், எல்லாத் தலைகளும் மொட்டையிடப்படும்.
19தங்கள் வெள்ளியைத் தெருக்களில் எறிந்துவிடுவார்கள்; அவர்களுடைய பொன் வேண்டாவெறுப்பாயிருக்கும்; கர்த்தருடைய சினத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களை விடுவிக்கமாட்டாது; அவர்கள் அதினால் தங்கள் ஆத்துமாக்களைத் திருப்தியாக்குவதும் இல்லை, தங்கள் வயிறுகளை நிரப்புவதும் இல்லை; அவர்கள் அக்கிரமமே அவர்களுக்கு இடறலாயிருந்தது.
20அவருடைய சிங்காரத்தின் மகிமையை அகந்தைக்கென்று வைத்து, அதிலே அருவருக்கப்படத்தக்கதும் சீயென்றிகழப்படத்தக்கதுமான காரியங்களின் விக்கிரகங்களை உண்டுபண்ணினார்கள்; ஆகையால் நான் அவைகளை அவர்களுக்கு வேண்டாவெறுப்பாக்கி,
21அதை அந்நியர் கையிலே கொள்ளையாகவும், பூமியில் துஷ்டர்களுக்குச் சூறையாகவும் கொடுப்பேன்; அவர்கள் அதைப் பரிசுத்தக்குலைச்சலாக்குவார்கள்.
22என் முகத்தை அவர்களை விட்டுத் திருப்புவேன்; அதினால் என் அந்தரங்க ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்குவார்கள்; பறிகாரர் அதற்குள் பிரவேசித்து, அதைப் பரிசுத்தக்குலைச்சலாக்குவார்கள்.
23ஒரு சங்கிலியைப் பண்ணிவை; தேசம் நியாயத்தீர்ப்புக்குள்ளான இரத்தப்பழிகளால் நிறைந்திருக்கிறது; நகரம் கொடுமையால் நிறைந்திருக்கிறது.
24ஆகையால் புறஜாதிகளின் துஷ்டர்களை வரப்பண்ணுவேன், அவர்கள் இவர்களுடைய வீடுகளைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்; பலவான்களின் பெருமையை ஒழியப்பண்ணுவேன், அவர்கள் பரிசுத்த ஸ்தலங்கள் பரிசுத்தக்குலைச்சலாகும்.
25சங்காரம் வருகிறது; அப்பொழுது சமாதானத்தைத் தேடுவார்கள்; ஆனாலும் அது கிடையாது.
26விக்கினத்தின்மேல் விக்கினம் வரும்; துர்ச்செய்தியின்மேல் துர்ச்செய்தி பிறக்கும்; அப்பொழுது தீர்க்கதரிசியினிடத்திலே தரிசனத்தைத் தேடுவார்கள்; ஆனாலும் ஆசாரியனிடத்திலே வேதமும் மூப்பரிடத்திலே ஆலோசனையும் இராமல் ஒழிந்துபோகும்.
27ராஜா துக்கித்துக்கொண்டிருப்பான்; பிரபுவைத் திகில் மூடிக்கொண்டிருக்கும்; தேசத்து ஜனங்களின் கைகள் தளர்ந்துபோகும்; நான் அவர்கள் வழிகளின்படியே அவர்களுக்குச் செய்து, அவர்கள் நியாயங்களின்படியே அவர்களை நியாயந்தீர்ப்பேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் என்றார்.
1என் இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது; நான் ராஜாவைக் குறித்துப் பாடின கவியைச் சொல்லுகிறேன்; என் நாவு விரைவாய் எழுதுகிறவனுடைய எழுத்தாணி.
2எல்லா மனுபுத்திரரிலும் நீர் மகா சவுந்தரியமுள்ளவர்; உம்முடைய உதடுகளில் அருள் பொழிகிறது; ஆகையால் தேவன் உம்மை என்றென்றைக்கும் ஆசீர்வதிக்கிறார்.
3சவுரியவானே, உமது மகிமையும் உமது மகத்துவமுமாகிய உம்முடைய பட்டயத்தை நீர் உம்முடைய அரையிலே கட்டிக்கொண்டு,
4சத்தியத்தினிமித்தமும், நீதியுடன் கூடிய சாந்தத்தினிமித்தமும், உமது மகத்துவத்திலே ஜெயமாக ஏறிவாரும்; உமது வலதுகரம் பயங்கரமானவைகளை உமக்கு விளங்கப்பண்ணும்.
5உம்முடைய அம்புகள் கூர்மையானவைகள், அவைகள் ராஜாவுடைய சத்துருக்களின் இருதயத்திற்குள் பாயும்; ஜனசதளங்கள் உமக்குக் கீழே விழுவார்கள்.
6தேவனே, உமது சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உமது ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது.
7நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுக்கிறீர்; ஆதலால் தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப்பார்க்கிலும் உம்மை ஆனந்ததைலத்தினால் அபிஷேகம்பண்ணினார்.
8தந்தத்தினால் செய்த அரமனைகளிலிருந்து புறப்படுகையில், நீர் மகிழும்படி உமது வஸ்திரங்களெல்லாம் வெள்ளைப்போளம் சந்தனம் லவங்கம் இவைகளின் வாசனை பொருந்தியதாயிருக்கிறது.
9உமது நாயகிகளுக்குள்ளே அரசரின் குமாரத்திகளுண்டு, ராஜஸ்திரீ ஓப்பீரின் தங்கம் அணிந்தவளாய் உமது வலதுபாரிசத்தில் நிற்கிறாள்.
10குமாரத்தியே கேள், நீ உன் செவியைச் சாய்த்து சிந்தித்துக்கொள்; உன் ஜனத்தையும் உன் தகப்பன் வீட்டையும் மறந்துவிடு.
11அப்பொழுது ராஜா உன் அழகில் பிரியப்படுவார்; அவர் உன் ஆண்டவர், ஆகையால் அவரைப் பணிந்துகொள்.
12தீரு குமாரத்தி காணிக்கை கொண்டுவருவாள்; ஜனங்களில் ஜசுவரியவான்களும் உன் தயவை நாடி வணங்குவார்கள்.
13ராஜகுமாரத்தி உள்ளாகப் பூரண மகிமையுள்ளவள்; அவள் உடை பொற்சரிகையாயிருக்கிறது.
14சித்திரத்தையலாடை தரித்தவளாய், ராஜாவினிடத்தில் அழைத்துக்கொண்டு வரப்படுவாள்; அவள் பின்னாலே செல்லும் அவளுடைய தோழிகளாகிய கன்னிகைகள் உம்மிடத்தில் கூட்டிக்கொண்டு வரப்படுவார்கள்.
15அவர்கள் மகிழ்ச்சியோடும் களிப்போடும் வந்து, ராஜ அரமனைக்குள் பிரவேசிப்பார்கள்.
16உமது பிதாக்களுக்குப் பதிலாக உமது குமாரர் இருப்பார்கள்; அவர்களைப் பூமியெங்கும் பிரபுக்களாக வைப்பீர்.
17உமது நாமத்தை எல்லாத் தலைமுறைகளிலும் பிரஸ்தாபப்படுத்துவேன்; இதினிமித்தம் ஜனங்கள் உம்மை என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் துதிப்பார்கள்.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com