‹ முகப்புமுழுத் திட்டம்

செப்டம்பர் 6 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்செப்டம்பர் 6அடுத்த நாள் ›
குடும்பம்

I சாமுவேல் 31

முழு அதிகாரம் ›

1பெலிஸ்தர் இஸ்ரவேலரோடே யுத்தம்பண்ணினார்கள்; இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு முன்பாக முறிந்தோடி, கில்போவா மலையிலே வெட்டுண்டு விழுந்தார்கள்.

2பெலிஸ்தர் சவுலையும் அவன் குமாரரையும் நெருங்கித் தொடர்ந்து, சவுலின் குமாரராகிய யோனத்தானையும் அபினதாபையும் மல்கிசூகாவையும் வெட்டிப்போட்டார்கள்.

3சவுலுக்கு விரோதமாய் யுத்தம் பலத்தது; வில்வீரர் அவனைக் கண்டு நெருங்கினார்கள்; அப்பொழுது சவுல் வில்வீரரால் மிகவும் காயப்பட்டு,

4தன் ஆயுததாரியை நோக்கி: அந்த விருத்தசேதனம் இல்லாதவர்கள் வந்து, என்னைக் குத்திப்போட்டு, என்னை அவமானப்படுத்தாதபடிக்கு, நீ உன் பட்டயத்தை உருவி, என்னைக் குத்திப்போடு என்றான்; அவனுடைய ஆயுததாரி மிகவும் பயப்பட்டதினால், அப்படிச் செய்யமாட்டேன் என்றான்; அப்பொழுது சவுல் பட்டயத்தை நட்டு அதின்மேல் விழுந்தான்.

5சவுல் செத்துப்போனதை அவன் ஆயுததாரி கண்டபோது, அவனும் தன் பட்டயத்தின்மேல் விழுந்து, அவனோடேகூடச் செத்துப்போனான்.

6அப்படியே அன்றையதினம் சவுலும், அவன் மூன்று குமாரரும், அவன் ஆயுததாரியும், அவனுடைய எல்லா மனுஷரும் ஒருமிக்கச் செத்துப்போனார்கள்.

7இஸ்ரவேலர் முறிந்தோடினார்கள் என்றும், சவுலும் அவன் குமாரரும் செத்துப் போனார்கள் என்றும், பள்ளத்தாக்குக்கு இப்பாலும் யோர்தானுக்கு இப்பாலும் இருந்த இஸ்ரவேலர் கண்டபோது, அவர்கள் பட்டணங்களை விட்டு ஓடிப்போனார்கள்; அப்பொழுது பெலிஸ்தர் வந்து, அவைகளிலே குடியிருந்தார்கள்.

8வெட்டுண்டவர்களை உரிந்துகொள்ள, பெலிஸ்தர் மறுநாள் வந்தபோது, அவர்கள், சவுலும் அவன் மூன்று குமாரரும் கில்போவா மலையிலே விழுந்துகிடக்கிறதைக் கண்டு,

9அவன் தலையை வெட்டி, அவன் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு, தங்கள் விக்கிரகங்களின் கோவில்களிலும் ஜனங்களுக்குள்ளும் செய்தியைப் பிரசித்தப்படுத்தும்படி, அவைகளைப் பெலிஸ்தர் தேசத்திலே சுற்றிலும் அனுப்பி,

10அவன் ஆயுதங்களை அஸ்தரோத் தேவனுடைய கோவிலிலே வைத்து, அவன் உடலைப் பெத்சானின் அலங்கத்திலே தூக்கிப்போட்டார்கள்.

11பெலிஸ்தர் சவுலுக்குச் செய்ததைக் கீலேயாத் தேசத்து யாபேஸ் பட்டணத்தார் கேட்டபோது,

12அவர்களிலே பலசாலிகள் எல்லாரும் எழுந்து இராமுழுவதும் நடந்துபோய், பெத்சானின் அலங்கத்திலிருந்த சவுலின் உடலையும் அவன் குமாரரின் உடல்களையும் எடுத்து, யாபேசுக்குக் கொண்டுவந்து, அவைகளை அங்கே தகனம்பண்ணி,

13அவர்களுடைய எலும்புகளை எடுத்து, யாபேசிலிருக்கிற தோப்பிலே அடக்கம்பண்ணி, ஏழுநாள் உபவாசம்பண்ணினார்கள்.

I கொரிந்தியர் 11

முழு அதிகாரம் ›

1நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்.

2சகோதரரே, நீங்கள் எல்லாவற்றிலும் என்னை நினைத்துக்கொண்டு, நான் உங்களுக்கு ஒப்புவித்தபடி நீங்கள் கட்டளைகளைக் கைக்கொண்டு வருகிறதினிமித்தம் உங்களைப் புகழுகிறேன்.

3ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறாரென்றும், ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறானென்றும், கிறிஸ்துவுக்கு தேவன் தலையாயிருக்கிறாரென்றும், நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன்.

4ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொண்டிருக்கிற எந்தப் புருஷனும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறான்.

5ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொள்ளாதிருக்கிற எந்த ஸ்திரீயும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறாள்; அது அவளுக்குத் தலை சிரைக்கப்பட்டதுபோலிருக்குமே.

6ஸ்திரீயானவள் முக்காடிட்டுக் கொள்ளாவிட்டால் தலைமயிரையும் கத்தரித்துப்போடக்கடவள்; தலைமயிர் கத்தரிக்கப்படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் ஸ்திரீக்கு வெட்கமானால் முக்காடிட்டுக்கொண்டிருக்கக்கடவள்.

7புருஷனானவன் தேவனுடைய சாயலும் மகிமையுமாயிருக்கிறபடியால், தன் தலையை மூடிக்கொள்ளவேண்டுவதில்லை; ஸ்திரீயானவள் புருஷனுடைய மகிமையாயிருக்கிறாள்.

8புருஷன் ஸ்திரீயிலிருந்து தோன்றினவனல்ல, ஸ்திரீயே புருஷனிலிருந்து தோன்றினவள்.

9புருஷன் ஸ்திரீக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவனல்ல, ஸ்திரீயே புருஷனுக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவள்.

10ஆகையால் தூதர்களினிமித்தம் ஸ்திரீயானவள் தலையின்மேல் முக்காடிட்டுக்கொள்ளவேண்டும்.

11ஆகிலும் கர்த்தருக்குள் ஸ்திரீயில்லாமல் புருஷனுமில்லை, புருஷனில்லாமல் ஸ்திரீயுமில்லை.

12ஸ்திரீயானவள் புருஷனிலிருந்து தோன்றுகிறதுபோல, புருஷனும் ஸ்திரீயினால் தோன்றுகிறான்; சகலமும் தேவனால் உண்டாயிருக்கிறது.

13ஸ்திரீயானவள் தேவனை நோக்கி: ஜெபம்பண்ணுகையில், தன் தலையை மூடிக்கொள்ளாமலிருக்கிறது இலட்சணமாயிருக்குமோ என்று உங்களுக்குள்ளே நிதானித்துக்கொள்ளுங்கள்.

14புருஷன் மயிரை நீளமாய் வளர்க்கிறது அவனுக்கு கனவீனமாயிருக்கிறதென்றும்,

15ஸ்திரீ தன் மயிரை நீளமாய் வளர்க்கிறது அவளுக்கு மகிமையாயிருக்கிறதென்றும் சுபாவமே. உங்களுக்குப் போதிக்கிறதில்லையா? தலைமயிர் அவளுக்கு முக்காடாகக் கொடுக்கப்பட்டிருக்கிறதே.

16ஆகிலும் ஒருவன் வாக்குவாதஞ்செய்ய மனதாயிருந்தால், எங்களுக்கும், தேவனுடைய சபைகளுக்கும், அப்படிப்பட்ட வழக்கமில்லையென்று அறியக்கடவன்.

17உங்களைப் புகழாமல் இதைக்குறித்து உங்களுக்குக் கட்டளைகொடுக்கிறேன்; நீங்கள் கூடிவருதல் நன்மைக்கேதுவாயிராமல், தீமைக்கேதுவாயிருக்கிறதே.

18முதலாவது, நீங்கள் சபையிலே கூடிவந்திருக்கும்போது, உங்களில் பிரிவினைகள் உண்டென்று, கேள்விப்படுகிறேன்; அதில் சிலவற்றை நம்புகிறேன்.

19உங்களில் உத்தமர்கள் இன்னாரென்று வெளியாகும்படிக்கு மார்க்கபேதங்களும் உங்களுக்குள்ளே உண்டாயிருக்கவேண்டியதே.

20நீங்கள் ஓரிடத்தில் கூடிவரும்போது, அவனவன் தன்தன் சொந்த போஜனத்தை முந்திச் சாப்பிடுகிறான்; ஒருவன் பசியாயிருக்கிறான், ஒருவன் வெறியாயிருக்கிறான்.

21இப்படிச் செய்கிறது கர்த்தருடைய இராப்போஜனம்பண்ணுதலல்லவே.

22புசிக்கிறதற்கும் குடிக்கிறதற்கும் உங்களுக்கு வீடுகள் இல்லையா? தேவனுடைய சபையை அசட்டைபண்ணி, இல்லாதவர்களை வெட்கப்படுத்துகிறீர்களா? உங்களுக்கு நான் என்ன சொல்லுவேன்? இதைக்குறித்து உங்களைப் புகழ்வேனோ? புகழேன்.

23நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்டேன்; என்னவெனில், கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து,

24ஸ்தோத்திரம்பண்ணி, அதைப் பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.

25போஜனம்பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது; நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.

26ஆகையால், நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்.

27இப்படியிருக்க, எவன் அபாத்திரமாய்க் கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து, அவருடைய பாத்திரத்தில் பானம்பண்ணுகிறானோ, அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும் குறித்துக் குற்றமுள்ளவனாயிருப்பான்.

28எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன்.

29என்னத்தினாலெனில் அபாத்திரமாய்ப் போஜனபானம்பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜனபானம் பண்ணுகிறான்.

30இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள்.

31நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம்.

32நாம் நியாயந்தீர்க்கப்படும்போது உலகத்தோடே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு, கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம்.

33ஆகையால், என் சகோதரரே, நீங்கள் போஜனம்பண்ணக் கூடிவரும்போது, ஒருவருக்காக ஒருவர் காத்திருங்கள்.

34நீங்கள் ஆக்கினைக்கேதுவாகக் கூடிவராதபடிக்கு, ஒருவனுக்குப் பசியிருந்தால் வீட்டிலே சாப்பிடக்கடவன். மற்றக் காரியங்களை நான் வரும்போது திட்டம்பண்ணுவேன்.

தனிவாசிப்பு

எசேக்கியேல் 9

முழு அதிகாரம் ›

1பின்பு அவர் என் காதுகள் கேட்க மகா சத்தமாய்; நகரத்தின் விசாரிப்புக்காரர் சங்கரிக்கும் ஆயுதங்களைத் தங்கள் கைகளில் பிடித்துக்கொண்டுவரக்கடவர்கள் என்று சொன்னார்.

2அப்பொழுது இதோ, ஆறு புருஷர், வெட்டுகிற ஆயுதங்களைத் தங்கள் கைகளில் பிடித்துக்கொண்டு, வடக்கே பார்த்த உயர்ந்த வாசலின் வழியிலிருந்து வந்தார்கள்; அவர்களில் சணல்நூல் அங்கிதரித்து, தன் அரையில் கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருக்கிற ஒருவன் இருந்தான்; அவர்கள் உள்ளே பிரவேசித்து, வெண்கல பலிபீடத்தண்டையிலே நின்றார்கள்.

3அப்பொழுது இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை கேருபீன்மேலிருந்தெழும்பி, ஆலயத்தின் வாசற்படியிலே வந்து, சணல்நூல் அங்கிதரித்து, தன் அரையிலே கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருக்கிற புருஷனைக் கூப்பிட்டு,

4கர்த்தர் அவனை நோக்கி: நீ எருசலேம் நகரம் எங்கும் உருவப்போய், அதற்குள்ளே செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில் அடையாளம் போடு என்றார்.

5பின்பு அவர் என் காதுகள் கேட்க மற்றவர்களை நோக்கி: நீங்கள் இவன் பின்னாலே நகரமெங்கும் உருவப்போய் வெட்டுங்கள்; உங்கள் கண் தப்பவிடாமலும், நீங்கள் இரங்காமலும்,

6முதியோரையும், வாலிபரையும், கன்னிகைகளையும், குழந்தைகளையும், ஸ்திரீகளையும் சங்கரித்துக் கொன்றுபோடுங்கள்; அடையாளம் போடப்பட்டிருக்கிற ஒருவனையும் கிட்டாதிருங்கள், என் பரிசுத்த ஸ்தலத்திலே துவக்குங்கள் என்று என் காதுகள் கேட்கச் சொன்னார்; அப்பொழுது அவர்கள் ஆலயத்துக்கு முன்னே இருந்த மூப்பரிடத்தில் துவக்கம்பண்ணினார்கள்.

7அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஆலயத்தைத் தீட்டுப்படுத்தி, பிராகாரங்களைக் கொலையுண்டவர்களாலே நிரப்பி, புறப்பட்டுப்போங்கள் என்றார்; அவர்கள் நகரத்தில் போய் வெட்டினார்கள்.

8அவர்கள் வெட்டிக்கொண்டுபோகையில் நான் மாத்திரம் தனித்து, முகங்குப்புற விழுந்து: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் எருசலேமின்மேல் உமது உக்கிரத்தை ஊற்றுகையில் இஸ்ரவேலின் மீதியானவர்களையெல்லாம் அழிப்பீரோ என்று முறையிட்டேன்.

9அதற்கு அவர்: இஸ்ரவேலும் யூதாவுமாகிய வம்சத்தாரின் அக்கிரமம் மிகவும் பெரிது; தேசம் இரத்தப்பழிகளால் நிறைந்திருக்கிறது; நகரமும் மாறுபாட்டினால் நிரப்பப்பட்டிருக்கிறது; கர்த்தர் தேசத்தைக் கைவிட்டார்; கர்த்தர் பார்க்கமாட்டார் என்று சொல்லுகிறார்கள்.

10ஆகையால் என் கண் தப்பவிடுவதுமில்லை, நான் இரக்கஞ்செய்வதுமில்லை; அவர்களுடைய வழியின் பலனை அவர்கள் சிரசின்மேல் இறங்கப்பண்ணுவேன் என்றார்.

11இதோ, சணல்நூல் அங்கி தரித்து, தன் அரையில் மைக்கூட்டை வைத்திருக்கிற புருஷன் வந்து: நீர் எனக்குக் கட்டளையிட்டபடியே செய்தேன் என்று காரியத்தைத் தெரிவித்தான்.

1கர்த்தர் பெரியவர், அவர் நமது தேவனுடைய நகரத்திலும், தமது பரிசுத்த பர்வதத்திலும் மிகவும் துதிக்கப்படத்தக்கவர்.

2வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம் வடிப்பமான ஸ்தானமும் சர்வபூமியின் மகிழ்ச்சியுமாயிருக்கிறது, அதுவே மகாராஜாவின் நகரம்.

3அதின் அரமனைகளில் தேவன் உயர்ந்த அடைக்கலமாக அறியப்பட்டிருக்கிறார்.

4இதோ, ராஜாக்கள் கூடிக்கொண்டு, ஏகமாய்க் கடந்துவந்தார்கள்.

5அவர்கள் அதைக் கண்டபோது பிரமித்துக் கலங்கி விரைந்தோடினார்கள்.

6அங்கே நடுக்கங்கொண்டு, பிரசவ வேதனைப்படுகிற ஸ்திரீயைப்போல வேதனைப்பட்டார்கள்.

7கீழ்காற்றினால் தர்ஷீசின் கப்பல்களை நீர் உடைக்கிறீர்.

8நாம் கேள்விப்பட்டபடியே நமது தேவனுடைய நகரமாகிய சேனைகளுடைய கர்த்தரின் நகரத்திலே கண்டோம்; தேவன் அதை என்றென்றைக்கும் ஸ்திரப்படுத்துவார். (சேலா)

9தேவனே, உமது ஆலயத்தின் நடுவிலே, உமது கிருபையைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

10தேவனே, உமது நாமம் விளங்குகிறதுபோல உமது புகழ்ச்சியும் பூமியின் கடையாந்தரங்கள் பரியந்தமும் விளங்குகிறது; உமது வலதுகரம் நீதியால் நிறைந்திருக்கிறது.

11உம்முடைய நியாயத்தீர்ப்புகளினிமித்தம் சீயோன் பர்வதம் மகிழ்வதாக, யூதாவின் குமாரத்திகள் களிகூருவார்களாக.

12சீயோனைச் சுற்றி உலாவி, அதின் கொத்தளங்களை எண்ணுங்கள்.

13பின்வரும் சந்ததிக்கு நீங்கள் விவரிப்பதற்காக, அதின் அலங்கத்தைக் கவனித்து, அதின் அரமனைகளை உற்றுப்பாருங்கள்.

14இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com