1சவுல் மரித்தபின்பு, தாவீது அமலேக்கியரை முறிய அடித்து, சிக்லாகுக்குத் திரும்பிவந்து, இரண்டு நாள் அங்கே இருந்த பிற்பாடு,
2மூன்றாம் நாளிலே ஒரு மனுஷன் சவுலின் பாளயத்திலிருந்து புறப்பட்டு, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, தன் தலையின்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டு, தாவீதினிடத்தில் வந்து, தரையிலே விழுந்து வணங்கினான்.
3தாவீது அவனைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வந்தாய் என்று கேட்டதற்கு, அவன்: இஸ்ரவேலின் பாளயத்திலிருந்து தப்பிவந்தேன் என்றான்.
4தாவீது அவனைப் பார்த்து: நடந்த செய்தி என்ன? சொல் என்று கேட்டதற்கு, அவன்: ஜனங்கள் யுத்தத்தைவிட்டு முறிந்தோடிப்போனார்கள்; ஜனங்களில் அநேகம் பேர் விழுந்து மடிந்துபோனார்கள்; சவுலும் அவர் குமாரனாகிய யோனத்தானும் மடிந்தார்கள் என்றான்.
5சவுலும் அவர் குமாரனாகிய யோனத்தானும் மடிந்துபோனது உனக்கு எப்படித் தெரியும் என்று தாவீது தனக்கு அதை அறிவிக்கிற வாலிபனிடத்தில் கேட்டதற்கு,
6அந்த வாலிபன்: நான் தற்செயலாய்க் கில்போவா மலைக்குப் போனேன்; அப்பொழுது இதோ, சவுல் தம்முடைய ஈட்டியின்மேல் சாய்ந்துகொண்டிருந்தார்; இரதங்களும் குதிரை வீரரும் அவரைத் தொடர்ந்து நெருங்கினார்கள்.
7அவர் திரும்பிப் பார்த்து: என்னைக் கண்டு கூப்பிட்டார்; அதற்கு நான்: இதோ, இருக்கிறேன் என்றேன்.
8அப்பொழுது அவர்: நீ யார் என்று என்னைக் கேட்டார்; நான் அமலேக்கியன் என்று சொன்னேன்.
9அவர் என்னை நோக்கி: நீ என்னண்டையில் கிட்டவந்து நின்று, என்னைக் கொன்றுபோடு; என் பிராணன் முழுதும் இன்னும் போகாததினால் எனக்கு வேதனையாயிருக்கிறது என்றார்.
10அப்பொழுது நான், அவர் விழுந்த பின்பு பிழைக்கமாட்டார் என்று நிச்சயித்து, அவரண்டையில் போய் நின்று, அவரைக் கொன்றுபோட்டேன்; பிற்பாடு அவர் தலையின்மேல் இருந்த முடியையும் அவர் புயத்தில் இருந்த அஸ்தகடகத்தையும் எடுத்துக்கொண்டு, அவைகளை இங்கே என் ஆண்டவனிடத்திற்குக் கொண்டுவந்தேன் என்றான்.
11அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த சகல மனுஷரும் தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு,
12சவுலும், அவன் குமாரனாகிய யோனத்தானும், கர்த்தருடைய ஜனங்களும், இஸ்ரவேல் குடும்பத்தாரும், பட்டயத்தாலே விழுந்தபடியினால் புலம்பி அழுது சாயங்காலமட்டும் உபவாசமாயிருந்தார்கள்.
13தாவீது அதைத் தனக்கு அறிவித்த வாலிபனைப் பார்த்து: நீ எவ்விடத்தான் என்று கேட்டதற்கு, அவன்: நான் அந்நிய ஜாதியானுடைய மகன், நான் அமலேக்கியன் என்றான்.
14தாவீது அவனை நோக்கி: கர்த்தர் அபிஷேகம்பண்ணினவரைக் கொன்றுபோடும்படி நீ உன் கையை நீட்டப் பயப்படாமற்போனது என்ன என்று சொல்லி,
15வாலிபரில் ஒருவனைக் கூப்பிட்டு, நீ கிட்டப்போய் அவன்மேல் விழுந்து, அவனை வெட்டு என்றான்; அவன் அவனை வெட்டினான்; அவன் செத்தான்.
16தாவீது அவனைப் பார்த்து: உன் இரத்தப்பழி உன் தலையின்மேல் இருப்பதாக; கர்த்தர் அபிஷேகம் பண்ணினவரை நான் கொன்றுபோட்டேன் என்று உன்வாயே உனக்கு விரோதமான சாட்சி சொல்லிற்று என்றான்.
17தாவீது சவுலின்பேரிலும், அவன் குமாரனாகிய யோனத்தானின் பேரிலும், புலம்பல் பாடினான்.
18(வில்வித்தையை யூதா புத்திரருக்குக் கற்றுக்கொடுக்கும்படி கட்டளையிட்டான்; அது யாசேரின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது) அவன் பாடின புலம்பலாவது:
19இஸ்ரவேலின் அலங்காரம் உயர்ந்த ஸ்தானங்களில் அதமாயிற்று; பராக்கிரமசாலிகள் விழுந்து போனார்கள்.
20பெலிஸ்தரின் குமாரத்திகள் சந்தோஷப்படாதபடிக்கும், விருத்தசேதனம் இல்லாதவர்களின் குமாரத்திகள் களிகூராதபடிக்கும், அதைக் காத் பட்டணத்தில் அறிவியாமலும் அஸ்கலோனின் வீதிகளில் பிரஸ்தாபப்படுத்தாமலும் இருங்கள்.
21கில்போவா மலைகளே, உங்கள்மேல் பனியும் மழையும் பெய்யாமலும், காணிக்கைக்கு ஏற்ற பலன் தரும் வயல்கள் இராமலும் போவதாக; அங்கே பராக்கிரமசாலிகளுடைய கேடகம் அவமதிக்கப்பட்டது; சவுல் தைலத்தால் அபிஷேகம்பண்ணப்படாதவன்போல அவர் கேடகமும் அவமதிக்கப்பட்டதே.
22கொலையுண்டவர்களின் இரத்தத்தைக் குடியாமலும், பராக்கிரமசாலிகளின் நிணத்தை உண்ணாமலும், யோனத்தானுடைய வில் பின்வாங்கினதில்லை; சவுலின் பட்டயம் வெறுமையாய்த் திரும்பினதில்லை.
23உயிரோடே இருக்கையில் சவுலும் யோனத்தானும் பிரியமும் இன்பமுமாயிருந்தார்கள்; மரணத்திலும் பிரிந்துபோனதில்லை; கழுகுகளைப் பார்க்கிலும் வேகமும், சிங்கங்களைப் பார்க்கிலும் பலமுமுள்ளவர்களாயிருந்தார்கள்.
24இஸ்ரவேலின் குமாரத்திகளே, உங்களுக்கு இரத்தாம்பரத்தைச் சிறப்பாய் உடுப்பித்து, உங்கள் உடையின்மேல் பொன் ஆபரணங்களைத் தரிப்பித்த சவுலுக்காக அழுது புலம்புங்கள்.
25போர்முகத்தில் பராக்கிரமசாலிகள் விழுந்தார்களே. யோனத்தானே, உயரமான ஸ்தலங்களிலே வெட்டுண்டுபோனாயே.
26என் சகோதரனாகிய யோனத்தானே, உனக்காக நான் வியாகுலப்படுகிறேன்; நீ எனக்கு வெகு இன்பமாயிருந்தாய்; உன் சிநேகம் ஆச்சரியமாயிருந்தது; ஸ்திரீகளின் சிநேகத்தைப்பார்க்கிலும் அதிகமாயிருந்தது.
27பராக்கிரமசாலிகள் விழுந்துபோனார்களே; யுத்த ஆயுதங்கள் எல்லாம் அழிந்து போயிற்றே, என்று பாடினான்.
1அன்றியும், சகோதரரே, ஆவிக்குரிய வரங்களைக்குறித்து நீங்கள் அறியாதிருக்க எனக்கு மனதில்லை.
2நீங்கள் அஞ்ஞானிகளாயிருந்தபோது ஏவப்பட்டபடியே, ஊமையான விக்கிரகங்களிடத்தில் மனதைச் செலுத்தினீர்களென்று உங்களுக்குத் தெரியுமே.
3ஆதலால், தேவனுடைய ஆவியினாலே பேசுகிற எவனும் இயேசுவைச் சபிக்கப்பட்டவனென்று சொல்லமாட்டானென்றும், பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
4வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, ஆவியானவர் ஒருவரே.
5ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, கர்த்தர் ஒருவரே.
6கிரியைகளிலேயும் வித்தியாசங்கள் உண்டு, எல்லாருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற தேவன் ஒருவரே.
7ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது.
8எப்படியெனில், ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும்,
9வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே விசுவாசமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே குணமாக்கும் வரங்களும்,
10வேறொருவனுக்கு அற்புதங்களைச் செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப் பேசுதலும், வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது.
11இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்து கொடுக்கிறார்.
12எப்படியெனில், சரீரம் ஒன்று, அதற்கு அவயவங்கள் அநேகம்; ஒரே சரீரத்தின் அவயவங்களெல்லாம் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றாகவேயிருக்கிறது; அந்தப்பிரகாரமாகக் கிறிஸ்துவும் இருக்கிறார்.
13நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம்.
14சரீரமும் ஒரே அவயவமாயிராமல் அநேக அவயவங்களாயிருக்கிறது.
15காலானது நான் கையாயிராதபடியினாலே, நான் சரீரத்தின் அவயவமல்லவென்றால், அதினாலே அது சரீரத்தின் அவயவமாயிராதோ?
16காதானது நான் கண்ணாயிராதபடியினாலே, நான் சரீரத்தின் அவயவமல்லவென்றால், அதினாலே அது சரீரத்தின் அவயவமாயிராதோ?
17சரீரம் முழுவதும் கண்ணானால், செவி எங்கே? அது முழுவதும் செவியானால், மோப்பம் எங்கே?
18தேவன் தமது சித்தத்தின்படி, அவயவங்கள் ஒவ்வொன்றையும் சரீரத்திலே வைத்தார்.
19அவையெல்லாம் ஒரே அவயவமாயிருந்தால், சரீரம் எங்கே?
20அவயவங்கள் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றே.
21கண்ணானது கையைப்பார்த்து: நீ எனக்கு வேண்டுவதில்லையென்றும்; தலையானது கால்களை நோக்கி: நீங்கள் எனக்கு வேண்டுவதில்லையென்றும் சொல்லக்கூடாது.
22சரீர அவயவங்களில் பலவீனமுள்ளவைகளாய்க் காணப்படுகிறவைகளே மிகவும் வேண்டியவைகளாயிருக்கிறது.
23மேலும், சரீர அவயவங்களில் கனவீனமாய்க் காணப்படுகிறவைகளுக்கே அதிக கனத்தைக் கொடுக்கிறோம்; நம்மில் இலட்சணமில்லாதவைகளே அதிக அலங்காரம் பெறும்;
24நம்மில் இலட்சணமுள்ளவைகளுக்கு அலங்கரிப்பு வேண்டியதில்லை.
25சரீரத்திலே பிரிவினையுண்டாயிராமல், அவயவங்கள் ஒன்றைக்குறித்து ஒன்று கவலையாயிருக்கும்படிக்கு, தேவன் கனத்தில் குறைவுள்ளதற்கு அதிக கனத்தைக் கொடுத்து, இப்படிச் சரீரத்தை அமைத்திருக்கிறார்.
26ஆதலால் ஒரு அவயவம் பாடுபட்டால் எல்லா அவயவங்களும் கூடப் பாடுபடும்; ஒரு அவயவம் மகிமைப்பட்டால் எல்லா அவயவங்களும் கூடச் சந்தோஷப்படும்.
27நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களாயுமிருக்கிறீர்கள்.
28தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலரையும், இரண்டாவது தீர்க்கதரிசிகளையும், மூன்றாவது போதகர்களையும், பின்பு அற்புதங்களையும், பின்பு குணமாக்கும் வரங்களையும், ஊழியங்களையும், ஆளுகைகளையும், பலவித பாஷைகளையும் ஏற்படுத்தினார்.
29எல்லாரும் அப்போஸ்தலர்களா? எல்லாரும் தீர்க்கதரிசிகளா? எல்லாரும் போதகர்களா? எல்லாரும் அற்புதங்களைச் செய்கிறவர்களா?
30எல்லாரும் குணமாக்கும் வரங்களுடையவர்களா? எல்லாரும் அந்நிய பாஷைகளைப் பேசுகிறார்களா? எல்லாரும் வியாக்கியானம்பண்ணுகிறார்களா?
31இப்படியிருக்க, முக்கியமான வரங்களை நாடுங்கள்; இன்னும் அதிக மேன்மையான வழியையும் உங்களுக்குக் காண்பிக்கிறேன்.
1இதோ, கேருபீன்களுடைய தலைக்குமேல் இருந்த மண்டலத்தில் இந்திர நீலரத்தினம்போன்ற சிங்காசனச் சாயலான ஒரு தோற்றத்தைக் கண்டேன்; அது அவைகளுக்குமேல் காணப்பட்டது.
2அவர் சணல்நூல் அங்கி தரித்திருந்த புருஷனை நோக்கி: நீ கேருபீனின் கீழ் இருக்கிற சக்கரங்களுக்கு நடுவிலே பிரவேசித்து, கேருபீன்களின் நடுவே இருக்கிற அக்கினித்தழலில் உன் கை நிறைய எடுத்து, அதை நகரத்தின்மேல் இறையென்றார்; அப்படியே அவன் என் கண்காண உள்ளே பிரவேசித்தான்.
3அந்தப் புருஷன் உள்ளே பிரவேசிக்கையில், கேருபீன்கள் ஆலயத்தின் வலது புறத்தில் நின்றன; ஒரு மேகம் உட்பிராகாரத்தை நிரப்பிற்று.
4கர்த்தருடைய மகிமை கேருபீனின் மேலிருந்து எழும்பி, ஆலயத்தின் வாசற்படியிலே வந்தது; ஆலயம் மேகத்தினாலே நிறைந்திருந்தது, பிராகாரமும் கர்த்தருடைய மகிமையின் பிரகாசத்தினால் நிரம்பிற்று.
5கேருபீன்களுடைய செட்டைகளின் இரைச்சல் சர்வத்துக்கும் வல்ல தேவன் பேசுகையில் உண்டாகும் சத்தம்போல வெளிப்பிராகாரமட்டும் கேட்கப்பட்டது.
6அவர் சணல்நூல் அங்கி தரித்திருந்த புருஷனை நோக்கி: நீ கேருபீன்களுக்குள் சக்கரங்களின் நடுவிலிருந்து அக்கினியை எடு என்று கட்டளையிட்டவுடனே, அவன் உள்ளே பிரவேசித்து சக்கரங்களண்டையிலே நின்றான்.
7அப்பொழுது கேருபீன்களுக்குள்ளே ஒரு கேருபீன் தன் கையைக் கேருபீன்களின் நடுவில் இருக்கிற அக்கினியில் நீட்டி, அதில் எடுத்து சணல்நூல் அங்கிதரித்திருந்த புருஷனுடைய கையில் கொடுத்தான்; அவன் அதை வாங்கிக்கொண்டு வெளியே வந்தான்.
8கேருபீன்களுடைய செட்டைகளின் கீழ் மனுஷர் கையின் சாயலானது காணப்பட்டது.
9இதோ, கேருபீன்களண்டையில் நாலு சக்கரங்கள் இருக்கக் கண்டேன்; ஒவ்வொரு கேருபீன் அண்டையில் ஒவ்வொரு சக்கரம் இருந்தது; சக்கரங்களின் தோற்றம் படிகப்பச்சை வருணம்போலிருந்தது.
10அவைகள் நாலுக்கும் ஒரே சாயலான ரூபம் இருந்தது; சக்கரங்களின் நடுவிலே சக்கரம் இருக்குமாப்போல் காணப்பட்டது.
11அவைகள் ஓடுகையில் தங்கள் நாலு பக்கங்களிலும் ஓடும்; ஓடுகையில் அவைகள் திரும்பினதில்லை; தலைநோக்கும் இடத்துக்கே அவைகள் அதின் பின்னாலே ஓடின; ஓடுகையில் அவைகள் திரும்பினதில்லை.
12அவைகளின் உடல் அனைத்தும், அவைகளின் முதுகுகளும், அவைகளின் கைகளும், அவைகளின் செட்டைகளும், அந்தச் சக்கரங்களும், சுற்றிலும் கண்களினாலே நிறைந்திருந்தன; அவைகள் நாலுக்கும் இருந்த சக்கரங்களும் அப்படியே இருந்தன.
13அந்தச் சக்கரங்களைப் பார்த்து: சக்கரமே என்று ஒருவன் கூப்பிடுகிற சத்தத்தைக் கேட்டேன்.
14ஒவ்வொன்றுக்கும் நாலு முகங்கள் இருந்தன; முதலாம் முகம் கேருபீன்முகமும், இரண்டாம் முகம் மனுஷமுகமும், மூன்றாம் முகம் சிங்கமுகமும், நாலாம் முகம் கழுகுமுகமுமாயிருந்தது.
15கேருபீன்கள் மேலே எழும்பின; இதுதான், நான் கேபார் நதியண்டையிலே கண்டிருந்த ஜீவன்.
16கேருபீன்கள் செல்லுகையில் சக்கரங்கள் அவைகள் அருகே ஓடின; பூமியிலிருந்து எழும்பக் கேருபீன்கள் தங்கள் செட்டைகளை விரித்தபோது, சக்கரங்களும் அவைகளை விட்டு விலகிப்போகவில்லை.
17அவைகள் நிற்கையில் இவைகளும் நின்றன; அவைகள் எழும்புகையில் இவைகளும் எழும்பின; ஜீவனுடைய ஆவி இவைகளில் இருந்தது.
18கர்த்தருடைய மகிமை ஆலயத்தின் வாசற்படியைவிட்டுப் புறப்பட்டு, கேருபீன்களின்மேல் நின்றது.
19அப்பொழுது கேருபீன்கள் தங்கள் செட்டைகளை விரித்து, என் கண் காண பூமியைவிட்டு எழும்பின; அவைகள் புறப்படுகையில் சக்கரங்களும் அவைகளுக்குச் சரியாய்ச் சென்றன; கர்த்தருடைய ஆலயத்தின் கிழக்கு வாசலிலே போய் நிற்க, இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை அவைகளின்மேல் உயர இருந்தது.
20இது நான் கேபார் நதியண்டையிலே இஸ்ரவேலின் தேவனுக்குக் கீழே இருக்கக்கண்ட அந்த ஜீவன் தானே; அவைகள் கேருபீன்கள் என்று அறிந்துகொண்டேன்.
21அவைகளில் ஒவ்வொன்றுக்கு நாலு முகமும், ஒவ்வொன்றுக்கு நாலு செட்டைகளும் இருந்தன; அவைகளுடைய செட்டைகளின் கீழ் மனுஷகைகளின் சாயல் இருந்தது.
22அவைகளுடைய முகங்கள் நான் கேபார் நதியண்டையிலே கண்டிருந்த அந்த முகங்களின் சாயலாயிருந்தது; ஒவ்வொன்றும் தன்தன் முகத்துக்கு எதிரான திசையை நோக்கிச் சென்றது.
1ஜனங்களே, நீங்கள் எல்லாரும் இதைக் கேளுங்கள்.
2பூமியின் குடிகளே, சிறியோரும் பெரியோரும் ஐசுவரியவான்களும் எளியவர்களுமாகிய நீங்கள் எல்லாரும் ஏகமாய்ச் செவிகொடுங்கள்.
3என் வாய் ஞானத்தைப் பேசும்; என் இருதயம் உணர்வைத் தியானிக்கும்.
4என் செவியை உவமைமொழிக்குச் சாய்த்து, என் மறைபொருளைச் சுரமண்டலத்தின்மேல் வெளிப்படுத்துவேன்.
5என்னைத் தொடருகிறவர்களுடைய அக்கிரமம் என்னைச் சூழ்ந்துகொள்ளுந்தீங்குநாட்களில், நான் பயப்படவேண்டியதென்ன?
6தங்கள் செல்வத்தை நம்பி தங்கள் திரளான ஐசுவரியத்தினால் பெருமைபாராட்டுகிற,
7ஒருவனாவது, தன் சகோதரன் அழிவைக் காணாமல் இனி என்றைக்கும் உயிரோடிருக்கும்படி,
8எவ்விதத்தினாலாவது அவனை மீட்டுக்கொள்ளவும், அவனிமித்தம் மீட்கும்பொருளை தேவனுக்குக் கொடுக்கவுங்கூடாதே.
9அவர்கள் ஆத்துமமீட்பு மிகவும் அருமையாயிருக்கிறது; அது ஒருபோதும் முடியாது.
10ஞானிகளும் மரித்து, அஞ்ஞானிகளும் நிர்மூடரும் ஏகமாய் அழிந்து, தங்கள் ஆஸ்தியை மற்றவர்களுக்கு வைத்துப்போகிறதைக் காண்கிறான்.
11தங்கள் வீடுகள் நித்தியகாலமாகவும், தங்கள் வாசஸ்தலங்கள் தலைமுறை தலைமுறையாகவும் இருக்குமென்பது அவர்கள் உள்ளத்தின் அபிப்பிராயம்; அவர்கள் தங்கள் நாமங்களைத் தங்கள் நிலங்களுக்குத் தரிக்கிறார்கள்.
12ஆகிலும் கனம்பொருந்தியவனாயிருக்கிற மனுஷன் நிலைத்திருக்கிறதில்லை; அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான்.
13இதுதான் அவர்கள் வழி, இதுதான் அவர்கள் பைத்தியம்; ஆகிலும் அவர்கள் சந்ததியார் அவர்கள் சொல்லை மெச்சிக்கொள்ளுகிறார்கள். (சேலா)
14ஆட்டுமந்தையைப்போல பாதாளத்திலே கிடத்தப்படுகிறார்கள்; மரணம் அவர்களை மேய்ந்துபோடும்; செம்மையானவர்கள் அதிகாலையில் அவர்களை ஆண்டுகொள்வார்கள்; அவர்கள் தங்கள் வாசஸ்தலத்தில் நிலைத்திருக்கக்கூடாதபடி அவர்களுடைய ரூபத்தைப் பாதாளம் அழிக்கும்.
15ஆனாலும் தேவன் என் ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்பார், அவர் என்னை ஏற்றுக்கொள்வார். (சேலா)
16ஒருவன் ஐசுவரியவானாகி, அவன் வீட்டின் மகிமை பெருகும்போது, நீ பயப்படாதே.
17அவன் மரிக்கும்போது ஒன்றும் கொண்டுபோவதில்லை; அவன் மகிமை அவனைப் பின்பற்றிச் செல்வதுமில்லை.
18அவன் உயிரோடிருக்கையில் தன் ஆத்துமாவை வாழ்த்தினாலும்: நீ உனக்கு நன்மையை நாடினாய் என்று மனுஷர் அவனைப் புகழந்தாலும்,
19அவன் என்றென்றைக்கும் வெளிச்சத்தைக் காணாத தன் பிதாக்களின் சந்ததியைச் சேருவான்.
20கனம் பொருந்தினவனாயிருந்தும் அறிவில்லாத மனுஷன் அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான்.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com