1பின்பு தாவீது கர்த்தரை நோக்கி: நான் யூதாவின் பட்டணங்கள் ஒன்றிலே போய் இருக்கலாமா என்று விசாரித்தான். அதற்குக் கர்த்தர்: போ என்றார்; எவ்விடத்திற்குப் போகலாம் என்று தாவீது கேட்டதற்கு, அவர்: எப்ரோனுக்குப் போ என்றார்.
2அப்படியே தாவீது தன் இரண்டு மனைவிகளாகிய யெஸ்ரயேல் ஊராளான அகினோவாமோடும், நாபாலின் மனைவியாயிருந்த கர்மேல் ஊராளான அபிகாயிலோடும் கூட அவ்விடத்திற்குப் போனான்.
3அன்றியும் தன்னோடிருந்த மனுஷரையும், அவர்கள் குடும்பங்களையும் கூட்டிக்கொண்டுபோனான்; அவர்கள் எப்ரோனின் சுற்றூர்களிலே குடியேறினார்கள்.
4அப்பொழுது யூதாவின் மனுஷர் வந்து, அங்கே தாவீதை யூதா வம்சத்தாரின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள். கீலேயாத்தேசத்து யாபேசின் மனுஷர் சவுலை அடக்கம்பண்ணினவர்கள் என்று அவர்கள் தாவீதுக்கு அறிவித்தபோது,
5தாவீது கீலேயாத்தேசத்து யாபேசின் மனுஷரிடத்தில் ஸ்தானாபதிகளை அனுப்பி, நீங்கள் உங்கள் ஆண்டவனாகிய சவுலுக்கு இந்தத் தயவைச் செய்து, அவரை அடக்கம்பண்ணினபடியினாலே, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
6கர்த்தர் உங்களைக் கிருபையும் உண்மையுமாய் நடத்துவாராக; நீங்கள் இந்தக் காரியத்தைச் செய்தபடியினால், நானும் இந்த நன்மைக்குத்தக்கதாக உங்களை நடத்துவேன்.
7இப்பொழுதும் நீங்கள் உங்கள் கைகளைத் திடப்படுத்திக்கொண்டு நல்ல சேவகராயிருங்கள்; உங்கள் ஆண்டவனாகிய சவுல் மரித்தபின்பு, யூதா வம்சத்தார் என்னைத் தங்கள்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணினார்கள் என்று அவர்களுக்குச் சொல்லச்சொன்னான்.
8சவுலின் படைத்தலைவனான நேரின் குமாரனாகிய அப்னேர் சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தை மகனாயீமுக்கு அழைத்துக்கொண்டுபோய்,
9அவனைக் கீலேயாத்தின் மேலும், அஷூரியர் மேலும், யெஸ்ரயேலின் மேலும், எப்பிராயீமின் மேலும், பென்யமீனின் மேலும், இஸ்ரவேலனைத்தின் மேலும் ராஜாவாக்கினான்.
10சவுலின் குமாரனாகிய இஸ்போசேத் இஸ்ரவேலின்மேல் ராஜாவாகிறபோது, நாற்பது வயதாயிருந்தான்; அவன் இரண்டுவருஷம் ராஜ்யபாரம்பண்ணினான்; யூதா கோத்திரத்தார் மாத்திரம் தாவீதைப் பின்பற்றினார்கள்.
11தாவீது எப்ரோனிலே யூதா கோத்திரத்தின்மேல் ராஜாவாயிருந்த நாட்களின் இலக்கம் ஏழு வருஷமும் ஆறு மாதமுமாம்.
12நேரின் குமாரனாகிய அப்னேர் சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தின் சேவகரைக் கூட்டிக்கொண்டு, மகனாயீமிலிருந்து கிபியோனுக்குப் புறப்பட்டுப்போனான்.
13அப்பொழுது செருயாவின் குமாரனாகிய யோவாபும் தாவீதின் சேவகரும் புறப்பட்டுப்போய், கிபியோனின் குளத்தண்டையில் ஒருவருக்கொருவர் எதிர்ப்பட்டு, குளத்திற்கு அந்தப்பக்கத்தில் அவர்களும், குளத்திற்கு இந்தப்பக்கத்தில் இவர்களும் இறங்கினார்கள்.
14அப்னேர் யோவாபை நோக்கி: வாலிபர் எழுந்து, நமக்கு முன்பாகச் சிலம்பம்பண்ணட்டும் என்றான். அதற்கு யோவாப்: அவர்கள் எழுந்து, அப்படிச் செய்யட்டும் என்றான்.
15அப்பொழுது சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தின் பக்கத்திற்குப் பென்யமீன் மனுஷரில் பன்னிரண்டுபேரும், தாவீதுடைய சேவகரிலே பன்னிரண்டுபேரும், எழுந்து ஒரு பக்கமாய்ப் போய்,
16ஒருவர் தலையை ஒருவர் பிடித்து, ஒருவருடைய விலாவிலே ஒருவர் பட்டயத்தினாலே குத்தி, ஒருமிக்க விழுந்தார்கள்; அதினாலே கிபியோனிலிருக்கிற அந்த ஸ்தலம் எல்காத்அசூரிம் என்னப்பட்டது.
17அன்றையதினம் மிகவும் கடினமான யுத்தமாகி, அப்னேரும் இஸ்ரவேல் மனுஷரும் தாவீதின் சேவகரால் முறிய அடிக்கப்பட்டார்கள்.
18அங்கே செருயாவின் மூன்று குமாரராகிய யோவாபும் அபிசாயும் ஆசகேலும் இருந்தார்கள்; ஆசகேல் வெளியிலிருக்கிற கலைமான்களில் ஒன்றைப்போல வேகமாய் ஓடுகிறவனாயிருந்தான்.
19அவன் அப்னேரைப் பின்தொடர்ந்து, வலதுபுறத்திலாகிலும் இடதுபுறத்திலாகிலும், அவனை விட்டு விலகாமல் துரத்திக்கொண்டுபோனான்.
20அப்னேர் திரும்பிப் பார்த்து: நீ ஆசகேல் அல்லவா என்றான். அவன்: நான்தான் என்றான்.
21அப்பொழுது அப்னேர் அவனை நோக்கி: நீ வலதுபக்கத்திற்காகிலும் இடதுபக்கத்திற்காகிலும் விலகி, வாலிபரில் ஒருவனைப் பிடித்து, அவனை உரிந்துகொள் என்றான்; ஆசகேலோ விடமாட்டேன் என்று தொடர்ந்துபோனான்.
22பின்னும் அப்னேர் ஆசகேலை நோக்கி: நீ என்னை விட்டுப்போ; நான் உன்னைத் தரையோடே ஏன் வெட்டவேண்டும்? பிற்பாடு உன் சகோதரனாகிய யோவாபின் முகத்திலே எப்படி விழிப்பேன் என்றான்.
23ஆனாலும் அவன் விலகிப்போகமாட்டேன் என்றபடியினால், அப்னேர் அவனை ஈட்டியின் பின்புற அலகினால் அவன் வயிற்றிலே குத்தினான்; ஈட்டி முதுகிலே புறப்பட்டது; அவன் அங்கேதானே விழுந்து செத்தான்; ஆசகேல் விழுந்துகிடக்கிற இடத்திலே வந்தவர்களெல்லாரும் தரித்து நின்றார்கள்.
24யோவாபும் அபிசாயும் சூரியன் அஸ்தமிக்குமட்டும் அப்னேரைப் பின்தொடர்ந்தார்கள்; கிபியோன் வனாந்தர வழிக்கு அருகான கீயாவுக்கு எதிரே இருக்கிற அம்மா மேடுமட்டும் வந்தார்கள்.
25அப்பொழுது அப்னேரைப் பின்சென்ற பென்யமீன் புத்திரர் ஒரே படையாகக் கூடி, ஒரு மலையின் உச்சியிலே நின்றார்கள்.
26அப்பொழுது அப்னேர் யோவாபைப் பார்த்துக் கூப்பிட்டு, பட்டயம் எப்போதும் சங்காரம் பண்ணிக்கொண்டிருக்க வேண்டுமோ, முடிவிலே கசப்புண்டாகும் என்று அறியீரோ, தங்கள் சகோதரரை விட்டுப் பின்வாங்கும்படிக்கு எந்தமட்டும் ஜனங்களுக்குச் சொல்லாதிருப்பீர் என்றான்.
27அதற்கு யோவாப்: இன்று காலமே நீர் பேசாதிருந்தீரானால் ஜனங்கள் அவரவர் தங்கள் சகோதரரைப் பின்தொடராமல், அப்போதே திரும்பி விடுவார்கள் என்று தேவனுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
28யோவாப் எக்காளம் ஊதினான்; அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் இஸ்ரவேலைத் தொடராமலும், யுத்தம்பண்ணாமலும் நின்றுவிட்டார்கள்.
29அன்று ராமுழுதும் அப்னேரும் அவன் மனுஷரும் அந்தரவெளி வழியாய்ப் போய், யோர்தானைக் கடந்து, பித்ரோனை உருவநடந்து தாண்டி, மகனாயீமுக்குப் போனார்கள்.
30யோவாப் அப்னேரைத் தொடராமல் ஜனங்களையெல்லாம் கூடிவரச்செய்தான்; தாவீதின் சேவகரில் பத்தொன்பதுபேரும் ஆசகேலும் குறைந்திருந்தார்கள்.
31தாவீதின் சேவகரோ பென்யமீனரிலும், அப்னேரின் மனுஷரிலும், முந்நூற்றறுபதுபேரை மடங்கடித்தார்கள்.
32அவர்கள் ஆசகேலை எடுத்து, பெத்லெகேமிலுள்ள அவனுடைய தகப்பன் கல்லறையிலே அவனை அடக்கம்பண்ணினார்கள்; யோவாபும் அவன் மனுஷரும் இராமுழுவதும் நடந்து, பொழுது விடியும்போது எப்ரோனிலே சேர்ந்தார்கள்.
1நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும் இருப்பேன்.
2நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாக சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை.
3எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை.
4அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது,
5அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது,
6அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும்.
7சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.
8அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோகும், அறிவானாலும் ஒழிந்துபோம்.
9நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனஞ்சொல்லுதலும் குறைவுள்ளது.
10நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்.
11நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்.
12இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன்.
13இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது.
1பின்பு ஆவியானவர் என்னை எடுத்து, என்னைக் கர்த்தருடைய ஆலயத்தின் கிழக்கு முகமாயிருக்கிற வாசலுக்குக் கொண்டுபோனார்; இதோ, அந்த வாசலின் நடையில் இருபத்தைந்து புருஷர் இருந்தார்கள்; அவர்களின் நடுவே ஜனத்தின் பிரபுக்களாகிய ஆசூரின் குமாரனாகிய யசனியாவையும், பெனாயாவின் குமாரனாகிய பெலத்தியாவையும் கண்டேன்.
2அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இவர்கள் இந்த நகரத்திலே அக்கிரமமான நினைவுகளை நினைத்து, துராலோசனை சொல்லுகிற மனுஷர்.
3இது வீடுகளைக் கட்டுவதற்குக் காலமல்ல என்றும், இந்த நகரம் பானை, நாங்கள் அதிலுள்ள இறைச்சியென்றும் சொல்லுகிறார்கள்.
4ஆகையால் அவர்களுக்கு விரோதமாய்த் தீர்க்கதரிசனஞ்சொல்லு, மனுபுத்திரனே, தீர்க்கதரிசனஞ்சொல்லு என்றார்.
5அப்பொழுது கர்த்தருடைய ஆவி என்மேல் இறங்கினார்; அவர் என்னை நோக்கி: நீ சொல்லவேண்டியது என்னவென்றால், இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் இப்படிப் பேசுகிறது உண்டு; உங்கள் மனதில் எழும்புகிறதை நான் அறிவேன்.
6இந்த நகரத்தில் நீங்கள் அநேகரைக் கொலைசெய்தீர்கள்; அதின் வீதிகளைக் கொலையுண்டவர்களால் நிரப்பினீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
7ஆகையால் நீங்கள் கொலைசெய்து, அதின் நடுவிலே போட்டுவிட்டவர்களே இறைச்சியும், இந்த நகரம் பானையுமாமே; உங்களையோ அதற்குள் இராதபடிக்குப் புறம்பாக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
8பட்டயத்துக்குப் பயப்பட்டீர்கள், பட்டயத்தையே உங்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
9நான் உங்களை அதற்குள் இராதபடிக்குப் புறம்பாக்கி, உங்களை அந்நியரின் கையில் ஒப்புக்கொடுத்து, உங்களில் நியாயத்தீர்ப்புகளை நிறைவேற்றுவேன்.
10பட்டயத்தால் விழுவீர்கள்; இஸ்ரவேல் தேசத்தின் எல்லையிலே உங்களை நியாயந்தீர்ப்பேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.
11இந்த நகரம் உங்களுக்குப் பானையாயிருப்பதுமில்லை நீங்கள் அதிலுள்ள இறைச்சியாயிருப்பதுமில்லை; இஸ்ரவேல் தேசத்தின் எல்லையிலே உங்களை நியாயந்தீர்ப்பேன்.
12என் கட்டளையின்படி நடவாமலும், என் நியாயங்களின்படி செய்யாமலும், உங்களைச் சுற்றிலுமிருக்கிற புறஜாதிகளுடைய முறைமைகளின்படி செய்த நீங்கள் அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்றார்.
13நான் இப்படித் தீர்க்கதரிசனஞ் சொல்லுகையில், பெனாயாவின் குமாரனாகிய பெலத்தியா செத்தான்; அப்பொழுது நான் முகங்குப்புற விழுந்து, மகா சத்தமாய்: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் இஸ்ரவேலில் மீதியானவர்களைச் சர்வசங்காரஞ்செய்வீரோ என்று முறையிட்டேன்.
14அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
15மனுபுத்திரனே, நீங்கள் கர்த்தரைவிட்டுத் தூரமாய்ப்போங்கள், எங்களுக்கு இந்த தேசம் சுதந்தரமாகக் கொடுக்கப்பட்டதென்று, உன் சகோதரருக்கும், உன் குடும்பத்தாருக்கும், உன் பந்து ஜனங்களுக்கும், இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருக்கும், எருசலேமின் குடிகள் சொல்லுகிறார்கள்.
16ஆகையால் நான் அவர்களைத் தூரமாகப் புறஜாதிகளுக்குள்ளே துரத்தியிருந்தாலும், நான் அவர்களை தேசங்களிலே சிதறடித்திருந்தாலும், நான் அவர்கள் போன தேசங்களில் அவர்களுக்குக் கொஞ்சகாலத்துக்குப் பரிசுத்த ஸ்தலமாக இருப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல்.
17ஆதலால் நான் உங்களை ஜனங்களிடத்திலிருந்து சேர்த்து, நீங்கள் சிதறடிக்கப்பட்ட தேசங்களிலிருந்து உங்களைக் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்தை உங்களுக்குக் கொடுப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல்லு.
18அவர்கள் அங்கே வந்து, அதில் சீயென்றிகழப்படத்தக்கதும் அருவருக்கப்படத்தக்கதுமாயிருக்கிறதையெல்லாம் அதிலிருந்து அகற்றுவார்கள்.
19அவர்கள் என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ய நான் அவர்களுக்கு ஏக இருதயத்தைத் தந்து, அவர்கள் உள்ளத்தில் புதிய ஆவியைக்கொடுத்து, கல்லான இருதயத்தை அவர்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை அவர்களுக்கு அருளுவேன்.
20அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன்.
21ஆனாலும் சீயென்றிகழப்படத்தக்கதும் அருவருக்கப்படத்தக்கதுமான தங்கள் இருதயத்தின் இச்சையிலே எவர்கள் நடக்கிறார்களோ அவர்களுடைய வழியின் பலனை அவர்கள் தலைகளின்மேல் சுமரப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
22அப்பொழுது கேருபீன்கள் தங்கள் செட்டைகளை விரித்து எழும்பின; சக்கரங்களும் அவைகளுக்கு அருகே சென்றன; இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை அவைகளின்மேல் உயர இருந்தது.
23கர்த்தருடைய மகிமை நகரத்தின் நடுவிலிருந்தெழும்பி, நகரத்துக்குக் கிழக்கே இருக்கிற மலையின்மேல் போய் நின்றது.
24பின்பு ஆவியானவர் என்னை எடுத்து, என்னை தேவனுடைய ஆவிக்குள்ளான தரிசனத்திலே கல்தேயாவுக்குச் சிறைப்பட்டுப்போனவர்கள் இடத்திலே கொண்டுபோய்விட்டார்; அப்பொழுது நான் கண்ட தரிசனம் என்னிலிருந்து எடுபட்டுப்போயிற்று.
25கர்த்தர் எனக்குக் காண்பித்த யாவையும் சிறையிருப்பிலிருந்தவர்களுக்குச் சொன்னேன்.
1வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் வசனித்து, சூரியன் உதிக்குந்திசை தொடங்கி அது அஸ்தமிக்குந் திசைவரைக்குமுள்ள பூமியைக் கூப்பிடுகிறார்.
2பூரண வடிவுள்ள சீயோனிலிருந்து தேவன் பிரகாசிக்கிறார்.
3நம்முடைய தேவன் வருவார், மவுனமாயிரார்; அவருக்குமுன் அக்கினி பட்சிக்கும்; அவரைச் சுற்றிலும் மகா புசல் கொந்தளிப்பாயிருக்கும்.
4அவர் தம்முடைய ஜனத்தை நியாயந்தீர்க்க உயர இருக்கும் வானங்களையும் பூமியையும் கூப்பிடுவார்.
5பலியினாலே என்னோடே உடன்படிக்கை பண்ணின என்னுடைய பரிசுத்தவான்களை என்னிடத்தில் கூட்டுங்கள் என்பார்.
6வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கும்; தேவனே நியாயாதிபதி. (சேலா)
7என் ஜனமே, கேள், நான் பேசுவேன்; இஸ்ரவேலே, உனக்கு விரோதமாய்ச் சாட்சியிடுவேன்; நானே தேவன், உன் தேவனாயிருக்கிறேன்.
8உன் பலிகளினிமித்தம் உன்னைக் கடிந்துகொள்ளேன்; உன் தகனபலிகள் எப்போதும் எனக்கு முன்பாக இருக்கிறது.
9உன் வீட்டிலிருந்து காளைகளையும், உன் தொழுவங்களிலிருந்து ஆட்டுக்கடாக்களையும் நான் வாங்கிக்கொள்வதில்லை.
10சகல காட்டுஜீவன்களும், பர்வதங்களில் ஆயிரமாயிரமாய்த் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள்.
11மலைகளிலுள்ள பறவைகளையெல்லாம் அறிவேன்; வெளியில் நடமாடுகிறவைகளெல்லாம் என்னுடையவைகள்.
12நான் பசியாயிருந்தால் உனக்குச் சொல்லேன்; பூமியும் அதின் நிறைவும் என்னுடையவைகளே.
13நான் எருதுகளின் மாம்சம் புசித்து, ஆட்டுக்கடாக்களின் இரத்தம் குடிப்பேனோ?
14நீ தேவனுக்கு ஸ்தோத்திரபலியிட்டு, உன்னதமானவருக்கு உன் பொருத்தனைகளைச் செலுத்தி;
15ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.
16தேவன் துன்மார்க்கனை நோக்கி: நீ என் பிரமாணங்களை எடுத்துரைக்கவும், என் உடன்படிக்கையை உன் வாயினால் சொல்லவும், உனக்கு என்ன நியாயமுண்டு.
17சிட்சையை நீ பகைத்து, என் வார்த்தைகளை உனக்குப் பின்னாக எறிந்துபோடுகிறாய்.
18நீ திருடனைக் காணும்போது அவனோடு ஒருமித்துப்போகிறாய்; விபசாரரோடும் உனக்குப் பங்குண்டு.
19உன் வாயைப் பொல்லாப்புக்குத் திறக்கிறாய், உன் நாவு சற்பனையைப் பிணைக்கிறது.
20நீ உட்கார்ந்து உன் சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி, உன் தாயின் மகனுக்கு அவதூறு உண்டாக்குகிறாய்.
21இவைகளை நீ செய்யும்போது நான் மவுனமாயிருந்தேன், உன்னைப்போல் நானும் இருப்பேன் என்று நினைவு கொண்டாய்; ஆனாலும் நான் உன்னைக் கடிந்துகொண்டு, அவைகளை உன் கண்களுக்கு முன்பாக ஒவ்வொன்றாக நிறுத்துவேன்.
22தேவனை மறக்கிறவர்களே, இதைச் சிந்தித்துக்கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் நான் உங்களைப் பீறிப்போடுவேன், ஒருவரும் உங்களை விடுவிப்பதில்லை.
23ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்; தன் வழியைச் செவ்வைப்படுத்துகிறவனுக்கு தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன் என்று சொல்லுகிறார்.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com