‹ முகப்புமுழுத் திட்டம்

செப்டம்பர் 5 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்செப்டம்பர் 5அடுத்த நாள் ›
குடும்பம்

I சாமுவேல் 29-30

முழு அதிகாரம் ›
I சாமுவேல் 29

1பெலிஸ்தர் தங்கள் சேனைகளையெல்லாம் ஆப்பெக்கிலே கூடிவரச்செய்தார்கள்; இஸ்ரவேலர் யெஸ்ரயேலிலிருக்கிற துரவண்டையிலே பாளயமிறங்கினார்கள்.

2அப்பொழுது பெலிஸ்தரின் அதிபதிகள் நூறும் ஆயிரமுமான சேர்வைகளோடே போனார்கள்; தாவீதும் அவன் மனுஷரும் ஆகீசோடே பின்தண்டிலே போனார்கள்.

3அப்பொழுது பெலிஸ்தரின் பிரபுக்கள்: இந்த எபிரெயர் என்னத்திற்கு என்றார்கள்; ஆகீஸ் அவர்களைப் பார்த்து: இஸ்ரவேலின் ராஜாவாகிய சவுலின் ஊழியக்காரனாயிருந்த இந்தத் தாவீது இத்தனை நாட்களும் இத்தனை வருஷங்களும் என்னோடு இருக்கவில்லையா? இவன் என்னிடத்தில் வந்து சேர்ந்த நாள்முதல் இந்நாள்வரைக்கும் ஒரு குற்றமும் நான் இவனில் கண்டுபிடிக்கவில்லை என்றான்.

4அதனால் பெலிஸ்தரின் பிரபுக்கள் அவன்மேல் கடுங்கோபமாகி, அவனைப் பார்த்து: இந்த மனுஷன் நீர் குறித்த தன் இடத்திற்குத் திரும்பிப்போகும்படிக்கு, அங்கே அவனை மறுபடியும் அனுப்பிவிடும்; யுத்தத்தில் இவன் நமக்குச் சத்துருவாயிராதபடிக்கு, இவன் நம்மோடே கூட யுத்தத்திற்கு வரவேண்டியதில்லை; இவன் எதினாலே தன் ஆண்டவனோடே ஒப்புரவாவான்? இந்த மனுஷருடைய தலைகளினால் அல்லவா?

5சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று இந்தத் தாவீதைக்குறித்து அல்லவோ ஆடிப்பாடிச் சொன்னார்கள் என்றார்கள்.

6அப்பொழுது ஆகீஸ் தாவீதை அழைத்து: நீ உத்தமன் என்றும், நீ பாளயத்தில் என்னோடே போக்கும் வரத்துமாயிருக்கிறது என் பார்வைக்கு நல்லது என்றும், கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; நீ என்னிடத்தில் வந்து சேர்ந்த நாள்முதல் இன்றையவரைக்கும் நான் உன்னில் ஒரு பொல்லாப்பும் காணவில்லை; ஆகிலும் பிரபுக்களின் பார்வைக்கு நீ பிரியமானவன் அல்ல.

7ஆகையால் பெலிஸ்தருடைய பிரபுக்கள் உன்மேல் தாங்கல் அடையாதபடிக்கு, இப்போது சமாதானத்தோடே திரும்பிப் போய்விடு என்றான்.

8தாவீது ஆகீசை நோக்கி: ஏன்? நான் செய்தது என்ன? நான் வந்து, ராஜாவாகிய என் ஆண்டவனுடைய சத்துருக்களோடே யுத்தம்பண்ணாதபடிக்கு, நான் உம்மிடத்தில் வந்த நாள்முதற்கொண்டு இன்றையவரைக்கும் உமது அடியேனிடத்தில் கண்டுபிடித்தது என்ன என்றான்.

9ஆகீஸ் தாவீதுக்குப் பிரதியுத்தரமாக: அதை அறிவேன்; நீ தேவனுடைய தூதனைப்போல என் பார்வைக்குப் பிரியமானவன்; ஆனாலும் இவன் எங்களோடேகூட யுத்தத்திற்கு வரக்கூடாது என்று பெலிஸ்தரின் பிரபுக்கள் சொல்லுகிறார்கள்.

10இப்போதும் நீ நாளை அதிகாலையில் உன்னோடே வந்த உன் ஆண்டவனுடைய வேலைக்காரரைக் கூட்டிக்கொண்டு, விடியற்காலத்திலே வெளிச்சமாகிறபோது, புறப்பட்டுப்போ என்றான்.

11அப்படியே தாவீது அதிகாலையில் தன் மனுஷரைக் கூட்டிக்கொண்டு, பொழுதுவிடிகிற நேரத்திலே, பெலிஸ்தரின் தேசத்திற்குத் திரும்பிப்போகப் புறப்பட்டான்; பெலிஸ்தரோவெனில் யெஸ்ரயேலுக்குப் போனார்கள்.

I சாமுவேல் 30

1தாவீதும் அவன் மனுஷரும் மூன்றாம் நாளிலே, சிக்லாகுக்கு வந்து சேருகிறதற்குள்ளே, அமலேக்கியர் தென்புறத்துச் சீமையின்மேலும் சிக்லாகின்மேலும் விழுந்து, சிக்லாகைக் கொள்ளையடித்து, அதை அக்கினியால் சுட்டெரித்து,

2அதிலிருந்த ஸ்திரீகளாகிய சிறியவர்களையும் பெரியவர்களையும் சிறைபிடித்து, ஒருவரையும் கொன்றுபோடாமல், அவர்களைப் பிடித்துக்கொண்டு, தங்கள் வழியே போய்விட்டார்கள்.

3தாவீதும் அவன் மனுஷரும் அந்தப் பட்டணத்திற்கு வந்தபோது, இதோ, அது அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டது என்றும், தங்கள் மனைவிகளும் தங்கள் குமாரரும் தங்கள் குமாரத்திகளும் சிறைபிடித்துக்கொண்டுபோகப்பட்டார்கள் என்றும் கண்டார்கள்.

4அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த ஜனங்களும் அழுகிறதற்குத் தங்களில் பெலனில்லாமல் போகுமட்டும் சத்தமிட்டு அழுதார்கள்.

5தாவீதின் இரண்டு மனைவிகளாகிய யெஸ்ரயேல் ஊராளான அகினோவாமும், கர்மேல் ஊராளான நாபாலின் மனைவியாயிருந்த அபிகாயிலும், சிறைபிடித்துக்கொண்டுபோகப்பட்டார்கள்.

6தாவீது மிகவும் நெருக்கப்பட்டான்; சகல ஜனங்களும் தங்கள் குமாரர் குமாரத்திகளினிமித்தம் மனக்கிலேசமானதினால், அவனைக் கல்லெறியவேண்டும் என்று சொல்லிக்கொண்டார்கள்; தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்.

7தாவீது அகிமெலேக்கின் குமாரனாகிய அபியத்தார் என்னும் ஆசாரியனை நோக்கி: ஏபோத்தை என்னிடத்தில் கொண்டுவா என்றான்; அபியத்தார் ஏபோத்தைத் தாவீதினிடத்தில் கொண்டுவந்தான்.

8தாவீது கர்த்தரை நோக்கி: நான் அந்தத் தண்டைப் பின்தொடரவேண்டுமா? அதைப் பிடிப்பேனா? என்று கேட்டான். அதற்கு அவர்: அதைப் பின் தொடர்; அதை நீ பிடித்து, சகலத்தையும் திருப்பிக்கொள்வாய் என்றார்.

9அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த அறுநூறுபேரும் போனார்கள்; அவர்கள் பேசோர் ஆற்றண்டைக்கு வந்தபோது அங்கே சிலர் நின்றுபோனார்கள்.

10தாவீதோ, நானூறுபேரோடுங்கூடத் தொடர்ந்து போனான்; இருநூறுபேர் விடாய்த்துப்போனபடியினால் பேசோர் ஆற்றைக் கடக்கமாட்டாமல் நின்றுபோனார்கள்.

11ஒரு எகிப்தியனை வெளியில் அவர்கள் கண்டு, அவனைத் தாவீதினிடத்தில் கொண்டுவந்து, புசிக்க அவனுக்கு அப்பமும் குடிக்கத் தண்ணீரும் கொடுத்து,

12அத்திப்பழ அடையின் ஒரு துண்டையும், வற்றலான இரண்டு திராட்சப்பழக் குலைகளையும் அவனுக்குக் கொடுத்தார்கள்; அதை அவன் சாப்பிட்டபின்பு, அவனுடைய உயிர் திரும்ப அவனுக்குள் வந்தது. அவன் இராப்பகல் மூன்று நாளாய் அப்பம் சாப்பிடாமலும் தண்ணீர் குடியாமலும் இருந்தான்.

13தாவீது அவனை நோக்கி: நீ யாருடையவன்? நீ எவ்விடத்தான் என்று கேட்டதற்கு, அவன்: நான் ஒரு அமலேக்கியனுடைய வேலைக்காரனாகிய எகிப்து தேசத்துப் பிள்ளையாண்டான்; மூன்று நாளைக்குமுன் நான் வியாதிப்பட்டபோது, என் எஜமான் என்னைக் கைவிட்டான்.

14நாங்கள் கிரேத்தியருடைய தென்புறத்தின்மேலும், யூதாவுக்கடுத்த எல்லையின்மேலும், காலேபுடைய தென்புறத்தின்மேலும், படையெடுத்துப்போய் சிக்லாகை அக்கினியினால் சுட்டெரித்துப் போட்டோம் என்றான்.

15தாவீது அவனை நோக்கி: நீ என்னை அந்தத் தண்டினிடத்துக்குக் கொண்டுபோவாயா என்று கேட்டதற்கு: அவன், நீர் என்னைக் கொன்றுபோடுவதுமில்லை, என்னை என் எஜமான் கையில் ஒப்புக்கொடுப்பதுமில்லை என்று தேவன்மேல் ஆணையிடுவீரானால், உம்மை அந்தத் தண்டினிடத்துக்குக் கூட்டிக்கொண்டுபோவேன் என்றான்.

16இவன் அவனைக் கொண்டுபோய்விட்டபோது, இதோ, அவர்கள் வெளியெங்கும் பரவி, புசித்துக் குடித்து, தாங்கள் பெலிஸ்தர் தேசத்திலும் யூதாதேசத்திலும் கொள்ளையிட்டு வந்த மகா பெரிதான அந்த எல்லாக் கொள்ளைக்காகவும் ஆடிப்பாடிக்கொண்டிருந்தார்கள்.

17அவர்களைத் தாவீது அன்று சாயங்காலந்தொடங்கி மறுநாள் சாயங்காலமட்டும் முறிய அடித்தான்; ஒட்டகங்கள் மேல் ஏறி ஓடிப்போன நானூறு வாலிபர் தவிர, அவர்களில் வேறொருவரும் தப்பவில்லை.

18அமலேக்கியர் பிடித்துக்கொண்டுபோன எல்லாவற்றையும், தன்னுடைய இரண்டு மனைவிகளையும், தாவீது விடுவித்தான்.

19அவர்கள் கொள்ளையாடிக்கொண்டுபோன எல்லாவற்றிலும், சிறியதிலும், பெரியதிலும், குமாரரிலும், குமாரத்திகளிலும், ஒன்றும் குறைபடாமல் எல்லாவற்றையும் தாவீது திருப்பிக்கொண்டான்.

20எல்லா ஆடுமாடுகளையும் தாவீது பிடித்துக்கொண்டான்; அவைகளைத் தங்கள் மிருகஜீவன்களுக்கு முன்னாலே ஓட்டி, இது தாவீதின் கொள்ளை என்றார்கள்.

21விடாய்த்துப்போனதினாலே தாவீதுக்குப் பின்செல்லாமல், பேசோர் ஆற்றண்டையிலே தங்கியிருந்த இருநூறுபேரிடத்துக்குத் தாவீது வருகிறபோது, இவர்கள் தாவீதுக்கும் அவனோடிருந்த ஜனத்திற்கும் எதிர்கொண்டு வந்தார்கள்; தாவீது அந்த ஜனத்தினிடத்தில் சேர்ந்து, அவர்கள் சுகசெய்தியை விசாரித்தான்.

22அப்பொழுது தாவீதோடே நடந்து வந்த மனுஷரில் பொல்லாதவர்களும் பேலியாளின் மக்களுமான எல்லாரும்: அவர்கள் எங்களோடே வராதபடியினால் நாங்கள் திருப்பிக்கொண்ட கொள்ளையுடமைகளில் அவர்களுக்கு ஒன்றும் கொடுப்பதில்லை; அவர்களில் ஒவ்வொருவனும் தன்தன் மனைவியையும் தன்தன் பிள்ளைகளையுமே அழைத்துக்கொண்டு போகட்டும் என்றார்கள்.

23அதற்குத் தாவீது: என் சகோதரரே, கர்த்தர் நமக்குத் தந்ததை நீங்கள் இப்படிச் செய்யவேண்டாம்; கர்த்தர் நம்மைக் காப்பாற்றி, நமக்கு விரோதமாய் வந்திருந்த அந்தத் தண்டை நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்.

24இந்தக் காரியத்தில் உங்கள் சொற் கேட்க யார் சம்மதிப்பான்? யுத்தத்திற்குப் போனவர்களின் பங்கு எவ்வளவோ, அவ்வளவு ரஸ்துக்களண்டையில் இருந்தவர்களுக்கும் பங்குவீதம் கிடைக்கவேண்டும்; சரிபங்காகப் பங்கிடுவார்களாக என்றான்.

25அப்படியே அந்நாள் முதற்கொண்டு நடந்து வருகிறது; அதை இஸ்ரவேலிலே இந்நாள் வரைக்கும் இருக்கும் கட்டளையும் பிரமாணமுமாக ஏற்படுத்தினான்.

26தாவீது சிக்லாகுக்கு வந்தபோது, அவன் கொள்ளையாடினவைகளிலே தன் சிநேகிதராகிய யூதாவின் மூப்பருக்குச் சிலவற்றை அனுப்பி: இதோ, கர்த்தருடைய சத்துருக்களின் கொள்ளையில் உங்களுக்கு உண்டாயிருக்கும் ஆசீர்வாதபாகம் என்று சொல்லச் சொன்னான்.

27யார் யாருக்கு அனுப்பினானென்றால், பெத்தேலில் இருக்கிறவர்களுக்கும், தெற்கான ராமோத்தில் இருக்கிறவர்களுக்கும், யாத்தீரில் இருக்கிறவர்களுக்கும்,

28ஆரோவேரில் இருக்கிறவர்களுக்கும், சிப்மோத்தில் இருக்கிறவர்களுக்கும், எஸ்தேமோகாவில் இருக்கிறவர்களுக்கும்,

29ராக்காலில் இருக்கிறவர்களுக்கும், யெராமியேலியரின் பட்டணங்களில் இருக்கிறவர்களுக்கும், கேனியரின் பட்டணங்களில் இருக்கிறவர்களுக்கும்,

30ஒர்மாவில் இருக்கிறவர்களுக்கும், கொராசானில் இருக்கிறவர்களுக்கும், ஆற்றாகில் இருக்கிறவர்களுக்கும்,

31எப்ரோனில் இருக்கிறவர்களுக்கும், தாவீதும் அவன் மனுஷரும் நடமாடின எல்லா இடங்களில் இருக்கிறவர்களுக்கும் அனுப்பினான்.

I கொரிந்தியர் 10

முழு அதிகாரம் ›

1இப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் எவைகளை அறியவேண்டுமென்றிருக்கிறேனென்றால்; நம்முடைய பிதாக்களெல்லாரும் மேகத்துக்குக் கீழாயிருந்தார்கள், எல்லாரும், சமுத்திரத்தின் வழியாய் நடந்துவந்தார்கள்.

2எல்லாரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம்பண்ணப்பட்டார்கள்.

3எல்லாரும் ஒரே ஞானபோஜனத்தைப் புசித்தார்கள்.

4எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள். எப்படியெனில், அவர்களோடேகூடச் சென்ற ஞானக்கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள்; அந்தக் கன்மலை கிறிஸ்துவே.

5அப்படியிருந்தும், அவர்களில் அதிகமானபேர்களிடத்தில் தேவன் பிரியமாயிருந்ததில்லை; ஆதலால் வனாந்தரத்திலே அவர்கள் அழிக்கப்பட்டார்கள்.

6அவர்கள் இச்சித்ததுபோல நாமும் பொல்லாங்கானவைகளை இச்சியாதபடிக்கு, இவைகள் நமக்குத் திருஷ்டாந்தங்களாயிருக்கிறது.

7ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து விளையாட எழுந்திருந்தார்கள் என்று எழுதியிருக்கிறபடி, அவர்களில் சிலர் விக்கிரகாராதனைக்காரர் ஆனதுபோல நீங்களும் ஆகாதிருங்கள்.

8அவர்களில் சிலர் வேசித்தனம்பண்ணி, ஒரேநாளில் இருபத்துமூவாயிரம்பேர் விழுந்துபோனார்கள்; அதுபோல நாமும் வேசித்தனம்பண்ணாதிருப்போமாக.

9அவர்களில் சிலர் கிறிஸ்துவைப் பரீட்சைப்பார்த்து, பாம்புகளால் அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நாமும் கிறிஸ்துவைப் பரீட்சைபாராதிருப்போமாக.

10அவர்களில் சிலர் முறுமுறுத்து, சங்காரக்காரனாலே அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நீங்களும் முறுமுறுக்காதிருங்கள்.

11இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக அவர்களுக்குச் சம்பவித்தது; உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது.

12இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்.

13மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.

14ஆகையால் எனக்குப் பிரியமானவர்களே, விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள்.

15உங்களைப் புத்திமான்களென்று எண்ணிப் பேசுகிறேன்; நான் சொல்லுகிறதை நீங்களே நிதானித்துப்பாருங்கள்.

16நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் ஐக்கிமாயிருக்கிறதல்லவா? நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா?

17அந்த ஒரே அப்பத்தில் நாமெல்லாரும் பங்குபெறுகிறபடியால், அநேகரான நாம் ஒரே அப்பமும் ஒரே சரீரமுமாயிருக்கிறோம்.

18மாம்சத்தின்படியான இஸ்ரவேலரைப் பாருங்கள்; பலிகளைப் புசிக்கிறவர்கள் பலிபீடத்தோடே ஐக்கியமாயிருக்கிறார்களல்லவா?

19இப்படியிருக்க, விக்கிரகம் ஒரு பொருளென்றும், விக்கிரகத்துக்குப் படைக்கப்பட்டது ஒரு பொருளென்றும் நான் சொல்லுகிறேனோ?

20அஞ்ஞானிகள் பலியிடுகிறவைகளை தேவனுக்கு அல்ல, பேய்களுக்கே பலியிடுகிறார்களென்று சொல்லுகிறேன்; நீங்கள் பேய்களோடே ஐக்கியமாயிருக்க எனக்கு மனதில்லை.

21நீங்கள் கர்த்தருடைய பாத்திரத்திலும் பேய்களுடைய பாத்திரத்திலும் பானம் பண்ணக்கூடாதே; நீங்கள் கர்த்தருடைய போஜனபந்திக்கும் பேய்களுடைய போஜனபந்திக்கும் பங்குள்ளவர்களாயிருக்கக்கூடாதே.

22நாம் கர்த்தருக்கு எரிச்சலை மூட்டலாமா? அவரிலும் நாம் பலவான்களா?

23எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் பக்திவிருத்தியை உண்டாக்காது.

24ஒவ்வொருவனும் தன் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், பிறனுடைய பிரயோஜனத்தைத் தேடக்கடவன்.

25கடையிலே விற்கப்படுகிற எதையும் வாங்கிப் புசியுங்கள்; மனச்சாட்சியினிமித்தம் நீங்கள் ஒன்றையும் விசாரிக்கவேண்டியதில்லை.

26பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது.

27அன்றியும் அவிசுவாசிகளில் ஒருவன் உங்களை விருந்துக்கு அழைக்கும்போது, போக உங்களுக்கு மனதிருந்தால், மனச்சாட்சியினிமித்தம் ஒன்றையும் விசாரியாமல், உங்கள் முன் வைக்கப்படுகிற எதையும் புசியுங்கள்.

28ஆயினும் இது விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதென்று ஒருவன் உங்களுக்குச் சொன்னால், அப்படி அறிவித்தவனிமித்தமும் மனச்சாட்சியினிமித்தமும் புசியாதிருங்கள்; பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது.

29உன்னுடைய மனச்சாட்சியைக்குறித்து நான் இப்படிச் சொல்லாமல், மற்றொருவனுடைய மனச்சாட்சியைக்குறித்தே சொல்லுகிறேன். என் சுயாதீனம் மற்றொருவனுடைய மனச்சாட்சியினாலே குற்றமாய் எண்ணப்படவேண்டுவதென்ன?

30மேலும் நான் அதை ஸ்தோத்திரிப்புடனே அநுபவித்தால், ஸ்தோத்திரித்து அநுபவிக்கிற பொருளைக்குறித்து நான் தூஷிக்கப்படுவானேன்?

31ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்.

32நான் என் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், அநேகருடைய பிரயோஜனத்தைத் தேடி, அவர்கள் இரட்சிக்கப்படும்படிக்கு, எவ்விதத்திலும் எல்லாருக்கும் பிரியமாய் நடக்கிறதுபோல;

33நீங்களும் யூதருக்கும், கிரேக்கருக்கும், தேவனுடைய சபைக்கும் இடறலற்றவர்களாயிருங்கள்.

தனிவாசிப்பு

எசேக்கியேல் 8

முழு அதிகாரம் ›

1ஆறாம் வருஷத்து ஆறாம் மாதம் ஐந்தாந்தேதியிலே, நான் என் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், யூதாவின் மூப்பர்கள் எனக்கு முன்பாக உட்கார்ந்திருக்கிறபோதும், கர்த்தராகிய ஆண்டவருடைய கரம் அங்கே என்மேல் அமர்ந்தது.

2அப்பொழுது இதோ, அக்கினிச்சாயலாய்த் தோன்றுகிற ஒருவரைக் கண்டேன்; அவருடைய இடுப்புக்குக் கீழெல்லாம் அக்கினியும் அவருடைய இடுப்புக்கு மேலெல்லாம் சொகுசாவைப்போல் பிரகாசிக்கிற சாயலுமாயிருந்தது.

3கைபோல் தோன்றினதை அவர் நீட்டி, என் தலைமயிரைப் பிடித்து என்னைத் தூக்கினார்; ஆவியானவர் என்னைப் பூமிக்கும் வானத்துக்கும் நடுவே கொண்டுபோய், தேவதரிசனத்திலே என்னை எருசலேமில் வடதிசைக்கு எதிரான உள்வாசலின் நடையிலே விட்டார்; அங்கே எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்தின் ஸ்தானம் இருந்தது.

4இதோ, நான் பள்ளத்தாக்கிலே கண்டிருந்த தரிசனத்துக்குச் சரியாக இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை அங்கே விளங்கினது.

5அவர் என்னைப்பார்த்து: மனுபுத்திரனே, உன் கண்களை ஏறெடுத்து, வடக்கே பார் என்றார்; அப்பொழுது நான் என் கண்களை ஏறெடுத்து, வடக்கே பார்த்தேன்; இதோ, பலிபீடத்தின் வாசலுக்கு வடக்கே பார்த்தேன்; நடையிலே எரிச்சலுண்டாக்குகிற அந்த விக்கிரகம் இருந்தது.

6அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, அவர்கள் செய்கிறதைக் காண்கிறாயா? என் பரிசுத்த ஸ்தலத்தைவிட்டு என்னைத் தூரமாய்ப் போகப்பண்ணும்படியான இஸ்ரவேல் வம்சத்தார் இங்கே செய்கிற மிகுந்த அருவருப்புகளைக் காண்கிறாய் அல்லவா? இதிலும் அதிக அருவருப்புகளை இன்னமும் காண்பாய் என்று சொல்லி,

7என்னைப் பிராகாரத்தின் வாசலுக்குக் கொண்டுபோனார்; அப்பொழுது இதோ, சுவரில் ஒரு துவாரத்தைக் கண்டேன்.

8அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ சுவரிலே துவாரமிடு என்றார்; நான் சுவரிலே துவாரமிட்டபோது, இதோ, ஒரு வாசல் இருந்தது.

9அவர் என்னைப்பார்த்து: நீ உள்ளேபோய், அவர்கள் இங்கே செய்கிற கொடிய அருவருப்புகளைப் பார் என்றார்.

10நான் உள்ளே போய்ப் பார்த்தபோது, இதோ, சகலவித ஊரும் பிராணிகளும் அருவருப்பான மிருகங்களுமாகிய இவைகளின் சுரூபங்களும், இஸ்ரவேல் வம்சத்தாருடைய நரகலான சகல விக்கிரகங்களும் சுவரில் சுற்றிலும் சித்திரந்தீரப்பட்டிருந்தன.

11இஸ்ரவேல் வம்சத்தாரின் மூப்பரில் எழுபதுபேரும், அவர்களின் நடுவிலே சாப்பானுடைய குமாரனாகிய யசனியாவும், அவனவன் தன்தன் கையிலே தன்தன் தூபகலசத்தைப் பிடித்துக்கொண்டு, அவைகளுக்கு முன்பாக நின்றார்கள்; தூபவர்க்கத்தினால் மிகுந்த புகை எழும்பிற்று.

12அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தாரின் மூப்பர்கள் அந்தகாரத்திலே அவரவர் தங்கள் விக்கிரகங்களின் சித்திர விநோத அறைகளில் செய்கிறதை நீ கண்டாயா? கர்த்தர் எங்களைப் பார்க்கிறதில்லை; கர்த்தர் தேசத்தைக் கைவிட்டார் என்று சொல்லுகிறார்களே என்றார்.

13பின்னும் அவர்கள் செய்கிற அதிக அருவருப்புகளை இன்னமும் காண்பாய் என்று அவர் என்னுடனே சொல்லி,

14என்னைக் கர்த்தருடைய ஆலயத்து வடக்கு வாசலின் நடையிலே கொண்டுபோனார்; இதோ, அங்கே தம்மூசுக்காக அழுதுகொண்டிருக்கிற ஸ்திரீகள் உட்கார்ந்திருந்தார்கள்.

15அப்பொழுது அவர்: மனுபுத்திரனே, இதைக் கண்டாயா? இதிலும் அதிக அருவருப்புகளை இன்னமும் காண்பாய் என்று என்னுடனே சொல்லி,

16என்னைக் கர்த்தருடைய ஆலயத்தின் உட்பிராகாரத்திலே கொண்டுபோனார்; இதோ, கர்த்தருடைய ஆலயத்தின் வாசல் நடையிலே மண்டபத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே, ஏறக்குறைய இருபத்தைந்து புருஷர், தங்கள் முதுகைக் கர்த்தருடைய ஆலயத்துக்கும் தங்கள் முகத்தைக் கீழ்த்திசைக்கும் நேராகத் திருப்பினவர்களாய்க் கிழக்கே இருக்கும் சூரியனை நமஸ்கரித்தார்கள்.

17அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இதைக் கண்டாயா? இங்கே யூதா வம்சத்தார் செய்கிற அருவருப்புகள் அற்பமான காரியமா? அவர்கள் தேசத்தைக் கொடுமையினால் நிரப்பி என்னை அடிக்கடி கோபமூட்டுகிறார்கள்; இதோ, அவர்கள் திராட்சக்கிளையைத் தங்கள் நாசிக்கு நேராகப் பிடிக்கிறார்கள்.

18ஆகையால் நானும் உக்கிரத்தோடே காரியத்தை நடத்துவேன்; என் கண் தப்பவிடுவதில்லை, நான் இரங்குவதில்லை; அவர்கள் மகா சத்தமாய் என் செவிகள் கேட்கக் கூப்பிட்டாலும் அவர்களுக்கு நான் செவிகொடுப்பதில்லை என்றார்.

சங்கீதம் 46-47

முழு அதிகாரம் ›
சங்கீதம் 46

1தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர்.

2ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்துபோனாலும்,

3அதின் ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும், நாம் பயப்படோம். (சேலா)

4ஒரு நதியுண்டு, அதின் நீர்க்கால்கள் தேவனுடைய நகரத்தையும், உன்னதமானவர் வாசம்பண்ணும் பரிசுத்தஸ்தலத்தையும் சந்தோஷிப்பிக்கும்.

5தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசையாது; அதிகாலையிலே தேவன் அதற்குச் சகாயம் பண்ணுவார்.

6ஜாதிகள் கொந்தளித்தது, ராஜ்யங்கள் தத்தளித்தது; அவர் தமது சத்தத்தை முழங்கப்பண்ணினார், பூமி உருகிப்போயிற்று.

7சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்; யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். (சேலா)

8பூமியிலே பாழ்க்கடிப்புகளை நடப்பிக்கிற கர்த்தருடைய செய்கைகளை வந்துபாருங்கள்.

9அவர் பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்; வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார்; இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார்.

10நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்; ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன்.

11சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார், யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். (சேலா)

சங்கீதம் 47

1சகல ஜனங்களே, கைகொட்டி, தேவனுக்கு முன்பாகக் கெம்பீரசத்தமாய் ஆர்ப்பரியுங்கள்.

2உன்னதமானவராகிய கர்த்தர் பயங்கரமானவரும், பூமியின் மீதெங்கும் மகத்துவமான ராஜாவுமாயிருக்கிறார்.

3ஜனங்களை நமக்கு வசப்படுத்தி, ஜாதிகளை நம்முடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்துவார்.

4தமக்குப் பிரியமான யாக்கோபின் சிறப்பான தேசத்தை நமக்குச் சுதந்தரமாகத் தெரிந்தளிப்பார். (சேலா)

5தேவன் ஆர்ப்பரிப்போடும், கர்த்தர் எக்காள சத்தத்தோடும் உயர எழுந்தருளினார்.

6தேவனைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்; நம்முடைய ராஜாவைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்.

7தேவன் பூமியனைத்திற்கும் ராஜா; கருத்துடனே அவரைப் போற்றிப் பாடுங்கள்.

8தேவன் ஜாதிகள்மேல் அரசாளுகிறார்; தேவன் தமது பரிசுத்த சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறார்.

9ஜனங்களின் பிரபுக்கள் ஆபிரகாமின் தேவனுடைய ஜனங்களாகச் சேர்க்கப்படுகிறார்கள்; பூமியின் கேடகங்கள் தேவனுடையவைகள்; அவர் மகா உன்னதமானவர்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com